ஹாம்ப்ஷயர், 1968
ஆழ்மன அடுக்குகளினுள் சிறுபொறியென உதித்த அந்த ஒற்றை விழைவை இந்த ஈரக்காற்று எப்படி நுகர்ந்தறிந்தது என்று ஒருநொடி வியப்புற்றாள் ஜெசிக்கா. ஆனால் அசாத்தியமான தற்செயல்கள் பல குவிந்து கூர்மை பெற்றிருக்கும் அந்தத் தருணத்தில் திளைக்கத் திளைக்க அவளது உடலும் சித்தமும் கொஞ்சம் கொஞ்சமாக அவ்வியப்பின் அதிர்வைக் களைந்து எடையிழக்கத் துவங்கியிருந்தது.
ஊரின் வடக்கு எல்லையில் இருந்த பிரசித்தமான சிறைச்சாலையில் இருந்து புறப்பட்டு தனது இல்லத்திற்கு அவள் வந்தடைந்து சரியாக மூன்று நிமிடங்களே ஆகியிருந்தன. அதற்குள் தனது உள்ளங்கையில் வியர்வை நசநசப்புடன் கசங்கியிருந்த அந்தக் கடிதத்தை இரண்டு முறை வாசித்து முடித்திருந்தாள் அவள். உருவமற்ற பாறையென வெறுமை நெஞ்சை அழுத்திக் கொண்டிருந்தபோதிலும் அந்தப் பழுப்புநிறக் காகிதத்தில் பதிந்திருந்த அழகான கையெழுத்தை ஒருநொடி அவள் ரசிக்கவே செய்தாள். அவளது கையெழுத்து அத்தனை கச்சிதமாக அமைந்தது அதுவே முதல் முறை.
அன்று காலை விழித்ததுமே அவளுக்குள் தோன்றிய முதல் உந்துதல் அதுவாகவே இருந்தது. குளிரை சற்றும் பொருட்படுத்தாமல் அணிந்திருந்த மிருதுவான இரவு ஆடையுடன் தடதடவென படியேறிச் சென்று தனது மகனின் அறையில் இருந்து காகிதம் ஒன்றை எடுத்து அங்கேயே, அவனது மெத்தையிலேயே அமர்ந்து எழுதத் துவங்கியிருந்தாள் ஜெசிக்கா. அந்தந்த கணம் வழங்கும் உந்துவிசைகளினால் மட்டுமே வாழ்வைக் கழித்து வந்திருந்த, உதிரி நிகழ்வுகளைக் கொண்டு மட்டுமே தனது ஒட்டுமொத்த வாழ்வுக்கும் பொருள் அளித்துக்கொண்டிருந்த அவளுக்கு அந்த எழுத்து பெரும் திறப்பாக அமைந்தது. சின்னஞ்சிறிய துணுக்குகளாகச் சிதறுண்டு கிடக்கும் தனது வாழ்வுக்கும், தறிகெட்டு அலையும் தனது சித்தத்திற்கும் பின்னால் அவை அனைத்தையும் கோர்க்கும் விதமாக மிக நுணுக்கமான சரடொன்று இயங்கி வருவதை அவள் அப்போதே கண்டடைந்திருந்தாள்.
எழுதி முடித்து நிமிர்ந்தவளுக்கு எதிரே இருந்த சுவரில் தொங்கிக்கொண்டிருந்த தனது தந்தை ஆர்தரின் கருப்பு வெள்ளை புகைப்படமே முதலாவதாக கண்ணில் பட்டது. முதிர்ந்த புலி ஒன்றை வேட்டையாடி, அதன் பிரேதத்தின் மீது கம்பீரமாக கால் பதித்து நின்ற அவரது தோரணையை, அவரது முகத்தில், குறிப்பாக லேசாய் முறுவலிக்கும் அவரது இதழ்களும் கொழுத்து உருண்டு இருந்த கன்னத்தசையும் இணையும் இடத்தில் உருவான அந்தச் சுழியைப் பார்த்தவள் திடீரென தனது வயிற்றைப் பற்றிக்கொண்டு கலகலவெனச் சிரித்தாள்.
ஏறத்தாழ ஒருமணி நேரத்திற்கு முன்பாக தன்னிடம் இருந்து வெளிப்பட்டிருந்த அந்தச் சிரிப்பை தற்போது நினைவுகூர்ந்த ஜெசிக்காவிற்கு அது என்றோ எப்போதோ நடந்த பழைய சங்கதியாக தோன்றியது. வீசிய பலத்த காற்றில் நெளிந்தாடி படபடத்த கடிதத்தை இரண்டாக மடித்து மடிமீது வைத்துக்கொண்டு மீண்டும் வெளியே நோக்கினாள்.
முற்றத்தில் கண்கவரும் செழுமையுடன் வீற்றிருந்த பிரம்மாண்டமான ஓக் மரத்தின் உச்சிக்கிளையில் அந்தப் பருந்து அப்போதும் நின்றுகொண்டிருந்தது. இரண்டாம் தளத்தில், உபயோகமற்ற பழம்பொருட்களை எல்லாம் ஒன்றாய் குவித்துப் போட்டிருந்த அந்த இருண்ட அறையில் இருந்து தந்தை ஆர்தரின் வேட்டைத் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வந்தபோதுதான் அந்தப் பருந்தும் இந்தக் கிளையில் வந்து அமர்ந்திருந்தது. வீட்டின் அருகே இருந்த தேவாலயத்தின் மணி ‘டான்’ என பேரோசையுடன் அதிர, அக்கணம் வரை மெல்லிதாய் வீசிக்கொண்டிருந்த காற்று சட்டென வேகமும் மூர்க்கமும் கொண்டு சுழலத் துவங்கியிருந்தது.
ஜெசிக்கா லேசாக திரும்பி ஆர்தரின் புகைப்படத்தைக் கண்ணுற்றாள். ஓக் மரத்தின் கிளைகளினூடாக பாய்ந்த கதிரொளி, பொன்னிற ஈட்டிகளாக அவரது முகத்திலும் மார்பிலும் குத்திட்டு நின்றது. ஜெசிக்கா ஒருகணம் அதிர்ந்தாள். பின்னர் நடுங்கும் விரல்களால் தனது கையில் இருந்த கடிதத்தைப் பிரித்து மூன்றாவது முறையாக அதன் அட்சரங்கள் மீது விழிகளை ஓட்டினாள்.
***
அன்புள்ள டேனியல்,
மூன்று நாட்கள் முன்பு நான் எழுதி, அதிகாரிகளிடம் கொடுத்தனுப்பிய கடிதம் உன்னிடம் வந்து சேர்ந்ததா என தெரியவில்லை. அங்கே உனது நிலையைக் குறித்து, ஆரோக்கியம் குறித்தெல்லாம் அதில் தீவிரமாக விசாரித்திருந்தேன். உன்னிடம் இருந்து பதில் வரும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.
என்ன காரணம் என்று தெரியவில்லை. எவ்வளவு முயற்சி செய்தும் அதிகாரிகள் உன்னைச் சந்தித்துப் பேச என்னை அனுமதிக்க மறுக்கின்றனர். நீ இதனை நம்புவாயா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் நேற்றைய முன்பகல் நேரம் முழுவதையும் நான் அந்த சிறைக் காவலரின் முன் மண்டியிடாத குறையாக மன்றாடிக் கொண்டிருந்தபடி செலவு செய்திருக்கிறேன். ஏதேதோ நியமங்களை விளக்குகிறார்கள். சட்டங்கள் பேசுகிறார்கள். அபாண்டமாக ஏதேதோ பழி வேறு சுமத்துகிறார்கள். எனக்கு நிஜமாகவே எதுவும் விளங்கவில்லை. ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக புரிகிறது. அவர்கள் அனைவரும் கூட்டு சேர்ந்துகொண்டு என்னிடம் இருந்து எதையோ மறைக்கிறார்கள். அவர்கள் அப்படிச் செய்வதில் எனக்கு ஆச்சரியம் ஏதுமில்லை. இழப்பு அவர்களின் பக்கம். இறந்தது அவர்களின் மூத்த அதிகாரியின் ஒற்றை மகன். அவன் பொறுக்கியாகவே இருந்தாலும் அவன் ஒரு அதிகாரியின் மகன் என்பதை மறுத்துவிட முடியாது.
ஆனால் நீ கவலைகொள்ள வேண்டாம். நமது வட்டாரத்திலேயே புகழ்பெற்ற வழக்கறிஞராக கருதப்படும் ஒருவரை இரு தினங்களுக்கு முன்பு மீண்டும் சந்தித்தேன். நம்பிக்கை அளிக்கும் விதமாக சில தரவுகளை சேகரித்திருப்பதாகவும், முற்றான விடுதலை தற்போதைக்கு சாத்தியமில்லை என்றாலும் தண்டனை காலத்தை கணிசமான அளவு குறைப்பதற்கான வாய்ப்புகள் சில தட்டுப்படுவதாகவும் அவர் உறுதியளித்திருக்கிறார். விரைவில் நல்ல செய்தியை எதிர்நோக்கலாம்.
நான் இதோ உனது அறையில் அமர்ந்துதான் இதனை எழுதிக் கொண்டிருக்கிறேன். உள்ளே வந்ததுமே என் கண்களில் முதலில் பட்டது கட்டிலுக்கு அடியே இருந்து எட்டிப்பார்க்கும் உனது காலணிகள்தான். அவற்றின் விளிம்புகளில் இப்போதும் சேற்று மணல் ஒட்டியிருக்கிறது. அறையின் பல்வேறு மூலைகளில் இருந்து உனது வாசம் கொஞ்சம் கொஞ்சமாக எழுந்து வருவதை நான் உணர்கிறேன். அது நீ விரும்பி அணிந்துகொள்ளும் வாசனைத் திரவியத்தின் மணம்.
நினைவிருக்கிறதா? வாசனைத் திரவியங்கள் என்றாலே உன் தாத்தாவிற்கு அறவே பிடிக்காது. அதிலும் ஆண்கள் அதனை அப்பிக்கொள்வதைக் கண்டாலே அவருக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்துவிடும். பெரியவர்கள் என்றால் கொச்சை வார்த்தைகளாலும், வயதில் சிறியவர்கள் என்றால் பிரம்பினாலும் தனது ஆத்திரத்தை வெளிப்படுத்திவிடுவார். ஆனால் ஏனோ அவருக்கு உன்மீது மட்டும் அலாதியான பிரியம். நீயும் அவர் கூப்பிடும் இடத்திற்கெல்லாம் சளைக்காமல் சென்று வருவாய். அவரின்பால் உனக்கு விசித்திரமான பற்றுதல் உண்டு என்பதை நான் அறிவேன். சென்ற ஆண்டு அவர் இறந்துபோனபோது நீ ஒரு வாரத்திற்கு உணவும் உறக்கமும் இன்றி காய்ச்சலில் தவித்தது இப்போதும் எனக்கு நன்றாகவே நினைவில் உள்ளது. ஆனால் காய்ச்சல் குறைந்து நீ உயிர்ப்புடன் விழித்தெழுந்த தினமே உனக்கு பிடித்தமான இந்த வாசனைத் திரவியத்தை வாங்கிவந்து நீ உபயோகிக்க துவங்கியிருந்தாய்.
சரி, அதை விடு.
இத்தனை மாதங்களாக இல்லாத அளவிற்கு கடந்த மூன்று நாட்களாக உன் தாத்தாவைப் பற்றியே யோசித்துக்கொண்டிருக்கிறேன். அதிலும் நேற்று இரவு அவரை மையமாக கொண்ட விசித்திரமான கனவொன்று வந்தது. உனக்கு ஞாபகம் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆறேழு ஆண்டுகளுக்கு முன்பு உன் பாட்டியின் கல்லறை இருக்கும் கிராமத்திற்கு நாம் அனைவரும் சென்றிருந்தோம். இதுவே நானும் உன் பாட்டியும் வாழ்ந்த இடம் என்று உன் தாத்தா ஒரு வீட்டைக் காண்பித்தார், நினைவிருக்கிறதா? அந்த வீட்டில், பனி பொழியும் ஒரு இரவில் நான் ஒரு நெடிய மேசையின் முன்பு அமர்ந்திருக்கிறேன். உன் அறையில் நீ மாட்டியிருக்கிறாயே ஒரு புகைப்படம். அதில் இருப்பதைப்போலவே ஒரு வேட்டைக்காரனின் உடையை அணிந்தபடி உன் தாத்தா என் அருகே நடந்து வருகிறார். அவர் கையில் அப்போதே சுட்டெடுத்த ஒரு முழுக்கோழி இருக்கிறது. அதன் தசைகள் அனைத்தும் உருகி அவரது விரலிடுக்குகளில் வழிந்து கொண்டிருக்கிறது. நான் அங்கே இருப்பதையே பொருட்படுத்தாதவரைப்போல என் அருகே வந்தவர், “ம்! ம்! ம்!” என்று நாராசமாக ஓசையெழுப்பியபடி அந்த ஊனை ருசித்து உண்கிறார். அந்த உருகிய ஊன் அவரது உமிழ்நீர் மற்றும் வியர்வையுடன் கலந்து, நாற்றமடிக்கும் திரவம் ஒன்றாக உருமாறி என் உச்சந்தலையில் சொட்டி என் முகமெங்கிலும் வழிவதை அவர் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.
அப்போது விழித்தவள்தான். அதன் பிறகு நெடுநேரத்திற்கு என்னால் உறங்கவே முடியவில்லை. ஏதேதோ யோசனைகள். பழைய நினைவுகள் ஒன்றின் பின் ஒன்றாக என்னை சூழ்ந்துகொண்டு நெருக்கிவிட்டன. உனக்கே தெரியும். நான் அத்தனை எளிதாக கலங்குபவள் அல்ல. உன் அப்பா சைமன் நோயினால் நொந்து இறந்தபோது கூட நான் ஒருதுளி கண்ணீர் சிந்தியிருக்கவில்லை. ஆனால் நேற்று இரவு என்னுள் ஏதோ புகுந்துவிட்டது என்றே நினைக்கிறேன். கனவிலிருந்து விழித்த பிறகு செய்வதறியாமல் படுக்கையிலேயே உருண்டு கொண்டிருந்தவள் திடீரென எழுந்துகொண்டு அருகே இருந்த நாற்காலியில் கிடந்த உனது உடுப்புகளை (உன்னை காவலர்கள் கைதுசெய்தபோது நீ புத்தாடையான இதனைக் கழற்றிவிட்டு, மிகவும் பழமையான, இற்றுப்போன சட்டை ஒன்றை அணிந்துகொண்டு அவர்களுடன் சென்றாய், ஏன்?) எடுத்து அழகாக மடித்துவைக்க ஆரம்பித்தேன். மனம் உடைந்தது அப்போதுதான். ஏதோ அந்தத் தருணத்திற்காகவே காத்திருந்ததைப்போல் கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது.
டேனியல், உனக்கு ஏன் அத்தனை அவசரம்? ஏன் அப்படியொரு மூர்க்கம்? அந்தச் சச்சரவு நடந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது அல்லவா? சரியாக பேசித் தீர்க்கவில்லை என்றாலும் ஏதோ ஒரு முடிவை எட்டியிருந்தோம் இல்லையா? அந்த அறுபது நாட்களாக இல்லாத கோபம் திடீரென அன்றைக்கு ஏன் வந்தது? என் நிலையைக் குறித்து சற்று யோசித்திருக்கலாம் அல்லவா? நான் என் அம்மாவை அதிகம் பார்த்ததில்லை, டேனியல். அவளைப் பற்றி எனக்கிருக்கும் நினைவுகள் எல்லாம் மிகவும் மேம்போக்கானதுதான். அவற்றிலும் எது எனது தனிப்பட்ட நினைவுகள், எது அவளைக் குறித்த கேள்வி ஞானத்தினால் உருவான கற்பனைகள் என்பது எனக்கு தெளிவாக இல்லை. ஆனால் ஏதோ ஒரு இரவில் அவள் இதேபோல, இதே வார்த்தைகளைச் சொல்லி அப்பாவிடம் முறையிட்டதாக எனக்கு ஞாபகம். பேசிப் பேசி ஒரு கட்டத்தில் ஓய்ந்தவள் மதமே தனது உறைவிடம் என அதனுள் முற்றிலுமாக அமிழ்ந்துபோனாள். அதன் விளைவாக அப்பா அனுபவித்த தனிமையையும் நான் அறிவேன்.
வேடிக்கையாக இருக்கிறது… பதினாறு ஆண்டுகளாக ஒன்றாக இருக்கிறோம் நாம். அதிலும் உன் தாத்தாவின் மறைவுக்கு பிறகு, இந்த ஓராண்டு காலமாக, இவ்வளவு பெரிய வீட்டில், ஒரே கூரையின் கீழே நானும் நீயும் மட்டும் தனியாக வசித்து வந்திருக்கிறோம். இருந்தும் நமக்குள் இத்தகைய பேச்சுக்கள் ஏனோ நேர்ந்ததேயில்லை. உனது ஏதேனும் ஒரு ஒழுங்கீனத்தை நான் ஆத்திரமாக சுட்டிக்காட்டுவதும், நீ அதனை முன்கோபத்துடன் மறுதலிப்பதுமே நமக்குள் நடக்கும் சம்பாஷணையின் சாரமாக விளங்கி வந்திருக்கிறது. உன்னை அது அதிகம் பாதித்ததாகவும் எனக்கு தோன்றியதில்லை. இப்போது யோசித்துப் பார்த்தால் நாம் நெருக்கமாக இருந்த தருணங்கள் அனைத்தும் ஏதோ வகையில் கனமான, இருட்டான நிகழ்வுகளாகவும் இருந்து வந்திருப்பதை என்னால் கவனிக்க முடிகிறது.
நினைவிருக்கிறதா? பன்னிரண்டு வயது வரைக்குமே உனக்கு அடிக்கடி சளி பிடிக்கும். சளி முற்றியவுடனேயே உனக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுவிடும். இரவெல்லாம் உறங்கமுடியாமல் தத்தளிப்பாய். எவரோ தலையணையைக் கொண்டு உன் முகத்தை அழுத்துவதைப்போல் இருப்பதாகச் சொல்வாய். “நான் செத்து விடுவேன் போலிருக்கிறது. இது என்னை கொல்கிறது!” என்று அரற்றிக்கொண்டே இருப்பாய். ஓரிரு முறை, “என்னை கொன்றுவிடுங்கள்… தயவுசெய்து, என்னை கொன்றுவிடுங்கள் அம்மா… என்னால் சுவாசிக்க முடியவில்லை!” என்று என் கைகளைப் பற்றிக்கொண்டு கெஞ்சியிருக்கிறாய். என்ன செய்வது, எப்படி உன்னை ஆறுதல்படுத்தி உறங்கவைப்பது என்று தெரியாமல் நான் தவித்த அந்த இரவுகளை இப்போது யோசித்தாலும் பதற்றம் ஏற்படுகிறது. அதே சமயத்தில் அவற்றை மீண்டும் ஒருமுறை வாழ்ந்துபார்க்க வேண்டும் என்கிற விசித்திர ஏக்கமும் பிறக்கிறது.
நோய் சற்று குணமானதுமே நேராக உன் தாத்தாவிடம் சென்று விடுவாய் நீ. அவரும் அப்போதே உன்னை அருகில் வர அனுமதிப்பார். அது அவரது சுபாவம். ஹீனமானவர்களை, வியாதியுடையவர்களை ஏனோ அவருக்கு பிடிக்காது. உன் தந்தை சைமனிடம் அவர் என்றைக்காவது சமமாக அமர்ந்து பேசி நீ பார்த்திருக்கிறாயா? முதல் முறையாக நான் சைமனை வீட்டிற்கு அழைத்துவந்து அறிமுகம் செய்துவைத்ததுமே அவரது முகம் ஒருவிதமாக கோணிக்கொண்டது. சைமனைப் பற்றி அவர் என்னிடம் கேட்ட முதல் கேள்வி, “ஒரு போதகரை விரும்புகிறாயா?” என்பதுதான். அதனைக் கேட்டுவிட்டு அவர் பரிகாசமாகச் சிரித்தார். எனது திருமணத்திற்கு அவர் எந்தவிதத்திலும் இடையூறு செய்யவில்லை என்றாலும் சைமனிடம் பேசுவதையே விரும்பாதவராக அவர் இருந்தார்.
உன் அப்பாவின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையை எட்டிவிட்ட இரவொன்றில் வேறு வழியின்றி உன் தாத்தாவின் அறைக்குள் நுழைந்து அவரது கைகளைப் பற்றிக்கொண்டு கண்ணீர் வடித்தேன். அவர் அன்று எனக்கு எவ்வித ஆறுதலையும் வழங்கியிருக்கவில்லை. காட்டமான குரலில், “அவன் நலிந்தவன் என்பது எனக்கு எப்போதோ தெரியும்” என்று மட்டும் சொன்னார். நான் அவரை ஏறெடுத்து நோக்கினேன். அவர் முகம் எந்தவித உணர்ச்சிகளும் இன்றி இறுகிக் கிடந்தது. “என்ன பார்க்கிறாய்? உனக்கு தெரியாதா என்ன? அவன் முகம், அதில் இருக்கும் அந்தச் சுழி… அந்த முறுவல்… அதுவே சொல்கிறதே!” என்று சொல்லிவிட்டு என் தோள்களைப் பற்றி லேசாக தள்ளினார்.
டேனியல், உன் தாத்தா உன்னிடம் தனது பழைய கதைகளை எல்லாம் பேசியதுண்டா? போருக்கு முன்பு அவர் இந்தியாவில் பணிபுரிந்த நாட்கள் பற்றி, போரில், குறிப்பாக நார்மண்டியில் அவர் எதிர்கொண்ட விஷயங்களைப் பற்றி எல்லாம் பேசுவாரா? ஒரே ஒருமுறை நீ என்னிடம் குமாவோன் எங்கே இருக்கிறது என்றும் அங்கே செல்வதற்கு எத்தனை நாட்கள் ஆகும் என்றும் கேட்டிருக்கிறாய். நீ உன் அறையில் மாட்டியிருக்கும் புகைப்படத்தில் இருக்கும் புலியை இந்தியாவின் குமாவோன் காட்டிலேயே வேட்டையாடினார் உன் தாத்தா. அவர் உன்னிடம் அந்த நிகழ்வைப் பற்றி மட்டும் சொல்லியிருக்கிறாரா? இல்லை வேறு தகவல்களும் சொல்லியிருக்கிறாரா?
என்னிடம் அவர் அதிகம் பேசியதில்லை. அவரது பால்யம் பற்றி, இந்தியாவில் அவர் கழித்த காலங்களைப் பற்றியெல்லாம் அவர் எதையுமே சொன்னதில்லை. அதன் பிறகு போரில் அவர் பங்கெடுத்ததைப் பற்றிக்கூட எதுவும் பகிர்ந்துகொண்டதில்லை. ஒரே ஒரு விஷயத்தைத் தவிர. நாஜிக்களின் முகத்தில் உன் தாத்தாவிற்கு மட்டுமே தெரிந்த அந்தச் சுழி. அல்லது இளமுறுவல். அவரது கரங்களைப் பற்றிக்கொண்டு நான் கதறியழுத அன்று அவர் குறிப்பிட்டது அந்தச் சுழியைப் பற்றித்தான்.
“முதல் முறை அவன் வீட்டிற்கு வந்தபோதே அந்த அருவருக்கத்தக்க சுழியை அவனது முகத்தில் பார்த்துவிட்டேன். அவன் ஒரு கோழை. நாஜியைப்போல முறுவலிக்கும் அவன் ஒரு நோய்வாய்பட்டவனாகத்தான் இருக்கவேண்டும் என்பதை நான் அன்றே ஊகித்திருந்தேன்!” என்று சொல்லிவிட்டு உச்சக்குரலில் சிரித்தார் உன் தாத்தா. ஏனோ அப்போது எனக்கு ஆங்காரம் வந்துவிட்டது. சைமன் ஒரு சாது என்றும் அவர் எந்த தீங்கும் அறிந்திராத அப்பாவி என்றும் நான் முறையிட்டேன்.
அதற்கு, “நாஜிக்கள் மட்டும் என்ன? வீர தீரர்களா?” என்று கேட்டுவிட்டு மிகவும் மோசமான வசைகளை பொழிய துவங்கினார் அவர். பிரபஞ்சம் கண்ட மாபெரும் கோழைகள் நாஜிக்களே என்று மீண்டும் மீண்டும் சொன்னார். அளவுக்கதிகமாக வைன் அருந்தியிருந்ததால் அவரது உணர்ச்சிகள் ஒவ்வொன்றும் முறுக்கேறி இருந்தன. வேதனையில் புரண்டு கொண்டிருந்த எனக்கு ஆறுதலாக சில வார்த்தைகள் பேசவேண்டும் என்பதை முற்றிலுமாக மறந்துபோனவராக நடந்துகொண்டார்.
“அந்தச் சுழியை, மலத்தை நினைவூட்டும் அவர்களின் அந்த முறுவலை நான் வெறுக்கிறேன். அருவருக்கிறேன். நான் மட்டுமல்ல, தாமஸ், ஃபிரெட்ரிக், வில்லியம், எட்வர்ட் உட்பட எனது அணியைச் சேர்ந்த அனைவரும் அதனை வெறுத்தோம். இரவுகளில், பதுங்கு குழிகளில் படுத்திருக்கும் போதெல்லாம் நாங்கள் அந்த அருவருக்கத்தக்க சுழியைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருப்போம். நாங்கள் அனைவரும் அந்தச் சுழியை எங்கள் முகத்தில் வரவழைத்துக்கொண்டு ஒரு நாஜியைப்போலவே பேசி நடிப்போம். விளையாட்டுதான் என்றாலும் ஒருமுறை அந்த முகத்தை, அந்த முறுவல் தந்த அருவருப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் எட்வர்ட் தனது கைக்கத்தியை ஓங்கியபடி தாமஸின் மோவாய் நோக்கி பாய்ந்துவிட்டான். அவனை அடக்கி சமாதானம் செய்தபிறகு நாங்கள் அனைவரும் கலகலவென சிரித்தோம். ஹா! ஹா!” என்று ஏதேதோ பிதற்றிக்கொண்டிருந்தார் அவர்.
போர்க்களத்தில் முன்னேறும்போது அந்தச் சுழியை முகத்தில் ஏந்தியபடி எதிர்ப்படும் நாஜிக்களை கடும் ஆக்ரோஷத்துடன் கொன்றழித்த நிகழ்வுகளை, அவை தங்களுக்களித்த உவகையை எல்லாம் மிகவும் துல்லியமாக நினைவில் மீட்டு வர்ணித்துக்கொண்டிருந்தார் ஆர்தர். அவரது அறையில் இருந்த அந்த வட்டவடிவ மேசையை சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தவர் திடீரென ஒருகணம் நின்று எனது விழிகளை ஆழமாக நோக்கினார். “காதலன் என்று சொல்லி என் வீட்டினுள் அழைத்துக்கொண்டு வந்தாயே ஒரு புழுவை, அவன் புன்னகை யாரைப்போல் இருக்கிறது என்று தெரியுமா?” என்று கேட்டுவிட்டு மீண்டும் அந்த மேசையைச் சுற்றி வர ஆரம்பித்தார். நார்மண்டியில் நிகழ்ந்த போரில் அவர் எதிர்கொண்ட அந்த நாஜி வீரனைப் பற்றி அவர் பகிர்ந்துகொண்டது அப்போதுதான். நிரம்பிய போதையில், எக்கணமும் கையில் சுருட்டுடன், கலங்கிய செம்மை படர்ந்த விழிகளுடன் அசமந்தமாக காட்சிதரும் உன் தாத்தாவிடம் அப்போது வெளிப்பட்ட துடிப்பையும், குறிப்பிட்ட அந்தச் சம்பவத்தை விவரித்ததன் பின்னணியில் இருந்த அவரது அசாத்தியமான நினைவுத்திறனையும் கண்டு நான் அப்போது அதிசயித்துப் போயிருந்தேன்.
நார்மண்டியில் ஒரு கிராமத்தினுள், தன்னை நம்பி பின்தொடரும் அணியை தலைமை தாங்கி அவர் முன்னேறிக் கொண்டிருக்கும்போது, திடீரென எங்கிருந்தோ பாய்ந்து வந்து நெருங்கி அவர்களின் மீது ரகசிய தாக்குதலைத் தொடுத்த மிகச்சிறிய நாஜி குழு ஒன்றைப் பற்றிச் சொல்லும்பொழுது அந்த அறையில் அவர் அவர்களைப்போலவே பாய்ந்து காட்டினார் என்று சொன்னால் உன்னால் நம்ப முடிகிறதா? அந்த ரகசிய தாக்குதலில் எட்வர்ட் கழுத்தறுபட்டு அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்தான். நிதர்சனத்தை உணரும் முன்பே அவரது அணியில் மேலும் சில வீரர்கள் உடம்பெங்கிலும் உருவாகியிருந்த காயங்களில் இருந்து ரத்தம் கொப்பளிக்கச் சரிந்தனர். எஞ்சிய எண்மருடன் தீரமாய் போரிட்ட ஆர்தர் அந்த நாஜி குழுவை ஓரளவிற்கு சமாளித்ததாகச் சொன்னார்.
“என் மீது பாய்ந்த அந்தக் கோழை குழுவின் தலைவனை நான் மூர்க்கமாக எனது முஷ்டிகளைக்கொண்டு தாக்கினேன். பிறகு எனது கைக்கத்தியை எடுத்து அவனது முகத்தில் சரமாரியாக குத்தினேன். நெற்றி, கன்னம் என சகல இடத்திலும் அவனுக்கு காயம் உண்டானது. இமயத்தின் அடிவாரத்தில் நான் ஒருமுறை கண்டிருந்த மதம்பிடித்த யானையைப்போல அவனைத் தூக்கிச் சுழற்றி அங்கிருந்த ஒரு புதரை நோக்கி வீசினேன். பின்னர் ஒரு எருதைப்போல அவனை நோக்கி தாவியோடினேன். அவனை அணுகி, அவனது ஆடையுடன் சேர்த்து அவனது கழுத்தைப் பற்றி…” என்று எதையோ சொல்லிக் கொண்டிருந்தபோது அவருக்கு லேசாக மூச்சடைத்தது. பிறகு விடுவிடுவென என் அருகே வந்து நான் அமர்ந்திருந்த நாற்காலியின் கைப்பிடியை கெட்டியாகப் பற்றி என்னை முறைத்துப் பார்த்தார்.
டேனியல்… அப்போது அவர் எதிர்கொண்ட அந்தக் காட்சியை அதன் பிறகும் இரண்டொரு சந்தர்ப்பங்களில் என்னிடம் அவர் பகிர்ந்துகொண்டிருக்கிறார். ஆனால் ஒவ்வொரு முறையும் அந்தக் காட்சி தன்னுள் கிளர்த்திய உணர்வை மட்டும் வெவ்வேறு விதமாக, ஒன்றுக்கொன்று முரண்படும் வகையில் சொல்லும் வழக்கம் அவரிடம் இருந்தது. அன்று அந்த நாஜி குழுவின் தலைவனின் கழுத்தை அவர் பலம்கொண்டு நெரித்துக்கொண்டிருந்தபோது அவர்கள் இருந்த புதருக்கு ஒருசில அடிகள் தொலைவில் ஒரு கையெறி குண்டு விழுந்து பேரோசை கிளப்பி, புழுதியை இறைத்தெழுப்பி மழைபோல் அவர்கள் மீது பொழியச்செய்திருந்தது. ஒரு சில கணங்களுக்கு காலமே ஸ்தம்பித்ததைப்போல் அவர் உணர்ந்திருக்கிறார். போர், வன்முறை, ரத்தப்போக்கு, பிரேதங்கள் என அனைத்தும் ஓய்ந்து, மிகவும் ஆழமான, பரிசுத்தமான மௌனம் அவரைத் தழுவியிருக்கிறது.
“நிஜமாகவே அப்போது வீரர்கள் ஒருசில நிமிடங்களுக்கு போர் நிறுத்தம் செய்திருந்தார்களா? அல்லது வெடித்த குண்டின் ஓசையினால் எனது செவிகள் பழுதாகிவிட்டனவா என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனால் அந்த அடர்த்தியான அமைதியில் என் தலை ஒருகணம் கிறுகிறுத்துப் போனது. கண்களை மெதுவாகத் திறந்து, மௌனத்தின் திரையைக் கிழித்துக்கொண்டு எனது கரங்களுக்குள் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் அந்த நாஜியை நோக்கினேன். அவனது நெற்றி எங்கிலும் வெட்டுக் காயங்கள். அப்போது பிறந்த ஐந்தாறு சிசுக்களின் செவ்விதழ்களைப்போல அவற்றிலிருந்து குமிழி குமிழியாக உதிரம் கொப்பளித்துக்கொண்டிருந்தது. அக்கணம் என்னுள் எந்தவித கொலைவிசையும் இருக்கவில்லை. இருந்தபோதிலும் எனது விரல்கள் அவனது தொண்டையை வலுவாக அழுத்திக்கொண்டிருந்தன. அவன் செத்துக்கொண்டிருந்தான். மாயக்கணம் ஒன்றில் குருதியினால் முழுதாய் மூடப்பட்டிருந்த அவனது முகம் லேசாய் துடிப்பதைக் கண்டேன். உற்று நோக்கியபோதுதான் தெரிந்தது, அவன் என்னைப் பார்த்து முறுவலித்துக் கொண்டிருந்தான். அந்தச் சுழி, செக்கச்செவேல் என மிளிர்ந்த அந்த முகத்தில் அத்தனை துல்லியமாக வெளிப்பட்டது. அருவிபோல் கொட்டிக்கொண்டிருக்கும் ரத்தத்தின் ஊடே அந்தச் சுழியைக் கண்டபோது என்னுள் அருவருப்பு பெருக்கெடுத்து பெருங்கடலாய் ஓடியது!” என்று அவர் சொன்னவை ஒவ்வொன்றும் வார்த்தை மாறாமல் என்னுள் பதிந்திருக்கின்றன.
பின்வந்த நாள்களில் அந்தச் சம்பவத்தை அவர் விவரிக்கும்போதெல்லாம் அந்தச் சுழி தன்னை அச்சுறுத்தியது எனவும், இனம்புரியாத ஆங்காரத்தை தன்னுள் விதைத்தது எனவும், தனக்குள் இருக்கும் ஏதோ ஒன்றினை அசைத்தது எனவும் சொல்லியிருந்தாலும் அவர் நம்ப விரும்பியது அருவருப்பு எனும் உணர்வைத்தான். உன் அப்பா சைமனிடம் தென்பட்டது அந்த கேவலமான முறுவல்தான் என்று சொன்னவர் தனது இடது கரத்தை அசிரத்தையுடன் அசைத்து என்னை வெளியே போகச் சொன்னார்.
சைமன் அதன் பிறகு நெடுநாட்கள் உயிருடன் இருக்கவில்லை. உண்மையைச் சொல்லவேண்டும் என்றால் அவர் போவதே மேல் என்கிற எண்ணம் என்னுள் வலுவாக வேரூன்றிப்போகும் அளவிற்கு அவர் நோயினால் அவதிப்பட்டார். அந்த அலைக்கழிப்பினாலோ என்னவோ, உன் தாத்தாவுடன் நிகழ்ந்த அந்த இரவை நான் ஏறத்தாழ மறந்தேபோயிருந்தேன். அது மீண்டும் நினைவுக்கு வந்தது இரண்டு மாதங்களுக்கு முன்புதான்.
உனக்கு இது நம்புவதற்கு சிரமமாக இருக்கலாம். ஆனால் நீண்டகாலம் கழித்து நான் நன்றாக உறங்கி, புத்துணர்ச்சியுடன் விழித்துக்கொண்ட ஒரு காலைவேளை அது. அறையின் ஒரு ஓரத்தில் மூடப்பட்டிருந்த நெருப்பு தந்த கதகதப்பு நான் அனுபவித்து நிறைந்திராத அன்னையின் அரவணைப்பை நினைவூட்டியது. படுக்கைக்கு பின்புறமாக இருந்த ஜன்னலின் கண்ணாடித்திரை மீது பனித்துளிகள் பூத்து, அழகாக சொட்டிக்கொண்டிருந்தன. கணப்பில் சுள்ளிகள் தெறித்துச் சரியும் மெல்லிய ஓசையுடன் மழைத்துளிகள் கூரைமேல் படியும் நுண்ணிய சத்தம் இணைந்து கொண்டபோது மனதிற்குள் அசாத்தியமான அமைதி பிறந்தது. அப்போதுதான் நீ கதவை, “டம்! டம்!” என்று இடித்தாய்.
முகம்கூட கழுவாமல் நான் ஓடோடி வந்து திறந்தபோது மூக்குடைந்து ரத்தம் கசிய நீ விசும்பி அழுதபடி வாசலில் நின்றுகொண்டிருந்தாய். “ஓ! டேனியல்… என்ன நடந்தது?” என்று நான் உன்னை அணைத்துக்கொள்ள முன்வந்தபோது நீ எனது கைகளை மூர்க்கமாக அறைந்துவிட்டு விடுவிடுவென படியேறிச் சென்று உனது அறையினுள் முடங்கிக்கொண்டாய்.
ஓரிரு நிமிடங்களுக்கு நான் அப்படியே அந்த இடத்திலேயே உறைந்துபோய்விட்டேன், டேனியல். பின்னர் உன்னை நெருங்கிவந்து என்ன என்று கேட்டபோது நீ அன்று நடந்தவற்றை எல்லாம் சொன்னாய். கைகளை ஆட்டி ஆட்டி, உடம்பை அசைத்து அசைத்து நீ பேசுவதை நான் இமைக்காமல் கேட்டுக்கொண்டிருந்தேன். ஊர் மையத்தில் இருக்கும் அந்த கஃபேயில் இருந்த சிறுவனிடம் நீ வம்பிழுத்ததை, அதற்கு அவன் எதிர்வினையாற்றியதை, நீ அவன்மேல் சீறி பாய்ந்ததை, அதற்கு அவனும் அவனது கூட்டாளிகளும் சேர்ந்து உன்னை அடித்ததை எல்லாம் நீ அப்படியே நடித்துக் காட்டினாய் நினைவிருக்கிறதா? அப்போது நான் உன் தாத்தாவையே நினைத்துக்கொண்டிருந்தேன்.
ஒப்புக்கொள்கிறேன். நான் அச்சமயத்தில் உன்மீது அன்பை பொழிந்திருக்கவேண்டும். “அய்யோ! என் கண்ணே!” என்று உன்னை ஆரத்தழுவி, உனது காயம்பட்ட முகத்தை எனது மார்பினில் புதைத்துக்கொண்டு தலைகோதியிருக்கவேண்டும். எதுவும் செய்யாமல், ஒரு வார்த்தை பேசாமல் நான் அங்கிருந்து எழுந்து சென்றது உன்னை நிச்சயமாக காயப்படுத்தியிருக்கும். ஆனால் டேனியல், அன்று மாலையே நான்தானே ஓடிச்சென்று மருத்துவரை கையோடு அழைத்துவந்தேன். அதனைத் தொடர்ந்த ஒரு வார காலத்திற்கு உன்னை பள்ளிக்கு அனுப்பாமல் என்னுடனேயே வைத்துப் பார்த்துக்கொண்டேன் அல்லவா? உனக்கு பிடித்த உணவு வகைகளை சிரத்தையெடுத்து சமைத்துக் கொடுத்தேன் மறந்துவிட்டாயா?
ஏற்றுக்கொள்கிறேன்… ஒருசில வேளைகளில் எனது ஆதங்கத்தை உன்னிடம் வெளிப்படுத்தும்படி ஆகிவிட்டது. தனிமை, கையறுநிலை, வார்த்தைகளால் விவரிக்க இயலாத வேதனை என்று ஏதேதோ அழுத்தத்தினால் இரண்டொரு முறை உன்னை நோக்கி தகாத சொற்களை நான் ஏவியிருக்கலாம். அதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் அகவையில் மூத்தவள். உனது அன்னை. நான் கொஞ்சம் பக்குவமாக, முதிர்ச்சியுடன் நடந்துகொண்டிருக்க வேண்டும். அரிதான அந்த சில தருணங்களை மட்டும் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் நான் சமநிலை குலையாமல் உன்னுடன் மிகுந்த பொறுமையுடனும், பரிவுடனும் தானே நடந்துகொண்டேன்? பிறகு ஏன் அப்படியொரு காரியத்தைச் செய்தாய்? நான் அன்றுவரை உன்னிடம் கண்டிராத வெறியுடன் பாய்ந்தோடிச் சென்று சமையலறையில் இருக்கும் கறிவெட்டும் கத்தியை எடுத்துக்கொண்டு ஓடினாயே, அப்படி என்ன வேகம் உனக்கு? உன் பின்னே இருந்து நான் உனது பெயரைக் கூச்சலிட்டு அழைத்தேன். உனக்கு அது கேட்கவில்லை என்று மட்டும் அபாண்டமாக சொல்லிவிடாதே...
சரி, அதுவும் நிஜம்தான். நான் அந்த வார்த்தைகளைச் சொல்லியிருக்கக்கூடாது தான். ஆனால் சத்தியமாகச் சொல்கிறேன் டேனியல் அப்போது என்னுள் என்ன புகுந்தது என்றே தெரியவில்லை. நான் அப்போது உச்சரித்த அந்த வார்த்தைகளை பிரக்ஞையில் உணர்வதற்கே எனக்கு ஓரிரு நிமிடங்கள் பிடித்தது என்று சொன்னால் நம்புவாயா நீ? நான் சொன்னது ஒருபுறம் இருந்தாலும் உனக்கு என்ன வந்தது? காயங்கள் முற்றாக ஆறிவிட்டிருந்த, உடலை வாட்டியெடுத்த அலுப்பு முழுவதுமாக வடிந்துவிட்டிருந்த அந்தக் காலை வேளையில் நீ அழகாக, சிரித்தமுகமாய் தானே தோற்றமளித்தாய்? மலர்ச்சியுடன், அன்று பிறந்த மான்குட்டியைப்போல் துள்ளிக்கொண்டுதானே சாப்பாட்டு மேசையை அணுகினாய்?
உணவை வாயில் வைத்ததும் அதன் ருசி உனக்கு பிடிக்காமல் போய்விடவே எதையோ கசப்புடன் நீ சொன்னதாக ஞாபகம். அதற்கு நான் ஆற்றிய எதிர்வினை சற்றே கடுமையானதுதான். எந்தவித முகாந்திரமும் இன்றி நான் ஏதேதோ சொல்லிவிட்டேன். நீ அந்தச் சம்பவத்தை அல்லவா உன்னை விசாரித்த அதிகாரியிடம் சொல்லியிருக்கிறாய். ஒரு வார்த்தை மாறாமல் அவர் அதனை என்னிடம் ஒப்புவித்தபோது என் உடம்பெல்லாம் அதிர்ந்துவிட்டது. என் குரல்வளையை ஒடுக்குவதைப்போல, “அவனை உசுப்பிவிட்டு கொலைசெய்ய வைத்திருக்கிறாய் நீ!” என்று அந்த நாசமாய்ப்போன அதிகாரி சொல்லியபோது நான் எத்தகைய அவமானத்திற்கு உள்ளாகியிருப்பேன் என்பதை உன்னால் உள்வாங்கிக்கொள்ள முடிகிறதா?
இப்போதும் சொல்கிறேன், தெய்வத்தின் சாட்சியாக, அப்போது எனக்குள் என்ன வந்தது என்று எனக்கே தெரியவில்லை. சாப்பாட்டை குறைசொல்லிவிட்டு, லேசான முறுவலுடன் நீ குனிந்தபோது அப்படியே, செதுக்கிவைத்தாற்போல, சைமனைப் போலவே இருந்தாய் நீ. சட்டென என்னுள் ஏதோ துடித்து, அதிர்ந்து முறிவதை உணர்ந்தேன். மறு வினாடி படபடவென ஏதேதோ பிதற்றிவிட்டேன். உன்னை கோழையென அழைத்தேன். பிறகு சுழி, நாஜி உடம்பின் கெடுமணம் என ஏதேதோ உளறிவிட்டேன். அது தற்காலிக நிலைகுலைவுக்கு உள்ளானவளின் பிதற்றல்கள் என்பதைக்கூட புரிந்துகொள்ள இயலாத முட்டாளா நீ?
“என் அம்மாவுக்கு என் முகம் பிடிக்கவில்லை!” என்று சொல்லியிருக்கிறாய் அந்த அதிகாரியிடம். நான் அப்படியெல்லாம் எண்ணுவேன் என்றா நீ நினைத்திருக்கிறாய்? எனக்கு உன்னைவிட்டால் வேறு யார் இருக்கிறார் துணையென்று? குடும்பமென்று? எனக்கு உன்னைவிட்டால் வேறென்ன போக்கிடம் இருக்கிறது? நீ இந்தக் கடிதத்திற்கு நிச்சயமாக பதில் எழுதவேண்டும், டேனியல். என்னிடம் பேசாமல் இருப்பதால் எதுவும் மாறிவிடப்போவதில்லை.
நான் உன்னை கைவிடுவதாக இல்லை. வழக்கறிஞருடன் சேர்ந்துகொண்டு உனது தண்டனை காலத்தைக் குறைக்க அயராமல் பாடுபடுவேன். கவலைகொள்ளாதே. குடும்பம் என எஞ்சியிருப்பது எனக்கு நீயும், உனக்கு நானும் மட்டும்தான். நடந்தது நடந்தாகிவிட்டது. இதைக் காரணமாக வைத்து நமது உறவும், குடும்பமும் உருத்தெரியாமல் சிதைந்துபோவதை நான் நிச்சயமாக அனுமதிக்க மாட்டேன். விரைவில் உன்னிடம் இருந்து பதில் வரும் என்கிற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன்.
***
கடிதத்தின் கடைக்கோடி வரியில் ஜெசிக்கா எழுதியிருந்த அவளது பெயரை உள்ளங்கை வியர்வை முற்றிலுமாக அழித்துவிட்டிருந்தது. வீட்டின் எதிர்புறம் இருந்த மரத்தில் இருந்த பருந்து தற்போது வினோதமாக தலையை ஆட்ட ஆரம்பித்திருந்தது. விழிகளைச் சுருக்கி அதனை முறைத்துப் பார்த்தவள் விடுவிடுவென ஜன்னல் வரை சென்று, “என்ன?” என்று கத்தினாள். பிடிநழுவி விழப்போன கடிதத்தை அவளது இடக்கை விரல்கள் பலமாக பற்றிக்கொண்டன.
ஜெசிக்கா மீண்டும் அவற்றை நோக்கினாள். பிறகு ஏதோ நினைவு வந்தவளாக அந்த அறையெங்கிலும் தேடியலைந்து ஒரு கருப்பு மை பேனாவை கண்டடைந்தாள். சுருக்கங்களையும் மெல்லிய கிழிசல்களையும் ஏந்திநின்ற அந்தக் கடிதத்தை ஜன்னலின் விளிம்பில் விரித்து வைத்து பேனாவின் முனையை அதில் வலுவாக பதித்தாள். பலத்த காற்றினால் கட்டவிழ்ந்திருந்த அவளது கூந்தல் திரிதிரியாய் பிரிந்து அவளது முகத்தின் மேல் குரூரமாக குவிந்து திரைபோல் அவளின் பார்வையை மறைத்தன. பேனாவை ஒருகணம் ஓரமாக வைத்துவிட்டு கூந்தலை ஒதுக்கிக்கொண்டவள் திடீரென லேசாய் அதிர்ந்தாள்.
அந்த இடத்தை விட்டு உடனடியாக அகன்றுவிடச் சொல்லி அவளுக்குள் இருக்கும் ஏதோ ஒன்று வலியுறுத்தியது. ஆனால் லேசாய் அசைந்து கொடுக்கவே அவளுக்கு அச்சமாக இருந்தது. வானில் இருண்ட மேகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக திரண்டு அடர்த்திபெறத் தொடங்கியிருந்தன. கனத்தச் சீலை ஒன்று உதறப்பட்டதைப்போல மழைச்சாரல் திடீரென அவள் மீது மோத மெல்லிய நடுக்கத்துடன் பின்வாங்கிய ஜெசிக்கா மீண்டும் தனது கைகளில் இருந்த கடிதத்தைப் பார்த்தாள். ஈரத்தில் எழுத்துக்கள் அதன் முழுமையை இழந்து வெற்றுச் சுழிகளாக புழுக்களைப்போல நெளிந்துகொண்டிருந்தன. சட்டென பொங்கிய ஆத்திரத்தில் அருகில் கிடந்த பேனாவையே வெடுக்கெனப் பற்றி அந்தக் கடிதம் முழுவதையும் அடித்து அழித்தாள். “இப்பொழுது என்ன? இப்பொழுது என்ன?” என்றே அவளது இதழ்கள் முணுமுணுத்துக் கொண்டிருந்தன.
தற்செயலாக அவளது பார்வை ஆர்தரின் புகைப்படத்தின் மீது மீண்டும் ஒரு முறை விழுந்தது. சேற்றுக் கறை அப்பிக்கிடந்த அவரது ஜோடு கம்பீரமாக ஊன்றிநின்ற அந்தப் புலியின் விலாப்பகுதி மிகவும் பலவீனமாக சூம்பிப்போய் இருப்பதாக பட்டது ஜெசிக்காவிற்கு. நடுக்கத்துடன் மேலுயர்ந்த அவளது விழிகள் அடுத்ததாக தந்தையின் முகத்தில் துளிர்த்திருந்த முறுவலின் மேல் நிலைகொண்டது. சற்றுமுன் சிறைச்சாலை வாசலில் அவள் சந்தித்திருந்த அதிகாரியின் முகத்தில் கூட இதனை ஒத்த பாவமே இருந்ததாக அவளுக்கு அப்போது பட்டது.
அவள் கொடுத்த கடிதத்தை வாங்கிக்கொள்ள மறுத்த அந்த அதிகாரி அவளை உச்சிமுதல் பாதம் வரை படித்திருந்தான். பிறகு ஒருமுறை ஆழமாக மூச்செடுத்து டேனியல் சிறைச்சாலையினுள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட தகவலை எவ்வித நடுக்கமும் இன்றி தெரிவித்தான். விஷயத்தைக் கேள்வியுற்ற ஜெசிக்காவின் முகத்திலும் எவ்வித உணர்ச்சியும் தோன்றாமல் ஒருவித உறைநிலையில் இருப்பதைக் கண்டவன் ஒரே ஒருநொடி அவளைப் பார்த்து ஆறுதலாகச் சிரித்தான். அவனது சின்ன உதடுகள், கன்னத்தின் தசையுடன் இணையும் இடத்தில் உருவான அந்தச் சுழியையே ஒருசில நொடிகள் வெறித்து நின்ற ஜெசிக்காவிற்கு அடிவயிற்றில் என்னமோ செய்தது. சட்டென ஓட்டம்பிடித்து வீடுவந்து சேர்ந்திருந்தாள்.
ஜெசிக்கா இமைக்க மறந்தவளாய் ஆர்தரின் முகத்தையே நோக்கிக்கொண்டிருந்தாள். அறையின் வெளிச்சம் நொடிக்கு நொடி மங்கிவர ஒரு கட்டத்தில் நிதர்சனத்தின் மீதான தனது பற்றுதல் முற்றாக ஒழிந்துபோனதைப்போல் அவளது கால்கள் இரண்டும் பரபரக்கத் துவங்கின. மறுகணம் அவளது நாளங்களினுள் அசாத்தியமான நிம்மதி உணர்ச்சி பெருக்கெடுத்து ஓடியது. ஏதோ நினைவு வந்தவளாக ஜன்னல் பக்கம் சென்று அங்கே ஓரமாய் சாய்த்துவைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை எடுத்துவந்தாள்.
துருவின் சொரசொரப்புடன் கூடிய அந்த உலோகத்தின் சில்லென்ற மேனி அவளுக்குள் வினோதமான ஒரு பரபரப்பை உண்டாக்கியது. செவிகள் திடீரென கூர்மையடைந்து அவளைச் சூழ ஒலித்த பெருங்காற்றின், இளந்தூறலின் ஓசைகளை முழுவதுமாக உள்வாங்கிக்கொண்டன. கூந்தல் இழை இழையாக மீண்டும் பறந்தலைய, புறக்கழுத்தின் சருமம் குறுகுறுத்துப் புல்லரித்தது. நாசி வருடிய ஈரமண் வாடையும், பச்சை மணமும் அவளுக்குள் விந்தையான வேகமொன்றை தோற்றுவித்தது.
பக்கவாட்டில் இருந்த ஆடியில் தனது முகத்தைப் பார்த்துவிட அந்த நொடி அவளது மனம் துடியாய் துடித்தது. ஜெசிக்கா திரும்பினாள். அறையினுள் செறிந்திருந்த இருளைத் துளைத்துவிடும் முனைப்புடன் கண்களைச் சுருக்கினாள். ஆனால் அவள் முகம், குறிப்பாக அவளது இதழ்கள் துல்லியம் பெறாத அளவிற்கு அறை இருட்டிக்கிடந்தது. பின்னர் அசட்டையாக நாக்கைச் சுழற்றிக்கொண்டு துப்பாக்கியைத் திருப்பி அதன் முனையை தனது வாயினுள் நுழைத்துக்கொண்டு விசையின் மீது சுட்டுவிரலைப் பதித்து, இமைகளை இறுக்கமாக மூடிக்கொண்டாள்.
சுவாசம், சுரக்கும் உமிழ் என அனைத்திலும் உலோக ருசியும், வெடிமருந்தின் மணமும் கலந்துவிட்டதைப்போல் இருந்தது. அவள் இருமினாள். கருவிழிகள் இமைகளுக்குப் பின்னால் செருகிக்கொள்ள, அடிவயிற்றுத் தசைகள் உள்ளிழுத்துக்கொள்ள லேசாக கக்கினாள். கபமும், கோழையும் கொஞ்சமாக உதிரமும் கலந்த பழுப்புநிற திரவம் ஒன்று துப்பாக்கியின் பரப்பின் ஊடாக வழிந்தது. அக்கணத்தில் அவள் தன்னை அருவருத்தாள்.
