ஒரு கொரியன் தொடரைப் பார்க்க ஆரம்பித்து ஒன்றன்பின் ஒன்றாகப் பல தொடர்களை இன்று வரையில் பார்க்கும் பழக்கத்திற்கு அடிமையாகி விட்டவர்கள் பலர். அதோடு மட்டுமில்லாமல் தொடர்களில் மனதைக் கவர்ந்த சோல் நகரத்திற்கும், ஜெஜூ தீவிற்கும் சென்று வர வேண்டும் என்பதும் பலரின் கனவு. அந்தளவிற்குத் தொடர்கள் வாயிலாக நம்மை தென் கொரியா ஈர்த்துவிடும் என்பதைப் பலரும் ஒத்துக்கொள்வார்கள். கொரோனா காலத்தில் வெளியில் செல்ல முடியாமல் வீட்டில் அடைந்து கிடந்த நாட்களில் தொடங்கிய பழக்கம் மெதுவாக கொரியன் இசை உலகத்தையும் பார்வையாளர்களுக்கு அறிமுகம் செய்தது.
தொடர்களில் ஒரு உணர்ச்சிமிக்க காட்சியின் போது ஒலிக்கும் ஒரு நல்ல பாடல், இனிமையான குரல், பல நேரங்களில் ஆண் குரலா, பெண் குரலா என்று தெரியாத அளவிற்கு மென்மையாக ஆனால் கேட்க மிகவும் இனிமையாக இருக்கவே பாடகர், பாடலின் பெயரை அறிந்துகொள்ள, வரிகளைப் புரிந்துகொள்ள என்று படிப்படியாக, கொரிய நாடகங்களைப் பற்றிய என் ஆர்வம் கொரியப் பண்பாடு, மொழி, உணவு, பாரம்பரியம், இசை ஆகியவற்றிலும் நாட்டம் கொள்ளத் தொடங்கியது. அப்போது தான் கே-பாப் பற்றி அதிகம் கேள்விப்பட்டு ‘BTS’ என்ற பெயர் எங்கும் எதிரொலிக்கவே அந்தக் குழுவினரைப் பற்றியும் தெரிந்து கொள்ளும் ஆவல் உண்டானது.
முதன்முதலில் நான் கேட்டது ‘டைனமைட்’ பாடல். புரிகிறதோ இல்லையோ திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டே இருந்ததில் என்னையும் அறியாமல் எப்பொழுதுமே அதை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தேன்! சில பாடல்களைக் கேட்கும் பொழுது நம்மை அறியாமலேயே ஒரு குதூகலமான உலகிற்கு அழைத்துச் சென்று விடும். அப்படித்தான் இந்தப் பாடலும். நடனத்தில் ஆர்வம் கொண்டவர்களுக்கு இவர்களின் ஒருங்கிணைந்த நடனமும் கவர்ந்ததில் பாடல்கள் ஒவ்வொன்றையும் மில்லியன், பில்லியன் தடவை யூடியூபில் கண்டுகளித்திருக்கிறார்கள். இப்படி இந்தக் குழுவைச் சிறப்பாக்கியது இசையா? நடனமா? அவர்களின் தனிப்பட்ட தன்மைகளா? தென் கொரியாவின் ஒரு சிறிய இசைக்குழு எப்படி இன்று உலகின் மிகப் பெரிய இசை நிகழ்வுகளில் ஒன்றாக மாறியது என்பதை அறியும் ஆவல் தோன்ற அவர்களின் நேர்காணல்கள் பலவற்றையும் சமீபத்தில் வெளியான ஆவணத்தொடர் வரை பார்த்து வியந்தேன்!
BTSன் கதை உலகத்தின் கண்முன்னே ஒன்றாக வளர்ந்த ஏழு இளைஞர்களின் கதை என்று கூறலாம். RM, Jin, SUGA, j-hope, Jimin, V, Jung Kook(JK) என்ற ஏழு பேரும் 2013ல் தென் கொரியாவில் BTS என்ற குழுவாக அறிமுகமானார்கள். BTS என்பது ‘Bangtan Sonyeondan’ என்பதன் சுருக்கம். ஆங்கிலத்தில் ‘Bulletproof Boy Scouts’. BTS உருவாகும் முன் அவர்கள் ஏழு வெவ்வேறு இளைஞர்கள். இந்த ஏழு பேரும் ஒருநாள் உலக இசை வரலாற்றில் இவ்வளவு பெரிய இடத்தைப் பிடிப்பார்கள் என்று யாரும் எளிதில் கணித்திருக்க முடியாது. அவர்களின் வெற்றி ஒரே நாளில் வந்ததல்ல. அது மெதுவாக கட்டப்பட்ட ஒன்று. அதனால்தான் BTSன் கதை சுவாரசியமானது.
32 வயதான Kim Nam-jun (RM) என்று அறியப்பட்டவர் இக்குழுவின் தலைவர் ஆவார். இளம் வயதிலேயே ஹிப்-ஹாப் இசையில் ஆர்வம் கொண்டு BTSக்கு முன்பே rap எழுதவும் பாடவும் தொடங்கியிருந்தார். அவருடைய அறிவார்ந்த சிந்தனை, ஆங்கில மொழித்திறன், ஹிப்-ஹாப் அனுபவம் BTSக்கும் உலக ரசிகர்களுக்கும் இடையே ஒரு பாலமாக அமைந்தன. BTS என்ன சொல்ல விரும்புகிறது என்பதைப் பல நேரங்களில் உலகிற்கு எடுத்துச் சொன்ன குரலாக RM இருந்தார்.
33 வயதான Kim Seok-jin (Jin), பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது நடிப்பில் ஆர்வம் கொண்டிருந்தார். BTSன் மூத்த உறுப்பினர். அவருடைய பங்கு பாடுவதைக் கடந்து நகைச்சுவை உணர்வு, தன்னையே கிண்டல் செய்துகொள்ளும் இயல்பு, மற்ற உறுப்பினர்களைச் சிரிக்க வைக்கும் திறன் என நீண்டு அவை அனைத்தும் BTSன் தனித்துவமான குணங்களாகவும் மாறின என்றால் மிகையாகாது.
33 வயதான Min Yoong-gi (SUGA)வும் ஹிப்-ஹாப் உலகிலிருந்து வந்தவர். அவருடைய முக்கிய கனவு இசையை உருவாக்குவது. BTSல் rapper ஆக மட்டுமல்லாமல் பாடலாசிரியர், தயாரிப்பாளர் என்ற அடையாளங்களுடன் வலம் வருபவர். அவருடைய பாடல்களில் வெற்றியின் பின்னால் இருக்கும் அழுத்தம், தனிமை, மனக்குழப்பம், கனவுகள் போன்றவை வெளிப்படையாக இருப்பது பெரும் கவனத்தைப் பெற்றது.
Jung Ho-seok (j-hope) BTSக்கு வருவதற்கு முன்பே நடனத்தில் திறமை பெற்றிருந்தார். அவருடைய மொழி நடனம். மேடையில் அவருடைய உடல் மொழியும் ஆற்றலும் BTSன் அடையாளங்களில் ஒன்றாக மாறின. “Hope” என்ற பெயரே உற்சாகம், நம்பிக்கை, நேர்மறை ஆற்றலை பிரதிபலிப்பதாக அமைந்தது. பார்ப்பதற்கு 25 வயதினர் போல இருந்தாலும் 32 வயது இளைஞர்.
இந்தக் கொரியன் மக்களுக்கு வயதே கூடாதா?!
நடன பின்னணியிலிருந்து வந்த 30 வயதான Park Ji-min (Jimin), BTSல் சேர்ந்தபின், நடனம், உணர்ச்சி வெளிப்பாடு, குரல் மூன்றையும் இணைத்த தனித்துவமான மேடை ஆளுமையாக வலம் வருபவர்.
30 வயதான Kim Tae-hyung(V) முதலில் ஒரு நண்பருடன் audition பார்க்கச் சென்று பங்கேற்றது தான் அவரது வாழ்க்கையையே மாற்றியது. ஆழமான, தனித்துவமான குரலும் வித்தியாசமான ஆளுமையும் அவரை BTSன் மிகவும் எளிதில் அடையாளம் காணக்கூடிய உறுப்பினர்களில் ஒருவராக மாற்றின. இவர் ஒரு நடிகரும் கூட.
குழுவின் முதன்மை பாடகர் 28 வயதான Jeon Jung-kook (JK). மிக இளம் வயதிலேயே குழுவில் இணைந்ததால் பொதுமக்களின் கண்முன்னே வளர்ந்தார். அவருடைய பல திறமைகளுக்காக “Golden Maknae” என்று ரசிகர்கள் செல்லமாக அழைக்கத் தொடங்கினர். BTSன் இளைய உறுப்பினராகத் தொடங்கினாலும் தனக்கென உலகளாவிய தனி இசை வாழ்க்கையையும் உருவாக்கினார். ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு பெற்ற இசைக்கலைஞன்.
அவர்களின் ஆரம்ப ஹிப்-ஹாப் இசையில் இளமை, சமூக எதிர்பார்ப்புகளுக்கு எதிரான கேள்விகள் முக்கியமான கருத்துகளாக இருந்தன.
“No More Dream” என்ற முதல் பாடலே “உனது கனவு என்ன” என்ற கேள்வியுடன் தொடங்கியது. பள்ளி, மதிப்பெண்கள், பெற்றோரின் எதிர்பார்ப்புகள், சமூகத்தின் அழுத்தம், இவற்றுக்கு நடுவே இளைஞர்கள் தங்களுடைய உண்மையான கனவைத் தேட வேண்டும் என்ற கருத்தைப் பாடல்களின் வழியே BTS ஆரம்பத்திலேயே பேசத் தொடங்கியது.
2 Cool 4 Skool, O!RUL8,2?, Skool Luv Affair போன்ற ஆரம்ப வெளியீடுகளில் இளமை, கல்வி, காதல், எதிர்பார்ப்பு, அழுத்தம் போன்றவை பேசப்பட்டன.
அவர்களின் பாடல்களில் ஆழமான கருத்துகள் இருந்தாலும் வெற்றி என்பது உடனடியாக கிடைக்கவில்லை. அவர்கள் தங்களுடைய ரசிகர்களை மெதுவாக உருவாக்க வேண்டியிருந்தது. அவர்களைக் கவரும் வகையில் அடுத்தடுத்த ஆல்பங்கள் வெளியாகின.
2015-2016 காலகட்டத்தில் வெளியான The Most Beautiful Moment in Life தொகுப்பு BTSன் பயணத்தில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. இளமை என்பது மகிழ்ச்சியின் காலம் மட்டுமல்ல. பயம், குழப்பம், நட்பு, தனிமை, கனவு, தோல்வி ஆகிய அனைத்தும் கலந்த காலம் என்பதை அவர்களின் பாடல்கள் சொல்லத் தொடங்கின. I Need U, Run போன்ற பாடல்கள் மூலம் மாணவர்களிடம் நெருங்கினார்கள்.
2016ல் வெளியான WINGS, BTSன் முக்கியமான திருப்புமுனைகளில் ஒன்று. ஆசை, சோதனை, அடையாளம், வலி, வளர்ச்சி, பயம், வெற்றி என அனைத்தையும் மையமாகக் கொண்ட பாடல்கள் அதில் இடம் பெற்றிருந்தன. ஒவ்வொரு உறுப்பினருக்கும் தனிப்பாடல் வழங்கப்பட்டதும் இந்த தொகுப்பின் சிறப்பம்சமாக மாறிப்போனது. இதன் மூலம் ரசிகர்கள் BTSஐ ஒரு குழுவாக மட்டும் பார்க்காமல், ஏழு தனித்தனி மனிதர்களாகவும் அறியத் தொடங்கினர்.
பின்னர் வந்த Blood Sweat & Tears பாடலில் இசை, நடனம், காட்சியமைப்பு, குறியீடுகள், கதை எல்லாம் ஒன்றாக இணைந்து BTSன் கலைநயம் எவ்வளவு மாறியிருக்கிறது என்பதை உலகிற்கு காட்டியது. ரசிகர்களின் ஆதரவும் பெருகியது.
2017ல் வெளியான You Never Walk Alone தொகுப்பில் இடம்பெற்ற “Spring Day” BTSன் மிக முக்கியமான பாடல்களில் ஒன்றாக மாறியது. கொரிய மொழி தெரியாதவர்கள்கூட அந்தப் பாடலில் இருந்த ஏக்கம், பிரிவு, நினைவுகள், காத்திருப்பு, மீண்டும் சந்திப்பதற்கான நம்பிக்கை போன்ற உணர்வுகளை உணர முடிந்தது. பாடல் கொரிய மொழியில் பாடப்பட்டிருந்தாலும் அதன் உணர்வால் ஈர்க்கப்பட்டு ரசிகர்கள் பெருக, சமூக வலைதளங்களின் ஊடே குழுவும் பிரபலமாக ஆரம்பித்தது.
BTS வளர்ந்துகொண்டிருந்த அதே நேரத்தில், அவர்களின் பெரும் வெற்றிக்குக் காரணமாக இருந்தது “BTS ARMY” என்று அழைக்கப்படும் அவர்களின் உலகளாவிய ரசிகர்கள் தான். அவர்கள் வெறும் பாடல்களை மட்டும் கேட்காமல் பாடல்களைப் பகிர்வது, மொழிபெயர்ப்பது, காணொளிகளை சமூகவலைதளங்களில் உலவவிடுவது என்று BTS பற்றிய செய்திகளை உலகம் முழுவதும் கொண்டு சென்றனர். இணையம் வாயிலாக ஒரு இசைக்குழுவுக்கும் அதன் ரசிகர்களுக்கும் இடையிலான உறவை எப்படி மாற்ற முடியும் என்பதை BTS உலகிற்கு உணர்த்தியது. அமெரிக்க இசை உலகமும் BTSஐ கவனிக்கத் தொடங்கியது.
இசைக்கு மொழியேது? உணர்ச்சியே அதன் மொழியாகிவிடுகிறது. அதில் வெற்றியும் பெற்று அந்த வருடத்தின் Billboard Music Awardsல் கலந்து கொண்டு Top Social Artist விருதைப் பெற்றார்கள். இது ஒரு சாதாரண விருது அல்ல. BTSன் ரசிகர்கள் எவ்வளவு சக்திவாய்ந்தவர்கள் என்பதை உலக இசைத்துறை கவனிக்கத் தொடங்கிய தருணம் அது.
அதைத் தொடர்ந்து BTSன் ‘2017 WINGS Tour’ தொடங்கியது. உலகின் பல நாடுகளில் அரங்குகள் நிறைந்த நிகழ்ச்சிகள் மக்களிடையே இருந்த அவர்களின் செல்வாக்கை உணர்த்தியது. அதுவே பெரும் திருப்புமுனையாகவும் BTSக்கு அமைந்தது. தங்களுடைய தொடர் தொகுப்புகளின் வாயிலாக அவர்கள் அவர்களாகவே இருந்தது தான் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றுத் தந்தது. யாருக்காகவும் அவர்கள் தங்களை மாற்றிக் கொள்ளவில்லை. LOVE YOURSELF என்பதே அவர்களின் செய்தியாக இருந்ததை உலக ரசிகர்களும் வெகுவாக ஏற்றுக் கொண்டார்கள்.
அமெரிக்க இசை உலகில் ஆங்கில இசை மிகப்பெரிய ஆதிக்கம் கொண்டது. ஆனால், ஒரு கலைஞரை நேசிக்க மொழி தடையாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்று BTS நிரூபித்தது.
Billboard, அமெரிக்கத் தொலைக்காட்சி நேர்காணல்கள், உலகச் சுற்றுப்பயணங்கள், கச்சேரிகள், கிராமி விருதுக்கான பரிந்துரைகள் என்று பல புதிய அத்தியாயங்களுடன் உலகளாவிய இசை உலகப்பயணம் அவர்களை எங்கோ அழைத்துச் சென்று விட்டது. 2018ல் தன்னை நேசிக்கக் கற்றுக்கொள்வதே உண்மையான அன்பின் தொடக்கம் என்ற மையக் கருத்துடன் வெளியான Love Yourself: Her தொகுப்பு மூலம் BTSன் புதிய அத்தியாயம் தொடங்கியது. DNA, MIC Drop போன்ற பாடல்கள் BTSன் புகழை மேலும் விரிவாக்கின.
ஒருவரை நேசிப்பதற்காகத் தன்னையே மாற்றிக் கொண்டே சென்றால், ஒரு கட்டத்தில் தன்னையே இழந்துவிடலாம். உண்மையான அன்பு என்பது உன்னை நீயே அழித்துக்கொள்வது அல்ல என்ற கருத்துடன் 2018ல் வெளியான Love Yourself: tear நல்ல வரவேற்பைப் பெற்றது. காதல் பாடல்கள் அதுவும் தோல்வி, வலி, பிரிவு என்றால் இளைஞர்களைக் கேட்கவும் வேண்டுமா? கொண்டாடித் தீர்த்தார்கள். இந்த தொகுப்பு Billboard 200ல் முதலிடம் பிடித்தது. K-pop ஆல்பம் ஒன்று அமெரிக்க ஆல்பம் தரவரிசையில் முதலிடம் பிடித்தது இதுவே முதல் முறை. வரலாற்றுச் சாதனை அல்லவா?
Love Yourself: Answer தொகுப்பு மூலமாக உலகெங்கிலும் உள்ள கோடான கோடி இளைஞர்களின் அன்பைப் பெற்றது BTS. தங்களுடைய கருத்துகள் வாயிலாக இளைஞர்களை வெகுவாக கவர்ந்திருந்தவர்களை 2018ல் ஐக்கிய நாடுகள் சபை அழைத்து கௌரவிக்க, உலகத் தலைவர்களும் தூதர்களும் கூடியிருந்த ஐக்கிய நாடுகள் சபையில், BTS குழுவின் தலைவர் RM, “உன்னை நீ அறிந்துகொள். மற்றவர்கள் உன்னை வரையறுக்க அனுமதிக்காதே” என்று குழுவின் சார்பில் உலக இளைஞர்களிடம் பகிர்ந்து கொண்டார். இவ்வாறு BTSன் வெற்றி இசைத்துறையைத் தாண்டி UN மேடையையும் அடைந்தது. அவர்கள் இனி பாடகர்கள் மட்டுமல்ல. ஒரு தலைமுறையின் பிரதிநிதிகளாகவும் பார்க்கப்பட்ட முக்கியமான தருணம். UNICEF உடன் இணைந்து முன்னெடுத்த LOVE MYSELF இயக்கமும் அதே செய்தியை வலுப்படுத்தியது.
2019க்குப் பிறகு BTSன் புகழ் மேலும் உயர்ந்தது. ஆனால் 2020 தான் உலகையே புரட்டிப் போட்ட வருடமாயிற்றே! குழுவினரின் பயணங்களும் ரத்து செய்யப்பட்டது. கொரோனா காலத்தில் உலகமே வீடுகளுக்குள் முடங்கியிருந்த காலகட்டத்தில், மனச்சோர்வு, பயம், வெறுமை என்றிருந்த மக்களை உற்சாகப்படுத்தும் விதமாக ஆங்கிலத்தில் ‘Dynamite’ என்னும் ஒரு டிஸ்கோ பாப் பாடலை வெளியிட்டது BTS. மிகவும் ரசிக்கத்தக்க வகையிலிருந்த பாடலின் வாயிலாக ஆங்கில பாப் இசை உலகிற்குள் அடியெடுத்தும் வைத்தார்கள். இது வெற்றிப்பாடலாக மட்டுமில்லாமல் Billboard Hot 100 முதலிடத்தைப் பிடித்து சாதனையும் படைத்தது. இந்தப் பாடல் BTSக்கு முதல் Grammy பரிந்துரையையும் பெற்றுத் தந்தது.
2020 இறுதியில் வெளியான BE தொகுப்பு அந்தக் காலத்தின் உணர்வை நேரடியாகப் பதிவு செய்தது. அதன் முக்கிய பாடலான “Life Goes On”, உலகம் நின்றுவிட்டது போலத் தோன்றினாலும் வாழ்க்கை எப்படியோ தொடர்ந்து செல்லும் என்ற உணர்வை வெளிப்படுத்தியது.
இந்தத் தொகுப்பில் உறுப்பினர்களின் படைப்பாற்றல் மேலும் வெளிப்பட்டது. அவர்கள் இனி பிறர் உருவாக்கிய பாடல்களை மட்டும் பாடும் கலைஞர்கள் அல்ல. தங்கள் கதையைத் தாங்களே உருவாக்கும் கலைஞர்கள் என்று உலகம் புரிந்து கொண்டது.
2021ல் வெளியான “Butter” பாடல் Billboard Hot 100-ல் முதலாவது இடத்தைப் பிடித்தது. நடனமாடுவதற்கு அனுமதி தேவை இல்லை என்ற எளிய செய்தியுடன் வெளியான “Permission to Dance”ம் அதிகளவில் வரவேற்பைப் பெற்றது. Coldplay இசைக்குழுவினருடன் “My Universe” என்று BTS, கொரியாவைச் சேர்ந்த K-pop குழு என்ற அடையாளத்தைத் தாண்டி, உலக பாப் இசையின் ஒரு முக்கியமான சக்தியாக மாறியிருந்தது.
இன்றுவரை Recording Academy பட்டியலில் BTSக்கு 5 கிராமி விருதுக்கான பரிந்துரைகள் இருந்தும் வெற்றி இன்னும் கிடைக்கவில்லை. இதில் அமெரிக்க இசை உலகின் உள்குத்து அரசியல் இருக்கிறது என்று ரசிகர்கள் புலம்பினாலும் கிராமி வெற்றியைத் தாண்டிய அளவுக்கு அவர்களின் தாக்கம் வளர்ந்துவிட்டது என்பதே உண்மை.
2022ல் Proof வெளியான பின்னர் தங்களுடைய தனிப்பட்ட கலைப் பயணங்களில் கவனம் செலுத்தப்போவதாகக் குழுவினர் அறிவிக்க, ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
தென் கொரியாவில் பெரும்பாலான தகுதியுள்ள ஆண்களுக்கு கட்டாய இராணுவ சேவை என்பது சட்டமாகும். அதனால் BTS உறுப்பினர்களும் வெவ்வேறு காலங்களில் சேவையில் சேர, கண்ணீருடன் அனுப்பி வைத்தனர் ரசிகர்கள். 2025 ஜூன் மாதத்திற்குள் ஏழு பேரும் தங்களுடைய இராணுவக் கடமைகளை நிறைவு செய்துவிட்டனர்.
BTS ARMYக்கு அது நீண்ட காத்திருப்பு.
2013ல் மேடையேறிய ஏழு இளைஞர்கள் இப்போது அதே மனிதர்கள் அல்ல. அவர்கள் உலகப் புகழை, வெற்றியின் அழுத்தத்தை, தனிமையை, காத்திருப்பை அனுபவித்திருக்கிறார்கள். தனித்தனியாக இசையை உருவாக்கியிருக்கிறார்கள். இராணுவ சேவையை முடித்திருக்கிறார்கள். இப்போது அந்த அனுபவங்களுடன் 2026ல் மீண்டும் ஒரு முழுமையான குழுவாகத் திரும்பி 14 பாடல்கள் கொண்ட ARIRANG ஆல்பத்தை கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வெளியிட்டனர். Arirang என்பது புகழ்பெற்ற கொரிய நாட்டுப்புறப் பாடல். இதில் இடம்பெற்ற SWIM என்ற பாடல் வாழ்க்கையின் அலைகளுக்குள் நின்றுவிடாமல் தொடர்ந்து முன்னேற வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறது. ARIRANG முதல் நாளிலேயே சுமார் 3.98 மில்லியன் பிரதிகள் விற்றதாக தெரிவிக்கப்பட்டது.
ஆல்பத்துடன் நின்றுவிடாமல் ARIRANG World Tour 2026ல் தொடங்கியது. அறிவிக்கப்பட்ட திட்டப்படி 34 நகரங்களில் 82 நிகழ்ச்சிகள் இடம்பெற்று சுற்றுப்பயணம் 2027 மார்ச் வரை தொடர்கிறது. செல்லுமிடங்களில் எல்லாம் ரசிகர்கள் கூட்டத்தின் அன்பு மழையில் நனைகிறார்கள். கொண்டாடுகிறது இளைஞர் உலகம்!
BTSன் உண்மையான தாக்கம் என்பது பாடல்களின் விற்பனையில் மட்டுமல்ல உலக பாப் இசையில் “உலக நட்சத்திரம்” என்பதற்கான வரையறையை மாற்றியது, ஆங்கிலத்தில் பாட வேண்டிய அவசியமின்றி உலகத்தை அடைய முடியும் என்பதை நிரூபித்தது, கொரிய இசையையும், மொழியையும், கலாச்சாரத்தையும் உலக ரசிகர்களிடம் கொண்டு சென்றது, கலைஞர்களுக்கும் ரசிகர்களுக்கும் இடையிலான உறவை இணையத்தின் மூலம் எவ்வாறு வலுப்படுத்த முடியும் என்பதைக் காட்டியதோடு மிக முக்கியமாக, பலவீனங்களை மறைக்காமல் இருப்பதும் ஒரு வலிமையாக இருக்க முடியும் என்பதை நிரூபித்தது.
BTSன் இசை நமக்குச் சொல்லும் செய்தி, “You never walk alone.”
இசையோடு இன்னும் எத்தனை அழகான தருணங்கள் காத்திருக்கின்றன என்பது யாருக்குத் தான் தெரியும்?
