பொன்னம்பல ஓதுவாருக்கு உறக்கம் பிடிக்கவில்லை. புரண்டு புரண்டு படுத்தார். “என்னப்பனே.. சித்சபேசா…உன்னைத் துதித்து உன் அடி வணங்கி, உன்னைப்பாடி சிவனேனு இருந்த என் மனச இப்டி அலைபாய வச்சுட்டயே பா”. நான் என்ன பதில் சொல்லணும்னு நீதான் எனக்குள்ளேயிருந்து பேசணும். முடிவெடுக்க முடியாத ஆற்றாமையும், செய்தால் என்ன என்ற ஆசையுமாக புரண்டு புரண்டு படுத்துப் பார்க்கிறார். சுத்தமாகத் தூக்கம் வரவில்லை. பக்கத்தில், சற்றுத் தள்ளி பாயில் படுத்திருக்கும் அவருடைய அருமை மனைவி பாகம்பிரியாள் அடர்த்தியான பின்னல் தலையணை வழியே, படர்ந்து கிடக்கிறது, பாறை தாண்டி பாயும் வெள்ளம் போல. அவளுக்கு ஐம்பது வயது இந்த ஐப்பசி வந்தால். இருபத்து மூன்று வயதில் திருநெல்வேலிச் சீமையிலிருந்து, பொன்னம்பல ஓதுவாரைக் கரம் பிடித்து, இந்தச் சிதம்பரத்திற்கு வந்து விட்டாள்.
திருமணம் ஆகும் வரை, பொன்னம்பலத்திற்கு தான் பாடுவது அவ்வளவு ஒன்றும் நன்றாக இல்லை என்ற தாழ்வுணர்ச்சி இருந்து கொண்டே இருந்தது. அவர் வீட்டில் தினமும் நடராஜர் அபிஷேகம் செய்யும்போது அவர் பாடுவதை மெய்மறந்து கேட்டுக் கொண்டிருப்பாள் பாகம் பிரியாள். கைக்குழந்தையை, கொஞ்சி முத்தமிட்டு, மடியில் கிடத்தி நீராட்டுவது போல, அந்தக் குட்டிச் சிலையை அணைத்துத் தூக்கி பலகை மேல் வைத்து, அபிஷேகம் செய்வதைப் பார்க்கவே சிலிர்ப்பாக இருக்கும். அப்போது அவர் பாடுவதைக் கேட்டு கண்ணீர் மல்க, நெக்குருகி அமர்ந்து பூ மாலை கட்டிக் கொண்டிருப்பாள். திருவாசகம் பாடி முடித்து, நடராஜர் பத்து பாட ஆரம்பிப்பார். “ காற்றென்ற மூவாசை மாறுதச் சூழலிலே கட்டுண்டு நித்தம் நித்தம் உடலென்ற கும்பிக்கு உணவென்ற இரை தேடி ஓயாமலிரவு பகலும் உண்டு உண்டு உறங்குவதைக் கண்டதேயல்லாது ஒரு பயனும் அடைந்திலேனை “ என்று வரிகள் தொடரும்போது, குரல் கம்மி, அழுகை பொங்குவது பக்கத்தில் இருக்கும் அவளுக்குத்தான் புரியும். அவர் குரலில் ஒரு உருக்கமும், பாடல் வழியாகவே அதன் பாவங்களைக் கடத்துவதையும் கேட்கும் யாருமே புரிந்து கொள்ள முடியும். ஆனாலும், அவர் தன் குரலில் மற்றவர்களைக் கவர்ந்திழுக்கும் மந்திரம் இல்லையென்றே எண்ணம் கொண்டிருந்தார். பாகம்பிரியாள்தான் அவர் பாடுவது மிகவும் நன்றாக இருக்கிறது என்றும், தெய்வாம்சம் அவர் குரலில் இருக்கிறது என்றும் அடிக்கடி சொல்லிக் கொண்டேஇருப்பாள்.
அவள் கொடுக்கும் ஊக்கத்தினாலேயே, தொடர்ந்து இரண்டு மணி நேரம் திருவாசகம், திருமுறைகள் பாடுவதற்காக திருவிழாக் காலங்களில் கோவில்களில் இருந்து அழைப்பு வந்தால் சென்று வருவார். காலையில், ஐந்து மணிக்கு “ நடராஜா; பொன்னம்பலனே “ என்று எழுந்திருப்பார். அவருடைய நாள் அவன் பெயர் சொல்லித்தான் தொடங்கும். வீட்டில் தினமும் தன் வழிபாடுகளை முடித்துக் கொண்ட பிறகுதான், வெளியில் கிளம்புவது எல்லாம். அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட சிவபெருமான் கோவிலில் சென்று நான்கு கால அபிஷேகங்களின் போதும் தேவாரம் இசைப்பதுதான் அவருக்குக் கிடைத்திருக்கும் பணி. அவருடைய இசையைத் தினமும் கேட்கின்ற சில பெண்களும், ஆண்களும் அவரிடம் தேவார இசையைத் தங்களுக்கும் கற்பிக்க வேண்டும் என்று மிகவும் ஆசையாகக் கேட்டுக் கொண்டதால், மதியத்திற்கும், மாலைக்கும் ஆன இடைப்பொழுதில் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார். கோவிலில் சென்று, தான் இசைக்க வேண்டிய பணி தடைபடாத வண்ணம் பார்த்துக் கொண்டார். அவர்கள் எவ்வளவோ வற்புறுத்திக் கேட்டபோதும், இவ்வளவு பணம் கட்டணமாகத் தர வேண்டும் என்று அவர் கேட்டதேயில்லை. அவர்களாகவே விருப்பபட்டு பாகம் பிரியாளிடம் கொடுத்துச் செல்வார்கள். அவளும் முதலில் வாங்கிக் கொள்ளத் தயங்கினாள்தான். நாங்கள் ஈசனுக்குக் கொடுப்பதாகத்தான் நினைத்துக் கொடுக்கிறோம் ; தட்டாமல் வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொன்னபோது தட்ட முடியவில்லை. அப்படிக் கற்றுக் கொள்பவர்களிடம், சிறு வயது வண்டார்குழலியும், பிறைசூடனும் ஒட்டிக் கொண்டார்கள். அதன் பிறகு நடந்தது எல்லாமே அந்த ஈசன் நடராஜன் அருள்தான்.
குழந்தைகள் இருவரும் ஈசன் அருளால் நன்றாகப் படித்தார்கள்.
சரியாக உறக்கம் பிடிக்காத ஓதுவார் எழுந்து உட்கார்ந்தார். விடிவிளக்கு நீல நிறத்தில் மெல்லியதாக ஒளியைச் சிந்தியபடி இருந்தது. அவருக்கு, தன் அப்பன் நீலகண்டனே சிரிப்பது போல இருந்தது. மகள் வண்டார் குழலி இப்போது கல்லூரியில் சேர்ந்து விட்டாள். முதல் வருடம் முடிக்கப் போகிறாள். மகன் பிறைசூடன் கல்லூரி முடித்து வேலையில் சேருவதற்கு ஆணையும் பெற்று விட்டான். அவன் பொறியியல் படிப்பு படித்தான். மகள் வணிகவியல் எடுத்துப் படிக்கிறாள்.
பொன்னம்பலத்திற்கு நன்றாகப் படிப்பு வந்தது. பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தவுடன், அவரை மதுரையில் உள்ள ஓதுவார் கல்லூரியில் சேர்த்தார் அப்பா. அவரும் ஆர்வமாக இசையிலும் , பண்கள், பாடல்கள் ஆகியவற்றிலும் நல்ல தேர்ச்சி பெற்றார். தேவாரம், திருமுறைகள் அவரை அந்த சின்ன வயதிலிருந்தே ஒரு பக்குவப்பட்ட, அமைதியான மனிதனாக வளர்த்தெடுத்தது.
பொன்னம்பலம், தான் சிறுவனாக இருக்கும்போதிலிருந்து தன் தாத்தாவும், அப்பாவும் வீட்டில் பாடிக் கொண்டேஇருப்பதையும், தாத்தாவும், பாட்டியும் போட்டி போட்டுக் கொண்டு இசையை ஊட்டியதையும் அனுபவித்து வளர்ந்தவர்தானே? அவருடைய அம்மாவும் அழகாகப் பாடுவார். அவளும் அவளுடைய தந்தையிடமிருந்து பண்ணும், இசையும் கற்றுக் கொண்டுதானே அப்பா வீட்டுக்கு வந்திருந்தார். அதனால், எப்போதும் இசை சூழ்ந்த வீடாகவே இருந்து விட்டது.
அவனும், தான் அப்பாவிடமும், தாத்தாவிடமும், தேவார, திருமுறைகளைக் கற்றுக் கொண்டாலும், அம்மாவிடம், அவள் பாடும் பாடல்களைக் கற்றுக் கொண்டான். அவனுக்குக் குரல் கொஞ்சம் சுமாராக இருந்தது. அவன் பதினொன்றாம் வகுப்புப் படிக்கும்போது, மாவட்ட பள்ளிகளுக்கிடையேயான, பாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அவனாகச் சேர்ந்திருக்க மாட்டான். அம்மாவிடம் அது பற்றிச் சொன்னபோது அம்மாதான் உற்சாகப்படுத்தினாள். அப்பா, தாத்தா எல்லாருமே அவன் நன்றாகப் படுவதாகச் சொன்னாலும், அவனுக்கு அம்மாவின் வார்த்தைகளே மிகவும் மனதுக்கு உகந்ததாக இருக்கும்.
அந்தப் போட்டியில், அவனுக்கு மூன்றாம் பரிசு கிடைத்தது. ஆனால், அதுவே அவன் மீது அவனுக்கே நம்பிக்கை அளிப்பதாக இருந்தது.
அம்மாவுக்கு, தேவார இசை மட்டுமில்லை, கர்நாடக இசையிலும் மிகுந்த ஆர்வமிருந்தது. தெலுங்குக் கீர்த்தனைகள் அதிகமாகப் பாடப்படும் கச்சேரிகளை எல்லாம் நன்றாகக் கேட்பாள். மற்ற மொழிக் கீர்த்தனைகளையும் நன்றாகக் கேட்பாள். ஆனால், தமிழ்ப்பாடல்கள் பாடுவதுதான் அவளுடைய விருப்பமாக இருந்தது. “ தமிழ்ப்பாடல்கள் மட்டும்தான் பாடுகிறாய்; கச்சேரிகளை எல்லாம் விழுந்து விழுந்து கேட்கிறாயே” என்று ஒரு முறை பொன்னம்பலம் கேட்டபோது, அம்மா சிரித்துக் கொண்டே சொன்னாள் , “ கண்ணா.. எல்லாப் பாட்டுகளையும் கேட்டால்தான், ராக சொரூபங்க கள் புரிபடும்”. “ சரி.. அந்தப் பாட்டையும் நீ பாட வேண்டியதுதானே?’ என்று மீண்டும் கேட்டான். “ கண்ணா…. சாப்பாட்டுல எத்தனை விதம் இருக்கு. ஆனா.. குறிப்பிட்ட சில குழம்போ , காயோ, இனிப்போ ஒவ்வொருத்தருக்கும் அதிகமா பிடிச்சிருக்கு இல்லையா? அது மாதிரிதான், எனக்கு தமிழ்ப்பாட்டு பிடிச்சிருக்கு.
“ சில சமயம் நீ பாடும்போது உனக்கு அழுகை கூட வந்திருக்கு’ நான் பாத்திருக்கேன்”
“ ஆமா.. அந்தப் பாட்டோட அர்த்தம் நமக்கு ரொம்ப பிடிச்சு, நம்ப மனசு அதுல லயிச்சு, அதை மானசீகமா பாடும்போது தன்னால அழுகை வந்துடுது “.
அம்மாவுடைய இந்தச் சொற்களைக் கேட்டே வளர்ந்ததாலோ என்னவோ, அவனுக்கும் பாடலின் அர்த்தததை உடனே புரிந்து கொண்டு தோய்ந்து பாடும் கலை கை கூடியது.
அப்படித்தான் சித்திரை மாதம் திருவாதிரை அன்று, விடுமுறைக்கு வந்த விருந்தினர்களோடு, தீர்த்தனகிரி சிவக்கொழுந்தீஸ்வரர் கோவிலுக்குச் சென்றிருந்தபோது,” மாசில் வீணையும் “ பாடிவிட்டு, அம்மாவுக்குப் பிடித்த “ ஏதைய்யா கதி” பாடலைப் பாடி முடித்தபோது, அப்படியே ஒரு அமைதி நிலவியது. கண்கள் குளமாக பொன்னம்பலம் கண்களைத் திறந்தால், அத்தனை பேர் கண்களும் குளமாகி நிற்கிறார்கள்.
இப்போது தூக்கம் வராமல் அவர் இப்படித் தவிப்பானேன்?
பக்கத்து வீட்டில் பிஞ்சுக் குழந்தை அழும் குரல் கேட்கிறது. அம்மா, இதோ இதோ என்று பால் புகட்டுகிறாள் போலும். கொஞ்ச நேரத்தில் அமைதி வந்து விட்டது. தெருவில், நாய்கள் ஒன்றுக்கொன்று சண்டை போட்டுக் கொள்கின்றன. கொஞ்ச நேரத்தில் அவைகளே அமைதியாகும். யார் வீட்டிலோ நடுஇரவில் வெளியூரிலிருந்து வந்தவர்கள் கதவைத் தட்டுகிறார்கள். அவர்களைப் பார்த்து நாய்கள் இன்னும் குரைக்கின்றன. மணி என்ன என்று பக்கத்திலிருந்த டார்ச் விளக்கை அடித்துப் பார்த்தார்.
அவர் இன்னும் கூட நிறைய புதுமைகளை ஏற்றுக் கொண்டவரில்லை. இந்த தேவார இசை, பாடல்கள் என்று சாதுவாகவே இருந்து விட்டார்.
என்ன முடிவெடுப்பது என்ற குழப்பம்தான் இப்போது தூக்கம் வர விடாமல் தடுக்கிறது. பாகம்பிரியாள் குழந்தை மனது கொண்டவள். அவளுக்கு அதிகமாக வெளியுலகம் தெரிவதில்லை. தான் உண்டு, தன் குடும்பம் உண்டு என்று இருப்பவள். தன் கணவனை மற்றவர்கள் பெருமையாகப் பேசுவது கேட்டு புளகாங்கிதம் அடைபவள். குழந்தைகள் இருவரும் அந்த ஈசன் அருளால், நல்ல பிள்ளைகளாக வாய்த்தது பற்றி திருப்தியும், மகிழ்ச்சியும், பூரிப்பும் கொள்பவள்.
பிள்ளைகள் இரண்டு பேரும் பன்னிரெண்டாம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்து விட்டார்கள். நல்ல மதிப்பெண்களும் பெற்று விட்டார்கள். அவர்களைக் கல்லூரியில் சேர்த்துப் படிக்க வைக்க வேண்டும் என்று வரும்போதுதான், பொன்னம்பலத்திற்கும், பாகம்பிரியாளுக்கும் என்ன செய்வது என்று கவலை வந்தது. நம்பும் ஈசன் கை விட மாட்டான் என்பதை மட்டும் இருவரும் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.
பொன்னம்பலத்திடம் பாட்டு கற்றுக் கொள்ள வந்தவர்கள்தான் பிள்ளைகளின் மேற்படிப்புக்கான ஆலோசனைகளை வழங்கினார்கள். ஆனால், அவருக்கு அது மலைப்பாக இருந்தது. ஆனால், அவர் நம்பும் ஈசனே வழி அமைத்துக் கொடுத்தான்.
பாட்டுக் கற்றுக் கொள்ள வரும் பெண்மணிகளில் ஒருவர், தன் மகனும், இன்னும் சில நண்பர்களும் சேர்ந்து ஒரு குழு அமைத்து கல்வி உதவித் தொகைகள் வழங்கி வருவதாகவும், தான் ஏற்பாடு செய்வதாகவும் முன்வந்தார். அதனாலேயே, இன்று பிள்ளைகள் இருவரும் நல்ல கல்லூரியில் சேர்ந்து நன்றாகப் படிக்க முடிந்திருக்கிறது. பிறைசூடன், வண்டார் குழலியின் படிப்பை இனிமேல் தான் பார்த்துக் கொள்வதாகச் சொல்லி விட்டான்.
பிள்ளைகள் இருவருமே வீட்டில் பாடல்கள் கேட்டே வளர்ந்தவர்கள் என்பதால், இயற்கையாகவே அவர்களுக்கு இசை நாட்டமும், நல்ல இசையும் கைகூடி வந்தது. இருவரும், அம்மாவிடம், தனிப்படல்களையும், அப்பாவிடம் தேவாரம், திருவாசகம் ஆகியவற்றையும், அவ்வப்போது கேட்டுத் தெரிந்து வைத்திருந்தார்கள்.
வண்டார்குழலி படிக்கும் கல்லூரியில், வருடந்தோறும், கல்லூரிகளுக்கிடையேயான போட்டிகள் நடத்தப்படும் திருவிழா நடைபெறும், அதற்கு, பெற்றோரும் பார்வையாளர்களாகக் கலந்து கொள்ளலாம். இந்த முறை, அவளே இசைப்போட்டியில் பங்கு பெற்றிருப்பதால், பொன்னம்பலமும், பாகம்பிரியாளும் வந்திருந்தார்கள். குழலியே, கல்லூரியில் விருந்தினர்கள் தங்குவதற்காக உள்ள அறை ஒன்றினை பதிவு செய்து வைத்திருந்தாள். எனவே, அவர்கள் இருவரும், முதல் நாள் இரவே வந்து தங்கி விட்டார்கள். குழலிதான் வற்புறுத்தி, அப்படித் தங்கும்படி வரவைத்து விட்டாள்.
அந்த விருந்தினர் இல்லம் மிகவும் நேர்த்தியாக அமைக்கப்பட்டிருந்தது. “ ப “ வடிவிலான நேர்த்தியான, விசாலமான கட்டிடம். நடுவில் அழகான வட்ட வடிவ மேடை போன்ற அமைப்பு. “ப” வைச் சுற்றியும், அழகான பூச்செடிகளும், அழகாகக் கத்தரித்து விடப்பட்ட புல் மரங்களும் இரு புறங்களிலும் சாமரம் வீசும் அழகு நங்கைகள் போல் நிற்க, நடுவே நடப்பதற்கான அழகான தரை. அந்த விருந்தினர்கள் இல்லத்தில், ஒரு வரிசை சிறப்பு விருந்தினர்களுக்கானது. காலையில், வழக்கம்போல, ஐந்து மணிக்கே விழிப்பு வந்து விட்டது. எழுந்திருந்த, பொன்னம்பலம், வெளியில் சென்று தான் அம்பலவாணணை, அவன் நடமிடும் வெட்ட வெளியில் தரிசிக்கலாம் என்று மகிழ்ச்சியோடு, நெற்றியில் திருநீறு துலங்க, நடைபயில வந்தார். வீட்டிலிருந்தால், இந்த நேரம், அந்த அம்பலவாணனுக்கு திருநீராட்டு நடக்கும் நேரம் இல்லையா? மனம் அவனிடம் லயித்தது.
அந்தக் கட்டிடத்தைச் சுற்றி, பூச்செடிகள் பூத்துக் குலுங்கும் அந்தப் பாதையில் நடக்க ஆரம்பித்தார். வானில் சூரியன் எழுந்து கிளம்ப ஆரம்பித்தான். செஞ்சுடர் ஒளிர அந்தத் தீவண்ணன் நடந்து வருவது போல பொன்னம்பலத்திற்கு மேனி சிலிர்த்தது. தன்னையறியாமல், பாட்டு கிளம்பியது. “ அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்; பொன்னம்பாலிக்கும் மேலும் இப்பூ மிசை; என்னம்பாலிக்கும் ஆறு கண்டின்புற ; இன்னம் பாலிக்குமோவிப்பிறவியே “ என்று பூர்விகல்யாணி ராகத்தில் லயித்து, தில்லையம்பலவாணனை நினைத்து மனமுருகப் பாடிக் கொண்டே நடந்தவர் அப்படியே அந்த சூரியன் வந்த திசையை நோக்கி கையெடுத்துக் கும்பிட்டு கண்மூடி நின்றிருந்தார். “ நடராஜா” என்று கண் விழித்தவர் அருகில் நின்றிருந்தவரை க் கண்டு ஒரு கணம் திடுக்கிட்டார்.
தான் மெய் மறந்து நின்றிருந்ததை எண்ணி சற்றே நாணி, தன் வழியே திரும்ப எத்தனித்தார். அருகில் இருந்தவர், “ வணக்கம்” என்றார். பொன்னம்பலமும் “ வணக்கம்” என்று சொல்லி, தான் செல்வதிலேயே குறியாக இருந்தார். வணக்கம் சொன்னவர் விடவில்லை.
“ நான் மகேஸ்வரன் “ என்று சொன்னபடியே கை குலுக்குவதற்காக நீட்டினார்.
“ வணக்கம்”
“ உங்க பாட்டு ரொம்பப் பிரமாதமா இருந்தது. அப்படியே குரல்ல தெய்வீகம் நிரம்பி வழியுது”
“ நன்றி சார்” என்று நெளிந்த பொன்னம்பலம் எப்படி பேச்சைத் தொடர்வது என்று தெரியாமல் நின்றார்.
“ இந்தக் கல்லூரில இன்னிக்கு நடக்கப் போற இசைப் போட்டிக்கு நடுவரா என்னை அழச்சிருக்காங்க. நான் திரைப்படங்ககளுக்கு இசை அமைகக்கறவரு.’ கேள்விப் பட்டிருக்கிங் களா? ஈஷான் ங்கற பேரை. அது நான்தான். இந்த விருந்தினர் விடுதிலதான் அந்தப் பக்க அறையில தங்கியிருக்கேன்” நானும் காலை நடைக்காகத்தான் வந்தேன்.”
அவர் பேசுவதில் பரவசமும், மகிழ்ச்சியும் வழிந்தோடியது. பொன்னம்பலம் அமைதியாக நின்று கொண்டிருந்தார்.
பொன்னம்பலத்துக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை. “ அப்படியா சார் : எனக்கு சினிமா பத்தியெல்லாம் ரொம்ப தெரியாது. மகிழ்ச்சி சார்”. விடைபெறுவதிலேயே கவனமாக இருந்தார்.
‘’ உங்க பாட்டைக் கேட்டு அப்படியே உங்களைப் பின்தொடர்ந்து வந்துக்கிட்டேயிருக்கேன்.”
“ நன்றி சார்”
“ உங்க பேரைச் சொல்லவில்லையே நீங்க?’
“ பொன்னம்பலம்’
“ உங்க பிள்ளைகள் இங்க படிக்கிறாங்களா? “
“ஆமா.. பொண்ணு படிக்கறா”
“ சரி.. உங்களைச் சந்திச்சதுல ரொம்ப மகிழ்ச்சி”
“ ரொம்ப மகிழ்ச்சி சார்”
பொன்னம்பலம் தன் அறைக்கு வந்து வெளியில் காத்திருந்தார். பாகம் குளிக்கிறாள் போலும். ஒரு தட்டு தட்டி விட்டு வாசலில் காத்திருந்தார். அவளிடம் சொன்னால் , “ பாத்திங்களா .. உங்க பாட்டு எவ்வளவு நல்லாருக்குன்னு நான் சொன்னா நம்ப மாட்டீங்க: யாரோ ஒருத்தர் இப்போ என்ன சொல்றாங்க பாத்தீங்களா “ என்று மகிழ்வாள்.
ஒரு பத்து நிமிட இடைவெளி விட்டு மீண்டும் கதவைத் தட்டினார். பாகம்பிரியாள், குளித்து புத்துணர்ச்சியோடு கதவைத் திறந்தாள். நடந்ததைச் சொன்னார். அவளும் அவர் நினைத்த மாதிரியே வார்த்தை பிசகாமல் சொல்லி மகிழ்ந்தாள்.
ஈஷான் தான் அறைக்குச் சென்றதிலிருந்து, தான் கேட்டு வந்த இசையையே நினைத்தபடி இருந்தார். ஏதோ பெரிய மனக் கவலை தீர்ந்து விட்டது போல உணர்ந்தார். யாரிடமாவது உடனே அதைச் சொல்ல வேண்டும்போல இருந்தது. தன் உதவியாளன், பியானோ கலைஞன் ஜான் பீட்டரை அழைத்துப் பேசினார் . தான் விரும்பிய ஒரு குரலினைக் கண்டுபிடித்துவிட்டதாக மகிழ்ச்சியோடு நடந்ததைப் பகிர்ந்து கொண்டார்.
காலையிலிருந்தே கல்லூரி ஒரே மகிழ்ச்சிக் களிப்பில் ஆழ்ந்தது. பிள்ளைகள் பெற்றோரை விசாரிப்பதும், பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொள்வதுமாக ஒரே கோலாகலமாகவிருந்தது. வண்டார்குழலி தான் பெற்றோரை , தான் சொன்ன இடத்தில் சென்று சந்தித்து வாழ்த்துப் பெற்றாள். கிளிப்பச்சையில், அடர் வாடாமல்லி வண்ண பார்டர் போட்ட பாவாடை அணிந்து, அதே போல ரவிக்கையும், பார்டர் நிறத்தில் தாவணியும் அணிந்து, காதில் ஜிமிக்கி ஆட, பார்க்க மிகவும் அழகாக இருந்தாள். பாகம்பிரியாள், தன் மகளைக் கண்டு பெருமிதமும், பூரிப்புமாக, கன்னத்தை வழித்து திருஷ்டி சுற்றி கைவிரல்களைச் சொடுக்கி எடுத்தாள்.
போட்டிகள் காலையிலிருந்தே தொடங்கி விட்டன. வெவ்வேறு இடங்களில் அமைக்கப்பட்டிருந்த வெவ்வேறு மேடைகளில், பல போட்டிகள் நடந்து கொண்டிருந்தன. வாத்திய இசை, பரத நாட்டியம், மேற்கத்திய இசை, மேற்கத்திய நடனம், ஓரங்க நாடகம், கிராமிய இசை, கிராமிய நடனங்கள் என பல்வேறு போட்டிகள். வண்டார்குழலி கர்நாடக இசை , தமிழ்ப்பாடல்கள் பிரிவில் இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகியிருந்தாள்.
போட்டிகள் தொடங்கியது. பொன்னம்பலமும் , பாகம்பிரியாளும் மேடை நன்றாகத் தெரியும்படியான இடம் தேடி அமர்ந்து கொண்டார்கள். மேடையில் பாடல் போட்டிக்கு நடுவர்களாக மூன்று பேர் அமர்ந்திருந்தார்கள். மூவரில், நடுவில், காலையில், நடைபழகும்போது சந்தித்த அந்த ஈசன் இருந்தார். பல குழந்தைகள் மிகவும் சிறப்பாகப் பாடினார்கள். ஒரு மாணவனை அறிமுகப்படுததும்போது, அவன் அடிப்படையில் தமிழ் தெரியாதவன் என்றும், வேறு மாநிலத்திலிருந்து ,சென்னையில் வந்து கல்லூரிப் படிப்பு படிப்பதாகவும், அவனுடைய தாய் மொழியில் பாடலை எழுதி வைத்துக் கொண்டு பாடுவதாகவும் சொன்னார்கள். அழகாகவே பாடினான். பொருள் தெரிந்து, உணர்ந்து பாடினான்.
வண்டார் குழலியின் முறை வருவதற்காகக் காத்திருந்தார்கள் அவள் பெற்றோர்.
பொன்னம்பலம், தான் ,பதினொன்றாம் வகுப்பில் பாடி பரிசு வாங்கியதை எண்ணி மனத்துள் நகைத்துக் கொண்டார். பாட்டி அதைக் கண்டு மகிழ்ச்சிப் பட்டதையும்,அம்மாவும், அப்பாவும் கட்டி அணைத்து உச்சி முகர்ந்ததையும் எண்ணி சிலிர்த்துக் கொண்டார். அப்போது, ஒருவர்,” முத்தைய்யா பேரனா நீ? என்றார். பொன்னம்பலம் “ ஆம்” என்று தலையசைத்ததும, அவர் தாத்தாவைப் பற்றிப் பெருமையாகப் பேசினார். தன்னுடைய பாடல்கள் அந்த ஈசன் சந்நிதியில் மட்டும்தான் என்று பிடிவாதமாக இருந்தாராம். தமிழ் வழியில் திருமணம் செய்து கொள்பவர்கள் வீட்டில் திருமண விழாவில் பாடச் சொன்னால் கூட பாட மாட்டாராம். பொன்னம்பலம், ஆறவாது வகுப்புப் படிக்கும்போதே தாத்தா ஈசனடி சேர்ந்து விட்டார்.
பின்நோக்கி ஓடிய நினைவுகளை மாணவர்களின் கைத்தட்டல் ஓசை கலைத்தது.
மேடையில் வண்டார்குழலி ஒலிபெருக்கி முன்பாக அமர்ந்திருந்தாள்.
ஆரம்பிக்கலாம் என்று சமிக்ஞை கிடைத்தவுடன், பாட ஆரம்பித்தாள்.
கோபாலகிருஷ்ண பாரதியின் நந்தன் சரித்திரக் கீர்த்தனைகளிலிருந்து எடுத்த பாடல்.
நந்தன், நந்தியை சற்றே விலகியிருக்கச் சொல்லி இறைஞ்சும் பாடல்.”ஓரடி விலகினால் போதும், உற்றுப் பார்க்கவே சற்றே விலகாதோ உந்தன் மாடு “ என்ற வரிகள் பாடும்போது, அந்த ஈசனை வேண்டுவது போலவும், ஆணையிடுவது போலவும் குரலில் பாவம் தொனிக்கப் பாடினாள். அவள் பாடி முடித்தவுடன், அரங்கமே எழுந்து கை தட்டியது.
பொன்னம்பலமும் , பாகம்பிரியாளும் கண்ணில் நீர் பனிக்க அமர்ந்திருந்தார்கள்.
அடுத்தடுத்து பிள்ளைகள் வந்து ஒருவருக்கொருவர் சளைத்தவர் இல்லை என்பது போலப் பாடினார்கள். நிச்சயம் நடுவர்களாக இருப்பவர்களுக்கு முடிவு செய்வது கடினமான பணியாகததான் இருக்கும் . முடிவு அறிவிப்பதற்கு முன் பெரிய இடைவேளை விடப்பட்டது.
குழலி வேக வேகமாக வந்தாள். பாகம்பிரியாள் அவளைக் கட்டி அணைத்துக் கொண்டாள். பொன்னம்பலம் அவளைத் தலையில் கைவைத்து, கையைப் பிடித்துக் கொண்டு “ நல்லாப் பாடினேம்மா” என்றார். விழாவிற்காக நிறைய விதவிதமான உணவுக் கடைகள், பழரசக் கடைகள் எல்லாம் வரிசையாக திடலில் இருந்தன. குழலி, அவர்கள் இருவரையும் ஏதாவது சாப்பிடலாம் என்று அழைத்துச் சென்றாள். போகும் வழி நெடுக, அவளுடைய தோழிகளும், தோழர்களும், அவளைப் பாராட்டி, கை குலுக்கியபடியே இருந்தனர்.
பாகம்பிரியாள் ஆப்பிள் ஜுசும், பொன்னம்பலம் காபியும் குடித்தார்கள். பொன்னம்பலத்திற்கு இந்தக் காலக் கல்லூரிப் பிள்ளைகளைப் பார்த்து தங்கள் காலத்தோடு ஒப்பிட்டுப் பார்த்து ஆச்சரியம் கொண்டார்.
அவர் கைப்பேசி ஒலித்தது. அவர் அதை எடுத்து, குழலியிடம் கொடுத்து, “ இந்தா.. உன் அண்ணன்தான் கூப்பிடறான்” என்று கொடுத்தார்.
“ அண்ணா.. நல்லா பாடினேன் ணா “ “ தெரியல.. இன்னும் முடிவு அறிவிக்கல”.
“ சரிண்ணா.. தெரிஞ்சப்புறம் சொல்றேன்” “ சரிண்ணா .. வெக்கறேன் “ .
கல்லூரியை, விழாக்கோலத்தை எல்லாம் வேடிக்கை பார்த்தபடியே கொஞ்ச நேரம் நடந்தார்கள்.
ஒலிபெருக்கி விழா மேடையை நோக்கி அனைவரையும் அழைத்தது.
குழலிக்கு, நெஞ்சம் தடக் தடக் என அடித்தது.
முடிவினை அறிவிப்பவர், சிறப்பாகப் பாடினவர்களின் பெயர்களை எல்லாம் சொல்லி எல்லோரையுமே, தங்களுக்கே பரிசு என்பதாக நினைக்க வைத்தார். ஆனாலும், முதல் மூன்று பரிசுகள் என்ற அடிப்படையில், என்று ஆரம்பித்து, மூன்றாம் பரிசு, சென்னையிலிருந்து வந்து கலந்து கொண்டு பாடிய பையன் பெயரும், அடுத்தது, கோயம்புத்தூர் கல்லூரி மாணவிக்கும், அறிவிக்கப்பட்டது. முதல் பரிசு என்று அவர் சொல்லும்போது, மொத்த அமைதியும் அங்கே குடிகொண்டிருந்தது. அவரும், கொஞ்சம் இடைவெளிவிட்டு, ‘ பி. வண்டார் குழலி” என்று அவள் கல்லூரி பெயரையும் சேர்த்து அறிவித்தவுடன், கைத்ததட்டல் அடங்க ஐந்து நிமிடங்களானது.
பாகம்பிரியாள், ஆனந்தக் கண்ணீர் சொரிய நின்றாள். பொன்னம்பலம், முகத்தை துடைத்துக் கொள்வது போல மேல்துண்டால் கண்ணில் ஒற்றி எடுத்தார்.
சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் அழைக்கப்பட்டிருந்தார். அவர் தமிழிசையின் மேன்மை, தமிழிசை மூவர் பற்றியெல்லாம் பேசினார். பரிசினைப் பெற்றுக் கொள்ள அந்தந்த மாணவர்களை அழைக்கும்போது, அவர்களுடைய பெற்றோர் வந்திருந்தால் அவர்களும் மேடைக்கு வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது. குழலி பரிசு வாங்கும்போது பொன்னம்பலமும், பாகம்பிரியாளும் மேடைக்கு வந்தார்கள். மகேஸ்வரன்தான் அவளுக்குப் பரிசினை வழங்கினார். அப்போது, “ காலையில் நான் கேட்ட மதுரகானம் பாடியவர் நீங்கதானே சார்” என்று பொன்னம்பலத்துடன் கை குலுக்கினார்.
“ அம்மா.. குழலி.. நிகழ்ச்சி எல்லாம் முடிந்தவுடன் உங்க அப்பாவோட கொஞ்சம் பேசணும் மா”போயிடாதீங்க .. வெயிட் பண்ணுங்க” என்று மெதுவாகச் சொன்னார்.
எல்லாம் முடிந்தபிறகு, அவருடைய அறைக்கு அவர்களை அழைத்துச் சென்றார். குழலியிடம் தான் கேட்ட அவளுடைய அப்பாவின் பாடல்கள் பற்றிச் சொன்னார்.
தான் அடுத்ததாக இசை அமைக்க ஒத்துக் கொண்டிருக்கும் திரைப்படத்திற்கு தான் எதிர்பார்த்தது மாதிரியான தெய்வீகக் குரலை அப்போது அவர் கண்டடைந்தது பற்றிப் பரவசமாகப் பேசினார். பொன்னம்பலம் சரி என்று சொன்னால் மற்றவர்களுடன் மேற்கொண்டு பேசுவதாகச் சொன்னார். பொன்னம்பலம் தன்னால் அது முடியாது என்று மறுத்துச் சொன்னார்.
“ஒண்ணும் அவசரமில்ல.. நீங்க நல்ல யோசிச்சு எனக்கு போன் பண்ணுங்க “ உங்க பதிலுக்காக நான் காத்திருப்பேன்’ என்று சொல்லி, அவருடைய முகவரி அட்டையையும் கொடுத்தார்.
இது எல்லாம் நடந்து இரண்டு நாட்களாகி விட்டன, குழலியும், பிறைசூடனும் “ ஒத்துக்கோங்கப்பா “ “இப்படி ஒரு வாய்ப்பு உங்களுக்கு இவ்வளவு எளிதா கிடச்சிருக்கு “ என்று ஆர்வம் மேலிடச் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள். பாகம் பிரியாள் “ ஏ.. அவரை வற்புறுத்தாதீங்க; அவர் என்ன முடிவெடுக்கிறாரோ எடுக்கட்டும்” என்று பிள்ளைகளை அடக்கினாள்.
தூக்கம் வராமல் தவிக்கும் பொன்னம்பலம், தாத்தா, அப்பா எல்லோரையும் நினைத்துப் பார்க்கிறார். மீண்டும், மீண்டும். பாட்டி, “ நாம் அந்த ஈசன் முன்னாடி பாடணும்; அதுதான் நமக்கு இறைவன் இட்ட பணி; நம்ப மனசை வேற வழில செலுத்தவே கூடாது “ அப்படின்னு சின்ன வயசுல சொல்லிட்டேயிருந்தது, இப்பவும் கிட்ட வந்து உட்கார்ந்து சொல்ற மாதிரியிருக்கு.
´நடராஜா “ என்று எழுந்து கூடத்திலேயே நடக்க ஆரம்பித்தார்.
பாகம் பிரியாள் சிறுநீர் கழிப்பதற்காக எழுந்து வந்தவள், : இன்னும் நீங்க தூங்கலையா”என்றவள், “ சும்மா அந்த சினிமாக் காரங்களையே நெனச்சுட்டு இருக்கீங்களா?” படுத்துத் தூங்குங்க “ என்றபடியே தூக்கம் கலையாத குரலில் சொல்லி விட்டு மீண்டும் படுக்கச் சென்றாள்.
“ம்.. சரி” என்று சொல்லி விட்டு வெறுமனே படுத்தாரே தவிர உறக்கம் பிடிக்கவில்லை. எப்போதோ தூங்கியிருப்பார் போலும். பக்கத்துக் கோவிலில், நேரம் சொல்லும் கடிகாரம் ஐந்து முறை அடித்ததைத் தொடர்ந்து , பூபாளத்தில் குழலிசை ஒலிக்க ஆரம்பித்தது.
“ நடராஜா” என்று எழுந்தவர், வழக்கம்போல, தன்னுடைய, குளியல் எல்லாம் முடித்து, நடராஜருக்கு, திருநீராட்டு செய்வதற்காக, எப்போதும் அள்ளி அணைத்து எடுத்து வைப்பது போல தாம்பாளத்தில் எடுத்து வைத்து, “ குனித்த புருவமும்” என்று இசைக்க ஆரம்பித்தார். நடராஜர், கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பைச் சிந்தியபடி குஞ்சிதபாதம் தூக்கி நின்றார்.
