‘இரவுக்கு ஆயிரம் கண்கள், பகலுக்கு ஒன்றே ஒன்று’ என்று ஒரு சினிமா பாடல் உண்டு. இன்றோ, இரவிற்கு பல்லாயிரம் கோடிக் கண்கள். செயற்கை வெளிச்ச மழை இங்கே பொழிகின்றது, உலக உயிரிகள் திகைத்து நிற்கின்றன. அளவிற்கு அதிகமானால் அமுதமும் நஞ்சு தானே? தேவன் முதல் ஆணை பிறப்பிக்க ஒளி தோன்றியது என்று சொல்கிறது வேதாகமம். ஒளியுடன், விழிப்புணர்வையும், நன்மைகளையும், அறிவையும் இணைத்துப் பார்த்து பழகிய நம்மால், தேவையற்ற இடங்களில், தேவையே இல்லாத வடிவமைப்பில், உமிழும் வெளிச்சக் கதிர்களால் தீமைகள் உண்டாகின்றன என்பதை நம்ப முடியுமா?
மௌயி, (Maui) பசிபிக் பெருங்கடல் பகுதியில் உறங்கும் ஹலேயாகலா (Haleakalā) எரிமலை 10023 அடிகளுக்கு மேலே எழும்பி வானைத் துளாவுகிறது. அடர் இருள் படர்ந்த அந்த இடத்தில் தெளிவான ஆகாயத்தை, விண்மீன்களை, இரவு வானம் பொதிந்து வைத்திருக்கும் இரகசியங்களை, பார்த்து அனுபவிக்க வேண்டும். ஹலேயாகலா தேசிய பூங்காவில் செரீனா உர்ஸ்மர்( Serena Wurmser) ஒரு அருமையான உச்சி மாநாடு நடத்தி ‘இருள்’ என்பதன் சிறப்புக்களைக் காட்சி பூர்வமாகவும், உரைகள் மூலமும், அமைதியாக அனுபவிப்பதன் மூலமும் உணர்த்துகிறார். பு உ உலா உலா (Puʻuʻulaʻula) என்ற இந்த செங்குன்ற மாநாட்டில், அவரின் விண்மீன் நேசத்தை, ஹார்வேர்ட் பல்கலையில் சேருவதற்கு அவர் சமர்ப்பித்த ‘சப்த ரிஷி மண்டல ஆய்வுக் கட்டுரையை, வரலாறும் செவி வழிக் கதைகளும், அறிவியலும் நிரம்பிய அவரது ஈர்ப்பான உரையை நீங்கள் இரசிக்கலாம்; “எவற்றையெல்லாம் இழக்கிறோம்; இங்கே நம்முடன் நம் அன்பிற்குரியவர்கள் இருந்தால் எத்தனை நன்றாக இருக்கும். விண்மீனைப் பாருங்கள், உங்கள் அன்பிற்குரியவர்கள் பார்த்த, பார்த்துக் கொண்டிருக்கிற நட்சத்திரம் அது. நம்மை இணைப்பது விண்மீன்களே.”
உறங்கும் எரிமலையின் உச்சியிலிருந்து விண்ணைப் பார்ப்பது அபூர்வமானது. அமெரிக்கா உட்பட வளர்ந்த பல நாடுகளில், மனிதர்கள், ஒளி மாசினால் துன்பமுறுகிறார்கள். பரந்து விரியும் புற நகர்ப்பகுதிகள் போலவே, ஒளி வெள்ளம் பரவிப் பாய்கிறது. வான் வெளியிலிருந்து பார்க்கையில் பாஸ்டன் தொடங்கி, வாஷிங்டன் டி சி வரை கடலோரப்பகுதி ஒளிரும் நாடாவெனவே காணக் கிடைக்கிறது. அதிகமான ஒளி விளக்குகள், இருளைக் காணவொட்டாமல் செய்கின்றன. மிகப் பிரகாசமான நட்சத்திரங்கள் வெளிறியும், மற்றவை இன்னமும் குறை ஒளியுடனும் தான் தெரிகின்றன. ‘சைன்ஸ்’ இதழ் வெளியிட்ட ஒரு அறிக்கை, இரவு வானம் 10% பிரகாசமாக ஆகி வருவதாக, குடிமக்கள் சொல்வதாகச் சொல்கிறது.
ஓளி மாசோ நகர் எல்லைகளைத் தாண்டிச் செல்கிறது. லாஸ் வேகாஸ் விளக்குகள் 93 மைல் தாண்டிச் சென்று ‘டெத் வேலி தேசீய பூங்காவின்’ ஒளி மாசிற்கு முதன்மைக் காரணமாக இருக்கின்றன என்று ‘டார்க் ஸ்கை’ என்ற அகில உலக நிறுவனம் சொல்கிறது. இவர்களது குறிக்கோள் ‘இரவுச் சூழல்களை மீட்டெடுத்து, வனவிலங்குகள் மற்றும் மனிதர்களைக் காப்பதுதான். மனிதர்கள் உருவாக்கிய விளக்குகளின் தாக்கம், பு உ உலா உலா வரை செல்கிறது, அதிகம் என்று சொல்லாவிட்டாலும், இது பெருகி வரும் ஒளி மாசைப் பற்றிய எச்சரிக்கை செய்கிறது. மின்மினிப் பூச்சிகள் மற்றும் சிறு வண்டினங்களின் மீது ஒளி மாசு செயல்பாட்டைப் பற்றி ஆய்வு செய்யும் ஹார்வேர்ட் ஆய்வாளர் அவலான் ஓவென்சிஸ், ‘பாதிக்கபடவில்லை என நாம் நினைக்கும் இயற்கைப் பகுதிகளிலும் ஒளி ஊடுருவி மாசை ஏற்படுத்துகிறது என்கிறார்.
விண்மீன்களைப் பார்க்க முடியாமல் மட்டும் செய்வதில்லை இந்த ஒளி மாசு. அது உடல் நலத்தையும் பாதிக்கிறது. உணவுச் சங்கிலியில் இதன் பாதிப்பு நீடித்தும், பெருகியும் வருவது உடல் நலத்தை பாதிக்கும் ஒன்றாகும். இருள் நல்லதே; அது செயல்படும் உயிர் சக்தி. சரியான இடத்தில் சரியான விகிதத்தில், தேவையான அளவு ஒளி இருந்தால், சரியான இருட்டும், அதன் நன்மைகளும் நமக்குக் கிடைக்கும். நகரப் பூங்காக்கள், நகர அமைப்பு மற்றும் வாழ்விடங்கள், வானவியல் கூடுகைகள், எரிமலை உச்சிகள், பல கட்டுமானங்கள் இவற்றில் இருளிற்கு உரிய இடத்தை பெற்றுத்தர பேராசிரியர்கள் முதல் மாணவர்கள் வரை சிந்திக்கிறார்கள், பேசுகிறார்கள், போரடுகிறார்கள். இது ஒரு சரியான நடவடிக்கை.
ஒளி மாசு
இந்தப் பதம், 1973 சைன்ஸ் இதழில் முதன் முதலாகப் பேசப்பட்டது. ஆனால், பல வருடங்கள், வானவியலாளர்களைத் தவிர யாரும் கவலைப்படவில்லை. தோள்களைக் குலுக்கிக் கொண்டே, ‘அவர்களுக்குத் தேவையென்றால், இருட்டான பிரதேசங்களுக்கு போகட்டும்’ என்று பொது மக்கள் சொன்னார்கள்.
ALAN, -இது என்ன? இரவில் செயற்கை ஒளி. பேருந்துகள், மற்றும் மகிழுந்துகள் செல்லும் சாலையில் அவை உமிழும் மிதமிஞ்சிய வெளிச்சம் கண்களைக் கூச வைத்து பல விபத்துக்களுக்கு காரணமாகிறது. நட்சத்திர வானின் கீழ் நாம் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தோம் என்று சொல்கிறது ALAN. இந்த செயற்கை ஒளி, உறக்கத்தில் தொந்தரவு தருகிறது, மனச் சோர்வு, மன பேதலிப்பு,, உடற் பருமன், நீரிழிவு நோய் போன்ற வேண்டாத விருந்தாளிகளுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கிறது.
2017ல் ஹார்வேர்ட் மற்றும் பல நிறுவனங்கள், 24 வருடங்களாக, 109,672 செவிலியர்கள் உடல் நிலை குறித்து செய்த ஆய்வறிக்கையை வெளியிட்டது. அவரவர் வாழும் நிலப்பகுதியைச் சார்ந்து இந்தச் செவிலியர் 5 குழுக்களாக பிரிக்கப்பட்டனர். செயற்கை வெளிச்சம் குறைவாக இருக்கும் இடத்தில் வசிக்கும் செவிலியர்களை விட, ALAN அதிகமாக இருக்கும் இடத்தில் வசிப்போருக்கு மார்பகப் புற்று நோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதாக கண்டறியப்பட்டது.
இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில், ஒளி மாசு, விலங்குகளை எவ்வண்ணம் பாதிக்கிறது என்று அறிவியலாளர்கள் ஆராய்ந்தனர். பரிணாம வளர்ச்சியால் உருவான விலங்கினம், அதன் சுழலிலே சிக்கியதுதான் பரிதாபம் என்று சொல்லும் அவலான், ‘இந்தச் சவால்களைச் சந்தித்துதான் ஆக வேண்டும்’ என்று விளக்குகிறார். எந்த நடத்தை, விலங்குகளுக்கு, தம்மைத் தக்க வைக்கும் ஆற்றலைத் தந்ததோ, அதுவே அவைகளுக்கு ஆபத்தாக உரு மாறியது.
இரவுஜீவி விலங்குகள், பன்னெடுங்காலமாக, தொலைவிலுள்ள நிலா வெளிச்சத்தையும், விண்மீன்களின் வெளிச்சத்தையும், பார்த்துப் பழகியவை. அந்த உயரத்தை அவைகளால் எட்ட முடியாமல் போவதே அவைகளுக்குப் பாதுகாப்பு. இப்போதோ, அந்தக் கட்டிடத்தில், இந்தக் கம்பத்தில் ஒளிரும் விளக்குகள்; அவற்றைக் குழப்பி இயற்கையென நம்ப வைத்து விடுகிறது. இரவு செயற்கை ஒளி வருவதற்கு முன்னால், தன் எதிரியிடமிருந்து தப்பிக்க கடல் ஆமைகள், நட்சத்திர, நிலா ஒளி பிரதிபலிக்கும் வெளிச்சத்தை துணை கொண்டு வேகமாக நகர்ந்தன. ஆனால், இப்போதோ, ஒரு உணவகத்தின் ஒளிரும் பெயர்ப் பலகையை நிலா வெளிச்சம் என நினைத்து அதை நோக்கி பாய்ந்து செல்கின்றன. கடற்கரையிலிருந்து தன்சிறு துடுப்புகளால் ஊர்ந்து அந்த வெளிச்சத்தை நோக்கி அது செல்கையில், அந்தோ, பரிதாபம், நெடுஞ்சாலையில் செல்லும் ஒரு வாகனத்தில் சிக்கி உயிரிழக்கிறது. வாணலிக்கி தப்பி அடுப்பில் விழுந்த கதையாகிறது.
செயற்கை ஒளியால் பாதிப்படையும் அனைத்து விலங்குகளுக்கும் இந்தக் கதி நேராதுதான். மலவண்டுகள், (Scarabaeidae. ) சாண உருண்டையை உருட்டிச் செல்லும் தன்மை உடையவை. இரவில் கோட்டை கட்டுவதற்கு அவை செல்லும் போது, அவைகளுக்கு இந்த செயற்கை ஒளியால் குழப்பம் உண்டாகிறது; எங்கெங்கோ அந்த உருண்டைகள் சிதறுவது மட்டுமல்ல, அவை ஒன்றையொன்று எதிர் கொள்ள நேரிடும் போது ‘யார் ஹீரோ?’ என்ற சண்டையும் வருகிறது. விண்மீன் வெளிச்சம் இல்லாமல் அவை செயற்கை ஒளியை நம்பி ஏமாறுவதை, அறிவியலாளர்கள், ‘காலம் குறித்த திசை அறியாமை’ என்று சொல்கின்றனர். நாமே கவனித்திருப்போம்- பகல் பொழுதில் சூர்ய முழு கிரஹணம் நேர்ந்து பின்னர் சூர்யன் விடுபடுகையில் பறவைகள் திகைத்து திசை அறியாமல் விரையும். மீண்டும் சூர்யன் வரும் போது காகம் அகாலமாய் கரையும். செயற்கை ஒளி மாசினால், சிறு பூச்சியினங்கள் அதிக அளவில் அழிந்து வருகின்றன என்று அறிவியலாளர்கள் சொல்கிறார்கள்.
டக்ஸன், அரிசோனா, வானியல் தலை நகரம் எனக் கருதப்படுகிறது. செயற்கை ஒளி மாசைத் தடுக்கும் கட்டுப்பாட்டு வரையறைகள், உயர்ந்த கட்டிடங்கள் டக்ஸனுக்கு அந்தப் பெருமையை பெற்றுத் தந்திருக்கின்றன. அந்த அழகிய இருண்ட வானம், சில வானாய்வகங்கள் அமைக்க ஏற்ற இடமாகவும் இருக்கிறது.
Tom Reinert ’75, J.D. ’80 டாம் ரெய்னெர்ட், 1973ல் டக்ஸனிலிருந்து 50 மைல் தொலைவில் தென்மேற்கில் உள்ள கிட் சிகர வானாய்வகத்தை முதன் முதலில் பார்த்து மூச்சடைத்துப் போனார். எத்தனை அழகு கொட்டிக் கிடக்குது இரவு வானில் என வியந்தார். அவரது சிறு வயது ஆசையான வானியல் ஆர்வம் துளிர் விட்டது. விண் சொர்கத்தைப் பார்த்த அவர் மண்ணில் சட்டத்தின் மூலம் இரவிற்கு இருளை மீட்டுக் கொடுக்கும் வழிமுறைகளில் இறங்கினார். 40 ஆண்டுகளாக வழக்கறிஞராகப் பணியாற்றும் அவர் ‘டார்க் ஸ்கை’யுடன் இணைந்து, கோட்பாடுகள், சட்ட வழிமுறைகள் ஏற்பட உதவினார். அதன் முதன்மை இயக்குனராகவும் செயல்பட்டார். இன்றும் கூட ‘டார்க் ஸ்கை’யில் அவர் ஒரு இயக்குனர்; ‘மக்கள் தொகை பெருக்கத்தினால், செயற்கை ஒளியின் தேவையும், அதனால் சூழல் கேடுகளும் வருகின்றன என்பது தவறான கருத்தாகும். அதிக மக்கள், அதிக வெளிச்சம் என்று முடிவு கட்டுவது தவறான அணுகுமுறை.’
அவர் மேலும் சொல்கிறார்: உண்மையில் அதிக அளவில் மிகப் பிரகாசமான விளக்குகளை நாம் பயன்படுத்துகிறோம், அதுவும் தேவையில்லாத இடத்தில், தேவையற்ற நேரங்களில். மக்கள் தொகை பெருக்கத்தைக் காட்டிலும் செயற்கை ஒளி அதிகம்.
இரவுகளை அனுபவிக்க மக்களைத் தடுத்து செயற்கை வெளிச்சத்தில் மூழ்கடிக்கும் வெளிச்ச சாம்ராஜ்ய மன்னர்களுக்கு எதிரான போரை, இருளை நேசிப்பவர்கள் தொடங்கியுள்ளனர் எனக் கருதக்கூடாது. இருளை நேசிப்பவர்களை, மாறாக பெரும் வர்த்தக சதிக்குழு எதிர்க்கிறது! வீடுகள், மைதானங்கள், பூங்காக்கள், தெருக்கள் என்று எந்தவிதத் திட்டமிடுதலும் இல்லாமல் வெளிப்புற விளக்குகள் அமைக்கப்பட்டு ஒளி வெள்ளத்தில் மனிதர்களை மூழ்கடிக்கின்றன. இயந்திரமயமாக்கப்பட்ட உலகில், பல கோடி விளக்குகள், பல கோடி இடங்களில், பல கோடி மனிதர்களால் அமைக்கப்பட்டு அதே தவறுகள் மீள மீள நிகழ்கின்றன. ஒளி அமைப்பாளர்கள் ‘ஒளி நிபுணர்கள் ‘ இல்லையே!
வானியலாளரும், சூர்யக் குடும்ப அமைப்பை பற்றியும் பூமி மற்றும் கிரக அறிவியல் பற்றியும் ஹார்வேர்டில் ஆய்வு செய்யும் டேன் க்ரீன் ‘ஒரு விளக்கை அதன் நேர் கீழே இல்லாமல் நீங்கள் எங்கிருந்தும் பார்த்தீர்கள் என்றால் அது சரியான ஒளி அமைப்பு இல்லை. கவசமற்ற விளக்குகள் நாலாபுறமும் ஒளி சிந்தும்.
எதற்குத்தான் தேவையற்ற இடங்களில், தேவையற்ற நேரங்களில் இத்தனை பளீரென்று இரவு வெளிச்சம்? அனைத்துமே பார்க்கப்பட வேண்டியவையா, அப்படிப் பார்க்க மனிதர்கள் இருக்கிறார்களா என்ன? இந்த ஒளி மாசுவைப் பற்றி 1990ல் சிந்தித்த க்ரீன், பல நூல்களை, கட்டுரைகளைப் படித்தார்; எதற்காக- இந்த ஒளி மாசின் தொடக்கம் எப்போது, ஏன் வெளிப்புற விளக்குகள் இவ்வண்ணம் இருக்கின்றன, இதன் பின்னணி தானென்ன என்ற கேள்விகள் அவருக்கு இருந்தன.
1800 இறுதிகளிலும், 190ன் தொடக்கத்திலும் உங்கள் தெருவில் ஒரு விளக்கு ஒளிர்ந்தால், நீங்கள் நாகரீகமுற்றவர்கள் என்ற பெருமை நிலவியது. அந்த விளக்கிற்கு கவசம் இருக்கிறதா என்று கவலைப்படாத பொது மக்கள் தங்கள் வீடுகளின் ஒளி விளக்குகளுக்கு கவசங்கள் போட்டிருந்தனர். பின் விளைவுகளை நினைத்துப் பார்க்காமல் இப்போதும் கூட விளக்குகள் பொருத்தப்படுகின்றன. இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் நாம் ஒளிரும் பல்புகளிலிருந்து (சாதாரண பல்ப்) LEDக்கு மாறினோம். இந்த LED விளக்குகள், சாதாரண விளக்குகளை விட 10 மடங்கு பிரகாசமுள்ளவை. 60 வாட் சாதாரண பல்புகளும், 60 வாட் LED பல்புகளும் சமமானவை அல்ல.
“wall packs.” பார்த்திருப்பீர்கள். நூற்றுக்கணக்கான கட்டிட வெளிப்புறங்களில், சதுரமாகப் பொருத்தப்பட்டு எங்கே என்ற இலக்கே இல்லாமல் ஒளி மழை பொழியும் அவைகளால் யார் பயனடைகிறார்கள், யாருக்குத் துன்பம் நேர்கிறது என சிந்தியுங்கள். லாம் பார்ட்னர்ஸ் என்ற வடிவமைப்பு நிறுவனத்தில் இணை முதல்வராகவும், இயக்குனராகவும் இருக்கும் டேன் வைஸ்மேன், இந்த ஒளிப் பெருக்கை ‘கண்களைச் கூசச் செய்யும் வெடிகுண்டுகள்’ என்று கிண்டல் செய்கிறார்.
நாம் சொல்வது ஒளி மாசை கட்டுப்படுத்துவதைப் பற்றி. அனைத்து இடங்களும், விளக்கொளி இல்லாமல், நட்சத்திர வெளிச்சத்தில் இருக்க வேண்டுமென்றும், வானில் சிரிக்கும் தாரகைகளை எப்போதும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் அல்ல. ஒளி மாசைக் குறைக்க வழிகள் உள்ளன என்று பல நிபுணர்களும் ‘டார்க் ஸ்கை’யும் சொல்கிறார்கள். வெளிப்புற வெளிச்சங்களுக்கு,
- ஒரு தெளிவான காரணம் இருக்க வேண்டும்.
- கவசம் அணிந்திருக்க வேண்டும்; எங்கு தேவையோ அதை நோக்கி அமைக்கப்பட வேண்டும்.
- அதிக விளக்குகள் அதிக நன்மைகள் அல்ல.
- நேரம் மற்றும் நடமாட்டத்தை உணரும் உணரிகள் தகுந்த நேரத்தில் விளக்குகளை ஒளிரச் செய்ய வேண்டும்.
- பல விளக்குகள் நீல வண்ணம் கொண்டவை. அது மெலடோனின் நாளமில்லா சுரப்பியை அழுத்துவதால், மெலடோன் சுரப்பு குறைந்து புற்று நோய்க்கு வழி வகுப்பதாக சொல்லப்படுகிறது.
வைஸ்மேன், “இருளிற்குப் பின்: சுற்றுச் சூழல், நீதி, இரவுச் சூழல் தரும் ஆனந்தம்” என்ற தலைப்பில் 2027 வசந்த காலத்தில் ஒர் கூடுகையை ஏற்படுத்த அனுமதி பெற்றுள்ளார். தன்னுடைய சில சிந்தனைகளையும் செயல் படுத்தியுள்ளார். லோவெல், மாசாசூசெட்சில், கட்டிட முகப்பு உள் வீட்டின் ஒளியால் மிளிர்கிறது; தனது கூட்டுக் குடியிருப்பில், வெளிப்புற விளக்குகளை நீக்கி விட்டார். ‘வால் பேக்ஸ்’ செயல்படாமல் தடுத்து நிறுத்தும் ஒரு கருவியைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். (அவற்றை கறுப்பு தார் பூசி மறைக்கலாம் என்று தன் நண்பரிடம் ஜோக்கடிக்கிறார் )
1906ல் தொடங்கப்பட்ட வட அமெரிக்காவிலுள்ள ஐ யி எஸ் எனப்படும் ( Illuminating Engineering Society) ஒளியூட்டும் பொறியியலாளர்களின் கூட்டுறவில் அவர் தீவிர செயல்பாட்டாளர். ஐயிஎஸ், குறைந்த அளவுப் பிரகாசத்திற்கான வழி முறைகளை வெளியிட்டு வந்தது. முதல் முறையாக அதிகப் பிரகாசத்திற்கான வழிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. இந்தப் புதிய செயல்முறைகள் நிச்சயம் நல்ல பலனைத் தரும் என்று அவர் சொல்கிறார். உள்ளூர் நகராட்சிகள் போன்றவை இவைகளை அனுசரிக்கும் என்பதே தலையான ஒன்று.
யூரோப்பில் சில நாடுகள், சில மாநிலங்கள், நகரங்கள், வெளிச்ச மாசு கட்டுப்பாட்டு சட்டங்களை அமுல்படுத்தி வருகின்றன. அவ்வளவு எளிதாக மாற்றங்கள் நேராது. வெளிச்ச மாசு கட்டுப்பாட்டு சட்ட வரையறையை மாசசூசெட்சில் கொண்டு வருவதற்கு பகீரத முயற்சிகள் செய்து, பின்னர் வெறுத்துப் போய், க்ரீன் அதை விட்டு விலகிவிட்டார்.
க்ரீன், ஒவென்சிஸ், வைஸ்மேன், ரெய்னெர்ட் ஆகியோர், ஒளி மாசினைப் பற்றிய அறியாமையே, ஒளி மாசு குறைப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக இருக்கிறது என்று சொல்கையில், சரியான விதத்தில், சரியான நபர்களின் உதவி கொண்டு அந்த அறியாமையைப் போக்க முடியும் என்று இரவு வானின் காதலர்கள் சொல்கிறார்கள். இது மட்டுமே எதிர் கொள்ள வேண்டிய ஒன்றல்ல, இருளைப் பற்றிய பயம் தலையானது.
இருளைப் பற்றிய மாயங்களும், கவலைகளும்
இருட்டைக் கண்டு பயப்படாமல் அமைதியாக இருக்க நம்மை முதலில் சமாதானம் செய்கிறார் உர்ஸ்மர். ந்யூயார்க் நகரில், வெளிச்சப் பொழிவில் வளர்ந்து வந்த அவருக்கும் முதலில் இருட்டைக் கண்டு பயம். மாண்டேனா, க்ளேசியர் தேசியப் பூங்காவில் பணியாற்றிய போது 20 அடி தொலைவில் இருந்த தன் வாகனத்திறகு இரவில் செல்வதற்கு மிகவும் பயந்தாராம். அது மலைச் சிங்கங்களும், கரடிகளும் வாழும் இடம். கரடிகளை விரட்டும் தெளிப்பானை தயாராக வைத்திருப்பாராம்.
இரவில் வேட்டையாடும் விலங்குகளுக்கு நாம் இரையாகிவிடுவோம் என்ற பயம் மனிதனுக்கு உண்டு. பயம் சார்ந்த நோய் உடலியங்கியலில் ஆய்வு செய்யும் மனோசிகிட்சை பேராசிரியரான கெர்ரி ரெஸ்லர், ‘நம்மைத் தக்க வைப்பதற்காகவே நாம் இருட்டில் செல்வதை தவிர்த்தோம்’ எனச் சொல்கிறார். இன்று நாம் அடர் இருட்டில் செல்ல நேர்கையில் நமது மூளையின் உணர்ச்சி மையம் (amygdala,) அதன் புதுமையாலும், அதில் பொதிந்துள்ள ஆபத்துக்களாலும் தூண்டப்படுகிறது. திருட்டோ, வழிப்பறியோ, உயிரே போய்விடுமோ என்ற பதட்டம் உருவாகிறது. ஓடி விடு அல்லது சண்டையிடு என்று சொல்கிறது amygdala; உண்மையான ஆபத்தையும், நாம் சூழ்னிலையில் கற்பனை செய்யும் ஆபத்தையும் பிரித்துணராத வகையில் குழம்புகிறோம்.
பூங்காக்கள், கல்லூரி வளாகங்கள், பொது இடங்கள் எல்லாம் இரவு முழுதும் ஒளி வெள்ளத்தை பாயச் செய்கின்றன. ஒளி நமக்கு பாதுகாப்பு என்று நினைக்கிறோம். ஆனால், அது உண்மையா? The End of Night: Searching for Natural Darkness in an Age of Artificial Light— என்ற நூலைக் கொண்டாடுகிறார்கள் இரவு வான் நேசர்கள். அதை எழுதியவர் பால் போகார்ட்.( Paul Bogard ) என்ற அறிவியல் எழுத்தாளர். உலகம் முழுதும் பொதுவிலும், தனி ஆர்வத்திலும் நடத்தப்பட்ட பல ஆய்வுக் குறிப்பேடுகள், ஒளிக்கும், குறைவான குற்றங்களுக்குமிடையே காரண- காரிய உறவில்லை எனச் சொல்கின்றன. ஆஸ்த்தேரிலிய வானியலாளரான பாரி க்ளார்க் , ஒளி மாசு, ஒளி, குற்றம் இவை குறித்த ஆய்வுகளை மறுபார்வையிட்டுவிட்டுச் சொன்னார்: ‘குற்றத் தடுப்புக்களுக்காக விளக்குகளை அதிகமாக எரிய விடுவது, எரிகின்ற தீயில் எண்ணெய் வார்ப்பது போன்றது. அதிக வெளிச்சம், நினைப்பதற்கு மாறான பலனைக் கொடுப்பது. கள ஆய்வுகள் இதனை நிரூபிக்கின்றன; ‘விளக்கின் உதவியால் தங்கள் இலக்கை குற்றவாளிகள் தெளிவாக அறிகின்றனர்; எப்படித் தப்பிப்பது, அந்த இடத்தின் சூழல்கள் என்ன என்பதெல்லாம் தெள்ளத் தெளிவாக அறிகின்றனர். இந்தக் கருத்தை விளக்குவதற்காக. வௌவால் மனிதனைப் போல வேடந்தாங்கி, ரெய்னெர்ட் பொது உரைகள் நிகழ்த்துகிறார். “Batman சொல்கிறார்: குற்றவாளிகளுக்கு மூட நம்பிக்கைகளுடன் கோழைத்தனமும் உண்டு.” அவர் மறைவிலிருந்து அதாவது இருளிலிருந்து குற்றவாளிகளைத் தாவிப்பிடிப்பார். நகரங்கள் ஒளிமயமாக இருப்பதால், அவரை தொலைவிலிருந்தே குற்றவாளிகள் பார்த்து தப்பி விட முடியும்.
இருளின் அழகு
அருங்காட்சியகத்தில் இருக்கும் சிலைகள் மற்றும் கலைப் பொருட்களை ஆடைகளால் மூடி மறைப்பது போன்றது இரவு வானைத் துறப்பது. சுற்றுச் சூழல் நலிவைத் தடுக்கும் வண்ணம் விழிப்புணர்வை ஏற்படுத்திய, 1962ல் வெளிவந்த ரேச்சல் கார்சன்னின் Silent Spring இயக்கத்தைப் போன்ற ஒன்,று ஒளி மாசு விழிப்புணர்வை உண்டாக்க வேண்டுமென்று ஒவென்சிஸ் சொல்கிறார். பூச்சிக்கொல்லிகள், விவசாயத்திற்கு, மனிதர்களுக்கு, பிற விலங்கினங்களுக்கு ஏற்படுத்திய கொடிய தாக்கத்தப் போன்ற ஒன்றை, அறிவியலாளர்கள் ஒளி மாசினைப் போக்க ஏற்படுத்தக்கூடும். நிறைய மனிதர்கள் விண்மீன்களைப் பார்க்க ஆசைப்பட்டு இரவு வானை நிமிர்ந்து பார்க்கும் போது பிற மனிதர்களுக்கும் இந்த ஆர்வம் வரலாம். என்ன ஒன்று, அவைகள் தெரிய வேண்டுமே!
விண்ணின் அழகுகள் கண்ணில் படாமல் மறைந்து கொண்டே வருவதற்கும், அதிக செயற்கை ஒளிக்கும் தொடர்பிருக்கிறது. முன்னேற்றம் இல்லையே என்று வானியல் நிபுணர்களும், பிற அறிவியலாளர்களும் தங்கள் மனக்குறையை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். ஆயினும், சமீப காலங்களில் இரவு வானைப் பார்க்கும் சுற்றுலாக்கள் மகிமை பெற்று வருகின்றன. இருண்ட, தெளிவான வானம் ஒரு கலைப் பொருள், தூய்மையானது, மாசு படாதது, மாற்றப்படாதது, அருங்கதைகளுக்கும், மாயைகளுக்கும் இடம் கொடுப்பது என்று பயணிப்பாளர்கள் எண்ணுகின்றனர். செலவும், நேரமும் ஒரு பொருட்டாக இல்லை இப்போது. உள்ளூர் அரசுகளுடன் இணைந்து ‘டார்க் ஸ்கை’, இத்தகைய இரவு வான் சுற்றுலாக்களை அமைக்கின்றன. சுற்றுலாப் பயணிகள் உண்மையிலேயே இருள் பகுதிகளுக்குச் சென்று அதன் அழகை நேரில் அனுபவிக்க இது வழி செய்கிறது. இரவு வானைப் பார்போமே, அதன் அழகில் மயங்கலாமே, அது தரும் வியப்பை, அதன் இரகசியங்களை, அதில் அடங்கியுள்ள சுவையான சவால்களைச் சந்திக்கலாமே!
இந்தியா
நம் தத்துவங்கள் இருளின் கர்ப்பத்தில் ஒளி தோன்றியது எனச் சொல்கின்றன. ‘ராத்திரி சூக்தம்’ என்று ரிக் வேதத்தில் ஒன்றிருக்கிறது.
“रात्री व्यख्यदायती पुरुत्रा देव्यक्षभिः । विश्वा अधि श्रियोऽधित ॥ १॥ओर्वप्रा अमर्त्या निवतो देव्युद्वतः । ज्योतिषा बाधते तमः ॥ २॥“
இரவுக் கடவுளான அம்பிகை, தன் பரந்து விரிந்த அகிலத்தில், அந்த நட்சத்திரங்களை ஒய்யாரமாகப் பார்த்துக் கொண்டே அவற்றின் ஒளியாடையை அணிந்து பவனி வருகிறாள். எல்லையற்றவளான அவள் தனது விண் மேனியால் அண்டத்திற்கு நலம் செய்கிறாள். அன்னையைப் போல அரவணைத்து, உயிரூட்டி, நமக்குத் தேவையான ஓய்வும் தந்து, புலரும் பொழுதிற்கு மனதையும், உடலையும் அவள் தயார் செய்கிறாள்.
பகலில் நம் உணர் செயலிகள் செயல்படும் விதம் வேறு. இரவில் நாம் புற உலகை நோக்குவதில்லை. நம் அகப்பயணம் நிகழ்ந்து, நமது தன்னுணர்வை நாம் முயன்று அடைகிறோம். எனவே நம் முன்னோர்களுக்கு இருள் என்பது ஒரு சாதனம்- நம்மை உய்விக்கும், அமைதி தரும் அருட்கொடை. உள்முகப் பயணத்திற்கு உதவும் ஒன்றாக, இரவை, சாக்தமும், தாந்திரீகமும் வர்ணிக்கின்றன. வேத வேதாந்தங்கள் ஆழ்ந்த அடர் இருளைப் போற்றி, அகந்தையை ஒழித்து, உண்மையான ஒளி என்பது “உன் உள் மனக் குகையில் நீ தேடி அடையும் நிரந்தர ஒளி” என்று சொல்கின்றன.
மஹா சிவராத்திரி, மாத சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி, மஹா கால பூஜை, காளி தர்சன பூஜை என்று இரவில் இறைமையை இணைத்து நாம் வழிபாடு செய்கிறோம். லிங்கோத்பவர் மகாசிவராத்திரியில் நடுநிசியில், அடியும், முடியும் காணக் கிடைக்காமல் தோன்றினார் என்கின்றன புராணங்கள். கால நேரம் வென்ற ஒளிப்பிழம்பு அது; அந்த ஜோதிர்லிங்கமே உண்மை என்றும், நாம் உண்மை என்று சொல்லும் பலதும் நம் மன மயக்கங்களே என்றும் சொல்வது உண்டு.
தமிழின் பழந்தமிழ் இலக்கியங்களிலும் சித்தர் பாடல்களிலும் ‘இருள்’ என்பது வெறும் அறியாமையை மட்டும் குறிப்பதில்லை; அது வெளிச்சத்திற்கு முந்தைய ஆதி நிலையையும், இறைவனது அருட்பெரும் ஜோதி ஒளிரும் அந்த அந்தரங்க ரகசிய வெளியையும் குறிக்கிறது. வால்மீகர் மற்றும் சிவவாக்கியர் போன்ற சித்தர்கள் இருளின் உட்பொருளைப் போற்றியுள்ளனர்.
‘இருள் வெளியாய் நின்ற சிவபாதம் போற்றி’ என்று வால்மீகர் போற்றுகிறார்.
பலர் வெளிச்சத்தைப் போற்றும்போது, சித்தர்கள் வெளிச்சத்திற்கு ஆதியான மூல இருளை (வெட்டவெளி அல்லது பாழ்) போற்றுகிறார்கள்.
குதம்பைச் சித்தர் பாடல்
“வெட்ட வெளிதனிலே மெய்ஞ்ஞானம் பெற்றிடில்
முட்டி நின்ற இருள் நீங்குமடி குதம்பாய்
முட்டி நின்ற இருள் நீங்குமடி.”
மற்றும், இருளின் ரகசியத்தை உடைக்கும் அவரது மற்றொரு புகழ்பெற்ற ஞானப் பாடல்:
“ஆதி அந்தம் இல்லாத அந்தப் பெருவெளியில்
சோதிக்கு முன்னே இருளிருக்குமடி குதம்பாய்
சோதிக்கு முன்னே இருளிருக்குமடி.”
பத்திரகிரியார் என்ற சித்தர் சொல்வதைப் பார்ப்போமா? எல்லாவற்றையும் படைத்த ஆதி இறைவன், வெளிச்சத்திற்கும் இருட்டிற்கும் அப்பாற்பட்ட “மகா இருள்” என்ற பாழ் வெளியில் ஒளிந்திருக்கிறான் என்கிறார் பத்திரகிரியார்.
“ஒளியும் இருளும் உருவமும் அருவமும் அற்ற
வெளியில் ஒடுங்கி விளங்குவது எக்காலம்?”
நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு மற்றும் புறநானூறு ஆகிய நூல்களில் இருளின் சிறப்பம்சங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன. ஊரே உறங்கும் நள்ளிரவு இருட்டில், யாருக்கும் தெரியாமல் தலைவன் தலைவியைச் சந்திக்க வரும் ‘இரவுக்குறி’ என்ற துறை இருளின் சிறப்பைப் பேசுகிறது.
- நெய்தல் வளம் (நற்றிணை 103):
“நள்ளென்றன்றே யாமம்; சொல் அவிந்தனவாலின்…”
எத்தனையோ வண்ணங்களில் கூந்தல் இருந்தாலும், கருங்கூந்தலின் அழகு வருமா? இரவின் நற்கொடையைக் கொண்டாடுவோம்.
உசாவிகள்:
இராத்திரி சூக்தம், சித்தர் பாடல்கள், பழந்தமிழ் பாடல்கள், சில காணொலிகள்
https://www.harvardmagazine.com/science/harvard-night-dark-sky-light-pollution -Matt Crossman – July-August 2026 print issue
