
ஆனிப்பொன் பெட்டகத்தை
“தகரம்” என்று
எப்படியோ
நம்ப வைத்து விடுகிறார்கள்
பழைய இரும்புத்தகரத்திற்கு
பேரீச்சம்பழம் விற்பவர்கள்!
சாயம் பூசும்
சூழலின் கைகளில்,
மங்கத் தொடங்குகிறது –
மாட்டிக்கொண்ட தங்கம்!
தகவமைவின் தேவைக்கென
தன் நிழலையே
அரிதாரமாய் அள்ளி,
பூசிக்கொள்கிறது!
தன்னியல்பின்
தாக்கம் தாளாமல்
“ஒளியை”
ஒளித்து வைக்கிறது!
பிரார்த்தனைகளும்,
பிராயச்சித்தங்களும்
எதற்கென்றே
மறந்து போகிறது!
கட்டமைப்புகளின்
கதைகளுக்குள்
களவாடப்பட்டு
கிடக்கிறது கனகம்!
பட்டொளி வீசிப்
பரியேறும் காறும்,
அசலுக்கும்
அரிதாரத்திற்குமிடையே—
தொடர்கிறது
குருஷேத்திரம்!
