
அன்னம்மா மணியைப் பார்த்தாள். 5.15. ஆஸ்பத்திரிக்கு வெளியே ஸ்கூட்டரில் மாத்யு காத்துக் கொண்டிருப்பான். ஐந்து நிமிஷம் தாமதமானாலும் அவனுக்குக் கோபம் வந்துவிடும்.
கைக்கடிகாரத்தைப் பார்ப்பான். அவளைப் பார்ப்பான். நெற்றியில் சுருக்கங்கள் படரும். தோளைக் குலுக்கிக் கொள்வான். இதுதான் அவன் சினத்தின் எல்லை.
நர்ஸ் உடையைக் களைந்து புடவையைக் கட்டிக் கொள்ள அவள் ஜெனரல் வார்டை ஒட்டியிருந்த அறைக்குள் சென்றாள்.
மூன்று நிமிஷம் நாற்பது வினாடிக்குள் அவ்வறையை விட்டு வெளியே அலறிக் கொண்டு ஓடி வந்தாள், கதவைப் படீரென்று சாத்திக் கொண்டே. அவள் போட்ட கூப்பாடு, நீண்ட தாழ்வாரம் வழியாகச் சென்று கொண்டிருந்த மூன்று நர்ஸ்கள், சிகிச்சை பெற்று வந்தவர்களை பார்க்க வந்த நாலு பார்வையாளர்கள், இரண்டு டாக்டர்கள் ஆகியோரை ஸ்டில் புகைப்படங்களாக்கியது.
அவர்கள் அவளையே பார்த்துக் கொண்டு நின்றனர்.
“உள்ளே எலி” என்றாள் அன்னம்மா. இந்தக் தகவல் அவர்களிடம் எந்த மாறுதலையும் ஏற்படுத்தவில்லை. அவர்கள் அவளைத் தொடர்ந்து நோக்கினர்.
“செத்த எலி” என்றாள் அன்னம்மா. அவ்வளவுதான், அங்கு அனைவரும் மின்சாரத்தால் தாக்குண்டவர்கள் போல் ஆளுக்கொரு திக்காய் ஓடத் தொடங்கினர். அன்னம்மா அவர்கள் ஓடுவதைக் கண்டு திகைத்து நின்றாள்.
லிஃப்ட்டினின்றும் வெளியே வந்த ‘நர்ஸ் சூபரின் டெண்டன்ட்’ சூசைம்மா, எல்லோரும் ஓடுவதைக் கண்டு ஒன்றும் புரியாமல், ”என்ன இது?” என்று குரலை எழுப்பிக் கேட்டாள்.
“நான் ட்ரெஸ் மாத்திக்க அந்த உள்ளுக்குப் போனேன். அங்கே செத்த எலி” என்றாள் அன்னம்மா பதற்றத்துடன்
”இது ஆஸ்பத்திரி… நீங்கள்ளாம் நர்ஸ், டாக்டர்கள்தானே? வெட்கமா இருக்கு எனக்கு…” என்று சொல்லிக் கொண்டே சூசைம்மா, அன்னம்மா அருகில் சென்றாள்.
இதற்குள் மாத்யு அங்கு வந்தவன், அன்னம்மாவைப் பார்த்துச் சொன்னான்:
”மணி 5.30 ஆகப் போகிறது.”
“தெரியும். அந்த ரூமுக்கு ட்ரெஸ் மாத்திக்கப் போனேன். அங்கே ஒரு செத்த எலி” என்றாள் அன்னம்மா.
‘ஐயோ, என் ட்ரெஸ் அங்கேதான் இருக்கு” என்று பிரலாபித்தாள் நர்ஸ் சொர்ணம்.
“நல்ல வேளை, நான் ட்ரெஸ் மாத்திண்டுட்டேன்” என்றாள் அன்னம்மா.
“முழுக்க மாத்திக்கலே, ப்ளவுஸ் எங்கே?” என்றான் மாத்யு.
அப்பொழுதுதான் அன்னம்மா குனிந்து தன்னைப் பார்த்துக் கொண்டாள். புடவையைச் சரியாகப் போர்த்திக் கொண்டாள்.
சூசைம்மா, அன்னம்மா அருகில் சென்றவள், அவளைப் பரிவுடன் முதுகில் தடவிக் கொண்டே கேட்டாள்: “பயப்படாதே, தைரியமா இரு… நீ பார்த்தது எலிதான்னு நிச்சயமா தெரியுமா?”
“நர்ஸ் கொஞ்சம் தள்ளி நில்லுங்க. அசட்டு தைரியம் வேண்டாம்” என்றான் ஓடிச் செல்ல முயன்ற டாக்டர்களில் ஒருவன். அவன் இளைஞன்.
சூசைம்மா அவனைச் சுட்டெரிப்பவள் போல் பார்த்தாள். இதற்குள் முகமூடி அணிந்து கொண்டு வந்த ஓர் ஆஸ்பத்திரி உதவியாளன் எல்லோருக்கும் முகமூடிகளை விநியோகம் செய்தான்.
“எனக்கு வேணாம்” என்று சொல்லிக் கொண்டே மாத்யு லிஃப்டுக்குள் புகுந்து கொண்டான்.
சூசைம்மாளும் வாங்கிக் கொள்ளவில்லை. அவள் சொன்னாள்: “பாத்தியா உன் சிநேகிதனை, ஓடிப்போறான். இவனையா நீ கட்டிக்கப் போறே?”
“சூசைம்மா, இது தற்கொலை, தைரியமில்லே” என்றான் அந்த டாக்டர் இளைஞன்.
“சரி… அந்த ரூமைத் திறக்கிறேன். எலியை எங்கே பாத்தே, சொல்லு” என்றாள் சூசைம்மா.
“நோ… உங்களை அனுமதிக்க மாட்டேன், கதவைத் திறக்க. நான் டாக்டர்” என்றான் அந்த இளைஞன்.
நடுத்தர வயதினராகிய அந்த இன்னொரு டாக்டர், இதுவரை பேசாமலிருந்தவர், பையிலிருந்த ஸ்டெதாஸ்கோப்பைக் கழுத்தில் மாலையாகப் போட்டுக் கொண்டு சொன்னார், “நர்ஸ் சொர்ணம், நீங்க ஸ்பெஷல் வார்டுக்குப் போய், மெடிக்கல் சூபரின் டெண்டன்டை கூட்டிகிட்டு வாங்க, அங்கேதான் அவர் இப்பொ இருப்பாரு… அவர் வந்துதான் எல்லாத்துக்கும் டிஸிஷன் எடுக்கணும்…”
சொர்ணம், லிஃப்டுக்குக் கூட காத்திராமல் விரைவாக மாடிப் படிகள் வழியாகவே இறங்கிச் சென்றாள்.
”சூசைம்மா… நீங்க மாஸ்கைப் போட்டுக்கங்க…” என்றார் அந்த டாக்டர் நர்ஸிடம்.
ஆஸ்பத்திரி உதவியாளன். சற்று தள்ளி, சூசைம்மாவிடம் முகமூடியை நீட்டினான்.
சூசைம்மா வாங்கிக் கொள்ளவில்லை.
”இது என் அதிகாரப்பூர்வமான கட்டளை” என்றார் அந்த டாக்டர், குரலை சற்று உயர்த்தி.
“எனக்கு?” என்றாள் அன்னம்மா.
”உங்களுக்கெல்லாம் வெறி பிடிச்சுடுத்தா? என்ன நடந்ததுன்னே சரியா யாருக்குமே தெரியலே, சின்னப் பொண்ணை இப்படி பயமுறுத்தறீங்களே?…” என்றாள் சூசைம்மா, கோபத்துடன்.
மெடிக்கல் சூபரின்டெண்டன்ட் அவசரமாக லிஃப்டை விட்டு வெளியே வந்தார். அவருக்கு ஐம்பது வயதிருக்கும். மீசை நரைத்திருந்தது. தலை மயிர், சாய உதவியில் அசாதாரண கறுப்புடன் பட்டொளி வீசியது.
“யாருக்கு ‘ப்ளேக்’?” என்றார் அவருடன் வந்த நாலைந்து டாக்டர்களில் ஒருவர்.
“யாருக்குமில்லே இது வரைக்கும். நீங்க செய்யற அமர்க்களத்திலே எல்லாருக்கும் வந்துடலாம்” என்றாள் சூசைம்மா.
“என்ன நடந்தது?” என்றார் மெ. சூ.
“சொல்லுங்க அன்னம்மா” என்றான் டாக்டர் இளைஞன். அன்னம்மா நடந்ததைச் சொன்னாள். மெ.சூ. அவளை மேலும் கீழும் பார்த்தார். “மாஸ்க்” என்றார் மெ.சூ. உதவியாளன் அவரிடம் முகமூடியை கொடுத்தான். “சூசைம்மா மாஸ்க் போட்டுக்க மாட்டேங்கிறாங்க” என்றார் நடுவயது டாக்டர்.
“அவர்கிட்டே ஒண்ணு கொடு.”
உதவியாளன் சற்று தள்ளி நின்று நீட்டினான். அன்னம்மா வாங்கிப் போட்டுக் கொண்டாள். சூசைம்மாவும், மெ.சூ. சொல்வதைத் தட்ட முடியாமல் முகமூடியை வாங்கி அணிந்து கொண்டாள்.
மெ.சூ. அடிமேல் அடி வைத்து அன்னம்மா குறிப்பிட்ட அறையை நோக்கிச் சென்றார்.
”சூசைம்மா, கதவைத் திறங்க” என்றார் மெ.சூ.
சூசைம்மா திறந்தாள். மெ. சூ. எட்டிப் பார்த்தார். அவர் கண்ணுக்கு எலி தென்படவில்லை.
“எங்கே எலி” என்றார் மெ.சூ. அன்னம்மா அவரருகில் வந்தாள். மெ.சூ. விருட்டென்று நகர்ந்து கொண்டார்.
“அதோ, அந்தத் துணிக்குக் கீழே, நான் அதைப் பார்த்து பயந்து துணியை மேலே தள்ளிட்டேன் போலிருக்கு…”
‘உனக்கு நிச்சயமா தெரியுமா அது செத்த எலிதான்னு?”
“மல்லாக்கா கிடந்தது.”
‘நாத்தம் வந்துதா?”
“எனக்குத் தெரியல அப்பொ…”
“இப்பொவும் நாத்தமில்லே” என்றாள் சூசைம்மா.
“சரி… அந்த எலி மேலே துணி விழுந்திருக்கிறதும் நல்லதுதான்; அப்படியே துணியோட எடுத்து சுருட்டி…” இவ்வாறு சொல்லி விட்டு மெ.சூ. சிறிது நேரம் யோசித்தார்.
“பாத்ரூம் க்ளீன்’ செய்யறவங்களை கூப்பிட்டுத்தான் எடுக்கச் சொல்லணும்” என்றார் நடுத்தர வயது டாக்டர்.
“பயப்படாதீங்க உங்களை எடுக்க சொல்லலே” என்று கூறிக் கொண்டே பலமாகச் சிரித்தார் மெ.சூ.
மெ. சூ. சிரிக்கும்போது எல்லோரும் சிரித்தாக வேண்டு மென்பது அந்த ஆஸ்பத்திரி நியதிகளிலொன்று. எல்லோரும் சிரித்தனர். நடுத்தர வயது டாக்டரையும் சூசைம்மாவையும் தவிர, அன்னம்மா தனக்கு பயம் போய் விட்டதென்று தன்னைத்தானே அமைதிப் படுத்திக் கொள்வதற்காகச் சிரித்தாள்.
“ஹெர்ஸ் வண்டி, ஒண்ணுலே இதை போட்டுக் கொண்டு போய், எது பக்கத்திலிருக்கோ அந்த சுடுகாட்டிலே ‘பாடி’யை எரிச்சுருவோம்… ” என்றார் மெ.சூ,
“நல்ல ஐடியா…” என்றான் டாக்டர் இளைஞன்.
“வாட் அபௌட் மீ?” என்றாள் அன்னம்மா.
“உன்னையில்லே, செத்த எலியை ” என்றார் மெ.சூ.
ஹாஸ்யம். இதைத் தொடர்ந்து சிரிப்பு. சூசைம்மாவின் முகம் சிவந்தது. இந்த மெ.சூ அவளுக்குப் பிடிக்கவே பிடிக்காது. அரசியல்வாதிகளின் தயவில் உயர்ந்த பதவிக்கு வந்து விட்டான். மருத்துவத்தைப் பற்றி ஒரு மண்ணும் தெரியாது. ‘காப்பிடேஷன் ஃபீ’ கொடுத்து வாங்கின பட்டம். சர்ஜன் என்று பெயர். சலூனில் கூட வேலைக்கு வைத்துக் கொள்ள மாட்டார்கள்.
“சரி … ஜோக்ஸ் அபார்ட். அன்னம்மா, நீ ‘மெடிக்கல் செக்-அப்’புக்குப் போ. ஹெர்ஸ் வண்டியை கூப்பிடுங்க… வண்டியிலே நீ போ” என்று டாக்டர் இளைஞனிடம் சொன்னார் மெ.சூ.
“நானா? ஸார், இப்பொத்தான் எனக்குக் கல்யாணமாயிருக்கு” என்று கெஞ்சினான் டாக்டர் இளைஞன்.
“டாக்டர் தொழிலுக்கு வந்தா உசிரைக் கண்டு பயப்படக் கூடாது. பட்டம் வாங்கிறபோது என்ன உறுதிமொழி நீ எடுத்துக்கொண்டே, மறந்து போச்சா?”
“நான் கூடப் போறேன்” என்றாள் சூசைம்மா.
“கூட ஒரு டாக்டர் இருந்தா தேவலைன்னு நான் பார்த்தேன்” என்று சுற்றுமுற்றும் பார்த்தார் மெ.சூ.
அங்கிருந்த டாக்டர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு திசையை நோக்கியவாறு இருந்தனர். அவர்கள் மெ. சூ. பார்வையைத் தவிர்த்தனர்.
“சூசைம்மா… நீங்க தைரியசாலி” என்று புன்னகையுடன் சொன்னார் மெ.சூ.
”எலியை எப்படி துணியிலே சுருட்டி எடுத்துண்டு போக முடியும்? அதுக்கு ஒரு சவப்பெட்டி வேணும்?” என்றாள் சூசைம்மா.
“நல்லாயிருக்கே நீங்க சொல்றது? அப்புறம் ஸம்ஸ்காரம் பண்ணணும்னு சொல்லுவீங்க போலிருக்கே?” என்றார் மெ.சூ.
ஹாஸ்யம், சிரிப்பு.
“எப்படி எடுத்துகிட்டுப் போறது? அப்பொ வண்டியே வேணாம், ஒரு பாடை கட்டி..” என்று சூசைம்மா சொன்னதும், மெ.சூ .வின் முகம் சிவந்தது.
“என்னை கிண்டல் பண்றீங்க?”
“இல்லே, நீங்க சொல்லுங்க, எலிப்பிரேதத்தை எப்படிக் கொண்டு போய் அடக்கம் செய்யறது?”
“அடக்கம் செய்யக் கூடாது. எரிக்கணும். துணியோடு எடுத்து ஒரு அட்டைப் பெட்டியிலே போட்டு…”
“அதைத்தான் நானும் சொன்னேன்.”
ஒரு சங்கடமான அமைதி அப்பொழுது அங்கு நிலவியது. மெ.சூ. வை சூசைம்மா மடக்கி விட்டாள்.
“சரி … சூசைம்மா, நீங்கதான் இதுக்குப் பொறுப்பு. எல்லாம் செய்திட்டு எனக்கு ஒரு ரிப்போர்ட் கொடுங்க.. அன்னம்மா எங்கே?”
“அவங்க போயிட்டாங்க” என்றான் உதவியாளன்.
“எங்கே போயிட்டாங்க?”
“பரிசோதனைக்குப் போயிட்டாங்க.” போகலே. கீழே இறங்கிப்
”மை காட்! ஊர் பூரா ‘ப்ளேக்’ கைப் பரப்பப் போறா. கோ அண்ட ஸ்டாப் ஹெர்” என்று கத்தினார் மெ.சூ.
அந்த இடத்தை விட்டுப் போக இதுதான் நல்ல சாக்கென்று டாக்டர் இளைஞன் மிக வேகமாக மாடிப்படிகளில் இறங்கிச் சென்றான்.
ஓர் அட்டைப் பெட்டியைக் கொண்டு வந்து ஒருவன் அங்கு வைத்தான்.
“யார் எலியை எடுக்கப் போறங்க. எங்கே அந்த டாய்லெட் க்ளீனர்?” என்றார் மெ.சூ.
”யாருமில்லே, எல்லாரும் போயிட்டாங்க டாக்டர்” என்றாள் சொர்ணம். அவள் அப்பொழுதுதான் ஹெர்ஸ் வண்டிக்குச் சொல்லிவிட்டு வந்தாள்.
“நீ போய் எடு” என்றான் மெ. சூ. உதவியாளனிடம்.
அவன் பதிலொன்றும் கூறாமல், பேசாமல் நின்றான்.
சூசைம்மா அட்டைப் பெட்டியை எடுத்துக் கொண்டு அந்த அறைக்குள் சென்றாள்.
”துணியோட எடுத்துப் போடுங்க” என்றார் மெ.சூ.அவள் அவ்வாறு எடுத்து அட்டை பெட்டிக்குள் போட்டாள்.
“நல்லா மூடுங்க… குட்… அப்புறம் ஸீல் வைக்கணும்” என்றார் மெ.சூ.
சூசைம்மா சவப்பெட்டியை எடுத்துக் துக் கொண்டு வெளியே வந்தாள். அறை வாசலில் இருந்தவர்கள் ஒதுங்கினார்கள்.
“பிராமணாள் இங்கே யாருமில்லையா?” என்று கேட்டாள் சூசைம்மா.
“எதுக்கு?” என்றார் மெ.சூ. அவர் பிராமணர்.
”மந்திரம் சொல்ல…”
அங்கிருந்தவர்கள் கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டனர். மெ.சூ வுக்கு எல்லையற்ற சினம். ஆனால் சூசைம்மாவின் தயவு அவருக்கு அப்பொழுது வேண்டி இருந்தது.
ஒருவன் அரக்கையும் ஸீலையும் கொண்டு வந்தான்.
சூசைம்மா அவற்றை அவனிடமிருந்து வாங்கி, அரக்கை நெருப்பில் காய்ச்சி அட்டைப் பெட்டி முகப்பில் ஸீல் வைத்தாள்.
”இது மெடிக்கல் சூபரின்டெண்டன்ட் ஸீல்தானே?” என்று கேட்டாள் சூசைம்மா
“ஏன்?”
“அப்பொத்தான் பார்சல் நேரே சொர்க்கத்துக்குப் போகும்.”.
“சரி, விளையாட்டு போதும். மேலே ஆக வேண்டிய காரியத்தை பார்ப்போம்” என்றார் மெ.சூ.
”ஐ ஆம் ஸாரி. செத்த எலி நரகத்துக்குப் போறதுதான் நமக்கு நல்லது இல்லை” என்றாள் சூசைம்மா.
“ஆர் யு க்ரேஸி?” என்று கோபத்துடன் கேட்டார் மெ.சூ.
சவப்பெட்டி ஊர்வலம் தொடங்கியது. அட்டைப் பெட்டியை ஸெர்ஸ்ல வைத்து விட்டு ட்ரைவர் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள் சூசைம்மா.
“என்ன, இத்தனை சிறிய பெட்டி? குழந்தையா? அட்டைப் பெட்டியிலா வைப்பாங்க?’
“குறைப் பிரசவமா?” என்றார் ட்ரைவர்.
“எலி.”
“என்னது?”
“எலியாரின் திருவுடம்பு.”
“என்னங்க, சிரிச்சுகிட்டே சொலிறீங்க? ‘ப்ளேக்’ எலியா யிருந்தா?”
“மெடிக்கல் சூபரின்டெண்டன்ட்டோட ஸீல் இருக்கு. அதை உடைச்சுகிட்டு ‘ப்ளேக் கிருமி’ வெளியிலே வந்துருமா? பேசாம வண்டியை விடுங்க, சுடுகாட்டுக்கு.”
“சுடுகாட்டுகா?”
“ஆமாம், அங்கேதான் எரிக்கணும்னு உத்தரவு.”
சுடுகாட்டை அடைந்ததும், அங்கு அலுவலகத்தில் டெத் சர்டிஃபிகேட் கேட்டார்கள்.
“அட்டைப் பெட்டியிலிருக்கிறது ஒரு செத்த பிராணி. கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரி மெடிக்கல் சூபரின்டெண்டன்ட் இங்கேதான் எரிக்கணும்னு சொன்னாரு. நான் நர்ஸ்” என்று சூசைம்மா தன் அடையாளச் சீட்டை காண்பித்தாள்.
“சந்தனக் கட்டை வேணுங்களா?” என்று கேட்டான் ஒருவன்.
“நீ சும்மா இரு” என்று அவனை அதட்டி விட்டு அந்த அலுவலர் சொன்னார்.
“பிராணியை எரிக்கிறதுக்கு இங்கே ப்ரொவிஷன் இல்லெ. இருந்தாலும், ஒரு டெத் சர்டிஃபிகேட் வேணும். அது இல்லாம எரிக்க முடியாது.”
“இது என்ன பிராணி தெரியுமா?”
“எது வேணுமானாலும் இருக்கட்டும். டாக்டரோட டெத் சர்டிஃபிகேட் வேணும்.”
“செத்த எலி.”
“வாட்?”
“செத்த எலி.”
“உடனே இடத்தை காலி பண்ணுங்க. என்ன, சுடுகாட்டை பொல்யூட் பண்ண வந்தீங்களா?… நோ.. நீங்க இருக்கிற இடத்திலே ‘ப்ளேக்’ வரக் கூடாது, இங்க வரலாமோ? போங்க, போங்க!” அந்த அலுவலர் உடனே முகத்தை கைக்குட்டையினால் மூடிக் கொண்டார்.
“நோ.. நோ..தயவு செய்து போங்க.”
அவள் வண்டிக்குத் திரும்பி வந்தாள்.
“என்னங்க?” என்றார் ட்ரைவர்.
“எரிக்க அனுமதி தரமாட்டார்களாம்.”
“இப்பொ என்ன செய்யறது?”
“அதான் புரியலே.”
“ஆத்துல தூக்கிப் போட்டுடலாமா?”
“எவ்வளவு நல்ல யோசனை சொல்றீங்க? சுடுகாட்டிலேயே எரிக்கப் பயப்படறாங்க. ஆத்துலே தூக்கிப் போடலாமான்னு கேக்கறீங்களே?”
“பிறகு என்னதான் செய்யறது, சொல்லுங்க?”
“சரி.. என் வீட்டுக்கு விடுங்க வண்டியை.”
“வீட்டுக்குப் போய்?”
“ராத்திரி எங்க வீட்டு கொல்லைப்புறத்திலே எரிச்சுடறேன், என்ன செய்யறது?”
“வேண்டாங்க…”
“ஒரு கெடுதலுமில்லே… ஒரு அப்பாவி எலிக்கு அமர்க்களப் படுத்தறாங்க. பெருச்சாளியெல்லாம் தைரியமா உலவிகிட்டிருக்கு இந்த நாட்டிலே..”
“சரி.. உங்க இஷ்டம்.”
சூசைம்மா ஒண்டிக் கட்டை. திருமணம் செய்து கொள்ளவில்லை. அட்டைப் பெட்டியை வீட்டுப் பின்புறம் வராந்தாவில் வைத்தாள்.
இருட்டு வந்ததும், அட்டைப் பெட்டியை எடுத்துக் கொண்டு கொல்லைப்புறம் சென்றாள். செத்த எலியைப் பார்க்க வேண்டும் போலிருந்தது அவளுக்கு.
உரிய மரியாதையோடு எரிக்க வேண்டுமென்ற ஆசை. உள்ளே சென்று பைபிளை எடுத்துக் கொண்டு வந்தாள்.
அட்டைப் பெட்டியின் ஸீலை உடைத்தாள். மெ.சூ.வின் அதிகாரத்தைத் தகர்த்தெறிவது போல் ஒரு சந்தோஷம். எலியை சுற்றிவைத்திருந்த துணியைப் பிரிக்கத் தொடங்கியவள், எழுந்து உள்ளே, சென்றாள். முகமூடியை அணிந்து கொண்டு வந்தாள். துணியைப் பிரித்தாள். பிரித்தாள். பிரித்துக் கொண்டே இருந்தாள். அவளால் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை. சிரித்துக் கொண்டே இருந்தாள். நிஜமும் நிழலும் ஒரே நாணயத்தின் ஒரு பக்கங்கள் என்று அவளுக்குப் பட்டது. நாணயம் எது என்பதுதான் அவளுக்குப் பிடிபடவில்லை.
(‘இந்தியா டுடே’ அக் 21 ’94)

