Site icon சொல்வனம் | இதழ் 370 | 12 ஜூலை 2026

கூர்வேல்

சின்னப் பழுவேட்டரையர் காவேரியில் முழுகி எழுந்தார்.

படித்துறை அருகே கூட ஐந்தடி தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. காலை வெயிலுக்கு குளிர்ந்த தண்ணீர் சுகமாக இருக்க வேண்டும், ஆனால் அவரது உடல் கொஞ்சம் நடுங்கியது. அவரது வலது கை வழக்கத்தை விடவும் அதிகமாக ஆடியதை அவர் வருத்தத்தோடு நோக்கினார்.

வயதாகிவிட்டது. அண்ணன் இறந்து 18 ஆண்டுகள் ஆகிவிட்டன. தலை முடியும் மீசையும் தாடியும் நரைத்துவிட்டன, கடைவாய்ப் பற்கள் விழுந்துவிட்டன, உடல் அவ்வப்போது தன்னிச்சையாக நடுங்குகிறது. எல்லாவற்றையும் விட முக்கியமாக வலது கை ஆடிக் கொண்டே இருக்கிறது, வாள் சுழற்ற முடியவில்லை. அருண்மொழிக்கு வாணனும் அரையன் ராஜராஜனும்தான் தளபதிகள். தான் இன்று பேருக்கு தஞ்சையின் கோட்டைக் காவலன், ஆனால் தனக்கு இருக்கும் ஒரே பொறுப்பு தஞ்சை நகரத்து எல்லைக்குள் நடக்கும் குற்றங்ககளை விசாரிப்பது மட்டுமே. போர்க்களத்தில் இல்லை, நோய்க்கட்டிலில்தான் இறப்பு. மகள் சோழ ராஜ்யத்தின் முதன்மை எதிரியின் மனைவி. இரண்டு மகன்களும் போரில் இறந்துவிட்டார்கள், தானும் இறந்தால் பழுவூர் அரசு வாணனுக்கு அளிக்கப்படும். சின்னப் பழுவேட்டரையர் பெருமூச்செறிந்தார்.

இருக்கும் வரை கொடுக்கப்பட்ட பொறுப்புகளை யாரும் குறை சொல்ல முடியாத முறையில் நிறைவேற்ற வேண்டும்.  நந்தினி காலத்தில் பழுவூரின் விசுவாசத்திலும் நீதியிலும் தென்பட்ட கறைகள் மீண்டும் எந்தக் காரணம் கொண்டும் திரும்பக் கூடாது.  வழக்குகளை சாட்சிகள், நெறிகளை வைத்துத்தான் முடிவெடுக்க வேண்டும். விசாரணையில் யார் குற்றவாளியாக நிறுவப்பட்டாலும் – அண்ணனாகவே இருந்தாலும் சரி, இல்லை அருண்மொழியாகவே இருந்தாலும் சரி – தண்டனை தரப்பட்டே ஆகவேண்டும். மிச்சம் இருக்கும் கொஞ்சநஞ்ச கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்ள இது ஒன்றுதான் வழி. பழுவேட்டரையர் மீண்டும் பெருமூச்செறிந்தார்.

ஓலைநாயகம் நேற்றிரவு அனுப்பி இருந்த வழக்கு விவரங்களை மீண்டும் மனத்தில் ஓட்டிப் பார்த்துக் கொண்டார். வளையல் செட்டி சாரங்கபாணியை ஒரு வடுக இளைஞன் கொன்றுவிட்டு கையும் களவுமாகப் பிடிபட்டிருக்கிறான். சாரங்கபாணி அந்தப்புரம் வரைக்கும் சுலபமாக சென்று வருபவன். இளவரசிகள் அவன் கொண்டு வரும் வடுகர் பாணி அரக்கு வளையல்களை விரும்பி வாங்குகிறார்கள்  சாளுக்கிய பாணியில் செய்யப்பட்ட கூர்வேல் ஒன்றை ரத்தக்கறையோடு அந்த இளைஞனுக்கு அருகே அகப்பட்டிருக்கிறது, அது தன் வேல்தான் என்று அவனே ஒத்துக் கொண்டிருக்கிறான். அவன் மூட்டையில் விலை உயர்ந்த வைரங்களை நெருக்கமாகப் பதித்த நான்கு வளையல்கள், நாலைந்து கழஞ்சு பொன், அந்தப்புரத்து நந்தவனத்திற்கு செல்ல அனுமதி ஓலை எல்லாம் அகப்பட்டிருக்கின்றன. அந்தப்புரத்திற்குள் இவன் நுழைந்திருந்தால் என்ன விபரீதம் ஏற்பட்டிருக்குமோ! எதற்கு வடுக நாட்டிலிருந்து தஞ்சை வந்தாய், சாரங்கனுக்குத் தரப்பட்ட அனுமதி ஓலை எப்படி உன் மூட்டைக்கு வந்தது, இந்த வளையல்கள் ஏது என்று கேட்டால் பதில் இல்லை. பாவம் இளைஞன், எஞ்சிய வாழ்நாளை பாதாளச் சிறையில் கழிக்கப் போகிறான். ஆனால் இதில் வடுகப் பெருவணிகன் கங்கவர்மன் காட்டும் முனைப்பு உறுத்துகிறது, தஞ்சையில் நடந்த ஏதோ ஒரு குற்றத்திற்கும் இவனுக்கும் என்ன தொடர்பு? இவனுக்கும் அந்த வடுக இளைஞனுக்கும் ஏதாவது முன்விரோதமா?

ஈர வேட்டியுடன் கோலை ஊன்றி படி ஏறி மேலே வந்தவர் அரசமரத்தின் பின்னால் நின்றிருந்த வந்தியத்தேவரையும் மூத்த அனிருத்தரையும் கண்டு வியப்புற்றார். உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தாலும் கண் பார்வை மங்கவில்லை என்று கொஞ்சம் பெருமிதம் கொண்டார். அவர்கள் இருவரும் பழுவேட்டரையரைக் கண்டதும் முன்னே நகர்ந்தனர். பழுவேட்டரையர் இடது கையைத் தூக்கி அவர்களை நிறுத்தினார். வழியில் இருந்த சிறு துணி மூட்டையை எடுத்துக் கொண்டு அருகே இருந்த காளி கோவிலுக்குள் நுழைந்தார். அவசர அவசரமாக அவர்களும் கோவிலுக்குள் நுழைந்தனர்.

“என்ன அப்படி தலை போகிற காரியம்? சாளுக்கிய ஒற்றர்கள் தஞ்சையில் சுதந்திரமாக நடமாடுகிறார்கள், ராஜதந்திரம் என்ற பேரில் நீங்களும் அதை அனுமதித்திருக்கிறீர்கள் என்பதை மறந்துவிட்டீர்களா என்ன? மகாமந்திரியும் தளபதியும் இப்படி வரலாமா? வெட்டவெளியில் என்ன பேச முடியும்?” என்று சின்னப் பழுவேட்டரையர் கொஞ்சம் எரிச்சலோடு வினவினார்.

பிரம்மராயரும் வந்தியத்தேவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். “தலை போகிற காரியம்தான் தளபதி!” என்று கவலை நிரம்பிய குரலில் வந்தியத்தேவர் பதிலளித்தார். “இன்று உங்கள் மன்றத்தில் ஒரு கொலையை விசாரிக்கப் போகிறீர்கள் இல்லையா?” என்று பிரம்மராயர் வினவினார்.

தளபதி என்று வந்தியத்தேவர் விளித்ததைக் கேட்டதும் பழுவேட்டரையர் மனதில் சுய பச்சாதாபம் தலை தூக்கியது. “வாணரே, நீர்தான் தளபதி. நான் வெறும் விசாரணை அதிகாரி” என்று முனகினார். “இதற்கெல்லாம் நேரமில்லை. நீங்கள் வழக்கு ஓலைகளைப் பார்த்துவிட்டீர்களா?” என்று பிரம்மராயர் கேட்டார்.

சின்னப் பழுவேட்டரையர் தன் குடுமியை முன்னே தள்ளிப் பிழிந்து கொண்டார். நெற்றி நிறைய விபூதியைப் பூசிக் கொண்டார். சிறு குங்குமப் பொட்டு ஒன்றை வைத்துக் கொண்டார். இடையில் தன் குறுவாளை சொருகிக் கொண்டார். ஒரு மஞ்சள் பட்டாடையை உதறி மேலே அணிந்து கொண்டார். அவரது கண்கள் பாதி மூடி இருந்தன. அவ்ர் தன் வார்த்தைகளை கட்டமைத்துக் கொள்வது தெளிவாகத் தெரிந்தது.

“ஆம்,  ஒரு வடுகச் சிறுவன் வளையல் செட்டி ஒருவனைக் கொன்றுவிட்டு கையும் களவுமாகப் பிடிபட்டிருக்கிறான். முதிர்ச்சி இல்லாத சிறுவன், கொலையைச் செய்துவிட்டு, பக்கத்து வீட்டு திண்ணையிலேயே தூங்கி இருக்கிறான்! அரண்மனைக்குள் வருவதற்கான அனுமதி ஓலையைத் திருடி இருக்கிறான், அந்தப்புரத்திற்குள் நுழைந்திருந்தால் என்னென்ன விபரீதம் நடந்திருக்குமோ தெரியவில்லை” என்று மெல்லிய குரலில் சொன்னார்.

“விமலாதித்தன்” என்று வாணர் முணுமுணுத்தார்.

பழுவேட்டரையர் திடுக்கிட்டார். “வேங்கி இளவரசனா? சிறிய குந்தவைக்குப் பேசிக் கொண்டிருக்கும் மணமகனா?” என்று அதிர்ச்சியோடு கேட்டார்.

“ஆம். மணம் பேசி முடித்த மாதிரிதான். சிறிய குந்தவைக்கு அத்தைதான் லட்சியப் பெண். பெரிய குந்தவை வாணரோடு காதல் புரிந்தது போல தானும் காதலை அனுபவிக்க வேண்டும் என்று ஆசை. சாரங்கபாணி என்னிடம் பணி புரிகிறான், புரிந்தான். அவன் மூலம் விமலாதித்தனுக்கு தன்னை வந்து சந்திக்குமாறு ஓலை அனுப்பி இருக்கிறாள். விமலாதித்தனோ இளம் கன்று. தான் மணந்து கொள்ளப் போகும் பெண் ஜாடை காட்டிவிட்டால் எமனையும் எதிர்க்கும் மனநிலை. வந்த இடத்தில் இப்படி…” என்று பிரம்மராயர் சொன்னார்.

“அந்த சாரங்கன் உங்கள் ஒற்றன் என்கிறீர்கள், குந்தவை ஓலை அனுப்பியதை உங்களுக்கு தெரியப்படுத்தவில்லையா?”

மூத்த அனிருத்தரின் தலை குனிந்தது.  “குந்தவையின் அரண்மனைச் சேடி ஒருத்தியோடு சாரங்கனுக்கு எப்படியோ உறவு ஏற்பட்டிருக்கிறது. இளவரசியே தன்னிடம் உதவி கேட்கிறாள் என்ற பெருமையில் அவன் என்னிடம் கூட இதைப் பற்றி சொல்லவில்லை. வணிகன் கங்கவர்மன் மேலைச் சாளுக்கிய அரசுக்கு உளவுச் செய்திகளை அனுப்புகிறான் என்று எனக்கு கொஞ்ச நாளாகவே சந்தேகம். சாரங்கனுக்கு அனுபவம் போதாது என்றாலும் வடுக மொழி அறிந்தவன் என்பதால் கங்கவர்மனின் நடவடிக்கைகளை கவனிக்கச் சொல்லி இருந்தேன். கங்கவர்மனுக்கு அவன் என் ஒற்றன் என்று தெரிந்திருக்கிறது. வேண்டுமென்றேதான் உங்கள் மன்றத்தில் இந்த வழக்கைக் கொண்டு வருகிறான், நீங்கள் விதிகளை மீறமாட்டீர்கள், சாட்சியங்கள்படிதான் நீதி வழங்குவீர்கள் என்பது தஞ்சையில், ஏன் சோழ நாட்டில் எல்லாருக்கும் தெரியும்” என்று முணுமுணுப்பான குரலில் சொன்னார்.

சிறிது நேரம் மௌனம் நிலவியது. மூவரும் சிந்தனையில் ஆழ்ந்திருந்தனர்.

வந்தியத்தேவர் செறுமினார். “எனக்கென்னவோ கங்கவர்மனின் ஆள் எவனோதான் இந்தக் கொலையை செய்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. நாம் ராஜதந்திரம் என்று அவனிடம் ஒரு ஒற்றனை அனுப்பினால் அவன் திறமையாக நம் ஒற்றனைக் கொன்றுவிட்டு அந்தக் கொலையையே நமக்கு எதிராகப் பயன்படுத்துகிறான். அவனுக்கு சாரங்கபாணி விமலாதித்தனை அழைத்து வரப் போயிருப்பது தெரிந்திருக்க வேண்டும். இப்போது பழி விமலாதித்தன் மீது விழுந்துவிட்டால், அவன் தண்டிக்கப்பட்டால், வேங்கி சாளுக்கியரோடு இணையும், நம்மை எதிர்க்கும்” என்று சொன்னார்.

சின்னப் பழுவேட்டரையர் குழப்பத்தில் ஆழ்ந்திருப்பது தெளிவாகத் தெரிந்திருந்தது. “என்னை என்ன செய்யச் சொல்கிறீர்கள்? சாட்சியங்கள் வலுவாக இருக்கின்றன. ஒன்று செய்யலாம். சிறைத் தண்டனை விதிக்கிறேன். இரண்டு நாள் சிறையில் இருந்துவிட்டு தப்பி ஓடச் செய்யுங்கள், பிறகு இளவரசனாக வந்து குந்தவையை மணமுடிக்கட்டும்” என்றார்.

“அது நடக்காது பாட்டா!” என்று கர்ப்பகிரகத்திலிருந்து ஒரு குரல் வந்தது.

அதிர்ச்சியோடு மூவரும் கோவிலுக்குள் நோக்கினர். சிறிய குந்தவை வெளியே வந்தாள். அவள் கன்னங்களில் கண்ணீரின் கறை தெரிந்தது. எந்த வித அலங்காரமும் இல்லை. கூந்தலை அள்ளி முடிந்திருந்தாள். பார்ப்பவர்கள் குடியானவப் பெண் என்று நினைக்கும் விதத்தில் எளிய சிற்றாடையை அணிந்திருந்தாள். ஆனால் கொஞ்சம் கவனித்துப் பார்த்தால் கட்டளை இடுவதறகென்றே பிறந்த ராஜவம்சத்துப் பெண் என்று தெளிவாகத் தெரிந்தது.

“இங்கே என்ன செய்கிறாய் நீ? அந்தப்புரத்தை விட்டு வெளியே வரலாமா? திருமணம் ஆகாத இளம்பெண், இளவரசி இப்படி வந்தால் அரசரின் மரியாதை என்னாவது?” என்று வந்தியத்தேவர் கடிந்தார்.

“நான் திருமணத்திற்கு முன் அந்தப்புரத்தை விட்டு வெளியே வந்ததே இல்லையா? நீங்கள் என்னை சந்தித்ததே இல்லையா?” என்று இன்னொரு குரல் கர்ப்பகிரகத்திலிருந்து எழுந்தது. பெரிய குந்தவையும் வெளியே வந்தாள்.

பெரிய குந்தவையும் எளிய ஆடை அணிந்திருந்தாள். ஆனால் தன்னை மறைத்துக் கொள்ள அவள் பெரிய முயற்சி எடுத்துக் கொள்ளவில்லை. தன் முகத்தில் இருக்கும் வசீகரத்தையும் கம்பீரத்தையும் மறைக்க முடியாது என்பதை அவள் அறிந்திருந்தாள்.

வந்தியத்தேவர் தலையில் கை வைத்துக் கொண்டு அமர்ந்து கொண்டார். சின்னப் பழுவேட்டரையரும் பிரம்மராயரும் கண்களில் இருக்கும் சிரிப்பு முகத்தில் தெரியாமல் இருக்க முயற்சி செய்தார்கள். பெரிய குந்தவை பழுவேட்டரையரைப் பார்த்து புன்னகைத்தாள்.

சின்னப் பழுவேட்டரையர் நெகிழ்ந்து போனார். “நலமா இளவரசி?” என்று தழுதழுத்த குரலில் வினவினார். “பார்த்து பல நாளாயிற்று, இளைத்துவிட்டாய்” என்று தொடர்ந்தார். இரண்டு குந்தவைகளும் முன்னே வந்து அவரது பாதம் பணிந்தார்கள். பழுவேட்டரையர் இருவரையும் தடுத்து அணைத்துக் கொண்டார்.

சின்னக் குந்தவை பழுவேட்டரையரின் மார்பளவுதான் உயரம். அவள் நிமிர்ந்து அவரை நோக்கினாள். “என் கணவர் குற்றவாளி என்று தண்டிக்கப்பட்டு, பிறகு தப்பிச் செல்வது அவருக்கு இழுக்கு. அப்படி நடந்தால் நான் பாவை நோன்பு நோற்று திருமணத்தைத் தவிர்த்து கன்னியாகவே வாழ்வேன்” என்று சொன்னாள். அவள் கண்ணில் நீர் ததும்பி நின்றது.

“கணவன்! மணமே முடிந்துவிட்டதா? நல்ல பொருத்தம்! நேற்றிரவே அவனைத் தப்பிச் செல்லும்படி சொன்னேன். அவனும் இப்படியேதான் பதிலளித்தான், இழுக்கு, குந்தவையை சந்திக்காமல் செல்லமாட்டேன் என்றெல்லாம் உளறுகிறான். சரியான இணைதான்!” என்று வாணர் அலுத்துக் கொண்டார்.

பழுவேட்டரையர் புன்னகைத்தார். குந்தவையின் தலையில் தன்னுடைய வலது கையை வைத்தார். அது ஆடியதால் தன் இடது கையால் பிடித்துக் கொண்டார். அவரது குரல் மிக உறுதியாக எழுந்தது. “மகளே! நீ விரும்புபவன் எந்நாளும் கொலையாளியாக இருக்க முடியாது. ஏதோ நாடகம், இவன் மாட்டிக் கொண்டிருக்கிறான். என் கண்ணில் மண்ணைத் தூவும் முயற்சிகளில் இந்த வாணன் ஒருவனைத் தவிர வேறு எவரும் வெற்றி பெற்றதில்லை. இந்த கங்கவர்மன் என்ன, அந்த மேலைச் சாளுக்கிய அரசன் ஆகவமல்லனாலும் அது முடியாது. ஆனால் விமலாதித்தன் நிரபராதி என்று நிறுவினால் மட்டும் போதாது, உன் பெயர் வெளியே வரக் கூடாது. சீதையிடமே குறை காணும் மக்கள்! நீ ரகசியமாக விமலாதித்தனுக்கு ஓலை அனுப்பினாய் என்று நாளை வேங்கி நாட்டில் உன்னை யாரும் தவறாகப் பேசக் கூடாது. இந்தக் கிழவன் அதைப் பொறுக்க மாட்டேன், நான் வழி கண்டுபிடிக்கிறேன். நீ நிம்மதியாக அரண்மனைக்குப் போ, விமலாதித்தன் நாடு திரும்பும் முன் உன்னை சந்திப்பான்” என்று சொன்னார். வந்தியத்தேவர் “இந்த சந்திப்பு தவிர்க்க…” என்று ஆரம்பித்தார். பெரிய குந்தவை அவர் பக்கம் திரும்பினாள். வாணர் வாய் அடைத்துவிட்டது. பிரம்மராயர் முகம் இறுக்கமாக இருந்தாலும் அவர் நகைப்பது அவர் கண்களில் தெரிந்தது.

பெரிய குந்தவை முன்னகர்ந்து பழுவேட்டரையர் கைகளைப் பிடித்துக் கொண்டாள். அவளது கண்கள் இப்போது பளபளத்தன. “பாட்டா!” என்று ஆரம்பித்தாள். அவளுக்கு மேலே வார்த்தைகள் வரவில்லை. பழுவேட்டரையர் அவள் தலையிலும் தன் கையை வைத்து ஆசீர்வதித்தார். “ஜோடிக்கப்பட்ட வழக்கு. பிறகென்ன, பார்த்துக் கொள்ளலாம்!” என்று மிருதுவான குரலில் சொன்னார். பிறகு திரும்பிப் பார்க்காமல் கோவிலை விட்டு வெளியேறினார்.

பழுவேட்டரையர் மன்றத்திற்குள் நுழையும்போது கங்கவர்மன் படாடோபமான ஆடை அலங்காரத்தோடு அங்கே ஏற்கனவே காத்திருந்தான். அவன் முகத்தில் ஒரு நமட்டுச் சிரிப்பு தெரிந்தது. ஆழ்வார்க்கடியான் ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்தான். துணை அதிகாரி கந்தன் மறவன் தன் குறிப்புகளோடு நின்றிருந்தார். விமலாதித்தன் அலட்சியமான பார்வையோடு எங்கோ வெறித்துக் கொண்டு நின்றிருந்தான். அவன் உடையில் அங்கங்கே சுண்ணம் படிந்திருந்தது. தலைமுடி தாறுமாறாகக் கலைந்திருந்தது. கண்கள் சிவந்திருந்தன. அவன் அரையில் இருந்த நீல நிற ஆடை கால் பக்கம் கிழிந்திருந்தது. அந்த நிலையிலும் பழுவேட்டரையர், அழகன்தான் குந்தவைக்கு சரியான இணைதான் என்று நினைத்துக் கொண்டார்.

கந்தன் மறவன் வழக்கை சுருக்கமாக விவரித்தார். முன்னமே விவரங்களை அறிந்திருந்ததால் பழுவேட்டரையர் பொறுமை இல்லாமல் கேட்டுக் கொண்டிருந்தார். கந்தன் மறவன் முடித்ததும் விமலாதித்தன் புன்னகைத்தான். கந்தன் மறவனுக்கு சுர்ரென்று கோபம் ஏறியது. “சோழ அரசின் குடிமகன் ஒருவன் கொல்லப்பட்டிருக்கிறான், நீ புன்னகைக்கிறாயா!” என்று கர்ஜித்தார். விமலாதித்தன் கொச்சைத் தமிழில் “இந்தக் கொலையை நான் செய்யவில்லை. சரியான குற்றவாளியைக் கண்டுபிடிக்க வேண்டியது உங்கள் வேலை! அதை விட்டுவிட்டு என்னை சிறைப்படுத்தி, வழக்கு நடத்தி நேரத்தை வீணடிக்கிறீர்களே! சோழ அரசின் நீதி பாரத தேசமெங்கும் பேசப்படுவது, எனக்கு தண்டனை அளிக்கப்பட்டால் ஏசப்படும்!” என்றான்.

பழுவேட்டரையர் இடைமறித்தார். “உன் பெயர் என்ன?”

“வி…ஆதித்தவர்மன்”

“எந்த ஊர்?”

“வடுகநாட்டில் காளஹஸ்தி”

“தஞ்சைக்கு வந்த காரணம்?”

“இறந்த சாரங்கர் தன் பாதுகாப்புக்காக என்னை அமர்த்திக் கொண்டார்”

“வேலியை பயிரை மேய்ந்ததா?” என்று கங்கவர்மன் எல்லாருக்கும் கேட்கும்படி தன் பக்கத்தில் அமர்ந்திருந்தவரிடம் சொன்னான்.

“சாரங்கரை சந்தித்ததிலிருந்து இன்று வரை நடந்ததை விவரமாகச் சொல்” என்றார் பழுவேட்டரையர்.

“கிட்டத்தட்ட ஒரு வாரம் முன்னால் சாரங்கர் எங்கள் ஊர் வழியாக வந்தார். ஊருக்கு அருகே இருந்த காட்டு வழியில் கள்ளர் பயம் உண்டு. சிலம்பப் பயிற்சிக் களத்தில் என்னை தற்செயலாகப் பார்த்தவர் காவலுக்கு அமர்த்திக் கொண்டார். அவர் பயந்தபடியே தஞ்சைக்கு வரும் வழியில் எங்களை நான்கு கள்ளர்கள் வழிமறித்தனர். அவர்களை நான் சமாளித்துத் துரத்திய பிறகு சாரங்கருக்கு என் மீது மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது. அவரிடமிருந்த பொன், நகை, ஓலை ஆகியவற்றை என்னிடம் பாதுகாப்புக்காகக் கொடுத்து வைத்திருந்தார். இரண்டு நாள் முன்புதான் தஞ்சையை அடைந்தோம். செம்பியன் மாதேவி சத்திரத்தில் இரவைக் கழித்துவிட்டு அடுத்த நாள் அரண்மனைக்கு செல்லத் திட்டமிட்டிருந்தார். தஞ்சையில் தனக்கு பாதுகாப்பு தேவையில்லை, நீ ஊரை சுற்றிப் பார்த்துவிட்டு இங்கே உறங்கு, நான் சிலரை சந்திக்க வேண்டும் என்று எனக்கு அனுப்பினார். சோழர் தலைநகரில் நான் ஆயுதங்களோடு இரவில் சுற்றுவது சரியல்ல என்று என் வேலை அவரோடு விட்டுவிட்டுச் சென்றேன். அதுதான் அவரை நான் கடைசியாகப் பார்த்தது. காவிரியில் ஆசை தீர நீந்திவிட்டு பிறகு நிசும்பசூதனி ஆலயத்தில் ஒரு நடனத்தைப் பார்த்துவிட்டு திரும்பினேன். களைப்பாக இருந்ததால் சத்திரத்துக்கு அருகில் இருந்த ஒரு வீட்டுத் திண்ணையில் அசந்து உறங்கிவிட்டேன். காலையில் என் மேல் கொலைப்பழி, கைது!” என்று மெதுவான குரலில் சொன்னான்.

“உன் அருகே கொலைவேல் கிடந்ததா? அது உன் வேல்தானா?”

“ஆம். சாரங்கரிடம் கொடுத்திருந்த வேல் எப்படி அங்கே வந்தது என்று எனக்கே புரியவில்லை.”

கங்கவர்மன் கொஞ்சம் சிரமத்துடன் எழுந்தான். “எனக்கு சில சொல்ல வேண்டும்” என்றான். பழுவேட்டரையர் கையசைத்தார்.

“சாரங்கபாணிக்கும் எனக்கும் கொடுக்கல் வாங்கல் உண்டு. இரண்டு நாள் முன்பு மாலையில் என்னை சந்தித்து சில நகைகளைக் கொடுத்துவிட்டு என்னிடமிருந்து ஐந்து கழஞ்சு பொன்னைப் பெற்றுக் கொண்டார். அவரிடம் நான்கு வைர வளையல்களும் இருந்தன, ஆனால் அவர் கேட்ட விலை எனக்கு அதிகம் என்பதால் அதை நான் மறுத்துவிட்டேன். அவை இப்படி இவனிடம் வந்தன? சரி இவன் சொல்லும்படியே பாதுகாப்புக்காக நகைகளையும் பொன்னையும் இவனிடம் கொடுத்து வைத்திருந்தார் என்றே வைத்துக் கொள்வோம். அனுமதி ஓலையை எந்தக் கள்வன் திருடப் போகிறான்? அதை இவனிடம் கொடுத்து வைத்திருந்தார் என்பது நம்பும்படியாக இல்லை. மேலும் இந்தக் கூர்வேல் சாளுக்கியர் பாணியில் செய்யப்பட்டது” என்று சொன்னான். அவன் கண்ணில் விஷமத்தனம் தெரிந்தது.

“கங்கவர்மரே, இது இந்த மன்றத்தில் நான் விசாரிக்கும் வழக்கு. உங்கள் சாட்சியம் வேண்டுமென்றால் கேட்கப்படும். ஏன் நீங்களாகத் தலையிடுகிறீர்கள்?” என்று பழுவேட்டரையர் உறுமினார்.

“நியாயாதிகாரி அவர்களே, வணிகர்களுக்கு சோழர் தலைநகரிலேயே பாதுகாப்பில்லை என்றால் என் போன்றவர்கள் சாளுக்கிய நாட்டுக்கு சென்றுவிடுவது உத்தமம், உங்களின், பேரரசரின் நீதியை நம்பி இருக்கிறோம்” என்று கங்கவர்மனும் அகங்காரத்துடன் பதில் சொன்னான்.

பழுவேட்டரையர் எதுவும் பதில் சொல்லவில்லை. ஆனால் மன்றத்திற்கு அன்று நிறைய வணிகர்கள் வந்திருந்ததை அவர் ஏற்கனவே கவனித்திருந்தார். சிறிது நேரம் மௌனமாக தனக்கு முன்னாலிருந்த சுவடிகளைப் புரட்டினார்.

திடீரென்று கையை உயர்த்தினார். சபையின் சலசலப்பு அடங்கியது.  “இந்தச் சிறுவன் காளஹஸ்தியிலிருந்து தஞ்சை வரை தனியாக சாரங்கனோடு வந்திருக்கிறான். ஆயுதப் பயிற்சி பெற்றிருக்கிறான், கையில் வேல் இருந்திருக்கிறது, குறுவாளும், கழியும் கூட இருந்திருக்கும். சாரங்கனிடமிருந்து திருட, அவனைக் கொல்ல அவன் ஏன் தஞ்சை வரை வர வேண்டும்? வழியில் ஏதாவது ஒரு காட்டில் கொன்று போட்டிருந்தால் இவனைப் பிடிப்பது இத்தனை எளிதாக இருந்திருக்குமா என்ன? சரி கொலையே செய்தான் என்றாலும் உடனே ஓடி இருக்க மாட்டானா? பக்கத்து வீட்டு திண்ணையிலா தூங்குவான்? அதுவும் ரத்தக்கறை படிந்த வேலை பக்கத்தில் வைத்துக் கொண்டா?  இவனைப் பார்த்தால் அத்தனை மூடனாகத் தெரியவில்லை. செம்பியன் மாதேவி சத்திரத்துக்கு அருகேதான் சிவத்தான் கொல்லனின் உலை இருக்கிறது. கொலைவேலைக் கழுவி அந்த உலையில் இருக்கும் ஆயுதங்களோடு வைத்துவிட்டால் யாருக்குத் தெரியும்?” என்றார். விமலாதித்தன் புன்னகைத்துக் கொண்டான்.

“அதற்கு ஆயிரம் காரணம் இருக்கலாம். நகை ஐந்து கழஞ்சு பொன்னாக மாறியதும் அவன் மனமும் மாறி இருக்கலாம். அனுமதி ஓலையைப் பார்த்ததும் அந்தப்புரத்திலும் திருடலாம் என்று நினைத்திருக்கலாம். ஊருக்குப் புதியவன், கொல்லன் உலையை அவன் கவனிக்காமல் இருந்திருக்கலாம். அவன் என்ன நினைத்தான் என்று யார் சொல்ல முடியும்? கிடைத்திருக்கும் ஆதாரங்களை வைத்துத்தான் முடிவு செய்ய வேண்டும்” என்று கங்கவர்மனும் விடாமல் வாதாடினான். கங்கவர்மன் சொல்லி முடித்ததும் சபையில் கொஞ்சம் சலசலப்பு எழுந்தது, அவனை ஆமோதித்து சில தலையாட்டல்கள் இருந்ததை பழுவேட்டரையர் கவனித்தார்.

“சாரங்கபாணியின் உடல் எங்கிருக்கிறது? அதை மன்றத்துக்குக் கொண்டு வரச் சொல். கொலைவேலையும் கொண்டு வரச் சொல்” என்று கந்தன் மறவனிடம் பழுவேட்டரையர் உத்தரவிட்டார்.

கந்தன் மறவன் வியப்புடன் பழுவேட்டரையரை நோக்கினான். பிணத்தைப் பார்க்க வேண்டும் என்று அவர் சாதாரணமாக கேட்பதே இல்லை. அவன் தயக்கத்துடன் “வேலைக் கொண்டு வந்துவிடலாம். ஆனால் உடலைக் கொண்டு வருவது கடினம். பிணம் ஏற்கனவே அழுக ஆரம்பித்துவிட்டது. அதை இன்றே தகனம் செய்தாக வேண்டும்” என்று மெல்லிய குரலில் சொன்னான். “சரி நானே ஆதுர சாலைக்கு சென்று பார்க்கிறேன். இல்லை வேண்டாம், மணிமாறனை வரச் சொல். வேல் எங்கே?” என்றார்.

வேல் வந்ததும் பழுவேட்டரையர் அதை கவனமாக ஆராய்ந்தார். வேல் சாளுக்கிய பாணியில் செய்யப்பட்டிருந்தது தெளிவாகத் தெரிந்தது. மூன்று முழ நீளம்தான் இருக்கும். சோழ நாட்டு வேல்கள் அவற்றைப் போல இரண்டு மடங்கு நீளமானவை. சோழ நாட்டு வேல்முனைகளின் கூரான பகுதி இன்னும் நீண்டிருக்கும். இந்த வேல்முனையின் மேல்பகுதி அனேகமாக துருப்பிடித்திருந்தது. வேல்முனையின் ஒரு பக்கத்தில் மட்டும் துருவின் மேல் திட்டுத்திட்டாக ரத்தம் உறைந்து கறுத்திருந்தது. பழுவேட்டரையர் வேலை திருப்பித் திருப்பிப் பார்த்தார். அவருடைய முகத்தில் இருந்த இறுக்கம் சற்று குறைந்தது.

“கங்கவர்மரே, கந்தன் மறவரிடம் ஒரு ஓலை எழுதிக் கொடுங்கள், ஐந்து கழஞ்சுக்கு நீங்கள் சாரங்கரிடம் வாங்கிய நகைகள் இன்னும் ஒரு நாழிகையில் இங்கே வர வேண்டும். அரண்மனை பொற்கொல்லன் அழகிய பெருமாளை அழைத்து வாருங்கள்” என்றார். கங்கவர்மன் தயக்கத்துடன் ஓலை எழுதிக் கொடுத்தான். பழுவேட்டரையர் சபையைக் கலைக்கவில்லை, யாராலும் வெளியேற முடியவில்லை.

“சிவத்தானின் உலையில் இதே போன்ற சாளுக்கிய பாணி கூர்வேல் ஏதாவது இருக்கிறதா என்று பார். ரத்தக்கறைகள் உள்ள சாளுக்கிய வேலோ சோழர் பாணி வேலோ கிடைக்கிறதா என்றும் தேடிப் பார். கிடைத்தால் கொண்டு வா, அவசரம்!” என்று இன்னொரு பணியாளனான குமரத்தேவனிடம் ஆணையிட்டார்.

சபைக்குள் ஓட்டமும் நடையாக நுழைந்த மணிமாறனை நிமிர்ந்து பார்த்தார். “நீ மருத்துவம் தெரிந்தவன் இல்லையா? ஆதுர சாலைக்குச் செல், வேல் காயங்கள் அகலமாக இருக்கின்றனவா, இல்லை ஆழமாகவா என்று பார்த்து வா” என்று இன்னொரு ஆணையையும் பிறப்பித்தார்.

ஆணைகளைக் கேட்டதும் கங்கவர்மனின் முகம் மேலும் ஒளியை இழந்தது. சபையில் குசுகுசுவென்று நிறையப் பேச்சு எழுந்தது. வணிகர்கள் மத்தியில் கூட ஆதித்தன்தான் கொலையாளி என்ற நம்பிக்கை குறைந்திருப்பது தெரிந்தது.

“இந்தச் சிறுவனிடமிருந்து கைப்பற்றிய நகை, ஓலை, பொன் எல்லாவற்றையும் கொண்டு வாருங்கள்” என்று பழுவேட்டரையர் சொன்னார். வந்ததும் அவற்றை மீண்டும் மீண்டும் கவனித்து ஆராய்ந்தார். பிறகு தலையை நிமிர்த்தி “எத்தனை கழஞ்சு பொன் கொடுத்ததாகச் சொன்னீர்கள் கங்கவர்மரே?” என்று கேட்டார்.

“ஐந்து”

“நான்கு கழஞ்சுதான் இருக்கிறது. இரவு நேரத்தில் ஒரு கழஞ்சு பொன்னை செலவழிக்க வாய்ப்பில்லை. நீங்கள் சாரங்கனிடம் ஐந்து கழஞ்சு பொன்னுக்கு வியாபாரம் செய்தது உண்மைதானா கங்கவர்மரே?”

கங்கவர்மன் ஒரு நிமிடம் தடுமாறினான். பிறகு மெல்லிய குரலில் “ஆம்” என்றான்.

முதலில் திரும்பிய மருத்துவன் மணிமாறன் காயம் அகலமானதுதான், நேராக முதுகில் இறங்கி நெஞ்சைத் துளைத்திருக்கிறது என்பதை உறுதி செய்தான். பழுவேட்டரையரின் முகத்தில் எந்த மாறுதலும் இல்லை.  அடுத்தபடி நகைகள் வந்தன். பொற்கொல்லர் அவற்றை ஆராய்ந்தார். அவர் முகத்தில் சுருக்கங்கள் ஏற்பட்டன. “என்ன அழகிய பெருமாள்?” என்று பழுவேட்டரையர் வினவினார். “இவை ஐந்து கழஞ்சுகள் பெறும், ஆனால் இவற்றில் தமிழ் முத்திரை இருக்கிறது. வடுக மொழியில் இல்லை” என்று அழகிய பெருமாள் சொன்னார். “என்ன கங்கவர்மரே, சாரங்கர் வடுகநாட்டுக்குச் சென்று தமிழ்நாட்டு பொன்னகைகளை வாங்கி வந்தாரா? இந்த இளைஞனிடமிருந்து பொன்னைப் பறிக்கவே இப்படி முனைப்பு காட்டுகிறீரா? ஐந்து கழஞ்சு மதிப்பு உள்ள நகைக்கு நான்கு கழஞ்சுதான் கொடுத்திருக்கிறீர், ஐந்து கொடுத்தேன் என்கிறீர், உம் மேல்தான் சந்தேகம் அதிகரிக்கிறது!” என்றார்.

கங்கவர்மன் “நான் பெருவணிகன், கேவலம் ஐந்து கழஞ்சு பொன்னுக்காக பொய்யுரைக்க மாட்டேன், வணிகர்களின் பாதுகாப்புக்காகத்தான் இத்தனை போராடுகிறேன்” என்று சீறினான்.

இதற்குள் குமரத்தேவன் விரைந்து வந்தான். அவன் கையில் சாளுக்கிய பாணி வேல் ஒன்று இருந்தது. எதற்கும் இருக்கட்டும் என்று சில சோழர் பாணி வேல்களையும் கொண்டு வந்திருந்தான். சிவத்தான் உலையில் அத்தனையும் சோழர் பாணி வேல்கள், இது ஒன்றைத் தவிர என்றான். சாளுக்கிய வேல் மட்டும் மிகச் சுத்தமாக இருந்தது, கறையோ, துருவோ எதுவுமில்லை.

“சாரங்கருக்கும் கங்கவர்மருக்கும் இடையே விற்பனை நடந்தது என்பதில் எனக்கு நம்பிக்கையே இல்லை, அப்படி நடந்திருந்தால் ஒரு கழஞ்சு பொன் எங்கே போயிற்று? ஆனால் ஒன்று நிச்சயமாகத் தெரிகிறது. இந்த இளைஞன் இந்தக் கொலையைச் செய்யவில்லை. இதை உறுதி செய்வது கொலைவேல் என்று கைப்பற்றப்பட்ட இந்த வேல்தான்” என்று பழுவேட்டரையர் அறிவித்தார்.

ஏற்கனவே பலரும் ஆதித்தன் குற்றவாளி இல்லை என்று சந்தேகப்பட்டார்கள். இருந்தாலும் ரத்தக்கறை படிந்த வேலையே ஆதாரம் என்று பழுவேட்டரையர் சொன்னதும் சபையில் ஆச்சரிய ஒலி எழுந்தது.

“காயம் அகலமானது என்று மருத்துவர் உறுதி செய்கிறார். எனவே கொலைவேல் சாளுக்கிய வேல்தான், சோழ வேலாக இருந்தால் காயம் குறுகலாக இருந்திருக்கும். வேல் நேராக இறங்கி இருக்கிறது. அப்படி என்றால் வேலின் ஒரு பக்கத்தில் மட்டும் எப்படி ரத்தக்கறை படிய முடியும்? உண்மையான குற்றவாளி சாரங்கர் இறந்த பிறகு ரத்தத்தில் வேலை வைத்து புரட்டி இருக்கிறான், பிறகு அதை இந்த இளைஞன் பக்கத்தில் போட்டிருக்கிறான். அவசரத்தில் இரு பக்கமும் புரட்டாமல் விட்டுவிட்டான். மேலும் சிவத்தான் உலையில் கிடைத்த வேல் துருவோ ரத்தக் கறையோ இல்லாமல் படுசுத்தமாக இருக்கிறது. மழைக்காலத்தில் எப்படி இந்த ஒரு வேல் மட்டும் துருப்பிடிக்காமல் இருக்கும்? அதுதான் கொலைவேலாக இருக்க வேண்டும், கொலையாளி சுத்தமாகக் கழுவி அங்கே ஒளித்து வைத்திருக்கிறான்” என்று பழுவேட்டரையர் உறுதியான குரலில் சொன்னார். பிறகு கங்கவர்மனை நோக்கினார். கங்கவர்மன் குனிந்த தலை நிமிரவில்லை.

“சாளுக்கிய வீரர்கள் யாராவது நகரில் இருக்கிறார்களா, இரண்டு நாட்களுக்கு முன் கோட்டையை விட்டு வெளியேறினார்களா என்று விசாரிப்போம். கங்கவர்மர் சொல்வது போல வணிகர்களின் பாதுகாப்பு முக்கியம்” என்று பழுவேட்டரையர் நமட்டுச் சிரிப்போடு சொன்னார்.

ஆதித்தவர்மன்/விமலாதித்தன் விடுவிக்கப்பட்டதும் என்ன செய்வது, எங்கே போவது என்று புரியாமல் கொஞ்சம் தவித்தான். ஆழ்வார்க்கடியான் அவனருகே சென்றான்.

சபை கலைந்தது. பழுவேட்டரையர் கந்தன் மறவனைத் அருகே அழைத்தார். அவனிடம் “நீ எடுத்த அந்த ஒரு கழஞ்சு பொன்னை பொக்கிஷத்தில் கட்டிவிடு” என்று கிசுகிசுத்தார்.

Exit mobile version