நன்றாகவே சிந்தையிலிருக்கு, அழகப்பா கல்லூரி வளாகத்தினுள் ஒரு மாணவனுக்கும் துறை தலைமை ஆசியருக்கும் இடையே நடந்த பிணக்கில் அவனை இடை நீக்கம் செய்ததை எதிர்த்து மாணவர் போராட்டம் கல்லூரி பேராசிரியரின் கட்டிடம் முன் கூச்சலும் கத்தலும் கொண்டு இயங்கியது. தோழி நந்திதாவும் தோழன் கார்த்திக்கும் நாளை இது உனக்கும் நேரிடலாம் என்று எச்சரித்தனர். போராட்ட முழக்கம் நான் வளாகத்தை தாண்டி நடைபோட நடைபோட ஓசையில் வலுவிழந்தது. கொஞ்ச நாழிகை அரவமற்ற அமைதி வேண்டி பூங்கநாடிச் சென்றேன். அழகப்பா சுற்றுச்சூழல் பூங்கா அது, பூங்கா அமைத்து ஓராண்டுகூட எட்டாததால் மரங்கள் எல்லாம் பெரிதாக ஒன்றும் வளர்ந்திடவில்லை, ஒன்றோ இரண்டோ மரங்கள் மட்டும் என் உயரம் வளர்ந்து ஐந்தரை அடியில் தென்பட்டது, அதனருகில் சென்று உட்கார்ந்துக்கொண்டேன். மணி மூன்று ஐம்பது இருக்கும் நல்ல கதிர்கள் அந்த குட்டை மரங்களின் இலைகளையும் தாண்டிவந்து என் மீது விழத்தொடங்கின- சிறிய கூட்டம்; இரண்டு சிறுமிகள் சறுக்குமரத்தில் விளையாடினர், ஒரு சிறுவன் ஊஞ்சலாடினான். இலைகளின் கிளைகளின் அசைவையும்விட அந்த இடத்தில் மிகையாக கேட்ட ஒலி சிறுவர்களின் கூச்சலும் ஊஞ்சலின் கீச்சொலியும்-அன்று மண்டைக்குள் பெரிதாக குடையும் வண்ணம் எதுவும் ஓடமறுத்தது, ஏனோ ஒரு கிழமை காலமாக அவ்வாறே மந்தமாக தொனித்தது உள்ளம்- மிஞ்சிப்போனால் நிகழ்காலத்தில் கண்ணில் படுபனவற்றை உற்று நோக்குவேன், சிகரெட் புகைத்துக்கொண்டே பென்சிலால் கையில் கிடைப்பனவற்றில் கோடுகளை கிறுக்குவேன் அவ்வளவுதான்- பொதுவாக விளக்கமற்ற செயலின்போது மூளை எதையாவது போட்டு சிந்திக்கும், ஆனால், நான் கொஞ்சம் அந்த செயலை உன்னிப்பாக செய்தேன் ஒருகோட்டுக்கும் மறுகோட்டுக்கும் இடையே உள்ள கோடினை தொடும் வகையிலும் தொடாத வகையிலும் பார்த்துப்பார்த்து கிறுக்கினேன்.
திறன்பேசியில் குறுஞ்செய்தி வந்திருந்தது, நந்திதாதான். ‘யாழ்வா, நீயேன் கலந்து கொள்ளவில்லை எங்களுடன். சரிவிடு, ஆறு மணிக்குமேல் எங்களுடன் வருவாயா, கடைகளுக்கு செல்லப்போகிறோம். என் தோழி காலிசும் வருகிறாள். கார்த்திக் வந்தாலும் வருவான். ஆறு முப்பதுக்கு படத்துக்கு போகலாமா? கடைகளுக்குக் கூட பிறகு சென்று கொள்ளலாம். கொஞ்ச நாளாகவே உன்னுடன் ஒழுங்காக கதைக்க முடியாது போனது. எனக்கு பேசலாமென தோன்றும்போதெல்லாம் உன்னை பார்ப்பேன் நீயோ வழக்கத்துக்கு மாறாய் இருந்தாய், தொந்தரவு செய்துவிடக்கூடாதென விட்டுவிட்டேன், தற்போது கட்டாயம் பேசவேண்டுமே என தோன்றுகிறது. எதுவும் இடரில் இருக்கிறாயா? இல்லை என்னால் எதுவும் முகம் சுளித்துக்கொண்டாயா? எப்படியோ எனக்கு உன்னிடம் பேசி எதாயினும் சரி செய்யவேண்டும். இன்றைக்கு முடியாதென்றாலும் நாளைக்காவது ஒத்துக்கொள், உன் விருப்பம், எப்போது வேண்டுமென்றாலும் எனக்கு ஒப்புதலே.’ கடிதம் எழுதியதுபோல் கடைசியில் இப்படிக்கு நந்திதா என்று முடித்திருந்தாள்.
இரவு கடைவீதிகளில் அலைவது எனக்கும் பிடிக்கும், காரைக்குடியின் நூறடி சாலையோ, கண்ணன் பசார் சாலையோ, கல்லூரி சாலையோ, பர்மா காலனி சாலையோ எதுவாயினும் அவ்வூரின் இரவில் எந்த சாலையில் அடியெடுத்துவைத்தாலும் என்னால் பெரும்பாலும் என் காலடி ஓசைகளை மட்டுமே கேட்க இயலும். நல்லிரவில் தனிமையில் நடப்பதுபோன்றிருக்கும். கூட்டமான துணிக்கடையகளின் நடுவில்கூட அந்த அமைதியை நான் உணர்ந்திருக்கிறேன்- அப்படிபட்ட இரவில் நண்பருடன் நடக்க நயப்பு உண்டே, நந்திதாவுடன் சென்றால் நான் வாய்திறக்காமல் இருக்கலாம், அவளே எனக்கும் சேர்த்து பேசிடுவாள், மகிழ்ச்சி தரக்கூடிய நல்ல பொழுதுபோக்கே அது. ஆனால், திரையரங்கிற்கு போகலாமென சொன்னதே நெருடல். அத்துடன், அவ்வேளையில் பூங்காவில் அடித்த வெயிலில், சிறுவர்களின் ஒலியில் என் உள்ளம் பெரும் தனிமைக்கு வேண்டியது. அவளது குறுஞ்செய்திக்கு மறுமொழிகூட பிறகு சொல்லிக்கொள்வோமென அதை படிக்கமட்டும் செய்துவிட்டு வீட்டிற்கு செல்லலாமென முடிவெடுத்தேன்.
பூங்காவை விட்டு வெளியேறும் போது அழகான அரிவை என் முன் தோன்றினாள், அன்று நான் பார்த்ததில் கடைசி முகம் அதுதான் என்ற அளவிற்கு அந்த முகம் என்னுள் பதிந்துள்ளது. அவள் அணிந்திருந்த உடை எனக்கு சிந்தையில் இல்லை, கருமையான அவளது முகத்தின் சிறப்புகளை மட்டுமே மீட்க முடிகிறது-கடுமையான செயல் ஒன்றும் இல்லை இப்போதும் என்னால் எளிமையாக அந்த முகத்தை விவரிக்க இயலும்- புருவம் குறைவாக இருந்தது; உதடுகளுக்கு அரக்கும் சிவப்பும் கலந்த ‘பால்ம்’ பயன்படுத்தியிருப்பாள்போல, தண்ணீர் போன்ற அந்த உதடுகள் அவளது அழகென்ற சேனைக்கு அணு ஆயுதம்போல வலு சேர்த்தது. இருப்பினும், என்னை பெரிதாக கவர்ந்தது அவளது தாடைதான். ‘கோணியல்’ கோணம் என்று சொல்லப்படும் கீழ்தாடையின் கோணம் அவளுக்கு குறைவாகவும், அந்த தாடையின் பின் விழிம்புகள் குமடோடு வந்த சதை பெருக்கத்தில் காணமல் மறைந்தும், எதிர்படுவோர் பார்வை விழும்படியான மச்சத்துடனும் இருந்தது. முன்போ, தாவாங்கட்டை ஊசியாக ஒன்றுமில்லை, மழுங்கி அகன்று தனித்துவமான அழகை கொடுத்தது- அந்த முக வடிவம் நான் மிகையாக கண்டு பழகி வந்துள்ள அரிவைகளின் முக வடிவத்தை ஒத்திருந்தது- தமிழ் பேரழிகி ஒருத்தியை எதிர்கொண்ட மகிழ்ச்சியில் அங்கிருந்து அகன்றேன். அவள் என்னை ஒருமுறைகூட திரும்பி பார்க்கவில்லை, என்றாவது மீண்டும் எதிர்கொள்ள நேரிடலாம் என்றே கடந்தேன்.
தொடர்ந்து நீண்ட தொலைவை கடந்தேன். சிகரெட் புகை என் தலையினை மறைத்திருந்தது. அதன் புகை இனி எப்போதும் என்னை சூழ்ந்திருக்கவே விரும்பினேன், நான்கு இருப்பிலிருந்தது, மூன்றை முடித்து நான்காவதையும் பற்றவைத்தேன். அந்த சிகரெட்டை தவிர்த்து வேறெதையும் பற்றிக்கொள்ள இயலாதவாறு நொடித்தது கைகள். கைவிரல்களில் சாம்பல் துகள்கள் விழுந்துக்கொண்டிருந்தன, கன்னத்தில் நீர்துளிகள் விழுந்துக்கொண்டிருந்தன; உடம்பே தளர்ந்துபோனது- வீட்டிற்கு இவ்வேளையில் சென்றால் அம்மா மட்டுமே இருப்பாள் என்று அவளை அப்போது எண்ணியதை இப்போது எண்ணும்போது அவள் சொன்னது ஒன்று சிந்தைக்கு வருகிறது.
அன்று அவள் நாள் முழுதும் அழுதாள், ஒரு மிடறு தண்ணீர்கூட இறங்கவில்லை. ‘உன் ஐயா ஊர் முழுக்க சொல்லி வைத்திருக்காராம், சொத்து களவாணி போய்சேர்ந்தாதான் எங்களுக்கு விடிவென. உன்னிடம் வந்துகூட ஆத்தா நல்லவள் இல்லையென சொல்லி என்னைவிட்டு விலக்க முயற்சி செய்தாலும் செய்வர் உன் ஐயா, ஆயா, மாமா. பெற்ற மகளை ஊர் நடுவில் வைத்து தேவடியாளென சொல்லும் கொடுமையெல்லாம் எந்த ஊரில் நடக்கிறது. ‘உன்ன கட்டிக்கொண்டவன் ஒன்றுமில்லாமல் எங்கள் கால் கழுவி வாழ்ந்தவன்தானடி, ஒன்றுமில்லாதவன்கூட படுத்தவளுக்கு என் வீட்டு காசுக்கு அரிக்கிறதோ.’ என்கிறாள் என்னைப் பெற்றவள். பிள்ளை மட்டும்தானே இருக்கான் சிறுக்கி மூளையைப் பேதலிக்க வைத்திடலாம், குடியிருக்ககூட வீடு இல்லாமல் செய்திடலாம்… நாம் லோலோனு அலைவதை காணவேண்டும்- அதுதான், அது மட்டும்தான்! கடைசியா நாம் தங்கியுள்ள வீட்டையும் அவன் நிலமென பட்டாமாற்ற முயற்சிக்கிறான் உன் மாமா. துணை இல்லாதவளை எல்லாரும் ஏய்த்திடலாமென முடிவெடுத்தாச்சு. பெட்டச்சினா இளக்காரமா! மகளுக்கும் உரிமையுண்டு சொத்தில்.’
‘சரிவிடுமா இதையே சொல்லாமல்.’
‘தெளிவா நீதான் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ளவேண்டும். விளங்குதா! நான் இல்லையென்றாலும் நீ பிழைக்கக் கற்றுக்கொள்.’
‘அறிவு மழுங்கிப்போச்சா? இப்படி சிந்தித்துதான் நோன்பு இருக்கிறாயா? அப்படியே இருந்து போய்விடலாமென எண்ணமோ.’
‘அதெல்லாம் ஒன்றுமில்லை, உன்னை இந்த அக்கறை இல்லாத மண்ணில் தனியாக விட்டுவிட்டு நான் எப்படி போவேன்.’ இதுதான் அவள் சொன்னதில் இன்றைக்கும் மறக்க முடியாதது. பிறகு, நானே ஊட்டிவிட்டேன்- வாய் நிறைய சோற்றை வைத்துக்கொண்டு திணறி செப்பினாள்.
‘பசித்திருக்கும்… நானே போட்டு தின்றிருப்பேன்…’
வரவர அவள் குழந்தையாகவே தோன்றினாள்.
கடைசி சிகரெட் முடியும்போதெல்லாம் நிலை தடுமாறுவதுபோல் நடந்தேன், அந்த அளவு உடல் களைத்திருந்தது. காற்று வீச்சு கடினம்- வலையன்வயல் செல்லும் மாத்தூர் காட்டுப்பாதை அது- சாலைக்கு இருபுறமும் அமைந்த முந்திரி காட்டில் கதிரவன் தனது மஞ்சள் போர்வையை இறக்கியிருந்தான். சுற்றியும் ஆள் அரவமே இல்லை, சிகரெட் வேண்டுமென்ற எனது குமுறல் மட்டுமே ஒலித்தது. சோகையாக நடைபோட்டு தல்லாடி ஒரு மரத்தடியில்போய் மயங்கினேன். நல்ல நிழல் மரத்தடியில், அங்கிருந்து குடிகாரன் தோற்கும்படியான நடை, ஆடிக்கொண்டு சாலையில் சென்றேன்.
நீண்ட நாழிகை கடந்து அந்த வழியிலும் வண்டி செல்லவேண்டுமென ஒரு இளைஞன் தூரத்தில் வந்தான். முகமெதுவும் தெளிவாக தெரியவில்லை. காதிடுக்கில் தொலைப்பேசி வைத்து உரையாடி நகைத்துக்கொண்டு வண்டி ஓட்டினான் என்பதை மட்டும் அறிவேன். மடையன்! வண்டி ஓட்டும்போது தொலைப்பேசியில் பேசலாமா, எத்தனை விபத்து நடக்கிறது நாட்டில், நாம் மட்டும் தப்பிவிடுவோமென இந்த இளைஞர்களுக்கு எங்கிருந்துதான் சிந்தினை தோன்றுதோ, மடையர்கள்- ஆக, யார் பொறுப்பு அவன் விழுந்ததிற்கு, அவன் தானே, வண்டிவேறு நெளிந்திருக்கும் ,வீட்டில் திட்டு உறுதி- அட, அதைக்கூட பேசி ஒப்பேத்திவிடலாம், நடந்து சென்ற என்மீது இடித்துவிட்டானே, அப்போது நான் எழுந்திருந்தேன் இளைஞன் தொலைந்தான்- ஓட்டம் பிடித்தாலே தப்ப முடியும் என நான் எழுவதற்குள் வண்டியை எடுத்துக்கொண்டு ஓடியேவிட்டான். என் உடம்பிற்குதான் என்ன ஆனதோ! ஏற்கனவே உடம்பிலிருந்து எல்லா உறுப்புகளும் பொனுபொனுவென கொட்டியதுபோலதான் இருந்தது, இப்போது எதிர்பாரா விபத்து, என்ன ஆனதோ!
பெரிதாக அடியொன்றும் இல்லைபோல, தலையை தடவி பார்த்தேன் விழுந்ததில் கடுமையாக வலித்தது- வேறெங்கும் அடியா என ஆராய்ந்தால், ஒன்றும் அகப்படவில்லை. மீண்டும் எழுந்து தன் தொங்கான் நடையை போட்டேன், ஆடையெல்லாம் தூசு, துடைக்ககூடயில்லை. தலைவலிக்கு சிறுபிள்ளைபோல கண்ணீர் வந்துக்கொண்டிருந்தது. கடைக்கோடியில் நடந்துவந்த ஒருவன் அருகே கடந்தான், என்னை ஒத்த அதே உயரம், அதே நடை, அதே எடை. விழியின் விளிம்பில் கடந்தவனின் உருவம் மட்டும் தென்பட்டது, வியந்து திரும்பினேன், முதுகை மட்டுமே பார்க்கமுடிந்தது- யாரோ முன் அறிமுகமில்லாதவரே என்று சொல்லிக்கொண்டது உள்ளம். மீண்டுமொருவன் கண்ணெதிரே வண்டியில் சென்றான்- கண்டிப்பாக நானேதான்! நான்தான் வண்டியில் சென்றது.
ஒன்றும் விளங்கவில்லை! வண்டியில் சென்றவனையும் திரும்பி கண்டேன். தலை வேறு வலித்தது. ஏற்கனவே ஆட்கொண்டிருந்த சோர்வு தற்போது இக்கட்டான சோர்வாகவும், தலைவலி இடுக்கண்ணாகவும் நிலைத்திருந்தது- ஏதோ கண் கோளாறு என்று சொல்லி முன்னேறினேன். ஆள் நடமாட்டமான பகுதி நெருங்கியது, முந்திரி காட்டிலிருந்து வளைந்து வலையன்வயல் ஊர் வழிக்கு செல்லும்போது கல்பட்டறையில் உளி எழுப்பும் ஓசையை கேட்க முடிந்தது, யார் முகமும் அகப்படவில்லை ஒரே முதுகுடன் புறம்காட்டி உட்கார்ந்திருந்தனர். பிறகு மரத்தடியில் கைலி கட்டி ஒருவன் அகப்பட்டான். அருகே சென்று நின்ன இடத்திலிருந்து பைய வளைந்துக்கொடுத்து அவன் முகத்தை பார்க்க எண்ணினேன், தென்படவில்லை, கொஞ்சம் நகர்ந்து முயற்சிக்கையில் தெரிந்துவிட்டது, அதே முகமே. வியப்புதான், ஆனால், சோர்வான வியப்பு. பெரிதாக அலட்டிக்கவில்லை, கண்கலங்கியது, தலைகுனிந்து நடந்தேன். அதிலிருந்து எங்கும் பார்க்க விழையாமல் போனேன். எல்லாம் மாயையே. எதிரே பல யாழ்வன் நடந்தனர் யார் முகத்தையும் நிமிர்ந்து பார்க்கவில்லை. நிமிர்ந்து என்னவாகபோது, என் முகம்தான் அங்கும் இருக்கும். கண்ணீர் கண்ணை மறைத்திருந்தது. வீட்டை நோக்கி கால்களை ஓயாது நடக்கவிட்டேன். பல யாழ்வன் கால்கள் முன்னும் பின்னுமாக கடந்தது. சிலர் வேட்டி கட்டியிருந்தனர், சிலர் கைலி, சிலர் ‘டவுசர்’- அனைவரும் ஏளனமாக கடந்தனர். அவர்கள் என்னிடம் உரையாடாததும் நல்லதே, விடையளிக்கமுடியாத நிலையே என்னுடையது, அத்துடன் என் முகத்தை நானே நேர்கொள்ளவேண்டிய இக்கட்டில் தள்ளநேரிடும்- நல்லவேளை யாரையும் நெருங்காமல் தல்லாடி தல்லாடி நடந்தேன்.
ஒருவழியாக வீடு வந்து சேர்ந்ததும் அயர்ச்சி சிறிது குறைந்தது. இனி வெளியில் செல்லப்போவதே இல்லை என்பதுபோல கதவை சாற்றினேன்.
‘அம்மா! எனக்கு தலைவலியாக உள்ளதுமா. கீழே விழுந்துவிட்டேன், எதுவும் காயமா என மண்டையை பாரேன்.’
மறுமொழியே வரவில்லை. வீட்டுக்குள் அம்மாவை தேடினேன். பத்தியறையை திறப்பதற்குள் குரல் கேட்டது. ‘வருகிறேன் இருடா, இதோ வருகிறேன்.’ என்று
பதட்டத்தில் படபடத்து உட்கார்ந்ததும் அறையை சுற்றும்முற்றும் கண்றேன், வெயிலுக்கு இதமாக மின்விசிறி சுற்றியது. வெளியில் செல்லவே கூடாது என்பதுபோல தலையை ஆட்டிக்கொண்டேன். மின்விசிறி சுற்றும் ஓசை உள்ளத்தில் மெதுவாக இடையூறு ஏற்படுத்த தொடங்கியது. ஒருவழியாக அம்மா வந்தாள், இல்லை, நான் வந்தேன்- வியப்பு கடந்து மீளமுடியாத அதிர்ச்சியில் நொடித்து உறைந்தது உள்ளம். அவன் என் அருகில் வந்து தலையை மேற்பார்வையிட்டான், ‘தலையில் எந்த காயமும் இல்லையேடா’ என்றான். கொஞ்சம் தள்ளிச்சென்று ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம். என் இருப்பு அந்த இருக்கையிலேயே உறைந்துபோனது, நகரமுடியாமல் போனேன்- எத்தனை நாழிகை என்று வினவ வேண்டாம்- ஐந்தாண்டுகள் கடந்தும் அதே இருக்கையில் உறைந்த முகமாகவே உலாவினேன். என்ன, தொட்டுப்பார்க்கையில் தலைமுடி முன்பைவிட மலிக்கப்பட்டிருந்தது. தாடிவளர்ந்திருந்தது.
ஒரே பின்பம் கொண்டு பலர் வந்து பார்த்தனர். எனக்கு பழகிப்போனது. வீட்டிலேயே இருக்கவும் என்னுடன் தங்கியிருக்கும் யாழ்வன் அடிக்கடி அழுது ஏன் என்னுடன் பேசாது இருக்கிறாய் என்று நச்சரிப்பான்- தொடக்கூட எண்ணுவான். பேசாமல் தள்ளிவிடுவேன். அவன் அம்மாவோ என்ற நம்பிக்கை, அப்படிதான் தன்னைத்தானே சொல்லிக்கொள்வான். ஆனால், என்னால் அதை கேட்க இயலாது.
சுவரில் இருக்கும் உருவங்களும், புகைப்படங்களும்கூட கொஞ்சநாளில் ஒரே உருவத்தை எடுத்தது. அதிலிருந்ததுதான் இது நானாக கற்பித்துக்கொண்டாதோ என்று தோன்றுகிறது. யாரிடமாவது பேச துணிவு வரும்போது திறன்பேசியில் நந்திதா என்று பெயர் பதியப்பட்ட எண்ணுக்கு குறுஞ்செய்தி விடுப்பேன். படிக்கமுடியாமல் போனாலும் கொஞ்சகாலமாக வேலைக்கு சென்றுவர முடிகிறது, நான் இன்னும் மாறவில்லை, அதே வழியில் நாள்தோறும் நடக்கிறேன். எதிரே வந்துபோய்கொண்டிருந்த யாழ்வன்களும்தான்- அன்றைய நாள் பொய்யோ என்று மெதுமெதுவாக ஐயம் வலுபெற தொடங்கினாலும் அது மிக நல்ல சிந்தைகள்; அதற்கு முன் உள்ளவைகளும். மீண்டும் மீண்டும் அதனையே சிந்திப்பதன் வாயிலாகவாது அது மெய்யாகட்டும்.
