Site icon சொல்வனம் | இதழ் 367 | 24 மே 2026

கோலமும் குணங்களும் அற்ப மாயைகளோ?

டேவிட் சாமர்ஸ்(David Chalmers) என்ற மெய்யியலாளர், ‘தன்னுணர்வின் கடினச் சிக்கல்’ என்று ஒன்றைச் சொல்லப் போக, உலகெங்கும் அதை ஒட்டியும், வெட்டியுமாக கருத்துக்கள் எழுந்து வருகின்றன. புகழ் பெற்ற இயற்பியலாளரான கார்லோ ரொவெல்லி (Carlo Rovelli)தன்னுணர்வு என்பது மூளையின் செயல்பாடே, பல பௌதீக செயல்பாடுகளைப் போலத்தான், மனமும் செயல்படுகிறது என்று சொல்கிறார். அதாவது, தன்னுணர்வு/ஆன்மா/ நனவு நிலை என்பது இயற்கையான பொருண்மை குணங்கள் உடைய ஒன்று; இயற்கையிலிருந்து பிரித்துப் பார்க்கும் ‘இருமை’  (Dualism)என்பது தேவையற்றது என்று எழுதியுள்ளார். அவர் சொல்கின்ற மாற்றுக் கருத்தைப் பார்ப்போம்

சைதன்யம் என்றும் தன்னுணர்வு என்றும் சொல்லப்படும் நனவு நிலையைப் பற்றி அல்லது அது தோன்றும் இடத்தைப் பற்றி காலம் காலமாக விவாதங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன அதுவும் அண்மைக்காலத்தில் இந்த வழுக்குப் பாதையில் பயணிக்க அனைவருக்கும் ஆசை வந்திருக்கிறது.


கலாச்சார மரபு எதிர்ப்புகளை எவ்வகையில் மனித இனம் கையாண்டதோ, அதைப் போலத்தான் உணர்வைப் பற்றிய புதிய புரிதல்களை நாம் கையாள்கிறோம்.
நம்முடைய கோணங்கள் மாறுவதில் நமக்கு  ஒவ்வாமையும், அதிர்ச்சியும் ஏற்படுகிறது.


இந்தப் பூ உலகத்தில் இருக்கும் உயிரிகளுக்கு ஒரு பொதுவான முன்னோர் இருந்தார் என்று டார்வின் சொன்னபோது மிகவும் ஆக்ரோஷமாக மனித இனம் அதை எதிர்த்தது. குடும்ப மரத்தை கழுதையுடன் பகிர்ந்து கொள்வது பலருக்கும் குழப்பமான, நிலை தாழ்ந்த, பேரதிர்வை ஏற்படுத்தியது.

இணக்கமான சில கருதுகோள்கள் சவாலுக்கு உட்படுத்தப்படும் போது, நாம் இறுகப் பற்றியிருந்த கருத்துக்களை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று தான் இன்றைய நவீன உலகத்தில் கூட நினைக்கிறோம். சிந்தனை முன்னேற்றம் என்ற அளவில் கூட நாம், தன்னுணர்வைப் பற்றி புது கருத்துக்களை ஏற்றுக்கொள்ளவோ, நம்பவோ, ஆழமாக விவாதிக்கவோ விரும்புவதில்லை என்பது கார்லோ ரொவெல்லியின் கருத்தாக இருக்கிறது.

நடுக்கால கட்டங்களில் மேற்கத்திய நாகரீகம் மனிதர்களை உடலாகவும் ஆன்மாவாகவும் இரு தனித்த அமைப்புகளாகப் பார்த்தது. உடலானது, பொருட்களால் உட்கட்ட மைக்கப்பட்டு, வளர்சிதை மாற்றத்திற்கு உள்ளாகி, இறுதியில் அழிகிறது. எல்லை கடந்து செல்லும் ஆத்மா, அற்பமான இந்த உலகை விட்டு மேம்பட்ட ஆன்மீக உலகத்தில் இணைகிறது. உடல் இல்லாத தேவதைகள் போலவே, உயிர் நீத்த மனிதனும் உடல் இல்லாமல் ஆன்ம சக்தியாகத் திகழ்கிறார். அழியாத இந்த ஆத்மாவானது கடவுளால் உருவாக்கப்பட்டது. இந்த ஆத்மா நமது நினைவுகள், குண நலன்கள், மற்றும் அகநிலையின் களஞ்சியம் என்று கொண்டாடப்பட்டது. அதுக்கு பேசவும் அன்பு செய்யவும் முடியும். நமது இருப்பின் முகவரே ஆன்மா தான்; நம்முடைய விடுதலையும் அவரால்தான் ஏற்படுகிறது. பொறுப்பு, நற்குணங்கள், மேன்மை, குற்றங்களுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளும் தன்மை, இத்தகையவற்றால் நம் செயல்களை மதிப்பீடு செய்யவும், காக்கவும் ,தண்டிக்கவும் அதன் மூலமே கடவுள் நம்மை வழி நடத்துகிறார்.

தற்போதைய விவாதப் பொருளான தன் உணர்வு என்பது ஆழமாக நிலை நிறுத்தப்பட்ட மரபு சார்ந்த பார்வையைக் கொண்டிருப்பதால், கடந்த மூன்று நூற்றாண்டுகளில் யதார்த்தங்களைப் பற்றி நாம் புதிதாக அறிந்து கொண்ட செய்திகளைக் கூட நம்மால் விரைவில் ஏற்க முடியவில்லை.

அறிவியல் அனைத்தையுமே விளக்கி விடும் என்பது தலைக்கனம் மிக்க ஒரு கூற்று. இடிகள், மின்னல்கள், புரதமடிப்புகள் போன்ற பல்வேறு விஷயங்களை நம்மால் முழுவதுமாகப் புரிந்து கொள்ள இயலவில்லை.

ப்ளூ (Flu)காய்ச்சலை இன்று வரை குணப்படுத்த முடியவில்லை; பின்வரும் இரண்டு வாரங்களில், தட்பவெட்பம் எப்படி இருக்கும் என்று சரியாக கணிக்க முடியவில்லை. அவ்வளவு ஏன், இந்த அகிலத்தின் அடிப்படையான இயற்பியல் சட்டங்களை நாம் முழுவதும் அறியவில்லை. அப்படியே அடிப்படையான இயற்கை விதிகளை நாம் அறிந்திருக்கின்றோம் என்ற நம்பிக்கை கொண்டிருந்தாலும், அது எதைக் குறிக்கிறது என்பதைப் பற்றி நமக்குத் தெரியாது. உதாரணத்திற்காக ஒன்று சொல்கிறேன். என்னுடைய சைக்கிள், துகள் இயற்பியல் சட்டங்கள்படி இயங்கினாலும், அதில் பழுது ஏற்பட்டால் நான் ஒரு துகள் இயற்பியலாளரை அணுக முடியாது, பழுது நீக்கும் தொழிலாளரைத் தான் அணுக வேண்டி வரும்.

நம்முடைய உடலும், மனம் அல்லது மூளை அல்லது தன்னுணர்வு எப்படி செயல்படுகின்றது என்பதைப் பற்றி நாம் அறிந்துள்ளது மிகவும் குறைவு. ஆனால் அதைப் பற்றி அறிய மிகுந்த ஆவலும் கொண்டிருக்கிறோம். அறிதல் குறைந்து ஆர்வம் மிகுந்து இருக்கும் இந்த நிலைதான் ‘தன் உணர்வின் சிக்கல்கள்’ என்ற கருத்தைப் பற்றி பேசுவதற்கு ஏற்ற அறிவுத்தளத்தை   சிலருக்குத் தருகிறது. அதாவது இடி மின்னல்களை அறிந்து கொள்வது எவ்வளவு கடினமோ அதைப்போலத்தான் தன்னுணர்வை புரிந்து கொள்வதும் என்ற கருத்து இதிலிருந்து தான் எழுந்து வருகிறது. விந்தை என்னவென்றால் அது ஒரு இயற்கை நிகழ்வில்லை என்று சொல்வதற்கு நம்மிடம் சாட்சி இல்லை என்பதால் அல்ல, அது மிகவும் சிக்கலான இயற்கை நிகழ்வு என்பதால்.

ஒரு நிகழ்வை மேம்படுத்தி அறிந்து கொள்வது அல்லது அதில் நிகழ்ந்து வரும் ஆய்வுகளை அறிந்து கொள்வது என்பது அதை மறுப்பதற்காக அல்ல. பழங்காலத்தில், சூரியன் தினம்தோறும் தனது பயணத்தில் உலகில் இறங்குகிறான் என்று மாலைப் பொழுதை குறித்தார்கள். இன்று, பூமி சுழற்சியின் விளைவெனவே நாம் இதைப் புரிந்துகொள்கிறோம்; இச்சுழற்சியானது நம்மைப் பூமியின் நிழல் படர்ந்த பகுதிக்குத் திருப்புகிறது — அப்பகுதியில் சூரியன் படிப்படியாகக் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்துவிடுகிறது. இந்த அறிவியல் புரிதல், சூரிய அஸ்தமனத்தை தோற்ற மயக்கம் என்று காட்டுவதில்லை. இதைப்போலவே நம்முடைய மூளையானது எப்படி செயல்படுகிறது என்பதை அறிந்து கொண்டால் நம்முடைய ஆன்மாவானது மாயையாகவோ, உண்மை அற்றதாகவோ தோன்றும் என்பது இல்லை. இன்னமும் நம் ஆத்மாவை “நம் ஆத்மா” என்று சொல்ல முடியும். எனது ஆத்மா என்று சொல்வதில் நமக்கு ஒரு அணுக்கம் இருக்கிறது.

தன்னுணர்வின் கடினச் சிக்கல்

1994 இல் டுசானில் (Tucson) டேவிட் சாமர்ஸ் என்ற இளைஞன், தன்னுணர்வின் கடினச் சிக்கல்கள் பற்றி மிக அற்புதமாகப் பேசினார் அவர் ஒரு. தத்துவவாதி. அவர் இந்த சிக்கலை இரண்டாகப் பகுத்தார். மேற் சொன்ன கடினமான இந்த விஷயத்தை அதாவது மூளையில் நடக்கும் பல விதமான செயல்பாடுகளின் விளைவாக, வெளியில் காணப்படும் நமது நடத்தைகளும் நமது உள்நடத்தைகளை பற்றி நாம் சொல்லும் குறிப்பும் சால்மர்சை பொறுத்தவரை எளிதான விஷயமாகும்.

அந்த இரண்டாவது சிக்கல் என்பது அவரைப் பொறுத்தவரை கடினமான தன்னுணர்வு சிக்கலாகும். அவரது கேள்வியை இவ்வாறு புரிந்து கொள்ளலாம்: ‘மூளையின் செயல்பாடுகள், அனுபவங்களால் எவ்வாறு தொடரப்படுகின்றன?’  என்பது அவரது கேள்வி . அந்த சிந்தனை தான், இன்றுவரை தன்னுணர்வின் கடினச் சிக்கல் என்று கையாளப்படுகிறது. அந்த செய்தி தான் தன்ணுணர்வு பற்றிய அனைத்து விவாதங்களுக்கும் வித்தாக இருக்கிறது. இன்றைய அறிவியல் புரிதல்கள் எத்தனை குறைகள் உள்ளவை என்பதை இந்தக் கடினத் தன்னுணர்வு காட்டுகிறதாம்! சால்மர்சை பொருத்தவரை நமது அனைத்து நடத்தைகளும், நமது உள் மன அக வாழ்க்கை உட்பட, கருது கோள்களால் விளக்கப்பட்டாலும், மூளையின் செயல்பாடுகளுக்கும் அனுபவங்களுக்கும் இடையே ‘விளக்கும் இடைவெளி’ இருக்கத்தான் இருக்கும்.

மறுமலர்ச்சி காலத்தில் சொர்க்கமும் நரகமும் ஒரே இயல்பைக் கொண்டிருக்கும் என்று ஏற்றுக் கொள்வது கடினமாக இருந்தது. (இன்று கூட ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று தானிது.!) மனித இனமும் விலங்குகளும் ஒருவருக்கொருவர் உறவினர் என்ற டார்வின் கொள்கையை ஏற்றுக் கொள்வதும் கடினமாக இருந்தது; இன்றைய உயிரியலில் காணப்படும் முன்னேற்றங்கள் சொல்லும் ‘அனைத்து உயிரிகளும் உயிரற்றவைகள் என்று கருதப்படும் பொருளும் ஒரே இயல்பில் (அணுக்கள்) அமைந்துள்ளன’ என்று ஏற்றுக் கொள்வதும் கடினமாக இருக்கிறது.

சாமர்ஸ் சொன்ன ‘விளக்கும் இடைவெளி’ (Explanatory Gap) பல தொடர்புடைய வடிவங்களை எடுத்துக் கொண்டு வருகிறது- உணர்வுத் தன்மைகளை ‘குவாலியா’  (Qualia) என்ற பெயரிட்டு அதை அனுபவத்தின் பல்வேறு துளிகள் அல்லது துகள்கள் என்று சொல்கிறது; அகநிலை சார்ந்த ஒரு விளக்கம் வேறு இருக்கிறது. அதாவது சில இருப்புகளுக்கு மட்டுமே அனுபவம் என்பது கிட்டுகிறது;  தாமஸ்நேகல்  (Thomas Nagel) என்ற மெய்யியலாளர் சொன்ன புகழ்பெற்ற கூற்றான ‘அது எப்படி இருக்கிறது’ என்பதை சில அனுபவங்களின் பேசும் பொருளாக எடுத்துக் கொள்கிறது.

கார்லோவைப் பொறுத்தவரை இப்படி ஒரு ‘விளக்க இடைவெளி’  இல்லை. இப்பொழுது நமக்கு எது புரியவில்லையோ, அதை புரிந்து கொள்வோமாயின், அப்போது நாம் எதைப் புரிந்து கொண்டோம் என்பதைப் பற்றியதே இது. அதாவது இன்று நமக்குப் புரியாதது, ஆனால் நமக்குப் புரியக்கூடிய தருணத்தில், எதைப் புரிந்து கொள்வோமோ, அதை இப்போது நாம் அறிந்து கொள்வது எப்படி?

இந்த ‘தன்னுணர்வின் கடினச் சிக்கல்’ என்பதை கட்டித் தழுவாத சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், விமர்சகர்கள் இல்லை என்று சொல்லிவிடலாம். பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இத்தகைய ஒரு நிலையை எதிர்பார்த்தார் மெய்யியலாளர் பாருக் ஸ்பினோசா.(Baruch Spinoza)
அவர் சொன்னார்: “இயற்கையில் காணப்படும் எந்த ஒரு நிகழ்வும் எந்த அடிப்படையில் அமைந்துள்ளதோ அதை ஒத்துத்தான் நமது ஆன்மாக்களும் அமைந்திருக்கக்கூடும்..”

உலகில் இருமை காணப்படுகிறது அதாவது பகல் -இரவு ,இன்பம்- துன்பம், நன்மை- தீமை என்று சொல்லிக் கொண்டே போகலாம் .அவை ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்று உணர முடியாமல் போவதால் அவற்றை தனித்தனி அமைப்புகள் என்று எடுத்துக் கொள்கிறோம் இதன் காரணமாகவே நம்மால் தன்னுணர்வை புரிந்து கொள்ள முடியாது என்று நம்புகிறோம். நனவுநிலையை நம்மால் ஒருபோதும் புரிந்துகொள்ள இயலாது என்னும் கருத்து, ஆன்மாவும் இயற்கையும், அகமும் புறமும் தனித்தனித் தளங்களாக விளங்கும் ஒரு உலகக் கண்ணோட்டத்தை நிலைநிறுத்துகிறது.

நமது தன்னுணர்வு ,நமக்குப் பிரியமான அந்த ஆத்மா, நம் உடல், ஆகியவை, இந்தப் பொருண்மை உலகத்தில் காணப்படும் பல நிகழ்வுகளைப் போலவே தான் இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்வதில் பலருக்கு சிரமங்கள் இருக்கின்றன.

உலகில் இருந்து கொண்டு உலகைப் பார்

அறிவியலால், அனுபவத்தை உணர்த்த இயலாது என்பது சால்மர்சின் கொள்கை.
ஆனால், அறிவியல் மூலமாக அறிந்து கொள்வது, அனுபவத்திற்கு புறம்பான ஒன்றில்லை என்று கார்லோ சொல்கிறார். அது, அனுபவத்தைத் தானே முழுமையாகச் சொல்கிறது என்று கேட்கிறார் கார்லோ.

“அனுபவம் பேசும் அனுபவ வாதம்” என்ற அறிவியல் அறிவான அது, விஞ்ஞானத்திற்கு மாற்று இல்லை; கருத்துக்கள், வழக்கமாகத் தோன்றும் அந்தக் களத்தில் முக்கியமான பொருள் என்பது அனுபவம் என்றே சொல்ல முடியும். அலெக்சாண்டர் பாக்டாநவ்(Alexander Bogdanov) என்ற ரஷ்ய அறிவு ஜீவி அற்புதமாகச் சொன்னார்: “அறிவியல் என்பது நமது அனுபவங்களின் கூட்டு வரலாற்றுத் தொகுப்பாகும்.”

அறுதியும் பொருண்மையுமான உலகைப் பற்றி அவற்றின் வெளிப்புறத்திலிருந்து பார்க்கிறது அறிவியல் என்று மிகத் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வகையில் நாம் சிந்தித்தால், நாம்  இருமையைக் கொண்டு வருகிறோம். அது வந்த பிறகு ‘எங்கெங்கு காணினும் இருமையடா;’ விளைவு பேசு பொருளுக்கும், பொருண்மைக்கும் இடையே இட்டு நிரப்ப முடியாத பெரிய பள்ளத்தை நாம் முன்கூட்டியே ஏற்படுத்தி விட்டோம்.

எந்த உலகை புரிந்து கொள்கிறோமோ / புரிந்து கொள்ள முயலுகிறோமோ அந்த உலகில் தான் நாம் இருக்கிறோம், அதை விட்டு வெளியில் இல்லை; நாம் அதன் ஒரு பகுதி என்பதை, நம்முடைய கோட்பாடுகளும் அதிலிருந்து பெறப்பட்ட அறிவும் இந்த உண்மை உலகத்தில் நாம் பயன்படுத்தி நலம் பெற வேண்டிய கருவிகளாகத்தான் செயல்படுகின்றன. அவைகள் உருப்பெறாமல் வெளிப்பார்வையை மட்டும் பார்த்துக் கொண்டிருப்பது அறிவியலின் தன்மையில்லை.

நாம் புரிந்து கொள்வதும், நம்முடைய உணர்வுகள், கோணங்கள், அனுபவங்கள், அனைத்துமே இயற்கை நிகழ்வுகளே. முதல் அடியை தப்படியாக எடுத்து வைத்து விட்டோம்; அதனால் தான் நாம் தன்னுணர்வைப் பற்றிய குழப்பத்தில் விழுந்து விடுகிறோம். நம் உடல், ஆத்மா, தன்னுணர்வு அனைத்துமே இயற்கை தந்தவை ;எந்த உலகத்தை அவை விவரிக்கின்றனவோ அந்த உலகம் தந்தவை; அறிவு, தன்னுணர்வு, உணர்வுத் தன்மை என்பவை எல்லாம் ஒரு அறிவியல் சித்திரத்தைப் போல, வேற ஏதோ ஒன்றை அறிந்து கொள்வதைப் போல, நாம் அணுக வேண்டிய அவசியம் இல்லை. அந்த அறிவியல் படக்காட்சியே மேற்சொன்னவற்றின் கதையாகும்.

முன் தீர்மானத்துடன் சாமர்ஸ் இந்த சிக்கலை அணுகி உள்ளார். அனுபவம் என்பது மூளையில் நடக்கும் செயல் முறைகளைத் தாண்டிய ஒன்றல்ல. ஒருவர் தன் அனுபவத்தை சொல்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அதை வேறொருவர், (அறிவியல் பார்வை என்று வைத்துக் கொள்ளுங்களேன்) தன்  கோணத்தில் அணுகலாம். இது இயல்பான கோண, கண்ணோட்ட மாறுதல். இரண்டுமே இருவருக்கான அனுபவங்களே. இருவர் மூளைகளும் ஒரே முறைகளில் தான் செயல்பட்டுள்ளன. அவை அடைந்த அனுபவம், உண்மையின் இரு மாறுபட்ட கூற்றுக்கான சாட்சியம் இல்லை. அனுபவக் காட்சி, சொல்லப்பட்ட விதம், புரிந்து கொண்டுள்ள விதம் என்ற மூன்றும் பார்வை வேறுபாடுகளால் அமையலாம் ஆனால் அவை இரண்டு உண்மைகளைச் சொல்வதாகாது.

அகநிலை அனுபவம், உணர்வுத் தன்மை, தன் உணர்வு இவை அனைத்துமே மாறுபட்ட பார்வைகளால் மாறுபட்டவை என்றே தோன்றும். அப்படித் தோன்றாவிட்டால் தான் வியக்க வேண்டும்.

உடலும் மூளையும், புறத்திலிருந்து நிகழும் ஒன்றுடன் வினையாற்றும் போது உருப்பெறும் அனுபவம் என்பது அவரவர்க் கானது. ஆனால் இந்தப் பிளவு மர்மமான ஒன்றல்ல. சிவப்பு நிறத்தை நினைக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்,-அது ஒரு உணர்நிலை . ஏன் அது சிவப்பாக இருக்கிறது  நாம் என்று விவரிப்பதில்லை. நம் உணர்நிலை அந்த நிறத்தை காணும் போது அல்லது சிந்திக்கும் போது சிவப்பு நிறத்தை காட்சிப்படுத்துகிறது.

‘தன்னுணர்வின் கடினச்சிக்கல்’ என்பது முன்கூட்டியே உடலுக்கும் மனதிற்கும் இடையே மீவியற்பியல்(Metaphysics) பிரிவுகள் இருப்பதாக நினைக்கிறது. இயற்கை பற்றி நாம் அறிந்துள்ள அனைத்தையும் இது மறுதலிக்கிறது

ஒரு மனிதனின் பார்வையை மற்றொரு மனிதனின் புறவயமான பார்வையைக் கொண்டு நாம் அறிந்து கொள்ளத் தேவையில்லை. சொல்லப் போனால் அதன் மாறுதல் தான் முக்கியமானது. ஞானம்  என்பது எப்போதுமே உருப்பெற்று இருப்பதால், பார்வைக் கோணங்கள் பார்வை கோணங்களாகத்தான் அமைய முடியும். அறிவியல் அறிவு என்பது முதலில் அகக்கருத்து என எழும். இந்த உலகம் உண்மையானது; அதைப் பற்றி சொல்லும் எதுவும் அதனுள் தான் இருக்க முடியும். எந்த அறிவும் பார்வை சார்ந்ததே.


அவரவர் கோணம் என்பது மர்மமும் விசித்திரமும் அல்ல. அது ஒரு சிறப்புப் பார்வை. இந்தமீபொருண்மை பள்ளமும் விளக்கப் பிளவும் ஏன் தோன்றுகின்றன? அறிவியல் படங்கள் /விளக்கங்கள் ஆகியவற்றை அறுதி உண்மையின் நேரடி செய்திகள் என்று எடுத்துக் கொள்வதால்.


‘மெய்யியல் ஸோம்பி’  (Philosophical Zombie) என்று தான் அழைக்கும் ஒன்றை நம்மை சிந்தித்துப் பார்க்கச் சொல்கிறார் சாமர்ஸ். இது ஒரு கருத்தாக்கம்., அது மனிதர்களைப் போலவே நடந்து கொள்ளும்; உணர்வுகள், உணர்நிலைகள், கனவுகள், அனுபவங்கள் அனைத்தும் இருந்தாலும் அதற்கு தன் உணர்வு என்பது இல்லை. ‘யாரும் வீட்டில் இல்லை’ என்று அவர் சொல்கிறார். இது அவரது பேச்சுத் திறத்தை காட்டுகிறதே தவிர, நடத்தையையும், கருதுகோள் படி சுய பரிசோதனையின் வாயிலாக அணுகக் கூடிய ஒன்றையும், பிரித்துப் பார்க்கச் சொல்லும் நகைப்பிற்குரிய கருத்துதான். இது நடத்தைக்கும், அகநோக்கு மூலம் மட்டுமே அணுகக்கூடிய ஒரு கருதுகோள் சார்ந்த யதார்த்தத்திற்கும் இடையில் வேறுபடுத்திப் பார்க்க நம்மைத் தூண்டுகிறது. ஒரு தத்துவ ஸோம்பியை உருவாக்க முடியும் என்பதே, ‘அக அனுபவம் என்பது காணக்கூடிய இயற்கை நிகழ்வுகளிலிருந்து உள்ளார்ந்த முறையில் வேறுபட்டது’ என்பதைக் காட்டுகிறது என்று சாமர்ஸ் வாதிடுகிறார்.

ஒரு தத்துவப் பிண உரு என்பதைப் பற்றி சிந்திக்க முடியும் என்றால், அவரது கருத்தின் படி அக அனுபவம் என்பது, கூர்மையாக, பார்க்கப்படும் இயற்கை நிகழ்வுகளில் இருந்து தனித்து தெரிவதுதான்.

மேலே சொல்லப்பட்ட விவாதம் சரிதானா?

ஒரு தத்துவார்த்த ஸோம்பி, அகநிலை அனுபவம் என்றால் என்னவென்று தனக்குத் தெரியும் எனக் கூறிக்கொள்ளும்; இல்லையெனில், அது அனுபவப்பூர்வமாக ஒரு மனிதனிடமிருந்து வேறுபடுத்தி அறியக்கூடியதாக இருக்கும். சால்மர்ஸின் கருத்து என்னவென்றால், அவர் பேசும் அந்த அனுமானிக்கப்பட்ட, குறைக்க முடியாத நனவின் இருப்பை, அகநோக்கு மூலம் மட்டுமே நம்மால் நம்பவைக்க முடியும் என்பதுதான். அகநோக்கின் போது, ​​என் மூளையில் நிகழும் பௌதீக செயல்முறைகள் எனது நனவைப் பற்றி எனக்கு நம்பிக்கையூட்டுகின்றன. கோட்பாட்டளவில் இதேதான் ஸோம்பியின் மூளையிலும் நிகழும், அதற்கும் நனவு இருப்பதாக அது நம்பவைக்கும். இது உண்மையாக இருந்தால், இந்த மர்மமான, பௌதீகமற்ற அனுபவம் எனக்கு இருப்பதாக நான் கொண்டிருக்கும் முடிவை என்னால் நம்ப முடியுமா? ஏனெனில், நான் ஒரு ஸோம்பியாக இருந்திருந்தால், அந்த அனுபவம் உண்மையில் எனக்கு இல்லாமலேயே, நானும் அதையே நம்பியிருப்பேன் என்பது எனக்குத் தெரியும். இந்த வாதம் தன்னைத்தானே தோற்கடித்துக் கொள்கிறது.

ஒரு ‘தத்துவ சோம்பி’ தன் அக அனுபவம் என்ன என்பதை அறிந்திருப்பதாக கூறலாம் இல்லையெனில், அனுபவபூர்வமாகவே அது மனிதரிடம் இருந்து மாறுபட்டு காணப்படலாம் அல்லவா? சுய பரிசோதனையின் மூலமாகவே, கருத்தாக்கமான, குறைவற்ற தன்னுணர்வு என்பதை அறிய முடியும் என்பது அவரது கருத்து.

எனது உள் கேள்விகளின் மூலம், என் மூளையில் நடைபெறும் பௌதிகச் செயல்கள் எனக்கு தன்னுணர்வு இருக்கிறது என்று காட்டும். இதுதான் ஸோம்பி மூளையிலும் கோட்பாட்டின்படி நடக்கும் அதாவது அதற்கும் தன்னுணர்வு இருக்கிறது என்று சொல்லும். இது தன்னைத்தானே தோற்கடித்துக் கொள்ளும் ஒரு வாதம். ஏனெனில் அது உண்மையாக இருக்கும் பட்சத்தில், இந்த மர்மமான அபௌதிகமான அனுபவம், நான் ஒரு சோம்பியாக இருக்கும் நிலையிலும் அதுவே ஏற்படும் என்றால் அது உண்மையாகவே என்னிடம் இல்லாத போதும் நான் அதை ஒத்துக் கொள்வேன் என்பது சரியான வாதம் அல்ல.

என்னுடைய கருதுகோள் படி உருவாகும் ஸோம்பி அதாவது என்னுடைய இரட்டை என்னைப் போலவே தான் இருக்கும் -அனுபவத்திலும் கூட.சாமர்ஸ் சொல்வது அபௌதீகமாக இந்த உலகத்தில் சிலது நடைபெறும் என்று. இது அவருடைய அல்லது அவரைப் போன்ற சிந்தனை உடைய மக்களின் முன்கூட்டிய தீர்மானமே என்பதை அதில் இருக்கும் முரணிலிருந்தே நாம் புரிந்து கொள்ளலாம். சாமர்ஸ் இதன் மூலம் எதையும் நிரூபிக்கவில்லை இவைகள் எல்லாம் ஏற்க இயலாத மீபொருண்மை சாத்தியங்கள், நினைவேக்கங்களில் படிந்துள்ள ‘எல்லை கடந்து போகும் ஆன்மா’ என்னும் கருத்துக்கள்

ஆன்மா உண்மையானது; அது இயற்கையின் பகுதி

தன் உணர்வு மற்றும் அனுபவம் என்பது நாம் நமக்குள்ளே நிகழ்பவை பற்றி சொல்வது. நம்மை அது கட்டமைக்கிறது. திறமையான ஒருவர், புறத்திலிருந்து நம்மை கவனித்து நம் உள்ளே என்ன இயல்பு அமைந்துள்ளது என்பதை மற்றொரு சொல்லின் மூலம் சொல்ல முடியும் என்பதை எந்தவிதமான வாதங்களும் இதுவரை தப்பிதம் என்று சொல்லவில்லை. இன்று நமக்கு விரிவான புறப்பார்வையின் சாரம் பிடிபிடாமல் இருக்கலாம் ஆனால் அது நடக்க இயலாதது என்று சொல்வதற்கு நம்மிடம் நிரூபணம் கிடையாது.

தன்னுணர்வின் கடினச் சிக்கல் என்பது உண்மைக்கு புறம்பாகத்தான் தென்படுகிறது. ஏனெனில் அது மனதிற்கும் உடலுக்கும் நடுவே மீபொருண்மை பிளவு இருக்கிறது என்று முன்கூட்டி அனுமானம் செய்கிறது. சென்ற நூற்றாண்டுகளில் நாம் இயற்கையைப் பற்றி அறிந்தவற்றை இது மறுதலிக்கிறது. மனம் என்பது மூளையின் நடத்தை ;இதைச் சொல்வதற்கு சரியான மேம்பட்ட மொழி தேவை.

என்னைப் பற்றிய என் சொந்த அனுபவங்களோ அல்லது புறத்திலிருந்து வரும் அனுபவமோ முதன்மையானது இல்லை. அவை இரண்டுமே ஒரே நிகழ்வின் இரு பார்வை கோணங்கள். ‘குணங்களைப் பற்றிய ஆய்வு,’ ‘இருப்பியல் ஆய்வு’ என்ற இரு வட்டங்கள் உருவாகும் ஒற்றைப் புள்ளி எது என்று நாம் அனுமானிக்கத் தேவையில்லை. அவை சுழற்சியில் இருக்கலாம்; அதில் தவறு ஒன்றும் இல்லை.

எந்த உலகைப் பற்றிய தகவல்கள் என்னிடம் இருக்கிறதோ அதை நான் அணுகுகிறேன் ; நான் அந்த உலகின் பகுதியே.

அடிப்படையான அல்லது உறுதியான உண்மை என்று ஒன்று உள்ளது என்று நாம் நினைக்கத் தேவையில்லை.

எந்த விளக்கமும் கிட்டத்தட்ட சரியாக/ தோராயமாக இருக்கும்;, அதில் சில புரியாத அல்லது தென்படாத விஷயங்கள் இருக்கலாம். உண்மையில் அந்தக் குறைகளுடன் தான்  நாம் எதையும் அறிந்து கொள்கிறோம்; ஏனெனில் அதே யதார்த்தத்தில் தான் அதுவும் பொதிந்திருக்கிறது. ஒன்றைச் சொல்லும் ஒரு கருத்தும் அது உருப்பெற்ற இடமும் கீல்களால் இணைக்கப்பட்டுள்ளன. அது பிரதிநிதித்துவத்தின் ஒரு தனித்த இயல்பு.


அதனால், அதை மீபொருண்மைப் பிளவு என்றோ, விளக்க இடைவெளி என்றோ சொல்வது சரியில்லை. எனவே தன்னுணர்வு கடின சிக்கல்கள் என்று எதுவும் இல்லை. இந்த அகிலத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகள் எந்த இயல்பைக் கொண்டு நடக்கின்றதோ அதைப்போலவே தான் நமது மன வாழ்க்கையும் அமைந்துள்ளது. ஆர்வமூட்டும் கேள்வி என்பது ‘கடினச்சிக்கல்’ என்று ஊகிப்பதில் இல்லை. மாறாக, சிறப்பு இயல்பு உடையது என்று ஆன்மாவைக் கருதாமல் அல்லது அது இயற்கையிலிருந்து மாறுபட்டது என்று நினைக்காமல் நமது மூளையும் மனமும் எப்படி செயல்படுகின்றன என்பதை தீவிரமாக அறிய முற்படும் செயல்களில் ஆர்வம் செலுத்த வேண்டும்.


நமக்கு ஆன்மா இருக்கிறது ;அக நிலை இருக்கிறது. காண்ட் சொன்னபடி நம்மை எல்லை கடக்கும் உயிரியாகக் கூட நினைத்துக் கொள்ளலாம். நமக்கு உணர்ச்சிகள் இருக்கின்றன ;ஆன்மீக வாழ்க்கை இருக்கிறது; உணர்வு நிலைகள் இருக்கின்றன; இந்தப் பொருள்கள், ஒரு பௌதீக நிலையுடன் சேர்ப்பதன் மூலம் பெறப்படுவதில்லை, மாறாக ஒரு முழுமையான பௌதீக விவரத்திலிருந்து கழிப்பதன் மூலமே பெறப்படுகின்றன. மன செயல்முறைகள் என்பவை, அவற்றின் முக்கியப் பண்புகளை மட்டும் வெளிப்படுத்தும் விதத்தில் விவரிக்கப்படும் பௌதீக செயல்முறைகளே ஆகும்.
மனச்செயல்பாடுகள், பௌதீக செயல்பாடுகள் தான்; அதன் முக்கியமான நலன்களை விவரிப்பதற்கென்று புது மொழி தேவைப்படலாம்.

எனவே , இந்த ‘தீங்கான இருமையை’ கொண்டு வந்த விவாதத்தை தொடர்வதை கைவிட்டுவிட்டு நாம் உண்மையை அறிந்து கொள்ள வேண்டும். நமது அடிப்படை இயற்பியல் பண்புகள் தான் நமது ஆத்மா அல்லது ஆன்மீக வாழ்க்கை இவற்றிற்கும் பொருந்தக்கூடியது.

ஒரு மேஜையை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம். அதைப் பற்றி நாம் எவ்விதம் பேசுவோம்? மிக எளிதாக, மிக சாதாரணமாகத் தானே? நமக்கு நன்றாகத் தெரியும் ;அதிலும் அணுக்கள் இருக்கிறது என்று. அதைப்போலவே நமது ஆத்மாவையும், உணர்ச்சிகளையும், நாம் கையாள முடியும். இதன் பொருட்டு நமது  சில முன் தீர்மானங்களை விட்டு விட வேண்டும். ஆமாம் இந்தக் காரணம் ஏன் ஏற்கத் தகுந்தது? ‘அறிவியலால் அனைத்தையும் விளக்க முடியும் என்பதாலா?’ இல்லையே அது அனைத்தையும் விளக்குவதில்லை! அல்லது ‘இயற்பியலால் அனைத்தையும் விளக்க முடியும் என்று சொல்லுவதாலா?’ இல்லையே அது அப்படி செய்யவில்லையே.! 

பல நூற்றாண்டுகளாக, வியக்கத் தகுந்த, எதிர்பாராத வெற்றி அடைந்த அறிவியல் காட்டும் திசை ஒன்று உண்டு. அது நாம் அனுமானிக்கும் ‘மீபொருண்மை இடைவெளி’ என்பது இல்லை என்பதே.
உலகம், சொர்க்கத்திலிருந்து எந்த மீ பொருண்மையாலும் மாறுபடவில்லை; வாழும் உயிரிகள் மற்ற விலங்கினங்களிலிருந்தோ உயிரற்றவைகளிலிருந்தோ மீபொருண்மையின்படி மாறுபடவில்லை நம்முடைய ஆன்மா, நம்முடைய உடலைப் போன்றதே. நாம் அனைவரும் இயற்கையின் அங்கங்கள். இந்த உலகத்தில் காணப்படும் அனைத்து இனியவைகள் போல நம் உடலும் மனமும் மூளையும் இயற்கையின் பகுதியே.

கார்லோ ரொவெல்லியின் இந்தக் கருத்தை இவ்வாறு தொகுத்துக் கொள்ளலாம்.

இந்தியா

நமது அத்வைதம் இரண்டற்ற ஒன்றைப் பற்றி தான் சொல்கிறது. அது, இருமையை தோற்ற மயக்கம் என்று சொல்வதில், கார்லோவின் கருத்து அதனுடன் ஒத்துப் போகிறது. ஆனால், உருவம், அரு உருவம், அருவம் என்று சொல்வதைப் பற்றி கார்லோ விளக்கவில்லை. (அறிந்திருக்கவில்லை என்று சொன்னால், திரு.சங்கரன் ரவிச்சந்திரனுக்கு வருத்தமாக இருக்கலாம்!) அவரைப் பொறுத்தவரை, ஆன்மா/ மனம்/ மூளை அனைத்தும் உடலைப் போன்றதே. அனைத்தும் பௌதீகமான இயல்பு உடையவை. நாம் ஒரு அட்டவணையைப் பார்ப்போமா?

பெயர்அத்வைதம்/ சித்த  தத்துவம்கார்லோவின்தொடர்புறுத்தும் கோட்பாடுஇடைவெளி
தூய தன்னுணர்வு (சித்)விழிப்புணர்வின் இருப்பிடம், சாட்சி பூதம். பொருள் வடிவில்லில்லைபௌதீக  தொடர்பாடல்களால் விழிப்புணர்வு உண்டாகிறது விழிப்புணர்வு ஒரு உப பொருள் என்பது ரொவெல்லியின் கருத்து
தகராகாசம்நுட்பமான ஒரு புலம். இதில் மனமும், ஆன்மனும் தொடர்ந்து இயங்குகின்றனஉண்மை என்பது தொடர்பாடல்களின் வலைப்பின்னல்ரொவெல்லியின் தொடர் புலம், ஒரு வகையில் நுட்பமான புலத்தைச் சுட்டினாலும், அது பௌதீகம் சார்ந்தது.
மனம்நினைவுகள், கற்பனைகள்திட்டங்கள், நுட்பமான ஆன்மப் பிணைப்புமனம் என்பது மூளையின் செயற்பாடுகள்ரொவெல்லி, மனதையும், பொருளையும் ஒன்றாக இணைக்கிறார். மனதிற்கு இருக்கும் சிறிய தன்னாட்சியை மறுத்துவிடுகிறார்
மூளைபௌதீக அடித்தளம்நரம்புகளின் செயல்களால் அனைத்தும் அமைகிறதுமூளை ஒரு கருவி என்று இருவரும் ஏற்கின்றனர். ஆனால், மூளையை மனித சாரமென்று அத்வைதம் ஏற்கவில்லை
வெளிப்படும் நடத்தைபேச்சு, எதிர்வினைகள், வெளியில் வெளிப்பாடுகள்பார்க்கக் கூடிய, கவனிக்கும் பௌதீக தொடர்புகள் வெளிப்படும் தன்மையை இருவரும் ஏற்றுக் கொள்கிறார்கள். அத்வைதம், அதை அழமான தளத்தின் வெளிப்பாட்டுக் குமிழிகள் என்று சொல்கிறது.

திருமூலர் சொல்கிறார்: ‘உடம்பே கோயில்;  மனமது செம்மையாக, ஆன்மாவே தீபமாகிறது.’  நாம், மனதையும், ஆன்மாவையும் ஒன்றெனக் கொள்வதில்லை. உடல், மனம், ஆன்மா என்று சொல்லும் திருமூலர், ‘உடம்பார் அழியின், உயிரார் அழிவர்’ என்று உடலைப் பேணுவது சிறப்பு என்று வலியுறுத்துகிறார். மனதைக் கட்டுப்படுத்தி ஒழுக்கத்திற்கு கொண்டு வந்தால், உயிர்களை உண்மையாக நேசிக்க முடியும். அங்கே, தான், பிறர் என்ற வேறுபாடு அழிகிறது. தனது 539 பாடலில், அவர் சொல்கிறார்:

“நாபிக்குக் கீழே பன்னிரண்டு அங்குலத்தில்  

தாபிக்கு மந்திரந் தன்னை அறிகிலர்  ஊபிக்கு மந்திரந் தன்னை உணர்ந்திலர் ஆபிக்கு மந்திரந் தன்னை அறிந்திலரே”

குண்டலினி சக்தியை மூலாதாரத்தில் எழுப்பி ஆறு சக்கரங்களிலும், அதன் சக்தியை மேல் நோக்கி கொண்டு செல்வோரின் மனம் செம்மையாக, பேரன்பு பெருக, அவர்களின் ஜீவன், சிவனென ஆகும் என்பது அவர் வாக்கு. ‘அன்பே சிவம்’  

ஒளவை மூதாட்டியும், ஆத்திச்சூடியில் ‘உடம்பிற்கு உபசாரம் செய்’ என்று சொல்கிறார். அவரே கொன்றை வேந்தனில் ‘அன்புடையார் எல்லாம் உடையார்’ என்றும், ‘சொற்பதம் கடந்த துரிய மெய்ஞான, அற்புதம் நின்ற கற்பகக் களிறே’ என்று வினாயகர் அகவலில் உடல், மனம், தூய ஆன்மா என்று விரிவு படுத்திக் காட்டுகிறார்.

கண்களுக்குத் தெரிந்தவற்றை, கருவிகளின் மூலம் பார்ப்பனவற்றை, வரைபடம் மூலம் தெளிபவை பற்றி ரொவெல்லி சொல்கிறார். பார்வைக்குப் புலனாகாவற்றை அத்வைதமும், சைவமும் சொல்கின்றன. அறிவியல் தன் முயற்சியில் தேங்குவதில்லை; அதைப் போலவே மெய்யியலும் நவ நவமாகப் புலப்பட்டு வருகிறது.

பானுமதி ந

உசாவிகள்:

Exit mobile version