Site icon சொல்வனம் | இதழ் 367 | 24 மே 2026

கனவின் சிறை, கதையின் ஊர்தி

காண்டீபம் நாவல் – விமர்சனம்

வேதங்களில் தெய்வங்கள் மனிதச் செயல்களிலிருந்து எழுகின்றன. நல்ல செயல்கள் கவனத்துடன், துல்லியத்துடன், சுயநலமின்றி, பரஸ்பர எதிர்பார்ப்பு இன்றி அர்ப்பணிப்பாகச் செய்யப்படும்போது அவை வேள்விகளாக மாறுகின்றன. அந்த வேள்விகளிலிருந்து தெய்வங்கள் பிறக்கின்றன. அந்த அர்ப்பணிப்புகளால் ஊட்டம் பெற்று தெய்வங்கள் வலிமை பெறுகின்றனர்.  வலிமையினால் விண்ணகத்தில் தங்களுக்கான இடத்தை அடைகின்றனர். ஆனால் இது நிலையான ஒன்று அல்ல. பூமியில் வேள்வித்  தீ அணைந்துவிட்டால், தெய்வங்கள் வாடத் தொடங்குகின்றனர். நீர் இழந்த தாவரங்களைப் போல் உலர்ந்து இருண்டு மறைந்து விடுகின்றனர். இந்தப் புரிதலில் தெய்வம் என்பது செயல்களுக்கு முன்பிருந்த ஒன்றல்ல. அது ஒரு விளைவு. அதை உருவாக்கிய செயல் தொடர்ந்து நடைபெற வேண்டும்; தொடர்ந்து அது புதுப்பிக்கப்பட வேண்டும்.

இந்தப் பார்வையைக் கருத்தில் கொள்கையில் ஜெயமோகன் முன் வைக்கும் தெய்வமான புராணிகையை நோக்கி வாசகன் கவனம் திரும்புகின்றது. கதைகளின் தெய்வமாகிய புராணிகை செவி மட்டுமே ஆனவள், மொழியற்றவள்,ஒலியற்றவள். கதைகளுக்கு முன்பும் பின்பும் மட்டுமே அவள் இருப்பை உணர முடியும் அவள் சொற்களுக்கிடையிலான மௌன இடைவெளிகளில் மட்டுமே இருக்கிறாள். நீளமான சுவாசங்கள், வெளிவராத கண்ணீர், இலக்கணத்தில் உதிர்ந்து விடும் அர்த்தங்கள் போன்றவையே அவளுடைய வடிவங்கள்; அவ்வடிவங்கள் கேட்பதிலேயே எழுகின்றன. கதை முடிந்தபின்,இவ்வடிவங்கள் வெறுமனே மறைந்து விடுவதில்லை; அவை சேர்ந்து பெருகி, ஆயிரம் கைகளுடன் பெரும் உரு கொண்ட ஒற்றை வடிவமாக எழுகின்றாள். ஜெயமோகன் புராணிகையை, நாவலின் மையத்தில் வைக்கின்றார். . 

காண்டீபம் ஆறு பகுதிகளாக அமைந்துள்ளது: கனவு திரை, அலை உலகு, முதல் நடம், ஐந்து முகத்தழல், தேரோட்டி, மாநகர். கனவு திரை கௌரவ இளவரசன் சுஜயனில் துவங்குகின்றது. இளவரசன் உலகை அணுகும் முறை கண்டு வைத்தியர்களும், அரண்மனை ஜோதிடர்களும் குழம்புகின்றனர். அவன் நாடி சரியாக இருக்கிறது; ஆனால் அவன் மனம் சீர்க் கொள்ளாத எண்ணங்களின் அடர்த்தியால் நிரம்பி, அவன் உடல் வெளிப்படையாக மெலிகின்றது. அரண்மனையில் அவன் வளர்ப்புத்தாயெனப் பணியாற்றும் பெண்கள் அவனைப் பற்றி “கனவுகளைச் சேகரித்து அணைத்துக்கொள்கிறான்” என்கிறார்கள். ஜோதிடர், தனது தொழிலுக்கே உரிய துல்லியத்துடன், ‘உள்ளுலகம் நிரம்பியுள்ளது; வெளியுலகம் இன்னும் நுழையவில்லை எனச் சொல்கின்றார். அவர் கூறும் தீர்வு எளிதானது. “வெளியே செல்; காற்றும் வெளிச்சமும் உன்னைத் தொடட்டும்; இல்லையெனில் அரண்மனையே உன் மனத்தின் சிறையாக மாறிவிடும்”.  இதுவே நாவலின் மையமென அமைந்துள்ளது. கனவுகளின் சிறையில் இருந்து விடுபட்டு கனவுகளை ஊர்தியாக்கி ஏறி செல்வதை நோக்கி நாவல் நகருகின்றது. அகத்தினை விடுதலை செய்யப் புறச்சூழல் மாறுவதில் முதலடி வைக்கச் சொல்கின்றது.

சுஜயனின் மனம் இலக்கின்றி அலைகிறது; அவன் கனவுகள் தொடர்ந்து அவன் பார்வையைச் சிதறடித்துக் கொண்டே இருக்கின்றன; புராணிகை அவனது சிதறும் பார்வையின் எல்லைக்கு அப்பாற்பட்டே இருக்கிறாள். இதைப் புரிந்து கொண்ட செவிலித்தாய் மாலினி தேவி அவனுக்குத் தகவல்களாகப் புரிதலைப் புகட்டுவதில்லை; அவன் சொந்தப் பார்வைக்கான பாதையை வழியே  புரிதலை அளிக்கிறாள். அவள் இந்தக் குழந்தை மீது உள்ள நேசத்தினாலும், விஜயபிரதாபம் என்னும் நூலின் வழியாகவும், கேட்பவரை உள்ளிழுக்கக் கூடிய கதைசொல்லும் திறமையினாலும், அவனைக் கங்கைக் கரைக்கு அழைத்துச் சென்று வில்லவன் ஒருவனின் பயணங்களைப் பற்றிச் சொல்லத் தொடங்குகிறாள். முதல் சொல் எழும்பும் போது, புராணிகை நுழைகிறாள்; அந்தச் சிறுவன் அவளைப் பார்க்கத் தொடங்குகிறான். இந்த அமைப்பு இந்திய மரபுச் சார்ந்தது. உதாரணத்துக்கு மகாபாரதம் ஜனமேஜயனுக்குச் சொல்லப்பட்ட விதம் போலச் சொல்லப்படுகின்றது.  புராணங்கள் சொல்லப்படத் தருணங்கள் அமைய வேண்டும். அதை முகூர்த்தமெனக் கூடச் சொல்லலாம். மனத்தில் கேள்விகளைச் சுமந்து, பதில்களைத் தேடுபவர்களுக்கு, அவர்களின் கேள்விகளுக்குத் தக்க, கதைசொல்லிகளால் சொல்லப்படுகின்றது, அவற்றின் நோக்கம் தகவல் களஞ்சியமாவது அல்ல, மாறாகக்  கேட்பவர் உள்ளே வைத்திருக்கிற அக ஆற்றலை வடிவமைத்து, அதனை அவர் காணச் செய்வதே ஆகும்.

காண்டீபத்தின் மாலினி தேவி மற்றும் சுபகையின் உரையாடல்களில் முரண் ஒன்று உள்ளது. நாவல் முழுக்க கதைகள் சொல்லப்படுவதும், சில நேரங்களில் கேள்விக்குள்ளாக்கப்படுவதும் இந்த இரு பெண்களின் குரல்களில் தான் எனலாம். சந்தேகத்துடன் பேசும் சுபகை மகாபாரதம் கூறும் நகரங்களின் ஆண்டுகளைச் சேர்த்தால், அர்ஜுனன் நூறு வயதாக இருக்க வேண்டும் என்று ஓர் இடத்தில் சொல்வாள். மாலினி சிரிப்பினை அதற்குப் பதிலாக வைப்பாள். புராணத்தில் இடைவெளிகள் இருந்தே ஆக வேண்டும்; அதன் உண்மை தேதி என நகரும் நாட்களில் இல்லை என்று அவள் சொல்கிறாள். இந்த உரையாடல் வாசகனுக்கு ஒருவகை சுதந்திரத்தை அளிக்கிறது: நம்பாமலும், அதே நேரம் மறுக்காமலும் கதைகளை அனுபவிக்கலாம்; அவை நடந்ததா இல்லையா என்பதை நிரூபிக்க வேண்டிய அவசியமின்றி அவற்றுடன் உட்காரலாம். இதனால் நாவல் மேலும் வலுப்பெறுகிறது. உதாரணத்துக்கு இதனால் நாவலில் கீழுலகை ஒரு இடத்தில் உள் உளவியலாகவும், மற்றொரு இடத்தில் உண்மையான சாகச உலகாகவும் பயன்படுத்த முடிகிறது.

அர்ஜுனனின் பல பெயர்கள்: அர்ஜுனன், விஜயன், பால்குனி, கிரீடி, சவ்யசாசி, இவை பொதுவாகப் பிறப்பிலேயே இருந்த குணங்களாக விளக்கப்படுகின்றன. காண்டீபம் அதை மறுக்கிறது. ஒவ்வொரு பெயரும் ஒவ்வொரு உலகில், ஒவ்வொரு சந்திப்பில், வேறு எங்கும் நிகழ முடியாத  மாற்றமொன்றின் மூலம் ஈட்டப்படுகின்றது. இதன் முக்கியத்துவம் என்னவெனில்: “நீ யார்” என்பது பிறப்பிலேயே நிர்ணயிக்கப்பட்டது அல்ல; காலத்தின் வழியாகக் கட்டப்படுவது. முழுமை எனத் திகழ்வது ஒரிலக்கா, அல்லது  பயணமொன்றின் திசையா என்று நாவல் கேட்கிறது. அர்ஜுனன் ஒருபோதும் முடிவடைவதில்லை; அவர் எப்போதும் உருவாகிக் கொண்டிருப்பவன்.

ஒவ்வொரு உலகிலும் வரும் பெண்கள் காதல் நாயகிகள் அல்ல. அவர்கள் அளவுகோல்கள். ஒவ்வொருவரும் அர்ஜுனனை அவன் இன்னும் காணப்படாத விதத்தில் காண்கிறார்கள்; அந்தக் காண்டல் அவனுள் இதுவரை இல்லாத ஒன்றை வெளிக்கொணர்கிறது. அவர்களால் நேசிக்கப்படுவது முழுமையாகக் காணப்படுவதின் பரிசு. மற்றொருவரால் உண்மையாகக் காணப்படுவது தானே ஒரு மாற்றம் என்பதை நாவல் புரிந்துகொண்டு காட்டுகிறது. காண்பவன் காணப்படுபவனை மாற்றுகிறான்.

ஒவ்வொரு பெண்ணும் தன் தனித்துப் பார்வையுடன் வருகிறாள்; அந்தப் பார்வை என்னென்ன சாத்தியங்களை உருவாக்குகிறது என்பதில்தான் நாவல் அக்கறை கொள்கிறது. உலூபி தன் உலகின் எல்லைகளுக்கு பயப்படாதவள். அவள் அர்ஜுனனுக்குக் கொடுப்பது ஆறுதல் அல்ல; பயத்துக்குள் நேராகச் சென்று அதை கடக்கும் வழி. அதில் அர்ஜுனன் அவளை தனக்கு நிகரென சந்திக்கிறான். அடுத்து மணிபூருக்குள் அர்ஜுனன் பல்குனியாகவே நுழைகிறான்; புறத்தோற்றத்தில் மட்டுமல்ல, மனநிலையிலும் முழுப்பெண்ணாக இருக்கின்றான். மணிப்பூரை சித்ராங்கதை என்னும் இளவரசி  ஆணாக உருவும், மனவும் கொண்டு சித்ராங்கதன் என பெயர் சூடி ஆள்கின்றாள்; அப் பெயரில் முழு ஆணாக நிற்கின்றாள்; அதற்கு வரும் சவால்கள் எல்லாவற்றையும் ஒரு ஆணாகச் சந்திக்கின்றான்; சித்ராங்கதன் ஒருபோதும் தன் கவசத்தைக் கழற்றவில்லை. ஆனால் பல்குனியைச் சந்தித்த தருணம் சித்ராங்கதனிலிருந்து சித்திராங்கதையை வெளிக்கொணர்கிறது: காயம், ஏரி, கொக்கு , சிறுவயது மூழ்கிய நினைவு, முதல் மழலைச் சொல். அந்த வெளிப்பாடு பலகுனியிலிருந்து பல்குனனை உருவாக்குகிறது. ஒருவரின் உருவாக்கம் மற்றொருவரின் உருவாக்கத்தைச் சாத்தியமாக்குகிறது. இருவரும் ஒன்றாகவே நிகழ்கின்றனர். “இவ்வளவு கசப்பானது எப்படி இனிமையாக இருக்க முடியும்?” என்று சித்ராங்கதன் கேட்க, பல்குனி ஒரு சொல் சொல்கிறான்: “பசி”. கடைசி வரியில் இருவரின் பெயர்களும் மாறிவிட்டன. இதை யாரும் ஏற்படுத்தவில்லை; ஒருவருக்கொருவர் நிபந்தனையாக இருந்தார்கள்.

சுபத்ரா ஆண்டுகளாக அர்ஜுனனின் உருவமொன்றை மனதில் வைத்திருக்கிறாள்; அது கதைகளால் கட்டப்பட்டது. உண்மையான மனிதன் அந்த உருவத்துடன் ஒத்துப் போகவில்லை. ஆனால் அவள் இரண்டையும் விட்டுவிடவில்லை. அந்த இடைவெளியில்தான் அவளுடைய காதல் வாழ்கிறது. இவர்கள் துணை கதாபாத்திரங்கள் அல்ல; அவர்கள் தங்களுக்கான காரணங்களால் இந்தக் கதையில் வந்தவர்கள்; அர்ஜுனனுடன் நடந்த சந்திப்புகள் இருபுறத்தையும் மாற்றுகின்றன.

இந்தக் கதைகள் சுஜயனை அடைகின்றன.  தன் கனவுகளில் மூழ்கிய ஒரு சிறுவனை அவை சந்திக்கின்றன. நாவலின் இறுதிப் பகுதியில் அர்ஜுனனைச் சந்திக்கும் போது, “நான் அரிஷ்டநேமி ஆக விரும்புகிறேன்; போர்வீரன் அல்ல” என்று சொல்கிறான். ஆனால் கதை அவனைப் போர்க்களத்தில் நிறுத்துகிறது. அவன் விரும்பியதால் அர்ஜுனனாகவில்லை; அவன் கேட்டதால் அர்ஜுனனானான். புராணிகையை அறிந்தவர்கள் இலையன்றி மலர் கொண்ட மரம் போன்றவர்கள். அவளோ இங்குள ஒவ்வொன்றையும் குளிர்நீரெனத் தொட்டு ஏழுமுறை பெருக்குபவள் அவள். பொங்கும் பேரருவி என தான் தொட்ட அனைத்தையும் நுரை பெருகி எழுந்து நிறையச்செய்பவள். தளிரொடு மலர் கருக்கி பெருகிச்சூழும் காட்டுத்தீ போன்று பெருஞ்சினம் கொண்டவள். குளிர்ந்து பொழிந்து மூடும் பெருமழை அவள் என நாவல் சொல்கின்றது.

போர்க்களத்தில் சுஜயன் நிற்கிறான். அம்பொன்று அவனை அடைகிறது. அது அர்ஜுனனுடையது என்று அவன் அறிகிறான். வாசிப்பவன் மனம் எழுப்பும் கேள்வி இதுதான்: அது விஜயப்ராதாபமே என்று அவன் அறிந்தானா? அதன் பின் வரும் சுஜயனின் புன்னகை சொல்வதென்ன? அது அவன் அறிதலாக இருக்கலாம். அது அவன் அடைந்த நிறைவாக இருக்கலாம். அல்லது சொற்கள் முடியும் இடத்தில் தொடங்கும் ஒன்றாக இருக்கலாம் , அங்கேயெல்லவா புராணிகை வாழ்கிறாள்.

இன்று இந்தியா முழுக்க இதிகாசங்களையும் தொன்மங்களையும் மையமாக வைத்த நாவல்கள் எழுதப்படுகின்றன. பெரும்பாலானவை புராணத்தை மறுவாசிப்பு செய்வதிலோ, நவீன கண்ணோட்டத்தில் விளக்குவதிலோ நிறுத்திக் கொள்கின்றன. காண்டீபம் அதிலிருந்து வேறுபடுகிறது. இந்நாவல்  நவீன நாவலின் அடிப்படைக் கவலையை உள்ளே வைத்திருக்கிறது: இலட்சிய உருவகத்துக்கும், நிஜத்திற்கும் இடையிலான இடைவெளியை நோக்கிய கேள்வியானது நாவல் முழுதும் உள்ளது. 

அர்ஜுனனின் சாகசங்கள் நடந்தனவா என்று கேள்வி எழுப்பி, அந்தக் கேள்வியையே விஜயப்ரதாபம் என்னும் கட்டமைப்பினுள் வைத்து நம்பகத்தன்மையோடு ஏற்கும் வழியை உருவாக்குகிறது. ஒரு திசையில் விஜயப்ரதாபம் கதையோட்டத்தில் பாய்கிறது; மறுதிசையில் சுஜயனின் வாழ்வு ஒரு வளர்ந்து வரும் சிறுவனின் மனவெழுச்சிகளை உளவியல் துல்லியத்துடன் பதிவு செய்கிறது. இந்த இரட்டை நூலிழையே காண்டீபத்தின் தனித்தன்மை. விஜயப்ரதாபத்தின் வரிகளில்  வாசகன் மூழ்கும்போது, சுஜயனின் நூலிழை கவனத்திலிருந்து நழுவுவது நாவலின் வடிவம் வேண்டுமென்றே உருவாக்கும் அனுபவம். இது குறையாகக் கூட தோன்ற வாய்ப்புண்டு. 

கதை எழுப்பிய புராணிகை என்னும் தெய்வம் நாவலுடன் முடிவடைவதில்லை. வாசகரின் உணர்வில் அவள் உருவம் எடுக்கிறாள். முதல் சொல்லுக்கு முன்பும் கடைசி சொல்லுக்குப் பிறகும், அவள் பக்கங்களில் இல்லை; முழு கவனத்துடன் கதையை ஏற்றுக்கொண்டவரில் இருக்கிறாள் எனவும் எடுத்துக் கொள்ளலாம்.

Exit mobile version