Did you ever try to measure a smell? Can you tell whether one smell is just twice as strong as another. Can you measure the difference between one kind of smell and another. It is very obvious that we have very many different kinds of smells, all the way from the odor of violets and roses up to asafetida. But until you can measure their likenesses and differences you can have no science of odor. If you are ambitions to found a new science, measure a smell.
–Alexander Graham Bell
அதிகாலை நேரத்தின் ஒளிச்சாயலில் நீர் நிலையை நோக்கிய சிறு நடைபயணம். ஐம்புலன்களின் செயற்பாட்டைப் புரிந்துகொள்ள இயற்கை ஆய்வகமாக மாறுகிறது. நீல வானத்தில் சிதறிக் கிடக்கும் வெண்மேகங்கள், ஒழுங்கற்றதாகத் தோன்றினாலும், பார்வை அமைப்பு வடிவ அடையாளம் காணும் திறனைத் தூண்டுகிறது. வசந்தகாலம் என்பதால் தாவரங்களில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள் காட்சியை வண்ணத்தில் விரிவு படுத்துகிறது. இளம் இலைகளில் விளையும் கிளோரோஃபில் செறிவு, கரோட்டினாய்டு,ஆன்தோசையனின் போன்ற மூலக்கூறுகளால் மலர்களில் வெளிப்படும் நிற பேதங்கள், கண்ணும் மூளையும் இணைந்து உருவாக்கிய நிற உணர்வை நினைவூட்டுகின்றன. காற்றில் ஒலிக்கும் பறவைகளின் குரல்கள் ஒவ்வொன்றும் தனித்த அதிர்வெண் மற்றும் தாள அமைப்பைக் கொண்டிருந்ததால், அவனின் செவியியல் அமைப்பு அவற்றைக் குறியீடு செய்து இனிமையான ராகத்தை உருவாக்குகிறது.
பார்வை, கேள்வி என்ற இந்த இரண்டு உணர்வுகளும் தான், பெரும்பாலும் நமது தகவல் பரிமாற்றத்தை நிர்வகிக்கின்றன. ஆனால், இவற்றின் பின்னணியில் அமைதியாக செயல்படும் மூன்றாவது உணர்வை நாம் மறந்துவிட்டோமா?
குளத்தின் கரையிலுள்ள கல்லின் மீது கண்களை மூடிக்கொண்டு த்யானத்தில் அமரும் போது, வெளிப்புற காட்சி, ஒலி உள்ளீடுகள் குறைவதை அறிய முடிகிறது. அந்த அமைதியில், காற்றின் வழியாக வரும் இரசாயன மூலக்கூறுகள் மூக்கின் நுகர்வு ஏற்பிகளைத் தூண்டுவதை உணரமுடிகிறது. மரங்களிலிருந்து வெளியேறும் ஆவியாகும் கரிம சேர்மங்கள், ஈரமான மண்ணின் ஜியோஸ்மின், மலர்களின் எஸ்டர்கள் மற்றும் டெர்பீன்கள் போன்ற அனைத்தும் சேர்ந்து பரந்த மணப் பரப்பை உருவாக்குகிறது. இந்த மணங்கள் மூளையின் நுகர்வுக்குமிழ் வழியாக நிணநீர் மண்டலத்தை நேரடியாகத் தொட்டு, நினைவுகளையும் உணர்ச்சிகளையும் உடனடியாகத் தூண்டுகிறது. மார்செல் புரூஸ்ட் இதை நினைவுத் தூண்டல் நிகழ்வின் (Proust effect) நரம்பியல் அடித்தளம் என்று குறிப்பிடுகிறார்.
https://humans.sciencearray.com/smell-memory-neuroscience-proust-effect
மணம் பரிணாம வளர்ச்சியின் கருவி
மனிதனின் ஐந்து உணர்வுகளில், மணம் (வாசனை) மிகவும் நேரடியாக வேதியியல் தன்மையுடன் தொடர்புடையது. பார்வை அல்லது கேள்வி போன்றவை இடைமுகச் சைகைகளை சார்ந்திருக்கின்றன; ஆனால் மணம் நேரடியாக ஆவியாகும் மூலக்கூறுகளை நுகர்கிறது.
ஆரம்பகால மனிதர்கள் உணவைத் தேர்ந்தெடுக்கும் போது, மணத்தை முதன்மையாகப் பயன்படுத்தினர். அழுகிய உணவுகளில் உருவாகும் பியூட்ரசின் (putrescine), கடவரின் (cadaverine) போன்ற அமீன்கள் துர்நாற்றத்தை உருவாக்குகின்றன. இவ்வாறான வாசனைகளைத் தவிர்க்கும் திறன், நச்சுத்தன்மையிலிருந்து பாதுகாப்பு வழங்கியது.
அதேபோல், தண்ணீரின் தரத்தையும் வாசனையின் மூலம் மதிப்பீடு செய்தனர். இயற்கைத் தேர்வு இந்த திறனை வலுப்படுத்தியது. இதனால், மண உணர்வை வேதியியல் கண்காணிப்பு அமைப்பாகவும் கருதலாம்.
இந்த வரலாற்றில் கந்தகம் (sulphur) முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. எரிமலைப் பகுதிகளில் இயற்கையாக உருவாகும் மூலதாதுவான கந்தகம் மஞ்சள் நிற துகள்களாக காணப்படுகிறது. கிரேக்க, ரோம நாகரிகங்களில் இருந்தே கந்தகத்தின் தனித்துவமான மணம் பதிவு செய்யப்பட்டுள்ளது. கற்களை ஒன்றோடொன்று உரைக்கும் போது மேற்பரப்புகளில் சிறிய அளவில் வெளிப்படும் கந்தக ஆக்சைடுகள் அல்லது குறைந்த ஆக்சிடேஷன் நிலை கொண்ட சேர்மங்கள் உருவாகி துர்நாற்றம் உண்டாகிறது. இவ்வாறு மணத்தை அடிப்படையாகக் கொண்டு பொருள்களை அடையாளம் காணுதல், ஆரம்பகால பொருள் அறிவியல் அணுகுமுறையாகும்.
இந்தியாவில், கந்தகம் ஆயுர்வேதத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. சரக சம்ஹிதா (Charak Samhita), பின்னர் உருவான ரசசாஸ்திர நூல்கள் போன்றவை கந்தகத்தின் சுத்திகரிப்பு, மருந்தாக்கும் முறைகள் பற்றி விவரிக்கின்றன. கந்தகம் சார்ந்த மருந்துகள் தோல் நோய்கள், கிருமி ஆகிய தொற்றுகளுக்குப் பயன்படுத்தப்பட்டன. நவீன வேதியியல் பார்வையில், கந்தகம் ஆக்சிஜனேற்ற – ஒடுக்க வினைகளில் (redox reactions) ஈடுபட்டு, உயிரியல் செயல்பாடு கொண்ட கரிம-கந்தக சேர்மங்களை உருவாக்குகிறது; இவை நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டவை. இங்கே மணம் தரக் குறியீடாக செயல்பட்டு பொருளின் தூய்மை மற்றும் செயல்திறனை உணர்த்தும் உணர்வியல் அளவுகோலாக விளங்குகிறது.
கந்தகத்தின் மணம் சிதைவுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. உயிரியல் பொருட்கள் சிதைவடையும் போது, சிஸ்டீன் (cestine) மற்றும் மெத்தியோனின் (methionine) போன்ற கந்தகம் கொண்ட அமினோ அமிலங்கள் நுண்ணுயிர்களால் உடைக்கப்பட்டு ஹைட்ரஜன் சல்பைடு (H2S) போன்ற வாயுக்கள் உருவாகின்றன. அழுகிய முட்டை நாற்றம் என்று அப்போது அறியப்படாத இந்த வாயு மிகக் குறைந்த அளவிலேயே (parts per billion) உணரக்கூடியது. இது செல்களின் சுவாச செயற்பாட்டை பாதிக்கும் நச்சுத்தன்மை உடையது. பழங்கால மனிதர்கள் இந்த வேதியியல் செயல்முறைகளை அறியாவிட்டாலும், இத்தகைய நாற்றங்களை ஆபத்துடன் இணைத்து உணர்ந்தனர்.
நவீன தொழில்நுட்பம் இந்த இயற்கை உணர்வை திட்டமிட்ட முறையில் பயன்படுத்துகிறது. இயற்கை எரிவாயு இயல்பாக வாசனையற்றதால், கசிவு ஏற்பட்டால் அதை கண்டறிவது மிகவும் கடினம். இதைத் தீர்க்க, tert-butyl mercaptan அல்லது tetrahydrothiophene போன்ற தயால் (thiol or -SH) குழுக்களைக் கொண்ட சேர்மங்கள் மிகச் சிறிய அளவில் சேர்க்கப்படுகின்றன. இவை மனித மூக்கின் ஏற்பிகளுடன் வலுவாகச் சேர்ந்து மிகுந்த துர்நாற்றத்தை உண்டாக்குகின்றன. கடுமணமூட்டல் (odorizarion) எனப்படும் செயல்முறை மறைந்துள்ள அபாயத்தை மனித உணர்விற்கு மாற்றும் வேதியியல் வடிவமைப்பாகும்.
எரிமலை கந்தகத்திலிருந்து ஆயுர்வேத மருந்துகள், அங்கிருந்து நவீன எரிவாயு குழாய்கள் வரை, மணம் மனிதனுக்கும் வேதியியல் உலகத்திற்கும் இடையிலான பாலமாகவே இருந்துள்ளது. இது இன்று பொறியியல் முறையில் வடிவமைக்கப்பட்ட பாதுகாப்பு கருவியாக மாறியுள்ளது. பெரும்பாலும் மணத்தை நாம் புறக்கணித்தாலும், அது மூலக்கூறு அளவிலான தகவல்களை நேரடியாக உணர்த்தும் அறிவியல் வாயிலாக செயல்பட்டு வருகிறது.
மண உணர்வு, நுகர்வு ஏற்பி மரபணுக்களின் பல்வகைமைக்கு அடிப்படையாக உள்ளது. மனிதர்களில் சுமார் 400 செயல்படும் ஏற்பி வகைகள் உள்ளன. ஒவ்வொரு மண மூலக்கூறும் பல ஏற்பிகளைத் தூண்டி, கூட்டு குறியீடு (combinatorial coding) ஒன்றை உருவாக்குகிறது. இந்தச் சைகைகள் நுகர்வுக்குமிழ் வழியாக அமிக்டாலா மற்றும் ஹிப்போகாம்பஸ் பகுதிகளுக்கு செல்கின்றன. இதனால், மணம் நினைவுகளுக்கு இடையேயான தொடர்பு வலுவாகி உணர்ச்சி சார்ந்த நினைவுகளைத் தூண்டும் முக்கிய வழிமுறையாகிறது.
சங்க இலக்கிய பாடல்கள், பல இடங்களில் அழகியல் கூற்றுடன், தகவல் வடிவத்தையம் புனைந்து, காலநிலையையும், உணர்ச்சியையும், மனித வாழ்வியலையும் தந்து மண அறிவியலை வெளிப்படுத்துகிறது. உதாரணமாக, மலர்களின் மணம் மூலம் குறிஞ்சி மலைப்பகுதி, முல்லைக் காடுகளின் ஈர மணம், மழைக்காலம், நெய்தல் நிலத்தின் கடல் உப்பு மணம், மீன்பிடி வாழ்க்கை போன்றவை ஆகும்.
முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல்
கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக்
குவளை யுண்கண் குய்ப்புகை கமழத்
தான் றுழந் தட்ட தீம்புளிப் பாகர்
இனிதெனக் கணவ னுண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதன் முகனே.
-கூடலூர் கிழார்
நவீன நகர வாழ்க்கையில், மணம் பின்தங்கிய உணர்வாக மாறியுள்ளது. செயற்கை மணங்கள், காற்று கட்டுப்பாட்டு அமைப்புகள், இயற்கை மண அனுபவத்தை குறைக்கின்றன. சில ஆய்வுகள், நகர வாழ்வில் மண அடையாளம் காணும் திறன் குறைகிறது எனக் காட்டுகின்றன.
COVID-19 தொற்று, மண உணர்வின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியது. SARS-CoV-2 வைரஸ், நுகர்வு எபிதீலியத்தில் உள்ள நுகர்வுத்தாங்கு செல்களை பாதித்து, நுகர்வின்மையை (anosmia) ஏற்படுத்தியது. உணவு சுவை பின் மூக்கின் வழியே நுகர்வதன் மூலம் உருவாகுவதால், இந்த நிலை சுவை உணர்வையும் பாதித்தது. இது, மணம் உணவு அனுபவத்தின் மையமாகவும் இருப்பது தெளிவாகிறது.
கணினி-வழி வாசனை உணர்தல்
https://www.asimov.press/p/scent
மனித உணர்வுகளில் மணம் மிகவும் பழமையான ஒன்றாக இருப்பினும், அதிகமாகப் புரியப்படாததாக இருந்துள்ளது. பார்வை, கேள்வி போன்ற உணர்வுகள் எளிதில் அளவிடவும் மாதிரியாக்கவும் முடிந்தாலும், வாசனை அப்படி இல்லை. நறுமணம் நினைவுகளைத் திடீரென எழுப்பலாம், உணர்ச்சிகளை மாற்றலாம், உணவின் சுவையையும் ஆழமாகப் பாதிக்கலாம். ஆனால் இந்த நுண்ணுணர்வு, உயிரியல் ரீதியாக முக்கியமானதாயினும், அறிவியல் மொழியில் எளிதாக அறியப்படவில்லை. Scent, In Silico என்ற சமீபத்திய அசிமோவ் பிரஸ் கட்டுரை, இந்தச் சிக்கலான வாசனை உலகை கணினி, தரவு, செயற்கை நுண்ணறிவு, வேதியியல் வடிவமைப்பு போன்றவைகளின் வழியாக எவ்வாறு புரிந்துகொள்ளலாம் என்பதை விரிவாக விளக்குகிறது.
காற்றில் மிதந்து வரும் வாசனையை எப்படி அளவிட முடியும்? அது நமது மூக்கினுள் நுழைந்து, உணர்ச்சி ஏற்பிகளுடன் இணையும் மூலக்கூறுகளால் வாசனைகள் உருவாக்கப்படுகின்றன. பில்லியன் கணக்கான மூலக்கூறுகள் ஒரு வாசனையை உருவாக்கக்கூடும். எனவே எந்த மூலக்கூறுகள் அந்த வாசனையை உருவாக்குகின்றன என்பதைக் கண்டறிவதோ, பட்டியலிடுவதோ, கணிப்பதோ எளிதல்ல. உணர்ச்சி வரைபடங்கள் இந்தப் பிரச்சனையைத் தீர்க்க உதவுகின்றன.
வண்ணச் சக்கரம் முதல், காணொளித் தயாரிப்பில் வண்ணத் திருத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் மிகவும் மேம்பட்ட வகைகள் வரை, வண்ணப் பார்வை இந்த வரைபடங்களின் மிகவும் பரிச்சயமான எடுத்துக்காட்டுகளைக் கொண்டுள்ளது. இந்த வரைபடங்கள் பல நூற்றாண்டுகளாக இருந்து வந்தாலும், வாசனைக்கான பயனுள்ள வரைபடங்கள் இதுவரை இல்லை. ஏனெனில் ஃபோட்டான்களை விட வாசனை மூலக்கூறுகள் பல வழிகளில் வேறுபடுகின்றன. மேலும் தரவு சேகரிப்புக்கு, வாசனை உணர்பவருக்கும் வாசனைக்கும் இடையே உடல்ரீதியான அருகாமை தேவைப்படுகிறது. அதாவது நல்ல வாசனை கேமராக்கள், வாசனை மானிட்டர்கள் போன்றவைகள் இதுவரை இல்லை. மனிதக் கண்ணில் வண்ணத்திற்காக RedGreenBlue என்ற மூன்று உணர்ச்சி ஏற்பிகள் மட்டுமே உள்ளன. ஆனால் மனித மூக்கில் வாசனைக்காக 300-க்கும் மேற்பட்டவைகள் உள்ளன. இதன் விளைவாக, வாசனை வரைபடங்களை உருவாக்கும் முந்தைய முயற்சிகள் வெற்றி பெறவில்லை.
வாசனை என்பது மனித அனுபவத்தின் மிகப் பழமையான அடுக்குகளில் ஒன்றாக இருந்தாலும், அதை இன்னும் முழுமையாக எண்ம முறையில் செய்ய முடியவில்லை. ஒளிக்கு RGBl முறைமை இருப்பதைப் போலவும், ஒலிக்கு அதிர்வெண் அடிப்படையிலான மாதிரிகள் இருப்பதைப் போலவும், வாசனைக்கான பொதுவான கணித மொழி இன்னும் உருவாகவில்லை. ஒளி, ஒலிகளைப் போல் இல்லாமல், மண மூலக்கூறுகள் எண்ணற்ற வகைகளில் மாறுபடுகின்றன. மேலும், வாசனை என்பது வெறும் மூலக்கூறு அமைப்பின் பிரதிபலிப்பாக மட்டும் இல்லாமல், மூளை அதை எவ்வாறு உணர்கிறது என்பதையும் சார்ந்துள்ளது. அதனால் வாசனை இன்னும் தொடர்முறைச் சாதனங்களுக்குள் (analog devices) கட்டுப்படாமல் உள்ளது.
பார்வை, கேள்வி, தொடுதல் போன்ற உணர்வுகள் முதலில் தாலமஸ் வழியாகச் சென்று பிறகு உயர் மூளை மையங்களை அடைகின்றன. ஆனால் வாசனையானது அந்த வழியைத் தாண்டி, நேரடியாக நுகர்வுக்குமிழிலிருந்து (olfactory bulb) வாதுமை மடல் (amygdala), மூளைப் பின் மேடு (hippocampus) போன்ற நினைவும் உணர்ச்சியுமம் நெருக்கமாக இணைந்த அமைப்புகளுக்கு செல்கிறது. இதனால் பல ஆண்டுகளுக்கு முன் குறிப்பிட்ட வாசனையுடன் தொடர்பு கொண்ட அனுபவத்தையோ, இடத்தையோ, நபரையோ, அல்லது காலக்கட்டத்தையோ உடனே நினைவுக்கு கொண்டு வர முடிகிறது. இந்த அறிவுக்குப் புறம்பான வேகமான தொடர்புதான் மணத்தின் உணர்ச்சி வலிமைக்குக் காரணம் என்று கருதப் படுகிறது.
நீண்ட காலமாக வேதியியலாளர்கள் மூலக்கூறின் அமைப்பை வைத்து, அதாவது பூட்டு சாவி படிமம் (lock-and-key) மாதிரி அடிப்படையில் மணத்தை ஊகிக்க முயன்றனர். இருப்பினும் வாசனை மூலக்கூறு குறிப்பிட்ட நுகர்வு ஏற்பியுடன் எவ்வாறு செயல்படுகிறது என்பது இன்றும் பெரும் புதிராக உள்ளது. ஒரே மாதிரியான அமைப்புடைய சில மூலக்கூறுகள் முற்றிலும் வேறுபட்ட வாசனைகளைத் தரலாம். அதேபோல், வேறுபட்ட அமைப்புகளைக் கொண்ட மூலக்கூறுகளும் ஒரே மாதிரியான வாசனையைத் தர முடியும். வெறும் வடிவமைப்பை வைத்துக் கொண்டு வாசனையைக் கணிக்க முடியாததால், பல ஆய்வுகள் வாசனையை விவரிக்கும் தரவுத்தளங்களை உருவாக்கத் தொடங்கியுள்ளன. நறுமணம், மணமற்றது போன்ற சொற்களுக்குப் பதிலாக, பழவாசனை, பூமணம், கஸ்தூரி, தீய்ந்த வாசனை போன்ற நுணுக்கமான குறியீடுகளைக் கொண்டு மனிதர்களின் அனுபவத்தை வேதியியலுடன் நெருக்கமாக இணைக்க முயல்கின்றன. ஆனால் இவைகளும் மனிதர்களின் கருத்து வேறுபாடுகளையும் சூழ்நிலையையும் முழுமையாகப் படிக்க முடியாது. தற்போது செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் ஆகியவை வாசனை அறிவியலில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இன்று முதன்மை வாசனை வரைபடம் (Principal Odor Map) போன்ற கணினி மாதிரிகள், பல மூலக்கூறுகளின் அமைப்பு-வாசனை தொடர்புகளில் பயிற்சி பெற்று, 63-பரிமாண வாசனை உட்பொதிவு (63-dimensional odor embedding) என்ற தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. இதன் மூலம், வடிவமைப்பில் மாறுபட்டாலும் ஒரே மாதிரியான மணம் கொண்ட மூலக்கூறுகளை கணினியில் ஒருசேரக் கொணர முடியும். உதாரணமாக, சில எஸ்டர்ஸ்(esters) கீடோன்(ketone) அமைப்பில் வேறுபட்டிருந்தாலும், இனிய அல்லது பழ வாசனைப் பண்புகளின் அடிப்படையில் ஒரே இடத்தில் காட்ட முடியும். அதாவது, வேதியியல் கட்டமைப்பைத் தாண்டி கணினி மூலம் வாசனையின் வடிவியல் ஒன்றை அமைக்க முடியும் என்கிறது Google Research-லிருந்து உருவான Osmo என்ற நிறுவனம்.
அசிமோவ் கட்டுரை வாசனையின் நிலைத்தன்மை, சூழலியல், உற்பத்திச் செலவு ஆகியவற்றையும் விவரிக்கிறது. இயற்கையான வாசனை திரவியங்கள் பல நேரங்களில் விலை உயர்ந்தவையாக இருப்பதாலும், வளங்களின் தேவையை மிகைப்படுத்தி சுற்றுச்சூழலுக்கு அழுத்தம் தருகிறது. குறிப்பாக ரோஸ் எண்ணெய் தயாரிக்க பெருமளவு ரோஜா இதழ்கள் தேவைப்படுவதால், கணினி-வழி வடிவமைக்கப்பட்ட மூலக்கூறுகள் மூலம் இதே போன்ற நுகர்வுக் தன்மையைப் பெற முடிந்தால், இயற்கை வளத்துடனான சார்பு குறையும். ஆனால் வாசனை என்பது ஒரே மூலக்கூறின் தனி பண்பானது அல்ல. ஒரு ரோஜாவின் மணத்தில் 300-க்கும் அதிகமான ஆவியாகும் கரிமச் சேர்வைகள் இருக்கலாம். அவற்றின் விகிதம், இணக்கம், வெளியீட்டு இயக்கவியல் ஆகியவை அனைத்தும் சேர்ந்து, அதன் கூறுகளின் கூட்டுத்தொகையை விட அதிகமான வாசனையை உருவாக்குகின்றன.அதனால், தனிப் பொருட்களை நன்றாக மாதிரி செய்வது ஒன்றாகவும், சிக்கலான கலப்பு வாசனை அமைப்பை முழுமையாக எண்ம முறைப் படுத்துவது இன்னும் கடினமாகவும் உள்ளது. இதுதான் வாசனை இலக்கமயமாக்கலின் அடுத்த கட்டமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
மறக்கப்பட்ட உணர்வு – மணத்தைப் பற்றிய புதிய அறிவியல்
சமீபத்தில் யோனாஸ் ஒலோஃப்சன் தனது “The Forgotten Sense” என்ற நூலில், மணம் மனித அறிவாற்றலில் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறுகிறார். ஆனால், அது நினைவுகள், உணர்ச்சிகள், மற்றும் முடிவெடுக்கும் செயல்முறைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. மணம் மனித வாழ்வின் சிறிய துணை உணர்வு அல்ல; மனிதகுலத்தின் மிகப் பழமையானதும், நுட்பமானதுமான அது வழிகாட்டிகளில் ஒன்று. அது நம் முன்னோர்களுக்கு உணவைக் கண்டுபிடிக்க, ஆபத்தைத் தவிர்க்க, உறவினர்களை அடையாளம் காண, சூழலின் ரசாயனச் சைகைகளைப் புரிந்து கொள்ள உதவியது. அவர் முக்கியமாகக் கருதுவது, மணம் அமைதியான உணர்வாக இருந்தாலும், அதன் தாக்கத்தை நாம் உணராமல் இருக்கிறோம் என்பது. இப்போது அதே உணர்வு, செயற்கை நுண்ணறிவின் உதவியால் மீண்டும் ஆராயப்படுகிறது. சென்ற காலத்தில் உயிர்வாழ்தலுக்காகப் பயன்பட்ட மணத்தை, தற்போது முறைப்படுத்தி, சேமித்து, எண்ம முறை வடிவில் உருவாக்க முடியும் என்பதற்கான வாசனைத் திறந்துள்ளது.
லோஃசனின் நூல், மணத்தைச் சோர்ந்து போன பழைய உணர்வாக அல்ல, மாறாக மிகுந்த தகுதியும் தழுவும் திறனும் கொண்ட அமைப்பாகப் பார்க்கும்படி வாசகரை அழைக்கிறது. நாம் பிறக்கும்போது நிரந்தரமான மண வரம்புடன் பிறப்பதில்லை. மொழி, இசை போன்றே, மண உணர்வும் பயன்படுத்தப்படுவதால்,கவனத்தால், கலாசாரத்தால் வளர்கிறது. சில சமூகங்களில், குறிப்பாக இயற்கைச் சூழலோடு நெருக்கமாக வாழும் இடங்களில், மக்கள் மணங்களை அடையாளம் காண்பதில் அசாதாரண திறமை வளர்த்துக் கொள்கிறார்கள். வேட்டையாளர்கள், சேகரிப்பாளர்கள், சமையல்காரர்கள், விவசாயிகள், வாசனைத் தயாரிப்பாளர்கள் என்ற இவர்கள் ஒவ்வொருவரும் இதைத் தங்கள் வழியில் அறிந்திருக்கிறார்கள். மணத்தை அவ்வப்போது பயன்படுத்தும் உலகில் அவர்கள் வாழ்வதில்லை; தொடர்ந்து நுகர வேண்டிய உலகில் வாழ்கிறார்கள். காலப்போக்கில், மூக்கு நுணுக்கமான வேறுபாடுகளைக அறிவதற்குக் கற்றுக்கொள்கிறது.
அந்த திறமை உயிரியல் விஷயத்தைத் தாண்டி, சமூகமும் கலாசாரமும் சேர்ந்த ஒன்று. சமூகம் மணங்களை மதித்து, பெயரிட்டு, விவரித்தால், மக்கள் அவற்றை எளிதில் அடையாளம் காணத் தொடங்குவார்கள். அதுவே மணத்தைச் சிறியதாகக் கருதினால், அந்த உணர்வு புறக்கணிப்பால் பலவீனமடையும். அதாவது, மனிதர்கள் தங்களின் மூக்கை கூர்மைப்படுத்துவது திறமையை அதிகரிப்பது பயன்பாட்டின் மூலம் என்கிறார் நூலாசிரியர்.
வாசனை, நாம் எதிர்பார்க்காத நேரத்தில், கடந்த காலத்தின் கதவைத் திறக்க முடியும். குழந்தைப் பருவத்தில் பயன்படுத்திய சோப்பு, குறிப்பிட்ட வகை மரத்தின் புகை, நீண்ட காலம் முன்பு மறைந்த பர்ஃப்யூம் போன்றவை வெறும் நினைவுகள் அல்ல. உணர்ச்சியோடு பின்னிய, அடுக்குகளைக் கொண்ட, படம் அல்லது ஒலி தூண்டும் நினைவுகளைவிட அதிக சக்தியுள்ள அனுபவ மறுகட்டமைப்புகள்.
மணமும் நினைவும் இவ்வளவு நெருக்கமாக இருப்பது தற்செயல் அல்ல என்பதை ஓலோஃசன் வலியுறுத்துகிறார். நாற்றச் சிக்னல்கள் மூளையின் உணர்ச்சிச் சுற்று அமைப்புகளோடு ஆழமாக இணைந்துள்ளன; அதனால்தான் அவை இவ்வளவு திடீரென மறைந்த நினைவுகளைத் தூண்டுகின்றன. இலக்கியத்தில் புகழ்பெற்ற madeleine தருணம் இன்றும் நினைவில் நிற்பதற்குக் காரணம், இன்றைய அறிவியல் அதைப் புரிந்துகொள்ளத் தொடங்கியிருப்பதுதான். மணத்தை நினைவுக்கான திறவு கோளாகக் கருதலாம்.
நவீன வாழ்க்கையில் மணம்
நகர வாழ்க்கையில் மணம் வெகு தூரத்தில் சென்று விட்டது. மூடப்பட்ட பெட்டிகளில் வரும் உணவுகள், வாசனை அகன்ற வீடுகள், சுத்தப்படுத்தப்பட்ட தெருக்கள் அனைத்தும் வடிகட்டப்பட்டு இரசாயனமாக நிர்வகிக்கப்படுகின்றன. காட்சிகள் கலாசாரத் தொடர்பின் மீது ஆதிக்கம் செலுத்துகிறது. புத்தகங்கள், செய்தித்தாள்கள், திரைகள், சமூக ஊடகங்கள் என அனைத்தும் கண்ணுக்கே முக்கியத்துவம் தருகின்றன. முதலில் பார்க்க, பின்னரே நுகர என்ற சமுதாயமாக மாறிக் கொண்டிருக்கிறோம்.
மொழியும் இதே பாகுபாட்டை பிரதிபலிக்கிறது. நிறம், ஒலி ஆகியவற்றிற்கு நமக்கு வளமான சொல் அகராதி உள்ளது; ஆனால் மணத்தை விவரிப்பதற்கான சொற்கள் மிகவும் குறைவு. மஞ்சளான மாம்பழத்தையோ அல்லது நாதஸ்வரத்தையோ விவரிப்பது சற்று எளிது. மல்லிகை மணம் என்று பொதுவாகக் கூறினாலும், குண்டு மல்லி, ஜாதி மல்லி, ஊசி மல்லி, முல்லை என்று பலவகை. மேலும் அதனின் மனமும் வேறுபடுகிறது. இதனால் மணத்தைச் சிந்திப்பது கடினமாகி புறக்கணிக்கப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவு இப்போது ஆராய்ச்சியாளர்களுக்கு மணத்தை முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆய்வு செய்ய உதவுகிறது. பெரிய தரவுத்தொகுப்புகளில் உள்ள முறைமைகளை அது கண்டுபிடிக்கிறது. போதுமான இரசாயன, உணர்ச்சி தரவுகள் இருந்தால், இயந்திர கற்றல் அமைப்புகள் வாசனை மாதிரிகளை வகைப்படுத்த, மணம் சுயவிவரங்களைக் கணிக்க, மின்னனு மூக்கு (electronic nose) போன்ற கருவிகளை உருவாக்க முடியும். இவை மனித மூக்கு போன்று நுகராது. ஆனால் மிக வேகமாகவும் ஒரே மாதிரியாகவும் நுகரும் மூலக்கூறுகளை பகுப்பாய்வு செய்ய முடியும்.
மருத்துவ ஆராய்ச்சியில் மூச்சுப் பகுப்பாய்வு மூலம் நோய்களின் சுவடுகளைத் தேடுகிறார்கள். உணவு அறிவியலில் புதுமை, தன்மை, தரம், கலப்பு ஆகியவற்றை மதிப்பிடுகிறார்கள். சுற்றுச்சூழல் அமைப்புகள் காற்றில் உள்ள மாசுகளைக் கண்காணிக்க முடியும். பர்ஃப்யூம் மற்றும் வாசனைத் தொழில் மேலும் துல்லியமான வாசனை திரவியங்களைத் தயாரிக்க முடியும்.
The Forgotten Sense நூலின் அடிப்படைப் பாடம், மணம் உண்மையில் மறக்கப்படவில்லை. அது மீண்டும் கவனிக்கப்பட வேண்டிய நேரத்திற்காக அமைதியாகக் காத்திருந்தது. இப்போது அந்த நேரம் வந்துள்ளது என்று சொல்கிறது.
ஐரோப்பாவின் மண வரலாறு ஆராய்ச்சி
மணம் என்பது நினைவுகளின் மறைமுக மொழி. அந்த மொழியை அல்லது மண வரலாற்றை மீட்டெடுக்க ஐரோப்பாவில் Odeuropa என்ற ஆராய்ச்சி திட்டம் தொடங்கியுள்ளது. இது 16ஆம் நூற்றாண்டிலிருந்து 20ஆம் நூற்றாண்டு வரை, பழைய நூல்கள், ஓவியங்கள், இதர ஆவணங்களில் பதிவு செய்யப்பட்ட மணங்களை கண்டுபிடித்து, அவற்றை நவீன தொழில்நுட்பத்தின் மூலம் மீண்டும் உருவாக்குகிறது. மணங்களுக்கு வரலாறு இருக்கிறதா என்பது அவர்களின் முக்கிய கேள்வி.
இப்போது நாம் நகரத்தின் தெருக்களில் நடக்கும் போது காபி, பெட்ரோல், மழை போன்ற மணங்களை உணர்கிறோம். இவை எல்லாம் இன்றைய காலத்தின் விளைவு. ஆனால், 200 ஆண்டுகளுக்கு முன் அந்த தெருவில் இருந்த மணம் எப்படி இருந்திருக்கும்? குதிரை வண்டிகளின் வாசனை, திறந்த கழிவுநீர் வாய்க்கால்களின் துர்நாற்றம், அல்லது புதிதாக வேகவைத்த உணவுகளிருந்து வரும் மணம் ஆகியவை அனைத்தும் அந்த காலத்தின் வாசனைகளாக இருந்திருக்கும்.
Odeuropa இவை போன்ற மறைந்த மணங்களைக் கண்டறிய செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துகிறது. பழைய கலாச்சாரத்தில் காணப்பட்ட வாசனை, துர்நாற்றம், மலர்மணம் போன்ற சொற்களை தேடி, அவற்றை மண தரவுத்தளமாக மாற்றுகிறது. பின்னர், வேதியியலாளர்கள் வாசனை வடிவமைப்பாளர்களுடன் இணைந்து அந்த மணங்களை மீண்டும் தயாரிக்க முயற்சிக்கிறார்கள்.
மணம் என்பது நினைவுகளின் ஆழமான தூண்டுதல் என்பதால்,குறிப்பிட்ட மணமானது நம்மை குழந்தைப் பருவத்திற்கு அழைத்து செல்ல முடிகிறது. அதுபோல, இது சமூகம் தனது மண வரலாற்றை புரிந்துகொள்ளும் போது, அதன் வாழ்க்கை முறைகள், சுகாதாரம், தொழில், கலாசாரம் ஆகியவற்றை அறிவதற்கு ஏதுவாக இருக்கும். உதாரணமாக, பழைய மருத்துவமனை பற்றிய பதிவுகளில் வரும் மணங்கள், மருந்து, வியர்வை, சுத்திகரிப்பு போன்றவை அந்த காலத்தின் மருத்துவ அறிவையும், நோய்களின் பரவலையும் காட்டுகின்றன. அதேபோல், தேவாலயங்களில் பயன்படுத்தப்பட்ட தூபங்களின் மணம், ஆன்மீக அனுபவத்தை உருவாக்கிய விதத்தை வெளிப்படுத்துகிறது.
நாம் பெரும்பாலும் பார்வை மற்றும் ஒலியை மையமாகக் கொண்ட வரலாற்றை உருவாக்கியுள்ளோம். ஆனால் Odeuropa, மணமும் ஆவணமே என்று நமக்கு நினைவூட்டுகிறது. இது மறக்கப்பட்ட உணர்வை மீண்டும் மனித அனுபவத்தின் மையத்திற்கு கொண்டு வருகிறது.
நம்முடைய வாழ்விலும் இதை சிந்திக்க வேண்டும். நம் வீட்டு சமையல் அறையில் எழும் மணங்கள், மண் வாசனை, பூக்களின் நறுமணம் ஆகியவை அன்றாடம் நம் வாழ்க்கையில் நடைபெறும் அமைதியான பதிவுகள். நாம் அதை கவனிக்காமல் விட்டுவிட்டால், அந்த நினைவுகள் மெல்ல மறைந்து விடும்.
வரலாறு பார்ப்பதற்கும், கேட்பதற்கும் மட்டும் இல்லாமல், அதன் வாசனையையும் உணர்ந்து ரசிக்க வேண்டும் என்கிறது Odeuropa.
https://knowablemagazine.org/content/article/society/2026/recreating-the-smells-of-the-past
இன்று வாசனை தரவு, வேதியியல், இயந்திரக் கற்றல், மற்றும் உணர்வு அறிவியல் போன்ற துறைகளில் இணைந்து வளர்ந்து வரும் அறிவுத் தளமாகப் பார்க்கப் படுகிறது. மறக்கப்பட்ட உணர்வு என்ற பழைய எண்ணத்தை விலக்கி, வாசனையை எவ்வாறு அளவிட்டு, மாதிரியாக்கி, வடிவமைக்க முடியும் என்பதை ஆராய்கிறது. ஆனால் அதே சமயம், நினைவு, உணர்ச்சி, சூழல் ஆகியவற்றோடு இணைந்திருக்கும் மனித அனுபவத்தையும் கணக்கீட்டில் மொழிபெயர்க்கும் புதிய கலையாக வளர்ந்து கொண்டிருக்கிறது.
