அது 1909ம் வருடம், அக்டோபர் மாதம் முப்பதாம் தேதி. மும்பையில், இந்தியாவிற்கு அணு சக்தியின் மூலம் பல ஆற்றல்களைத் தரும் ஒரு முன்னோடியாக ஒரு சிறுவன் பிறந்தான்.
பண்பாட்டுக் கல்வியும், அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்த கல்வியும் , தேசப்பற்றும் அந்த சிறுவனை மேம்படுத்தின. கேம்பிரிட்ஜ் பல்கலையில் இயந்திரப் பொறியியல் படித்த அந்த இளைஞர், பால் டைரக், (Paul Dirac) ரால்ப் ஃபௌலர் (Ralph Fowler) ஆகியோரால் ஈர்க்கப்பட்டு கோட்பாட்டு அறிவியலில் ஆர்வம் செலுத்தத் தொடங்கினார். தெளிந்த சிந்தனையும் ஆழ்ந்த அறிவும் இந்தியாவை அறிவியல் அரங்கில் முன் நிறுத்தும் கனவும் அவருக்கு இருந்தது. அவர் அதை செயல்படுத்தியும் காட்டினார்.
சில நிறுவனங்கள்
அவர் அமைத்த சில நிறுவனங்களை பார்த்தாலே அவர் எப்படி காலத்தை வென்று நின்ற மகத்தான விஞ்ஞானி என்பது நமக்கு புரியும்.
டாட்டா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் (TIFR)1945ல், அணுசக்தி ஆராய்ச்சி நிலையம் (AEET தற்போது BARC) 1954 இல் என்று முக்கியமான இரண்டை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன். அவரது குறிப்பிட்ட சில ஆய்வுகள் அதன் முடிவுகள் இன்றளவும் அறிவியல் துறையில் பயனாகி வருகின்றன.
அவர் தான் இந்தியாவின் அணுசக்தி தந்தை என்று போற்றப்படும் ஹோமி ஜஹாங்கீர் பாபா.
அவரது சில கண்டுபிடிப்புகள்
துளிம இயற்பியல் துறையில் மின்னணு மற்றும் பாசிட்ரான் எவ்வாறு தமக்குள் வினையாற்றுகின்றன என்பதை நிரூபித்தார். அதற்குப் பெயரே பாபா ஸ்கேட்டரிங். (Bhabha Scattering)
அண்டக்கதிர் மழைகள் என்ற அடுக்கடுக்கான தொடர் பெருக்கிகள் பற்றி காஸ்மிக் ரே ரிசர்ச்(Cosmic Ray Research) என்று செய்தார்.
ம்யூவான், (முன்னர் ம்யு மேசான் என்று அழைக்கப்பட்டது) கோட்பாட்டு அறிவியல் படி கணித்து சொன்னவரும் இவரே. (Muon Prediction)
ஆசியாவின் முதல் அணு உலையான அப்சரா (1956) இவரது கனவின் தொடக்கம். இந்தியா தனக்குத் தேவையான மின் சக்தியை பெறுவதற்கு அது தனக்கு இயற்கையாகவும் அதிகமாகவும் மலிவாகவும் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி முன்னேற முடியும் என்று சிந்தித்த ஹோமி பாபாவிற்கு உறுதுணை நமது சுதந்திர நாட்டின் முதல் பிரதமரான பண்டிட் ஜவஹர்லால் நேரு. இரு பெரும் தீர்க்கதரிசிகள், பாரதத்தின் அறிவியல் முன்னேற்றத்தை முன்னெடுத்தவர்கள், அதற்கான வழிமுறைகள் கொண்டு வந்தவர்கள் என்று அறிவியல் உலகம் இவர்களைப் போற்றுகிறது. இந்தியாவின் அணி சேரா கொள்கையினால் நமது அணுசக்தி பயன்பாடு ஆக்கபூர்வமாகவே இருக்க வேண்டும் என்று நேரு விரும்பினார். ஹோமி பாபாவிற்கும் அதே எண்ணம் தான் ஆனால், மாறிவரும் உலகில் அணு ஆயுதங்களை வைத்திருப்பது தன் நாட்டின் பாதுகாப்பிற்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் என்பதில் அவர் நம்பிக்கை கொண்டிருந்தார். அணு சக்தியை மனித வாழ்வின் ஒளி சக்தியாக அவரால் மாற்ற முடிந்தது.
இரு தலைவர்களின் உரையாடல்கள்
அவர் ஒரு அறிவியலாளர் மட்டுமல்ல, ஒரு நாட்டைக் கட்டமைத்தவரும் கூட.
1948 ல் நேரு, அணுசக்தி அமைப்பை பற்றி ஹோமி பாபாவிற்கு ஒரு கடிதம் எழுதுகிறார்.
“இந்த அதிமுக்கியமான, தேவையான அமைப்பின் மூலம் இந்தியா பின்னடையாத நாடு என்பதைக் காட்ட வேண்டும் என்று நான் ஆர்வம் கலந்த கவலை கொண்டுள்ளேன் இந்த விஷயத்தை பொறுத்த வரையில் எனது தங்கு தடையற்ற உதவி உங்களுக்கு நிச்சயமாக உண்டு”
பாபாவின் வேண்டுகோளை ஏற்று 1954 இல் நேரு அவருக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். “நீங்கள் விரும்பிய படியே இந்தத் துறையானது எனது நேரடி தலைமையில் இயங்கும். உங்களுடைய தலைமைப் பண்பும் சீர்தூக்கும் தன்மையும் எனக்கு நல்ல நம்பிக்கையை தந்துள்ளது. நீங்கள் அரசின் சிவப்பு நாடாக்களை மீறி நேரடியாகவே என்னைத் தொடர்பு கொள்ளலாம், உங்கள் ஆய்வுகளை அல்லது செயல்முறைகளை விளக்கலாம்.”
ஜெனிவா கூடுகைக்கு 1955இல் பாபா செல்லும் போது நேரு சொல்கிறார் : “நீங்கள் இந்தியப் பிரதிநிதி மட்டும் இல்லை; அணுசக்தியை ஆக்கபூர்வமாகவே பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கும் அனைத்து நாடுகளையும் நீங்கள் பிரதி நிதித்துவம் செய்கிறீர்கள். நீங்கள் இதை மிகச் சிறப்பாக செய்வீர்கள் என்று எனக்குத் தெரியும்”
இந்த உரையாடல்கள் ஏன் முக்கியமாகின்றன? ஒருவருக்கு அரசியல் தொலைநோக்கும், நம்பிக்கையும் இருக்கிறது. மற்றவருக்கு அறிவு சார் துறையில் தலைமைப் பண்பும் முன் நோக்கு திட்டமும் இருக்கிறது. இத்தகைய அரும்பெரும் செயல்களை இவர்களால் தான் இணைந்து நடத்த முடியும்.
யுரேனியமும், தோரியமும்
உலகெங்கும் யுரேனியம்- 233 என்பது அணு உலைகளில் பயனாகி வருகிறது. யுரேனியம் என்பது இயற்கையாக கிடைக்கும் ஒரு கனிமம். இந்தியாவில் சற்றேறக்குறைய 500 டன் யுரேனியம் தான் கிடைக்கிறது. அது இந்த நாட்டின் மின் தேவைக்கு போதாத ஒன்று.
ஆனால் நம்மிடம் உலகின் கால் பங்கு தோரியம்-232 இருக்கிறது. இந்த தோரியம் எங்கே கிடைக்கும்? நம்முடைய தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, ஒரிசா ஆகிய கடற்கரைகளில் உள்ள மோனசைட் மண்ணில் தோரியம் கிடைக்கிறது. இதை கன கனிமம் என்று சொல்வோம் ஆனால், இது பிளக்கத்தக்கதல்ல. நேரடியாக இது அணுசக்தி தராது.
யுரேனியம் அணுக்கருவைப் பிளந்து அணு சக்தியை கொண்டு வரும் முறைதான் பல நாடுகளில் பின்பற்றப்படுகிறது. ஆனால் இந்தியாவில் இந்த முறைக்குத் தேவையான யுரேனியம் இல்லை. இறக்குமதி செய்வது அதிகமான பணச் செலவையும் ஏற்படுத்தும். மேலும் வேற்று நாடுகளில் இருந்து அதைப் பெறுவதில் சில தலைவர்களால் நமக்கு தலைவலி ஏற்படும்.
கணக்கு போடலாமா?
ஒரு சுமாரான கணக்கை பார்ப்போம். ஒரு பேரல் கச்சா எண்ணையில் 159 லிட்டர் எண்ணெய் இருக்கிறது. அதை சீராக்கும் போது பெட்ரோல், டீசல், விமானத்துக்கான எரிபொருள், நீர்ம எரிவாயு எல்லாமும் கிடைக்கும். ஒரு பேரலில் இருந்து, சுமார் 75 லிட்டர் பெட்ரோல், 45 லிட்டர் டீசல், விமான எரிபொருள் 20 லிட்டர், நீர்ம எரிவாயு மற்றும் இதர வாயுக்கள் 10 லிட்டர் என்று பெறலாம். ஆனால், அந்தக் கச்சா எண்ணெய் கிடைப்பதே கேள்விக்குறியான காலத்தில் இருக்கிறோமே நாம்?
மற்றுமொரு சிறு கணிதம் பார்ப்போம். பாபா, தோரியத்தைக் கொண்டு அணு உலையை இயக்க முடியும் என்று மூன்று நிலையில் ஒரு வடிவமைப்பை உருவாக்கினார். இந்த செயலில் இந்தியா இதுவரை $900 மில்லியன் செலவிட்டு, தனது கல்பாக்கம் அணு உலையில் முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. இதே பயன்பாட்டிற்கு அமெரிக்கா,15 பில்லியன் டாலர் செலவழித்து, கைவிட்டு விட்டது. ஜப்பான் $12 பில்லியன் செலவு செய்தது. அதனுடைய மாஞ்சு(Monju) முன்மாதிரி உலையில், 1995ல், குளிரூட்டியான சோடியம் தீ பற்றிக் கொண்டதில், அது 12 பில்லியன் டாலர் நஷ்டக் கணக்கோடு தோரியம் பயன்பாட்டை நிறுத்திக் கொண்டு விட்டது. ஐக்கிய அரசு 8 பில்லியன் டாலர், ஜெர்மனி ஆறு பில்லியன் டாலர் என்ற செலவழித்து விட்டு இந்த திட்டத்தை கைவிட்டு விட்டன ஆனால், இந்தியா தனது இயற்கை வளத்தை சரியான முறையில் பயன்படுத்துவதில் பாபாவின் வழிமுறையின் மூன்று பகுதிகளில், இரண்டை வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளது. இந்த வருடம் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி கல்பாக்கம் ‘முன்மாதிரி விரைவு பெருக்க உலை’ (Prototype Fast Breeder Reactor) ‘க்ரிடிகாலிடி’ (Criticality) என்று அறிவியலாளர்கள் சொல்லும் அந்த முக்கிய நிலையை அடைந்து சாதனை படைத்துள்ளது. அது என்ன என்று எளிதாகச் சொல்ல வேண்டுமென்றால் ஒரு அணு உலையில் உள் நடக்கும் ஒவ்வொரு அணுப்பிளவு நிகழ்ச்சியும் அதைப் போன்ற மற்றொன்றை தொடர்ந்து செய்து இயங்கும். இது ஒரு தொடர் ஓட்டம். செலவழிக்கும் எரிபொருளைவிட பெறும் எரிசக்தி அதிகமாக இருக்கும். இந்த அணு உலை இப்போது செயல்படுகிறது.1.4 பில்லியன் மக்களைக் கொண்ட நாட்டின் எதிர்கால மின் தேவைகளை கணக்கில் கொண்டு பாபா அமைத்த அந்த மூன்று நிலைகள் நமக்கு குறைந்த செலவில் நிறைந்த ஆற்றலை பெற்றுத் தந்துள்ளது.
அந்த மூன்று நிலைகள் என்னென்ன?
குறைவாக உள்ள யுரேனியத்தைப் பயன்படுத்தி, மின்சக்தி உருவாக்குகையில் ப்ளூடோனியம் என்ற பொருளும் கிடைக்கிறது; அந்தப் ப்ளுடோனியத்துடன் தோரியத்தையும் சேர்த்தால், அணு உலையில் அதிக அளவில் யுரேனியமும், தோரியமும் கிடைக்கும். அதாவது அதிக அணு மின் சக்தி குறைந்த செலவில்.
கீழ்க்காணும் படம் இந்த மூன்று நிலைகளையும் தெளிவாக விளக்கும்.
சற்று விரிவாகப் பார்ப்போம்.
நாம் முன்னரே சொன்னபடி தோரியம் என்பதை பிளவு படுத்தி அணு உலையை இயக்கி சக்தி பெற முடியாது. ஆனால், பிளவு படும் ஓரிடத்தானாக (Fissile isotope) மாற்றி பயன்படுத்த முடியும். 1950ல் இந்த மூன்று நிலைச் செயல்பாட்டை அவர் திட்டமிட்டார்.
முதல் நிலையில், அழுத்தப்பட்ட கன நீர் உலையில், (Pressurized Heavy Water Reactor) இயற்கை யுரேனியம்-235 எரிபொருளாக பயன்படுத்தப் படுகிறது. அதன் அணுக்கருக்கள் மோதி சிதைவுற்று மின்சக்தியும், ப்ளுடோனியமும் -239 கிடைக்கின்றன. முதல் கன நீர் உலை தாராபூரில் அமைக்கப்பட்டது.
இரண்டாம் நிலை என்பது விரைவுப் பெருக்கி உலை. (Fast Breeder Reactor) இதில், முதல் நிலையிலிருந்து பெற்ற ப்ளுடோனியத்துடன்-239, நீர்த்த யுரேனியம், எரிபொருளாகப் பயன்படுத்தப் படுகிறது. இதன் விளைவாக அதிக அளவில் ப்ளுடோனியம் உற்பத்தியாகி, தோரியம் பயன்படுத்தப்பட்டு யுரேனியம்-233 ஆக உருப்பெறுகிறது. இந்த நிலையை கல்பாக்கம் அணுமின் நிலையம் ஏப்ரல்6, 2026ல் அடைந்து விட்டது. 2004ல் கல்பாக்கம் அமைக்கப்பட்டது.
மூன்றாம் நிலை என்பது மேம்பட்ட கன நீர் உலை.(Advanced Heavy water Reactor) இதில் தோரியம்-232, மற்றும் யுரேனியம்-233 இரண்டின் கலவை எரி பொருளாகிறது. தோரியம் பயன்படுத்துவதால் இதன் மூலம் அதிக அளவில் மின்சக்தி கிடைக்கிறது. சிறிதளவு விதை நெல்லைக் கொண்டு பெருமளவில் விளைச்சல் காண்பதைப் போன்ற ஒன்று இது.
இந்த செயல்முறைகளில் சிக்கல்கள் இல்லையா?
தோரியத்தைக் கையாள்வதில் அதிக கவனம் தேவை. யுரேனியம்-233 அதிக கதிர்வீச்சுள்ள ஒன்று. அணு உலையை குளிர்விக்க பயனாகும் சோடியம் எளிதில் தீ பிடித்து விடும்.
மேலும், பெரும்பாலான நாடுகள் யுரேனிய அணு உலையைப் பயன்படுத்த, நாம் ரஷ்யாவின் உதவியுடன் தோரியம் பயனாகும் உலையைப் பயன்படுத்துகிறோம். காரணம், நம்மிடம் இருக்கும் அதிக தோரியம். (கேரள கடற்கரையிலிருந்து அதிக மணல் அள்ளப்பட்டு மாலத் தீவுகளுக்கு கடத்தப்படுவதாக செய்தி ஒன்று இருக்கிறது. அது உண்மையாக இருக்கக் கூடாது என்று விழைகிறேன்.)
1974-2008 வரை நம்மை அணுசக்தி உற்பத்தி செய்யக்கூடாதென்று தடை விதித்து ஒதுக்கி வைத்திருந்தார்கள். 1974, மே 18ல் போக்ரானில் ‘புத்தர் புன்னகைத்தார்’ அல்லவா, அந்தக் காரணத்தால். பின்னர் அமெரிக்கா இறங்கி வந்தது. இல்லையெனில் நாம் மூன்றாம் நிலையை முன்னரே எட்டியிருப்போம். குறைந்த பட்சம் 400 ஆண்டுகளுக்கான அணு மின் உற்பத்தியை (500 கிகா வாட்) நம்மால், தோரியத்தைப் பயன்படுத்தி அடைய முடியும் என்று கனவு கண்டு, அதற்கு வரைபடமும் தந்து, அதன் சிக்கல்களை பிற நாடுகள் எவ்விதம் எதிர் கொண்டன என்று கவனித்து திட்டம் தீட்டிய ஹோமி பாபா காலத்தை வென்ற மனிதர். ‘உறங்கும் மா கனிமம்’ என்று செல்லமாக குறிப்பிடப்படும் தோரியத்தை எவ்வாறு கையாளலாம் என்று கண்டறிந்தவர். அவர் சொன்ன மூன்று நிலைகளும் தொடர் நிலைகள். தற்காத்து செயல்பட முடிந்தவை. மேலை நாடுகளைப் ‘பார்த்து செய்பவை’ அல்ல அவரது வரைவுகள். நாட்டின் இயற்கை வளம், குறைந்த செலவு, இடு பொருளுக்கு ஆகும் செலவை விட பெறும் பொருள் மிகுதி என்ற கனவு, ஆகியவற்றால், தனித்து நிற்பவர் அவர். இத்தகைய அணு மின் உலைகள், சூழலை மாசு படுத்தாது. இன்று உலகம் எதிர் கொள்ளும் மாபெரும் சூழற்சிதைவான பசும்வாயு விளைவு இந்த அணு உலைகளால் ஏற்படாது. காற்று, நீர், சூரியன் இவைகளுடன் அணு உலைகளும் அதிக அளவில் மின்சக்தி தருவது மட்டுமில்லாமல், அணு ஆயுத உற்பத்திக்குத் தேவையான மூலப் பொருளை வழங்கவும் முடியும்.
இன்றைய உலகில், இந்தியாவும், ரஷ்யாவும் தோரியம் பயனாகும் உலைகளை இயக்குகின்றன. சீனா, ஃப்ரான்ஸ் போன்ற நாடுகளில் தற்சமயம் ஆர்வம் அதிகரித்துள்ளது.
ஹோமி பாபா பெற்ற சில விருதுகள்:
1942ல் கோட்பாட்டு இயற்பியலிற்கான ‘ஆடம்ஸ் பரிசு’
1954ல் ‘பத்ம பூஷண்’
மூன்று முறை நோபல் பரிசிற்கு பரிந்துரைக்கப்பட்டார்.
24/01/1966ல் இந்தியா மான்ட ப்ளாங் ஏர் இந்தியா விமான விபத்தில் தன் தவப் புதல்வனை இழந்தாள். அவர் கனவை நனவாக்கி வரும் துடிப்பான இளைஞர்கள் இருக்கும் வரை மரணம் அவருக்குக் கிடையாது.
‘இருந்தாலும், இறந்தாலும் பேர் சொல்ல வேண்டும்; இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்.’
உசாவி:
செய்தித்தாள்கள், காணொலிகள்
