மனிதர்கள் நோய் ஒன்றைப் புரிந்து கொண்டு பெயரிடுவதற்கு முன்பே, இயற்கை மருந்துகளை உருவாக்கிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு செடியும், பூஞ்சையும், பாக்டீரியாவும், கடல்வாழ் உயிரினமும், மிருகமும், தங்களைக் காத்துக் கொள்ள, போட்டியிட, எதிரிகளிடமிருந்து தப்பித்துக்கொள்ள, நீண்ட காலம் உயிர்வாழ என பல கோடி ஆண்டுகளாக வேதியியல் பரிசோதனைகளை செய்துகொண்டே வந்துள்ளது. அந்த நீண்ட பரிணாமப் பயணத்தில், சில உயிர்களின் உலகம் ஏராளமான சேர்மங்களை உருவாக்கியுள்ளது. இவற்றில் சில நச்சுத்தன்மையுடையதாகவும், பயனற்றவையாகவும் இருந்தாலும், சில மனித மருத்துவத்திற்கு மாறக்கூடிய மருந்துகளாகக் கண்டறியப்பட்டன. இதை இயற்கையின் மருந்து-தரவுத்தளம் என்று குறிப்பிடுகின்றனர். இது டி.என்.ஏ, புரதங்கள், மாற்றுச்சேர்மங்கள், நச்சுக்கள் போன்ற உயிரியல் தொடர்புகளால் எழுதப்பட்ட உயிருள்ள காப்பகம். இன்றைய விஞ்ஞானம், மரபணு வரிசை நிர்ணயம், மூலக்கூறு அமைப்பு ஆய்வு, செயற்கை வேதியியல், இயந்திரக் கற்றல், தானியங்கி பொறியியல் தளங்கள் போன்ற நவீன கருவிகளின் உதவியுடன் இதை படிக்கத் தொடங்கியுள்ளது.
பழமையும் புதுமையும் சேர்ந்த இக்காலம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. முந்தைய விஞ்ஞானிகள் இயற்கையால் உந்தப்பட்டு உருவாக்கிய மருந்துகளைப் பின்பற்றி, இன்றைய ஆராய்ச்சியாளர்கள் அந்த இயற்கைச் சுட்டிகளையும், அவற்றுக்குப் பின்னாலுள்ள மரபணுக்களின் பாதைகளையும், ஏற்பிகளையும், நோய் வழித்தடங்களையும் மிகத் துல்லியமாக இணைக்க முயல்கின்றனர். இதன் விளைவாக, தற்போது பரிணாமத்திடமிருந்து கற்றுக்கொண்டு புதிய மருந்துகளை வடிவமைக்கும் ஒரு புதிய அறிவியல் உருவாகியுள்ளது.
இயற்கை எனும் சிறந்த வேதியியலாளர்
பல்வேறு உயிரினங்கள் மனிதனுக்குப் பயன்பட வேண்டும் என்பதற்காக இயற்கை மூலக்கூறுகளை உருவாக்கவில்லை. செடிகள் பூச்சிகளிடமிருந்தும் பூஞ்சைகளிடமிருந்தும் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேதிப்பொருட்களை உற்பத்தி செய்கின்றன. நுண்ணுயிர்கள் இடத்திற்கும் உணவுக்கும் போட்டியிடுகின்றன; அதற்காகவே அவை நுண்ணுயிர் எதிரிகள் மற்றும் சமிக்கை மூலக்கூறுகளை உருவாக்குகின்றன. பூஞ்சைகளும், கடற்பஞ்சுகளும், விலங்குகளும் தங்கள் வாழ்வைத் தாங்கிக்கொள்ள சிக்கலான மூலக்கூறுகளை உருவாக்குகின்றன.
மனிதனின் பார்வையில் இந்த மூலக்கூறுகள் அசாதாரணமானவை; ஏனெனில் அவை பெரும்பாலும் உயிரியல் இலக்குகளுடன் மிகத் துல்லியமாக தொடர்புகொள்ளும். பல இயற்கைச் சேர்மங்கள் சிக்கலான முப்பரிமாண வடிவங்களையும், விசித்திரமான முப்பரிமாண வேதியியலையும், புரதங்களோடு வலுவாகச் சேரும் செயல் குழுக்களையும் கொண்டிருக்கும். அதுவே அவற்றை மருந்துகளுக்கான சிறந்த ஆரம்பப் பொருள்களாக மாற்றுகிறது.
இதனால்தான் இயற்கைச் சேர்மங்கள் மருந்தியல் வரலாற்றில் முக்கிய இடம் பெற்றுள்ளன. அவை வெறும் மரபு மருத்துவமாக இல்லாமல், பரிணாம அழுத்தத்தின் நீண்ட விளைவாக உருவான ரசாயனக் கட்டமைப்புகள். ஒருவகையில், இயற்கை செய்து வரும் எண்ணிலடங்கா மூலக்கூறு பரிசோதனைகளை, மருத்துவத்தால் பயன்படுத்திக்கொள்ள முடிகிறது.
வில்லோ (willow tree) மரத்திலிருந்து அஸ்பிரின் (aspirin) இயற்கை மருத்துவத்திற்கு ஊக்கமளித்த மிகத் தெளிவான உதாரணங்களில் ஒன்று வில்லோ மரத்தின் பட்டை. பல நூற்றாண்டுகளாக, வில்லோ பனி, வலி, காய்ச்சல் ஆகியவற்றைக் குறைக்கும் என்று மக்கள் அறிந்திருந்தனர். பின்னர் விஞ்ஞானிகள் சாலிசின் (salicin) என்ற செயற்பொருளை பிரித்தெடுத்தனர். அதிலிருந்து வேதியியல் முன்னேற்றத்தின் வழியாக அசெடில் சாலிசிலிக் அமிலம் (acetyl salicylic acid) என்ற அஸ்பிரின் உருவானது. அனுபவ அடிப்படையில் அமைந்த பாரம்பரிய அணுகுமுறையிலிருந்து நவீன மருந்துவரை செல்லும் வழியைக் காட்டியதில் அஸ்பிரின் வரலாறு மிகவும் முக்கியமானது. முதலில் பயன்பாடு, பின்னர் செயற்பொருளின் தனிமைப்படுத்தல், வேதியியல் மாற்றம், இறுதியில், தரநிலையாக்கப்பட்ட உற்பத்தி மூலம் அந்த மருந்து அனைவருக்கும் கிடைக்கக்கூடியதாக மாற்றியது. இயற்கை பெரும்பாலும் முதல் சுட்டியைக் காண்பிக்கிறது. வேதியியல் அதைக் கண்காணிக்கக்கூடிய, மீண்டும் உருவாக்கக்கூடிய, நம்பகமான மருந்தாக மாற்றுகிறது. மருந்தியல் வரலாற்றின் மிகப்பெரிய சாதனைகள் சில, ஆய்வகங்களில் இல்லாமல், அன்றாட மனித அனுபவத்தில் தொடங்கியவை என்பதை அஸ்பிரின் கதை நமக்குத் தெரிவிக்கிறது.
2.4.2.0.0.0.0.2017.The aspirin story – from willow to wonder drug.pdf
சின்கோனா பட்டை (cinchona bark) மற்றும் கொய்னா (quinine)
சின்கோனா பட்டை, தென் அமெரிக்காவில் காய்ச்சலைக் குறைக்கப் பல காலமாகப் பயன்படுத்தப்பட்டது. அதன் செயல்விளைவு பொருள் கொய்னா. இது மலேரியாவுக்கு எதிராகப் பயன்பட்ட முதல் பயனுள்ள மருந்துகளில் ஒன்றாகி, மருத்துவ வரலாற்றையே மாற்றியது.
மலேரியா நூற்றாண்டுகளாக மனிதர்களைத் தாக்கி வந்த நோய். கொய்னா அதற்கு எதிராக மருத்துவத்திற்கு முதல் வலுவான ஆயுதங்களில் ஒன்றைக் கொடுத்தது.
கொய்னா என்பது அல்கலாய்டு, நைட்ரஜன் கொண்ட கரிமச் சேர்மம். அதன் மூலக்கூறு அமைப்பில் ஒரு குவினோலின் வளையமும், ஒரு குவினுக்லிடின் அமைப்பும் இணைந்திருக்கின்றன. இந்த சிக்கலான வடிவம் தான் அதன் உயிரியல் செயல்பாட்டின் ரகசியம்.
மலேரியா ஒட்டுண்ணி (Plasmodium) மனித ரத்த சிவப்பணுக்களில் வாழ்கிறது. அது ஹீமோகுளோபினை உடைத்து, ஹீம் என்ற நச்சுப் பொருளை உருவாக்குகிறது. இயல்பாக, அந்த ஹீமை, ஹீமோசோயின் என்ற நச்சற்ற வடிவமாக மாற்றி தப்பிக்கிறது. ஆனால் கொய்னா இங்கே தலையிட்டு அந்த மாற்றத்தைத் தடுக்கிறது. அதன் விளைவாக, நச்சான ஹீம் சேர்ந்து, ஒட்டுண்ணியை அழிக்கிறது.
ஒரு மருந்துச் செடியின் பயன் மாயமான குணமாக்கல் அல்ல, அது வேதிப்பொருளின் துல்லியமான உயிரியல் விளைவு என்பதைக் காட்டியது. கொய்னாவிலிருந்து, மலேரியா எதிர்ப்பு மருந்துகள் குறித்து பெரிய அளவிலான ஆராய்ச்சிகள் உருவாகின. இதனால் அமைப்பு-விளைவு உறவுகளைப் பற்றிய புரிதல், பக்கவிளைவுகளைச் சீர்செய்தல், புதிய தொடர்புடைய சேர்மங்களை வடிவமைத்தல் போன்ற நவீன கருத்துக்கள் மருந்தியல் துறையின் அடிப்படையாக மாறியது.
The tree that changed the world map: https://www.bbc.com/travel/article/20200527-the-tree-that-changed-the-world-map
நஞ்சான ஃபாக்ஸ்க்ளோ (Foxglove) தரும் இதய நிவாரணம்
ஃபாக்ஸ்க்ளோ (Foxglove, Digitalis purpurea) செடியிலுள்ள மணி வடிவ மலர்கள் கண்ணைக் கவர்ந்தாலும், அதன் உட்பொருள் மிகுந்த சக்திவாய்ந்த நச்சாக உள்ளது. ஆனால், இந்த நச்சே பிற்காலத்தில் இதய மருத்துவத்தில் புரட்சியை ஏற்படுத்தியது.
18ஆம் நூற்றாண்டில், வில்லியம் விதரிங் (William Withering) என்ற மருத்துவர், இன்று இதய செயலிழப்பின் ஒரு அறிகுறியாகக் கண்டறியப்படும் உடல் வீக்கம் (dropsy) கொண்ட நோயாளிகள், மூலிகை மருந்தால் குணமடைகிறார்கள் என்ற விசித்திரமான மருத்துவக் குறிப்பைக் கவனித்தார். நச்சு தன்மை கொண்ட செடி எப்படி இதய நோயைச் சரிசெய்கிறது என்பதற்கான பதிலை அறிய, அவர் முறையான ஆய்வுகளைத் தொடங்கினார். பல நோயாளிகளிடம் குறைந்த அளவில் அந்த மலரின் சாறை பயன்படுத்தி, அதன் விளைவுகளை பதிவு செய்தார்.
ஃபாக்ஸ்க்ளோவில் இதய கிளைகோசைடுகள் எனப்படும் டிஜிடாக்சின், டிஜாக்சின் சேர்மங்கள் இருப்பதைக் கண்டறிந்தார். இவை இதய தசை செல்களில் உள்ள Na⁺/K⁺-ATPase எனும் நொதியைத் தடுத்து, அதன் விளைவாக செல்களில் கால்சியத்தின் அளவை அதிகரிக்கின்றன. இதனால் இதய தசைச் சுருக்கம் வலுப்பெற்று (positive inotropic effect) இரத்தத்தை திறம்பட பம்ப் செய்ய முடியாமல் போகிறது. ஆனால் டிஜிடலிஸ் சேர்மங்கள் இதயத் துடிப்பை மெதுவாக்கி (negative chronotropic effect), ஒவ்வொரு துடிப்பையும் வலுவாக்குகின்றன. இதனால் இரத்த ஓட்டம் சீராகி, உடல் வீக்கம் குறைகிறது.
ஆனால் மிகச் சிறிய அளவில் மருந்தாக செயல்படும் இந்த சேர்மங்கள் (dose-response relationship), அளவு அதிகமானால் இதய துடிப்பு சீர்கேடு(arrhythmia), வாந்தி, மயக்கம், மேலும் மரணம் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் டிஜிடலிஸ் மருந்துகள் narrow therapeutic index உடையவை எனக் கருதப்படுகின்றன.
விதரிங் தனது ஆய்வுகளை மிகுந்த கவனத்துடன் பதிவு செய்து வெளியிட்ட நூல், ஃபாக்ஸ்க்ளோவின் மருத்துவப் பயன்பாட்டை உலகிற்கு அறிமுகப்படுத்தியது. இது மருந்தியல் (pharmacology) துறையின் ஆரம்பகால அறிவியல் அணுகுமுறைகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
An account of the foxglove, and some of its medical uses : with practical remarks on dropsy, and other diseases : Withering, William, 1741-1799 : Free Download, Borrow, and Streaming : Internet Archive: https://archive.org/details/b21517356/page/n5/mode/2up
இந்தக் கண்டுபிடிப்பு முக்கிய அறிவியல் உண்மையை வெளிப்படுத்துகிறது. இயற்கையில் உள்ள வேதிப்பொருட்கள், அவற்றின் அளவு மற்றும் பயன்பாட்டைப் பொறுத்து மருந்தாகவும் நச்சாகவும் மாறக்கூடும். இது Paracelsus கூறிய “The dose makes the poison” என்ற கோட்பாட்டை உறுதிப்படுத்துகிறது.
The Scientific Method: Lessons From William Withering’s Foxglove | JACC: Heart Failure: https://www.jacc.org/doi/10.1016/j.jchf.2024.10.022
Digitalis – Molecule of the Month – Sept 1996 – JSMol version: https://www.chemistry.bristol.ac.uk/motm/digitalis/digitalisjs.htm
சிதைந்த உணவின் பூஞ்சையிலிருந்து நவீன கிருமி சவால்கள் வரை
அலெக்ஸாண்டர் ஃப்ளெமிங் தனது பாக்டீரியா கலாச்சாரத் தட்டுகளில் ஒன்றில் பூஞ்சை மாசுபட்டிருந்ததையும், அதனைச் சுற்றியிருந்த பாக்டீரியாக்கள் இறந்திருந்ததையும் கவனித்தார். இச்சிறிய கவனிப்பு, மனித வரலாற்றிலேயே மிகப் பெரிய மருத்துவப் புரட்சிகளில் ஒன்றின் கதவைத் திறந்து, நுண்ணுயிர்க்கொல்லிகளின் (antibiotics) காலத்தின் தொடக்கமாக அமைந்தது. அதற்குமுன் மரண தண்டனை போல கருதப்பட்ட பாக்டீரியா தொற்றுகள், பெனிசிலின் மூலம் சிகிச்சையளிக்கக்கூடிய நோய்களாக மாறின.
வேதியியலின் கோணத்தில் பார்க்கும்போது, பெனிசிலின் β-லேக்டம் வளையம் கொண்ட மூலக்கூறு. இந்த சிறிய வளையம்தான் அதன் சக்தியின் மையம். பாக்டீரியாக்கள் தங்களது செல்படலத்தை உருவாக்க பெப்டிடோகிலைக்கானைத் தாங்கிய கட்டமைப்பை பயன்படுத்துகின்றன. இதை உருவாக்கும் முக்கியமான ட்ரான்ஸ்பெப்பிடஸ்ஸ் நொதிகளை பெனிசிலின் தடுக்கிறது.
Penicillin→Transpeptidase inhibition→Weak cell wall→Bacterial lysis
அதாவது பெனிசிலின் பாக்டீரியாவின் சுவர் எழுப்பும் திறனை அழிக்கிறது.
ஃப்ளெமிங் கண்டுபிடித்த புதிய வழி, இயற்கை நமக்குக் கற்பித்த எதிரிகளுக்கு எதிரான ஆயுதம்.1940-களில், ஹோவர்டு ஃப்ளோரி மற்றும் எர்ன்ஸ்ட் செயின் ஆகியோர் பெனிசிலினை பெரிய அளவில் தயாரிக்கும் முறையை கண்டுபிடித்தனர். இரண்டாம் உலகப்போரின் போது, இது ஆயிரக்கணக்கான வீரர்களின் உயிரை காப்பாற்றியது.
ஆனால் இந்தக் கண்டுபிடிப்பு மட்டும் போதுமானதாக இல்லை. அந்த மூலக்கூறை தூய்மைப்படுத்த, நிலைப்படுத்த, சோதிக்க, மற்றும் பெரிய அளவில் உற்பத்தி செய்ய வேதியியலாளர்கள், நுண்ணுயிரியலாளர்கள், புளிக்கவியல் வல்லுநர்கள், தொழில்துறை பொறியாளர்கள் ஆகியோர் தேவைப்பட்டனர். இவ்வாறு, அடிப்படை அறிவியலும் பயன்பாட்டு பொறியியலும் இணைந்த புதிய தளம் உருவானது. இயற்கை அளித்த மூலக்கூறை மனிதன் தனது புத்திசாலித்தனத்தால் மருந்தாக மாற்றியதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக இது அமைந்தது.
ஆனால், இயற்கையின் கதையில் எப்போதும் ஒரு திருப்பம் இருக்கும்.
இன்றைய உலகில், சூப்பர்பக்ஸ் என்ற புதிய எதிரிகள் உருவாகி வருகின்றனர். இவை பெனிசிலின் போன்ற மருந்துகளை எதிர்க்கும் பாக்டீரியாக்கள். அவை β-லேக்டமேஸ் என்கின்ற நொதிகளை உருவாக்கி,பெனிசிலின் β-லேக்டம் வளையத்தை உடைத்து விடுகின்றன:
β-lactam+β-lactamase→Inactive compound
இது மனிதனுக்கும் பரிணாமத்துக்கும் இடையே புதிய போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.
மண்ணிலிருந்து பிறந்த ஸ்ட்ரெப்டோமைசின்
அமெரிக்காவின் ரட்கர்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ஆல்பர்ட் ஷாட்ஸ் (Albert Schatz) காசநோய்க்கான மருந்தின் தேடலில், மண்ணில் வாழும் Streptomyces griseus என்ற நுண்ணுயிரை தனிமைப்படுத்தினார். அதிலிருந்து கிடைத்த பொருள் தான் ஸ்ட்ரெப்டோமைசின். மண் என்பது உயிர்களின் இரகசியக் களஞ்சியம். அங்கே பாக்டீரியாக்கள் ஒருவரை ஒருவர் தடுக்க வேதிப்பொருட்களை உருவாக்குகின்றன. ஸ்ட்ரெப்டோமைசஸ் போன்ற ஆக்டினோமைசீட்கள் தங்கள் சூழலில் போட்டியிடும் பிற நுண்ணுயிர்களை ஒடுக்க, துணை வளர்சிதை மாற்றப் பொருட்களை வெளியிடுகின்றன; ஸ்ட்ரெப்டோமைசினும் அதே இயற்கை ஆயுதங்களின் ஒன்றாகும்.
வேதியியல் ரீதியில், ஸ்ட்ரெப்டோமைசின் ஒரு சிக்கலான மூலக்கூறு. அது அமினோகிளைக்கோசைட் குடும்பத்தைச் சேர்ந்தது; இதில் பல சர்க்கரை போன்ற பகுதிகள் உள்ளன, மேலும் அது பாக்டீரியாவின் ரைபோசோமை இலக்காகக் கொள்கிறது. குறிப்பாக, புரத உற்பத்தியில் பங்கேற்கும் 30S துணைக்கூறில் இணைந்து, தவறான வாசிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் பாக்டீரியா சரியான புரதங்களை உருவாக்க முடியாமல் தளர்ந்து விடுகிறது.
1943ல் சிறிய ஆய்வகப் பணியாகத் தொடங்கிய முயற்சி, மனித வாழ்வை மாற்றும் மருந்தாக மாறியது. முதற்கட்டங்களில் மருந்து மிகக் குறைவாகவே கிடைத்தது. பின்னர் தொழில்துறை உற்பத்தி வளர்ந்தபோது, ஸ்ட்ரெப்டோமைசின் மருத்துவப் பயன்பாட்டுக்கு வந்தது.
மனிதன் நீண்ட காலம் தேடிய விடை, நுண்ணுயிரின் இயற்கை மொழியில் கிடைத்தது.
The True Story of the Discovery of Streptomycin: https://www.albertschatzphd.com/?cat=articles&subcat=streptomycin&itemnum=001
யூ மரத்திலிருந்து புற்றுநோய் எதிர்ப்பு மருந்து டாக்சோல்
1960களில், அமெரிக்காவின் National Cancer Institute தொடங்கிய இயற்கை மூலப்பொருள் ஆய்வுத் திட்டத்தில் யூ மரம் (Yew tree, Taxus brevifolia) மரத்தின் பட்டை சேகரிக்கப்பட்டது. இந்த மாதிரிகளை ஆராய்ந்த மன்றோ வால் (Monroe Wall), மன்சுக் வாணி (Mansukh Wani) என்ற விஞ்ஞானிகள், அப்பட்டைகளின் சாற்றில் இருந்து சிக்கலான டாக்சோல் (Paclitaxel, Taxol) சேர்மத்தைப் பிரித்தெடுத்தனர். இந்த மூலக்கூறின் முப்பரிமான வேதியியல் அமைப்பு மிகத் துல்லியமானதாக இருந்ததால், சிறிய மாற்றங்களே அதன் செயற்பாட்டை பாதிக்கும் என்பதை அவர்கள் உணர்ந்தனர்.
புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்க அது எப்படி செயல்படுகிறது என்பது பின்னர் தெளிவானது. டியூபுலின் (tubulin) புரதத்துடன் டாக்சோல் பிணைந்து, மைக்ரோடியூப்யூல்களின் இயக்க உறுதியற்ற தன்மையை நிறுத்தியது. அவை உடைந்து மறுபடியும் உருவாகும் இயல்பு தடைபட, செல்கள் மத்திய நிலையில் சிக்கிக்கொண்டன. இதனால், புற்றுநோய் செல்கள் பிரிவை இழந்து இறக்கத் தொடங்கின.
ஆனால், மரத்தின் பட்டையில் உள்ள டாக்சோல் அளவு குறைவாக இருந்ததால், அதிக அளவில் மருந்து தயாரிக்க மரங்களை வெட்ட வேண்டிய நிலை பெரிய சவாலை ஏற்படுத்தியது. பின்னர் யூ மரத்தின் இலைகளில் இருந்து கிடைக்கும் 10-deacetylbaccatin III என்ற முன்மூலப்பொருளை கொண்டு, அரை-செயற்கை முறையில் டாக்சோலை உருவாக்கும் தொழில்நுட்பம் வளர்ந்தது. இந்த முறையில் முழுமையான தொகுப்பு (total synthesis) சாத்தியமானாலும், அது தொழில்துறைக்கு பொருத்தமாக இல்லை. இருப்பினும் இந்த கண்டுபிடிப்பு மருத்துவத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. மார்பகப் புற்றுநோய், முட்டையகப் புற்றுநோய் போன்ற பல நோய்களுக்கு டாக்சோல் முக்கிய மருந்தாக மாறியது. அதன் தனித்துவமான செயல் முறையான, மைக்ரோடியூப்யூல் நிலைப்படுத்தல் புற்றுநோய் சிகிச்சையில் புதிய பாதையைத் திறந்தது.
From plant to cancer drug: lessons learned from the discovery of taxol – PMC: https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC10354831
கேப்டோப்ரில் (Captopril) இயற்கையிலிருந்து இதய மருத்துவத்துக்கான பயணம்
இரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தும் மருந்துகளின் வரலாற்றில், கேப்டோப்ரில் முக்கிய மைல் கல்லாக அமைந்தது. இது பாம்பின் விஷத்திலிருந்து தொடங்கிய அறிவியல் பயணத்தின் விளைவு; இயற்கை வழங்கிய உயிர்வேதியியல் சாவியை மனிதன் கவனமாக மாற்றியபோது, இதய மருத்துவம் புதிய பாதையை கண்டது.
பிரேசிலில் சில விஷப் பாம்புகளின் கடி, சில நேரங்களில் இரத்த அழுத்தத்தைத் திடீரெனக் குறைப்பதை ஆய்வாளர்கள் கவனித்தனர். அந்தக் குறிப்பை அடிப்படையாகக் கொண்டு, உடலில் இரத்த அழுத்தத்தை உயர்த்தும் ரெனின்–ஆஞ்சியோடென்சின் அமைப்பைத் தடுக்கக்கூடிய மூலக்கூறுகளைத் தேடும் முயற்சி தொடங்கியது. அந்த ஆராய்ச்சியில், பாம்புவிஷத்தில் காணப்பட்ட ஒரு பெப்டைட், ஆஞ்சியோடென்சின்-மாற்று நொதி (ACE) யைத் தடுக்கும் திறன் கொண்டது என்பதைக் கண்டறிந்தனர். இதுவே பின்னர் ACE தடுப்பான் மருந்துகளுக்கான பாதையைத் திறந்தது.
ஆனால் இயற்கைச் சேர்மத்தை மருந்தாக மாற்ற, வேதியியலாளர்கள் அதைப் புதிதாக வடிவமைக்க வேண்டியிருந்தது. பாம்புவிஷத்தில் இருந்த பெரிய, நிலையற்ற பெப்டைட் மூலக்கூறு நேரடியாக மருந்தாக செயல்பட ஏற்றதாக இருக்கவில்லை. எனவே, அதில் இருந்த பயனுள்ள செயற்பாட்டை மட்டும் எடுத்துக்கொண்டு, சிறிய அளவில், நிலையாக, வாய்வழி எடுத்துக்கொள்ளக் கூடிய வகையில் புதிய அமைப்பை உருவாக்கினர். அந்த முயற்சியின் விளைவாகவே கேப்டோப்ரில் உருவானது.
கேப்டோப்ரில் 1970களில் உருவாக்கப்பட்டு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய செயலிழப்பு போன்ற நிலைகளில் பயன்படத் தொடங்கியது. இது ரத்தக் குழாய்களைத் தளர்த்தி, இரத்த அழுத்தத்தைக் குறைத்து, இதயத்தின் வேலைச்சுமையை இலகுவாக்குகிறது. இதனால் இதயத்திற்குச் செல்லும் அழுத்தம் குறைந்து, நோயாளிகளின் நிலை மேம்படுகிறது. இயற்கை நுண்ணிய தொடக்கத்தை வழங்கினால், மருந்தியல் அதை பாதுகாப்பான, பயனுள்ள சிகிச்சையாக மாற்ற முடியும் என்பதற்கு இது தெளிவான எடுத்துக்காட்டு.
கேப்டோப்ரில் கதையும் foxglove, பெனிசிலின், ஸ்ட்ரெப்டோமைசின், பாக்க்லிடாக்செல் ஆகியவற்றின் கதைகளையும் இணைக்கும் அடிப்படை உண்மை ஒன்றே: இயற்கை தன்னிடம் பல சக்திவாய்ந்த மூலக்கூறுகளை வைத்திருக்கிறது; ஆனால் மனித அறிவு, வேதியியல், உயிரியல், மற்றும் பொறியியல் இணைந்தால்தான் அவை மருந்தாக மாறுகின்றன. சில நேரங்களில் ஒரு நச்சு மருந்தாகிறது; சில நேரங்களில் ஒரு விஷம், உயிரைக் காப்பாற்றும் சாவியாகிறது.
இந்த வரிசையில் கேப்டோப்ரில் முக்கியமானது, ஏனெனில் இது “இயற்கையை அப்படியே பயன்படுத்துதல்” என்ற எண்ணத்தைத் தாண்டி, இயற்கை உந்துதலால் புதிய மருந்து வடிவமைப்பை வளர்த்தது. அதாவது, மூலக்கூறை மட்டும் பெறுவது போதாது; அதை நிலைப்படுத்தவும், மேம்படுத்தவும், நோயாளிக்கு ஏற்ற வடிவில் மாற்றவும் வேண்டும். இதுவே நவீன மருந்து கண்டுபிடிப்பின் மையச் சிந்தனைகளில் ஒன்றாகும்..
The Legendary Story of Captopril: https://www.guidechem.com/guideview/history/captopril-legend-snake-venom-hypertension.html
இயற்கைச் சேர்மங்கள் அவற்றின் ரசாயன வளமையினால் மருந்து தொடக்கப் பொருள்களாக பயன்படுகின்றன. பரிணாமம் அதிக முக்கோண அமைப்புகள், முப்பரிமாணவேதியியல் சிக்கல்கள், உயிரியல் ரீதியாகச் செயல்படும் சேர்மங்கள் ஆகியவற்றை உருவாக்கியுள்ளது. பல இயற்கை மூலக்கூறுகள் புரதங்கள், திசுக்கள், அல்லது நொதிகளுடன் சேர்வதற்கேற்ப முன்னமே உருவாக்கப்பட்டவை போலத் தோன்றும். மற்றொரு காரணம் செடியைத் தற்காக்க அல்லது நுண்ணுயிரை மற்றொன்றிலிருந்து பாதுகாக்க உருவான மூலக்கூறு, மனிதனுக்கு வலுவான செயற்பாடு கொண்டதாக இருந்துள்ளது. மருத்துவம் அந்தச் செயற்பாட்டை வேறு நோக்கத்திற்கு மாற்றிப் பயன்படுத்துகிறது. பெரும்பாலும் அவை தளவமைப்பாக செயல்படுகின்றன. வேதியியலாளர் இயற்கைச் சேர்மத்தின் கட்டமைப்பை எடுத்துக் கொண்டு, வலிமை, பாதுகாப்பு, தெரிவுத் தன்மை, மருந்தியக்கவியல் ஆகியவற்றை மேம்படுத்த மாற்றுகிறார். இயற்கையிலிருந்து கற்றுக் கொண்டு, பொறியியலால் மேம்படுத்தும் இந்த கலப்பு முறை, இன்றைய மருந்து உருவாக்கத்தில் மிகவும் பயனுள்ளது.
சமீப ஆண்டுகளில் மனித மரபியல் மருந்தியல் கண்டுபிடிப்பில் மிகவும் சக்திவாய்ந்த கருவியாக மாறி புதிய தேடலை தொடர்ந்துள்ளது. பெரிய உயிரிவங்கிகளும் முழு மரபணுத்தொகை வரிசைநிர்ணயத் திட்டங்களும், மனித மக்கள்தொகையில் நோய் ஆபத்து, மருந்துக்கான தேவை, எதிர்ப்பு திறன் ஆகியவற்றை எவ்வாறு மரபணு மாற்றங்கள் பாதிக்கின்றன என்பதை ஆய்வு செய்ய உதவுகின்றன. பரிணாமம் ஏற்கனவே நம்மிடம் பெரிய பரிசோதனைகளை செய்து கொண்டிருக்கிறது. மரபணு மாற்றம் இயல்பாகவே நோய் ஆபத்தை குறைக்கிறதென்றால், அந்த மரபணு மருந்து இலக்காகப் பொருத்தமாக இருக்கலாம். மற்றொரு மரபணு மாற்றம் தீமையை ஏற்படுத்தினால், கோட்பாட்டில் சரியாகத் தோன்றினாலும், நடைமுறையில் ஆபத்தான இலக்காக இருக்கலாம். இதுதான் நவீன அறிவியலை அதிக திறமையாக்குகிறது. கண்மூடித் தேடலுக்குப் பதிலாக, இயற்கையாக நடைபெறும் பரிசோதனைகளைப் பயன்படுத்தி இலக்குகளை முன்னுரிமைப்படுத்த முடிகிறது. மனித மரபியல் வேதியியலை மாற்றுவதற்குப் பதிலாக எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை நுட்பமாக்குகிறது.
இன்று உயிரிவங்கிகள் டி.என்.ஏ வை மருத்துவத்தோடு இணைப்பதால் மருந்து கண்டுபிடிப்பின் வேகம் அதிகரித்துள்ளது. இன்று ஆராய்ச்சியாளர்கள் செல் வரிசைகள், விலங்கு மாதிரிகளுடன், மக்கள்தொகைத் தரவுகளைக் கொண்டு, எந்த மரமணு மாற்றம் நோயோடு, எதிர்வினையோடு, அல்லது பாதுகாப்போடு தொடர்புள்ளது என்பதை ஆராய்ந்து இலக்கு நிர்ணயத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறார்கள். மனித மரபியல் சான்றுகள் இலக்கு நோக்கிச் செல்லும் பாதைகளில் வரும் ஆபத்தை குறைக்க உதவுகின்றன. இயற்கை ஏற்கனவே அந்த இலக்கை ஓரளவு சோதித்துள்ளதா என்பதையும் கணிக்க முடிகிறது.
உதாரணமாக நீரிழிவு, இதய நோய், தன்னுடல் தாக்க நோய்கள், நரம்பியல் நோய்கள் போன்ற சிக்கலான நோய்களில் இது முக்கியமாகக் கருதப்படுகிறது. இவைகளில் எல்லாம், ஒன்றிற்கும் மேற்பட்ட மரபணுக்கள் பல பாதைகளில் ஒன்றோடொன்று பிணைந்து வலைப்பின்னல்களாக இருக்கின்றன. உயிரிவங்கிகள் அந்த வலைப்பின்னலை தெளிவாகப் பார்க்க உதவுகின்றன.
அமைப்பு வேதியியலின் (structural biology) எழுச்சி
இன்று விஞ்ஞானிகள் cryo-electron microscopy போன்ற நவீன கருவிகள், மேம்பட்ட படமெடுப்பு முறைகளுடன், புரதங்கள், ஏற்பிகள், பெரிய மூலக்கூறு கூட்டமைப்புகள் ஆகியவை இலக்குடன் எப்படி இணைகிறது என்பதை ஆழ்ந்த விவரத்துடன் ஆராய்கிறார்கள். மருந்தியல் பெரும்பாலும், சேர்மம் எவ்வாறு பிணைப்பு குழிக்குள் சரியாகப் பொருந்தி செயல்படுகிறது என்ற வடிவத்தின் கேள்வியைச் சார்ந்தது. உதாரணமாக
புரதத்தின் இயக்கத்தை மாற்றி இடைமுகத்தைக் கட்டுப்படுத்த முடியும். மேலும் அந்தத் தொடர்பை எவ்வளவு துல்லியமாகக் கணிக்க முடியுமோ, அவ்வளவு சிறப்பாக மருந்தை மேம்படுத்த முடியும்.
ஒரே மாதிரி தோற்றமுடைய இரண்டு சேர்மங்கள் முற்றிலும் வேறுபட்ட நடத்தையைக் காட்டினாலும், வடிவத்திலும் மின்னுத்தேஜனத்திலும் ஏற்படும் சிறிய மாற்றங்கள் கூட செயல்பாட்டை பெரிதும் மாற்ற முடியும். நவீன படமெடுப்பு இந்த உறவுகளைப் புரிந்துகொள்ள மேலும் உதவுகிறது.
இயற்கை மருந்து கண்டுபிடிப்பில் மிகக் கடினமான பிரச்சினைகளில் ஒன்று உற்பத்தி. நம்பிக்கைக்குரிய சேர்மம் அரிதான செடியிலிருந்தோ, மெதுவாக வளரும் பூஞ்சையிலிருந்தோ, அல்லது வளர்க்க கடினமான நுண்ணுயிரிலிருந்தோ கிடைக்கலாம். முன்பு இது பல திட்டங்களைத் தடுத்து நிறுத்தியது.
செயற்கை உயிரியல் இதை மாற்றிக் கொண்டிருக்கிறது. தற்போது விஞ்ஞானிகள் இயற்கைச் சேர்மத்தை உருவாக்கும் மரபணுக்களை அடையாளம் கண்டு, அவற்றை ஈஸ்ட் அல்லது பாக்டீரியா போன்ற நன்கு கையாளக்கூடிய உயிரிகளில் செலுத்த முடிகிறது. அதாவது, அவர்கள் அந்த மூலக்கூறிற்காக உயிருள்ள தொழிற்சாலையை உருவாக்குகிறார்கள்.
இது உயிரியல் பொறியியல் இணையும் அழகான தருணம். இயற்கை உயிர்சேர்க்கை அறிவுறுத்தல்களை வழங்குகிறது; பொறியியல் அதை அளவுக்கேற்றதாக மாற்றுகிறது. இதனால் ஒருகாலத்தில் அரிது அல்லது நிலையற்றது என்று கருதப்பட்ட சேர்மங்கள்கூட நடைமுறை மருந்துகளாக மாற்ற முடிகிறது .
ஏ.ஐ இன்று வேதியியல் மற்றும் உயிரியல் இடங்களை மிகச் செயல்திறனாகத் தேட உதவுகிறது. மருந்து கண்டுபிடிப்பு என்பது முடிக்க முடியாத அளவுக்கு அதிகமான சாத்தியங்களை உள்ளடக்கியது. ஏ.ஐ சரியான சேர்மங்களை முன்னுரிமைப்படுத்த, சாத்தியமான நச்சுத்தன்மைகளைச் சுட்டிக்காட்ட, பயனுள்ள மாற்றங்களைக் கணிக்க உதவுகிறது.
இயற்கைச் சேர்மங்கள் இந்த சூழலில் மிகவும் முக்கியம்; ஏனெனில் அவை ஏ.ஐ க்கு நிறையச் செறிவான பயிற்சி தரவுகளை வழங்குகின்றன. அவற்றின் சிக்கல் மாதிரிகளைப் பயிற்றுவிக்க உதவுகிறது. அவை உயிரியல் ரீதியாக பொருத்தமான வேதியியல் என்றால் என்ன என்பதை ஏ.ஐ கற்றுக்கொள்ள உதவுகின்றன.
ஏ.ஐ தனக்குத்தானே மருந்தைக் கண்டுபிடிப்பதில்லை. அது மனித விஞ்ஞானிகளுக்குச் சரியான முடிவுகளை எடுக்க உதவுகிறது. ஆனால் ஏ.ஐ, மரபியலும் இயற்கைச் சேர்ம வேதியியலும் சேரும் போது, மருந்து ஆராய்ச்சியில் மிகப் பொருத்தமான புதிய சூழல் உருவாகிறது.
உயிரினப் பல்வகைமை ஒரு மருத்துவ நூலகம்
முழு ஜீனோம வரிசைநிர்ணயம், நவீன ஸ்பெக்ட்ரோஸ்கோபி கருவிகள், முழுமையற்ற கோட்பாடுகள் இல்லாத நிலையிலும், முந்தைய விஞ்ஞானிகள் கவனமாகக் கவனித்து ஆராய்ந்ததில் இயற்கையில் குணப்படுத்தும் பல சுட்டிகள் இருப்பதை அறிந்தனர். பாரம்பரிய மருத்துவர்கள், பண்பாட்டுத் தாவரவியலாளர்கள் போன்றோர் இயற்கையைப் பயன்படுத்தியோடு அல்லாமல் இயற்கையிலிருந்து கற்றவர்கள் கூட. அவர்களுடைய பணி இன்றைய விஞ்ஞானம் அதிக சக்தியோடு தொடர்வத்துக்கு இடைப்பட்ட விதை.
புவியின் உயிரினப் பல்வகைமை என்பது சூழலியல் வளம் மட்டுமல்லாமல் அது மருத்துவ நூலகமாக விளங்குகிறது. ஒவ்வொரு உயிரினமும் தனித்துவமான வேதியியல் கொண்டுள்ளது, அதில் பலவற்றை நாம் இன்னும் ஆய்வு செய்யவே இல்லை. காடுகள், கடல்கள், ஈரநிலங்கள், பூஞ்சைகள், பூச்சிகள், நுண்ணுயிர்கள் போன்ற அனைத்தும் இன்னும் கண்டுபிடிக்கப்படாத சேர்மங்களை மறைத்துக் கொண்டிருக்கின்றன.
அதனால்தான் உயிரினப் பல்வகைமைக் குறைவு அறிவியல் ரீதியாகவும் பெரிய இழப்பபாக உள்ளது. குறிப்பிட்ட இனத்தை இழக்கும் போது, அதனுடன் தொடர்புடைய தனிப்பட்ட மூலக்கூறுகளையும் இழக்கக் கூடும். எதிர்கால ஆண்டிபயாட்டிக், புற்றுநோய் எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு போன்றவற்றிற்கான மருந்துகளை அறிந்துகொள்வதற்கு முன்பே நாம் அவற்றை இழக்கக்கூடும்.
இதனால் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காண அவசரம் உருவாகிறது. சூழல்களை காப்பது என்பது அழகு, சமநிலையைத் தவிர்த்து, எதிர்கால மருத்துவ வாய்ப்புகளையம் பாதுகாப்பது ஆகும்.
இன்றைய மருந்து ஆராய்ச்சி மிகவும் நம்பிக்கையளிப்பதாக இருப்பதற்குக் காரணம், அது எளிய கோட்பாட்டைச் சுற்றி சீரமைக்கப்பட்டிருப்பதால். இயற்கை தொடக்கப் புள்ளியாகவும், பொறியியல் அந்த முடிவை மேம்படுத்துவதக்கும் அமைந்துள்ளது.
அதாவது, இயற்கைச் சேர்மத்தை செயற்கை மாதிரியாக மாற்றலாம். மனித மரபியலைப் பயன்படுத்தி சரியான பாதையை முன்கூட்டியே தெரிந்துகொள்ளலாம். அரிய சேர்மத்தை நொதித்தல் அல்லது செயற்கை உயிரியல் மூலம் பெருமளவில் உற்பத்தி செய்யலாம். ஏ.ஐ மூலம் எந்த இயற்கை கட்டமைப்பு சிறந்தது என்பதை முன்கூட்டியே கணிக்கலாம்.
விஞ்ஞானிகள் எல்லா பயனுள்ள உயிர்வேதியியலையும் முழுமையாக புதிதாக உருவாக்கலாம் என்று கருதுவதில்லை. இயற்கை ஏற்கனவே கற்றுத் தந்ததை நாம் படிக்கத் தொடங்கியுள்ளோம். முதலில், மரபியல், நோயியல், மருத்துவக் கவனிப்பு மூலம் குறிப்பிட்ட நோய் பாதையின் அடையாளம் காணப்படுகிறது. அடுத்து, அந்தப் பாதையோடு தொடர்புடைய இயற்கைச் சேர்மங்கள், நச்சுகள், அல்லது அறியப்பட்ட மூலக்கூறுகளைப் பற்றிய தேடல் தொடர்கிறது. பின்னர் வேதியியல் மற்றும் உயிரியல் மூலம் அவை சோதிக்கப்பட்டு மேம்படுத்தப்படுகின்றன. இறுதியில், பொறியியல் உதவியுடன் வெற்றியான சேர்மம் நிலையான, அளவுக்கேற்ற தயாரிப்பாக மாற்றப்படுகிறது.
இந்த முறை முந்தைய முயன்று பார்த்துத் திருத்தும் முறையைவிட சிறப்பானது. அதற்காக சீரற்ற திரளான பரிசோதனை முற்றிலும் ஒழிந்துவிட்டது என்பதல்ல; இப்போது அது மிகச் சிறந்த வரைபடத்தால் வழிநடத்தப்படுகிறது. அந்த வரைபடத்தை உருவாக்குவதில் இயற்கையே ஒரு பெரிய பங்கைக் கொண்டுள்ளது.
மரபு அறிவின் தொடர்ந்த மதிப்பு
மரபு மருத்துவம் அறிவியல் சோதனைக்கு மாற்றாகாது; ஆனால் அது பயனுள்ள கருதுகோள்களின் மூலமாக இருக்கிறது. பல தலைமுறைகளாக குறிப்பிட்ட செடியை காய்ச்சல், வலி, அல்லது தொற்றுக்குப் பயன்படுத்தியிருந்தால், அதில் உண்மையான உயிரியல் செயற்பாடு இருக்கலாம் என்பதற்கான சுட்டி கிடைக்கிறது. முக்கியமானது என்னவென்றால், மரபிலிருந்து தனிமைப்படுத்தலுக்கும், தனிமைப்படுத்தலிலிருந்து செயல் முறைக்கும், பின்னர் கட்டுப்படுத்தப்பட்ட மருத்துவச் சோதனைகளுக்கும் செல்லும் வழியில் கவனமாகச் செல்ல வேண்டும். இது நோயாளிகளைப் பாதுகாக்கும்; அதே சமயம் பண்பாட்டு அறிவின் மதிப்பையும் காக்கும்.
பல சந்தர்ப்பங்களில் மரபு அறிவும் நவீன அறிவியலும் எதிரிகள் என்று கருதாமல், அவை ஒரே கண்டுபிடிப்பு செயல்முறையின் வெவ்வேறு படிகள் என்பதை உணர வேண்டும். முதலாவது சாத்தியமான சுட்டியைத் தருகிறது, இரண்டாவது அதனை ஆய்வுகள் மூலம் உறுதிசெய்கிறது.
இயற்கை-ஊக்க மருந்துகளின் எதிர்காலம்
மருந்து கண்டுபிடிப்பின் எதிர்காலம் ஒரே அற்புதத் தொழில்நுட்பத்தால் அல்ல, பல துறைகளின் இணைப்பால் உருவாகும். மரபியல் தொடர்ந்து மறைந்துள்ள பாதைகளை வெளிப்படுத்தும். கட்டமைப்பு உயிரியல் மூலக்கூறுகள் எப்படி செயல்படுகின்றன என்பதை காட்டும். செயற்கை உயிரியல் அரிய சேர்மங்களை அணுகக்கூடியதாக மாற்றும். ஏ.ஐ முன்னுரிமைப்படுத்தும் சேர்மங்களை மருத்துவ வேதியியல் செம்மைப்படுத்தி, மருத்துவ அறிவியல் மனிதர்களிடம் பரிசோதிக்கும்.
உயிரியல் ரீதியாக பயனுள்ள வேதியியலின் சிறந்த எடுத்துக்காட்டுகள் இன்னும் இயற்கையிடம் தான் உள்ளன. ஆனால் இயற்கையிலிருந்து கற்றுக்கொள்ளும் முறை இன்றும் மாறியுள்ளது. இனிமேல் நாம் தனிமைப்படுத்தலிலிருந்து விளக்கத்திற்கும், கவனிப்பிலிருந்து செயல்முறைக்கும், சீரற்ற கண்டுபிடிப்பிலிருந்து முறைப்படுத்தப்பட்ட வடிவமைப்பிற்கும் நகர வேண்டிய தருணம் உருவாகியுள்ளது.
இதுதான் இயற்கையின் மருந்து தரவுத்தளம் என்ற சொற்றொடரின் உண்மையான அர்த்தம். அது வாழ்க்கையின் உள்ளே எழுதப்பட்ட விஸ்தாரமான வேதியியல் காப்பகம். அதைத் தேட, படிக்க, பயன்படுத்த இப்போது நம்மிடம் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு சக்திவாய்ந்த கருவிகள் உள்ளன.
மருத்துவ வரலாறு முழுவதும் இயற்கையே வழிகாட்டி, மனித அறிவியல் பின்னால் வந்த கதைகளால் நிரம்பியுள்ளது: வில்லோ மரம் அஸ்பிரினாக மாறியது, சின்கோனா கொய்னாவாகியது, ஃபாக்ஸ்க்ளோவ் இதய மருந்துகளாகியது, பூஞ்சை பெனிசிலினாக மாறியது, மண் நுண்ணுயிர்கள் ஸ்ட்ரெப்டோமைசினைத் தந்தன, யூ மரம் டாக்சாலை வழங்கியது, பாம்பு நஞ்சு இரத்த அழுத்தப் பாதைகளை விளக்கியது.
இந்தக் கதைகள் அனைத்தும் நினைவூட்டுவது, மிகப் பெரிய மருத்துவ முன்னேற்றங்கள் பல, கவனிப்பு, பொறுமை, ஆர்வம் ஆகியவற்றிலிருந்து தொடங்கியது என்பதை. முந்தைய விஞ்ஞானிகள் இயற்கையால் உந்தப்பட்டனர்; ஏனெனில் பரிணாமம் கோடிக்கணக்கான ஆண்டுகளாக ரசாயனப் பரப்பை ஆராய்ந்து வந்திருக்கிறது,
இன்றைய காலத்தில் அந்தப் பயணம் இன்னும் சக்திவாய்ந்ததாக பாதையாக மாறியுள்ளது. மனித மரபியல், உயிரிவங்கிகள, அமைப்பு உயிரியல், செயற்கை உயிரியல், செயற்கை நுண்ணறிவு ஆகியவை இயற்கையின் உயிர்வேதியியல் வளத்தை இன்னும் துல்லியமாகவும், செயல்திறனாகவும் மருந்து கண்டுபிடிப்பு இயந்திரமாக மாற்றுகின்றன. இயற்கை என்ற முதல் ஆசிரியரிடம், அறிவியல் தற்போது சிறந்த மாணவனாக மாறிக் கொண்டிருக்கிறது.
அதனால்தான் எதிர்கால மருந்து கண்டுபிடிப்பு, இலக்கில்லாத வேதியியலை உருவாக்குவதற்குப் பதிலாக, வாழ்க்கையில் ஏற்கனவே எழுதப்பட்டுள்ள அற்புத வேதியியலைப் புரிந்துகொள்வதையே அதிகமாக நம்பும் என்று எதிர்பார்க்கலாம்.
Nature’s drug database – The Works in Progress Newsletter: https://www.worksinprogress.news/p/natures-laboratory
