(1)
உதிர்ந்த மலர்
கிளைக்கு உயர்ந்தது
வண்ணத்துப்பூச்சி
[ஹைக்கூவை உள்வாங்கிய மொழிமாற்றம்]
(2)
வீழ்ந்த மலர் கிளைக்கு
உயர்ந்தது கண்டேன்
வண்ணத்துப்பூச்சி அட!
[வரிக்கு வரி மொழிமாற்றம்]
கவிஞர்: அராகிடா மோரிதாகெ (1473-1549)
ரக்கஎதானி
கஏரூதோமிரேபா
கோச்யோவ்கன
落花枝に
帰ると見れば
胡蝶哉
பரவலாக மேற்கோள் காட்டப்படும் ஹைக்கூக்களுள் இதுவும் ஒன்று. மோரிதாகே ஒரு துறவி, ஹைக்கூக்களின் தொடக்க காலத்தில் அதைப் படைத்த கவிஞர்களுள் ஒருவர். பதினாறாம் நூற்றாண்டில் ஹைக்கூ கவிதைகள் மூன்றடிகளும், 5 + 7 + 5 = 17 அசைகளும் (ஹிராகனா எழுத்துருக்களும்) பெற்று ஜப்பானிய இலக்கியத்தில் இடம்பெறத் தொடங்கிய நாள் முதலாக, இன்று வரையில் ஒலிக்கப்படும் ஹைக்கூ என்னும் பெருமை இக்கவிதைக்கு உண்டு. சிறந்த ஜப்பானிய ஹைக்கூக்களின் பட்டியலில் கட்டாயம் இது இடம்பெறும். எளிமையான சொற்களில் சிறப்பாக இயற்கையைக் காட்சிப்படுத்திய விதத்தால் இது நூற்றாண்டுகள் கடந்து, இன்றும் மேற்கோள்களில் உலவுகின்ற கவிதையாக நிலைத்துவிட்டது.
இக்கவிதையின் முதல் அடி உதிர்ந்த மலரைப் பேசுகிறது. தமிழில் ‘கறந்த பால் மடி புகாது’ எனப் பழமொழி உள்ளதைப் போல ஜப்பானிய மொழியில் ‘உதிர்ந்த மலர் கிளை திரும்பாது’ எனப் பழமொழி உள்ளது. ‘ஓச்சி ஹனா யெதானி கயேராசு’ என அதனைச் சொல்வர். ஓச்சி – விழுந்த, ஹனா – மலர், யெதா_னி – கிளை_க்கு, கயேராசு – திரும்பாது. இந்தப் பழமொழியின் ஒரு பாதியை முதலடியில் கொண்டது இக்கவிதையின் முதற்சிறப்பு.
காஞ்சி வரிவடிவங்களின் ஒலிப்பு முறை இடத்துக்கு இடம் மாறுபடும். இக்கவிதையின் முதலடியில் இடம்பெறும் காஞ்சி வரிவடிவங்களும், மேற்சொன்ன பழமொழியில் இருக்கும் காஞ்சி வரிவடிவங்களும் ஒன்றெனினும், இங்கு அதன் ஒலிப்பு வேறாக வரும். ஒரு காஞ்சி வரிவடிவத்துக்குக் குறைந்தது இரண்டு ஒலிப்புகள் உள்ளன. ஒன்று ஒன்யோமி ஒலிப்பு, மற்றொன்று குன்யோமி ஒலிப்பு. பழமொழியில் ஒலிக்கப்பட்டது குன்யோமி முறை, ஹைக்கூவில் ஒலிக்கப்பட்டது ஒன்யோமி முறை.
ரக் க எதா னி
落 (ら) ர [வீழ்ந்த]
花 (か) க [மலர்]
枝 (えだ) எ தா [கிளை] + に நி [க்கு]
落花枝に = らかえだに = ரக்கயெதானி = வீழ்ந்த மலர் கிளைக்கு
முதலடியில் வீழ்ந்த மலர் இரண்டாம் அடியில் திரும்புவதைக் குறிப்பிடுகிறார்.
கிளைக்கு என முடியும் முதலடியின் தொடர்ச்சியாக, க ஏ ரூ தோ = திரும்புவதை, மி ரே பா = பார்த்தால். 帰 (かえ) க ஏ, る ரு, と தோ [திரும்புவதை]. புறப்பட்ட இடத்துக்குத் திரும்புவதைக் குறிப்பிடும் சொல் ‘கஏரூ’ 帰 (க ஏ) る (ரூ). வீட்டுக்குத் திரும்புவது, நாட்டுக்குத் திரும்புவது, இப்படியான வாக்கியங்களில் கஏரூ இடம்பெறும். இங்கு மலர் கிளைக்குத் திரும்புவதற்கு இடம்பெற்றுள்ளது. 見 (み) மி என ஒலிக்கப்படும் இந்த காஞ்சி வரிவடிவம் பார்த்தல் என்னும் வினையைக் குறிக்கும். அதனுடன் れ (ரே), ば (பா) – மிரேபா என ஒலிக்கையில், பார்க்கையில், கணிக்கையில், உணர்கையில், எனப் பொருள்படுகின்றது.
கஏரூதோமிரேபா
帰 (かえ) கஏ,る ரூ, と தோ [திரும்புவதைப்]
見 (み) மி, れ ரே, ば பா [பார்க்கிறேன்]
帰ると見れば = かえるとみれば = கஏரூதோமிரேபா = திரும்புவதைப் பார்க்கிறேன்.
மூன்றாம் அடியில் ஹைக்கூக்கள் கொடுக்கும் ஆச்சரியத் திருப்பம், வண்ணத்துப்பூச்சி இடம்பெறுகிறது. இந்த அடியில் வண்ணத்துப்பூச்சியைச் சொல்லும் ஜப்பானிய வார்த்தை ‘கோச்யோவ்’ கவிதைப் பயன்பாட்டில் மட்டும் வழங்கப்படுவது. உரைநடையில் வண்ணத்துப்பூச்சி ‘ச்யோவ்’ என்றும் ‘ச்யோவ்ச்யோவ்’ என்றும் வழங்கப்படுகிறது.
胡 (こ) கோ 蝶 (ちょう) ச்யோவ் இதில் உள்ள இரண்டு காஞ்சி வரிவடிவங்களுள் இரண்டாவதாக உள்ள காஞ்சி வடிவம் மேற்சொன்னபடி உரைநடையில் வண்ணத்துப்பூச்சியைக் குறிப்பிட உதவும் வடிவம், ச்யோவ். அது ‘ச்சி’ ‘யோ’ ‘உ’ என்னும் மூன்று எழுத்துகளை உள்ளடக்கிய ‘ச்யோவ்’. முதலாவதாக உள்ள காஞ்சி வடிவம் ‘கோ’, இரண்டாவதாக உள்ள ‘ச்யோவ்’ உடன் இணைந்து ஒலித்துக் கவிதையில் வண்ணத்துப்பூச்சியை ‘கோச்யோவ்’ எனக் குறிப்பிடுகிறது.
哉 மூன்றாம் அடியின் கடைசி எழுத்தான இந்த காஞ்சி வடிவத்தின் ஒலிப்பு கன. இதன் பொருள் வியப்பது. இதனை இத்தொடரின் நான்காவது ஹைகூ, ‘காகமும் அழகு’விலும் கண்டோம். ஹகூக்களில் வியப்பைக் குறிப்பிட இந்த ‘கன’ என்னும் இரண்டு அசைகள் (ஜப்பானிய மொழியின்படி ஒவ்வொரு எழுத்தும் தனித்தனி அசைகள்) வழங்கப்படுகின்றன. பல ஹைக்கூக்களில் இதைக் காணலாம். 哉 (かな) கன, வியப்பது. அட, ஆஹா போன்ற சொற்கள்.
கோச்யோவ் கன
胡 (こ) கோ 蝶 (ちょう) ச்யோவ் [வண்ணத்துப்பூச்சி]
哉 (かな) கன [ஆஹா]
胡蝶哉 = こちょうかな = கோச்யோவ்கன = வண்ணத்துப்பூச்சி, அட!
வரிக்கு வரி மொழிபெயர்க்காமல் கவிதையை உள்வாங்கி மொழிபெயர்த்தால்,
உதிர்ந்த மலர்
கிளைக்கு உயர்ந்தது
வண்ணத்துப்பூச்சி!
என்றும் மொழிபெயர்க்கலாம்.
துறவி எழுதிய கவிதை என்பதால், இயற்கையைப் பாடிய இதனுடன் வாழ்க்கைத் தத்துவத்தை இணைத்தும் சிலர் பொருள் சொல்வதுண்டு. மோரிதாகெ ஆன்மாவை வண்ணத்துப்பூச்சியாக உருவகப்படுத்தியுள்ளார் என்னும் பார்வையை மறுப்பதற்கில்லை.
இயற்கையைப் பாடுவதாகக் கொண்டாலும், வாழ்க்கையைப் பாடுவதாகக் கொண்டாலும் இந்த ஹைக்கூ இன்னும் பல ஆண்டுகள் பலராலும் மேற்கோளாகச் சொல்லப்படும் என்பது உறுதி.
