
கலைப் பிரிவுகளில் சினிமா இயல்பாகவே வெகுஜன ரசனைக்கு அடிபணிந்து வர்த்தக நிறுவனமாகிவிட்டதில் ஆச்சர்யமில்லை. சினிமா, உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஊடகமாக, படைப்பாளி சொல்ல விரும்பும் கருத்தின் மொழியாக, எதார்த்தங்களின் பிரதிபலிப்பாக செயல்படும் வாகனமாக இப்போது பெரும்பாலும் நடைமுறையில் இல்லை. சினிமா கேமரா, மாயக்கோல் ஆகிவிட்டது, முன் நிற்கும் மனிதர்களை அரை தெய்வங்களாக்கும் வல்லமை பெற்றுவிட்டது. அப்பட்ட சிந்தனைகளை காண்பிப்பதற்கு பதிலாக ஒரு மாய உலகைப் படைத்துவிடுகிறது. இத்தகைய சிருஷ்டிப்பில் தவறு எதுவுமில்லை எனினும், சினிமா , அமானுஷ்யங்களையும், அபாய சாகசங்களையும், நடைமுறைக்கு உதவாத சித்தாந்தங்களையும், அச்சுப் பால் அடையாளங்களையும் சுமந்துவரும் விளையாட்டு ரங்கராட்டினம் ஆகிவிட்டதில், சினிமா என்ற கலை தன் முழு திறனையும் அடையவில்லையோ என்ற ஏக்கம் பலருக்கு உள்ளது.
இலக்கியத்திற்கும் சினிமாவிற்குமான உறவு சிக்கலானது. விழிவழி ஊடகம் வளர்வதற்கு முன், எழுத்து ஒன்றே வெகுஜன நுகர்வு பாணியாக இருந்தபோது, எழுத படிக்கத் தெரியாத பாமரர்களுக்கு நாடகங்கள் மற்றும் பிரவசனங்கள் மட்டுமே இலக்கியத்தின் வெகுஜன பகிர்வுக்கு உகந்த வெளிப்பாட்டு முறைகளாக இருந்தது. சினிமாவைப்போல அல்லாமல் சரியான திரைக்கதை இல்லாவிட்டால் நாடகங்கள் எடுபடாது. இப்போது தமிழ் இலக்கியம், புத்தக வடிவில் (புனைவு, அபுனைவு ஏதேனும் இருக்கட்டும்) குறைவாக விற்பனை ஆவதற்கு சினிமாவும் ஒரு பெரும் காரணம். உளவியல் ரீதியாக மனிதனுக்கு இயல்பாகவே கதை கேட்கும் வேட்கை இருக்கிறது என்கிறார் பிரபல மனோதத்துவ விஞ்ஞானி கார்ல் யுங் (Carl Jung). சினிமாவும் கதைசொல்லிதான். வர்த்தக சினிமா ஒரு வகை மாயக் கதையை காட்டி, மனிதனின் கதைக்கேட்கும் ஆர்வத்தை செயற்கை ஆடம்பரங்களினால் பூர்த்தி செய்வதினால், எதார்த்தங்களை அடிப்படையாகக் கொண்ட இணை சினிமாவை பலரால் பாராட்ட முடிவதில்லை, இதனால் நல்ல இலக்கியத்தைப் பாராட்டும் பக்குவம் சிறு இலக்கியக் கூட்டத்தினுள் நின்றுவிடுகிறது. இந்த நிலை சில சமயம் நல்லதே என்று தோன்றினாலும் சினிமாவிற்குள்ள பரந்த நுகர்வின் துணைகொண்டு நல்ல இலக்கியத்தை மக்கள் மத்தியில் பரப்ப நினைக்கும் நோக்கம், வர்த்தக சினிமாவால் தகர்த்தெறிய பட்டுவிட்டது. நேரடி மேடை நாடகங்களை பேணி காக்கும், ரசிக்கும் மாநிலங்களில், புத்தக வழி இலக்கிய விற்பனைக்குச் சரிவுகள் இருப்பதில்லை. மாறாக சினிமா நுகர்வு அதிகமுள்ள மாநிலங்களில் நாடகங்களின் நிலை முந்தைய காலங்களை விட இப்போது மோசமாகிவிட்டதோடு நிற்காமல், அந்த மொழி இலக்கிய நுகர்வையும் குறைத்து விட்டது.
இணை சினிமா (Parallel Cinema) தீவிர அர்த்தமுள்ள சினிமா வேட்கையை ஓரளவுக்கு தணிக்கப் பிறந்தது. இந்திய இணை சினிமாவை பற்றிப் பார்ப்பதற்கு முன், ‘இணை சினிமா’ என்பதன் விளக்கத்தைப் பார்ப்பது நல்லது. முதலில் ‘இணை சினிமா’ என்ற பதம் முழுக்கவும் இந்திய மொழி சினிமாக்களையே குறிப்பதென்பதை அறிய வேண்டும். ஐரோப்பிய, அமெரிக்க, ஜப்பானிய இயக்கங்கள், இந்திய இணை சினிமாவிற்கு முன்னோடிகளாக இருப்பினும் அவற்றிற்கு வேறு பெயர்கள் உள்ளன. ‘இணை’ என்ற வார்த்தையின் உபயோகம், இவ்வகைத் திரைப்படங்கள் ஹிந்தி மற்றும் மாநில வர்த்தகத் திரைப்படங்களுக்கு ஒரு மாறுதலாக அமைவதினாலும், வர்த்தகத் திரைப்படங்கள் வெளியாகும் அதே அரங்கங்களில் வெளியாவதாலும் , இப்பெயர் அவசியமானது என்பது என் கருத்து.
பொதுவாக இந்திய இணை சினிமாவின் முக்கிய அம்சங்கள் கீழ்வருமாறு.
1. சமூகப் பிரச்சனைகளை எந்தவித ஒப்பனையும் இன்றி முன்வைப்பவை.
2. தேவையில்லாத ஆடல் பாடல் இல்லாதவை.
3. முழுக்கவும் பிராந்திய நிலப்பரப்பில் எடுக்கப்படுபவை.
4. இலக்கியப் படைப்புகளில் அடிப்படை கொண்டவை.
5. எதார்த்தங்களில் அடிப்படை கொண்டவை.
மேற்கண்ட புள்ளிகள் இருந்தால்தான் ஒரு படைப்பு இணை சினிமாவாகும் என்பது நிபந்தனை அல்ல, குறிப்பாக ஐந்தாவது புள்ளி. பல இந்திய இணைத் திரைப்படங்கள் கற்பனை காட்சிகளாகவும், நடைமுறைக்குப் பிணக்கான சம்பவங்களை உள்ளடக்குகின்றன. இணைத் திரைப்படங்களின் துவக்கம் கிழக்கு இந்தியாவில், குறிப்பாக வங்காளத்தில் அறுபதுகளில் ஆரம்பித்ததெனலாம். வங்காள முன்னோடி இயக்குநர்களான சத்யஜித் ரே , ரித்விக் கட்டாக், மிருணாள் சென் போன்றவர்கள் இயக்கிய படங்கள் பெரும்பாலும் ஐரோப்பிய நியோ நுவா (Neo Noir) படங்களில் ஆதாரம் கொண்டவை. குறிப்பாக இத்தாலிய மொழிப் படங்களின் தாக்கம் ஆரம்ப வங்காள இணை சினிமாக்களில் அதிகம் தெரிகிறது.
சத்யஜித் ரே இயக்கிய பதேர் பாஞ்சாலி (1955), அபராஜிதோ (1956), அப்பு சன்சார் (1959), இந்திய இணை சினிமாவின் முன்னோடிகள். பதேர் பாஞ்சாலி, பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் எழுதிய நாவலின் திரையாக்கம். வறுமையில் வாழும் ஒரு சிறிய குடும்பத்தின் அன்றாட வாழ்க்கைக் கதை. அப்பு எனும் சிறுவனை மத்திய பாத்திரமாக வைத்து, அவன் கண்களிலிருந்து சமூகத்தை காணும்படி எடுக்கப்பட்ட ஒரு முயற்சி. சத்தியஜித் ரே மற்றும் வங்காள சினிமாவை உலகுக்கு அறிமுகப்படுத்திய படைப்புகள். வெகுநேரம் நீடிக்கும் பின்னணி இசையில்லா காட்சிகள், அண்மைய முகக் காட்சிகள், வங்காளத்தின் நிலப்பரப்போடு இணைந்த ஓப்பனியற்ற கதா பாத்திரங்கள், அப்போதைய வங்காளத்தை எந்தவித காட்சி மாறுதலும் இன்றி உலகிற்கு காட்டியது. சத்யஜித் ரே இயக்கிய பல திரைப்படங்கள் இணை சினிமா ரகத்தை சேர்ந்தவை. குறிப்பாக அகாந்துக் (Agantuk – 1991), ஷத்ரஞ் கே கிலாடி (Shatranj Ke Khilari – 1977), ப்ரதிதுவந்தி (Pratidwandi – 1970) போன்றவை சத்தியஜித் ரேவை உலகின் தலைசிறந்த இயக்குநர்களுள் ஒருவராக நிலைநாட்ட உதவியது.
இணை சினிமாவின் கதையாக்கம் , வர்த்தகத் திரைப்படங்களைக் காட்டிலும் வித்தியாசமானது. உதாரணத்திற்கு அகாந்துக் படத்தில், நடுத்தரக் குடும்பத்தில் அமைதியாகக் கணவனுடன் வாழும் சாமான்ய இல்லத்தரசி ஒருத்திக்கு மர்ம மனிதர் ஒருவரின் கடிதம் வருகிறது. சிறுவயதில் ஓடிப்போன அவளின் மாமன் என தன்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறார் எழுத்தாளர். அதுமட்டுமில்லாமல் அடுத்த வாரம் அவள் வீட்டுக்கு வருவதாகவும் எழுதுகிறார். கதாநாயகிக்கு அப்படிப்பட்ட ஒருவர் தன் குடும்பத்தில் இருந்ததாக ஞாபகம் இல்லை. அதன்பின் நடக்கும் நிகழ்வுகளை சித்தரிக்கிறது திரைப்படம்.
ஷத்ரஞ் கே கிலாடி (தமிழில் – சதுரங்க ஆட்டக்காரர்கள் ) உலக சினிமா படங்களுள் மிக முக்கியமான படமாகக் கருதப்படுகிறது. தேய்வுக்காலங்களில் இருக்கும் முகலாய இந்தியாவில் இரண்டு நவாபுகள் சமுகத்தின் , தங்கள் சொந்த இல்லத்தின் நிலையை மறந்து, வறட்டுக் கௌரவத்திற்காக வேலை செய்யாமல் சதா சர்வ காலமும் சதுரங்கம் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். ஆங்கிலேயப் படை இந்தியா முழுவதையும் கைப்பற்றுவதற்கு எதிராக எதுவும் செய்யாமல் காலம் தள்ளுகிறார்கள். புகழ்பெற்ற ஹிந்தி எழுத்தாளர் முன்ஷி பிரேமச்சந்த் எழுதிய கதையின் திரையாக்கம். இத்திரைப்படம் வர்த்தக வெற்றியும் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மிருணாள் சென் (Mrinaal Sen) இயக்கிய மிருகயா (Mrigayaa- 1976) இணை சினிமாவின் அற்புதமான எடுத்துக்காட்டு, மிதுன் சக்ரபோர்த்தியின் முதல் திரைப்படமும் அதுவே. காலனித்துவ காலங்களில் அரங்கேறும் கதை முடிவில் நேயர்கள் முன் வைக்கும் கேள்வி சங்கடமானது, தனித்துவ பார்வைக்கோணத்திலிருந்து பதிலளிக்க வேண்டியது. மிதுன் சக்ரபோர்த்தி ஆரம்பகாலங்களில் மார்க்சிஸ்ட் தீவிரவாதியாக இருந்தபோது எடுக்கப்பட்ட திரைப்படம். இணை திரைப்படங்கள் அக்காலங்களின் அடையாளப் படங்களாக (Cult Films) இருக்கமுடியாது என்ற எண்ணத்தை உடைத்தெறிந்து குந்தன் ஷா இயக்கிய ஜானே பி தொ யாரோ (Jane Bhi Do Yaaron – 1986). இத்தாலிய படமான ப்ளோ அப் (Blowup) பின் கருவை இந்திய காணோட்டத்திற்கு மாற்றியமைக்க எடுத்த முயற்சி. இப்போதும் தலைசிறந்த இந்தியப் படங்கள் வரிசையில் முதல் பத்து திரைப்படங்களில் ஒன்றாக நிலைத்து நிற்கிறது.
இணைத் திரைப்பட இயக்குநர்களில் முக்கியமானவர் ஷியாம் பெனெகல். அன்குர் (Ankur-1974) , த்ரிகால் (Trikaal- 1985) , மந்தன் (Manthan- 1976) போன்ற படங்களின் மூலம் தனக்கென ஒரு தனித்துவ பாணியை அமைத்துக்கொண்டவர். 1961 இல் போர்த்துகீயர்கள் கோவாவை விட்டு வெளியேறும் காலப் பின்னணியில் இயக்கப்பட்ட த்ரிகால், சுவாரஸ்யமான கதைநடையை உள்ளடக்கியது. பிரபல கேலிச்சித்திர ஓவியர் மாரியோ மிரண்டாவின் பரம்பரை வீட்டில் படமாக்கப்பட்ட இப்படம், அக்கால கோவாவின் ஒரு உன்னத காலக் கண்ணாடி. ஷியாம் அடிப்படையில் கதைசொல்லி. சமுதாயத்தின் நெறிகளை கற்பனைப் படைப்புகளின் மூலம் கேள்வி கேட்பவர். கதாநாயகி மிளாக்ரீனியாவை தேடிவரும் இளமைக்கால காதலன், அவள் வசித்த பரம்பரை வீட்டின் அழிந்த கோலத்தை கண்டு மனதினுள் பேசும் ஒற்றை வசனம், அனைத்துப் பாத்திரங்களின் விருப்பு வெறுப்புகளை கேள்விக்குள்ளாக்கும் விதம் முடிகிறது. ஷியாம் வர்த்தக அழுத்தத்தினால் பல கதைக்கருக்களை கைவிட்டதாகப் பேட்டியில் கூறியுள்ளார்.
வர்த்தக நாயகர்கள் பெரும்பாலும் இணைத் திரைப்படங்களை புறக்கணிப்பதற்கு சில முக்கிய காரணங்கள் உண்டு. முதலாவதாக, குறைந்த முதலீட்டில் எடுக்கப்படுபவை என்பதால் வர்த்தக முயற்சிகளை விட குறைந்த வெகுமதியே கிடைக்கும் என்பதற்காக. இரண்டாவது, குறைவாக விநியோகிப்பாளர்களும், திரையரங்குகளும் கிடைக்கும் நிலையில், அதிக ஓட்டம் காணாது என்பதாலும். மூன்றாவதாக (முக்கியமாக), கலை திரைப்படங்களில் நடிக்கும் நாயகர்களுக்கு ஒரு முத்திரை குத்தப்பட்டுவிடும் என்பதாலும் இருக்கலாம். அதிர்ஷ்டவசமாக , இணை திரைப்படங்களில் நடிப்பதற்கென்றே திறமையான கலைஞர்கள் வரிசை இருப்பதும் உண்மை. அக்குழுவில் நாஸிருதீன் ஷா, பாருக் ஷைக் , ஓம் பூரி, ஷபானா ஹாஸ்மி , ஆனந்த் நாக், அம்ரிஷ் பூரி, அமோல் பாலேக்கர் போன்றவர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் பலர் வெற்றிகரமாக வர்த்தக சினிமாவிற்குள்ளும் விஜயம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சில மாநில திரையுலகில், முன்னணி கலைஞர்கள் இணை சினிமாவில் நடிக்கத் தயங்குவதும் இல்லை.
இணை சினிமா ஒரு காலத்தில் வர்த்தக சினிமா அளவிற்கு வேரூன்றியிருந்தது என்பதை இப்போது நினைத்தால் நம்பமுடியவில்லை. தேசிய திரைப்பட நிறுவனம் (NFDC) , இணை திரைப்படங்கள் தயாரிப்பில் பெரும்பங்கு வகித்தது. அதுமட்டுமின்றி பல ஐரோப்பிய கலைஞர்கள் இந்திய இணை திரைப்படங்களை தயாரித்துள்ளனர். ஆங்கிலேய தயாரிப்பு என்றாலும், நாடக இயக்குநர் பீட்டர் புரூக் இயக்கிய மஹாபாரதம் (1989) திரைப்படம் இங்கு குறிப்பிடத்தக்கது. ஐரோப்பிய திரை விழாக்களில் இந்திய பிரிவில் மட்டுமின்றி உலக போட்டி பிரிவிலும் திரையிடப்பட்டு பல விருதுகளையும் வென்றுள்ளன. மெதுவாக நடைபோடும் திரைக்காட்சி, வெகுவாக வர்த்தக படங்களை கண்டு பழகிப்போன நேயர்களுக்கு சோர்வை ஏற்படுத்தலாம். பாத்திரங்களுள் ஊடாட்டம் சில சமயம் மொழியால் சொல்லப்படுவதில்லை. பொது அறிவில், இணை திரைப்படங்கள் தீவிர உணர்ச்சிகளை உள்ளடக்குபவை என்ற கருத்தை , சத்யஜித் ரே இயக்கிய கூபி கைன் பாகா பைன் (1969) என்ற நகைச்சுவை திரைப்படம் உடைத்தெறிந்து. முதலீடு குறைவாக இருப்பதினால் திரை நுட்பத்தில் அதிக செலவுசெய்ய முடியாத நிலையில் கற்பனைத் திறனினால் சில உன்னத காட்சியமைப்புகளை உருவாக்க முடிந்தது. உதாரணத்திற்கு, மிருதங்கம் , கஞ்சீரா , கடம் , மோர்சிங் இசைக்கு பூதகணங்கள் ஆட்டம் போடும் காட்சியமைப்பு மற்றும் பூதராஜாவின் வசனம்.
வர்த்தக ரீதியாக அதிக சம்பாத்தியம் கிடைக்காததால், இணை இயக்குநர்கள் சிலர் சின்னத்திரைக்கு மாறினார்கள். தூர்தர்ஷன் ஆரம்பகாலங்களில் ஷியாம் பெனெகல் இயக்கிய பாரத் ஏக் கோஜ் (Bharath Ek Khoj), கதா சாகர், குல்ஸார் இயக்கிய கிர்தார் போன்ற நிகழ்ச்சிகள், இலக்கிய ஆதாரத்துடன் நல்ல திரைக்கதையோடு வெளிவந்தவை. பாரத் ஏக் கோஜ், ஜவஹர்லால் நேரு எழுதிய டிஸ்கவரி ஆப் இந்தியாவின் (Discovery Of India) திரையாக்கம். நாடக பாணியில் எடுக்கப்பட்ட பாரத் ஏக் கோஜ் துவக்கக் காட்சியில், ரிக் வேதத்தின் நசாதிய சூக்த (Nasadiya Sukta) பாடலுடன், கலைநயம் கலந்த வரலாற்று காட்சியோடு அரங்கேறிய படைப்பு. ஐம்பத்து மூன்று பாகங்கள் தூர்தர்ஷனிற்காக தயாரிக்கப்பட்டது.
வட இந்திய இணை திரை இயக்கத்திற்கு இணையாக தென்னிந்தியாவிலும் மாநில மொழிகளில் இயக்கங்கள் உருவாகின. கன்னடம் மற்றும் மலையாளம் இந்த இயக்கத்தில் பெரும்பங்கு வகித்தன. கிரிஷ் காசரவல்லி , ஆதூர் கோபாலகிருஷ்ணன் , ஜி.அரவிந்தன் , ஜான் ஆபிரகாம் , கிரிஷ் கர்னாட் , ஜி.வி. ஐயர் போன்றவர்கள் இந்த இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்கள். ஒந்தன ஓந்து காலத்தல்லி (Ondanondu Kalathalli – 1978), கிரிஷ் கர்னாட் எழுதி, இயக்கி, பிரபல கன்னட நடிகர் ஷங்கர் நாக நடித்து வெளிவந்த திரைப்படம். இரண்டு போர் வீரர்கள், தங்கள் தளபதிகளின் சுயநலனுக்காக போராடி விழும் கதை. ஜப்பானிய சாமுராய் திரைப்படங்களின் பாணியில் எடுக்கப்பட்ட திரை காவியம்.
கணபதி வெங்கட்ரமன ஐயர் கன்னட திரை ஜாம்பவானாக கருதப்படுபவர். பெரும்பாலும் காவிய திரைப்படங்களை இயக்கிய இவர், சமஸ்கிருதத்தில் ஆதி சங்கராச்சார்யா (1983) மற்றும் சுவாமி விவேகானந்தா (1988) என்ற இரண்டு கலைப் படங்களுக்குப் புகழ்பெற்றவர். கன்னட இயக்குநர்கள் பி.வி. கரந்த் மற்றும் கிரிஷ் கர்னாட், இலக்கிய சாதனைகள் படைத்த பல நாவல்களைத் திரையிலும் கொண்டுவந்துள்ளனர். குறிப்பாக கன்னட எழுத்தாளர் யூ.ஆர். அனந்தமூர்த்தி எழுதிய சமஸ்காரா,கடஷர்தா போன்றவை இந்து தர்மத்தை, அறநிலைகளை விமர்சித்தவை. யூ ஆர் அனந்தமூர்த்தி மற்றும் எஸ்.எல்.பைரப்பா எழுதிய நாவல்கள் பல எழுத்து வடிவிலேயே சர்ச்சைக்குள்ளாகியவை. தென் மொழிகளில் நாடக பாரம்பரியத்தை இன்னமும் பேணிக்காக்கும் கன்னடத்தில், சினிமாவைக் காட்டிலும் நாடக மேடையில் பல வித்தியாசமான படைப்புகள் இன்னமும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
கன்னடத்தை அடுத்து இணை சினிமாவிற்கு முக்கியமான இடத்தை கொடுத்தது மலையாளம்தான். பொதுவாக வங்காள இணை சினிமா ஆரம்பமான காலத்திலேயே மலையாள இணை சினிமாவும் ஆரம்பமாகிவிட்டது. ஜி.அரவிந்தன், மலையாள இணை சினிமாவின் மிக தீவிர தொண்டர். ஆவணப் படங்கள் பாணியில் அமைந்துள்ள அவர் திரைப்படங்களில் மௌனமான பின்னணி இசையில் தொன்மமும், காட்சியும் பிணைந்து காணப்படுகிறது. கும்மாட்டி (Khumaatti- 1978), அரவிந்தனின் கையொப்ப பாணியின் உன்னத உதாரணம். மிக நிதானமாக நகரும் திரைக்கதை, மழலையின் மாயக்கதைகளில் ஆதாரம் கொண்டது. அதூர் கோபாலகிருஷ்ணன் இயக்கி 1994 இல் வெளிவந்த விதேயன் (Vidheyan) வர்த்தக நாயகர்கள் இணை சினிமாவில் நடிக்கமாட்டார்கள் என்ற பொது கருத்தை முறியடித்தது. மம்முட்டியை கதாநாயகனாக கொண்டு வெளிவந்த திரைப்படம், மலையாள கதாநாயகர்கள் மற்ற மாநில நாயகர்களை காட்டிலும் வித்தியாசமானவர்கள் என்பதை காண்பித்தது. பொதுவாகவே மலையாள சினிமாவில் கலை ரசனை மேலோங்கி காணப்படுகிறது.
மேற்கண்ட அனைத்து மாநில மொழிகளிலும் காணக்கிடைக்கும் இணை சினிமா கலாச்சாரம் தமிழ் சினிமாவில் முற்றிலும் இல்லை என்பதே வருத்தம். கதாநாயகர்களின் நூறடி கட்-அவுட் வைத்து, முதல் நாள் முதல் ஆட்டத்தில் , கதாநாயகனின் அறிமுக காட்சியில், ‘தலைவா !’ என்ற கூச்சலுடன் ஆரவாரத்தில் ஈடுபடும் தமிழ் பொது ரசிகர்களிடம் இணை சினிமாவை பற்றி பேசி புரிய வைப்பதில் அர்த்தமில்லை. இத்தனைக்கும் இலக்கியத்தை தழுவிய திரைப்படங்கள் தமிழ் திரையுலகில் இல்லாமல் இல்லை. ஜெயகாந்தன் நாவல்களான சில நேரங்களில் சில மனிதர்கள், உன்னைப்போல் ஒருவன், யாருக்காக அழுதான் போன்றவை திரையாக்கம் கண்டாலும், வர்த்தக சினிமாவின் அலைப்பெருக்கில் கலை சினிமாக்கள் அடித்து சென்றுவிடுகின்றன. அரசியலுக்கும் சினிமாவிற்கும் முடிச்சுப்போடும் மாநிலத்தில், சினிமாவை ஒரு கலைப் பிரிவாக ஆராய இயக்குநர்கள் முன்வருவதில்லை. இந்திக்கு அடுத்தபடியாக ஆண்டில் அதிக படங்களை வர்த்தகம் செய்யும் உலகில், இணை சினிமாவிற்கு ஓரிரண்டு உதாரணங்களே கொடுக்கமுடிகிறது. பாலு மகேந்திரா இயக்கிய வீடு (1988), அண்டை மாநிலமான கேரளாவை சேர்ந்த இயக்குநர் ஜான் ஆபிரகாம் இயக்கிய அக்ராஹாரத்தில் கழுதை (1977) போன்ற ஓரிரு படைப்புகளையே காட்டமுடிகிறது.நவீன தமிழ் நாடங்களை அரங்கேற்றும் கூத்துப்பட்டறை போன்ற குழுக்களுக்கு திரையில் அவர்களது படைப்புக்களை கொண்டுவர தயாரிப்பாளர்கள் முன்வரவேண்டும்.
பொதுவாக இணை சினிமா தொண்பதுகளில் முடிவு கண்டது என்ற கருத்து ஓரளவுக்குத்தான் உண்மை. தேசிய திரைப்பட நிறுவனம், தொண்பதுகளில் இந்திய பொருளாதார நிலைமை மோசமடைந்த காலங்களில், நிதிநிலை பற்றாக்குறையினால் அதிக திரைப்படங்களை தயாரிக்க முடியவில்லை என்பது உண்மையே. ஆனால் ஆர்வலர்கள் இணை சினிமா இயக்கத்தை சாக விடவில்லை. தற்போதும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன ஆனால் அவை பெரும்பாலும் பெரிய திரைக்கு வருவதே இல்லை. தீவிர சினிமா ஆர்வலர்கள் குழுக்களிலும், வெளிநாட்டு நேயர்களுக்குமே அவை காட்டப்படுகின்றன. விழிவழி ஊடகத்தின் மூலம் கலையின் எல்லைகளை விரிவாக்கும் முயற்சிகளில் பல கலைஞர்கள் (உதாரணத்திற்கு, கொடகு பிராந்தியத்தைச் சேர்ந்த சினிமா கலைஞர் கிரண் சுப்பைய்யா) இன்னும் முயற்சித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஊக்குவிக்கும் விதமாக விழாக்கள், சிறப்பு காட்சிகள் போன்றவையும், இணை சினிமாவைப்பற்றி விழிப்புணர்வும் இன்னும் அதிகம் தேவை.
தொடர்புள்ள பதிவு:
https://www.ejumpcut.org/archive/jc59.2019/Eswaren-Tamil : Contemporary Tamil cinema and its departure from the mainstream: “Manusangada/Cry Humanity” and “To Let” by Swarnavel Eswaran, p. 1
