இரண்டாம் உலகப் போரின் அழிவிற்கு பிறகு மக்கள் திரள் பயன்படுத்தக் கூடிய மலிவு விலை வீடுகள் மற்றும் சமூக செயல்பாட்டு கூடங்களின் தேவை பெருகியது. இக்கட்டுமான பணிகள் பெரிய அளவில் துவங்கப்பட்டது. கண்ணாடிகளால் மழுப்பாத மண்ணுருக்கி(கான்கிரீட்) கட்டிடங்கள். சதுரம், கோணம் போன்ற வலிமையான வடிவங்களில் இருக்கும். அழகுக்காக அலங்காரம் சேர்ப்பதை தவிர்த்து, கட்டிடங்கள் நேர்த்தியாகவும், கட்டிடத்தின் உள்ளமைப்பே வெளியில் தெரியும் படி(inside out) வடிவமைக்கப்படுகிறது. இதுவே “ப்ரூட்டலிஸ்ட்”(Brutalist) கட்டிடக்கலை. “நீண்டகால பயன்பாடே முதன்மை” என்பதே இக்கலை வடிவின் அடிப்படை.
நேர்த்தியான தோற்றத்திற்காக இக்கட்டிடங்கள் விரும்பப்பட்டாலும், எந்த மேற்பூச்சும் இல்லாத வெளிப்படை தன்மையும், உளவியல் தளத்தில் பார்வையாளர் மீது திணிக்கப்படும் பாரமும் பொதுமக்களிடையே ஒரு விலகலை ஏற்படுத்தியது. புனைவு தளத்தில் இதே சிந்தனையை பிரதிபலிக்கையில் அனாவசிய மேற்பூச்சு ஏதும் இன்றி கதை மாந்தர்களை உலவ விட முடியும். சமூகத்தை உள்ளபடி முன்வைத்து விமர்சிக்க முடியும். குறிப்பாக வரலாற்றை முன்வைக்கும் கலை இன்னும் வீரியத்துடன் நிகழ முடியும். “The Brutalist” திரைப்படம் அதை முயன்றுள்ளது.
ஒரு எளிய புரிதலுக்காக இத்திரைப்படத்தை இப்படி விளக்கலாம் : இரண்டாம் உலகப் போரில் பாதிக்கப்பட்ட ஒரு ப்ரூட்டலிஸ்ட் கட்டிட கலைஞன் தன் அடையாளத்தை காக்கவும், கலையின் உச்சம் தொடும் நம்பிக்கையுடனும் அமெரிக்க கரை ஒதுங்குகிறான். அமெரிக்க தாராளவாதமும், கனவுகளை நனவாக்கும் முதலியமும்(Capitalism) அவனுக்கு பெருநம்பிக்கை அளிக்கின்றன. தன்னுடைய லட்சியங்களை நிறைவேற்றிக் கொள்ள முதலியம் அவனுக்கு உதவுகிறது. ஒரு கட்டத்தில் தன்னைச் சுற்றி இருப்பவை அனைத்தும் வெறும் பசப்புகள் என்பதை அறிந்து, தன் ஆன்மா சிதைக்கப்பட்டதை உணர்ந்து அவன் தன் தாய் நாட்டிற்கு திரும்புகிறான். தன் கலையின் உச்சங்களை தொடுகிறான். மிக எளிமையான அர்த்தம் இது. ஆனால் கதாபாத்திரங்களின் யூத/கிறிஸ்த்துவ பின்னணி, மேற்குலகில் இம்மதங்களின் ஊடாட்டங்கள் குறித்த புரிதல் கொண்டவர்களுக்கு இப்படம் வேறு ஒரு தளத்தில் நிகழ்வதை அறிய முடியும். யூத அடையாளம் மேற்குலகு அனைத்திற்கும் ஒரு இடைஞ்சலாக இருப்பதை தொடர்ச்சியாக வலியுறுத்துப்படுகிறது. ஜெர்மனிய வதை முகாம் முதல் புராட்டஸ்டன்டிச அமெரிக்கா வரை.
கதாநாயகன், ஒரு யூதக் கட்டிடக் கலைஞன். ஹோலோகாஸ்ட் நிகழ்வின் உளவியல் அலைக்கழிப்புகள் அனைத்தும் வெளிப்படும்(inside out) ஒரு கட்டிட சின்னத்தை எழுப்புகிறான். மனதில் பாரமாக இறங்கும் இருண்ட கட்டிடங்களை அமைக்கும் அதே நேரம் , அவை யாவும் போர் நினைவுகளை தூண்டும் பதுங்கு குழிகளை போலவும், ஜெர்மனிய வதை முகாம்களை போலவும் வடிவமைக்கிறான். ஒருபுறம் கடந்தகாலத்தை பதிவு செய்தபடி, வருங்கால மனித சமூகம் அடையாளத்தை தாண்டி சிந்தித்து முழு சுதந்திரத்தை நோக்கி நகர வேண்டிய தேவையை வலியுறுத்துகின்றன இக்கட்டிடங்கள். அந்த வகையில் தன்னுடைய கலை பல காலங்கள் நிலைத்து மானுட வரலாற்றில் அவ்வப்போது வெடிக்கும் புரட்சியில் பெரும் பங்களிப்பை ஆற்றும் என்று நம்புகிறான்.
முக்கிய பாத்திரமான மாஸிமோ, புராட்டஸ்டன்டிசத்துடன் பிணைந்திருக்கும் முதலிய அதிகாரத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார் (மேக்ஸ் வெபரின் “Protestant Ethic”). கதாநாயகனின் லட்சியத்தை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளை அவர் வழங்குகிறார். மனவேதனையால் இயக்கப்படும் ஒரு யூதக் கலைஞர் மற்றும் அவருடைய கனவுகளை நிதியளிக்கும் ஒரு புராட்டஸ்டன்ட் மூலதனவாதி. இருவரும் காலம் கடந்து நிற்கும் தன் அடையாளத்தை பதிக்க முயல்கின்றனர்; ஒருவர் தன் கலையின் மூலம் மற்றவர் செல்வம்/செல்வாக்கின் மூலம். இந்த உறவு, யூத சமூகங்களும் கிறிஸ்தவ ஆதிக்கம் கொண்ட சமூகங்களும் இடையே காணப்படும் சிக்கலான வரலாற்று மற்றும் அதிகார உறவுகளை பிரதிபலிக்கிறது.
தன் கலை சாத்தியப்பட பெரும்பான்மையான கிறித்துவத்தை தனது கலையின் மையத்தில் நிறுவ அந்த யூதர் வற்புறுத்தப்படுகிறார். தனது முக்கியமான கலைப்பணியின் மையத்தில் ஒரு சிலுவையைச் சேர்ப்பது, ஒரு யூதக் கட்டிடக் கலைஞருக்கு அளிக்கும் மன நெருக்கடி அசாதாரணமானது. மேற்கத்திய சூழலில் நிதியுதவி பெறவும், பெருமை அடையவும், ஒரு யூதக் கலைஞனாக இருந்தாலும், கிறிஸ்தவ அடித்தளத்தில் கட்டிடமொன்றை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. சிலுவை, அந்த ஆதரவுக்கான சின்னமாகும் — ஒரு விலைபோல. ஒரு கலைஞன் தன் படைப்பிற்காக கடக்க வேண்டிய முரண்களை இது பிரதிபலிக்கிறது. சிலுவை, இங்கு, அவரது சொந்த வேதனையும் “தியாகத்தையும்” குறிக்கும் சின்னமாக மாறுகிறது.
கதாநாயகன் மட்டுமல்லாது அனைத்து யூத கதாபாத்திரங்களும் தொடர்ச்சியாக அடையாள சிக்கலை எதிர்கொள்கின்றனர். ஒருவர் மட்டும் கிறித்துவராக மாறி தப்பி பிழைக்கிறார். இந்த அடையாள விவாதங்கள் அனைத்தும் கூர்மை கொள்வது சோபியா கதாபாத்திரத்தின் பூடகமான மெளனத்தால். பெரும்பான்மை நேரம் மௌன சாட்சியாக உலவும் இப்பாத்திரம், அது பேசும் இடங்களில் இப்படத்தின் அரசியல் கூர்மையாகிறது. படத்தின் பிரசார நிழல் இந்த சோபியா. படம் சோபியா கதாபாத்திரத்தில் துவங்குகிறது. சில இராணுவ வீரர்கள் சோபியாவிடம் அவளது உண்மையான தாய் நாட்டிற்கு அவள் செல்ல வேண்டி இருப்பதை வலியுறுத்துகிறார்கள். உலகின் வேறு எந்த மூலையிலும் தனக்கு பாதுகாப்பு இல்லை எனவும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தாய் நாடான இஸ்ரேல் மட்டுமே தனக்கு பாதுகாப்பானது என்று சோபியா வலியுறுத்துகிறார் . படத்தின் கடைசி நிமிடங்களை சோபியா ஆக்கிரமிக்கிறார். “பயணம் முக்கியமல்ல, இலக்கே முக்கியம்” என்பது சோபியா பார்வையாளர்களுக்கு சொல்லும் செய்தி. இந்த வரியின் அர்த்தங்கள் பல.
***
வரலாற்றின் பல கொடும் அத்தியாயங்களை வென்று நின்ற குழுவாக தன்னை யூத இனம் தொடர்ச்சியாக முன்வைத்துக் கொண்டிருக்கிறது. வருங்கால இடர்பாடுகளை எதிர்கொள்ளவும் அச்சமூகம் தன்னை தயார் படுத்திக் கொள்கிறது. தன் வரலாற்றை தானே எழுதியது. தனக்கான இலக்கியங்களை உருவாக்கியது. அந்த வரிசையில் வெளியான ஒரு முக்கியமான படைப்பு “The Brutalist”.
திரைப்படங்களை மிக முக்கிய கருவியாக மேற்கத்திய அரசியல் எப்போதுமே உபயோகித்துள்ளனர். அந்த வகையில் “The Brutalist” தனக்கான பிரச்சாரத்தை மிகத் திறமையாக முன்வைத்துள்ளது. படத்தின் துவக்கத்திலேயே சுதந்திரதேவி சிலை தலைகீழாக காட்டப்படுகிறது. அமெரிக்க நாட்டை குறித்து, அதன் தாராளவாதம் பற்றிய பிம்பம் குறித்த விமர்சனங்கள் அந்த ஒரு சட்டகத்தில் சொல்லப்படுகிறது. கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் இத்திரைப்படத்திற்கு சில ஆஸ்கர் விருதுகளை வழங்கியதன் மூலம் அமெரிக்கா தனது தாராளவாதத்தை மீண்டும் முன்னிறுத்த முயன்றது. மிக நுணுக்கமாக தன்னுடைய பிரச்சாரத்தை, திரைக்கு வெளியேயும், ஆஸ்கர் விருது குழு அரங்கேற்றியுள்ளது.
