Site icon சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

துரதிருஷ்டம்

தொடர்ந்து இருபது ஆண்டுகளாக ஜெய்கிஷோர் கொலை வழக்கில் எவ்விதத் துப்பும் கிடைக்காமல் திணறி வருகிறது காவல்துறை. இப்படிக் காவல்துறை திணறுவது இவ்வருடத்தில் இது ஆறாவது முறை என்பது தெரிய வந்திருக்கிறது. இருபது வருடங்களுக்கு முன்னான குற்ற வழக்குகளைத் தீர்க்கத் துவங்கிய காவல்துறையினக்ளீன் டெஸ்க்திட்டத்தில் தோய்வு…… “

இன்ஸ்பெக்டர் துரை, கோபத்துடன் தொலைக்காட்சியை அணைத்தார். தனது இருக்கையில் வந்து தொப்பென்று அமர்ந்தார். கண்ணாடிச் சுவருக்கு அப்பால் பறக்கும் மகிழுந்துகள், சீராக அதனதன் பாதையில், எறும்புகள் போல் ஊர்ந்துகொண்டிருந்தன. ஆங்காங்கே, விண் ரோந்து வாகனங்கள் சிகப்பு மற்றும் நீல விளக்குகளை ஒளிர விட்டபடி அந்தரத்தில் நின்று போக்குவரத்தை மேற்பார்வை பார்த்தபடி இருந்தன.  இடையிடையே, செவ்வாய் கிரகத்திலிருந்து வழமையாக வரும் விண்களன்களை டெஸ்லா ராக்கேட்டுகள் பத்திரமாகத் தரையிறக்கிக்கொண்டிருந்தன.

“விடுங்கள் சார். தொலைக்காட்சிக்காரர்கள் அப்படித்தான் பேசுவார்கள். உங்களைப் பார்க்க ஒரு தனியார்  துப்பறிவாளர் வந்திருக்கிறார்” என்றார் எழுத்தர் ஆறுமுகம்.

“இப்போது யாரையும் சந்திக்கும்  மனநிலையில் இல்லை ஆறு” என்றார் துரை விரக்தி மேலிட.

“சார், இவரை அப்படி எதுவும் சொல்லி அனுப்பிவிட முடியாது. இவரது அப்பா நாட்டுக்காக விண்வெளியில் உயிர் விட்டவர்”

“என்ன? உயிர் விட்டவரா? விண்வெளியில் உயிர் விட்டவர்கள், நாம் நாட்டிலிருந்து, யாரும் இல்லையே?”

“உண்மைதான். அவரது அப்பா விண்வெளியில் சென்ற கலன் மீட்கப்படவே இல்லை. தொலைந்து போனவர் பட்டியலில் தான் வருகிறார். ஆனால், தொலைந்து  பல வருடங்கள் ஆகிவிட்டது. விண்கலன்களுக்குள் இருக்கும் பிராணவாயு மாதக்கணக்கில் வருவதே பெரிய விடயம். அதை வைத்துத்தான் அவர் இறந்திருக்கலாம் என்று முடிவு செய்து அப்படிச் சொன்னேன்.” ஆறுமுகம் தலையைச் சொறிய,

“சரி வரச்சொல்லுங்கள்” என்றார் துரை சலிப்பாக.

வெளியே சென்ற ஆறுமுகம் , மீண்டும் துரையின் அறைக்குத் திரும்பியபோது, உடன்  ராகேஷும் இருந்தான்.

“இதோ பாருங்கள் ராகேஷ். உங்கள் அப்பா பெரும் மரியாதைக்குரியவர். அதனால் தான் உங்களை உள்ளே அழைத்துப் பேசிக்கொண்டிருக்கிறோம். உண்மையில் இங்கே நிலைமை சற்று சரியில்லை. கைவசம், முடிக்க இயலாத வழக்குகள் தேங்கியிருக்கின்றன. இப்போது உங்களுக்கு…..” என்று துரை பேசிக்கொண்டிருக்கையிலேயே,

“சார், உங்களிடம் உள்ள முடிக்க இயலா வழக்குகளை நான் முடித்துவிட்டால்? எனது நிறுவனமே அப்படி ஒரு துவக்க நிலை நிறுவனம் (Startup) தான்.உதாரணமாக, ஜெய்கிஷோர் கொலை வழக்கை” என்றான் ராகேஷ்.

“எப்படி? எப்படி முடிப்பீர்கள்? 2120ல் நடந்த கொலை, இருபது ஆண்டுகள் ஆகிவிட்டது.  பகலில் நடந்திருக்கிறது. அப்போதெல்லாம் தெருவுக்குத் தெரு, வீட்டுக்கு வீடு சிசிடிவிக்கள். அதை வைத்து வீட்டிற்கு யாரும் வரவில்லை, யாரும் வீட்டிலிருந்தும் வெளியே செல்லவும் இல்லை என்பது தெளிவு. ஆனால், ஜெய் கிஷோர் கொல்லப்பட்டிருக்கிறார். அதுவும் கத்தியால் நடுமார்பில் குத்தப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். கத்தில் கைரேகைகள் ஏதும் இல்லை. இதை வைத்து எப்படி…” என்று சொல்லிக்கொண்டிருக்கையிலேயே, 

“நான் துப்பறிந்து கண்டு பிடித்துவிட்டால், இனி காவல்துறையின் கண்டுபிடிக்க இயலா வழக்குகளுக்குள் வேலை செய்ய, என் நிறுவனத்தைப் பணிக்கு அமர்த்த ஒப்பந்தமிட வேண்டும். சம்மதமா?”

இருக்கையில் முன் சாய்ந்தவாறு மேஜை மீது கை வைத்து, பேசிக்கொண்டிருந்த துரை  இப்போது சாய்ந்துகொண்டார். சற்று யோசித்தார்.,

“நான் இருப்பது காவல்துறை. இது அரசு வேலை. அரசு ஒரு தனியார் நிறுவனத்தைப் பணிக்கு அமர்த்துவதையெல்லாம் நான் நிர்ணயிக்க முடியாது. ஆனால், நீங்கள் வழக்கை துப்பறிந்து தரும் பட்சத்தில், உங்களை நான் என் தனிப்பட்ட பயன்பாட்டிற்காய், பணிக்கு அமர்த்திக்கொள்ள முடியும். சம்மதமா?” என்றார் துரை.

ராகேஷ் ஆம் என்பதாய் மேலும் கீழுமாய் தலையாட்டினான்.

“முதலில் ஒரு வேலையை வெற்றிகரமாய் முடித்துக்காட்டுங்கள். ஜெய்கிஷோர் கொலை வழக்கை விசாரித்து…” என்று துரை சொல்லிக்கொண்டிருக்கையிலேயே,

“ஏற்கனவே முடித்தாகிவிட்டது. இந்தக் கோப்பில் ஒரு சலனப்படம் இருக்கிறது. பாருங்கள். கொலையை யார் செய்தது என்பது தெளிவாகிவிடும்” என்ற ராகேஷ்,  துரையிடம் ஒரு கோப்பைத் திணித்துவிட்டு வந்த வழியே வெளியேற, துரை அதிர்ச்சியடைந்தவராய் வெளியேறும் ராகேஷையே பார்த்தபடி அமர்ந்திருந்தார்.

~ * ~

காவல்துறை ஆட்கள், ராகேஷின் வீட்டிற்குள் தடபுடலாய் நுழைந்து ராகேஷைக் கைது செய்தபோது ராகேஷ் அதிர்ந்திருந்தான். 

“சார், என்ன? என்னைக் கைது செய்கிறீர்கள்? நான் என்ன செய்தேன்?” என்றான் நா குழறியாபடி.

“போலி காட்சிகளை வைத்து ஒரு வழக்கை திசை திருப்பப் பார்த்ததற்கு” என்றார்  துரை  அவன் முகத்தில் அறையாத குறையாய்.

அவன் திமிரத் திமிர, ராகேஷை, காவல்துறை ஜீப் ஒன்று கொத்தாக அள்ளிக்கொண்டு வந்து சிறையில் தள்ளியது.

“சார், நான் ஏதும் செய்யவில்லை. எங்கோ தவறு நடந்திருக்கிறது. நீங்கள் சலனப்படத்தைப் பார்த்தீர்களா இல்லையா?” என்றான் ராகேஷ்.   .

“சலனப்படத்தைப் பார்த்தேன். அன்று சற்று நேரம் வீட்டில் மின்சார விநியோகம் தடைபட்டிருக்கிறது. ஜெய்கிஷோர்  சமையலைறையில் காய்கறி நறுக்கிக்கொண்டிருந்திருக்கிறார்.  அப்போது திடீரென மின்சார விநியோகம் சீராக, தொலைக்காட்சிப்பெட்டி  அலறியிருக்கிறது. தொலைக்காட்சிப்பெட்டியை நிறுத்தும் பொருட்டு கையில் கத்தியுடன் வந்தவர் கால் இடறி தான் கொண்டு வந்திருந்த கத்தியின் மீதே விழுந்து உயிரை விட்டிருக்கிறார்” என்றார் துரை.

“அப்படியானால், ஜெய்கிஷோர் கொலை வழக்கு முடிந்தது தானே?”

“இல்லை.”

“ஏன்?”

“நீ தந்த சலனப்படம் தான்”

“அதற்கென்ன?”

“நீயே பார்” என்ற துரை சலனப்படத்தில் காவல்துறை அலுவலகத்திலிருந்து தொலைக்காட்சிப்பெட்டியில் போட்டுக்காட்டினார். 

அதில், திரையில் ஜெய்கிஷோர் அறைக்குள் வருவதும், பின் கால் இடறி தரையில் கத்தி மீதே விழுந்து மரணிப்பதும் தெரிந்தது. 

“அடடா! சலனப்படம் தெளிவாக இருக்கிறதே!” என்றான் ராகேஷ்.

“காமிராவின் கோணத்தை கவனி. காமிரா ஜன்னலுக்கு வெளியே இருக்கிறது. ஜெய்கிஷோரின் அறை  நாற்பதாவது மாடியில். அப்படியானால், காமிரா அந்தரத்தில் ஆடாமல் அசையாமல் நிற்கிறது. சலனப்படம், ஏதோ சினிமாவுக்கு எடுத்தது போல் மிகவும் துல்லியமாக தெளிவாக இருக்கிறது. அப்படியானால், காமிராவை இயக்கியது யார்? ட்ரோன் என்றால், ஒரு ட்ரோன் பறந்திருந்தால், அது அக்கம்பக்கத்து வீடுகளின் ஏதேனும் ஒரு சிசிடிவியின் கண்களில் சிக்கியிருக்கும். அப்படி ஏதும் காட்சிகள் இல்லை. அப்படியானால் ட்ரோன் அல்ல. தவிரவும், விண்ணூர்திகள், அவைகளுக்கான போக்குவரத்து வந்தவுடனேயே, ட்ரோன்களைக் கண்காணிக்கவென எல்லா ட்ரோன்களுக்கும் சில்லுகள் பொறுத்தியாகிவிட்டது. ஆக, ட்ரோனாக இருந்திருந்தால் தெரிந்திருக்கும். அப்படி ஏதும் இல்லை. இதற்கு ஒரு காரணம் தான் இருக்க முடியும். நீ ஏதோ தில்லுமுல்லு செய்திருக்கிறாய்” என்றார் துரை.

“ஓ. நீங்கள் அப்படிப் புரிந்துகொண்டுவிட்டீர்களா?” என்றான் ராகேஷ் சலிப்புடன்.

“என்னடா! பொய் சொல்வதையும் சொல்லிவிட்டு, பெரிதாக சலித்துக்கொள்கிறாய்” எரிச்சலுடன் நறநறத்தார் துரை.

“உங்களுக்கெல்லாம் என்ன பிரச்சனை? ஏன் என் அப்பாவின் திறமை மீது பாராமுகமாக இருக்கிறீர்கள்? அவர் எப்படி அதைச் செய்தார் என்று கேளுங்கள். எப்படி சாத்தியப்படுத்தினார் என்பதைப் பாருங்கள். அவர் செய்ததை  இப்போது வரை சாத்தியப்படுத்த எவருக்கும் வக்கில்லை. அப்பாவியாக யாரேனும் சிக்கினால், அவனிடம் தான் உங்கள் வீரத்தைக் காட்டுவீர்களா? ” என்றான் ராகேஷ் சீற்றத்துடன்.

“என்ன சொல்கிறாய் நீ?” என்று துரை எரிச்சலும் , குழப்பமுமாய் ராகேஷ் மீது பாய, ஆறுமுகம் துரையை அரவணைத்துப் பிடித்து, அடுத்த அறைக்குத் தள்ளிக்கொண்டு போனார்.

“சார், அவனிடம் இரையாதீர்கள்.. பாவம் அவன்” என்றார் ஆறுமுகம்.

“என்ன, என்ன சொல்கிறான் அவன்? உளறுகிறான்” என்றார் துரை.

“இல்லை சார், அவன் அப்பா  ஞானசேகரன் ஒரு தலைசிறந்த விண்வெளி வீரர்.”

“அப்படியா? ஆனால், எந்தச் செய்தித்தாளிலும் அப்படிச் சொல்லவில்லையே?  ஞானசேகரன் ஒரு துரதிருஷ்டசாலி என்று தானே சொன்னார்கள்”

“ஒருவகையில் அது உண்மை தான் சார். உண்மைகள் இரண்டு வகைப்படும். உண்மையான உண்மை, மனிதர்கள் ஒப்புக்கொள்ளும் உண்மை. ஒருவர் ஒரு ஸ்தாபனம் உருவாக்குகிறார். அதில் ஒருவன் மிகத்திறமையாக வேலை செய்கிறான். ஆனால், ஸ்தாபகருக்கு ஒரு மகள் இருக்கிறாள். அவளுக்கு கணவனாக, ஸ்தாபகருக்கு ஒரு மருமகன் வருகிறான். மருமகன் அத்தனை திறமைசாலி இல்லை. இப்போது திறமையாக வேலை செய்பவன் என்னாவான்?”

துரை சற்று யோசித்தார்.  பின்,

“வேலையை விட்டுத் துரத்தப்படுவான்” என்றார்.

“ஆம். உண்மை என்பது எந்த ஒரு ஸ்தாபனத்திற்கும் திறமைசாலிகள் தான் தேவை என்பதுதான். ஆனால், மனிதர்கள் ஒப்புக்கொள்ள விரும்பும் உண்மை, பெரும்பாலும் அந்த உண்மையாக இருக்காது. உண்மையான உண்மையை தங்கள் வசதிக்கேற்ப, சிராய்த்து, உருமாற்றி, நிறம் கூட்டி, வசீகரமேற்றுகையில், உண்மையான உண்மை பெருமளவு திரிந்துவிடும். அப்படித் திரிந்தது தான் ‘ ஞானசேகரன் ஒரு துரதிருஷ்டசாலி’ என்பது.”

“என்ன சொல்கிறீர்கள் நீங்கள்? கொஞ்சம் தெளிவாகத்தான் சொல்லுங்களேன்?” துரை கடிந்தார்.

“முதலில்,  ஞானசேகரன் பற்றி நீங்கள் என்ன கேள்விப்பட்டீர்கள்?”

“எதுவுமே இல்லை. அவரைப் பற்றி கோப்புகள் ஏதும் இல்லை.”

“அப்படியானால், அழிக்கப்பட்டிருக்கிறது”

“என்ன?”

“அவர் இருந்த காலகட்டத்தில் அவர் தான் முதன்மையானவர்”

“முதன்மை என்றால் கோப்புக்களில் இருக்க வேண்டுமே?”

“இப்போதிருக்கும் கோப்புக்கள், இப்போதிருக்கும் முதன்மையானவர்களை, முதன்மையானவர்கள் என்று சொல்லும் கோப்புக்களே”

“அப்படியானால்?”

“ஹஹஹ… இப்போதிருக்கும் முதன்மையானவர்கள், முதன்மையானவர்கள் தான் என்றால், அசாத்தியங்கள் நிகழ்ந்திருக்க வேண்டுமே? ஏன் நிகழவில்லை?” 

துரை சுருங்கிய புருவங்களுடன் குழப்பமாய்ப் பார்க்க, 

“நாம் அசாத்தியங்களையே முதன்மைகளுக்கான ஆதாரங்களாக ஏன் பார்ப்பதில்லை? ஏன் கோப்புக்களை ஆதாரங்களாக வைத்திருக்கிறோம்? அதில் தான் இருக்கிறது மனித குலத்தின் கயமை. ஏனெனில், அதில் தான் ஏமாற்ற முடியும். அல்லவா? கோப்புக்களை நான் முழுமையாக நிராகரிக்கிறேன். அசாத்தியங்களையே நான் முதன்மைத்தன்மைக்கான ஆதாரமாக நான் ஏற்க விரும்புகிறேன். முதன்மையானவர்கள், அசாத்தியங்களை நிகழ்த்திக் காட்டுவார்கள்.”

“ஞானசேகரன் நிகழ்த்திய அசாத்தியம் தான் என்ன?” என்றார் துரை ஆர்வம் தாளாமல்.

“2030ம் வருடத்தில், ஞானசேகரனின் வேலை,பிரபஞ்சத்தில் நம்மை விடவும் புத்திசாலி வேற்று கிரகவாசிகளைக் கண்டுபிடிப்பதாகத்தான் துவக்கத்தில் இருந்தது. ஆனால் ஞானசேகரனுடன் இணைந்து பணியாற்ற எவரும் முன் வரவில்லை. அது ஒற்றை ஆள் செய்து முடிக்கக்கூடிய வேலை இல்லை. ஆயினும்,  ஞானசேகரன் தான் ஒருவனாக எல்லாவற்றையும் செய்வதாகச் சொன்னதன் பேரில், உதவிக்குச் சில தானியங்கி எந்திர மனிதர்களுடன் விண்வெளிக்கு அனுப்பப்பட்டார்”

“பிறகு?”

“போனவர் போனவர் தான். திரும்பவில்லை”

“என்ன?!”

“அவர் விண்கலனைச் சரியாகக் கையாளவில்லையாம். அதனால் விண்கலனோடு காணாமல் போய்விட்டதாகத்தான் குறிக்கப்பட்டிருக்கிறது.”

“இதைச் சொல்லவா என்னைத் தனியாகத் தள்ளிக்கொண்டு வந்தீர்கள்?”

“இல்லை சார். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். சலனப்படம் அந்தரத்திலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அக்கம்பக்கத்து வீடுகளின் சிசிடிவி காட்சிகளில் சலனப்படக் கருவிகள் அந்தரத்தில் மிதந்தபடி  காட்சிகள் எடுத்ததற்கான ஆதாரம் ஏதும் இல்லை. இது எப்படி நடந்திருக்க முடியும்?” என்றார் ஆறுமுகம்.

துரையின் மூளைக்குள் விளக்கெரிந்தது. உடனே , விசாரணையின் நிமித்தம், விண்வெளி நிலையத்தை அலைபேசியின் அழைத்தார் துரை.

“ஒரு குற்றம் நடந்திருக்கிறது. அந்தப் புள்ளியின் தீர்க்கரேகை, மத்தியரேகை (latitude, longitude) அளவுகளைச் சொல்கிறேன். சுமார் இருபது வருடங்களுக்கு முன், அதாவது 2210ல் அந்த இடத்தை ஏதேனும் செயற்கைக்கோள்கள் படமெடுத்திருக்கின்றனவா என்று பார்த்துச் சொல்லுங்கள்” என்ற துரை, ஜெய்கிஷோர் கொலை செய்யப்பட்ட இடத்தின் தீர்க்கரேகை, மத்தியரேகை (latitude, longitude) விவரங்களை அனுப்பினார்.

சற்றைக்கெல்லாம் மொட்டையாக “இல்லை” என்று மட்டும் பதில் வந்தது துரைக்கு ஏமாற்றத்தையே அளித்தது.

“அப்படியானால், இதற்கு ஒரு  அர்த்தம் தான் இருக்க முடியும்” என்றார் ஆறுமுகம்.

“நீங்கள் எங்கே செல்கிறீர்கள் என்பது புரிகிறது. குற்றம் நடந்து இருபது ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. பத்து ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் ஏதேனும் ஒரு கிரகத்தில் ஜெய்கிஷோர் கொலை நடந்த ஒளியை உள்வாங்கியிருந்து, அது பூமிக்கு மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டிருந்தால் மட்டுமே இது சாத்தியம் என்று தானே சொல்ல வருகிறீர்கள்” என்றார் துரை.

“ஆமாம் சார். அது ஒன்று தான் வழி. காணாமல் போன  ஞானசேகரன் ஏன் அப்படிச் சென்றடைந்திருக்கக்கூடாது? அவர் ஏன் பூமியிலிருந்து வரும் ஒளியை உள்வாங்கி அதை பூமிக்கே திருப்பி அனுப்பும் வகைக்கு ஒரு மாபெறும் கட்டமைப்பை அந்த கிரகத்தில் நிறுவியிருக்கக்கூடாது? பல கட்டங்களில், இந்த வேலை கடினமானதுதான். ஆனால்,  ஞானசேகரன் நினைத்தால் செய்திருக்கக்கூடியவர்தான்.” என்றார் ஆறுமுகம்.

“மிக அபத்தமாகவும், மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போலவும் இருக்கிறது நீங்கள் சொல்வது” என்றார் துரை சலிப்பாக. 

“ஏன் சார்?” என்றார் ஆறுமுகம், சுருங்கிய புருவங்களுடன்.

“பின்னே?  ஞானசேகரன் விண்வெளியில் காணாமல் போனது சுமார் நூற்றுப்பத்து ஆண்டுகளுக்கு முன். ஜெய்கிஷோர் கொலை 2120ல் நடந்தது. இப்போது வருடம் 2140. இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் ஒளி சென்று திரும்பியிருக்க வேண்டுமென்றால்,  தொண்ணூற்று நாலு ட்ரில்லியன் கிலோமீட்டர்களுக்கு அப்பால் ஒரு கிரகம் இருந்திருக்கவேண்டும். முதற்கண், 2030ம் வருடத்தில், பூமியில் மனிதர்கள் கண்டுபிடித்திருக்கும் விண்கலனின் அதிக பட்ச வேகம் என்ன தெரியுமா? வெறும் முப்பத்தி ஆறாயிரம் மைல்கள் தான், அதுவும் ஒரு மணி நேரத்திற்கு. இந்த வேகத்தில் போனால், அந்த கிரகம் செல்ல, இரண்டு லட்சம் வருடங்களாவது ஆகும். பத்து ஆண்டுகளில்  ஞானசேகரன் அந்தக் கிரகம் சென்றடைய வாய்ப்பே இல்லை” என்றார் துரை.

“ஒருக்கால், அதற்கு அவர் ஒரு வழி கண்டுபிடித்திருந்தால்?” என்றார் ஆறுமுகம்.

துரையின் கண்கள் இடமும் வலமுமாய் தொடர்ந்து நில்லாமல் அலைபாய்ந்தன.

“அதற்கு அவர் ஒரு வழி கண்டுபிடித்திருந்தால் அது சாத்தியம் தான். ஆனால், என்ன வழி அது? பூமியில் எட்டு நூறு கோடி மனிதர்கள் இருக்கிறோம். இவர்கள் யாருக்குமே தெரியாத வழி ஒன்று இருக்கிறது என்கிறீர்களா?” என்றார் துரை கேள்வியாக.

மத்திமமாய்ச் சிரித்தார் ஆறுமுகம்.

“ஞானசேகரன் அசாத்தியங்களை  நிகழ்த்தியிருக்கிறார் என்று சொன்னேன் இல்லையா?  இதைத்தான் செய்திருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். நம் யாராலும் முடியாதது  ஞானசேகரனாலும் முடியாது என்பது உண்மையானால், நீங்கள் சொல்வது சரிதான், சார். ஆனால், ஒருக்கால், அது உண்மை இல்லை என்றால்?”

சற்று யோசித்த, துரை,

“ராகேஷுக்கு ….” என்று இழுக்க, 

” ஞானசேகரன், விண்வெளியில் காணாமல் போகும் போது ராகேஷ் பிறக்கவே இல்லை.  ஞானசேகரன், விண்வெளி ஏகும் முன் தனது இந்திரியத்தை, இந்திரிய வங்கி ஒன்றில் சேமித்துவிட்டு ஒரு குறிப்பையும் விட்டுச் சென்றிருக்கிறார். அதை வைத்துத்தான்  ஞானசேகரன் தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்கிறேன்” என்றார் ஆறுமுகம்.

“அப்படி என்ன குறிப்பு அது?”

“2030ல் தரப்பட்ட தனது இந்திரியம் 2115ம் ஆண்டு வரை பயன்படுத்தப்படக் கூடாது என்பதுதான் குறிப்பு. 2115ம் ஆண்டில் தான் ஒரு பெண், ஞானசேகரனின் இந்திரியத்தை வங்கியிலிருந்து பெற்று ராகேஷை பெற்றெடுத்திருக்கிறாள். ஆக, ஜெய்கிஷோர் மரணிக்கையில் ராகேஷுக்கு வெறும் ஐந்து வயதுதான் சார்.  ஞானசேகரன் ஏன் சுமார் என்பத்தி ஐந்து ஆண்டுகள் தனது இந்திரியம் எவருக்கும் பயன்படாமல் இருப்பதில் கவனமாக இருக்க வேண்டும்? அது, அவர் ஏதோ ஓர் இடத்தைச் சென்றடையும் வரை, எதுவோ நடக்க விடாமல் வேண்டுமென்றே தடுத்தது போலிருக்கிறதுதானே? அப்படியானால், தான் எங்கே செல்ல இருக்கிறோமோ அந்த இடத்தை அடைய அத்தனை ஆண்டுகள் ஆகும் என்பதை அவர் முன்பே கணித்திருப்பது போலத்தானே இருக்கிறது? இப்போது, ராகேஷ் வளர்ந்து இருபத்தி ஐந்து வயது இளைஞனாக வருகையில், அவனுக்கு இந்த சலனப்படம் கிடைத்திருப்பதை தற்செயல் நிகழ்வு என்றா நம்பச் சொல்கிறீர்கள்?” என்றார் ஆறுமுகம்.

துரை தலையை சிலுப்பிக்கொண்டார்.

“என்ன எழவு இது? எப்படி எப்படியோ யோசித்து, நடவாததைக் குழப்பிக்கொள்கிறோமோ என்று தோன்றுகிறது. ராகேஷ் தான்….” என்று துரை ஏதோ சொல்ல முனைய,

“பாருங்கள். சலனப்படம் இருக்கிறது. அதுவும் துல்லியமாக. அதில் ஏதும் தில்லுமுல்லு வேலைகள் ஏதும் இல்லை என்பதைத் தடயவியல் (Forensics) துறை ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டது. நல்லகாலம், இருபது வருடங்களுக்கு முன்னான ஜெய்கிஷோரின் குடியிருப்பு எல்லா சிசிடிவி காட்சிகளையும் அமேசான் க்ளவுடில் (Amazon Cloud) சேமித்திருந்திருக்கிறது. அதை வைத்துப் பார்க்கையில், சலனப்படம் எடுக்கப்பட்ட நேரம், அந்த இடத்தில் பறக்கும் விமானங்கள், ட்ரோன்கள் ஏதும் இல்லை என்பது ஊர்ஜிதமாகிவிட்டது. சலனப்படத்தை விண்வெளியிலிருந்து பதிவு செய்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருக்கிறது. இதன் பொருள் என்ன? இது எப்படி இத்தனை துல்லியமாக இருக்கிறது?” என்றார் ஆறுமுகம்.

இருவருமாக எழுந்து ராகேஷிடம் வந்தார்கள்.

“ராகேஷ், உனக்கு இந்த சலனப்படம் எப்படிக் கிடைத்தது?” என்றார் துரை.

“இதோ பாருங்கள் சார். என் வீடு ஒரு பழைய வீடு, என் அப்பாவினுடையது. என் அப்பாவின் நினைவாக அவர் பயன்படுத்திய மின்னணு இயந்திரங்களின் வரைபடங்களை நான் அப்படியே வைத்திருக்கிறேன். அதிலொன்றை சமீபத்தில் ஒரு முப்பரிமாண அச்சு இயந்திரம் கொண்டு உருவாக்கினேன். இச்சலனப்படத்தை அதுதான் பதிவு செய்து தந்தது” என்றான் ராகேஷ்.

“வா..உன் வீட்டிற்குச் செல்லலாம்” என்ற துரை, ராகேஷை அழைத்துக்கொண்டு மகிழுந்தில் ஏற, ஆறுமுகமும் தொற்றிக்கொண்டார்.

ராகேஷின் வீட்டில், மூவரும் சேர்ந்து அக்கருவிகளைப் பார்வையிட்டார்கள். ஆறுமுகம் கருவிகளைப் பார்வையிட்டுவிட்டு துரையின் செவிகளில் கிசுகிசுத்தார். ராகேஷ், அக்கருவியின் ஒரு பொத்தானை அழுத்த, அது மீண்டும் ஒரு சலனப்படத்தைப் பதிவு செய்தது. ராகேஷ் அந்த நினைவகச்சில்லை (Memory Chip) எடுத்து, தொலைக்காட்சிப்பெட்டிக்குள் இட, தொலைக்காட்சித் திரையில் காட்சிகள் விரிந்தன.

இருபது ஆண்டுகளுக்கு முன்னான அதே நாளில், ஜெய்கிஷோர் குடியிருப்பில் நடந்தவைகள் காட்சிகளாகத் தோன்றின. காவல் துறை ஆட்கள் அங்குமிங்கும்   நடந்துகொண்டிருந்தார்கள். வராந்தையில் ஜெய்கிஷோர் வீட்டைக் கடந்து சென்றவர்கள், ஜெயகிஷோர் வீட்டை அச்சத்துடன் பார்த்தபடி கடந்தார்கள். ஜெய்கிஷோரின் வீட்டுக்கு அவரது உறவுக்காரர்கள் மட்டும் நண்பர்கள் வருவதும் போவதுமாக இருந்தார்கள். அந்தக் குடியிருப்பே ஜெய்கிஷோரின் மரணத்திற்கு துக்கம் அனுஷ்டித்துக்கொண்டிருக்க, தரை தளத்தில் ஒரு கூட்டம் ஜெய்கிஷோர் கொலை வழக்கைத் துரிதமாக விசாரித்துக் குற்றவாளியைக் கண்டுபிடித்து தண்டனை வாங்கித்தரும்படி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள். சில காவலர்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தார்கள். 

“சார், பார்த்தீர்களா, சரியாக இருபது ஆண்டுகளுக்கு முன் இதே நாளுக்கான காட்சிகள்.  ஞானசேகரன் தான் அப்படி ஒரு கிரகத்திலிருந்து அனுப்புகிறார்” என்று கிசுகிசுத்தார் ஆறுமுகம்.

“ஆனால், இது எப்படிச் சாத்தியம் ஆறுமுகம்? தொண்ணூற்று நாலு ட்ரில்லியன் கிலோமீட்டர்கள். ஒரு மனிதன் இத்தனை தூரம் எப்படிப் பிரயானித்திருக்க முடியும்?” என்றார் துரை ஆச்சர்யம் தாளாமல்.

“என்ன மடத்தனமான வாதம்? பத்து ஒளி ஆண்டுகள். அதாவது, தொண்ணூற்று நாலு ட்ரில்லியன் கிலோமீட்டர்கள் என்பது எத்தனை தூரம் தெரியுமா? இங்கே இருக்கும் சனிக்கிரகத்துக்குச் செல்லவே, 2030ம் ஆண்டுகளில் நமக்கு ஏழு வருடங்கள் ஆகும். நியூ ஹாரிசான்ஸ் (New Horizons) என்ற விண்கலன் ப்ளூட்டோ (Pluto) செல்ல பத்து ஆண்டுகள் எடுத்துக்கொண்டது. ஒளி ப்ளூட்டோ (Pluto) செல்ல ஐந்தரை மணி நேரம் தான் ஆகும். தெரியுமா? அப்படி இருக்க, பத்து வருடங்களில் தொண்ணூற்று நாலு ட்ரில்லியன் கிலோமிட்டர்களா? கேட்டால், உலகமே சிரிக்கும். நம்மைப் பைத்தியமென்றும் சொல்லும். உலகத்தின் முன் நான் மடையனாக நிற்க விரும்பவில்லை” என்றார் தொடர்ந்து.

“அப்படியானால், இந்த சலனப்படம்….” என்று ஆறுமுகம் இழுக்க, 

“தங்கள் மீது கவனம் ஈர்க்க, இப்படியெல்லாம் இறங்குகிறார்கள். இதைப் பெரிது படுத்த வேண்டாம். உருப்படியாக வேறு ஏதேனும் ஒரு வழக்கில் உங்கள் பொன்னான நேரத்தைச் செலவு செய்யுங்கள்” என்ற துரை, ராகேஷின் அறையைவிட்டு வெளியேறினார்.

ராகேஷ் , துரை செல்லும் வழியையே பார்த்தபடி நின்றிருக்க, அருகே வந்தார் ஆறுமுகம்.

“என்னை மன்னித்துவிடு ராகேஷ். எத்தனை முயன்றும் மேலிடத்துக்கு என்னால் புரியவைக்க முடியவில்லை” என்றார் சோகத்துடன்.

“பரவாயில்லை சார்” என்றான் ராகேஷ்.

“உன் அப்பா எப்படி இத்தனை தூரத்தை பத்தாண்டுகளில் கடந்திருப்பார் என்பதுதான் புரியாத புதிர்” என்றார் ஆறுமுகம்.

ராகேஷ் அமைதியாகச் சிரித்தான்.

“நீங்கள் கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடியிருக்கிறீர்களா சார்?” என்று ஆறுமுகத்தை வினவினான்.

“சின்ன வயதில் விளையாடியிருக்கிறேன். எல்லோருமே விளையாடியிருப்பார்கள் தானேப்பா?” என்றார் ஆறுமுகம், ராகேஷ் ஏன் அப்படிக் கேட்கிறான் என்பது விளங்காமல்.

“விளையாட்டுப் பொருட்களை மறைத்து வைப்போம். கண்டுபிடிக்கப்படவெனவே மறைத்து வைக்கப்படுபவைகள் அவைகள். அந்த விளையாட்டில் விளையாடுவதெல்லாம் சின்னஞ்சிறு பிள்ளைகளாகத்தான் இருக்கும். அந்த விளையாட்டை விளையாடும் எந்த பிள்ளைக்கும், மறைத்து வைக்கப்பட்ட பொருளைக் கண்டுபிடித்துவிடும் உத்வேகம் மட்டும் தான் இருக்கும். நிச்சயம் கண்டுபிடித்தும் விடுவார்கள். இறுதியில் எல்லோருக்கும் தெரிந்த ரகசியமாகத்தான் அந்த மறைத்து வைக்கப்பட்ட பொருள் இருக்கும்.  கொஞ்சம் வளர்ந்த பிறகு அதே விளையாட்டை விளையாடுகையில், அதே பிள்ளைகள் பாரா முகமாய் இருக்கிறார்கள். கண்டும் காணாதது போல் நடிக்கிறார்கள். அந்தப் பொருள் மனித குலத்துக்குப் பயன்படாமல் போய் வீணாவது குறித்து இங்கு எவருக்கும் சிறிதளவேனும் கூட அக்கறை இல்லை.  கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். பொருளை மறைத்து வைப்பவன் யாரேனும் கண்டுபிடிக்கவெனவே மறைத்து வைக்கிறான். தொலைக்க நினைத்தவர்கள் தொலைக்க நினைத்தது தன்னைத்தான் என்பது தெரியவந்தால் அவன் என்னாவான்? அவனுக்கு அது எப்படி இருக்கும்?” என்றான் ராகேஷ்.

ஆறுமுகம் மெல்லியதாய்ச் சிரித்தார்.

“ஒருக்கால், தன் அற்புதக் கண்டுபிடிப்பை அவர் உனக்கு மட்டுமென ஒரு பொறுப்பாகத் தர நினைத்திருந்தால்?” என்றார் இறுதியில்.

“என்ன? பொறுப்பா? என்னைப் பொறுப்பாளியாகவா? என்ன சொல்கிறீர்கள்?”

“ஆம். பாரேன். இந்தக் கருவிகள் உன் வீட்டில் தான் கிடைத்திருக்கின்றன. தன் வீட்டை உனக்கென ஏன் இத்தனை ஆண்டுகள் பாதுகாத்து உனக்குக் கிடைக்குமாறு செய்யவேண்டும்?” என்றார் ஆறுமுகம்.  

“மனித குலத்துக்குப் பயனுள்ளதாக…….” என்று ராகேஷ் இழுக்க,

“அப்படியானால், இதற்கு இன்னொரு அர்த்தமும் இருக்க முடியும்” என்று சொல்லி நிறுத்தினார் ஆறுமுகம்.

ராகேஷ், என்ன என்பதாய் ஆறுமுகத்தை ஏறிட்டுப் பார்க்க, 

“தான் சென்று சேர்ந்த கிரகத்தின் இறந்த காலத்தை அவர் பார்க்க நினைத்திருந்தால்? அக்கிரகத்தில், இருபது ஆண்டுகளுக்கு முந்தைய தீர்க்க முடியாத குற்றங்களை அவர் தான் கண்டுபிடித்த தொழில் நுட்பத்தின் மூலம், துப்பறியலாம் என்று நினைத்திருந்தால்?” என்றார் ஆறுமுகம்.

“ஆனால், ஜெய்கிஷோர் கொலை செய்யப்பட்ட நாளின் சலனப்படம் எனக்குத்தானே கிடைத்தது. அது….” என்று எதையோ ராகேஷ் கேட்க வர, 

“அது ஏன், இந்த ஒட்டு மொத்த நாடகத்தில் உன் பங்கு என்ன என்பதைக் குறிப்புணர்த்தும் குறியீடாக இருக்கக்கூடாது?” என்று எதிர்கேள்வி கேட்டார் ஆறுமுகம்.

“உங்கள் வாதம் கவர்ச்சிகரமாக இருக்கிறது. இதற்கு என்ன ஆதாரம்?” என்றான் ராகேஷ்.

“ஏன் இல்லாமல்? நாங்கள் சோதித்துவிட்டோம். உன் இந்த வீட்டிலிருக்கும் கருவிகள் வெறும் ஒளி வாங்கிகள் மட்டுமல்ல. உன் அப்பா, விண்வெளி வீரராக இருந்த காலத்தில், பூமி, மற்றும் சனியின் துணைக்கோள்கள், செவ்வாய் போன்ற கிரகங்கள் முழுமைக்கும் இருக்கும் உணர்கொம்புகள் (Antennas) மற்றும் தூர கிரகங்களுக்கு சமிஞைகள் அனுப்பும் செயற்கைகோள்களின் (long-range communication satellites) நீண்ட கால பயணராக (life-time user) இருந்தவர். உணர்கொம்புகள் (Antennas) மூலம் கிடைக்கும் அந்திரகத்தின் ஒளியை, இந்த வீட்டில் உள்ள கருவிகள் அந்த கிரகம் நோக்கி அனுப்பித் தகவல் தொடர்பை சாத்தியப்படுத்துகிறது”

“தகவல் தொடர்பா?”

“ஆம். ஒளி கடத்தப்படுகிறது. அந்த கிரகத்தின் ஒளி அந்த கிரகத்திற்கே திருப்பி அனுப்பப்படுகிறது.”

“அப்படியானால்? அப்படியானால்?” ஆறுமுகத்தின் வார்த்தைகளை அர்த்தப்படுத்திக்கொள்ள விரையும் மூளைக்கு ஈடுகொடுக்க முடியாமல் ராகேஷ் குழறினான்.

“இது 2140ம் வருடம். உன் தந்தை, புத்திசாலி வேற்றுகிரக உயிர்களைத் தேடிச் சென்றது 2030ம் ஆண்டில். பத்து ஒளி ஆண்டுகள் தொலைவை நூறு ஆண்டுகளில் கடந்திருக்கிறார். இந்த வேகத்தில் அவரால் எப்படி இன்னொரு கிரகம் பயணிக்க முடிந்தது என்பதே ஆச்சர்யமாக இருக்கிறது. அதுமட்டும் தெரிந்தால், ஒரு முழு நீளத்திரைப்படமே எடுக்கலாம், ராகேஷ்” என்று சொல்லி நிறுத்திய ஆறுமுகம், ராகேஷைக் கேள்வியாகப் பார்க்க,

“என்னை ஏன் பார்க்கிறீர்கள்? எனக்கென்ன தெரியும். அந்த ரகசியத்தை அவரிடம் தான் கேட்க வேண்டும்” என்றான் ராகேஷ் கைவிரித்தபடி. 

“அவர் பூமியை விட்டகன்று நூற்றுப் பத்து ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. இந்த நூற்றுப் பத்து ஆண்டுகளில் உன் அப்பா, வேறொரு புத்திசாலி வேற்று கிரக உயிர்களைக் கண்டுபிடிப்பதில் வெற்றிகண்டுவிட்டார்” என்றார் ஆறுமுகம்.

“எப்படி? எப்படிச் சொல்கிறீர்கள்?” என்றான் ராகேஷ் அதிர்ச்சியும் ஆச்சர்யமுமாய்.

“இந்த நவீன தொழில் நுட்பத்தை உன் அப்பா உன் பயன்பாட்டிற்கு அனுப்பினாரென்றால், அது அவரது விருப்பத்தை மட்டுமே அச்சாணியாய்க் கொண்டு நடந்துவிடக்கூடிய காரியமல்ல. அதற்கு பூமியிலுள்ள மனித இனம் ஒத்துழைக்க வேண்டியது கட்டாயமாகிறது. அதில் சிக்கல்கள் உள்ளன என்பது உன் அப்பாவுக்கும் தெரிந்திருக்கும். ஆனால், இந்த நவீன தொழில் நுட்பத்தை உன் அப்பா, தன் பயன்பாட்டிற்கு வைத்துக்கொள்ள ஒரு கருவியாய் உன்னைப் பயன்படுத்திக்கொள்ள நினைத்தார் என்றால், அது உனக்கும் அவருக்கும் மட்டுமே தொடர்புடைய, உங்கள் இருவராலேயே சாத்தியப்பட்டுவிடக்கூடிய ஒன்றாக இருக்கத்தான் வாய்ப்பிருக்கிறது. அவர் ஏன் தன் உயிர்ச்சத்தை என்பது ஆண்டுகளுக்கு மேலாகப் பாதுகாக்க வேண்டும்? இந்த வீட்டை உனக்கென ஏன் இருத்த வேண்டும்? சூரியக் குடும்பமெங்கிலும் உள்ள உணர்கொம்புகளின் (Antenna) வாழ்நாள்  பயன்படுத்துனராக ஆக வேண்டும்? அதை ஏன் உனக்கு உயில் எழுதி வைக்க வேண்டும்?”

“ஏன்?”

“இன்னுமா புரியவில்லை? எனது உயரதிகாரிகளின் பொறுப்பின்மை, இத்தொழில் நுட்பம் குறித்த அவர்களின் புரிதலின்மை, அவ நம்பிக்கை, ஒரு சக புத்திசாலியாக தன் மீதான மனித இனத்தின் பாராமுகம், தன் உழைப்பின் மீதான சக மனிதர்களின் அங்கீகாரமின்மை, இவை எல்லாமும், மனித இனத்தை புத்திசாலி இனமாக அடையாளப்படுத்தவில்லை. மனித இனத்தை ஒப்பிடுகையில் அவர் சென்று சேர்ந்த கிரகத்தில் உள்ள உயிர்கள் மேலதிக புத்திசாலிகளாக இருக்கலாம் என்றே ஊகிக்கிறேன்.” என்று ஆறுமுகம் சொல்லிக்கொண்டிருக்கையிலேயே, 

“ஆனால், அந்த வேற்றுகிரக உயிர்கள் புத்திசாலி உயிர்கள் என்றால், அவைகள் என் அப்பாவின் கண்டுபிடிப்பை நம்பியிருக்குமாறு, அதற்கென காத்திருக்குமாறு இருக்குமா என்ன?” என்று குறுக்குக் கேள்வி எழுப்பினான் ராகேஷ்.

ஆறுமுகம் மெல்லியதாய்ச் சிரித்தார்.

“என் அப்பா 2030ல் பூமிக் கிரகம் விட்டு விண்வெளி ஏகினார்.ஆனால், அப்போதே அவர் பல விடயங்களை எனக்கென தீர்மானமாக விட்டுச்சென்றிருப்பதை வைத்துப் பார்த்தால், அப்போதே அவரிடம் இக்கண்டுபிடிப்பு தெளிவாக இருந்திருந்திருக்கிறது என்று தானே அர்த்தமாகிறது. அப்படி ஒரு திட்டத்தை, 2140ல் அவர் அந்த வேற்று கிரகத்திற்கு அளிக்கிறார் என்றால், அதுகாறும் அந்த வேற்றுகிரக இனம் தொழில் நுட்பத்தில், மனித இனத்தைக் காட்டிலும் ஒப்பீட்டளவில் பின் தங்கி இருப்பதாகத்தானே அர்த்தமாகிறது?” என்றான் ராகேஷ் தொடர்ந்து.

“ஆம். 2140ல், கிட்டத்தட்ட நூற்றி பத்து ஆண்டுகளில் மனித இனம் உன் அப்பாவின் கண்டுபிடிப்பை ஏற்கக்கூட முதிரவில்லை என்பதே, அந்த வேற்று கிரக வாசிகள் எத்தனை எளிமையானவர்களாக இருப்பினும் அவர்களையும் விட மனித இனத்தை பின்தங்கியவர்களாகப் பார்க்க வைக்கிறதுதானே? ஒரு குறை சமூகத்தால் தான், அதன் அடிப்படையில் அமைந்த குறை பார்வையினால்தான் தொலை நோக்குப் பார்வையில் தனக்குப் பலனளிக்கக்கூடிய ஒன்றின் மதிப்பு தெரியாமல், அதனைப் புறம்தள்ள முடியும். ஒரு முழுமையான நிறை சமூகத்தால் தான், அதன் அடிப்படையில் அமைந்த நிறை பார்வையினால் தான், தொலை நோக்குப் பார்வையில், தனக்குப் பயனளிக்கக்கூடிய ஒன்றின் மதிப்புணர்ந்து, அதனை இருகரம் நீட்டி வரவேற்க முடியும். இப்போது சொல்? புத்திசாலி இனம், நாமா, அந்த வேற்று கிரக வாசிகளா? ” என்றார் ஆறுமுகம்.

Exit mobile version