Site icon சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

காண்பதுவே உறுதி கண்டோம்

“ஹலோ பெண்களே, பையன்களே…” கோச் ஸாமின் தனித்துவமான குரல் ஓங்கி, உறுதியாக ஒலித்ததுமே அந்த பாட்மிட்டன் உள்ளரங்கு கூடத்தின் ஆறு கோர்ட்களிலும் பரவி மெல்லிய குரலில் பேசிக்கொண்டிருந்த பையன்கள், பெண்கள் இயல்பாக அவர் முன் குவிந்து மிக நெருக்கமாக இல்லாமல், அதே சமயம் அவர் மிக சத்தமாக பேசத்தேவையில்லாத எல்லையில் நின்றனர்.

“இன்றைய அமர்வில் என்ன கற்றுக்கொண்டீர்கள் என்பதை உங்களில் யாராவது ஒருவர் சுருக்கி ஒற்றை வாக்கியத்தில் சொல்லமுடியுமா?”

அந்தக்கூட்டத்தில் இருந்தவர்கள் அனைவரும் உள்ளூர் பக்கிங்ஹாம்ஷையர் கவுண்ட்டி அணிகளில்,  11 வயதிலிருந்து 18 வயது வரையிலான வகைகளில் விளையாடுபவர்கள். 

இரு வினாடிகள் கூட தாண்டியிராது;  “பாட்மிட்டன்!”…

மெல்லிய சிரிப்பு சலசலப்பு அலை அந்த மொத்த விளையாட்டு கூடத்தையும் வருடிச்சென்றது.

விளையாட்டு அரங்க கார் பார்க்கின் ஓரங்களிலும் அவற்றைத்தொடர்ந்து பரந்தும் உயர்ந்தும் இருக்கும் வெண் வில்லோ மரங்களின் உச்சிகளைத் தழுவிச்சென்ற காற்றலைகள் நினைவிற்கு வந்தன – இப்போதுதானே பார்த்துவிட்டு வந்திருக்கிறேன்!

அந்த சலசலப்பு மரங்களின் உச்சியில் கடலலைகள் சென்றது போலத்தான் இருந்தன; பூத கணம் ஒன்று நீர் பரப்பின் ஓரத்தில் நின்று கொண்டு ஊதி விட்டு விளையாடுவது போல். இங்கிலாந்தின் அக்டோபர் மாலைக்கே உரித்தான  சலசலப்பு அலைகள். ஒவ்வொரு முறை அலை கடக்கும் போதும் கூடவே இலைகளும் உதிர்ந்து பறக்கும்.

வெளிச்சம் தூரத்தில் எங்கோ மறைந்து கொண்டே அதேசமயம் இன்னும் முழுதாக விலகாமலும் இருந்த அந்தப்பொழுதிற்கே ஓர் நனைந்த காற்றின் மணம் உண்டு…

அரங்கினுள் நுழைந்து, பாட்மிட்டன் காலணிகளுக்கு மாறிவிட்டு, என்னுடைய வழக்கமான, விளையாட ஆரம்பிப்பதற்கு முன் செய்ய வேண்டிய ஆயத்த பயிற்சிகளை செய்துவிட்டு என் ராக்கெட்டை பையிலிருந்து வெளியே எடுத்து நிமிரும்போதுதான் குழந்தைகளுக்கான பாட்மிட்டன் பயிற்சி அமர்வுகள் முடிந்திருந்தன. பின் இதோ, கோச் ஸாம் தனது வழக்கமான அன்றைக்கான குறும் தொகுப்பு உரையை ஆரம்பித்திருக்கிறார்.  

இது முடிந்தபின்தான் பெரியவர்களுக்கான வழக்கமான விளையாட்டு அமர்வுகள் ஆரம்பிக்கும்…

“ப்ச்” 

முதல் அடுக்கிலிருந்து பார்வையாளர் பால்கனியிலிருந்து யாரோ ஒரு பெற்றோராகத்தான் இருக்கும்.

ஸாமின் அருகாமையில் பக்கவாட்டில் நின்று கொண்டிருந்த எனக்கு அவரது முகத்தில் எதுவும் நிகழ்ந்தது போல் தெரியவில்லை.

இரு கால்களையும் சீராக பரப்பி, இரு கைகளாலும் பாட்மிட்டன் ராக்கெட்டை நுனி, அடிகளில் பிடித்துக் கொண்டு உறுதியாக நின்றார். உயரமான, அகல, உறுதியான உடல்.

ஒரு பாட்மிட்டன் ராக்கெட் வீரருக்கான உச்சகட்ட திறன் வெளிப்படுவது நாற்பதுகளில்தான் என்பதற்கான சரியான ஒரு உதாரணம் ஸாம். 

உடல் வேகமும், திறனும் பின்னர் அனுபவங்களும் சரியான அளவில் ஒன்றாகும் வயது.

ஆனால் ஏன் இவர் இன்னும் காண்டாட் லென்ஸ்ஸிற்கு மாறவில்லை என்று தெரியவில்லை; 

ஒவ்வொரு பயிற்சி வகுப்பு முடிந்தபின்பும் கேட்பதைத்தான் இன்றும் கேட்டார். 

“உங்களைச் சுற்றி வரைந்து கொள்ளும் மானசீக எல்லை… இன்று இதைத்தான் குறிப்பிட்டேன்” …

சின்ன நிறுத்தத்திற்கு பின், ராக்கெட்டை தன் இடது கைக்கு மட்டும் மாற்றிக்கொண்டு கையை முழுவதுமாக நீட்டினார்.

பின், தன்னைச் சுற்றி 90 பாகையில் சுற்றினார்.

“இதுவே அந்த எல்லை…உங்களை நோக்கி வரும் ஷட்டில்களை இந்த எல்லையிலேயே கையாள வேண்டும்”

“அது தடுப்பாட்டமாக இருக்கலாம்; அடித்து ஆடுவதோ, ட்ராப் செய்வதோ எது வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் உங்களை நோக்கி வரும் ஷட்டிலை இந்த எல்லையிலேயே அதை கையாண்டுவிடவேண்டும்”

ராக்கெட்டைப் பிடித்திருக்கும் தன் இடக்கையை முழுவதும் மடக்காமல் அவரைச் சுற்றிலும் வந்து கொண்டிருக்கும் மானஸீக சிறகு பந்துகளை ஷட்டில்களை காற்றில் அடித்துக் காட்டினார்.

அந்த வலிமையான ஸ்விஷ்கள் காற்றில் அசைந்தவாறே சென்றன.

“அப்படிச்செய்ய முடிந்தால் அந்த ஷட்டில், அந்த ராலி உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும், அதை என்ன செய்வது என்பது உங்கள் விருப்பம்; உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும்”

ஷட்டில் அந்த எல்லையைத் தாண்டி உங்களுக்குள் உள்ளே வரவர, உங்கள் நெஞ்சின், முகத்தின் அருகே வரவர, அதை கையாளுவது ஸிரமம். அதன் பின் உங்கள் கட்டுப்பாட்டில் அது இருக்காது…பின்னர் அந்த மேட்சும்…”

கேட்டுக்கொண்டிருந்த அனைவருக்கும் உள்வாங்கிக்கொள்ள சில கணங்களை அளித்தார்.

கோச் ஸாமின் அமர்வுகள் எப்போதுமே தனித்துவமாக இருப்பதில் இந்த மாதிரியான பாடங்கள் ஓர் காரணம்.

எங்கள் கவுண்ட்டியில் பல்வேறு திறன் நிலைகளில் கோச்கள் கிடைப்பார்கள்; ஆனால் கோச் ஸாம் ஒரு தனித்துவர்.

எல்லா குழந்தைகளும் தத்தம் ராக்கெட்டுகளை அவரைப் போன்று தத்தம் மானஸீக எல்லையில் தத்த, மானசீக சிறகு பந்துகளை  காற்றில் அடித்தனர், தட்டினர்.

“இன்னொன்று: சென்ற வாரம் நான் சில ஆல் இங்கிலாந் மேட்ச் வீடியோ துணுக்குகளை பெற்றோர்களின் குருப்பில் பகிர்ந்திருந்தேன்; அனைவரும் பார்த்திருப்பீர்கள் என நம்புகிறேன்”

அவர், அந்த குறிப்பிட்ட சர்வதேச ஆட்டங்களின் தொடராட்ட துணுக்குகளை மொத்த க்ளப்பிற்கும் பகிர்ந்திருந்தார்.

“அந்த அனைத்து க்ளிப்புகளிலும் பொதுவான அம்சம் என்று எதைச் சொல்வீர்கள்?” ஓர் இடைவெளி விட்டார்.

என்ன…யோசித்தேன்…அனைத்துமே ஓரிரு நிமிடங்களே ஓடக்கூடியவை…எல்லா வகைகளிலும்,  ஆண், பெண், இரட்டையர், ஒற்றை என்று எல்லா வகைகளிலும் இருந்தன…ஆனால், எதிலும் ஒரு குறிப்பிட்ட, புத்திசாலித்தனமான அல்லது அதீத வேகமோ, புத்திசாலித்தனமான ஷாட்களோ இருந்தது போல் நினைவில்லை. 

எதற்காக இவற்றை பகிர்ந்தார் என்று கேட்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டது, நினைவிற்கு வந்தது.

கூட்டத்திலிருந்து ஒரு சில கைகள் தயக்கமாக எழுந்தன.  ஸாம், புன்னகையுடன் அந்த ஆசிய பெண்ணை நோக்கி தன் ராக்கெட்டைக் கொண்டு சுட்டினார்.

இடக்கையால் கண்ணாடியைத் தொட்டுக்கொண்டு தலையைச் சற்றே சரித்தவாறே, “அனைத்துமே நீண்ட ராலிகள் கொண்டவை” என்றாள்.

ஸாம் மெல்லிய பெருமை புன்னகையோடு அவளை நோக்கி தம் ராக்கெட்டை அங்கீகரிக்கும் வண்ணம் சுட்டினார்.

“சரியாகச் சொன்னாய்!……ஏன் என்று யோசித்தாயா…” 

சிறு முணுமுணுப்புகள் கேட்டாலும் யாரும் முன்வரவில்லை.

ஸாம் அதை எதிர்பார்த்தது போல்,

“அனைத்து வீரர்களும் உலகத்தரம் கொண்டவர்கள். கடுமையான பயிற்சிகளும் மேட்ச் அனுபவங்களும் கொண்டவர்கள். இருந்தும் 30, 40 ஷாட்கள் அளவிற்கு சென்றபின்பும் அந்த ராலி, தொடராட்டம் முடியாமலேயே போய்க்கொண்டிருக்கிறது…அது ஏன்?” 

சுற்றி கவனித்தேன், பெற்றோர்களும் கூட அத்தனை கவனமாக அவரது வாயிலிருந்து வரப்போகும் அடுத்தச் சொல்லிற்காக காத்திருந்தனர்.

“அடுத்த வாரம் வரும் போது பதிலைச் சொல்லலாம். முடிப்பதற்கு ஒன்று மட்டும் நினைவுறுத்த விரும்புகிறேன்.” 

ஸாமின் குரலில், உடலில் அவசரமே இல்லை.

“ஆட்டத்தின் எந்த நிலையிலும் பாயிண்ட்களை எடுப்பதற்காக ஷட்டில்களை (கோட்டிற்கு) உள்ளே, வெளியே என்பதில் எந்த நிலையிலும் பொய் சொல்லக்கூடாது, உண்மை மட்டுமே”

ஒரு கணம் நிறுத்தி, “இது விளையாட்டுதான்; ஆனால் அறமிழக்கக்கூடாது” – இந்த இடத்தில் ethic எனும் பதத்தை உபயோகித்தார்.

பெரும் பாட்மிட்டன் டோர்ணமெண்ட்களில் மட்டுமே லைன் நடுவர்கள் அமர்த்தப்படுவார்கள். மற்ற இடங்களில், 19 வயதிற்கு குறைவானவர்களின் போட்டிகளிலும் சரி, வழக்கமான க்ளப் ஆட்டங்களிலும் சரி, பொது விதியானது – அவரவர் கோர்ட்டில் அவரவர் சொல்வதே தீர்ப்பாக எடுத்துக்கொள்ளப்படும்.

அதாவது, ஷட்டில் எல்லைக் கோட்டிற்கு உள்ளேயா அல்லது வெளியிலா விழுந்தது என்பதை அது விழும் கோர்ட்டில் இருக்கும் வீரர்கள்தான் முடிவு செய்யவேண்டும். அதை எதிரணி ஏற்றுக்கொள்ள வேண்டும்.

எளிமையான காரணம்: அந்த ஷட்டில் விழுந்த இடத்திற்கு மிக அருகில் இருப்பது அந்த வீரர்கள்தான். எனவேஅவர்களது பார்வை, கணிப்புதான் சரியாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு, நம்பிக்கை. எதிரணியினர் அப்படித்தான் எடுத்துக்கொள்ள வேண்டியது.

“நான் உங்கள் ஆட்டங்களில் பல சமயங்களில்  கவனித்திருக்கிறேன் – சென்ற வார கவுண்ட்டி விளையாட்டுப் போட்டிகளில் கூட பார்த்த நினைவு இருக்கிறது; இங்கிருக்கும் சிலர் ஷட்டில் விழுந்த இடங்களை தவறாக முடிவு செய்தீர்கள்- தமது கோர்ட்டினுள் உள்ளே விழுந்த ஷட்டில் வெளியேதான் விழுந்தது என்று உறுதியாக நின்றீர்கள்.

ஒருவேளை உங்களால் உறுதியாக சொல்லமுடியவில்லை எனில், நிலைமை எளிது; திரும்ப ராலியை ஆரம்பிக்க வேண்டியது மட்டுமே…(play let)…

தவறாமல் மனதில் இதை நிறுத்திக்கொள்ளுங்கள்; இந்த வயதில் இந்த விளையாட்டில் கடைபிடிக்கும் அறம்தான் எல்லா காலங்களிலும் எல்லா இடங்களிலும் உங்களிடம் இருக்கும்…”

மூச்சை இழுத்துபிடித்த மௌனம் நிலவியது.

இந்த கணத்தில் எனக்கு ஸாமின் முகத்தை பார்க்கவேண்டும் என்ற ஆவலை சிரமம் கொண்டு கட்டுப்படுத்திக்கொண்டேன். 

மெல்ல தலையை இன்னொரு பக்கவாட்டில் திருப்பினேன். இரண்டாவது கோர்ட்டின் அருகில் நின்று அங்கிருக்கும் அனைவரைப்போல் கோச் ஸாமின் பேச்சைகேட்டுக்கொண்டிருந்த ஸாகேத் என் பார்வைக்காக, கேள்விக்காக காத்திருந்தது போலச் சந்தித்தார்.

“Really?! அறமா?! ”

மெல்லிய ஆனால் ஆழமான கேலி கோடு அவரது தாடையின் ஒரு பகுதியில் உருவாகி, சில கணங்கள் இருந்து மறைந்தது.

“ஓகே வீரர்களே, அடுத்த வாரம் சந்திக்கலாம்…”

நானும் ஸாகேத்தும் சேர்ந்துதான் கூடுதல் கார்ப்பார்க்கிங்கிலிருந்து இந்த விளையாட்டு அரங்கினுள் வந்தோம்.

பள்ளியின் மெயின் கார்பார்க்கில் ஆங்காங்கு இடங்கள் இருந்தாலும் சற்று இன்னும் உள்ளே தள்ளி ஒடுங்கியிருக்கும் ஓவர்ப்ளோ, கூடுதல் கார்ப்பார்க்கில்தான் காரை நான் பார்க் செய்வேன். 

நான்கு வருடங்களுக்கு முன்னரே நான் பிரிட்டனுக்கு முதுகலை படிக்க வந்தாலும் கார் ஓட்டுனர் உரிமத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்தான் பெற முடிந்தது. இன்னமும் கூட, முடிந்தவரை அருகில் எந்த காரும் இல்லாத பார்க்கிங்கைத் தேடித்தான் பார்க் செய்வேன்.

இந்த விளையாட்டு அரங்கு இருக்கும் பள்ளியின் நுழைவாயிலை கண்டுபிடிப்பது ஆரம்பத்தில் சிரமமாக இருந்தது. குறுகிய சாலையின் இரு புறங்களிலும் அடர்ந்து இருக்கும் வெண் வில்லோ மரங்களுக்குள் பள்ளி நுழைவாயிலே பொதிந்து இருக்கும். சற்று கவனிக்க தவறிவிட்டால் இன்னுமொரு மைல் சென்று திரும்பிவரவேண்டி இருக்கும்; முதல் சில முறைகள் அப்படிச் சுற்றி வந்திருக்கிறேன்.

இன்று வரும் போது அந்த சிரமம் இல்லை; என் முன் சென்ற வால்வோ வேகம் குறைந்தவுடன் தெரிந்துவிட்டது. அதனைத் தொடர்ந்து உள்ளே நுழைந்துவிட்டேன். பின்னர் அதுவும் கூடுதல் கார்ப்பார்க்கைச் செல்லும் போது…கொஞ்சம் உற்றுப் பார்த்தேன், ஸாகேத்தின்  வால்வோதான்.

கார் பார்க் நீண்ட நான்கு வரிசைகளில் நீள்சதுர காலி துண்டுகளாக இருந்தது, முதல் மூலையில் ஒரே ஒரு காரைத்தவிர; ஸாகேத் மூன்றாவது வரிசையின் கடைசியில் சென்று நிறுத்தினார். மூன்றாவது வரிசையில் திரும்பும்போது இண்டிகேட்டர் எரிந்தபோது புன்னகைத்தேன்.

நான் நான்காவது வரிசையின் மூலையில் பார்க் செய்துவிட்டு என் பாட்மிட்டன் பையுடன் சற்று ஓட்டமாக நடந்து ஸாகேத்துடன் சேர்ந்து கொண்டேன்.

பரஸ்பர விசாரிப்புகளுடன் இருவரும் பார்க்கை ஒட்டிய ஒற்றைப்பாதையில் உள்ளரங்கை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். முதலில் கால்பந்து மைதானங்கள் வரும், அதை ஒட்டி பாஸ்கெட் பால் மைதானம் பின்னர் ஏதோ ஆய்வுக்கூட கட்டிடங்கள். பள்ளியின் இன்னொரு மூலையில்தான் பாட்மிட்டன் உள்ளரங்கு.

அக்டோபர் 7 மணி மாலைக்கே உரிய கவிந்துவிட்டிருந்த இளம் இருட்டு.

பாதைக்கும் நெருக்கமான மரங்களுக்கும் இடையில் சீரான இடைவெளிகளில் விளக்குத்தூண்கள்/ கம்பங்கள், கிட்டதட்ட ட்ராகுலா படங்களில் வரும் மங்கலான மஞ்சள் வெளிச்சத்தில் எரிந்துகொண்டிருந்தன.

இன்னொரு பக்கவாட்டில் எங்களின் நிழல்கள் சீராக ஒரு விளக்கு கம்பத்தில் உருவாகி, பின் மெல்ல மறைந்து அடுத்த கம்பத்தில் உயிர் பெற்று கூடவே வந்து கொண்டிருந்தன.

ஓரிரு நிமிடங்களில் பாதை சற்றே வளைந்து இடது புறம் திரும்பியபோது எனது நிழல் என் பக்கவாட்டிலிருந்து மறைவதற்கு முன்னே என் முன் பாதையில் இன்னொரு நிழல் தோன்றி நீள ஆரம்பித்தது. இன்னொரு பக்கவாட்டிலும் இன்னொரு நிழல்.

சென்ற வாரமே இதை கவனித்தது நினைவிற்கு வந்தது. நான் சற்று நின்று சுற்றிப் பார்த்தேன்.

“என்ன” என்றார் ஸாகேத்.

அவரைச்சுற்றியும் அவரது நிழல்கள். “ஒன்றுமில்லை” என்றவாறே நடையைத் தொடர்ந்தேன். 

“இன்று ஸாம் வருவார் இல்லையா?” என்றேன்.

ஸாகேத், என் பக்கம் மெல்ல திரும்புவதற்கு முன் கொஞ்சமாவது புன்னகைத்திருக்க வேண்டும், ஆனால் நான் பார்க்கும் போது அது இல்லை.

“வந்துவிட்டாரே, அதோ அந்த ஒற்றைக்கார், அவருடையதுதான் – மேலும் இன்றைக்கு ரவுண்ட் ராபின் மேட்ச்கள் உண்டே?”

திரும்பிப் பார்த்தேன்.

அந்த பெரிய பிஎம்டபுள்யு எம் சீரிஸ் கார், நான்கு வெண்பட்டைகளுக்குள் கச்சிதமாக நிறுத்தப்பட்டிருந்தது.

நான் இந்த க்ளப்பில் சேர்ந்து ஓரிரு மாதங்கள்தான் ஆகின்றது. உறுப்பினர் ஆவது அத்தனை எளிதல்ல. 

இது போன்ற மாநில அளவில் ப்ரிமியர் தரத்தில் விளையாடும் இங்கிலாந்து க்ளப்களின் வழக்கமான வழக்கப்படி மூன்று அமர்வுகள் என் விளையாட்டின் தரத்தை, என் உடல் தகுதிகளைப் பார்த்துவிட்டுதான் என்னை உறுப்பினராக சேர்த்துக்கொண்டார்கள்.

கவுண்டி மேட்ச் ஆட்ட  பருவம் என்பது பொதுவாக அக்டோபரில் ஆரம்பித்து அடுத்த ஏப்ரலில் முடியும். 

சீஸனுக்கு ஐந்து அல்லது ஆறு தேர்ந்தெடுக்கப்பட்ட இரட்டையர் அணிகள் இந்த க்ளப்பிற்காக கவுண்டி முழுவதும் விளையாடும்.

அந்த தேர்ந்தெடுக்கப்படும் ஆறு இடங்கள் என்பது ஒரு மாதிரியான கௌரவப்பிரச்சனை அல்லது சீரியஸாக எடுத்துக்கொள்வார்கள் என்பதை கடந்த சில வாரங்களில்தான் உணர்ந்து கொண்டேன்.

மொத்தம் பத்து அல்லது பதினான்கு கடும் திறானளிகள் கொண்ட அணிகளுக்குள் ரவுண்ட் ராபின் முறையில் பெஸ்ட் ஆப் த்ரி எனும் வகையில் ஆடி, அதில் முதலில் வரும் ஆறு அணிகள் கவுண்டி மேட்ச்களிலும் மற்ற அணிகள் மாவட்ட அளவிலான லீக் போட்டிகளிலும் ஆடும். 

தன்னுடைய பார்டனராக விளையாட ஸாகேத் என்னை சென்ற வாரம் கேட்டுக்கொண்டது சந்தோஷமாக இருந்தது. 

அவர் நிச்சயம் ஓர் கவுண்டி தகுதி கொண்ட வீரர் – வயது முப்பதுகளின் நடுவில், கிட்டதட்ட என் சம வயதவர் எனினும் சுமாரான ஸ்மாஷ் திறன் என்றாலும் மற்ற பல திறன்களில் என்னை விட மேம்பட்டவர்.

அவரது ஷட்டிலின் திசை, அளவு கணிப்புத்திறனை அவருடனோ அல்லது அவருக்கு எதிரில் விளையாடும்போதோ ஒரு கேம்மிலேயே தெரிந்துவிடலாம்.

ஷட்டில் எதிர் கோர்ட்டிலிருந்து உயரே வந்து கொண்டிருக்கும்போதே அது தம் கோர்ட்டின் பின் கோட்டிற்கு வெளியே போகுமா இல்லையா என்பதை சரியாக கணிப்பதில் சமர்த்தர். அவரது பார்ட்னராக விளையாடும் போது அந்த திறன் வெகுவாக பலனளிக்கும், அவரது கணிப்புகள் பெரும்பாலும் துல்லியமாக இருக்கும். எனவே, ஆட்ட நடுவில் இரு அணியினரும் சமமாக இருப்பது போல் தெரிந்தாலும் இறுதியில் வெற்றி அல்லது தோல்வி என்பது அந்த சரியான கணிப்புகளின் துல்லியத்தில் இருக்கும், அவைதான் முக்கிய காரணியாக இருக்கும்.

இன்னொன்றும் அவரைப் பற்றி சீக்கிரமே தெரிந்துகொண்டேன், அவரது உச்சரிப்பைக் கவனிப்பதற்கு முன்னரே

இரு வாரங்களுக்கு முன், கோர்ட்டின் மூலையில் ஓர் நீள டேபிளில் யாரோ கொண்டு வந்து பரப்பி வைத்திருந்த  வெண்ணைய் கட்டிகள், கேக்குகளை மெல்லும் போது உதடுகளை இறுக மூடியிருப்பதிலும், சிறு சத்தம் வராமல் கவனமாக இருந்ததிலிருந்தே – உச்சரிப்பெல்லாம் தேவையில்லை – அவர் நிச்சயம் என்னைப்போல் முதல் இந்திய தலைமுறையினன் அல்ல. இங்கே பிறந்து வளர்ந்த இரண்டாவது அல்லது மூன்றாவது இந்திய தலைமுறை.

கோச் ஸாமும் அவரது நீண்ட கால பார்ட்னர் பில்லும் ஓர் அணி. கடந்த பல வருடங்களாக முதலாவதாக விளையாடிவருகிறார்கள் – க்ளப்பின் இணையத்தளத்தின் முகப்பிலேயே அவர்களது புகைப்படங்கள் அமர்ந்து பார்வையாளர்களுக்காக காத்திருந்தன…

என்னால் கேட்காமல் இருக்க முடியவில்லை. என்றே சொல்லிவிட்டு,

“கோச் ஸாமின் சில கோர்ட் கால்கள்… சரியில்லை என்று படுகிறது; நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று நேரடியாக கேட்டே விட்டேன்.

ஸாகேத், தன் வலது தோளிலிருந்த பாட்மிட்டன் பையை இடது தோளிற்கு மாற்றியவாறே,

“ம்ம்ம்…இப்படிப்பட்ட கமெண்ட்களைக் கேட்பது எனக்கு முதல் முறையல்ல” என்று மட்டும் சொன்னார்…

அதனால்தான் கோச் ஸாம், குழந்தைகளின் மத்தியில் அறம் என்று சொல்லும் போது, ஸாகேத்தை திரும்பிப்பார்க்கும் இச்சை எழுந்தது…

வீட்டிற்கு கிளம்பலாம் என்று சொல்லவில்லை.  ஆனால் கோச் ஸாம் தனது நிலையிலிருந்து சற்று ஒரு அடி பின் வாங்கி தனது கண்ணாடியை சரி செய்து கொண்டதும் பிள்ளைகள் மெல்ல கலைந்து தத்தம் பாட்மிட்டன் பைகள் இருக்கும் இடம் நோக்கி சென்றார்கள்.

பின்னர், பெரியோர்கள் கோர்ட்களை நிரப்பி, ரவுண்ட் ராபின் மேட்ச்களுக்கான நானும் ஸாகேத்தும் ஒரு அணியாக விளையாடுவதற்காக சந்தித்துக்கொண்டபோது அவரது கேலி கோடு மீண்டும் தோன்றியது.

நாங்கள் இருவரும் எங்களுக்கான ரவுண்ட் ராபின் மேட்சுகளை ஆட ஆரம்பித்தோம்.

இன்றும் ஸாகேத் சரியான சமயங்களில், மெல்லிய குரலில் கால் செய்தார் – எனக்கு சில சமயங்களில் சீறிப்பாய்ந்து வரும் ஷட்டில் பக்கவாட்டு கோட்டிற்கு வெளியே விழுமா அல்லது கோட்டினுள் அல்லது உள்ளே இறங்கி விடுமா என்று சந்தேகம் வந்துவிடும் – எனது அசைவுகளின் மாற்றத்தை உணர்ந்து ஸாகேத் உடனடியாக ஷட்டிலின் போக்கை கணித்து சொல்லிவிடுவார் – பெரும்பாலும் எதிர் அணிக்கு கேட்காது. ஆனால் அவரது கணிப்பு பொய்யே ஆகாது – இன்றும் அப்படித்தான்.

எங்களது இரண்டாவது மேட்ச், கோச் ஸாமிற்கு எதிராக அமைந்தது.

முதல் கேமில் அவர்களை அதிகம் ஆதிக்கம் செலுத்த விடாமல், கிட்டதட்ட சமமாகவே ஸ்கோர் சென்றுகொண்டிருந்தது.

ஒரு கட்டத்தில், 12-12 அல்லது 14-14 சரியாக நினைவில்லை – நான் உள் மூச்சை, எகிறும் போதே அடிவயிற்றை எக்கிப்பிடித்து,  ராக்கெட்டை சரியான புள்ளியில் ஷட்டிலை அடைந்து கீழே இறங்கும் போது முழு பலத்துடன் ஷட்டிலை சுழற்றி அடித்தேன்.

கோச் ஸாமிற்கு வலது புற எல்லைக்கோட்டை மிக நெருக்கமாக ஒட்டி விழுந்தது, கோட்டிற்கு உள்ளே.

ஸாமிற்கு தேவையான நேரம் கிடைத்தது, அந்த ஷட்டிலின் பயணத்தை உற்று கவனிக்க, அது விழுந்த இடத்தை கவனிக்க.

அவர் ஓர் கணம் எடுத்துக்கொண்டார். பின், விழுந்த ஷட்டிலை எடுத்துக்கொண்டு அவர் சர்வ் செய்ய முன் வந்தார்.

நான், சற்றே திகைத்து அது உள்ளே அல்லவா விழுந்தது என்று சொல்லமட்டும்தான் செய்யவில்லை; ஸாம் நேரடியாக என் கண்களை, அவரது கண்ணாடி வழியாக பார்த்து, என்ன என்று புரியாதது போல் பார்த்தார்.

நான் ஒரு கணம் என் வலது புறம் சற்றே திரும்பி ஸாகேத்தைப் பார்த்தேன் – அவர் மெல்ல தலையை அசைத்தார். மேலும் கீழுமா அல்லது வலது இடதா என்று கூட சரியாக தெரியவில்லை.

நாங்கள் தொடர்ந்தோம்.

எண்ணிக்கை 18-18 இருக்கையில் என்னுடைய இன்னொரு ஸ்மாஷ் அவர் காதை உரசிக்கொண்டு தாண்டிச்சென்று அவரது பின் கோர்ட்டின் கோட்டை ஒட்டி விழுந்தது. அவர் அதைத் தொடர்ந்து திரும்பிப்பார்த்தார். என்னால் அது விழுந்த இறுதி கணத்தைப் பார்க்க முடியவில்லை. அவர் முதுகைக்கொண்டு மறைத்திருந்தார். ஆனால், அது சென்ற கோணத்தில் ஷட்டில் கோட்டினுக்குள்ளேதான் விழுந்திருக்க வேண்டும். ஸாகேத்தும் அருமையான அடி என்பது போல் தனது ராக்கெட்டால் என் பின் பக்கத்தை மெல்ல தொட்டார்.

கோச் ஸாம், ஷட்டிலை நோக்கிச்சென்றார். அதை எடுத்து திரும்பி எங்களை நோக்கி வருகையில் என்ன சொல்ல வேண்டும் என்பதை முடிவு செய்துவிட்டார் என்று தெரிந்துவிட்டது.

மெல்ல அவரது ஸர்வீஸை தொடர்வதற்கு முன்,

“ஸ்மாஷ், தரையை நோக்கி எத்தனை செங்குத்தாக இறங்குமோ அத்தனை நல்லது” என்று மட்டும் சொன்னார்.

அந்த மாட்சை அவர் ஜெயித்தபின் கைகளைக் கொடுக்கும் போது கண்களை சந்திப்பதை தவிர்த்தது போல் இருந்தது.

நாங்கள் திரும்ப பெஞ்சிற்கு வந்து தத்தம் பாட்மிட்டன் பைகளிலிருந்து தண்ணீர் பொத்தல்களையும் துண்டையும் எடுக்கும் போது ஸாகேத்திடம் கேட்டே விட்டேன்.

“நிஜமாக அந்த இரு ஷாட்களிலும் ஷட்டில் வெளியே விழுந்ததா என்ன?”

ஸாகேத் மெல்ல தன் தலையை முழுவதுமாக, முன் தலையிலிருந்து பிடரி வரை வருடிக்கொண்டார். உலக மாதிரி உருண்டையைத் தடவுவது போல் செய்தார். சிறு வயதிலேயே முழு வழுக்கை கொண்டவர்களுக்கே உரிய தடவல் அது. பல ஆண்டுகள் பழக்கத்தில் வரும் இயல்பான வழக்கம் அது.

பின் சாதாரணமாக கையை துண்டில் துடைத்தபடி, 

“இரண்டாவது பற்றி உறுதியாக சொல்ல முடியவில்லை; ஆனால், முதல் – உள்ளேதான் என்று நினைக்கிறேன்”  என்று வழக்கமான பிரிட்டிஷ் வழவழ பதிலைச் சொன்னார்.

என்னால் தாங்கமுடியவில்லை;

 “அதெப்படி, அப்படி ஒரு பொய், அதுவும் உடனடியாகச் சொல்ல முடிந்தது…”

“இது ஒரு சாதாரண க்ளப் மேட்ச், ஓர் மரியாதைக்குரிய கோச் – இவர் ethic என்றெல்லாம் பேசுகிறார். எப்படி முடிகிறது…”

போத்தலிருந்து தண்ணீர் ஒரு மடக்கு மடக்கிக்கொண்டே,

“உண்மையை சொல்ல வேண்டுமா இல்லையா என்பதை ஓரிரு கணங்களில் முடிவு செய்யவேண்டியிருக்கிறது என்பதே சிரமமான காரியம்தான், இல்லையா?

கிட்டதட்ட அனிச்சையாக செய்யவேண்டியிருக்கிறது…

எனக்கென்ன தோன்றுகிறது என்றால்…ஒருவருடைய நிலை, ஆளுமை நியாயவாதியா, பொய்யரா என்பது அனிச்சையாகத்தான், நிகழும் அந்த கணத்தில்தான் தெரியவரும்…கொஞ்சம் மாற்றிச்சொன்னால்…யோசிக்க நேரம் எடுத்துக்கொண்டாலே தங்களுக்கு ஏற்ப, சூழ்நிலைகளை ஆராய்ந்து தக்க எதிர்வினை செய்யலாம் என்றாலே ஒரு மாதிரி நீர்த்து போய்விடுகிறதோ என்று படுகிறது…”

பேசி முடித்ததும்தான் படபடப்பாக சொல்லிவிட்டோமோ என்று சற்று கூச்சமாக அவரைப் பார்த்தேன்.

ஸாகேத் உடனடியாக பதிலைச் சொல்லவில்லை – மேற்கூரையை ஒரு முறை அண்ணாந்து பார்த்தார்; சற்று நேரம் தொடர்ந்து விட்டு கீழே பார்த்தார்; தலையை ஒரு வருடு செய்துவிட்டு,

“நேரம் எடுத்துக்கொண்டால் என்ன தவறு என்று யோசிக்கிறேன் – ஐ மீன், அப்படி அலசி, ஆலோசித்துவிட்டு உண்மையான முடிவிற்கு வரமுடியாதா என்ன….சற்று இடிக்கிறது என்று நினைக்கிறேன்”

நான் பதிலேதும் அப்போது சொல்லவில்லை; ஆனால் என் முகத்தை- புருவ முடிச்சுகள் கடுமையாக இறுகிக்கொள்வதை கவனித்துவிட்டு,

“இது ஒரு சாதாரண விளையாட்டு, அவ்வளவே; இதற்காக இத்தனை குழப்பிக்கொள்ள வேண்டாம். ஜஸ்ட் விளையாட்டை அனுபவி” என்றபடி தொடைகளை இரு கைகளாலும் உந்தி எழுந்து என் தோள்களை மெல்லத் தட்டினார்.

அந்த enjoy எனும் பதத்தை இங்கிலாந்தில் உபயோகப்படுத்துவது என்னை மிகவும் கவர்ந்த ஒன்று.

உணவுவிடுதிகளில் உணவை அளித்துவிட்டு பரிசாகரர்கள் சொல்வது போல், மருத்துவமனையில் மருத்துவரிடம் விடைபெறும்போது அவர் இன்னும் மிச்சமுள்ள இந்த நாளை அனுபவி என்று சொல்வது போல் மிகவும் ஆழ்ந்து சொல்லப்படும்.

அதுபோலத்தான் ஸாகேத் உச்சரித்தார். நான் மவுனமாகி நின்றேன்.

பின் தொடர்ந்து மூன்று மேட்ச்களை ஆடி முடித்தபின்புதான் மறுபடியும் அவருடன் எனக்குச் சற்று நேரம் கிடைத்தது. என்னால்…இருக்கமுடியவில்லை.

“ஸாகேத், எனக்கு என்ன தோன்றுகிறது என்றால்…உண்மையைச் சொல்வதற்கு ஏன் நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும்? இரு கணங்களோ, நிமிடங்களோ…அதற்கு ஏன்…”

ஸாகேத், என்னை சற்று உற்றுப் பார்த்துவிட்டு, 

“அவருக்கே உறுதியாகத் தெரியவில்லையோ என்னமோ? அதனாலும் நேரம் எடுத்துக்கொள்ளலாம் இல்லையா?” என்றாலும் அவருக்கே நான் சொல்லப்போகும் பதிலும் தெரிந்திருந்தது.

“உறுதியாக தெரியவில்லை என்றால் அதற்குதான் பதில் இருக்கிறதே? Play let – மறுபடியும் முந்தின பாயிண்ட்டிலிருந்து ஆரம்பிக்கலாமே?”

நான்கு கோர்ட்களிலும் விளையாட்டு உச்சத்தில் நடந்துகொண்டிருந்தாலும், ஷட்டில்களை அறையும் ஒலியும் உள்ளரங்கு ஷூக்களின் உள்ளரங்கு தளங்களை கூச வைக்கும் ஒலிகளும் தவிர வேறு எந்த பேச்சொலிகளும் இல்லாத மௌனம் இருந்தது.

சரி, இந்த ஆட்டத்தைக் கவனிப்போம் என்று ஸாகேத், தம் கண்களாலும் புருவங்களாலும் எங்களுக்கு எதிரே இருக்கும் கோர்ட்டை சுட்டிக்காட்டினார்.

அந்த கோர்ட்டில் ஸாமும் அவரது பார்ட்னரும் எங்களுக்கு எதிரில் இருக்கும் கோர்ட்டில் ஆடிக்கொண்டிருந்தார்கள்.

நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் ஒரு கணம் பார்த்து மெல்ல தலையை அசைத்தது போல் செய்துவிட்டு ஆட்டத்தை கவனிக்க ஆரம்பித்தோம்.

ஸாம் கோச் மட்டுமல்ல இந்த க்ளப்பின் முன்ணணி/ ப்ரீமியர் டிவிஷன் வீரர்களில் ஒருவர் – அப்படித்தான் ஆடினார்.  

ஷட்டிலை மிக உயரத்தில் தூக்கி எதிராளியின் பக்கம் அடித்தார். 

இது போன்று அதிக தர விளையாட்டு வீரர்களின் இரட்டையர் ஆட்டங்களில் clear  என்று சொல்லப்படும் தூக்கி எதிர் கோர்ட்டின் பின்பக்க பெட்டியில் அடிப்பது அவ்வளவாக இருக்காது. ஏனெனில் இரட்டையர் ஆட்டங்களில் ஸ்மாஷ் மிக மிக வேகமாகவும், கடுமையான வலிமையுடனும் இருக்கும். எனவே அப்படித்தூக்கி கொடுத்தால் கடும் வேகத்தில் ஷட்டிலை அடித்துவிடுவார்கள்.

அதனால் பெரும்பாலும் தூக்கிக்கொடுப்பதைத் தவிர்த்து flat / கிடைமட்டமாக ஆடவே முயல்வார்கள்.

ஆனால், கோச் ஸாம், தூக்கி விசிறுவதற்கு தயங்கமாட்டார். 

பெரும்பாலும் எதிரணிக்கு அது ஒருவகையான அழைப்பு, சவால் – எனக்குத்தெரியும், இந்த மாதிரி உயரமாக ஷட்டில் வந்தால் எகிறி ஒரு வலிமையான ஸ்மாஷ் அடித்து ராலியை முடித்து புள்ளியை எடுக்க உங்களுக்கு ஓர்அருமையான வாய்ப்பு என்று. இருந்தும் நான் உனக்கு அந்த வாய்ப்பு தருகிறேன், அடித்துதான் பாரேன் என்று.

அடித்தால் சுலபமாக திருப்பி மறுபடியும் தூக்கித் தருவார் – நீ எத்தனை முறை அடித்தாலும் நான் திருப்பித்தருவேன்; என்னதான் செய்ய முடியும், செய்யேன் பார்க்கலாம் என்ற அறைகூவல்தான் அது.

அது ஒருவகையான உத்தி. எத்தனை பலமாக, பலவித கோணங்களில் அடித்தாலும் அநாசயமாக நம்மிடமே திருப்பிவிடுவார்.

இரண்டு அல்லது மூன்று முறைகள் மட்டுமே எதிராளியால் அதே வேகத்தில், வலிமையான ஷாட்கள் அடிக்க முடியும். இரண்டாவது ஸ்மாஷிலிருந்து எதிராளி ரெகவரி ஆகி திரும்ப அதே வேகத்தில் துள்ளுவது சிரமம். மூன்றாவது முறையில் ரெகவரி ஆவதே கடினம் – நமது எதிர்வினை பலகீனமாக ஆக, ஆக அதை ஊதித்தள்ளுவது, ரிஸ்கே இல்லாத வேலை. வலையின் முன் பொறுமையாக வந்து சரியான கொதி வந்ததும் ஒரு திருகில் அடுப்பை அணைப்பது போல் அந்த ராலியை “அணைத்துவிட்டு” போய்விடுவார்.

இந்த மாட்ச்சிலும் இதற்கு அடுத்த நடந்த மாட்சிலும் அப்படித்தான் செய்தார் – இத்தனைக்கும் ஒவ்வொரு ராலியும் குறைந்தது பத்து அல்லது பதினைந்து அல்லது சில சமயங்களில் இருபதற்கும் மேற்பட்ட ராலிக்கள். நால்வரும் ஒரு சிறு தவறு கூட செய்யாமல் ஆடினார்கள்.

ஸாம் மெல்ல, மெல்ல, திரள்வதை, எதிரணியை கொஞ்சம் கொஞ்சமாக தமது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருவதை கவனிக்க, கவனிக்க அத்தனை அருமையாக இருந்தது. ஒவ்வொரு ராலியும் அவரைப்பொறுத்தவரை, ஓர் வலைதான். அதை பொறுமையாக கட்டி, விரித்து, எதிராளி தாம் சிக்கியதே அறியாமல் மெல்ல மெல்ல தம் அருகில் வர, இறுதியில் who blinks first  என்பது போல் எதிராளி ஓர் சிறு சபலத்தில் ஓர் சிறு தவறு அல்லது ரிஸ்க் எடுக்க எத்தனிக்க, ஸாம் காத்திருந்து ஒரு சின்ன திருகில்  ராலியை அணைத்துவிட்டுப் போனார்.

ஆனால்..இந்த மாட்சில் ஒரு தடவைகூட தவறான கால் செய்யவில்லை!

இத்தனைக்கும் இரு முறைகள், அவரது கோட்டின் மேலேயே விழுந்ததாக ஒத்துக்கொண்டு எதிராளியைப் பாராட்டினார். அவர்களுக்கு அது நிச்சயம் அங்கீகாரம்தான். அவர்களது கண்களிலும் சிக்கனச் சொற்களிலும் பிரதிபலித்தது.

அவர்கள் கைகளை குலுக்கிக்கொள்ளும் போது, இப்போது என்ன சொல்கிறாய் என்பது போல் ஸாகேத் என்னைப் பார்த்தார்.

என்னிடம் நேரடியான அல்லது ஸாகேத்தை திருப்தி செய்ய வைக்கும் பதில் இல்லை.

இருந்தும், “எப்படியும் ஸாம் வெற்றி பெறக்கூடிய மேட்ச்கள், இவர்களோடு ஒப்பிடும் போது பலகீன எதிராளிகள். இதற்கு ஏன் மெனக்கெட வேண்டும் என்று நினைத்திருக்கலாம்” என்று முணுமுணுத்தேன்.

ஸாகேத் நிச்சயம் மறுப்பார் என்று நினைத்தேன். அவரோ,

“அல்லது, நாம் கவனித்துக்கொண்டிருக்கிறோம் என்ற பிரக்ஞை அவரிடம் இருந்திருக்கலாம்” என்றார்.

மௌனமாக அமர்ந்து துண்டால் முகத்தையும் கைகளையும் துடைத்துக்கொண்டிருந்தோம். பின்னர், தண்ணீர் போத்தலை மெதுவாக திருகிக்கொண்டே, தனக்குள் முணுமுணுத்தார்.

“உண்மை சொல்வதற்கு ஏன் நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும்…ம்ம்..சுவாரஸிய கேள்விதான்…உண்மை…ம்ம்ம்…

எது நேர்மை, எனக்கு சரியென படுவது மற்றவருக்கும் சரியாகத்தான் இருக்கவேண்டுமா…இவையெல்லாம் மிக பழைய கேள்விகள், விவாதப்பொருள் அல்லவா..!” என்று முடிக்கும் போது சூழ்நிலையை இலகுவாக்குவதற்காக என்பது போல் மெல்லிய சிரிப்புடன் முடித்தார்.

அதன் பின்னர் நாங்கள் மேலும் மூன்று அல்லது நான்கு மேட்ச்கள் ஆடினோம். முதல் ஆறு அணிகளுக்குள் வந்துவிட்டோம். 

அமர்வு இரவு 8-10 மணி வரை என்றாலும் 9:30 மணியிலிருந்தே ஒவ்வொருவராக வெளியேற தொடங்கினார்கள். 9:55 மணிக்கு ஒரே ஒரு கோர்ட்டில் மட்டும் ஆட்டம் நடந்துகொண்டிருந்தது.

மற்ற கோர்ட்டுகளின் வலைகள், போஸ்ட்களை ஓரிருவர் அதற்கான அறைக்குள் கொண்டு வைக்க சென்றார்கள். 

கோர்ட்களின் இருபுறங்களிலும் சிறகுப்பந்துகள் அங்கஹீனங்களுடன் வீழ்ந்து கிடந்தன – பெரும் போர் முடிந்த களம் போலிருந்தது.

நான் அவற்றில் முழுவதுமாக உடைந்து போனவைகளையும் சுமாராக இருப்பவைகளையும் தனித்தனியான பெட்டிகளில் சேகரித்து, அதற்கான இடத்தில்  போட்டுவிட்டு எனது உடமைகளை என் பையில் வழிய திணித்தவாறேவாசலை நோக்கி நடந்தேன்.

என் முன் கோச் ஸாம், சீரான தாளநடையுடன் போய்க்கொண்டிருந்தார்.

இரட்டைக்கதவுகளின் ஒன்றைத் தள்ளித்திறந்து பின், திரும்பிப்பார்க்காமல் கதவைப் பிடித்துக்கொண்டார்,

பின்னால் வருபவர், கதவை திறக்கும் சிரமத்தில் பங்கேற்பது போல். அந்தக் கதவை அவரிடமிருந்து நான் மெல்ல வாங்கிக்கொண்டு நன்றி சொன்னேன்.

ஒரு அடி முன்னால் எடுத்துவைத்தவர், குரலைக்கேட்டதும் சரேன்று திரும்பினார்.

கண்ணாடிகளின் பின்னால் பளிச்சிடும் அந்த நீலக்கண்களில் ஒரு கணம் ஏதோ நிகழ்ந்தது போல், கண்களை சிமிட்டாமலேயே சிமிட்டியது போல் இருந்தது.

பின்னர் சரியாகிவிட்டது.

கார்ப்பார்க்கை நோக்கி இருவரும் சேர்ந்து நடக்க ஆரம்பித்தோம்.

எனக்கு எப்படியும் எப்படியாவது அவரது ஜட்ஜ்மெண்ட் கால்களைப் பற்றி அவரிடமே பேசிவிட வேண்டும் என்று உந்துதல் வந்துவிட்டது. எனக்கே வியப்பாகத்தான் இருந்தது.

எப்படி வாக்கியத்தை அமைக்கலாம் என்று யோசிக்க ஆரம்பித்தேன்.

கூடவே, இதெல்லாம் ஒரு விஷயமா, இதோ, காரில் ஏறி வீட்டிற்கு சென்று தூங்கி எழுந்தால் அடுத்தநாள் புதிய நாள், எதிர்கொள்ளவிருக்கும் பிரச்சனைகளில்…எனது ஸ்பான்ஸ்ர்ஷிப் முடிய இன்னும் ஆறு மாதங்கள்தான் இருக்கிறது என்று என் எண்ண தண்டவாளங்கள் மாறிக்கொண்டிருப்பதை உணர்ந்தேன்.

ஆனால் கோச் ஸாம் என்னை முந்திவிட்டார்.

“நாளை காலை, அதிகாலையிலேயே காரெடுக்க வேண்டும், வேலைக்கு”

சொந்த விஷயங்களை முழுதும் சொல்லாமல் பேச்சைக் கொண்டுபோவது, பிரிட்டிஷாரின் முக்கிய திறன்களில் ஒன்று.

நானும் அதே பாணியில், “வெகு தூரம் செல்லவேண்டுமோ?” என்றேன்.

“ஆமாம், வாரமிரு முறை கேம்ப்ரிட்ஷ் அலுவலகத்திற்கு செல்ல வேண்டியிருக்கிறது” 

இவர் என்ன வேலை செய்வார் என்று ஊகிப்பது சிரமமாக இருந்தது.

வானத்தில் மேகங்களை ஜிக்ஸா புதிரைப் போல் யாரோ இணைத்துக்கொண்டிருந்தார்கள்.ஆங்காங்கு இடைவெளிகள் இன்னும் இருந்தன. வீசி அறைந்த காற்றில் ஐஸ்ஸின் கூர்மை இருந்தது. எனக்கு இது, நான்காவது இலையுதிர்காலம், இங்கிலாந்தில். ஒவ்வொரு முறையும் இந்த காலம் ஆரம்பிக்கும் போது புதிதாக படும். பின்னர், அடுத்த காலம் வந்ததும் இது மறந்து போய்விடுகிறது. ஆனால் அடுத்த முறை வரும் போது சென்ற முறையின் நினைவுகளையும் சேர்த்துக்கொண்டு முதல் ஓரிரு வாரங்களுக்கு புத்தம் புதிதாய் வருகிறது.

என்னை அறியாமல் சொல்லிவிட்டேன், போல,

“எல்லா காலங்களும் இப்படித்தானே?” என்றார் சன்னமாக. 

ஆமாம்…

“ஸாகேத் எங்கே? ஷவர் அறையிலா?” 

நான், சற்றே இலகுவாகி, “ஆம்” என்றேன்.

“நீங்கள் இருவரும் இயல்பாகவே சரியான ஜோடியாக பொருந்திவிட்டீர்கள், ஒருவருக்கொருவர் புரிந்து கொள்வதிலும் திறனிலும்…ஒருவர் தனிப்பட்ட முறையில் எத்தனை திறனாளியாக இருந்தாலும் போதாது; சரியான கூட்டாளி இல்லாவிடில் சரியான அணியாக பரிணமளிப்பது சிரமம்…

என் கணிப்பு பொய்யாகாது என்பதற்கு இன்னொரு உதாரணம்!” என்று மெல்ல சிரித்துக்கொண்டார்.

என்னுள் மறுபடியும் துடிக்க ஆரம்பித்தது.

“ஆம், அருமையான கூட்டாளி. அவருடன் ஆடுவது என்பது மிக மகிழ்ச்சிகரமானது – அதற்கு முக்கிய காரணம், அவருடைய ஷட்டிலின் அளவை கணிக்கும் திறன் அபாரமானது” என்றேன் – திட்டமிடாமல் தன்னாலே அமைந்து விடும் சில விஷயங்களில் இந்த பதிலும் ஒன்று.

“உண்மைதான். அவர் சர்வதேச போட்டிகளில் லைன் ஜட்ஜிற்கான தகுதி, அனுபவங்கள் பெற்றவர், இது தெரியுமில்லையா?” என்றார்.

“ஓ…எனக்கு தெரியாதே?” என்றேன், வியப்பை மறைக்காமல்.

“அவர் பல ஆல் இங்கிலாந்த் ஓபன் போட்டிகளில் லைன் ஜட்ஜாக பணிபுரிந்திருக்கிறார். ஒவ்வொரு வருடமும் மார்ச்சில் மூன்று வாரங்களுக்கு அவருக்கு பர்மிங்ஹாமில்தான் ஜாகை”  

“இருந்தும் இன்றைய சில ஆட்டங்களில் அவரது கணிப்பு சரியில்லாமல் போய்விட்டது, துரதிருஷ்டமானது”  சரியான வாக்கியத்தை வந்து சேர்ந்துவிட்டேன் என்று எனக்கே ஆச்சரியமாக இருந்தது.

கோச் ஸாம்,  நிச்சயம் நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை உணர்ந்திருப்பார். ஆனால் எதுவும் பேசவில்லை.

இப்போது நாங்கள் அந்த ஒற்றை நடைப்பாதைக்கு வந்து சேர்ந்து ஓவர் ப்ளோ கார்ப்பார்க்கை நோக்கி இணைந்து நடக்க ஆரம்பித்தோம்.

காற்று அதிகமாக, அதிகமாக எங்கள் நிழல்கள் பக்கவாட்டில் ஆடிக்கொண்டே தோன்றி மறைய ஆரம்பித்தன.

பின்னர் மறைந்து அடுத்த விளக்கு கம்பத்தில் தோன்றி…

“எல்லாருடைய பார்வையும் கோணங்களும் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை அல்லவா” என்று தனக்குத்தானே பேசிக்கொள்வது போல் இருந்தது. தனக்குத்தானே தானா அல்லது அவரது நிழலுடனோ என்னவோ.

18-18 லிருந்து இரு முக்கிய கால்கள் அவர் கணித்ததை மனதில் ஒரு முறை ஓட்டிக்கொண்டேன். அதனால்தான் அந்த ஆட்டத்தை அவர்கள் வென்றார்கள், எனக்கு நிச்சயம் தெரியும்…

என்னுள் ஓர் இச்சை கிளர்ந்தெழுந்தது.

“ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்று அவசியமில்லைதான். ஆனால் உண்மை என்பது, நேர்மை என்பது ஒன்றாகத்தானே இருக்க முடியும், ஆளுக்கேற்றது போல், அவரவர் விருப்பப்படி மாற்றிக்கொள்ளலாம் என்றால் அப்புறம் என்ன உண்மை அது…என்ன ஆளுமை அது” என்று சற்று இடைவெளி விட்டு சொல்லியே விட்டேன்.

கோச் ஸாம், மெல்லிய ஆனால் உறுதியான குரலில், கவனமாக எந்த கேலியும் தெரியாத சிறு சிரிப்புடன்,

“எது சரி, எது தவறு…யார் சரி, யார் தவறு…இது மிக மிக ஆதி கேள்வி அல்லவா?…அட்லீஸ்ட் பாட்மிட்டன் கோர்ட்டில் எல்லைகள் தெளிவாக எழுதப்பட்டிருக்கின்றன…” என்று சொல்லிவிட்டு விளைக்கை அணைத்தது போல் மௌனமாகிவிட்டார்.

இப்போது ஒரே நேரத்தில் எங்கள் நிழல்கள் முன்னாலும் பக்கவாட்டிலும் ஒரே சமயத்தில் நடுங்கிக்கொண்டே தோன்றின. நடக்க, நடக்க முன்னே நீண்டு சென்ற நிழல்கள், பக்கவாட்டு நிழல்களுடன் இணைய ஆரம்பித்தன.

இங்கே நின்றுவிட்டேன். அவரும் நின்றார்.

இது போன்ற கணங்கள் பௌதீகமாக சிறிதுதான். ஆனால், இந்த இடத்தில் பெரும் கனமாக, முடிவே இல்லாதது போல் நீண்டு கொண்டே சென்றன.

நாங்கள் நகராததால் நிழல்கள் அவற்றின் நிலைகளில் அப்படியே நடுங்கிக்கொண்டு நின்றன.

பின்னர், ஏதோ ஒரு கணத்தில் ஐஸ்கட்டி கரைவது உணர்வது போல் இந்த கணமும் முடிந்துவிட்டது என்று உணர்ந்தோம்.

“இந்த இடத்தில் மட்டும் ஒன்றுக்கு மேற்பட்ட நிழல்கள் எப்படி என்று யோசித்தாயா?” கோச் ஸாமின் குரல் சாதாரணமாக ஒலித்தது.

“தெரியவில்லையே, நான் கவனித்திருக்கிறேன், ஆனால் பிடிபடவில்லையே” என்று என்னைச் சுற்றிப் பார்த்தேன்.

மெல்லிய சிரிப்புடன்,

“இந்த இடத்தில் பாதை கிட்டதட்ட சற்றே 45 டிகிரி அளவில் வளைகிறது – அந்த மூலையில் மட்டும் ஓர் அதிகப்படியான விளக்குத்தூண் இருக்கிறது”

இப்போதுதான் கவனிக்கிறேன், மொத்த பாதை முழுவதும் சீரான இடைவெளியில் விளக்குத்தூண்கள் பொருத்தப்பட்டிருக்க, இந்த வளைந்த இடத்தில் மட்டும் இரு விளக்குத்தூண்களுக்கு மத்தியில் துருத்திக்கொண்டு அதிகப்படியான ஓர் விளக்குத்தூண்.

“இதுதான் இந்த கூடுதல் நிழல்களுக்குக் காரணம்…இதைத்தாண்டி விட்டால் வழக்கப்படி ஒற்றை நிழல்தான்”

மற்றொரு காற்றலை தலைக்கு மேல் ஆரவாரமாக கடந்து சென்றது.

எங்களைச்சுற்றி இலைகளின் நிழல்களும் இணைந்து மறைந்து வெளி வந்து ஆடிக்கொண்டு ஒரு பெரும் காட்சி தரையில் நடந்து கொண்டிருந்தது.

சற்று நேரம் பார்த்துக்கொண்டே நின்றேன். 

“உனக்கு நாளை காலை வேலைக்கு செல்ல வேண்டாமா?” 

கோச் ஸாம், தனது காரின் அருகில் நெருங்கிவிட்டிருப்பதை இப்போதுதான் கவனிக்கிறேன்.

அங்கிருந்து சத்தமாக “எங்கும் அதிகம் தங்காதே, அங்கிருந்து நகர்ந்துவிடு…அந்த அதிக நிழலும் மறைந்துவிடும்…ஹஹஹா…! குட் நைட்”

அவர் கார் ஹெட்லைட்களால் விழித்து கனைத்துக்கொண்டு, கிளம்பி, என்னைத்தாண்டி பொறுமையாக சென்றது. வெளியேறும் வழிக்குத் திரும்பும்போது இண்டிகேட்டர் உயிர்பெற்றது. பின்னர் சிவந்த பிரேக் விழிகளும்.

Exit mobile version