Site icon சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

திகைப்பெனும் தீராப்பொழுதுகள்

துணிகளைத் துவைக்கும் இயந்திரத்தின் வலது கால் ஓரமாக உயிரோடு இருந்த தவிட்டு நிற வண்ணத்துப் பூச்சியை மிகச் சிறிய கருப்பு எறும்புகள் மொய்த்து கொண்டு இருந்தன. இந்த எறும்புகளைக் குளிரி என்று ஊரில் சொல்வார்கள். ஈரமான குளிர்ந்த இடத்தில் இவைகள் இருக்கும் என்பதனால் இதற்கு அந்தப் பெயரா என்று தெரியவில்லை.

குளிரி எறும்பு கடிக்காது என்பார்கள். சிறிய வயதில் அது உடம்பில் ஏறி இளையத்தான் செய்யும். அது இப்படி மூர்க்கமாக வண்ணத்துப் பூச்சியை தாக்கும் என்பது இப்போதுதான் தெரிகிறது.

காலையில் மனைவியிடம் அந்த வண்ணத்துப் பூச்சியை வெளியில் எடுத்துவிடச் சொன்னேன். அதன் தவிட்டு நிறம் கைகளில் ஒட்டுமே என்ற எண்ணம் வந்தது.

அவர் சன்னலையும், கதவையும் திறந்து வைத்துவிட்டு தானே பறந்து செல்லட்டும் என்று இருந்தார்.

அவருக்கும் கையில் வண்ணத்துப் பூச்சியின் தவுட்டு வண்ணம் ஒட்டும் என்ற தயக்கம் இருந்திருக்கலாம்.

பழுதான கால் ஓரளவு நடக்கும் படியாக இருந்ததால் உடல் சோர்வைப் பொருட்படுத்தாமல் நானே எடுத்து வெளியில் விட்டிருக்கலாம்.

இப்போது அதற்கு இந்த உயிரவதி இல்லாமல் இருந்திருக்கும்.மெதுவாக கீழே இறங்கி நொண்டி நொண்டிப் பக்கத்தில் சென்று வண்ணத்துப்பூச்சியை எடுத்தேன்.

அது பறந்து பறந்து களைத்து இருந்ததால் பெரிதாக என்னிடம் எதிர்ப்புகளைக் காட்டவில்லை.

அதை எடுக்கும்போதே குளிரிகள் என் கைகளில் மொய்க்க ஆரம்பித்துவிட்டன. வண்ணத்துப்பூச்சியை இடது உள்ளங்கையில் வைத்து வலது கையை உதறிவிட்டு மெதுவாக அறையை விட்டு ஹாலுக்கு வந்து முன்பக்கம் உள்ள வரவேற்புப் பகுதியில் உள்ள சன்னலில் விட்டுவிட்டேன். அப்போது அந்த வண்ணத்துப் பூச்சியின் உடம்பில் ஒட்டி வந்த நான்கு குளிரிகள் இங்கும் இளைந்தன. அதனை ஊதி வெளியேற்றிவிட்டேன். கையில் தவிட்டு நிறம் எதுவும் சொல்லும்படியாக ஒட்டவில்லை.

வண்ணத்துப் பூச்சி சிறகை அசைத்து அது உயிருடன் இருப்பதை உறுதிப்படுத்தியது. அதை வெளியேத் தூக்கி வீசலாமா என்று யோசித்தேன். அதன் களைப்பு தீர்ந்து தானாகவே பறந்து செல்லட்டுமென விட்டுவிட்டேன். அதன் களைப்பு தீர என்ன செய்யலாம்?. இரண்டு சொட்டுத் தண்ணீரைப் பக்கத்தில் விடலாமா, இல்லையெனில் சமையலறையில் இருக்கும் தேனை எடுத்து இரண்டு சொட்டு விடலாமா என்று யோசித்தேன்.வண்ணத்துப் பூச்சிக்கு என்ன மாதிரி உணவு கொடுக்கலாம் என்று இணையத்தில் யாராவது எழுதி வைத்திருப்பார்களா என்று தெரியவில்லை.கீழே சென்று ஏதாவது ஒரு பூவைப் பறித்து பக்கத்தில் வைக்கலாமென்றாலும் இன்னும் மாடிப்படிகளில் ஏறி இறங்கப் பழகவில்லை. மருத்துவர் தற்போது மாடிப்படியில் மட்டும் ஏறி இறங்க வேண்டாம்,சமதளத்தில் நடந்து பழகுங்கள் என்று ஆலோசனைச் சொல்லி அனுப்பி இருக்கிறார். அது கொஞ்ச நேரம் ஓய்வெடுத்து கிளம்பிவிடட்டுமென்று முடிவு செய்தேன்.

‘படுபாவிப் பயலே… இதைக் காலையிலேயே செய்து இருந்தா நான் என் வழியில் எங்கேயோப் போயிருப்பேனடா’ என்று வண்ணத்துப்பூச்சி திட்டுமோ என்றும் யோசித்தேன்.

பூட்டிய அறைக்குள் எப்படி வந்திருக்கும் என்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.

சின்ன வயதில் பட்டாம்பூச்சிகள், தட்டான்கள் பிடித்து விளையாடுவது மகிழ்ச்சிகரமான விளையாட்டு. பெரும்பாலும் இவை தும்பைச் செடிகளில் அதிகம் இருக்கும். கருப்பு, சிவப்பு கலந்த வண்ணத்துப்பூச்சிகள்தான் விளையாடுவதற்கு பிடிக்கும். ஏதாவது கைக்குக் கிடைக்கும் செடிகளைப் பிடித்து லாவகமாக அதன் மேல் அமுக்கி அதன் உள்ளே இருக்கும் வண்ணத்துப்பூச்சியைப் பிடிக்க வேண்டும். சிலர் செடியை வைத்து அமுக்கும்போதே அடிப்பது போல் அமுக்கி விடுவார்கள். அப்பொழுது அது இறந்து விடும், இல்லையெனில் சிறகுகள் பிய்ந்து விடும். அவற்றைப் பிடிப்பது சிரமமான வேலை. பல பசங்கள் பிடித்ததும் இறக்கைகளை பாதியில் வைத்துப் பிய்த்துப் போட்டு விடுவார்கள். அவை தத்தித் தத்திப் பறந்துகொண்டிருக்கும். தட்டானின் இறக்கைகளை கசக்கி விடுவார்கள். அதனால் பறக்க முடியாது.

எனக்கு இவைகளில் உடன்பாடு இல்லை. ஹார்லிக்ஸ் பாட்டிலின் மேலே மூடியில் நான்கைந்து ஓட்டைகள் போட்டு அதற்குள் வைத்திருப்பேன். ஓட்டை வழியாக சுவாசிக்க காற்று போக வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு. அன்றைய காலக்கட்டத்தில் ஹார்லிக்ஸ் பாட்டில்கள் வசதியான குடும்பங்களில் மட்டுமே இருக்கும். அந்த வீடுகளில் குழந்தைகள் பிறந்தால் பார்க்க வருகிறவர்கள் ஹார்லிக்ஸ் பாட்டில், ரஸ்க் பாக்கெட் வாங்கி வருவார்கள். எனக்கு ஆறு அக்காக்கள்; நான் கடைசியாக ஒரே பையன் என்பதால் கிடைத்த எத்தனையோ விதமான சலுகைகளில் இதுவும் ஒன்று.

அவ்வளவு எளிதாக ஹார்லிக்ஸ் பாட்டில் கிடைத்துவிடாது. வீட்டில் எண்ணெய் ஊற்றி வைக்கப்பயன்படுத்துவார்கள். அப்போது கிராமத்து வீடுகளில் ஹார்லிக்ஸ் பாட்டில்கள் இருப்பது பெருமையான விஷயம். பால் குடிப்பதே பணக்காரத்தனம்; அதில் ஹார்லிக்ஸ் போட்டுக் குடிப்பது எப்படிப்பட்டது என்று நான் உங்களுக்கு சொல்லத் தேவையில்லை.

விளையாடிவிட்டு வண்ணத்துப்பூச்சியை உயிரோடு விட்டுவிட வேண்டும் என்பதுதான் எல்லா சிறார்களிடமும் எழுதப்படாத விதியாக அப்போது இருந்தது. சில அராத்துகள் அவற்றை பிய்த்துப் பிய்த்தும் விளையாடுவார்கள்.

வண்ணத்துப்பூச்சியையோ அல்லது தட்டானையோ அதன் இறக்கைகளைப் பிடித்து அதன் கால்களை சிறிய கல்லில் வைத்தால் அது தன் கால்களால் பற்றித் தூக்கும். இந்த விளையாட்டுக்கு தட்டானே தகுந்ததாக இருக்கும். இதில் யாருடையது பெரிய கல்லைத் தூக்குகிறது என்பதில் போட்டி இருக்கும். தட்டானைக் கல்லில் வைத்து வைத்து மேலே தூக்கத் தூக்க அது பற்றப் பழகிவிடும். வண்ணத்துப்பூச்சி கல்லைத் தூக்குவது வினோதமாக எப்போதாவது நடக்கும்.

அதுபோன்ற ஒரு வண்ணத்துப்பூச்சியை என் ஹார்லிக்ஸ் பாட்டிலில் வைத்துவிட்டு நான், முத்தமிழ்செல்வன், இளங்கோவன் — மூன்று பேரும் தட்டான் பிடிக்கச் செல்லும் போது சித்ராவைக் காவலுக்கு வைத்துவிட்டு சென்றோம். நாங்கள் தட்டான் பிடிக்க முடியாத வெறுப்பில் திரும்பி வந்து பார்த்தால் வண்ணத்துப்பூச்சியைத் தம்பியான் பிய்த்துப் போட்டுவிட்டுப் போய்விட்டான்.

எனக்கு வந்த ஆத்திரத்தில் பாட்டிலை எடுத்து அவன் இருந்த இடத்தை நோக்கி, தட்டான் பிடிக்க முயன்றுகொண்டிருந்த அவனின் மேல் வேகமாக வீசினேன். பசங்க எல்லோரும் கத்தியதில். அவன் என்ன நடக்கிறதென்றே புரியாமல் அப்படியே குப்புறப்படுத்துவிட்டான். பாட்டில் அவன் மேல் படாமல் முண்டுக்கல்லில் பட்டு சில்லுச் சில்லாக சிதறிவிட்டது.

‘அராத்துப் பயல்கள் எல்லாருமே அறிவாளிகளாகத்தான் இருக்காங்க. வினாடி நேரத்தில் குப்புறப் படுத்துட்டானே’.

நான் ஒரு பக்கம் கத்தினேன், அவன் ஒரு பக்கம் கத்தினான். தூரமாக இருந்த எல்லாப் பசங்களும் வந்துட்டாங்க. என்னைச் சுற்றி நான்கைந்து பேர், தம்பியானைச் சுற்றி நான்கைந்து பேர் — இருவரையும் கட்டிப் புரளவிடாமல் தடுத்து நின்றார்கள். எல்லோருக்கும் ஒரு பயம் இருந்தது. நான் பார்க்கச் சின்ன பையனாக, அழகாக இருப்பேன். தம்பியான் பெரியப் பையனாக, முரட்டுப் பயலாக இருப்பான். நிச்சயமாக அவன் என்னை அடித்துவிடுவான். என் பக்கம்தான் நியாயம் இருந்தாலும், நான் அமைதியாக இருக்க வேண்டுமென்று எல்லோரும் நினைத்தார்கள். அது எனக்கு மேலும் எரிச்சலைக் கிளப்பியது.

இப்படித்தான் பள்ளிக்கூடத்தில் மாலை விளையாட்டு நேரத்தில் புங்க மர நிழலில் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விளையாட்டு விளையாடிக்கொண்டிருக்கும் போது பழனிச்சாமியும் மகேந்திரனும் கிச்சுகிச்சு தாம்பளம் விளையாடியதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்து இருந்தேன். அப்போது தெற்கிக்காட்டு முருகையன் காம்பஸ் கம்பியால் என் தாடையில் குத்திவிட்டு ஓடிவிட்டான். வலி உயிரேப் போய்விட்டது. 

என் முதல் அக்கா மகன் குமார் ஐந்தாம் வகுப்பு படித்தான். அவன் முரடன். இதைக் கேள்விப்பட்ட குமார், அவன் ப்ரண்ட் ஜெயக்குமாரும் சேர்ந்து முருகையனை புங்க மரத்துக்கு இழுத்துக்கொண்டு வந்து அடிக்கிறாங்க. நான் காலாலையே அவன் தொடையிலே ஒதை ஒதைன்னு ஒதச்சு எடுக்கிறேன். கொஞ்ச நேரத்தில் அவனை அடிப்பதை அவர்கள் நிறுத்திட்டாங்க. நான் நிறுத்தினவன் திரும்பி மறுபடியும் தொடையில ஒதச்சேன். சுத்தி எல்லாரும் வேடிக்கைப் பார்த்தாங்க. யாரும் தடுக்கல.  தடுத்தாக்க அவர்களுக்கும் அடி விழும் என்று நன்றாகத் தெரியும். அவர்கள் இரண்டு பேரும் முரட்டுப் பசங்க.

முருகையன் எழுந்திருக்க முயற்சி பண்ணுகிறான். கால்கள் இரண்டும் நடக்க முடியாமல் சோர்ந்து போயிருச்சு. பசங்க வாத்தியார்க்கிட்ட ஓடுறாங்க. இரண்டு பேர் அவன் இரண்டு கைகளையும் ஆளுக்கு ஓர் பக்கம் தோளில் வைத்து பிடித்து குனிந்தபடி தூக்கிட்டு வர்றாங்க. அவன் கால்கள் இரண்டும் தரையில் இழுபட்டுக்கொண்டே வருகிறது. எனக்குப் பயங்கரமா பயமாயிருச்சு.

ஹெட் மாஸ்டர் குமாரையும், ஜெயக்குமாரையும் முட்டிப் போடச் சொன்னார். என்னையும் போடச் சொன்னார்.

“ஏய்… நீ போடாதடா. நாங்கதான் அடிச்சோம் என்று சொல்றோம்,” என்றான் குமார்.

ஜெயக்குமாருக்கு விருப்பமில்லை என்றாலும்

“போடாதீங்க மாப்பிள்ளை” என்றான்.

நான் பள்ளியில் முதல் மார்க் வாங்கக்கூடியவன். ஸ்கூல் பிரேயரில் கலந்து கொள்கிறவன். பெரிய குடும்பத்துப் பையன். குமாருக்குத் தாய் மாமன். என்னைப் முட்டிப் போடச் சொன்னதும் அவன் கடுப்பாயிட்டான். நான் பயத்தில் இருந்ததால் அழுதுக்கொண்டே முட்டிப் போட்டுவிட்டேன்.

மொத்த பள்ளிக்கூடமும் வேடிக்கைப் பார்த்தது. ஹெட் மாஸ்டர் ரூமில் முருகையன் என்ன ஆனான்னு என்று தெரியவில்லை.

திரும்பி வெளியே வந்தவர் என்னை எழுந்திருக்கச் சொன்னார்.

இதெல்லாம் தம்பியானுக்குத் தெரியும். என் மேல கையை வைத்தா அவன் என்ன ஆவான்னு அவனுக்கே தெரியும். நானே பல நேரம் அவனை மிரட்டி இருக்கிறேன். இப்போ கூட்டத்தைப் பார்த்ததும் குதிக்கிறான்.

இந்தக் களேபரத்தில சித்ராப்புள்ளே உடைந்த கிளாஸ் மேல காலை வைத்து அது குத்தி, இரத்தம் பீறிட்டு அடிக்குது. அப்புறம் விலாவாரியாக எல்லோருடைய வீட்டுக்கும் தெரிஞ்சு, அய்யாவும் அம்மாவும் தமுழக்காவைத் (தமிழ் அக்கா) திட்டினாங்க. வீட்டில் இதுபோன்ற வேலைகளை எனக்கு செய்து கொடுக்கிற ஆள் அதுதான். அம்மா ஏதோ கெட்ட வார்த்தையில திட்டியதால் அக்கா ஒரு வாரம் சாப்பிடாமல் இருந்தது.

நான் ஒருநாள் காலையில் தட்டில் தோசை வைத்து கெஞ்சி அழுதேன். அதை நான் அல்லது தங்கச்சியக்கா (என் இரண்டாவது அக்கா) மட்டுமே சமாதானம் செய்ய முடியும். மற்றவர்கள் தமுழக்காவிடம் பயப்படுவார்கள்.பிறகு எனது தோசைத் தட்டு அதனுடையது இரண்டையும் அப்படியே வைத்துவிட்டு நான் சாப்பிடாமலையே பள்ளிக்கூடத்துக்குப் போய்விட்டேன்.

மதியம் வீட்டுக்குச் சாப்பிட வந்தபோது எனக்குப் பிடித்த சாம்பாரும், தேங்காய்ப் பாலும் பிழிந்து டம்ளரில் வைத்து தமுழக்கா காத்துக்கொண்டிருந்தது. அக்காவுக்கு என் மேல் அளவுக்கு அதிகமானப் பாசம். நான் சொன்னதால்தான் கல்யாணம் செய்ய ஒத்துக்கொண்டது. பிறகு ஒருசமயம் ஒரு பிரச்சினையில், “நான் வர்ற வியாழக்கிழமை செத்துருவேன்டா” என்றது. சின்னப் பையன் கோபத்தில் ‘செத்துத் தொலை’ன்னு சொல்லிட்டேன். அதே மாதிரி அன்றைய நாள் பியூரிடான் குருனையைத் தின்னுட்டு செத்துருச்சு. மரண அனுபவம் எனக்கு நிறைய இருக்கு. தமுழக்காவோடது எனக்கு எப்போதும் ரணம் தான்.

வண்ணத்துப்பூச்சி இறந்துபோயிருக்குமோ என்று எண்ணி எழுந்து வெளியே போனேன். சன்னலில் அது லேசாக இறக்கையை அசைத்தது. விரலால் தொட்டேன். அது பறந்து கீழே வந்தது. அது பறந்தது மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது.

அதற்கு மேல் அதனால் பறக்க முடியவில்லை. அதைத் தூக்கிச் சன்னலில் வைக்கும்போது தான் கவனித்தேன். சிறிய சிவப்பு எறும்புகள் நான்கு அது உட்கார்ந்திருந்த இடத்தை சுற்றிக் கொண்டிருந்தன. அவற்றை வாயால் ஊதித் தள்ளிவிட்டு மொத்த சன்னல் சுவற்றையும் பார்த்தேன். எந்த எறும்பும் இல்லை.

வண்ணத்துப்பூச்சியை குளிரிகள் மொய்த்ததிலிருந்து இப்போது இந்த சுள்ளான்கள் வந்தது வரை எனது கைபேசியில் புகைப்படமும் வீடியோவுமாக எடுத்து வைத்திருந்தேன். நிவேதனா வரும்போது காண்பிக்க வேண்டும். பொதுவாக எல்லாவற்றையும் ஆவணப்படுத்தும் பழக்கம் என் நண்பர் ஹனிபா அவர்களிடமிருந்து எனக்கும் வந்துவிட்டது.

அறைக்குள் செல்லும்போது கிச்சனிலிருந்து மனைவி,

“எதுக்குங்க உள்ளேயும் வெளியேயும் போய்க்கிட்டே இருக்கீங்க. உங்களைப் பாதுகாக்கிறதுக்குள்ள எனக்குப் போதும் போதும்ன்னு ஆயிரும் போல இருக்கே.” என்றார்கள்.

நான் எதுவும் சொல்லாமல் வந்து படுத்துவிட்டேன்.

கூடுவிட்டுக் கூடு பாயும் கலை தெரிந்தால் இந்நேரம் அந்த வண்ணத்துப் பூச்சிக்குள் புகுந்து அதன் இருப்பிடத்திற்குள் விட்டு விட்டு வந்திருக்கலாம். அந்தக் கலை அழிந்தே போயிருக்கலாம். பீடி குடிக்கிறவனும் சித்தன். பீயைப்  பெனையிரவனும் சித்தன். முடி வளக்கிறவனும் சித்தன். முட்டாப்பய எல்லாம் சித்தன்னு சொல்லுவான்னு தெரிஞ்சே சித்தர்கள் பரம்பரை பதினெட்டோட முடிஞ்சி போச்சான்னுத் தெரியவில்லை.

குரானில் சூரா அந்நம்ல் என்ற அத்தியாயத்தில் சுலைமான் நபி அவர்கள் எறும்புகள் பேசியதைக் கேட்டதாக ஒரு சம்பவம் வரும். அவர்களுக்கு ஜின், பறவைகள்,காற்றை எல்லாம் வசப்படுத்தும் ஆற்றல் இருந்ததாக படித்தேன்.

அதன் தொடராக இப்போது இஸ்லாத்தில் இந்தக் கலை யாருக்காவது தெரிந்திருக்குமா என்று இதயத்துல்லாவிடம் கேட்கலாமா என்றுத் தோன்றியது. அவன் தப்லீக்வாதி. வட மாநிலங்களுக்கு அதிகமாக பயணம் செய்யக்கூடியவன்.

மாதத்தில் மூன்று நாள் ஜமாத்தோட போவதை கொள்கையாக வைத்து இருக்கிறான். நாப்பது நாள், மூன்று மாதம், ஆறு மாதம் என்று ஜமாத்தோட கிளம்பக்கூடியவன். இது போன்ற நபர்களை சந்தித்து இருக்கிறாயா என்று அவனைச் சந்திக்கும்போது கேட்க வேண்டும்.

மார்க்கத்துக்கு முரணான கேள்விகளுக்கு எந்த பதிலும் சொல்லாமல் கடந்துவிடுவான். அதனால் அவனிடம் இது பற்றிக் கேட்பதே வீணான வேலை.

பங்களாதேஷ் பிரிந்ததில் தான் சிறிய வயதில் பார்த்த பல அரிய வகைக் கலைகள் அழிந்து போய்விட்டது என்று ஓஷோ ஒரு இடத்தில் சொல்லி இருப்பார். அவர்கள் இந்தியாவில் இருக்க முடியாமல் வேறு பக்கம் இடம் பெயர்ந்ததில் பல கலைகள் அழிந்து போனது என்றும் கூறி இருப்பார்.

மதியம் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது வண்ணத்துப்பூச்சி ஞாபகம் வந்தது. படக்கென்று எழ முயற்சித்தேன். அங்கே விட்டு வந்ததை மறந்துவிட்டேன். கரூர் ராஜ்மோகனும் திண்டுக்கல் தங்கத்துரையும் கான்காலில் பேசினார்கள். அதனால் மறந்தே போனேன். வண்ணத்துப்பூச்சியைப் பார்க்கணும் என்று சொல்லியிருந்தால் இன்னும் ஒரு மணி நேரம் பேசியிருப்பார்கள். என்னைக் கிண்டல் செய்வதில் அவர்களுக்கு அப்படி ஒரு சந்தோஷம். பய புள்ளைங்க… அடுத்த கன்டென்ட் கிடைக்கும் வரை இதையே ஓட்டித் தொலைப்பாங்க.

“உங்களுக்கு சர்ஜரி செய்தது நினைவுல இருக்கா? எங்கே போறீங்க?”

“காலையில் சன்னலில் வண்ணத்துப்பூச்சியை வச்சிட்டு வந்தேன். அதைப் பார்க்கத்தான் கிளம்பினேன்.”

“அதைச் சுற்றி சுள்ளான் மொய்த்து இருந்துச்சு. நான் தான் கூட்டி வெளியே தள்ளினேன். ஜன்னலுக்கு கீழேதான் இருக்கும். போயிப் பார்த்துட்டு வர்றீங்களா?”

“உன்னை யாரு கூட்டச் சொன்னது?”

“அன்னிக்கு கப்போடுக்கு கீழே வெட்டுக்கிளியை சுள்ளான் மொய்த்து இருந்தப்போ ஏன் கூட்டலைங்கிறீங்க? இப்போ ஏன் கூட்டுனேங்கிறீங்க?”

“சரி அதைவிடு. போட்டோ எடுத்தியா?”

“இனிமே எல்லாத்தையும் போட்டோ எடுத்துக்கிட்டே வேலையைப் பார்க்கிறேன்.”

“அதுவும் நல்லதுதான். ஆவணப்படுத்திய மாதிரி இருக்கும்.”

“ரின்ஜாய் அப்பவே சொன்னான். அவுங்க கூட பேசுனீங்க. நாமதாம்மா பைத்தியமாகனும். அவருக்கும் அந்தப் புள்ளைக்கும்தான் செட்டாகும்ன்னான்.அதுதான் அவர் சொல்றதுக்கு பூம்பூம் மாடு மாதிரி தலையாட்டும். நிவேதனா இந்த டைம் ஊருக்கு வரட்டும் வச்சுக்கிறேன். நீங்க அதக் கெடுத்தீங்களா. அது உங்களக் கெடுத்துச்சான்னேத் தெரியல.”

அவர் சமையலறையை நோக்கித் தட்டுக்களை எடுத்துக்கொண்டு சென்றார். எனக்கு சாப்பிட்டு முடிந்திருந்தாலும் கீழே சென்று பார்க்க ஆவலாக இருந்தது. பழுதான காலை வைத்து மாடி ஏற பழகவில்லை என்பதால் வீண் சிக்கலாக இருந்தது. மாம்பழம் இனிப்பாக இருந்தாலும் அதைச் சுவைத்து உண்ண முடியவில்லை. இந்த வருடம் மாம்பழங்கள் நன்றாக இனிக்கின்றது.

குளிரிகளுக்கு உணவாக வேண்டியது.இவ்வளவு மூர்க்கமாக குளிரிகள் செயல்பட்டது. அவைகளின் உணவு சேமிப்பிற்காகவா என்பதும் தெரியவில்லை. அவைகளிடமே விட்டிருக்கலாம். அதைக் காப்பாற்றுகிறேன் என்று அவைகளின் உணவை அப்புறப்படுத்திவிட்டேன்.குறைந்தபட்சம் நூறு முதல் அதிகபட்சம் ஐநூறு வரை அந்தக் குளிரிகள் இருக்கும். அவைகளின் அந்த ஒட்டுமொத்த முயற்சி பிரமிப்பை ஏற்படுத்தியது. எடுத்த வீடியோவைப் பார்க்கலாமா என்று தோன்றியது. வண்ணத்துப்பூச்சியை காப்பாற்றாத கவலை வீடியோவை இப்போது பார்க்க மனமில்லாமல் செய்தது.

தீர்மானங்கள் எதுவும் நம் கையில் இல்லை என்பது உண்மையென உணர்ந்தேன்.

ஒருமுறை இரவில் நிவேதனாவும் நானும் வண்டியில் வரும்போது பரோட்டாவை பின்னால் இருந்து பிய்த்துக் கொடுக்க நானே வாங்கி சாப்பிட்டுக்கொண்டு வண்டியை ஓட்டினேன். மென்று கொண்டே பேசிக்கொண்டிருந்ததால் திடீரென வாயிற்குள் பூச்சி நுழைந்துவிட்டதை கவனிக்காமல் உடனே உணர்ந்து வெளியே துப்பிவிட்டேன். வாயிற்குள் சென்றாலும் அது எனக்கான உணவு என்று தீர்மானமாகச் சொல்ல முடியாது என்று எனக்குள் அப்போது அழகிய புரிதல் ஒன்று நிகழ்ந்தது.

என்னால் முடிந்த முயற்சிகளிலும் அந்த வண்ணத்துப்பூச்சியை காப்பாற்ற முடியவில்லை. அந்தக் குளிரிகள் தங்கள் கூட்டத்துடன் போராடியும் தங்களுக்கான உணவாக்க அதை முடியவில்லை என்று நினைக்கும் போது மனைவி அறைக் கதவைத் திறந்து உள்ளே வந்தார்.

“உங்க கிட்ட எடுத்துட்டு வந்து காண்பிக்கலாம்ன்னு கீழேப் போய்ப் பார்த்தேங்க. கீழ் வீட்டுப் பிள்ளைங்க விளையாடும்போது அது மேல ஒரு கை மண்ணைப் போட்டு இருக்காங்க. அந்த வண்ணத்துப் பூச்சி மூடி இருந்தது.சுள்ளான் சுத்தி இருந்ததால அந்த மண்ணை விலக்கினேன். உள்ளார அரிச்சிப் போயி இருந்தது. பாவம்.. அதுக திங்கட்டுமேன்னு வந்துட்டேன்.” என்றார்.

‘நீயும் மாறிக்கிட்டே இருக்கே’ என்று சொல்ல நினைத்தேன்.

சரி, அதை நிவேதனாவிடம் சொல்லலாம் என்று விட்டுவிட்டேன்.

‘கிரேட்… தந்தையாரே’ என்று அது சொல்லும்.

‘காட் இஸ் கிரேட்’ என்று நான் சொல்ல வேண்டும்.

Exit mobile version