Site icon சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

பூவிதழ் உமேஷ் கவிதைகள்

தங்கக் கதவு

வாழ்க்கையின் ஓரிடத்தில்
எப்போதும் ஒரு கதவு திறந்து இருக்கிறது
அதைக் கடந்தால்
பாசி படிந்த கற்களால் ஆன ஒரு முற்றத்தையும்,
இரண்டு செழிப்பான வேப்ப மரங்களையும்
அவற்றில் தூங்கும் அணில்களையும் காண்பீர்கள்.
மரத்தில் பூவோ காயோ கனியே இருக்காது
ஆனால் அமைதி இருக்கும்
முற்றத்தைக் கடந்ததும்
பின்னர் நீங்கள் மற்றொரு கதவைக் காண்பீர்கள்
அதைத் திறக்கவும்
ஏற்கனவே உள்ளே இருக்கும் இருளில்
நீங்கள் ஒரு சுவரைக் காண்பீர்கள்
அதன் மீது,
“முதல் முறை போலவே காதலிக்கும் முயற்சி
எவ்வளவு மோசமானது”
என்ற மங்கலான வார்த்தைகள் இருக்கும்
பின்னர், ஆழ்ந்த தனிமை உருவாகும்
இன்னும் திறக்காத
மற்றொரு கதவின் முன் நிற்பதைக் உணர்வீர்கள்
அப்போது உரக்கச் சிரியுங்கள்
அப்போது கை தட்டுங்கள்
அப்போது பாடுங்கள்
அப்போது ஆடுங்கள்
வாழ்க்கையின் இப்படியான இடத்தில்
ஒரு தங்கக் கதவு திறக்கும்.


பெரிய விலங்கு

யாரும் இல்லாத வெட்ட வெளியில்
நீண்ட நேரம் பெய்யும் மழை
ஒரு பெரிய விலங்கு போல நிற்கிறது
அதன் கோரைப் பற்களும் கண்களும்
அதன் காதுகளும் கொம்புகளும்
அதன் பிடரியும் கால்களும்
அதன் வாலும் வயிறும் மழையால் செய்யப்பட்டவை
மழை ஒரு திரை போல
யாரும் தான் இல்லையே
இனி நான் அழலாம்
இனி நான் சிரிக்கலாம்
இனி நான் நனையலாம்
இனி நான் நிர்வாணம் ஆகலாம்
தண்டு உயர்த்தலாம்
மழையில் கர மைதுனம் செய்யலாம்
இது பாதுகாப்பான தனிமை
என்னையும் எல்லாவற்றையும் மறைத்தபடி
யாரும் இல்லாத வெட்ட வெளியில் பெய்யும் மழை
பெரிய விலங்கு!

Exit mobile version