Site icon சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

காலம் பற்றிய ஐந்து கவிதைகள்

01 காலமின்மை 

சாய்க்க இடமே இல்லை. நானும் ஒரு அந்திவேளையும் மட்டும் இருந்து சூரியன் மறைவதைப் பார்த்துக்கொண்டிருந்தோம். வீடு திரும்பும் கூட்டத்தில் விடுபட்ட பறவை ‘கக்’ என்று ஒரு சொல் உதிர்த்து விரைகிறது. பாவம், அவசரம் போல. இன்னும் எவ்வளவு தூரமோ, எவ்வளவு காலமோ.

அண்டையிலிருந்து  பாடல் மிதந்து வருகிறது – ‘ஆயெகா ஆனேவாலா’. நான் பிறக்குமுன் வெளிவந்த பாடல். பழைய இசை. மிகப் பழைய ஒற்றைத்தடப் பதிவு. புரியாத மொழி. ஆனாலும் ரம்மியம். ஆறுதல். தொண்ணூற்றுமூன்று வயதில் மரித்த பாடகியின் வாலிபக் குரல். ‘எதிர்காலம் வரும்’ என்று பொருளாம். பிற்பாடு, இணையம் சொல்கிறது. இறந்தகாலப் பாடலின் எதிர்காலத்தில்தான் நான் பிறந்திருப்பேன். 

நான் இல்லாத காலத்தில் ஒரு கணம் இருந்ததாக  உணர்ந்தேன். 

இறந்தகாலமானால் என்ன, எதிர்காலமானால் என்ன. 

இருப்பேனே! 

02 காலம்

புத்தம்புதிதாய் கிடைத்த அந்நியக் கவிஞனின் புத்தம்புதிய கவிதையைப் படித்த மாத்திரத்தில், இரவுமுழுதும் நீடித்திருந்த தலைவலி காணாமல் போனது. உச்சிவேளைபோலக் கொளுத்திய காலைவெயில் இதமாய் ஆனது. தட்டையாக இருந்த வரிகள் உயிர்த்து, நடனமாடத் தொடங்கின. 

அறியவந்த சொற்கள்,  பொருளிழந்து வெளிறிய சொற்கள் அனைத்துக்கும் புதிய அர்த்தத்தின் மெருகு கூடியது. சொற்களை இணைக்கும் பசையில் தேனின் ருசி.

அத்துவானத்திலிருந்து பெருகிய யூகக் காட்சி, ரத்தமும் சதையும் நகமுமாய் உயிர்கொண்டது. அத்தனை இதமானதில்லைதான்; ஆனாலும், சத்தியமானது. துக்கத்தின் பொசுங்கிய வாசனை கொண்டதே; என்றாலும்,  சுபிட்சத்துக்கு இன்னும் ஓரடி தொலைவுதான்  என்று நம்ப வைத்தது. உலகம் இன்னமும் வாழத்தகுந்ததாய் ஆகிவிட்டது… 

அந்த வேளையில் யாரோ கதவைத் தட்டும் ஒலி.

அவ்வளவுதான்.

03 நிகழ் – காலம்

எரிமலைமீது ஏறும் நத்தை என்றொரு படிமம். காட்டிவிட்டு அவசரமாய் விலகுகிறான், இரண்டு நூற்றாண்டுப் பழைய ஜப்பானியக் கவி. எதை முன்னிட்டுச் சுட்டினான்?

நத்தையின் வெகுளித்தனமா, எளிதில் பொசுங்கக் காத்திருக்கும் மிருதுவா, புலப்படாத தீரமா, யோசனையற்ற அசட்டுத்துணிச்சலா, அறியாமையா, சுற்றுப்புறம் பற்றிய கவனமின்மையா, காட்சிக்கு மயங்கும் ஏமாளித்தனமா, விட்டேற்றியான விதிவாதமா… இல்லை, எனக்கு ஒருபோதும் புரியாத வேற்றினக் காரணமா…

அந்த இஸ்ஸா காட்டியதைப் பார்த்தபிறகு, நான் நத்தையாகிவிட்டேன். புலரும் ஒவ்வொரு தினமும் வேறொன்றாகிறது. தணிந்தால் என்ன, தகித்தால் என்ன, எரிமலை எரிமலைதானே, 

நத்தையும் நத்தைதான். 

04 முப்பட்டை

சுவர்க்கோடுகளும் மருத்துவச்சியும்  குறித்த நாளைவிடப் பிந்திப் பிறந்தேன் என்பாள் அம்மா. நான் எழுதிய  கதையை வாசித்துவிட்டு, ‘கால் நூற்றாண்டு முன்னதாக எழுதிவிட்டாய்’ என்றார் நண்பர். அதே கதையை ‘ நூற்றாண்டுப் பழைய தேய்வழக்கு’ என்றார் இன்னொருத்தர். அவரும் நண்பர்தான். புதியது பழசாகும்போது, பழையது புதுசாவதும் இயல்புதானே. நேற்றிரவு மினுங்கிய விண்மீனின் ஒளி  பழையதா புத்தம்புதியதா.

கோடைமழை பருவமழையைவிட வீரியமாய் இருப்பதுண்டு. ஊரும் உடலும் மனமும் குளிர்ந்துவிடும். இருந்தும் எதையோ நினைத்து, வதங்கிய வெற்றிலைபோல் சுருண்டுகொள்வேன். ஆண்டு முழுவதுமே கோடையாய்க் கொளுத்துவதும் நகரத்துக்குப் புதிதல்ல. அப்போதும்கூட, காரணமற்ற உல்லாசம் பொங்கித் ததும்புவதும் உண்டு. 

இன்றைய காலைப் பொழுது, அந்திவேளைபோல் மூடியிருக்கிறது. வியர்த்து ஊற்றுகிறது. அந்திப்பொழுதில் உச்சிவேளையென வெயில் கொளுத்துவதும், சாவு வீட்டுக்குள் தென்றல் புகுந்து இதமளிப்பதும் உண்டு… 

குறிப்பிட்ட தினத்தின் குறிப்பிட்ட வேளையில், நாட்காட்டியும் கடிகாரமும் காட்டுவது ஒன்று;  நடைமுறை நிலவரம் இன்னொன்று. மனம் உணர்வது வேறொன்று. மூன்று வெவ்வேறு நிலைகள். தனித்தனியானவை.

காலம் முப்பட்டைக் கண்ணாடியேதான். 

05 இறுதியாய்

இன்னும் ஒரு கேள்வி பாக்கியிருக்கிறது. உரிய பதிலை அது சந்திக்கும்போது மனித குலத்தின் அறிவுத்தேட்டம் நின்றுபோகும். கலையார்வமும்தான். சோதனைச்சாலைகள் பொலிவிழக்கும். விவாத மேடைகள் களையிழக்கும். சொற்களும் மொழிகளும் அர்த்தமிழக்கலாம். 

ஆதியும் இறுதியுமான ஒற்றைவினா  மறைந்த மாத்திரத்தில், கேளிக்கைகள் பொருளற்றதாகும். யார் கண்டது, பசியும் ஓய்வும் உறக்கமும்கூட இல்லாமல் போகலாம். இருளும் ஒளியும் இரண்டற்று ஆகலாம். ஆந்தைகளும் மின்மினிகளும் பகலை ஆள, பகல்பொழுதின் உயிரிகள் இரவுக்கு இடம் பெயரலாம். 

திசைகள் பெயர் இழந்து தவிக்கலாம். நீர் நீராக நிலம் நிலமாக நிலைபெற்றிருப்பது குழம்பலாம். அச்சை நீங்கிய சக்கரங்கள் எங்கெங்கும் சுதந்திரமாய்த் திரிந்து களைக்கலாம்.

அதுவரை, பூமி சுழல்வது ஓய்வதற்கில்லை; ஓடும் என் கடிகாரமும்தான்

Exit mobile version