Site icon சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

அடர்க்கருமை இருள் போர்த்தியபடி

உனது பெயர்

அடர்க்கருமை இருள் போர்த்தியபடி
அந்த அறையில்
அவனுக்கருகில் படுத்துக் கிடந்தது
அவனின் நீண்ட ராத்திரி
வெளிச்சம் தன்னை இழந்து
இருட்டைப் பிரசவித்து
அதன் அழகை எல்லாம்
இருளாக்கிப் பூசிக் கொண்டிருந்தது.,

ராத்திரி விளக்கின் ஊதா நிறம் குடித்து
அது அந்த அறையெங்கும்
மின்மினியாய் மினுக்கி அலைந்தது
அவனோ அந்தக் கொடும் இருட்டைப் போர்த்தியபடியே
பஞ்சு பறக்கும் படுக்கையில்
நாளான எண்ணெய்ச் சிடுக்கின் நாற்றம் பழக்கியவனாய்
அவன் உயிரை வளர்த்தியபடி
அறைக்குள் கிடந்தான்
செத்த பின்பு கிடைக்கும் இடம் பழக…….

ஆறுக்கு நான்களவில்
அவன் அந்தப் பெருங்குழியை வெட்டினான்
கொஞ்சம் கொஞ்சமாய்
அதில் குப்பைகள் சேர்ந்தன
முதலில் வந்து சேர்ந்தது சோகம்
அப்புறம் அவமானம்
அக்கம் பக்கத்துத் தூற்றல்
உறவின் ஏச்சும் பேச்சும்
இப்படிக் குழி நிரம்பியபடியே இருந்தது
இப்போது வெட்டிய குழியை
அவனால் மூடவும் முடியவில்லை
நிரம்பியவற்றை வெளியெடுத்து
வீசவும் ஏலவில்லை
குழியின் கனம் மூச்சை இறுக்கியது
நாற்றமும் இலேசாக வீசத் தொடங்கியது
இப்போது அவனுக்கு மற்றவர்கள்
ஓர் ஆறுக்கு நான்கு குழியை வெட்டினர்…
குழியில் இறங்க அது அவனுக்குப் போதவில்லை
குழிக்குள் இறங்கியவன் குப்பைகள் நீங்கி
நாயெனத் தன்மேல் புண்களை நக்கித் தீர்த்தான்
சாவு அவனுக்குக் கனமாய் இல்லை

தேடிக் கொண்டிருக்கிறான்
கணிப் பொறியைக் காணாத
அவன் தலைமுறையை முகப்புத்தகத்தில்

வயது அறுபதைத் தாண்டியவர்கள்
நிச்சயம் நரைக் கண்டிருப்பர்
பிள்ளைகள் பேரப்பிள்ளைகள்
என்றிருக்க வேண்டும்
அல்லது குறைந்தபட்சம்
பிள்ளைகள் துரத்தி விட்டவர்களாகவது
இருக்கவேண்டும்

கை நீட்டாத மனிதர்களை
அரசாங்க காரியாலயங்களில் தேடுவதைப் போல
தேடிக் கொண்டிருக்கிறான்
அவனுடைய தலைமுறை மனிதர்களை
புலம் பெயர்ந்த அவன்!

Exit mobile version