Site icon சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

நதி நீரின் புனிதமும் நுண்ணுயிரியலும்

உத்திரப்பிரதேசத்தில் மகா கும்பமேளா நடந்து கொண்டிருக்கிறது. இப்போது வரை சுமார் 55 கோடிப் பேர் அங்கு புனித நீராடி இருக்கின்றனர். இன்னும் 6 நாட்களில் மேலும் சில கோடி மக்கள் இந்த புனித நீரில் குளிக்கலாம். இந்தியாவின் இரு பெரும் நதிகளான யமுனையும் கங்கையும் கலக்கும் அலகாபாத்தில், இந்த நதிகள் சங்கமிக்கும் இடத்தில்  நீராடுகையில் பல நோய்கள் தீருமென்றும் பிறவிச்சரடு அறுபடும் என்றும் கர்மவினைகள் தீரும் என்று இந்துக்கள் நம்புகிறார்கள்.

 இந்தப் புனித நதிகளின் நீரின் தூய்மைப்படுத்தும் இயல்புகளுக்கு நுண்ணுயிரியல் வரலாறும் உள்ளது.  நுண்ணுயிரியல் வரலாற்றில் மூன்று அறிவியலாளர்கள் இது தொடர்பான ஆய்வுகளில் பெரும் பங்காற்றி இருக்கின்றனர்.

ஹான்கின்-(Ernest Hanbury Hankin)

   1895-ல்  பிரிட்டிஷ் நுண்ணுயிரியலாளர் மற்றும் இயற்கையியலாளர் எர்னஸ்ட் ஹான்பரி ஹான்கின்   காலராத்தொற்றினால் இறந்த உடல்கள் வீசப்பட்ட  கங்கை மற்றும் யமுனை நதிநீரை அருந்தும் மக்களுக்கு நோய்த்தொற்று உருவாகவில்லை என்பதைக் குறிப்பிட்டு அந்த இரு நதிகளின் நீரிலும் ஏதோ ஒரு கிருமிக் கொல்லிப்பொருள் இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

1896-ல்  முதன்முதலாக  காலராக் கிருமிகளை குணமாக்கும் யமுனை மற்றும் கங்கை நதி நீரின் இயல்புகளைக் குறித்து ஆய்வுக் கட்டுரையொன்றில் விவரித்தார்.  அதற்கு காரணமான பாக்டீரியாக்களை உண்ணும் வைரஸ்களான பேஜ்கள்  (phages) அதற்கு  20 ஆண்டுகள் கழித்துத்தான் கண்டுபிடிக்கப்பட்டன என்றாலும் ஹான்கின் அவற்றைக் குறித்த முதல் கண்டுபிடிப்பை செய்ததாகக்  கருதப்படுகிறார்.

நோய்க்கிருமிகளை அழித்து தூய்மைப் படுத்தும் நதி நீரின் இயல்பைக் குறித்த ஹான்கினின் ஆய்வுக் கட்டுரைகள் அறிவாய்வியலுடன் தொன்மங்கள்,  நாட்டுப்பாடல்கள், வாய்வழிக்கதைகள் ஆகியவற்றையும்,  இணைத்துச் செய்யப்பட்ட ஆய்வின் முடிவுகளைத் தெரிவித்தன.

இந்தியாவின் வடமேற்கு பகுதிகளில் அரசாங்க அதிகாரியாகப் பொறுப்பிலிருந்த ஹான்கின்  ஆக்ராவில் இருந்த அலுவலகத்தில் பணிபுரிந்தார்.  பாஸ்டர் ஆராய்ச்சி நிறுவன சஞ்சிகையில் 1896-ல்  அவர் வெளியிட்ட வரலாற்றுச்சிறப்பு மிக்க ஆய்வறிக்கையில் கங்கை யமுனை நதிகளின் நீரில் இருக்கும் கிருமிக்கொல்லிகளைக் குறித்து விவரித்திருந்தார்.  

அந்த நதிகளின் நீரில் பிற நதிகளில் இருப்பதை விட மிக மிகக் குறைவாகவே  நோய்க்கிருமிகள் இருப்பதை  ஹான்கின் குறிப்பிட்டிருந்தார்.  

பாதி எரிந்த நிலையில் வீசப்பட்டு மிதக்கும் பிணங்களுக்கருகில் சூழ்ந்திருக்கும் பிணந்தின்னிக் கழுகுகளுடன் போட்டி போட்டுக்கொண்டு  நீர் மாதிரிகளை ஆய்வுக்கெனச் சேகரித்தார் ஹான்கின்.

பல முறை  ஆய்வுகளைச் செய்து அப்படிச் சேகரித்த நதிநீர் 3 மணி நேரத்தில் காலராக் கிருமிகளைக் கொல்கிறது என்று நிரூபித்த அவர் அந்த ’’பாக்டீரியக்கொல்லித்தன்மை’’ நீரை வெப்பமூட்டுகையில் ஆவியாகி விடுகிறது என்பதையும் ஆய்வுகளின் மூலம் தெரிவித்தார். 

1915-1917- களில் பாக்டீரியாக்களை கொன்று தின்னும் வைரஸ்களான பாக்டீரியா பேஜ்கள் ஃபெலிக்ஸ் மற்றும் ட்வார்ட் ஆகியோரால் (Frederick Twort & Félix d’Herelle) கண்டுபிடிக்கப்பட்டதில் ஹான்கினின் இந்த ஆய்வுகள் மிக உதவியாக இருந்தன 

ஹான்கினின் இந்த ஆய்வு முடிவுகள் இருவகையான எதிர்வினைகளை  உருவாக்கின. 

ஒரு தரப்பு இப்படி நீரின் கிருமிக்கொல்லித் தன்மையை அறிவித்ததன் மூலம் மேலும் மேலும் கழிவுகளையும், பிணங்களையும் நதியில் கொட்டுவதற்கு ஹான்கின் காரணமாகிறார் என்று குற்றம் சாட்டியது

இந்துமத நம்பிக்கையாளர்களின் தரப்பு புனித நதிகளின் நீராடல் மக்களைத் தூய்மைப்படுத்துகிறது என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபித்தவர் என்று ஹான்கினுக்கு பாரட்டைத் தெரிவித்தது.

ஹான்கினின் ஆய்வு முடிவுகளைக் கேள்விப்பட்டு அலகாபாத், பனாரஸ் மற்றும் ஆக்ராவுக்கு வருகை தந்த அமெரிக்க எழுத்தாளர் மார்க் ட்வெயின்  பண்டைய இந்தியர்கள், பிணங்கள் மிதக்கும், நாற்றம் அடிக்கும் கங்கை நீர், தான் தொடுபவற்றை எல்லாம் புனிதப்படுத்தும் என்ற உண்மையை எப்படி அறிந்திருந்தார்கள்? என்று தன் வியப்பை தெரிவித்திருந்தார், பண்டைய இந்தியர்கள் கிருமி ஆய்வாளர்கள் என்றும்  பயணக்கட்டுரையில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஸ்கந்த புராணம் பகவத்புராணம் மஹாபரதம் ஆகிவற்றிலும் கங்கை நீரின் கெட்டுப்போகாத, பாசிபிடிக்காத, எத்தனை காலம் வைத்திருந்தாலும் துர்நாற்றம் வீசாத புனிதத்தன்மை குறிப்பிடப்பட்டிருக்கிறது.

கேம்ப்ரிட்ஜில் பட்டம் பெற்ற பின்னர், லூயி பாஸ்டருடனும்,  ராபர்ட்  காச்சுடனும் பணிபுரிந்த பின்பு இந்தியாவிற்கு வந்த ஹான்கின் இந்தியாவில் பரவிக் கொண்டிருந்த காலரா உள்ளிட்ட  தொற்று நோய்களுக்கான காரணம் நுண்ணுயிர்கள் என்பதை அறிவித்தவர்களில் முதன்மையானவர். ஹான்கின் ஆந்த்ராக்ஸ் மற்றும் உடலின் நோயெதிர்ப்புக் குறித்த ஆய்வுகளிலும் மிக முக்கியமான பங்களிப்பைச் செய்தவர்.

இந்திய காலனியாதிக்கக் காலத்தில் மருத்துவ ஆய்வுகளை துவங்கியதில் ஹான்கினின் பங்கு அளப்பரியது. 1900-களில் இமாச்சல பிரதேசத்தில் முதல் பாஸ்டர் ஆய்வு நிறுவனத்தை உருவாக்குவதில் ஹான்கின் மிக முக்கியப் பங்கு வகித்தார். அங்குதான் இந்தியாவில் பரவிக்கொண்டிருந்த டைபாய்டு மற்றும் காலாரா நோய் குறித்த ஆராய்ச்சி முழுவீச்சில் நடைபெற்றது.

அங்கு பணியில் இருந்த புகழ்பெற்ற  பாக்டீரியா நிபுணரான  ஹாஃப்கின்னுடன் (W. M. Haffkine) இணைந்து இந்தியா முழுவதும் வேகமாக பரவிக் கொண்டிருந்த  பிளேக் மற்றும் காலராவுக்கான தடுப்பு மருந்தை உருவாக்கியதில் ஹான்கின் பெரும்பங்காற்றினார்.

 இந்திய கிராமங்களில் பொட்டாசியம் பெர்மாங்கனேட்டை கிருமிநாசினியாக உபயோகிப்பதை பரவலாக்கியதும் ஹான்கின்தான். 

காலரா மற்றும் பிளேக் நோயுற்று இறநதவர்களின் உடல்களைத் தின்று, நோயுற்ற பிணந்தின்னிக் கழுகுகளைக்  கருணையுடன் சிகிச்சையளித்து காப்பாற்றியவராக  மருத்துவ அறிவியல் வராலாற்றில்  ஹான்கின்  பெருமதிப்புடன் நினைவு கூறப்படுகிறார்.

தன் உடலையே ஆராய்ச்சி விலங்காக மாற்றிக்கொண்டு நாகத்தின் நஞ்சு, ஓபியத்தின் போதை ஆகியவற்றின் விளைவுகளை  ஆராய்ந்த ஹான்கின் அவரது காலத்தில் முக்கியமான  இந்த  ஆய்வுகளுக்கு பேரும் புகழும் பெறவில்லை என்றாலும் பாக்டீரியாபேஜ் கண்டுபிடிப்பாளர்கள் இருவரும்   பல ஆய்வறிக்கைகளில் ஹான்கினின்  துவக்க கால ஆய்வு முடிவுகளைக் குறிப்பிட்டிருந்தார்கள்.

ட்வார்ட்- Frederick Twort

1915-ல் பிரிட்டிஷ் பாக்டீரியா நிபுணர் ஃப்ரெட்ரிக் ட்வார்ட்( Frederick Twort), ஒரு மிகச்சிறிய நுண்ணுயிர் பாக்டீரியாக்களை அழிப்பதை கண்டறிந்தார். 

அந்த உயிர் 

           அல்லது

 இருக்கக்கூடும் என அவர் யூகித்தார்

  மேற்கொண்டு ஆய்வுகளைத் தொடர்ந்து அது என்னவென்று ட்வார்ட் உறுதிப்படுத்துவதற்கு முன்பு முதல் உலகப் போர் துவங்கியது . எனவே நிதிப் பற்றாக்குறையால் ட்வார்ட்டின் இந்த ஆய்வு அப்படியே கைவிடப்பட்டது.

1917-ல்தான் அது பாக்டீரியாபேஜ் என்று ஃபெலிக்ஸினால் பெயரிடப்பட்டது.  ட்வார்ட்டின் கண்டுபிடிப்பு நுண்ணுயிர்களின் அடிப்படை வகைகளின் அறிதலில் ஒரு பெரிய திறப்பை உண்டாக்கியது.  ட்வார்ட் 1950-ல் இறந்தார். நுண்ணுயிரியல் வரலாற்றில் ட்வார்ட்டின் சோதனைகள் கண்டுபிடிப்புகள் அனைத்தும் மிக முக்கியமானவை

ஃபெலிக்ஸ் -Félix d’Hérelle

தானாகவே நுண்ணுயிரியலை கற்றுத்தேர்ந்திருந்த, பாரீஸில் பாஸ்டர் நிறுவனத்தில் பணி செய்துகொண்டிருந்த ஃபெலிக்ஸ் (Félix d’Hérelle) என்னும் நுண்ணுயிரியலாளர் 1917- செப்டம்பர் 3-ம் தேதி,  நோய் உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும்  கண்ணுக்குத் தெரியாத அளவு நுண்மையான ஒரு உயிரியைத்தான் கண்டுபிடித்திருப்பதாக அறிவித்தார்,  அவர் பாக்டீரியாக்களைக் கொல்லும் அந்த வைரஸுக்கு பாக்டீரியோ பேஜ் – bacteriophage என்றும் பெயரிட்டிருந்தார்

 வயிற்றுப்போக்கால் அவதிப்பட்ட ஒரு நோயாளிக்கு பாக்டீரியோ பேஜ் சிகிச்சை அளித்து அவர் முழுக்க குணமானதையும்  அப்போது அவர் ஆவணப்படுத்தினார். அதன் பிறகு ஃபெலிக்ஸ் பல ஆய்வுகளைச் தீவிரமாகச் செய்து பேஜ் சிகிச்சை முறையை அறிமுகம் செய்தார். 

பாரிஸில் முதல் அதிகாரபூர்வமான பேஜ் சிகிச்சையை அளித்த ஃபெலிக்ஸ் 20-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் இந்த பாக்டீரியாபேஜ்களைக் கொண்டு மனித மற்றும் விலங்குகளின் நோய்க்கு சிகிச்சையளிக்கலாம் என்னும் கருத்தை வலுவாக முன்வைத்தார்.

 ஆனால் உலகப்போரில் மும்முரமாக இருந்த உலகநாடுகள் இதைக் கவனிப்பதற்குள் அலெக்ஸாண்டர் ஃபிளெமிங்கின் பெனிசிலின் கண்டுபிடிப்பு ஃபெலிக்ஸின் இந்த முன்னெடுப்பை பின்னுக்குத் தள்ளிவிட்டது. 

உலக நாடுகள் பலவற்றில் பெனிசிலின் பயன்பாடு துவங்கி இருந்த வேளையில் ஃபெலிக்ஸின் குழு சோவியத் யூனியனில் இந்த பேஜைக்கொண்டு சிகிச்சையளிப்பதை வெற்றிகரமாக சோதித்துப்பார்த்தது.

முதல் உலகப்போரில் வயிற்றுப்போக்கால் அவதிப்பட்ட ராணுவ வீரர்களுக்கு ஃபெலிக்ஸ்  பாக்டீரியா பேஜ்களைக்கொண்டு அளித்த சிகிச்சை பலனளித்ததை  உலகெங்கும் இருந்த மருத்துவர்கள் வியந்து கவனித்தார்கள். மருத்துவ சஞ்சிகைகளில் பேஜ் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஆபத்து விளைவிக்காத வைரஸ் என்பது பரவலாக அறிவிக்கப்பட்டது.

உலகநாடுகள் பலவும் பெனிசிலின் சிகிச்சையைக்குறித்த சோதனைகளில் ஈடுபட்டிருக்கையில் 1930-40-களில் அஜர்பைஜான், உக்ரைன், ஜார்ஜியா மற்றும் ரஷ்யாவில் பேஜ் சிகிச்சை முயற்சிகள் ஃபெலிக்ஸின் முன்னெடுப்புக்களால் பரவலாக நடந்தன. மத்திய ஐரோப்பா, பிரான்ஸ் மற்றும் பிரேசிலிலும் இந்த பேஜ் சிகிச்சைச் சோதனைகள் நடந்தன.

 ஃபெலிக்ஸ்  இந்தியாவுக்கு வந்து பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் கூடும் புனிதத்தலங்களில் இருக்கும் நீர்நிலைகளில் காலராவுக்கெதிராக பேஜ்களைக்  கலந்தார். அந்த இடங்களிலெல்லாம் காலராத்தொற்று மிக வேகமாகக் குறைந்தது.

அஸ்ஸாம் மற்றும் வங்காளத்தின் பல  கிராமங்களுக்கும் நேரில் சென்று பேஜ் கலந்த நீரை ஊர்க்கிணறுகளில் கலக்கவும், அந்த நீரை கொதிக்க வைக்காமல் அருந்தச்சொல்லியும் ஊர்த்தலைவர்களிடம் ஃபெலிக்ஸும் அவரது குழுவினரும்  அளித்தனர்.

அப்போது காந்தியின் ஒத்துழையாமை இயக்கம் நடந்துகொண்டிருந்த காலமாதலால் நோய்த்தொற்றின் தீவிரத்தைக் குறைக்கும் அந்த எளிய முறையை துரதிர்ஷ்டவசமாக  பெரும்பாலான ஊர்த்தலைவர்கள்  மறுத்தனர். அங்கெல்லாம் காலரா தொற்றினால் பலர் பரிதாபமாக இறந்தார்கள்.

எனவே 1937-ல் ஃபெலிக்ஸின் இந்த பேஜ் சோதனை கைவிடப்பட்டது.

பிரான்ஸுக்கு திரும்பிய  ஃபெலிக்ஸ் ஜெர்மானிய ஆயுதப்படையினரால் வீட்டுச்சிறை வைக்கப்பட்டார். சிறையில் இருக்கையில் அறிவியல் சோதனைகளின் விளைவுகள்- “The Value of Experiment” என்னும் 800 பக்க நாவலை  ஃபெலிக்ஸ் எழுதி முடித்தார்.

நுண்ணுயிரியலை எந்த கல்லூரியிலும் பல்கலைக்கழகத்திலும் படிக்காமல் தானே நூல்களிலும் சோதனைகள் செய்தும்   படிக்காத  நுண்ணுயிரியல் மேதையான ஃபெலிக்ஸ் 1949-ல் கணையப் புற்றுநோயால் மடிந்தபோது அவர் யாருக்குமே தெரியதவராயிருந்தார்.

பேஜ் ஆராய்ச்சிகளுக்காக பலருக்கு நோபல் பரிசு வழங்கபட்டது. 1960-லிருந்து நோபல் பரிசுக்காக 10 முறை பரிந்துரைக்கப்பட்டும் ஃபெலிக்ஸுக்கு அப்பரிசு கிடைக்கவில்லை. ஆனால் ஃப்ரான்ஸ் அவரை மறக்கவில்லை ஒரு தெருவுக்கு அவர் பெயர் வைக்கப்ட்டிருக்கிறது.

 Félix d’Hérelle என்னும் அவர் பெயரைக்கொண்டு பேஜ்களின் ஒரு குடும்பமான Herelleviridae பெயரிடப்பட்டிருக்கிறது.

 இப்போது இந்த பேஜ்சிகிச்சை நுண்ணுயிர்க்கொல்லி எதிர்ப்புச்சக்தி பெற்றிருக்கும் நோய்க்கிருமிகளுக்கெதிராகச் செயல்புரியுமென்பது ஆய்வுகளில் நிரூபணமாகி இருக்கிறது

நுண்ணுயிரெதிர்ப்பிகளால்அழிக்கமுடியாத  Pseudomonas aeruginosa, Klebsiella pneumoniae, மற்றும் Staphylococcus aureus ஆகிய பாக்டீரியாக்களுக்கெதிராக பேஜ் வெற்றிகரமாகச்செயல்படுகிறது. 

நுண்ணுயிரெதிர்ப்புச் சக்தி பெற்றுக்கொண்டிருக்கும் நோய்க்கிருமிகளின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் பேஜ் சிகிச்சை உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சை, உயிரித் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் விவசாயத்துறைகளில் மிக முக்கியமான  பங்காற்றிக் கொண்டிருக்கிறது.

நுண்ணுயிரிகளின் வாழ்க்கை மற்றும் மருத்துவத்தில் அவற்றின் பயன்பாடுகள் பற்றிய நமது புரிதலை இந்த மூன்று முன்னோடி நுண்ணுயிரியலாளர்களின் பங்களிப்புகள் வெகுவாக மாற்றியமைத்தன.  பாக்டீரியோ பேஜ்களின் ஆரம்பகால கண்டுபிடிப்பு முதல் நுண்ணுயிரெதிர்ப்பி-எதிர்ப்பு நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடுவதில் அவற்றின் நவீன பயன்பாடு வரை, இம்மூவரின் பணி புதிய தலைமுறை அறிவியலாளர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கிறது. 

இப்போது மீண்டும் கவனத்துக்குள்ளாகி இருக்கும் பேஜ் சிகிச்சை இம்மூவரின் பங்களிப்பை  நாம் நன்றியுடன் நினைவு கூர்வது அவசியமாகிறது.

1930-ல் பிரயாக்ராஜில் (அலகாபாத்)  நிறுவப்பட்ட அருங்காட்சியகத்தின் ஒரு பிரிவான  கங்கா கேலரியில் கங்கை நீர் குறித்த தொன்மங்கள், நம்பிக்கைகள் ஆகியவை சித்தரிக்கப் பட்டிருக்கின்றன.

அங்கு  ஹான்கினின் புகைப்படமும்,  3 மணி நேரத்தில் காலராக் கிருமிகளை கங்கை நீர் அழிக்கிறது என்னும் அவரது  ஆய்வு முடிவுகளின்  வாசகங்களும் பொறிக்கட்டிருப்பதை  கும்பமேளாவுக்கு வருகை தருபவர்கள் காணலாம்

நியூயார்க் டைம்ஸில் 2019 -ல் வெளியான கட்டுரையொன்று கங்கை நீரில் பெருகி இருக்கும் நோயுருவாக்கும்  பாக்டீரியாக்களைப் பற்றி கவலை தெரிவித்திருந்தது.

ஹான்கின் இந்த நீரின் தூய்மைத் தன்மையைக்குறித்து ஆய்வு செய்து நூற்றுக்கணக்கான வருடங்கள் ஆகின்றன.  இன்று திரிவேணி சங்கமத்தில் தொழிற்சாலைக் கழிவுகளும், கோடிக்கணக்கான பக்தர்கள் நீராடுதலால் உண்டாகும் மாசுபாடும் சாக்கடைக்கழிவுகளும் அதிக அளவில் கலந்திருப்பதால் ஹான்கின்  குறிப்பிட்ட  கிருமிக்கொல்லித்தன்மையும், ட்வார்ட்டும் ஃபெலிக்ஸும் கண்டு பிடித்த பாக்டீர்யாபேஜின் பாக்டீரியாவைக் கொல்லும் தன்மையையும் தாண்டி நதி நீர் மாசுபட்டிருக்கிறது.

 சமீபத்தில்  கோடிக்கணக்கில் மக்கள் நீராடும் இந்த நதிகளில் மலபாக்டீரியா எனப்படும் இகோலியின்-(E coli) அளவு மிக மிக அதிகரித்திருப்பது  முக்கியச் செய்தியாகியிருகிறது.

பொதுமக்களின் ஆரோக்கியம்,நீர் வாழ் உயிரினங்களின் பாதுகாப்பு,கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த நதிநீரின் புனிதத்தன்மை, ஆகியவற்றால் பிரயாக்ராஜின் நதி நீர் மாசுபாடு மிகப்பெரிய சவாலாகி இருக்கிறது.  

 மாசுக்கட்டுப்பாடு விதிமுறைகள் மேலும் இறுக்கமாக்கப்பட்டு, பெருந்திரளாக அங்கு வரும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்கி, கழிவு நீர் சுத்திகரிப்பில் புதிய அறிவியல் தொழில்நுட்பங்களை புகுத்தி கங்கை யமுனை நதிகளின் தூய்மையைப் பாதுகாக்க வேண்டியது கட்டாயமாகி இருக்கிறது.  

திரிவேணி சங்கமத்தில் கங்கை யமுனை நதிகளுடன் சரஸ்வதி நதியும் கண்ணுக்குப்புலப்படாத மாய நதியாக கலப்பதாக நம்பிக்கை நிலவுகிறது. அன்னை நதிகளான கங்கையும் யமுனையும் அப்படி மாயமாகிப்போய்விடாமல்  காக்கப்படட்டும்

Exit mobile version