Site icon சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

இடமும் வலமும்

நெடுஞ்சாலை நெரிசலில்
முன்னும் போக முடியவில்லை
பின்னும் போகமுடியவில்லை
இடப்புற இணைப்புச்சாலையில்
விபத்து நடந்திருப்பதால்
தடுப்புகள் வைத்திருக்கிறார்கள்
வலப்புற இணைப்புச் சாலையில்
இரண்டு கொலைகள் நிகழ்ந்திருப்பதால் .
அதுவழி செல்ல காவல்துறை
அனுமதி மறுக்கிறார்கள்.
உயிரை உருக்கும் வெயிலில்
நகரமே நடுத்தெருவில் நிற்கிறது.


பூந்தோட்டம்

வண்ணப் பூக்களும்
வாசனைப் பூக்களும்
பூக்கும் தோட்டம்
பூந்தோட்டமென்று
பெயர் பெறுவது
பொதுவழக்கு..
எருக்கும் நெருஞ்சியும்
பூத்த நிலத்தை
பூந்தோட்டமென்று
ஒருவன் சொன்னால்
அவனிடம் வாதிடுவதைப்போல்
அறிவீனம் வேறொன்றுமில்லை.
யானைத்தோலை
ஆறிரு மாதங்கள் துவைத்தாலும்
வெள்ளையாக்க முடியாதென்று
எப்போதோ எழுதிப் போனான்
தெலுங்கிலொரு சித்தன் வேமன.

Exit mobile version