Site icon சொல்வனம் | இதழ் 366 | 10 மே 2026

முடிவு

ரோனாக் அருகே I-81 நெடுஞ்சாலையின் இருளில் மானசாவின் கார் இரைக்கு பின்னான பாம்பென மெல்ல ஊர்ந்தது.  இரண்டு மைல் நீள ஊர்தல். ஏதோ விபத்து என கூகிள் மேப் காட்டியது. மானசாவின் மனதில் நெளியும் கவலைகள் என அந்தத் தார்ச்சாலை  நீண்டு கொண்டே போனது. பழமையான புளூ ரிட்ஜ் மலைத்தொடரின் முகடுகள் இரவு வானத்தில் உயர்ந்து நின்றது. நட்சத்திரங்கள் உடைந்த கண்ணாடித் துண்டுகளாய் சிதறிக் கிடந்தன. ஆறு மாதங்களுக்கு முன்பு அவளை நிலைகுலைய வைத்த  ஈ.கே.ஜி படங்களை மீண்டும் அவளுக்கு நினைவூட்டுவதாக மலை உச்சிகள் ஏறி இறங்கின. 

மானசா டிரைவர் சீட்டில் நகர்ந்தாள். நெடுநேரம் வண்டியிலேயே இருந்ததால் உடல் அவளை அசௌகரியப்படுத்தியது, ரெஸ்ட்ரூம் போனால் பரவாயில்லை என நினைத்தாள். அவள் கண்கள் அடிக்கடி அர்ஜுனை நோக்கிச் சென்றன. அவன் பயணிகள் இருக்கையில் கூனிக் குறுகி அமர்ந்திருந்தான். கையில் இருந்த போனின் நீல ஒளியில் அவன் முகம் தெரிந்தது. விபத்து என கூகிள் மேப்ஸ் காட்டியதில் இருந்தே அவன் உடலில் பதட்டம் இருந்தது. 

“கண்ணா, ஹெட்போனில் பாட்டு போட்டு தூங்குமா,” மானசாவின் குரல் கவலையுடன் ஒலித்தது.

அர்ஜுன் ஹெட்போனுடன் கண்ணை மூடிக் கொள்ள முயற்சி செய்ய ஆரம்பித்தான், “அம்மா வீட்டுக்கு போலாமா”  மெல்லிய குரலில் அணத்தல் ஆரம்பித்தது.

விபத்து நடந்த இடம் வந்ததும் நெடுஞ்சாலையின் நடுவே பல ஆம்புலன்ஸ்களின் நீல-சிவப்பு விளக்குகள் இரவு வானத்தை வெட்டி வெட்டி எரிந்தன. போலீஸ் அதிகாரிகள் டார்ச் லைட்டுகளுடன் கையசைத்து வாகனங்களை வழிநடத்திக் கொண்டிருந்தனர்.

அர்ஜுனால் கண்ணை மூடி இருக்க முடியவில்லை. “அம்மா.. அம்மா.” அர்ஜுனின் குரல் நடுங்கியது. அவன் உடல் நாணல் காற்றில் மடங்குவது போல மடங்கியது, கண்கள் விரிந்து, மூச்சு வேகமானது. அடுத்த லேனில் விபத்தில் சிக்கிய கார் தலைகீழாகக் கவிழ்ந்து கிடந்தது. சுற்றிலும் சிதறிக் கிடந்த கண்ணாடித் துண்டுகள் நெடுஞ்சாலை விளக்குகளில் மின்னின.

“கண்ணா, என்னைப் பாரு, வெளியே பார்க்காதே, பாட்டை போடு, கண்ணை மூடு ” மானசா வேக வேகமாகச் சொன்னாள். ஏதோ ஒரு விதத்தில் மகனுக்கு ஆறுதலாக இருக்க போராடினாள். ஆனால் அர்ஜுனின் பார்வை விபத்து நடந்த இடத்தில் உறைந்திருந்தது. ஊஞ்சல் போல உடல் முன்னும், பின்னும் ஆடியது. அவன் நினைவுகளை கிளறியது.

“அப்பாவும்… அப்பாவும் இப்படித்தான்…” அவன் குரல் உடைந்தது. “அன்னைக்கும் இப்படித்தான் பல ஆம்புலன்ஸ்கள்.. அப்பா முகம் எல்லாம் ரத்தம் அம்மா… என்னாலதான்.”

மானசா ஒரு கையால் ஸ்டியரிங்கையும், மறு கையால் மகனின் கையையும் பற்றினாள். “அர்ஜுன், மூச்சை மெதுவா விடு. நான் இருக்கேன்… என்னைப் பாரு.”

“எல்லாம் என் தப்பு… என் தப்புதான்…” அவன் கண்களில் கண்ணீர் வழிந்தது. முன்னால் மின்னும் எமர்ஜென்சி விளக்குகள் அவன் கண்ணீரில் பிரதிபலித்தன.

மானசா காரை அந்த இடத்தினை தாண்டி கொண்டு செல்ல படாத பாடு பட்டாள் ஆனால் நெருக்கமாக நின்ற வாகனங்கள் இடம் தரவில்லை. “கண்ணா, கண்ணா,” அவள் குரல் தவித்தது. மகனிடம் என்ன சொல்வது என தெரியாமல் தவித்தாள். “இது உன் தப்பு இல்லை. அது ஒரு விபத்து. விபத்து…”

அர்ஜுன் வாந்தி வருவது போல குனிந்தான். “நான் கார் ஓட்டியிருக்கவே கூடாது.. அப்பா வேண்டாமுனு சொன்னாங்க…. நான் கேட்கலை….” அவன் வார்த்தைகள் விக்கலில் மூழ்கின.

“அர்ஜுன் அதெல்லாம் ஒன்னுமில்லை.., அது முடிஞ்சு போச்சி, விடு. பாட்டுக் கேளு, கொஞ்சம் தண்ணிக் குடி.”  வண்டியை நிறுத்தி மகனை அள்ளி திருப்பி கருவறையில் வைத்துக் காக்க வேண்டுமென வேகம் எழுந்தது.

வின்செஸ்டரில் இருந்து பயணம் துவங்கிய பொழுது ஓரளவு நம்பிக்கையோடுதான் இருந்தான். ப்ரியா மானசாவின் சித்தி மகள். ப்ரியாவின் மகளுக்கு சார்லட்டில் கல்யாணம். வீட்டில் இருந்து கிளம்புகையில் திருமணத் திட்டங்களைப் பற்றி கேலியாகக் கூட பேசினான். இப்பொழுது அப்படி இல்லை. போக்குவரத்து நெரிசல் துவக்கமே அவனை மெல்ல உலுக்கியது. ஏதோ இருள் அவனில் மெல்லத் திறக்க ஆரம்பித்தது.  ஸ்டேட் ட்ரூப்பர்களின் விளக்குகள் முன்னால் மின்ன ஆரம்பித்து, போக்குவரத்து முற்றிலும் நின்றதும், ஒரு நட்சத்திரம் உள்நோக்கி வீழ்வதைப் போல அவன் மெல்ல மெல்ல உள்வாங்கிக் கொண்டதை அவள் கவனித்தாள்.

“கண்ணா, இந்த ட்ராபிக் முடிஞ்சதும் எக்ஸிட் எடுக்கலாம். கொஞ்சம் பிரேக் எடுத்துக்கலாம்.” சொந்தக் களைப்பை எதிர்த்துப் போராடியபடி, அவள் குரலை மென்மையாக வைத்துக் கொண்டாள். அருண் இருந்திருந்தால் இப்படித்தான் பேசியிருப்பான். நெடுந்தூரப் பயணங்களில் அவள் கண்டதுண்டு. 

விபத்தை கடந்ததும் கார் கொஞ்சம் வேகம் பிடித்தது. நள்ளிரவுக்கு இன்னமும் தொண்ணூறு நிமிடங்கள் என கடிகாரம் எண்ணிக் கொண்டு இருந்தது. ஒவ்வொரு மைலும் களைப்பை மேலும் பாரமாக்கியது. தெற்கு நோக்கிய அவர்களின் மெதுவான பயணத்தை, ‘சார்லட் – 180 மைல்கள்’ என்ற நெடுஞ்சாலை அடையாளப்பலகை கேலி செய்வது போலிருந்தது. அவளது ப்ளாடர் அவளிடம் கைக்கூப்பி கெஞ்சுவதும் அதிகம் ஆனது. 

“அம்மா, அப்பவே நான் நினைச்சேன், கல்யாணத்துக்கு வர எனக்கு பிடிக்கல” அர்ஜுனின் குரலில் அவள் அடையாளம் கண்டுகொண்ட பதற்றம் தெரிந்தது – போக்குவரத்து நெரிசலுக்குப் பிறகு இன்னும் கூர்மையாக.  மலைகள் இன்னும் கருமையாக கார் ஜன்னல்களுக்கு அப்பால், உயர்ந்து நின்றன. அதன் பழமையான பள்ளத்தாக்குகளில் அவன் வார்த்தைகளை உள்வாங்கக் காத்திருந்தன. “அங்கே எல்லாரும்… என்னைப் பார்த்ததும் எல்லாரும் கேட்பாங்க—”

“நீ நினைக்கிற மாதிரி யாரும் நினைக்க மாட்டாங்க,” மானசா சொன்னாள். அவளுக்கே அந்த வார்த்தைகள் காற்றாக ஒலித்தன. மலை உச்சிகளுக்கு இடையேயான ஆழ்ந்த நிழல்களைப் போல, சில பிளவுகளை வார்த்தைகளால் மட்டும் கடக்க முடியாது.

அர்ஜுனின் அடுத்த வார்த்தைகள் அவள் இரத்தத்தையே உறையச் செய்தன. “கடைசி தடவை நீ என்னை எங்கையோ போகக் கட்டாயப்படுத்தின போது என்ன ஆச்சுன்னு தெரியுமே. நான் மறுபடியும் ட்ரை பண்ணனும்னு நினைக்கிறியா?, எனக்கு இப்பவே கார் கதவை திறந்து வெளிய குதிக்கணும் போல இருக்கு”

ஆறு மாதம் முன்பான தற்கொலைக்கு  முயன்ற அர்ஜுன் நியாபகத்துக்கு வந்தான். ஆஸ்பத்திரி அறை நினைவுகள் அவளைச் சூழ்ந்தன – வெள்ளைத் துணிகள், பீப் சத்தம் போடும் மானிட்டர்கள், உயிருக்குப் போராடும் மகன். “பாதுகாப்பாக வைக்கத் தெரியாத அம்மா” என்று சந்தேகத்துடன் பார்த்த போலீஸின் கண்கள், டாக்டரின் கேள்விகள் – இதே மலைகளில் விடியல் நேரத்தில் உருளும் மூடுபனி போல அந்த நினைவுகள் அவள் மீது மோதின. ஆறு மாதங்களுக்கு முன்பு நடந்தவை நேற்று நடந்தது போல உயிர்ப்புடன் இருந்தன. அவள் தன்னைக் கட்டுப்படுத்தி மூச்சு விட்டாள், குரலை நிதானமாக வைத்துக் கொள்ள முயன்றாள். “கண்ணா, தயவு செஞ்சு—”

“என்னை வீட்டுக்கு கூட்டிட்டுப் போ,” அவன் முணுமுணுத்தான், அவளை விட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டு. ஜன்னலில் தெரிந்த அவன் பிம்பம் அப்பாலிருந்த கருமை மலைச்சரிவுகளில் கரைந்தது. “என்னால… முடியலை. அந்த விபத்தைப் பார்த்த பிறகு. அத்தனை ஆம்புலன்ஸ்…”

அவள் அடுத்து வந்த கேஸ் ஸ்டேஷன் பார்த்துக் காரைத் திருப்பினாள். நடுங்கும் கைகளுடன் என்ஜினை நிறுத்தி, கேஸ் ஸ்டேஷனின் நிறுத்துமிடத்தில் காரை நிலை நிறுத்தினாள். இரவு பதினொன்றை கடந்துவிட்டது.  கேஸ் ஸ்டேஷன் பகுதியையும் உணவு விடுதியையும் பிரிக்கும் கண்ணாடிச் சுவரின் வழியே பாய்ந்த ஃப்ளோரசென்ட் வெளிச்சம் இரவுப் பயணிகளின் முகங்களை வெளிச்சமாக்கியது. அவள் கண்கள் அந்த இடத்தை ஆய்ந்தன – இப்போது பழக்கமாகிவிட்ட ஒரு செயல், ஒரு பாதுகாப்பு வலையைத் தேடுவது, யாராவது கவனிப்பார்களா என்ற தவிப்பு. அக்டோபர் குளிர் பெரும்பாலான மக்களை உள்ளே துரத்தியிருந்தது. உணவு விடுதியின் வெளிச்சத்தில் பூத்துகளும் மேஜைகளும் இரவின் கருமையில் ஒளித் தீவுகளாய் மிதந்தன.

அவள் மனம் வேகமாகச் சிந்தித்தது – அர்ஜுனை காரில் தனியே விட்டுவிட்டு உள்ளே போக முடியுமா? அவன் இப்போதைய மனநிலையில்… காற்று நிரப்பும் பம்ப் அருகே நின்றிருந்த ஒரு கார் அவள் கவனத்தை ஈர்த்தது. இரவின் கருமைக்கு எதிராக அது ஒரு மங்கலான உருவமாகத் தெரிந்தது. அதன் வேனிட்டி பிளேட் “SHANTH7” ஃப்ளோரசென்ட் வெளிச்சத்தில் மின்னியது. கண்கள் மேலும் தேடின. உள்ளே ஜன்னலோரம் ஒரு இந்தியன் இருந்தான். அவளுக்குள் ஏதோ ஒரு நம்பிக்கை எட்டிப் பார்த்தது. அர்ஜுனை உள்ளே அழைத்துச் சென்றால்…? குருட்டு நம்பிக்கையோ? யாரிடமும் வழி கேட்க முடியாத இருளும் தனிமையும் அவள் துணைக்கு இருந்தது. எனினும் அர்ஜுனுக்காக என்ற எண்ணம் மட்டும் தெளிவாக இருந்தது. இருளில் எங்கோ ஒரு மூலையில் மின்னும் தீப்பொறி போல, அவள் மனதிலும் ஒரு சிறு நம்பிக்கை. அதுவும் காற்றில் ஆடும் சுடர் போல நிலையற்று…

அருண் அங்கே இருப்பது போன்ற பிரமை அவளை ஆட்கொண்டது. இப்படித்தான் சமீப காலமாக – மனச்சோர்வு மேலிடும் தருணங்களில் எல்லாம் அவனைக் காண ஆரம்பித்திருக்கிறாள். அங்கே உட்கார்ந்திருந்தவன் அணிந்திருந்த கடல்நீல நிற ஸ்வெட்டர்,  கைகளை மடித்திருந்த அதே பாணி – இவையெல்லாம் அவள் தொண்டையை நெகிழ வைத்தன. உட்கார்ந்திருந்தவன் கவனம் புத்தகத்திற்கும் கைப்பேசிக்கும் இடையே ஊசலாடியது, அடிக்கடி பதற்றத்துடன் திரையைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“கண்ணா,” அவள் மெதுவாகச் சொன்னாள், “வா உள்ளே போய், ஏதாவது ஸ்நாக் வாங்கலாம். கால் ஸ்ட்ரெச் செய்யலாம்.” அவளுக்கு ரெஸ்ட்ரூம் போக உடல் வலியுடன் கத்தியது. ஆனால் அதைவிட அவளுக்கு வலியாக இருந்த விஷயம் அர்ஜுனை இந்த மனநிலையில் காரில் தனியாக விட முடியாது என்ற எண்ணம். “ப்ளீஸ்? அம்மாவுக்கு ஒரு ப்ரேக்.”

மானசா கண்ணாடிக் கதவுகளின் வழியே நுழைந்தபோது, தலைக்கு மேலே ஃப்ளோரசென்ட் விளக்குகளின் வெளிச்சம் அவள் களைப்பை மேலும் வெளிச்சப்படுத்தியது. அர்ஜுனின் முழங்கையை மென்மையாகத் தொட்டு அவனை வழிநடத்தினாள். “கண்ணா, உனக்கு பிடிச்ச பண்ண சிப்ஸ் இருக்கான்னு பாரேன், எனக்கு ஒரு அக்வாபீனா? நான் காபி எப்படி இருக்குனு பார்க்கறேன்” 

காஃபி மெனு போர்டைப் படிப்பது போலப் பாவனை செய்தபடி, ஸ்நாக் டிஸ்ப்ளேவுக்கு அருகே இருந்த அர்ஜுனை கண் நுனியில் பார்க்கும்படி தன்னை நிலைப்படுத்திக் கொண்டாள்.

அவள் செய்யப் போவதின் பைத்தியக்காரத்தனம் அவள் நெஞ்சை முழு வேகத்தில் தாக்கியது – அவள் இதயம் விலா எலும்புகளுக்கிடையே இடித்துக் கொண்டது. தோளுக்கு மேல் வளர்ந்த மகனைக் கவனித்துக் கொள்ள ஒரு அந்நியரிடம் கேட்பதா? அந்நியன் என்ன நினைப்பான்? பதினைந்து அடி தூரத்தில் முறையாக ஸ்நாக் பாக்கெட்டுகளை ஆராய்ந்து கொண்டிருந்த அர்ஜுனை மீண்டும் ஒரு முறை பார்த்தாள், பிறகு மூலையில் இருந்த அந்த மனிதனைப் பார்த்தாள்.

காஃபி ஸ்டேஷனுக்கு அருகே தாமதித்தாள். அர்ஜுனை தன் கண் நுனியில் தொலைக்காமல் பார்த்தபடி, தூரத்தில் டேபிளில் இருந்த அன்னியனை அணுகும் கோணங்களைக் கணக்கிட்டாள். பின்னர் உரையாடலை எப்படித் துவங்குவது என ஆயிரம் வழிகளை மனதில் உருவாக்கிப் பார்த்தாள். ஆனால் கற்பனை செய்த ஒவ்வொரு துவக்க வரியும் முழுமையாக உருவாகும் முன்னே கரைந்து போனது. “சாரி, இது வித்தியாசமா இருக்கலாம் ஆனா…” இல்லை. “நான் கவனிச்சேன்…” இன்னும் மோசம். “உங்களைத் தொந்தரவு செய்யறதுக்கு ரொம்ப சாரி…” கவனத்தை இரண்டாகப் பிரித்தபடி – ஒரு கண் அர்ஜுன் மீதும் மறு கண் கடல்நீல ஸ்வெட்டர் அணிந்த மனிதன் மீதும் – அவள் விரல்கள் கவுண்டரில் பொருளற்ற கோலங்களை வரைந்தன.

அருண் இருந்திருந்தால் இப்படி ஒரு அந்நியரை அணுகுவதைப் பற்றி என்ன நினைத்திருப்பான்? ஆனால் அருணுக்கு ஒருபோதும் அர்ஜுனின் இருளை தனியாக எதிர்கொள்ள வேண்டியிருந்ததில்லை. அருண் இருந்தவரை அர்ஜுன் வேறொரு குழந்தையாக, ஒளி நிறைந்தவனாக இருந்தான். அப்போதெல்லாம் கடைகளில் மகன் எங்கிருக்கின்றான் என பார்வைக் கோடுகளைக் கணக்கிட வேண்டியிருந்ததில்லை, மகனின் சுழலும் எண்ணங்களின் அறிகுறிகளைக் கவனித்தபடி உரையாடல்களை ஒத்திகை பார்க்க வேண்டியிருந்ததில்லை.

இறுதியாக மூலை மேஜையை நோக்கி நகர்ந்தபோது – அர்ஜுன் தன் இடது புறத்தில் தெளிவாகத் தெரியும்படி நிலைப்படுத்திக் கொண்டபடி – அவள் மனதில் தயாரித்த வசனங்கள் எல்லாம் காற்றில் கரைந்தன. அங்கே, அந்த அன்னியனின் போனுக்கு அருகில், முகப்பு மேல்நோக்கி இருந்த ஒரு பரிச்சயமான புத்தகம் – கிரீம் நிற அட்டையில் பச்சை நிற எழுத்துக்களில் “ஆரோக்ய நிகேதன்”. ஆங்கில மொழிபெயர்ப்பு. அருணின் மரணத்துக்குப் பிறகு மாதக்கணக்கில் அவள் படுக்கையறை மேஜையில் உயிர்ப்போடு வாழ்ந்த அதே புத்தகம். அதன் பக்கங்கள் மடிக்கப்பட்டு, கண்ணீரால் கறைபட்டு, கவுன்சிலர்களாலும் நல்லெண்ணம் கொண்ட உறவினர்களாலும் கொடுக்க முடியாத ஒன்றை வழங்கியது – சாவின் அர்த்தத்தைச் சொல்லும் ஜீவனின் மொழி.

திடீரென்று நிம்மதி அவளை நிரம்பியது, அவள் முழங்கால்கள் பலவீனமாகும் அளவுக்கு. இங்கே ஏதோ உண்மையான ஒன்று கிடைத்தது – நேரடியாகப் பேச்சைத் துவங்க ஒரு காரணம். விளக்க முடியாத அவள் மன குழப்பத்துக்கு, சொற்கள் தேவைப்படாத ஒரு இணைப்பின் நூல்.

“ஏதாவது கிடைச்சுதா?” அர்ஜுனைக் கூப்பிட்டாள். அவன் திரும்பாமலேயே ஒரு பாக்கெட்டை உயர்த்திக் காட்டினான். ஒரு அடி முன்னே எடுத்தாள், பிறகு இன்னொன்று. அவள் முன்பே ஒத்திகை பார்த்த சாதாரணத் தோரணை இப்போது இயல்பாக அவள் தோள்களைச் சுற்றி அமர்ந்தது. அர்ஜுனை தன் பார்வையிலிருந்து விலகவிடாமல் கவனமாக இருந்தாள்.

அவள் வருவதை உணர்ந்தது போல உட்கார்ந்திருந்தவன் மேலே பார்த்தான். உணவு விடுதியின் செயற்கையான வெளிச்சத்தில் அவர்களின் கண்கள் சந்தித்தன. மானஸாவின் புன்னகை தயக்கத்தில் தொடங்கி, படிப்படியாக உண்மையான புன்னகையாக மலர்ந்தது. “எக்ஸ்க்யூஸ் மீ,” அவள் பேசுவதைத் தானே கேட்டுக்கொண்டாள், எதிர்பார்த்ததை விடத் தெளிவாக அவள் குரல் வந்தது. ” – இது தாராசங்கரின் நாவல்தானே?”

அந்த எளிய கேள்வி, எரிச்சலூட்டும் போன் அழைப்புகளால் நிரம்பிய கடந்த இரண்டரை மணி நேரத்திற்குப் பிறகு, குளிர்ந்த நீரைப் போல அவன் மனதில் படிந்தது. நள்ளிரவில், ஒரு நெடுஞ்சாலை ஓர கேஸ் ஸ்டேஷனில், யார் வங்க இலக்கியத்தைப் பற்றி பேசுவார்கள் என்று அவன் வியந்தான்.

இப்போது இங்கே அமர்ந்து, கஸ்டமர் சர்வீஸ் மெனுக்களில் தடுமாறி, டோ ட்ரக் டிஸ்பாட்சர்களிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான் – பாரம் சுமந்த மனிதனைப் போல. அதே வேளையில் அவன் செல்போன் நாளை காலை அவன் அப்பாவின் டாக்டர்களைச் சந்திக்க வேண்டும் என்று நினைவூட்டிக் கொண்டே இருந்தது.

அவன் மனம் சுழல்காற்றில் சிக்கிய அக்டோபர் மாத இலை போல எண்ணங்களைச் சுற்றிச் சுற்றி வந்தது – மானசா காரில் இருந்து இறங்கிய பொழுதே அவளையும், அர்ஜுனையும் கவனித்தான். அந்தக் குடும்பம் சார்லட் போகுமா? அந்த இந்தியக் குடும்பத்திடம்  லிஃப்ட் கேட்கலாமா? ஹோட்டலில் தங்கி நாளை செல்வதா? அப்பாவின் டாக்டர் அப்பாயின்ட்மென்ட்? உதவி கேட்டால் அவர்கள் என்னைச் சந்தேகக் கண்களால் பார்ப்பார்களோ? பல கேள்விகள் வேடம் பூண்டு அவன் மனதில் நாடகம் ஆடியது.

நிமிர்ந்து அமர்ந்தான். வித்தியாசமாக, இந்தச் சாதாரண உரையாடல் தருணம் ஆறுதல் அளித்தது. அதே நேரம் மூளையின் ஒரு பகுதி மதிப்பீடுகளைத் தொடர்ந்தது: கேட்டால் உதவி செய்பவர்களாகத் தெரிகிறார்கள், ஐந்து வினாடி முன் சந்தித்த அந்நியர்களிடம் எப்படி உதவி கேட்பது?

கார் திடீரென ப்ரேக்டவுன் ஆகி நின்றதிலிருந்து முதல் முறையாக, நெஞ்சின் முடிச்சு கொஞ்சம் அவிழ்ந்தது. ஆனால் உதவி கேட்கும் கேள்வி மட்டும் வார்த்தைகளாகாமல் காற்றில் மிதந்தது.

“ஆமாம், தாராசங்கர்தான்,” அந்நேரத்தில் கேட்ட கனிவான குரலுக்கு தர்மேஷ் பதிலளித்தான். “அவரது வங்க மொழியின் சாரம் மொழிபெயர்ப்பில் எவ்வளவு காணாமல் போயிருக்குமோ தெரியவில்லை.” களைப்பான முகத்தில் மெல்லிய புன்னகையுடன் சொன்னான். இரண்டு விதமான சிப்ஸ் பாக்கெட்டுகளை ஒப்பிட்டுக்கொண்டிருந்த இளைஞனை அவள் அடிக்கடி பார்த்துக்கொண்டிருப்பதை அவன் கவனித்தான்.

“நினைப்பதை விட நிறைய போய்விட்டது,” மூலத்தை வாசித்த அனுபவம் கொண்ட குரலில் மானசா சொன்னாள். “நான் கல்கத்தாவில் வளர்ந்தபோது அவரை வாசித்திருக்கிறேன்.”

“அப்படியா, எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போதுதான் அவரைக் கண்டுபிடித்திருக்கிறேன்.” அவன் சிறிது நிறுத்தி, புன்னகைத்தான். “ஆனால் நள்ளிரவில் ஏதோ ஒரு கேஸ் ஸ்டேஷனில் உட்கார்ந்து வங்க இலக்கியத்தை ஆழமாகப் படிக்கலாம் என்று திட்டமிடவில்லை.”

அவளிடமிருந்து சிறு சிரிப்பொலி வெளிப்பட்டது. “நீண்ட இரவா?”

“அப்படித்தான் சொல்லலாம்.” அவன் தன் போனை நோக்கி தெளிவற்ற சைகை செய்தான். “என் கார் இரண்டரை மணி நேரத்திற்கு முன்பு திடீரென வாழ்வியல் நெருக்கடியில் மாட்டிக்கொண்டது. டோ ட்ரக் ‘இதோ வந்துவிட்டோம்’ என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.” சோர்வு குரலில் தெரிந்தாலும் அதை மறைக்க முயன்றான். “டோ ட்ரக்கை தள்ளிக் கொண்டு சார்லட்டிலிருந்து நடந்தே வருகிறார்கள் போல.” சிறிது நிறுத்தி, சின்ன புன்னகையுடன் சேர்த்தான், “நான் தர்மேஷ்.”

“மானசா,” என்று அவள் அன்பான தலையசைப்புடன் பதிலளித்தாள். “அவன் என் மகன் அர்ஜுன்,” இன்னும் ஸ்நாக் தேர்வில் மூழ்கியிருந்த இளைஞனைச் சுட்டிக்காட்டினாள்.

“நீங்கள் சார்லட் என்றா சொன்னீர்கள்?” அவள் புருவங்கள் சற்றே உயர்ந்தன.

“ஆமாம், என் அப்பா…” என்று ஆரம்பித்த அவன், பின் தன்னைத்தானே நிறுத்திக்கொண்டான். “நாளைக்கு சில மீட்டிங்ஸ் இருக்கு.” அவர்களை நோக்கி நகர்ந்து வந்த அர்ஜுனின் “UPenn Math Team” என்ற டீ-ஷர்ட்டைக் கவனித்தான். “உங்கள் மகன் பென்னில் படிக்கிறாரா?”

“ஆமாம்,” என்றாள் மானஸா, அவள் குரலில் ஏதோ சிக்கலான உணர்வு தொனித்தது. “இந்த செமஸ்டர் பிரேக் எடுத்திருக்கிறான், தொடர்ந்து படிக்க போறான்.”

“நான் வார்ட்டன், அவருக்கு ஒரு விதத்தில் நான் சீனியர், ஒரே கேம்பஸ்தான்” என்றான் தர்மேஷ். அவர்களுடன் உரையாடலைத் தொடர ஒரு காரணம் கிடைத்ததில் மகிழ்ச்சியடைந்தான். “பென் ஒரு தனி இடம்… அதோட மேத் மூளைகள் எங்களை அடக்கி வைச்சிருந்தாங்க என்று சொல்லலாம்.” அவர்களுடன் உரையாட விரும்பும் தன் ஆர்வம் வெளிப்படையாகத் தெரியக்கூடாதென்ற கவனத்துடன் புன்னகைத்தான்.

அவன் போன் மீண்டும் அதிர்ந்தது – டோ கம்பெனியிடமிருந்து மற்றொரு தாமத அறிவிப்பு. அவன் பெருமூச்சு விட்டான், அந்த அழைப்பு அவனது தொழில்முறை முகமூடியை சிறிது உடைத்தது. “இந்த வேகத்தில் போனால், இங்கேயே ஃபுட் கோர்ட்டில் வங்க இலக்கியம் கற்பிக்க ஆரம்பிக்க வேண்டியிருக்கும்.”

தன் காதுகளுக்கே உப்புச்சப்பில்லாமல் ஒலித்தது அந்தக் கேலிப் பேச்சு, அவனது விரக்தி வெளிப்படையாகத் தெரிந்தது. வேறென்ன செய்ய முடியும்? மீண்டும் கையில் கட்டியிருந்த கடிகாரத்தைப் பார்த்தான். மனதில் கணக்குகள் ஓடின.

“மேத் டிபார்ட்மென்ட் எல்லாருக்கும் டெரர்தான்,” என்று மானஸா புன்னகைத்தாள். அவள் பார்வை ரெஸ்ட்ரூம் கதவு பக்கம் தாவியது. ரெஸ்ட்ரூம் வரிசை நீள நீள அவள் நெற்றியில் வியர்வை துளிர்க்க ஆரம்பித்தது. சிப்ஸ் பாக்கெட்டின் விவரங்களை இன்னும் ஆய்வு செய்வது போல் பாவனை செய்தபடி அர்ஜுன் நெருங்கி வருவதை அவள் கவனித்தாள். அவளுக்குக் கொஞ்சம் தனிப்பட்ட நிமிடங்கள் தேவை. அர்ஜுனின் மனதை, அவன் இருளை கண்காணிக்க ஆளில்லாமல் எப்படி விடுவது? இந்த அந்நியனை, இவன் அறியாமலே, அர்ஜுனுக்குக் காவல் பொறுப்பாக மாற்றாமல் எப்படிப் போவது?

“இவன் மேத் செய்யறான். ப்ரொஃபசர்ஸ் ரொம்ப க்ரேட் போட கஞ்சப்படறாங்க” என சொன்னாள் , தர்மேஷின் மேஜையை நோக்கி மெதுவாக நகர்ந்தபடி, ஆனால் அதிகம் ஆசைப்படுவது போல் தெரியாத தூரத்தில் நின்றபடி. “இவனும் உருண்டு பிறண்டு சமாளிக்கின்றான்” அவள் உடல் ரெஸ்ட்ரூம் போக வேண்டும் என்று கதறியது, ஆனால் அவள் தன்னை அமைதியாக, சாதாரணமாகக் காட்ட முயன்றாள்.

“எனக்கு நண்பர்கள் யூபென்னில் இருந்தாங்க. அந்த டைமில் ப்ரொபசர் சென்னை பற்றி சொல்லுவாங்க,” தர்மேஷ் தலையசைத்தான், தன்னை அறியாமலேயே மேஜையில் இடம் உண்டாக்கப் புத்தகத்தையும் போனையும் நகர்த்தியபடி. “உங்க பெங்கால்வாசிதான்.”

“இரண்டாவது செமஸ்டரில் அவர்கிட்ட ஒரு கோர்ஸ் எடுத்தேன்,” அர்ஜுன் முணுமுணுத்தான், ஆனால் சிப்ஸ் பாக்கெட்டுடன் ஆடிக்கொண்டிருந்த அவன் விரல்கள் நின்றன. “அவர் கடினமானவர்தான், ஆனால் எனக்கு அவரைப் பிடிக்கும்.”

“அப்படியா?” தர்மேஷின் புருவங்கள் உயர்ந்தன. “நான் அவரோட இன்ட்ரடக்டரி ஸ்டாட்ஸ் எடுத்தப்போ கஷ்டப்பட்டு பாஸ் பண்ணினேன். சர்ப்ரைஸ் க்விஸ்.” அவன் தன்னையறியாமலேயே அர்ஜுனுக்காக தன் பக்கத்து நாற்காலியை சற்றே வெளியே இழுத்தான்.

மானசா அந்தத் தருணத்தைப் பயன்படுத்திக் கொண்டாள். காலி நாற்காலிகளைப் பார்த்தபடி தன் களைப்பை சற்றே வெளிக்காட்டினாள். “உங்க டேபிளில் உட்காரலாமா?  டிராஃபிக்கில் கால்கள் மரத்துப் போய்விட்டது.” அவள் குரலை இலேசாக வைத்திருந்தாள். 

“தாராளமாக உட்காருங்கள்,” தர்மேஷ் நாற்காலிகளைச் சுட்டிக்காட்டினான், அவனது குரலில் சற்றே ஒரு ஆறுதல் வந்தது தெரிந்தது. “இந்த டோ ட்ரக்குக்காக காத்திருக்கும்போது கொஞ்சம் கம்பெனி கிடைக்கும்.”

அர்ஜுன் ஒரு கணம் தயங்கினான், பிறகு திறக்காத சிப்ஸ் பாக்கெட்டை இறுக்கமாகப் பிடித்தபடியே தர்மேஷுக்கு எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்தான். மானசா மகனருகே அமர்ந்தாள், பென் பல்கலைக்கழகம் கொடுத்த பொதுவான அனுபவத்தால் தர்மேஷின் ஈர்ப்பு வட்டத்திற்குள் சற்றே முன்னோக்கிச் சாய்ந்திருந்த மகனைப் பார்த்து நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.

“ஒரு விஷயம் சொல்கிறேன்,” தர்மேஷ் இப்போது தன் புத்தகத்தை முழுவதுமாக மூடியபடி சொன்னான், “சென் கூட அவ்வளவு மோசமில்லை. ப்ரொபசர் குமாரின் ஃபைனான்ஷியல் மாடலிங் கிளாஸ் எங்கள் காலத்தில் கொடூரமானது. கதற வைத்திருக்கிறார்.”

அர்ஜுனின் தோள்கள் படிப்படியாகத் தளர்வதைக் கண்ட மானசா தன் வாய்ப்பைப் பார்த்தாள். “நான் ஒரு…” அவள் இப்போது ஏழு பேர் நின்றிருந்த ரெஸ்ட்ரூம் வரிசையை மழுப்பலாகச் சுட்டிக்காட்டினாள். மெதுவாக எழுந்தாள், ஒவ்வொரு அசைவும் கவனமாகக் கணக்கிடப்பட்டது. “காபி ஆறிடுச்சு, கொஞ்சம் இரு. புதுசு போடச் சொல்லறேன், அப்புறம் எடுத்துக்கலாம்,” என அர்ஜுனிடம் கூறினாள். அந்த சாதாரணமான கோரிக்கை ‘எழுந்து போய்விடாதே’ என்ற பாதுகாப்பின் எச்சரிக்கையைச் சுமந்திருந்தது.

மேலே ஃப்ளோரசென்ட் விளக்குகள் ரீங்காரமிட்டன. அர்ஜுன் வெறுமனே தலையசைத்தான், அவன் முகத்தில் கல்லூரி வாழ்க்கை பற்றிய கதைகளைக் கேட்கும் ஆர்வம் தெரிந்தது. அவள் மேஜையில் இருந்து மெதுவாக நகர்ந்தாள்.

ரெஸ்ட்ரூம் வரிசையில் நின்றபடி, அவர்களை மானசா கவனித்துக் கொண்டிருந்தாள், அவள் விரல்கள் கைப்பையின் வார்ப்பட்டையை பதற்றத்துடன் உருவின. ஃப்ளோரசென்ட் விளக்குகளின் ஒளி எல்லாவற்றையும் கூர்மையாக வெளிப்படுத்தியது – அர்ஜுனின் கூனிய தோள்கள், தர்மேஷின் கவனமான அமர்வு நிலை, நள்ளிரவின் வெறுமையில் அவர்களுக்கிடையே மெல்லக் கரைந்துகொண்டிருந்த இடைவெளி.

*****

தர்மேஷின் செல்பேசி அதிர்ந்தது, அவர்களின் உரையாடலைத் துண்டித்தது. அவன் அழைப்பை எடுப்பதையும், அவன் முகம் வெளிப்படையான விரக்தியால் இறுகுவதையும் அவள் கவனித்தாள். அதற்குள் வரிசை முன்னோக்கி நகர்ந்து, அவள் பார்வையைத் தடுக்கும் கான்கிரீட் தூணுக்குப் பின்னால் அவளைக் கொண்டு சென்றது.

மேஜையில், தர்மேஷ் தனது செல்பேசி அழைப்பை முடித்ததும் முகம் கசந்திருந்தான். “டோ ட்ரக்குக்கு இருபது நிமிடங்கள். மறுபடியும்.” அவன் சிரிப்பில் கசப்பு தெரிந்தது. “இன்சூரன்ஸ் கம்பெனிகள் – காத்திருக்க வைப்பதை ஒரு கலை வடிவமாக உயர்த்தியிருக்கிறார்கள்.”

“எனக்குத் தெரியும்,” என்றான் அர்ஜுன், திறக்காத சிப்ஸ் பாக்கெட்டுடன் யோசனையற்று விளையாடியபடி. “யுபென்னில் ஹெல்த் இன்சூரன்ஸுடன் டீல் பண்ணறது கொடுங்கனவு…” அவன் நிறுத்தினான். சொல்லக் கூடாததை ஏன் சொல்லி விட்டோம் என்பது போல  ஆச்சரியமும் வருத்தமும் அவன் முகத்தில் தெரிந்தது.

தர்மேஷ் தன் போனைப் பார்த்தான், சில நிமிடங்களுக்கு முன் சந்தித்த இளைஞனிடம் தனிப்பட்ட விஷயங்களைப் பேசுவதைத் தவிர்க்க விரும்புவது தெளிவாகத் தெரிந்தது. ஆனால் அந்த இளைஞனின் குரலில் ஏதோ ஒன்று – ஒருவேளை அதன் தடுமாறும் பதற்றம் அவனுக்குப் பரிச்சயமானதோ – அவனை மேலே பார்க்க வைத்தது. “இப்ப எல்லாம் ஓகேவா?”

அந்தக் கேள்வி அவர்களுக்கிடையே தொங்கியது, எளிமையானது ஆனால் பாரமானது. அர்ஜுனின் விரல்கள் சிப்ஸ் பாக்கெட்டை இறுக்கமாகப் பிடித்தன. “நான்…” அவன் எச்சிலைப் பெரு முயற்சியுடன் விழுங்கினான், கண்கள் கலங்கின, உதடுகள் இறுகின.

“உண்மையில் இன்சூரன்ஸ் பிரச்சனை இல்லை. அது… என்னால் க்ளாஸில் கவனம் வைக்கவே முடியவில்லை. கவனம் இருந்துக்கிட்டே இருக்கும். டக்குனு உடைஞ்சிடும். கிளாஸில் என் பேனிக் அட்டாக்ஸ் கூட நான் சண்டை போடனும்.” அவன் குரல் தாழ்ந்தது. “யாருடைய போன் அதிர்ந்தாலும், நான்… நான் பேனிக் அட்டாக்குக்குப் போய்விடுவேன். இது ஆரம்பிச்சது என் ஹை ஸ்கூல் சீனியர் இயர் முடியறப்பதான். ஒரு சின்ன நோட்டிஃபிகேஷன்தான், அவ்வளவுதான் தேவைப்பட்டது. இந்த பேனிக் அட்டாக்ஸ் அதுக்கப்புறந்தான்”

“ஒரு கேம். வாரண்டனில் கேம், முடிஞ்சதும் கிளம்பினோம். நான் ட்ரைவ் பண்ணினேன். அப்பா பக்கத்து சீட்டில் தூங்கிட்டுருந்தார், கேம் முடிஞ்சதும் அம்மாவுக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் செய்ய நைட் ட்ரைவ்… ஒரு மெசேஜ் பார்க்க ரோட்டிலேருந்து கண்ணை எடுத்தேன், கை செல்போனைத் தேடிச்சு, அவ்வளவுதான், …”  இறுகிய உதடுகளோடு சொன்னான்.

தர்மேஷ் தன் செல்பேசியை கவிழ்த்து வைத்தான், அவன் கண்களில் புரிதல் தெரிந்தது. “அது ஒரு விபத்து,” என்று மெதுவாகச் சொன்னான்.

அர்ஜுன் தலையசைத்தான், அவனது கட்டுப்பாடு உடைந்தது. “இரண்டு வினாடிகள். அந்த முட்டாள்தனமான திரையைப் பார்த்த வெறும் இரண்டு வினாடிகள்தான்…” அவன் மூச்சு இறுகியது. “இன்சூரன்ஸ் எல்லாவற்றையும் கவர் செஞ்சுச்சு ஆனால் அவர்களால்… அவர்களால் அப்பாவைத் திரும்பக் கொண்டுவர முடியலை. நான் செஞ்சதை சரி செய்ய முடியலை…” அவன் கண்களின் ஓரங்களில் கண்ணீர் கசிந்தது.

தர்மேஷ் முன்னோக்கிச் சாய்ந்தான், அவனது தனிப்பட்ட விஷயங்களில் தலையிடக்கூடாது என்ற எல்லை சரிந்தது. “சொல்லறதை கேளு,” என்றான், அவன் குரல் கனிவாக ஆனால் உறுதியாக இருந்தது. “டிஜிட்டல் உலகத்துல டிஸ்ட்ராக்சன்ஸ்  நமக்கு எது முக்கியமோ அதை தொந்தரவு செஞ்சு ஒன்னுமே இல்லாம கூட செஞ்சிடும்.” அவன் சற்று நிறுத்தினான், அவனது சொந்தத் தவறுகளின் நினைவுகள் மேலெழுந்தன – மனைவி நடனம் பயின்றபோது சமூக ஊடகங்களில் முடிவில்லாமல் செலவிட்ட மணிநேரங்கள், அவர்களின் திருமணத்தை நொறுக்கிய ரகசியச் செய்திகள். ” கவனத்தைத் திருடவே இந்த டிஜிட்டல் உலகம் டிசைனாகி இருக்கு. ஒவ்வொரு அறிவிப்பும் அவசரம், ஒவ்வொரு செய்தியும் காத்திருக்க முடியாதது என நம்ப சொல்லுது. இதுல போய் குற்ற உணர்வை மட்டும் சுமந்து…” அவன் தலையசைத்தான். “அது நாம காயப்படுத்தின மனுஷனங்களுக்கு காட்டற மரியாதை இல்லை.”

“உங்களுக்கு எப்படி….?” அர்ஜுன் மெதுவாகக் கேட்டான், ஆனால் அவனுடைய கைகள் நடுங்குவது நின்றிருந்தது.

“எப்படினு, நான் நான்கு வருஷமா இதை புரிஞ்சுக்கதான் கஷ்டப்பட்டிருக்கேன், வெர்ச்சுவல் உலகம் சொன்னதை நம்பி , உண்மையா இருந்த எல்லாத்தையும் அழிச்சிட்டேன்,” தர்மேஷ் குரலைத் தாழ்த்திச் சொன்னான். “அது ப்ளான் செய்யாம ஆரம்பிச்ச ஒரு விஷயம் – ஒரு ப்ரெண்ட் ரிக்வெஸ்ட், என் பைனான்ஸ் வலைப்பதிவுகளைப் பின்தொடர்ந்த ஒரு கணக்கு. அந்த அக்கவுண்ட் லாஸ் ஏஞ்சல்ஸில், நான் நியூயார்க்கில். நாங்கள் மார்க்கெட் பத்திப் பேசுவோம், கட்டுரைகளை ஷேர் செஞ்சுப்போம், பின்னாடி…” அவன் காபி கோப்பையை மெதுவாகச் சுழற்றினான். “பின்னாடி அது அதிகமாச்சு நள்ளிரவு அரட்டைகள், ப்ரைவேட் மெசேஜஸ், இதமான பேச்சுக்கள், இந்த… கற்பனை புரிதல் என்னை மூச்சே விடாம முக்கிடுச்சு. என் மனைவி – இப்ப முன்னாள் மனைவி – அவர் பரதநாட்டியம் பயிற்சி செய்து கொண்டிருப்பார், அழகான, உண்மையான ஏதோ ஒன்றை உருவாக்கிக் கொண்டிருப்பார், நானோ என் திரையில் மூழ்கி, நான் சந்தித்தே இல்லாத ஒருவர் மீது காதல் கொண்டிருந்தேன்.”

அர்ஜுன்  “நீங்க சொல்றது புரியுது.….காம்ப்ளக்ஸ் சிச்சுவேஷன்…  “ ஒரு பட்டாம்பூச்சியை பிடிக்கும் விரல்களின் கவனத்துடன் அவன் குரல் ஒலித்தது. 

தர்மேஷ் விரல்கள் கோப்பையை இறுக்கமாகப் பற்றின. “என் உண்மை வாழ்க்கை கூப்பிட்டப்ப, நான் அந்த வெர்ச்சுவல் உறவைக் காட்டி ஓடி ஒளிஞ்சேன். என் மனைவி ஈசியா எடுத்துக்கல. படாத பாடு பட்டார். திருமண ஆலோசனைக்கு ஏற்பாடு செய்தார், என் குடும்பத்தினர் தலையிட்டனர் – வாரக்கணக்கில் உதவ முயன்றனர்.” அவன் தன் காபியில் வேறெதையோ பார்ப்பது போல உற்று நோக்கினான் .”நெருங்கினவங்க என்  டைவர்ஸைப் பற்றிப் பேசும்போது, என் திருமணம் இறந்துவிட்டது அப்படினு சொல்லி கவலைப்படுவாங்க. ஆனால் அது சரியில்லை. நான் அதைக் கொன்னுட்டேன். என் மனைவி என் மீது கொண்டிருந்த அன்பைக் கொன்னேன், ஒரு கணவனை கொன்னேன். ஒவ்வொரு மரணமும் என் கையால்தான். “

அர்ஜுன் தன் கை மணிக்கட்டால் கண்களைத் துடைத்தான். “….. ஒரு பெரிய  நம்பிக்கையை உடைச்சிட்டீங்க… மனசாட்சி ஒரு காட்டு விலங்கு.  தப்பை தூக்கிக் கொண்டு அலையும். இரவு பகலா துரத்தும்….எனக்கு தெரியும்…நான் …” ..அவன் விரல்கள் அவன் நெஞ்சை தொட்டுக் கொண்டன. எதையோ விரல்களால் ஆறுதல் படுத்த முயன்றான்.

“அதுதான் சிக்கலே,” தர்மேஷ் சொன்னான், அவன் குரல் வேறொரு தன்மையை எடுத்தது, ஆழத்திலிருந்து பேசுவது போல. “குற்ற உணர்வு இந்த இடத்தில்… இங்கு வசதியான சிறையா இருக்கு. அதை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டிருந்தால், நாம் செய்ததற்கு ஈடாகிவிடும் என்று நினைக்கிறோம்.” அவன் நிறுத்தினான்.

“தப்பு செய்தால் குற்ற உணர்வுதானே வரும். மனசாட்சி விடாதுல…” அர்ஜுன் குரலில் ஒரு சின்ன எரிச்சல் இருந்தது.

அர்ஜுனின் கேள்வியோடு கூடிய பார்வையைக் கண்டு, அவன் தொடர்ந்தான், “யோசிச்சு பாரு. நாம நம் வலியையே திரும்பத் திரும்பப் பார்த்துக்கொண்டு சிக்கிக் கொண்டிருக்கும்போது, நம்ம மேல ப்ரியமா இருக்கறவங்க தங்கள் வாழ்க்கையை நம் குற்ற உணர்வைச் சுற்றி கட்டமைக்க வேண்டியிருக்கிறது. அவர்கள் மகிழ்ச்சியைத் தேட, புதிதாக ஏதாவது உருவாக்க வெளியேற முயற்சிக்கும் ஒவ்வொரு முறையும்… நாம நமக்காக உருவாக்கிக் கொண்ட சிறையைச் சுற்றி வழி தேட வேண்டியிருக்கிறது. இது…” அவன் வார்த்தைகளைத் தேடினான், “நாம செய்த தவறுகளை அவர்களும் வேறொரு விதத்தில் மீண்டும் வாழ வைப்பது போல.”

“ஆனால் எப்படி… நிறுத்துவது?” அர்ஜுனின் குரல் சற்றே உடைந்தது.

“குற்ற உணர்வு மட்டும் விடுதலை அல்ல என அறிவதன் மூலம். நாம என்ன கெடுதி செஞ்சோமோ அதுக்கு பிரயாசித்தம் செய்யனும், தப்பை அக்சப்ட் செய்து நகரனும். குற்ற உணர்வு அதுக்கு கூட்டிப் போகையில் பிரச்சனை இல்லை, மாறாக குற்ற உணர்வின் ஆழத்தில் மூழ்கி போனால்…… அது யாருக்கும் உதவவில்லை…” தர்மேஷ் தயங்கினான், பிறகு தொடர்ந்தான், “எதிர்காலம் நம்மைப் பற்றி மட்டும் அல்ல,” 

“அப்புறம்…வேற எப்படி?” வீட்டு வாசலில் நிற்கையில் பூட்டுக்கு சாவி இல்லையென தெரிந்தால் வரும் மனநிலை அர்ஜுனின் குரலில் இருந்தது.

அவன் மானசா வரிசையில் நின்றிருந்த பகுதியை நோக்கி கை காட்டியபடி பேசினான். “அது நம்மை நம்பியிருப்பவர்களைப் பத்தி மட்டுமா, நாம் நம்பியிருப்பவர்களைப் பத்தியும் கூட. நாம் குணமடைவதற்குப் பதிலாக ஆழமான குற்ற உணர்வை ஒரு பேயாக்கி நம் மீது ஏற்றிக் கொள்கின்றோம். நாம் பேய் வேடம் போடும் ஒவ்வொரு முறையும், அவர்களின் நிகழ்காலத்திற்குப் பதிலாக கடந்த காலத்தை அவர்களிடம் காட்டறோம்.”

தர்மேஷ்  குரலைத் தாழ்த்தினான். “நான் செஞ்சதை டைம்ல திரும்பப் போய் மாத்த முடியாது.நம்ம டைம் ட்ராவலரா என்ன, இது என்ன பேன்டஸி சயின்ஸ் பிக்சனா, இது ரியாலிட்டி. இப்ப, இன்னைக்கு, இந்த மொமெண்ட் மட்டுமே நமக்கு சாத்தியம். நானும்  இப்ப வரைக்கும் ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கேன்” அவன் கண்கள் அர்ஜுனின் கண்களைச் சந்தித்தன. “ஆனால் இது என்னோட கதை…”

“எப்படி சமாளிச்சிங்க…”  அர்ஜுன் கிட்டதட்ட குழந்தைகளுக்கு உள்ள க்ரியஸுடன் கேட்டான். 

“என்னத்த சமாளிச்சேன்….நான் என் அப்பாவ காயம் பண்ணேன். டைவோர்ஸுக்கு அப்புறம் அவரு என்கிட்ட நெருங்க ட்ரை பண்ண ஒவ்வொரு நேரமும், என் குற்ற உணர்வு எல்லாத்தையும் பாய்சன் பண்ணிடுச்சு. அவரு ஓவ்வொரு நல்ல நாளுக்கும் வீட்டுக்கு வர சொல்வாரு, நார்மல் ரிலேஷன்ஷிப் இருக்க உயிரை கொடுப்பாரு. ஆனா நான்… அங்க யாராவது என்னை குத்திக் காட்டுவாங்களோ, தப்பு பண்ணினவன் என லேபிள் பண்ணுவாங்களோன்னு ஒரு கத்திமுனையில் இருப்பேன். என் குடும்பத்தையே அந்த கத்திமுனையில் நடக்க வெச்சேன். “அவன் இடைவெளி விட்டு, மனதை அழுத்தும் நினைவுகளை விழுங்கி அடக்கினான்.

அவன் விரல்கள் புத்தகத்தின் மீது அசையாமல் நின்றன. 

“ஒரு விஷயம் நான் கத்துக்கிட்டேன்,.. யாராவது என் கடந்த காலம் வச்சு என்ன கிண்டலோ, இன்சல்ட்டோ பண்ண வந்தாலும் – அப்படி இன்னைக்கும் ஆளுங்க இருக்காங்க – அது எனக்கு கணக்கில்லை. நான் தப்பு பண்ணினேன், ஆனா நகர்ந்து வந்திட்டேன்.  என் தப்புகள், என் சரிகள் எல்லாமே  என் வாழ்க்கையில் ஒரு கடந்து வந்த இடம், போக இன்னமும் நிறைய இருக்கு.” அவன் குரலில்  உறுதி நுழைந்திருந்தது. “கத்திமுனை மைண்ட் செட் பெரிய தொந்தரவு. என் கத்தியின் ஷார்ப்னெஸுக்கு ஒரு கவசமாக இருந்தவங்களும், என் ஷார்ப்னெஸ் வைச்சு என்னையே கிழிச்சவங்களும் இல்லாம ஆக்கனும். நான் எனக்கு இம்பார்டண்ட் இல்லையா?”

“ஆனால் இப்ப வலி.. இல்லையா?” இரவு நேர மலைப்பாதையில் முதன்முதலாக வளைவை எட்டிப்பார்க்கும் கார் ட்ரைவர் போல அர்ஜுனின் குரல் இருந்தது. முன்னே என்ன இருக்கும் என்ற குழப்பம் இருந்தாலும், செல்ல வேண்டும் என்ற கட்டாயம் தெரிந்தது.

“தெரியல. ஆனா அதோட உருவம் மாறனும். முதல்ல அது இன்ஸ்டிங். – தப்பு பண்ணிட்டோமேன்னு ஒரு நினைப்பும், ஈகோவோட ஒரு பார்ட்டும் கலந்து, வலி ஷார்ப்பா இருக்கும். இப்போ மாத்தனும்… அது ஜஸ்ட் ஒரு மெமரி. என்னோடதுதான், ஆனா தூரம் இருக்கு. மேனேஜ் பண்ண முடியற அளவுக்கு. சில நேரம் நானே என் கடந்த காலத்த கிண்டலாக கூட பார்க்க ஒரு முயற்சி”  சொல்லி கண்ணை மூடி வேறு எங்கோ ஒரு இடத்துக்கு, ஏதோ ஒரு கணத்துக்கு போக முயன்றவன் போல இருந்தான்.

இதையெல்லாம் ஏன் சொல்கின்றோம் என தர்மேஷுக்கே விந்தையாக இருந்தது. சொல்வதெல்லாம் உண்மையா, இல்லை அர்ஜுனின் ஆறுதலுக்கு பேசுகின்றோமோ என குழப்பமாகவும் இருந்தது. யாரோ ஒரு அன்னியனிடம் இரக்கம் இருந்தாலும் இவ்வளவு பேசலாமா என கேள்வியும் வந்தது. அர்ஜுனின் கண்ணைப் பார்க்காமல் வெளியே பார்க்கலானான். தடுமாற்றமாக உணர்ந்தான். 

 அர்ஜுன் தர்மேஷின் மாற்றங்களை கவனித்தான். “உங்களுக்கு பென்ஸ் கார்  ரொம்ப பிடிக்குமா, நான் பி.எம்.டபில்யூ விசிறி…..ஆனா அம்மா லெக்சஸ் விசிறி.” வேறு ஏதோ கேட்க ஆரம்பித்தான். அவனுக்கு தர்மேஷை மீண்டும் இங்கு கூட்டி வர வேண்டுமென  இருந்தது. 

*****

மானசா ரெஸ்ட்ரூமில் இருந்து வெளியே வந்து தூரத்திலிருந்து அவர்கள் இருவரும் அமர்ந்திருந்த மேஜையைப் பார்த்தாள். ஏதோ வித்தியாசம் இருந்தது. அதை அவள் அகம் உணர்ந்தது, ஆனால் என்னவென கணிக்க முடியவில்லை. அவள் சற்று நின்றாள். தர்மேஷ் அவ்வப்போது அமைதியாக இருந்த தன் போனைப் பார்த்துக் கொண்டான். நீண்ட நாட்களாக இறுக்கமாய் இருந்த தோள்கள் இப்போது இயல்பாக அர்ஜுன் அமர்ந்திருந்தான், சிப்ஸ் சாப்பிட்டுக்கொண்டு தர்மேஷ் சொல்வதற்குத் தலையசைத்துக் கொண்டிருந்தான். அர்ஜுனின் விரல்கள் எதிலோ பொறுமையில்லாமல் அலைவது கரைந்திருந்தது, அதன் இடத்தில் ஏதோ அமைதியான, கிட்டத்தட்ட நிதானமான ஒன்று வந்திருந்தது.

காபி ஸ்டேஷனுக்கு அருகில் அவள் தாமதித்தாள், தன் போனை எடுத்தாள். 

அவள் சித்தி மகள் இரண்டாவது ரிங்கில் எடுத்தாள். “மானசாவா? நீ நல்லா இருக்கியா? இவ்வளவு நேரம்… அர்ஜுன் ‘ரோனக். ட்ராபிக். தாமதம் ஆகிறது’ எனச் செய்தி அனுப்பி இருந்தான்… என்னாச்சு?”

“நாங்க நல்லா இருக்கோம், பிரியா. கொஞ்சம் தாமதம்தான்.” அவள் குரலைத் தாழ்த்தி, மேஜையைப் பார்த்தபடி பேசக்கூடிய இடத்தில் நின்றுகொண்டாள். “கேளு, சம ட்ராபிக், ரொனோக்கில் விபத்து. அர்ஜுன் பழைய மாதிரி… எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை… கல்யாணத்துக்கே வருவேனா என ஒரே குழப்பம்…அதான் ஒரு ப்ரேக்… இப்ப கொஞ்சம் அமைதியாக இருக்கான்…” அவள் மேஜையைப் பார்த்தாள். “நாங்கள் இங்கு ஒரு எக்ஸிட்டில் இருக்கிறோம், இங்கே யாரோ முன்னே பின்னே தெரியாத மனிதர் இருக்கார். அவர் காரில் ‘SHANTH7’ என்ற வேனிட்டி பிளேட். நான்… நான் ரெஸ்ட்ரூம் போனப்ப கூட அர்ஜுனை அவர் பார்வையில்தான் விட்டு வந்தேன்… பெரிய கதை… அப்புறம் சொல்கிறேன்.”

“இரு,” பிரியா குறுக்கிட்டாள். “SHANTH7? அது டாக்டர் படேலின் கார். அவங்க பையன் தர்மேஷ்…” அவள் குரல் அந்தப் பெயரில் சற்றே தடுமாறியது. “அவன் நியூயார்க்கில் இருந்தான்…”

“உனக்கு அவரைத் தெரியுமா?”

கசப்பான சிரிப்பொலி. “அப்படிச் சொல்லலாம். ஹை ஸ்கூகில் நான் டேட் செஞ்ச பையன்.  சொல்லியிருகேனே ஞாபகம் இருக்கா? அந்த…” அவள் இடைவெளி விட்டாள். “ஆறு மாதங்கள் என்னிடம்  காதல் பேசிவிட்டு, டிபேட் கிளப்பில் இருந்த ஜெசிகா போதும் என போயிட்டான்?”

மானசாவின் மூச்சு தடைப்பட்டது, சின்ன வயதில் வெக்கேஷனுக்கு டெல்லிக்கு வந்த பிரியா அவளது வீட்டு சோபாவில் அழுதது, ஐஸ்கிரீம் டப்பாக்கள், கிழித்த புகைப்படங்கள் என நினைவுகள் மேலெழுந்தன. “அவனா அது?”

“ஏய் பறக்காதே, பொறுமையா பேசு,” மானசா குறுக்கிட்டாள், அர்ஜுன் மேலும் ஒரு கையளவு சிப்ஸ் எடுப்பதைப் பார்த்தபடி. “அவன் அவங்க அப்பாவை பார்க்க போறான் போல? சார்லட் செல்லும் வழியில் இங்க சிக்கிக் கொண்டிருக்கான்?”

“ஆமாம், அவங்க அப்பாவுக்கு ஸ்டேஜ் போர் கேன்சர். அவன் சிஸ்டர் சாந்திதான் எங்க க்ளினிக் இருக்க பில்டிங் ஓனர். தெரிஞ்சவங்க. மானசா, நான் சொன்னதைக் கேள். அவனை – எனக்கு நல்லாத் தெரியும். அவனிடம் எப்பவும் இந்த… கேரக்டர் இருக்குது, உன்னை ஸ்பெஷலாக உணர வைப்பான். பிறகு வேறு யாராவது இண்டரஸ்டிங்காக கண்டுபிடித்ததும் -“

“நிறுத்து பிரியா, நான் என்ன காதலிக்கப் போகிறேனா? நான் அவனுக்கு லிஃப்ட் கொடுக்கலாம் என யோசிக்கிறேன்,” மானசா பிரியாவின் பதற்றம் கண்டு மெல்லச் சொன்னாள்.

“”உனக்கு பைத்தியமா?” பிரியாவின் குரலில் வந்த  வெடிப்பு மானசாவை போனை காதில் இருந்து விலக்க வைத்தது. “மிட்நைட் ஆகுதுப்பா?   ஐயோ கடவுளே, தர்மேஷ் நம்பிக்கையான ஆள் இல்லை. அவன் எப்படி நடந்துகொள்வான் என கெஸ் பண்ண முடியாது. ஏதோ வெர்ச்சுவல் கற்பனையைத் துரத்தித் தன் திருமணத்தையே அழிச்சிட்டான். அவங்க பேமிலி சர்கிளில் அது பெரிய நியுஸ். நீ உண்மையிலேயே அப்படி ஒரு ஆளுடன் காரில் …. யோசனை செஞ்சுக்கோ?”

“அர்ஜுன் தர்மேஷ் கிட்டப் பேசிக் கொண்டிருப்பதை நீ பார்க்கணும்,” மானசா சொன்னாள், நீண்ட நாள் கழித்து அமைதியான மனநிலையில் அமர்ந்திருந்த தன் மகனைப் பார்த்தபடி. “நான் போயிருந்தபோது ஏதோ உரையாடல்… இப்ப ரொம்ப ஓய்வா இருக்கான்.”

“நிச்சயமாக ஏதோ நடந்திருக்கும்! தர்மேஷ் எப்போதுமே உரையாடல்களில் கெட்டிக்காரன். அது ஆனா வெறும் ஏமாற்றுவேலை.” திருமண ஏற்பாடுகளின் சத்தம் பின்னணியில் கேட்க, பிரியா ஒரு பெருமூச்சு விட்டாள். “பார், நான் கசப்பா பேசற மாதிரி தெரியுதா? ஒருவேளை அப்படித்தான் இருக்கலாம். ஆனா இது வெறும் ஹைஸ்கூல் டிராமா இல்லை. அவனோட பேட்டர்னே இப்படித்தான், மானசா. ஜெசிகாவிலிருந்து அவன் முன்னாள் மனைவி வரை, கலிபோர்னியாவில் இருந்த அந்தப் பொண்ணு வரை… உறவ உருவாக்கிட்டு அப்புறம் தூக்கி எறிஞ்சிருவான். இனி உன் இஷ்டம்…”

உணவு விடுதியின் வெளிச்சத்தில், தர்மேஷ் சொன்னதற்கு அர்ஜுன் யோசனையுடன் தலையசைப்பதை மானசா பார்த்துக் கொண்டிருந்தாள். இருவரும் அவளால் புரிந்துகொள்ள முடியாத ஒரு தனி உலகத்தில் இருப்பது போல் தோன்றியது. பிரியாவின் பள்ளிக்காலக் காயம் இருபத்தைந்து ஆண்டுகள் கழித்தும் இந்த அசாதாரண இரவில் மீண்டும் போனில் துடித்து முடித்திருந்தது.

“நான் அப்புறம் கூப்பிடறேன்,” அவள் மனம் வேகமாகச் சிந்தித்தபடி இருக்க மானசா சொன்னாள்,.

“மானசா, ப்ளீஸ். ஒண்ணு மட்டும் ஞாபகம் வச்சுக்கோ – பதினாறு வயசிலேயே அவன் இப்படித்தான் வசியம் செய்து கொண்டு இருந்தான்.”

“கவனமா இருப்பேன்,” அவள் குறுக்கிட்டாள். “என்ன பண்றோம்னு முடிவு பண்ணிட்டு நான் கூப்பிடறேன்.” அவள் போனை வைத்துவிட்டாள். ப்ரியாவின் எச்சரிக்கைகள் – தனிப்பட்ட காயங்களால், இந்த இரவின் கவலையாலும் நிறம் தீட்டப்பட்டவை – அது அவளது தாய்மை உணர்வுகளுடன் மோதிக் கொண்டன. 

உணவு மேஜைக்குத் திரும்பி நடந்து செல்லும்போது மானசா அவனுக்கு லிப்ட் கொடுக்க மறுப்பதை மனதுக்குள் ஒத்திகை பார்த்தாள். ஒவ்வொரு அடியிலும் புதிய வடிவங்களைச் சேர்த்தாள். ‘மன்னிக்கணும், ஆனா கார் ஏற்கனவே நிறைஞ்சிருக்கு…’ ‘நாங்க இப்பவே கிளம்பணும்…’ ‘வேற சூழ்நிலையா இருந்திருந்தா ஒருவேளை…’ ப்ரியாவின் வார்த்தைகள் ஒவ்வொரு அடியிலும் அவள் ஷு ஓலியோடு கூட ஒலித்தது: பதினாறு வயதில் வசிகரமாக இருந்தான், இப்போதும் அப்படியே. தன் பாவனையான ஒத்திகைகளை நினைத்து அவளுக்கே அந்தச் சூழலிலும் சிரிப்பு வந்தது.

அர்ஜுன் அவள் கையில் காபி இல்லாததைப் பார்த்தான். “காபி இல்லை கண்ணா. இப்போதைக்கு புதுசா போட மாட்டாங்க. கவுண்ட்டர்ல ஆளு பிஸியா இருக்காரு. கொஞ்சம் தண்ணி வாங்கிட்டு வா” என்று மெதுவாகச் சொன்னாள். அர்ஜுன் தண்ணீர் பாட்டில்கள் வாங்க எழுந்து போக, அவள் தர்மேஷுடன் தனியாக விடப்பட்டாள். களைத்த கண்களுடன் அவன் அவளைப் பார்த்தான்.

“நான் நன்றி சொல்லணும்,” என்றான், பிறகு தன்னைத்தானே சரிப்படுத்திக்கொண்டான். “உங்க மகனை பழைய காலேஜ் கதைகள்ல போர் அடிச்சிட்டேன்.” அவனது விரல்கள் பதற்றமாகக் காலியான காபி கோப்பையைத் தட்டின. “நாளைக்கு காலை சார்லட்ல ஒரு ஹாஸ்பிட்டல் அப்பாயின்ட்மென்ட் இருக்கு. என் அப்பா…” அவன் பேச்சை நிறுத்தினான், கோரிக்கையை வெளிப்படையாகச் சொல்லவில்லை, ஆனால் அது அவன் நெஞ்சை அழுத்தும் கனத்த தயக்கத்தினைத் தாண்டி சின்னதாக எட்டிப் பார்த்தது.

“மன்னிச்சுக்கோங்க,”  ஏற்கனவே ஒத்திகை பார்த்த சாக்குகள் மானசாவின் உதடுகளுக்கு வந்தன. “கார் முழுக்க லக்கேஜ். டிரங்க், பின்னால் சீட்…” பொய் அவள் நாவில் கனமாக இருந்தது. “இல்லன்னா…”

“சரி, சரி.” தர்மேஷ் வேகமாகத் தலையசைத்தான், அவன் முகத்தில் ஒரு சங்கடம் படர. ” நோ ப்ராப்ளம் டோ ட்ரக் இப்ப வந்துடும். நீங்க கிளம்புங்க, என்னால தாமதம் வேண்டாம்.”

அர்ஜுன் தண்ணீர் பாட்டிலுடன் திரும்பி வந்தான், அவர்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்தான். “கிளம்பலாமா, அம்மா?”

I-81 நெடுஞ்சாலைக்குத் திரும்பும் பயணம் முதலில் அமைதியாக இருந்தது, தெரு விளக்குகள் அவர்கள் முகங்களில் இடைவிட்டு நிழல்களை வீசின.

அர்ஜுன் பேசினான், பல மாதங்களாக இல்லாத தெளிவு அவன் குரலில் இருந்தது. “ஏன் நாம அவருக்கு லிப்ட் கொடுக்கலை?”

“காத்திருக்க வேண்டாமென்று சொன்னாரு,” மானசா ஸ்டியரிங்கை இறுக்கமாகப் பிடித்தபடி பதிலளித்தாள். “டோ ட்ரக் வர—”

நெடுஞ்சாலைக்கு முன்னால் சிக்னலில் காரை நிறுத்தினாள், கைகள் ஸ்டியரிங்கை இறுக்கமாகப் பற்றியிருந்தன. சிவப்பு விளக்கு அவர்களை நிறுத்தியது. ரியர் வ்யூ மிரரில், டோ ட்ரக்கின் ஆம்பர் விளக்குகள் கேஸ் ஸ்டேஷன் பார்க்கிங் லாட்டில் திரும்பிக்கொண்டிருந்தன. 

“அம்மா, அவருக்கு குற்ற உணர்வின் ஆழம் புரியுதுமா, சிலது என்கிட்ட சொன்னார், ஏன் சொன்னாருனு தெரியல” என்று அர்ஜுன் மென்மையாகச் சொன்னான். “அவ்வளவு ஆழத்தில் கையில எது கிடைச்சாலும் காயம் பண்ணிடறோம். எது கையில கிடைக்குதோ……” அவன் பேச்சில் ஒரு கணம் இடைவெளி விழுந்தது. “எனக்கு கிடைச்சது நீயும், நானும்…சாரிம்மா.. .”

மானசாவின் கைகள் ஸ்டியரிங்கில் நடுங்கின.

மேலே இருந்த ட்ராபிக் பலகை “யு-டர்ன் கிடையாது” எனக் காட்டியது. கடிகாரம் 12:00 மணி என மின்னி, மின்னி அணைந்தது. இன்னோரு புதிய நாள்.  நள்ளிரவின் வெறுமையில் போக்குவரத்து விதிகள் கட்டளைகளாக இல்லாமல் வெறும் யோசனைகளாகத் இருந்தன. அந்த வேளையில், அந்தச் சாலைச் சந்திப்பு அமைதியாக இருந்தது.அவள் வண்டியின் டர்ன் சிக்னல் விழுந்தது, அது இதயத் துடிப்பு போல டிக் டிக் எனச் சீராக ஒலித்தது.

Exit mobile version