கள்வனைக் காணாத கண்ணாமூச்சி
சேகரித்தப் பகலை
சேர்த்து வைத்து
இந்த
அந்தியால்தான்
கட்டினேன்
மூட்டையாக.
சூழ்ந்த
இரவிற்குள்
சோர்வாகாமல்
தேடிக்
களைத்தோய்ந்து
கண் விழித்தபோது
அவிழ்த்துக் கிடக்கிறது
பகல்
மீண்டும்
அள்ளச்சொல்லி.
வெளிச்சப்பொழுதின் பேதைமை
தோராயமாக சொல்லிவிடும்
கற்பிதங்கள்
யாவிலும்
உண்மை இருக்க வேண்டிய
அவசியமில்லை.
வசீகரித்துவிட்டாலே போதும்
இந்த
அடிமை மனம்
புரிதலை
மழுங்க வைத்து
தோரணங்களையே
எப்பொழுதும்
தொங்கிக் கிடக்கும்.
மகோன்னத சிலாகிப்பில்
மாசு மறுவற்ற
பிரகாசமென
விடாப்பிடியாக
லயித்து.
