
ஐப்பசி மாச அடைமழை
குளம் குட்டைகள் வழிந்து நிரம்ப
சாணி உருண்டையை
தவிட்டால் நிரப்பி
தாத்தா அவருடைய நீண்ட காய்ச்சித் தடித்த
ஆட்காட்டி விரலால் துளைகள் இட்டு
சுருக்கில் வைத்து
ஒண்ணு ரெண்டு நூறு எண்ணி சுருக்கிழுக்க
தாத்தாவின் முகத்தின்
சிரைக்காத நாட்பட்ட வெள்ளி மயிர்களாய்
கொரகொரன்னு கெண்டங் குஞ்சுகள்!
எட்டாம்பு படித்துக் கொண்டிருந்தான்
மீன் ராசிக்காரன் என்றார்கள்
தயிர் கொளத்துப் பக்கம்
வடக்கு வெளி வாய்க்காலில்
அல்லிகள் பூத்திருக்க
தூண்டிலைத் தூக்கி விசிற
மாட்டியது ஒவ்வொன்றும் தண்ணிப் பாம்புகள்
களைவயலில் குளுக் என்று சிரிப்புச் சத்தம்
கெண்டை ஒன்று மாட்டியது
அதன்பிறகு
அவனுக்குக் கன்னி ராசி என்றார்கள்..
மழைக் காலத்தின் குறிப்பாக
எதைச் சொல்வாய்
தாத்தாவின் தோளில்
வீடெல்லாம் வெள்ளம் நுழைய
தர்ம சத்திரம் நோக்கி ஓடிக் கொண்டிருந்தோம்
