Site icon சொல்வனம் | இதழ் 366 | 10 மே 2026

பட்டியலில் 12வது நபர்

வானத்தின் அத்தனை விளக்குகளையும் ஏதோ ஒரு மாயக்காற்று ஊதி அணைத்தது போல் திடும்மென இருள் மூடியது. அம்மாவின் கை பற்றியிருந்த  ரோஸி திரும்பி பார்த்தாள். விடுதலை  பெறும் ஆசையில்  ஆடை காற்றில் துடிக்க  தூரத்தில் மலை விளிம்பில்  அக்கா நின்று கொண்டிருந்தாள். 

அக்கா… பெருங்குரலெடுத்துக் கத்தினாள். அக்கா திரும்பி பார்த்தாள். கையசைத்துக் கூப்பிட்டாள்.

மூச்சிரைக்க வந்தவள் என்ன ரோஸி என்றாள். மழை வரப்போவுது சீக்கிரம் காருக்குப் போய்டுவோம். ஓடுவதற்குள் மழை விழ ஆரம்பித்தது.

காதுக்கு மிக அருகில் அக்கா குரல் கேட்டது. போர்த்தியிருந்த  போர்வை தூரமாய் போய் விழ எழுந்து உட்கார்ந்து முகத்தில் வழிந்த நீரைத் துடைத்தாள்.

என்ன அக்கா?

நேரம் ஆச்சு. சீக்கிரம் எழுந்திரு. இன்னைக்கு இண்டர்வ்யூ. மறந்துட்டியா? அதான் தண்ணி தெளிச்சுவுட்டேன். சிரித்துக் கொண்டே சொன்னாள்.

கீழே இறங்கியிருந்த நைட்டியை ஏற்றி விட்டாள். எழுந்து சோம்பல் முறித்தாள். அம்மா கிச்சனில் நின்று கொண்டிருந்தார். பின் பக்கமாய் போய் கட்டிபிடித்து சொன்னாள்.

குட்மார்னிங். 

சரி..சரி. குட்மார்னிங். சீக்கிரம் குளிச்சுட்டு வா.

வரும் போது குட்டி குட்டி நிலவாய் வெள்ளை ஊத்தப்பமும், சிகப்பு மிளகாய் , சின்ன வெங்காயம் அரிந்து போட்டு தாளித்த தேங்காய் சட்னி. இது இவளது பெருவிருப்பமென அம்மா அறிவார்.

இவள் சாப்பிடுவதை அம்மா ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தார்.

வெள்ளை நிறத்தில் வர்ண பூக்கள் இறைந்து கிடக்கும் காட்டன் சுரிதாரில் ஒரு சுடரென ஒளிர்ந்தாள். அவள் கன்னம் தடவி அம்மா முத்தமிட்டாள். அக்கா இவளை தன்னுடலுடன் அணைத்துக் கொண்டாள். அக்காவின் உடம்பிலிருந்து மிக லேசான செம்பருத்தி வாசம் வீசியது. அக்கா எப்போதும் செம்பருத்தி இதழ்கள் போட்டு காய்ச்சிய தைலத்தைத்தான் பூசுவாள். அதன் நறுமணம் அவள் உடலெங்கும் தங்கியிருக்கும்.

அப்பா படத்தின் முன் நிற்கும் போது அம்மாவின் கண்கள் மெலிதாக நீர்த்திரையிட்டன. அருகில் கர்த்தரின் கருணை விழிகள். அவர் படத்துக்கு கீழே மெல்லிய நீலவிளக்கு எரிந்து கொண்டிருந்தது.  கை தன்னிச்சையாக சிலுவையிட்டுக் கொண்டன.

பாத்து கவனமாப் போய்ட்டு வா ரோஸிக்குட்டி. எல்லாம் நல்லபடியா நடக்கும். தைர்யமா பதில் சொல். அக்கா கைகுலுக்கினாள். ஆட்டோ எடுத்துக்கோ. பஸ் வேண்டாம். டயத்துக்குப் போய்டலாம். 

ஃபாதர் ரொஸாரியோ கட்டாயம் கிடச்சிரும்னு சொல்லிருக்கார் ரோஸி. கர்த்தர் உன்னை வழிநடத்துவார்.

வர்றேன்மா..க்கா.

அவள் தெருமுனை திரும்பும் வரை அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர்.

 செங்கொடி மிகவும் பதட்டமாக இருந்தாள். வைத்தியநாதன் அவளை கூர்மையாக கவனித்துக் கொண்டிருந்தார். கட்சி இப்போது இவரை தவிர்த்து செங்கொடியிடம் இந்த ஊர்வலத்தை நடத்தும் பொறுப்பைக் கொடுத்திருந்தது. கட்சியின் இளைஞர்களை முன்னிறுத்துவோம் என்ற கோஷத்தின் பின்விளைவுகள் இது.

எனில் முதிர்ந்தவர்களை புறக்கணிப்போம் என்பது தானே இதன் உள்ளர்த்தம். கட்சிக்காக தடியடி பட்டு ரத்தம் சிந்தி குடும்பம் தொலைத்து ஊருராய் போய் ஒளிந்து மறைந்து திரிந்தது இந்த முதியவர்கள் தானே?

சொல்லுங்க தோழர்?

செங்கொடி கண் சுருக்கி பேசும் போது அவரின் இரண்டாவது பெண் சங்கீதா ஞாபகத்திற்கு வந்தாள். அவளை விட இரண்டு வயது சின்னவளாக 

பயப்படாதேம்மா.. எல்லாம் நல்லபடியா நடக்கும்.  ஊர்வலத்திற்கு நாம் கலெக்டரிடம் பர்மிஷன் வாங்கிருக்கோம். நம் தொழிலாளர்கள் எல்லாம் கட்டுக் கோப்பானவர்கள்.

தெரியுது தோழர். ஆனா மனசுல ஏதோ ஒரு அச்சம். தொழிலாளர்களின்  குடும்பங்களும் கலந்துக்குறாங்களல்ல.பெண்கள் குழந்தைகள்னு நிறைய பேர்.

எந்த ரூட் கொடுத்துருக்காங்க.

நாலுவீதியையும் சுத்தி பார்க் ரோடு வழியா கலெக்டர் ஆபிஸ் போறோம். 

ஏன் காந்திஜி ரோடு வழியாக போக அனுமதி தரலையா? அந்த ரோடு வழியா போனா பொது மக்கள் கவனம் கிடைக்கும். நம் பிரச்னைகள் அவங்களுக்கும் தெரியும்ல.

நாம அதான் கேட்டோம். நம்ம கேட்ட நேரத்துல  டிராபிக் ஜாஸ்தி. பொது மக்களுக்கு இடையூறா இருக்கும்னு சொல்லிருக்காங்க.  நம் ஊர் மக்களுக்கு நம் பிரச்னைகள் முன்னமே தான் தெரியுமே.

இவங்க ஆட்சிக்கு வந்தாலே எதிர்க்கட்சியைக் கூட விட்டுடுவாங்க . நமக்குத்தான் டார்ச்சர் கொடுப்பாங்க.       எலக்‌ஷன் டயத்துல ஓட்டு சேக்க மட்டும் நாம வேணும்.

அத விடுங்க தோழர். இப்ப நடக்கறத பாப்போம். முப்பது வருஷமா பார்ட்டில இருக்கீங்க . இந்த மாதிரி பெரிய ஊர்வலத்துல என்ன நடக்கும் ? கூட்டத்தை எப்படி சமாளிக்கறதுங்கறது மட்டும் கொஞ்சம் பயமாருக்கு.

உண்மையில் செங்கொடிக்கு பயம் தான். மூன்று வருடங்களுக்கு முன்பு பூஞ்சோலை போராட்டத்துல இவள் கலந்து கொண்டிருந்தாள். போலீசின் தீவிர தடியடி தாக்குதலில் நிறைய தொழிலாளர்கள் மண்டை உடைந்தன. பயத்தில் ஓடி அருகில் இருந்த ஆற்றில் குதித்ததில் நீச்சல் தெரியாமல் எட்டு பேர் நீரில் முழ்கினர்.

பூஞ்சோலை போராட்டத்தை தோழர் இன்னும் மறக்கலை போலிருக்கு. அத மாதிரி நிறைய நடந்துருக்கு.  அத முடிவு செய்ற இடத்துல நாம இல்லையே? நந்தகுமார் எல்லாத்தையும் பாத்துக்குவார்.

நந்தகுமார் அருகில் இருக்கும் வரை கவலை வேண்டாம். ஆனால் நந்தகுமாரின் நெருக்கம் தவிர்ப்பது நல்லதென கட்சி இவளை எச்சரித்துள்ளது. காதல் தவிர்.. காதல் தவிர்.. கட்சி நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் ரகசியமாக தோழர்களின் காதுகளில் கோஷம் எழுப்பிக் கொண்டேயிருந்தது.

சம்பத் நெற்றி வியர்வையை துடைத்துக் கொண்டான். சட்டை முழுவதும் நனைந்து உடலுடன் ஒட்டிக்கொண்டிருந்தது.  அக்னி நட்சத்திரம் இப்படி நெருப்பை அள்ளிக் கொட்டுவது வழக்கமாகி விட்டது. பெரிய தலைகளெல்லாம் கொடைக்கானல் ஊட்டி என்று குளிர் பிரதேசத்திற்கு போய் விடுகிறார்கள். நம்பள மாதிரி ஆளுங்கதான் இவனுங்க செக்கையும் சேத்து இழுக்க வேண்டும்.

இந்த பரஞ்சோதியை வேறு இன்னும் காணோம். சரியாக பத்து மணிக்கு ஃபோன் பண்றேன் தலைவான்னான். இதுக்கொன்னும் குறைச்சலில்லை. இவந்தான் தலைவா என்கிறான். கட்சி இவனை போஸ்டர் ஒட்டவும் , எதிர்க்கட்சி போஸ்டரை கிழிக்கவும், ஆளைத்தூக்கவும் தான் வச்சிருக்கு. பேரு தான் தொண்டன். பண்ணச்சொலறதெல்லாம் அடியாள் வேலை. மல்லிகா வேற தினமும் திட்டித் தீர்க்கிறாள். இதெல்லாம் ஒரு பொழப்பாய்யா? புள்ளைங்க பெருசாயிட்டு இருக்கு. ஹோட்டல்ல டேபிள் துடைச்சு சம்பாத்திச்சு கொடுக்கற காசே போதும் . நானும் ரெண்டு வீட்ல வேல பாத்து காசு சேக்குறேன். நம்ப புள்ளங்கயாச்சும் படிக்கணும்ல.

புள்ளங்கயாச்சும் படிக்கணும்ல. இதைச் சொல்லியே இவனை வெறியேத்துவாள். இவன் குடும்பத்தில் யாரும் படித்ததில்லை. அவள் குடும்பத்திலும். இவன் அப்பா கள்ளச்சாராயம் காய்ச்சி வித்தார். கடைசில குடல் வெந்து செத்தார். அண்ணன் சின்ன வயசுல ஓடிப் போய்ட்டான். தம்பியை சாரயக்கடைக்கு எதிர்ல ஒரு கும்பல் வெட்டிக் கொன்றது. இது வரை யாரென்று தெரியவில்லை. அந்த விசயத்திலும் கட்சி இவனுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. தனிப்பட்ட விரோதத்தில் நடந்த கொலைக்கு கட்சி என்ன செய்ய முடியும்? கட்சியின் நகர பொறுப்பாளர் பொறுப்பு துறந்து விட்டார்.

அம்மாதான் இவனை பாக்கும் பொழுதெல்லாம் கத்தி தீர்ப்பாள். என் குடும்பத்துல ஒருத்தனும் ஆம்பிளை கிடையாது. அப்பன் குடிச்சே செத்தான். ஒருத்தன் ஓடிட்டான். இன்னொருத்தனை வெட்டி கொன்னுட்டானுங்க. உசிரோ இருக்கறவன் மசிரப்புடுங்கிக்கிட்டு இருக்கான். அம்மா கெட்ட வார்த்தையில்  திட்ட ஆரம்பித்தால் காது புண்ணாய்டும் . கெட்ட வார்த்தைகள் இவ்ளோ புழக்கத்துல இருக்கான்னு மல்லிகா இவனிடம் ஆச்சர்யப்பட்டு கேப்பாள்.

ஃபோன் அலறியது.

பரஞ்சோதிதான்.

என்ன பரமு கூப்பிட இவ்ளோ நேரமாய்டுச்சு? எல்லாம் தயரா?

எல்லாம் ரெடி தலைவா. நீங்க சொன்ன மாதிரியே நடத்திடலாம்.

முதல்ல தலைவாங்கிறத நிறுத்து. பசங்க எல்லாரையும் நம்பலாம் தானே?

சரிங்கண்ணா. அயனான்ன பசங்க. எல்லாம் நம்ப தயாரிப்பு. கன்னா வேலையை முடிப்பானுங்க.

என்ன பிளான்?

பார்க்கிட்ட கொஞ்சம் நெரிசலாயிருக்கும். நம்ப பசங்க கூட்டத்துல கலந்துருப்பாங்க. அங்க ஆரம்பிப்பாங்க. பொருளெல்லாம் ரெடியா வச்சுருக்கானுங்க.

தலைமை என்ன நம்பி பொறுப்பை ஒப்படைச்சுருக்கு. அடுத்த வருஷம் நடக்கப் போற எலக்‌ஷன்ல நாம தான் ஜெயிக்கணும். ஒரு பத்து உசுருன்னாச்சும் போகணும்.

தைர்யமா இரு அண்ணா. பத்தென்ன இருபதாச்சும் செஞ்சுடறோம். கவலைப்படாதே. தோழனையும், காவலனையும் சேத்தே போட்டுடலாம்.

முடிச்சிட்டு வாடா என் சிங்கக்குட்டி.

வர்றேன். வர்றப்ப உன் தலைவனுங்க மாதிரி ஊட்டி, கொடைக்கானல் மாதிரி ஓடிடாதே.

ச்சே..ச்சே.. என்ன பரமு இப்படி சொல்லிட்டே. எத்தனை நாள் பழக்கம். நான் அப்படியா செய்வேன். காசகூட சிங்கிள் பேமெண்ட்டாத்தானே கொடுத்தேன். ஆனா உடனே வந்துடாதே.

சரி  அண்ணே. நாம ஜெயிச்சதும் எனக்கு ஏதனாச்சும் பாத்து செய்யுங்க .

உனக்கு செய்யாம வேற யாருக்கு செய்யப்போறோம் பரமு. உன்னப் பத்தி  மேலிடத்துல சொல்லிருக்கேன்.. நீன்றதாலதான்  இவ்ளோ பெரிய வேலையை உன்கிட்ட ஒப்படச்சிருக்கு. பதவிக்கு வந்ததும் உனக்கு பெருசா ஏதாச்சும் செஞ்சுடலாம். சரிதானே?

அது சரிதான். இந்த கலவரத்துல நம்ப பசங்களுக்கு ஏதாச்சும் ஆய்டுச்சுன்னா?

அவனுங்களுக்கு என்னா பெருசா ஆய்டப்போகுது? அவனுங்களாலதானே மத்தவங்களுக்கு எதுவும் ஆகப்போவுது.

அப்படி சொல்ல முடியாதண்ணே. போன தடவை காக்கிச்சட்டை பூந்து விளையாடிட்டாங்கள்ல. நம்ப பசங்க ரெண்டு பேரை நெஞ்சில பூட்ஸ் காலால மிதிச்சிட்டானுங்க. ஒருத்தன் முதல்லயே நெஞ்சுவலிகாரன். வாங்கின மிதில போய்ச்சேந்துட்டான்.

நாந்தான் அரேஞ்ச் பண்ணி காசு வாங்கி கொடுத்தேன்ல.

பசங்கள இந்த தடவ கொஞ்சம் ஜாக்கிரதயா இருக்கச் சொல்லு. அத மீறி எதாவது நடந்தா பாத்துக்கலாம். எலெக்‌ஷன் கிட்டத்துல இருக்குல்ல. காசு வாங்கிடலாம். பொண்டாட்டி, புள்ள இல்லாத மொட்டப்பசங்களா வச்சுக்க பரமு. பின்னாடி எந்த பிரச்னையும் வராதுல்ல.

பயங்கரமான ஆளு நீங்க அண்ணே. எப்டில்லாம் யோசிக்கற?

டேய். அப்டி யோசிச்சாத்தான் இப்ப பொழக்கமுடியும். இப்ப கட்சில இருக்கறவன்லாம் யார முழுசா முழுங்கி சாப்பிடலாம்னு காத்துட்டு இருக்கானுங்க.

மேலிடத்துலயே அப்படித்தான் நடக்குதாம்ல?

டேய்.. டேய்.. அதெல்லாம் உனக்கு எதுக்கு வேலையை முடிச்சமா காச வாங்கினமாம்னு போய்ட்டே இரு. அந்த தலைவலியெல்லாம் நாங்க பாத்துக்கறோம்.

அடியாளாவே கிடன்னு சொல்றே அண்ணே.

சம்பத் குரலை தழைத்தான். அப்படி இல்ல பரமு. நானும் உன்ன மாதிரிதானே. நீ எனக்கு அடியாள். நான் எனக்கு மேல இருக்கறவனுக்கு அடியாள். இப்படியே மேலே போய்ட்டு இருக்கும். இதுதாம்பா இன்னய நிலமை. சரி ஃபோனை வக்கிறேன். முடிச்சுட்டு பேசாதே. எங்காச்சும் போய்டுங்க.

பக்காவா பிளான் இருக்குண்ணே. எல்லா பசங்களும் வெவ்வேற ஊருக்கு போய்டுவாங்க.ஆமாம். 

ஊரா?

ஊர்ன்னா வெவ்வேற ஸ்டேட். நம்ப நாட்டுலதான் இருவத்தஞ்சுக்கு மேல இருக்கே. பிரிஞ்சு போய்டுவாங்க.

நல்லது. அங்க போய் கைகால வச்சுட்டு சும்மா இருக்கச் சொல்லு.

சொல்லிட்டேன் . நா வக்கிறேன் அண்ணே.

காற்றில் கலைந்த முடியை சரி செய்து கொண்டே ரோஸி ஆட்டோவிலிருந்து எட்டி பார்த்தாள். மேம்பாலத்தில் நெரிசல் அதிகமிருந்தது.

ஆட்டோக்காரர் ஃபோனில்  பேசிக் கொண்டிருந்தார்.

கொஞ்சம் சீக்கிரம் போங்கண்ணே. இப்ப போய் ஃபோன் பேசிட்டு.

என் ஃபிரெண்டுட்டதான் பேசினேன். நம்ப போற வழில உள்ள ஸ்டேண்டுகாரர். அந்த வழியா ஏதோ ஊர்வலம் வருதாம். டிராஃபிக்கை டைவர்ட் பண்ணி வுட்டுருக்காங்களாம்.

என்னா ஊர்வலம்?

 நம்ப நேஷனல் ஃபேக்டரி ஆளூங்க ஊர்வலம் தான். சூழ்நிலை ஒரு மாதிரி இருக்காம். போலீசெல்லாம் பதட்டமா இருக்காங்களாம். எல்லாரையும் விரட்டிட்டு இருக்காங்களாம்.

அய்யோ.. அந்த பார்க் இருக்கற வீதிலதான நான் இண்டர்வ்யூக்கு போற  கம்பெனி இருக்கு. போய்டலாமுல்ல?

கரெக்டா கம்பெனிக்கு எதிர்ல போய் வுடமுடியாது. அதுக்கு எதிர்ல ஒரு சந்து இருக்குல்ல. அதோட மறு முனை பக்கத்து தெருவுல இருக்கு. அங்க இறக்கி விடறேன். அஞ்சு நிமிஷத்துல நடந்து போய்டலாம்.

என்ன சார் இப்பப் போய் இப்படி சொல்றீங்க?

நான் என்னம்மா பண்றது. எனக்கும் தெரியாது தெரிஞ்சு இருந்தா சவாரியே ஏத்திருக்க மாட்டேன். இதுவும் நீங்க வேலை விசயமா போறதாலதான்.  பயப்படாதீங்க. ஜன நடமாட்டம் உள்ள சந்து தான். நீங்க இறங்கி பாருங்க தெரியும்.

இறங்கினாள். சந்தில் மக்கள் நடமாட்டம் இருந்தது கண்டு ஆசுவாசமானாள்.

கையில் இருந்த ஃபைலை மார்போடு அணைத்துக் கொண்டாள். தோளில் மாட்டிய லெதர்பேக்கை இறுக பற்றிக் கொண்டு சந்தில் நடக்க ஆரம்பித்தாள். சந்து முழுவதும் சரக்கொன்றையும், குல்மொஹரும் மஞ்சளும், சிகப்புமாய் மலரிதழ்களை உதிர்த்திருந்தன. நீலநிற பெயிண்ட் அடித்திருந்த வீட்டின் மேல்மாடத்தில் ஒரு சிலுவை நின்றுகொண்டிருந்தது.

இவளுக்கு முன்னால் ஒரு பெண் தோளில் குழந்தையைப் போட்டுக் கொண்டு நடந்து போய்க்கொண்டிருந்தாள். குழந்தை இவளைப் பார்த்து சிரித்தது. சிரித்துக் கொண்டே கை அசைத்தாள். குழந்தையின் முகம் சூரிய ஒளியில்  பட்டு தேவதை போல தெரிந்தது. அம்மாவின் முதுகில் குழந்தையின் கருப்பு மணி அணிந்திருந்த வலது கை மெல்ல அசைந்து கொண்டிருந்தது.

சந்து முனையில் கூட்டமிருந்தது. கூட்டத்தைப் பிளந்து எட்டி பார்த்தாள். பார்க் தெருவில் ஊர்வலம் பெருந்திரளென போய்க்கொண்டிருந்தது. 

வெல்லட்டும் வெல்லட்டும் 

போராட்டம் வெல்லட்டும்.

போராடுவோம் போராடுவோம் 

வெற்றி பெறும் வரை போராடுவோம்.

இறுதி வெற்றி நமதே .

பெண்கள் அணி கீச்சு குரலில் முழக்கமிட்டுக் கொண்டே இவளைக் கடந்தது. வாட்ச்சில் மணி பார்த்தாள். இன்னும் ஐந்து நிமிஷங்கள். பக்கத்தில் நின்று கொண்டிருந்தவரை கேட்டாள். இப்போதைக்கு முடியாதம்மா. வடக்கு வீதி முனை வரை ஆட்கள் நிக்குறாங்க. எப்படியும் அரமணிநேரம் ஆய்டும்.

ஊர்வலம் முடியும் வரை காத்திருக்க முடியாது. கூட்டத்தோடு நடந்து கொஞ்ச தூரம் போய் விலகி எதிர் பக்கம் சென்றால் ராஜ் அண்ட் ராஜ் கம்பெனி.

சட்டெனெ தெருவில் இறங்கினாள். கூட்டத்தில் கலந்தாள். இவள் இறங்கிய நொடியில் கூட்டத்தின் வடிவம் சிதைந்தது. மாபெரும் அலையென மக்கள் ஒருவருடன் ஒருவர் மோதினர். ஃபைலை இறுகப் பற்றிக் கொண்டு எதிர் திசை நோக்கி நகர்ந்தாள். காற்றில் ஆடும் பலூன் போல் தலைகள் இங்குமங்கும் அலைந்தன.

யாரோ விழுந்தார்கள். யாரோ எழுந்தார்கள். யாரோ கத்தினார்கள். யாரோ தள்ளினார்கள். பாப்பா..பாப்பா ஒரு பெண்ணின் குரல் தரையிலிருந்து கேட்டது.  குனிந்து பார்க்க இயலவில்லை. கூட்டம் இவளை தள்ளியது. இவள் உடல் முழுவதும் உடல்கள் உரசின. கைகள் பரவின. நடுங்கியது மனம். இன்னும் பத்தடிகள் தாண்டினால் எதிர் பக்கம் போய்விடலாம். கர்த்தரே.. கர்த்தரே வழி காட்டும். சிலுவைக் குறியிட்டுக் கொண்டாள்.

பின் பக்கமிருந்து தோள்பையை யாரோ பிடித்து இழுத்தார்கள். திரும்ப முடியவில்லை. தன் பக்கம் வேகமாக இழுத்தாள். வரவில்லை. விட்டுவிட்டு ஃபைலை இறுகப் பிடித்துக் கொண்டாள். வேறு பை வாங்கிக் கொள்ளலாம். 

அடிக்கிறாங்க.. அடிக்கிறாங்க.. யாரோ கத்தினார்கள். கூட்டம் குறுகிய சந்துக்குள் மாட்டிய யானை போல திமிறித்தவித்தது. விழுந்தார்கள். புரண்டார்கள். மிதித்தார்கள். மிதிபட்டார்கள்.

இன்னும் இரண்டு அடி தான். இதோ.. இதோ. இவள் கூந்தலை யாரோ பிடித்திழுக்க திரும்பினாள்.

மிகச் சரியாக அந்த ஒற்றை நொடியில் அவளின் பின்மண்டை வழியாக  உட்புகுந்த தீச்சுவாலை ஒன்று அவளுக்குள் வேகமாய் பயணித்து  வாயைக் கிழித்துக் கொண்டு வெளியேறிய போது செயிண்ட் ஜோசப் தேவாலய மணியின் பேரொலி அலைஅலையென பார்க் ரோடு முழுவதும் பரவி பாவப்பட்டவர்களின் இறுதிக்குரல்களுடன் கலந்தது.

மறு நாள் காலை எல்லா தினசரிகளின் துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் பெயர்ப் பட்டியலில் ரோஸி 12வது நபராக இருந்தாள். அவளுக்கு முன்னதாக தோழர் செங்கொடியின் பெயர் இருந்தது.

Exit mobile version