பொருளாதார அறிவியலிற்கான நோபல் பரிசு 2024
ஆல்ஃபிரட் நோபலின் நினைவாக பொருளாதார அறிவியலுக்கான (Sveriges Riksbank) ஸ்வீடன் மத்திய வங்கிப் பரிசு 2024 “நிறுவனங்கள் எவ்வாறு உருவாகின்றன மற்றும் செழிப்பைப் பாதிக்கின்றன என்பதைப் பற்றிய ஆய்வுகளுக்காக” டாரன் அசெமோக்லு, (Daron Acemoglu) சைமன் ஜான்சன் (Simon Johnson) மற்றும் ஜேம்ஸ் ஏ. ராபின்சன் (Jamres A Robinson) ஆகியோருக்கு கூட்டாக வழங்கப்பட்டுள்ளது.
சில தேசங்கள் செல்வ வளத்தில் இருக்க சில நாடுகளில் ஏன் ஏழ்மை பெருமளவில் இருக்கிறது என்ற கேள்விக்கான ஆய்வுகளுக்காக இவர்கள் மூவருக்கும் இந்தப் பரிசு சமமாக பிரித்து வழங்கப்படுகிறது. இந்த வகையான இரண்டு நாடுகளுக்கும் இடையே வருமான இடைவெளி தொடர்கிறது. அந்தந்த நாட்டின் சமூகங்களில் உள்ள நிறுவனங்களில் உள்ள வேறுபாடுகள் இந்த இடைவெளிக்குக் காரணம் என்று இவர்கள் சொல்கிறார்கள். ஆயினும் இதை நேரடி விளைவு என்று எடுத்துக் கொள்ளக் கூடாது.
இந்தக் கேள்விக்கான பதிலைத் தேடி இவர்கள் மூவரும் யுரோப்பிய காலனி ஆதிக்கத்தில் இருந்த நாடுகள் சிலவற்றின் பொருளாதார நிலையை 16ம் நூற்றாண்டு தொடங்கி பரிசீலிக்கத் துவங்கினார்கள்.
பொருளாதார அறிவியலுக்கான பரிசுக் குழு உறுப்பினர் ஜாகோப் ஸ்வென்சன் சொல்கிறார்: ‘இன்றைய கால கட்டத்தில் நம்மிடையே இருக்கும் பெரிய சவால் என்பது நாடுகளுக்கிடையேயான வருமானத்தில் இருக்கும் அதிக வேறுபாடுகளைக் குறைப்பது என்பதாகும்.’
வித்தியாசமின்றி அனைவரையும் தன்னகம் ஆக்கிக் கொள்ளும் நிறுவனங்கள் (Inclusive Institutions) அனைவருக்குமான நீண்ட கால பலனைத் தரும்; பாரபட்சமற்ற நிறுவனங்கள் என்று இவர்கள் சொல்வது கருத்துரிமை, சொத்துரிமை, அச்சமின்றி செயலாற்றும் சூழல் போன்றவைகளைத் தரும் அச்சுக்களான அரசியல், சமூகம், பொருளாதாரம் சார்ந்த நேர் நிலை. ஆனால், பிரித்தெடுக்கும்/ பறித்தெடுக்கும் அமைப்புகள் (Extracting Institutions) சில காலம் மட்டுமே மனித வாழ்வை மேம்படுத்தும். அதாவது, அத்தகைய அமைப்புகளுக்கு அரசியல் ஆதரவு இருக்கும். அதன் மூலம் பொது மக்களின் ஆதரவையும் சில காலம் பெற முடியும். ஆயினும், ‘பொருளாதார சீர்திருத்தங்களைக் கொண்டு வந்து மக்கள் நலம் காப்போம்’ என்ற அவர்களின் வாக்குறுதியை பொது மக்கள் நம்ப மாட்டார்கள். (மிகச் சமீபத்திய எடுத்துக்காட்டு இலங்கை.) இந்த வகை நாடுகளில், மக்கள் புரட்சி ஏற்படும் என்ற அச்சுறுத்தலில் அரசும் இருக்கும். தங்கள் வளம் போய்விடுமோ என்ற பதட்டத்தில் ஒரு குழுவும், மக்களாட்சியைக் கொண்டு வந்து நிலையான வளர்ச்சியைக் கொண்டு வருவோம் என்று மறு குழுவும் இயங்க இறுதியில் ஜனநாயகம் அமையப் பெறும்.
மாறுபட்ட கோணத்தில் இவர்கள் சிந்தித்திருந்தாலும், அதிகமாக எளிமைப்படுத்தி, தர்க்க, வரலாற்று ஆவணங்கள் சொல்வதைக் கருத்தில் கொள்ளவில்லையோ என்றும் தோன்றுகிறது. உதாரணமாக, தங்கள் புத்தகமான “ஏன் தேசங்கள் நலிவுறுகின்றன?” என்பதில் அவர்கள் கி மு 800க்ளுக்கு முன்னான ரோமப் பேரரசின் வரலாற்றைச் சொல்கிறார்கள். அந்தக் காலகட்டத்தில் விவசாயம் முதன்மையான வாழ்வாதாரமாக இருந்தது. எனவே, ரோம அரசின் வெவ்வேறு கட்டமைப்புகள் அனைவருக்குமானவையாக இருந்தன என்பது வளர்ச்சிக்கான முக்கியக் காரணி என்ற பேச்சிற்கே இடமில்லை. அதைப் போலவே வெனிசின் வீழ்ச்சி, இந்த ‘அனைவருக்குமான தன்னகத் தன்மையற்றுப்’ போனதால் ஏற்பட்டதென்று சொல்வதும் அதிகமாக எளிமைப்படுத்தப்பட்ட ஒரு கூற்று. வர்த்தகம் மற்றும் இதரத் துறைகளில் அது சந்தித்த சவால்களை, போட்டிகளைப் பற்றி, அதனால் அது சரிவைச் சந்தித்தது பற்றி ஒன்றும் சொல்லாமல் மௌனம் காக்கிறது புத்தகம். எது விளைவோ, அதையே காரணம் எனக் காட்டப் பார்க்கிறார்கள் இவர்கள்.
இதைப் போலவே மாயன் நாகரீகம் வீழ்ந்ததற்கு ‘ஒரு சேர அரவணைக்காத பாங்கு’ என்று தங்கள் கருதுகோளை நிலை நிறுத்த முயற்சிக்கிறார்கள். நீர் மேலாண்மைத் திறம், குறைந்ததும் பருவ நிலை மாறுதல்கள் ஏற்பட்டதும் முக்கியக் காரணங்கள் அல்லவா?
யுரோப்பிய காலனி ஆதிக்கம்
காலனி ஆதிக்கம் செலுத்தியவர்கள் அறிமுகப்படுத்திய பொருளாதார, அரசியல் அமைப்புகளால், பல நாடுகளின் செல்வச் செழிப்பு நிலை தலைகீழானது. காலனித்துவக் காலத்தில் செழிப்புடன் விளங்கிய இடங்கள் இன்று ஏன் ஏழ்மையில் இருக்கின்றன? தனி நபர் மொத்த உற்பத்திக்கும், காலனிகளில் குடியமர்ந்த ஆதிக்க மனிதர்கள் அல்லது அவர்களால் அரசியல் மற்றும் பொருளாதாரக் காரணங்களுக்காக அனுப்பப்பட்டவர்களின் அதிக அளவிலான இறப்பிற்கும் என்ன தொடர்பு?
காலனிப்பட்ட நாடுகளின் சமூக, அரசியல், பொருளாதார நிறுவனங்கள், அந்த ஆதிக்கத்தால் மாறின. சில இடங்களில், முக்கியமாகப் பழங்குடி இனங்களைச் சுரண்டுவதும், வளங்களைக் கொள்ளையடிப்பதும் நடந்தது; சில இடங்களில், வந்தேறிக்களுக்கான நலம் கருதி நீண்ட காலப் பயனைத் தரும் சமூகக் கட்டமைப்புகள் உருவாகின.
அதிர்ஷ்டத்தின் தலைகீழ்
இந்த மூவரும், காலனித்துவ நிறுவனங்களில் உள்ள இந்த ஆரம்ப வேறுபாடுகள், இன்று நாம் காணும் செழுமையின் பரந்த வேறுபாடுகளுக்கு ஒரு முக்கிய விளக்கம் என்பதை நிரூபித்துள்ளனர். அமெரிக்காவின் நோகேல்ஸ் (Nogales) மற்றும் மெக்சிகோவின் நோகேல்ஸ் ஆகியவற்றுக்கு இடையேயான வாழ்க்கையை உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டுள்ளார்கள். ஒரே பகுதி, ஒரே பருவ நிலை, ஒரே பண்பாடு. ஆனால், வடக்கு மெக்சிகோவில் காணப்படும் செல்வ நிலை தெற்கு மெக்சிகோவில் இல்லை. பல்வேறு காரணிகளில் இவர்கள் முக்கியமாகக் கருதுவது ஸ்பானிய காலனியினர் ஏற்படுத்திய நிறுவனங்களுக்கும், அமெரிக்காவில் ஏற்படுத்தப்பட்ட சமூக, பொருளாதார, அரசியல் நிறுவனங்களுக்குமான வேறுபாடு.
தென் மெக்சிகோவிலும் கடந்த 20 ஆண்டுகளாக நிலைத்த வளர்ச்சியைக் காண முடிகிறது. பில் கேட்ஸ் மற்றும் கார்லோஸ் ஸ்லிம் மெக்சிகோவில் செய்த வணிகங்களையும், அவற்றின் வேறுபாடுகளையும் இந்தப் புத்தகம் எடுத்துச் சொல்கிறது. முக்கியமாக; முதலீட்டாளர் ஸ்லிம் இல்லாமல் மெக்சிகோவில் இத்தகைய வளர்ச்சி ஏற்பட்டிருக்குமா என்ற கேள்வி.
மாறுபட்ட கருத்துக்கள் இந்தத் துறையில் எழுவது இயல்பே. ஒரே அல்லது ஒரு முக்கியக் காரணி, உலகின் வருமானப் பிளவிற்கும், சரி விகிதமற்ற வளர்ச்சிக்கும் பொருந்தும் எனச் சொல்வது ஒரே அளவு உடை அனைவருக்கும் பொருந்தும் எனச் சொல்வது போலத்தான்.
இவர்கள் சொல்வதையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும், முழுதுமே ஏற்க இயலவில்லை என்று நினைத்தால், நாம் குறுகிய கண்ணோட்டத்தில் பார்க்கிறோம் என்று பொருள். மற்றும் ஒன்றையும் இவர்கள் சுட்டுகிறார்கள். மிகக் குறைந்த மக்கள்தொகை கொண்ட இடங்களில், யுரோப்பிய காலனித்துவவாதிகள் நீண்ட கால செழிப்பைத் தரக்கூடிய நிறுவனங்களை கொண்டு வந்தனர். .
இந்த தலைகீழ் மாற்றம் முக்கியமாக தொழில்துறை புரட்சியுடன் இணைந்து ஏற்பட்டது என்பதையும் பரிசு பெற்றவர்கள் காட்டியுள்ளனர். உதாரணமாக, பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், அமெரிக்காவை விட இப்போது இந்தியாவில் தொழில்துறை உற்பத்தி அதிகமாக இருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து இது அடிப்படையில் மாறிவிட்டது, காலனி ஆதிக்கத்திற்கு உட்படாத நாடுகளில் இந்தத் தலைகீழ் விகிதம் காணப்படவில்லை என்பதையும் மறக்கலாகாது.
காலனியாதிக்கத்தின் போது அறிமுகப்படுத்தப்பட்ட அரசியல் மற்றும் பொருளாதார நிறுவனங்களை உலகில் காணப்படும் வருமான வேறுபாடுகளின் முக்கியக் காரணியாகச் சொல்லி ஒரு புது கோட்பாட்டை இவர்கள் தரவுகளோடு நிறுவியுள்ளார்கள். ஒரு சேர இணைத்திடாத நிறுவனங்கள் இருக்கும் தேசங்களை சீர்திருத்துவது அவ்வளவு கடினமா? ஆம், சற்று சிரமமே. ஆனால், அது நிகழக்கூடிய சில சூழ்நிலைகளையும் சுட்டிக்காட்டுகிறர்கள்.
அதே நேரம், முழு மதிப்பையும், ‘அனைத்தையும் உள்ளடக்கியக் கருதுகோளை’ சற்றே புறம் தள்ளி, கொரியா, சிங்கப்பூர் போன்ற நாடுகள் வளர்ந்துள்ளனவே என்ற எண்ணமும் நமக்கு வருகிறது. சீனா, ஒரு சர்வாதிகார நாடு என்றாலும், அதன் குடிமக்களின் வாழக்கைத் தரமும், வருமானமும் மேம்பட்டிருப்பதை நாம் அறிகிறோம். அவர்களிடத்தில், பொதுவாக நாம் காண்பது மனித உரிமை மறுப்புகள். அவர்கள் கம்யூனிசத்தையும் வைத்துக் கொண்டுள்ளார்கள், முதலாளித்துவத்தையும். சொத்துரிமை இருக்கிறது இப்போது. (அலிபாபா நிறுவனருக்கு என்ன ஆயிற்று என்ற கேள்வியும் இருக்கிறது.) அரசைத்தாண்டி எவரும் வளர முடியாது, ஆனாலும், பொது நலனுக்காக கல்வி, போக்குவரத்துக் கட்டமைப்பு, அன்னிய முதலீடுகள், உலக வர்த்தக முன்னெடுப்பு இவைகளுக்கெல்லாம் தகுந்த சூழலை உருவாக்கியுள்ளார்கள்.
நவீன மயமாக்கல் கருதுகோளை இந்த மூவர் அணி கிண்டல் செய்கிறது. வலுவான தலைமை நாட்டை முன்னேற்றும், அது முழுதும் ‘கூட்டென; இருக்கத் தேவையில்லை என்பதையும் இவர்கள் ஏற்கவில்லை. மக்களாட்சியில் நீடித்த வளர்ச்சி இருக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இவர்களிடம் உள்ளது. மனித நாகரீகத்தில் இதுவரை சரியான அரசாட்சி முறை, சமூக நெறி, மக்கள் பங்கேற்பைத் தேர்ந்தெடுத்திருக்கிறோமா என்றால், பாரத வரலாறு சிறந்த எடுத்துக்காட்டு.
அனைத்துக் கேள்விகள் இருந்தும் வித்தியாசமான சிந்தனைக்காக இவர்களைப் பாராட்டுவோம்.
சுருக்கமாகச் சொல்வதென்றால்.
- ஒரு நாட்டின் அரசியல், பொருளாதாரம், சமூகம் இவை சார்ந்தே வளர்ச்சி அமையும்
- அரசியலுக்கும், பொருளாதாரத்திற்கும் இடையே இருக்கும் கொடுக்கல்- வாங்கல் சிக்கலானது.
- மனிதர்களின் உரிமையைப் பாதுகாத்து, அவர்களுக்கு கருத்து சுதந்திரம், போன்றவைகளை நல்கும் நிறுவனங்கள் அமையப் பெற்ற நாடுகளில் செல்வச் செழிப்பு இருக்கும்.
- மக்களாட்சி வழிமுறையில், ‘பறித்தெடுக்கும்/ பிரித்தெடுக்கும் நிறுவனங்கள்’ தழைக்காது.
- இயந்திரப் புரட்சியும், காலனி ஆதிக்கமும் பல நாடுகளின் இன்றைய வறுமை நிலைக்கும், ஓரளவிற்கான செல்வ நிலைக்கும் தம்மிடம் திறவுகோல்களைக் கொண்டுள்ளன.
வாழ்த்துக்கள் மூவருக்கும்.
உசாவி:
