1.
தியானத்தில்
இருந்தேன்
தூதுவன்
வரவேண்டுமென்று!
கதவை தட்டுகிறார்கள்
வெளியே யாரோ !
அலுப்பாய் வந்தது!
ஏன் எப்போதும்
இவ்வளவு
இடைஞ்சல்கள்
கண்களை இறுக்க
மூடிக்கொண்டேன்!
கதவைத்
திறக்கவே கூடாது..
எனக்குள் சொல்லிக்கொண்டேன்
“மனதை ஒருமுகப்படுத்து!”
“மனதை ஒருமுகப்படுத்து!”
“மனதை ஒருமுகப்படுத்து!”
திரும்பிச்சென்றான்
தட்டிக் களைத்தத்
தூதுவன் !
2.
பக்கத்திலேயே
நின்றிருந்தேன்
குடைபிடித்தபடி
வெயிலுக்கும்
மழைக்கும்
காட்டாமல் !
தினசரி
தண்ணீர் பாய்ச்சினேன்
தவறாமல் !
ஆக்ரமித்து
வைத்தேன்
உரங்களால் !
ஆனாலும்
ஏன் இந்தக்
ரோஜாக்கன்று
வளரவே மாட்டேன் என்கிறது?
கைவசமுண்டு
திட்டமொன்று!
“வளர்வது எப்படி”
என்றொரு
காணொளியைக்காட்டி
ஊக்கப்படுத்தலாம்
என்றிருக்கிறேன்
வீட்டுக்குள்
எடுத்துச்சென்று !
