
பின்னால் ஓடும்
மரங்கள் வீடுகளை விட
சுரங்கத்தின் இருளில்
இலக்கில்லாமல் பாயும்
ரயில் தரும் உற்சாகம்
பயம் தாண்டியும் அதிகம்
கண்களில் நிறையும் இருள்
கூச்சலான ஒலியாக
எழுந்து நிறைக்கும்
பயமும் உற்சாகமும்
முகமற்ற சத்தங்களும்
வெளிச்சம் வந்ததும்
ஜன்னல்களில் திரும்பிவிடும்
பின்னாட்களில்
பிறரின் விடையற்ற கேள்விகளுக்கு
என்னுள் சுரங்கம் அமைத்து
உள்சென்று ஒளிந்துகொள்ளும் வரை
உடன் வந்தவை
கருந்துளைக்குள் விண்கல்லாய்
ரயில் செல்லும் இப்பயணங்கள்
வெளிச்சம் சிறையாகவும்
இருள் விடுபடலாகவும் அமைந்தவை
கவிஞன் இறந்த செய்தி
அந்த ஊரின் ஒரே கவிஞன் அவன்
ஒருமுறை அங்கு வந்த கலெக்டர்
அவன் பெயரைச் சொல்லி
அழைத்து வரச்செய்து நீண்டநேரம்
பேசிகொண்டிருந்துவிட்டுச் சென்றார்
அன்றிலிருந்து ஊர்
கவிஞனை கவனத்துடன் புறக்கணித்தது
ஊரின் நுண்ணிய சீண்டல்கள்
அவனைத் தீண்டாதது கண்டு
தானாக மெல்ல அடங்கியது
இன்று அதன் சந்தர்ப்பம்
இறந்த கவிஞனுக்கு
தாமதமாக மாலையிடச் சென்றனர்
இழவு வீட்டின் கும்பல்களில்
சிறு சிரிப்புடன்
அவன் மரணம் பேசப்பட்டது
புதைக்க ஊர் மயானம் கிடைப்பது கடினம்
என்ற பேச்சும் சுற்றியது
ஊர்வலம் துவங்கியதும்
அங்கங்கே நின்று நழுவியது கூட்டம்
கடனே என்று சுற்றப்பட்ட பாடையில்
சிலரால் மட்டுமே சுமக்கப்பட்ட கவிஞன்
ஊரைப் போல வாழ கவிதை விடவில்லை
ஆனால் கவிஞனைப் போல சாக ஊர் விட்டது
ஒற்றைக்கொம்புள்ள விலங்கு
பாறைச் சரிவில்
இன்றும் உடல் கிடந்தது
மீண்டும் ஒரே ஒரு ஆழமான காயம்
ஒற்றைக்கொம்புடன் திரியும்
காட்டெருதின் முத்திரை என்பார் ரேஞ்சர்
எஸ்டேட் மேனேஜர் உத்தரவால்
எருதைப் பிடிக்கும் முயற்சியில்
தவறிச் சரிவில் விழுந்து
ஒரு கொம்பு முறிந்ததை
மலைக்கிராமம் அறிந்திருந்தது
முன்பு காட்டை விட்டே வெளிவாராத எருது
இப்போது தன் கூட்டத்தோடு இல்லை
இலைதழைகளில் மறைந்தும்
சேற்றில் அமிழ்ந்தும்
பிறர் அறியாமல் திரிகிறதாம்
இரவு ரோந்துகளில் நெடுநாட்களாக
அதன் தடம் காணக்கிடைக்காமல்
அதற்காக வருந்தும் ஒரே நபர்
காட்டில் ஊழல்களைக்
கண்டித்து ஒழித்த ரேஞ்சர்தான்
அவரின் உடல்தான்
இன்று கண்டெடுக்கப்பட்டது
வீடடைதல்
கதவைத் தட்டியவன்
உடனே கிளம்பச் சொன்னான்
ஒருவன் வருவான் என்று தெரியும்
கதவு தட்டப்படும் என்று நினைக்கவில்லை
வாசலில் எனக்காகக்
காத்திருந்த பெட்டியோடு
வெளியேறினேன்
திரும்பி வருவது நிச்சயமல்ல
தெரியும்தானே என்றான்
உணர்ச்சியற்ற குரலில்
நெடுநேரம் மௌனமான பயணம்
இளைப்பாறலில் கேட்டேன்
நீ வெளியேறிய அன்று
உன்னை அழைத்தவனிடம் கேட்டதென்ன
புன்னகையுடன் பார்த்தவன்
நீ திரும்பலாம் என்றான்
என் வீட்டைபோல இருந்த
வீட்டின் கதவைத்தட்ட
திறந்தவனின்
காலடியில்
தயாராக ஒரு பெட்டி
