Site icon சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

சிலிர்ப்பு

எதையோ தொலைத்ததைத் தேடுவது போலவும், மிகவும் அவசரமாக எதையோ தொலைத்தே ஆகவேண்டும் என்பதைப் போலவும் எல்லோரும் அந்த ரவுண்டாணாவின் நான்குபுற சாலைகளிலிருந்தும் எல்லாம் தெறிக்க ஓடிக் கொண்டிருந்தார்கள்.  சிலர் விதவிதமான வாகனங்களில் விரைந்து கொண்டிருந்தார்கள். சுமார் நான்கு பெரிய அமைச்சகங்களும் ஐந்தாறு கிளை அலுவலகங்களும் அமைந்த அந்தப் பெரிய கட்டிடம் ரவுண்டானாவின் நான்காவது சாலைகயின் முடிவில் மிகவும் கம்பீரமாக நின்றிருந்தது. 

வெள்ளைக்காரன் ஏதோ இங்கேயே ஆயுசு பரியந்தம் இருப்பது போன்ற நினைப்பில் பார்த்துப் பார்த்துச் செதுக்கிய அந்தக் கட்டிடத்தின் ஈசானிய மூலையில் குமாஸ்தாக்கள் ஓடிஓடிப் போய் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தார்கள். அங்கங்கு வழிந்தோடிய சிறுநீரின் சிற்றோடைகளை மிகவும் லாவகத்துடன் தாவித்தாவி அனுபவம் மிக்க குமாஸ்தாக்கள் தங்கள் பங்குக்கு சிறுநீர் பாய்ச்சிக் கொண்டிருந்தனர். கட்டிடத்தின் உள்ளே நவீன டைல்கள் பதிக்கப்பட்ட கழிப்பறைகள் இருந்தாலும் இந்த இடத்தில் சிறுநீறு கழிப்பதைத் தங்களின் பிறப்புரிமையாகவும் அலுவலகத்தில் நுழைவதற்கு முன்பான அவசிய சடங்குபோலவும் குமாஸ்தாக்கள் சிறுநீர் கழித்தும் சிகப்புக்குழம்பான பான் சாற்றை அங்கங்கு துப்பியும் சுகாதாரத்தைப் பேணி வந்தார்கள்.

அலுவலகத்தை நோக்கிய சாலையில் அமைச்சகங்களின் செயலாளர்கள், இணை செயலாளர்கள், துணை செயலாளர்கள், கீழ்நிலை செயலாளர்கள் என்று அழைக்கப்படும் மூத்த  நிலை குமாஸ்தாக்களை வாகன ஓட்டிகள் வாயிலில் இறக்கி விட்டு சலாம் அடித்து விட்டு காரை நிறுத்தி சிறுநீர் கழிக்க ஓடினார்கள்.  பிரிவு அதிகாரிகள், உதவியாளர்கள், கீழ்நிலை எழுத்தர்கள், சுருக்கெழுத்தர்கள் என்று அழைக்கப்படும் அசல் குமாஸ்தாக்கள் பேருந்துகளை விட்டு இறங்கி நிதானமாக சிகரெட்டும் பானும் வாங்கிக் கொண்டும் வாசலில் கடை விரித்து வைக்கப்பட்ட செய்தித்தாள்கள், புத்தகங்கள், குடைக்கடைகள், மலிவு விலை கடிகாரக்கடைகளை ஒருமுறை மேய்ந்து விட்டு திடீரென்று தங்கள் கடமை நினைவுக்கு வந்தவர்களாக அலுவலக வாயிலை நோக்கி விரைந்தார்கள்.

இந்தக் களேபரத்தில் சுசீலாவை இருசக்கர வாகனத்தில் அமைச்சக அலுவலகத்துக்கு நேராக இறக்கி விட்டான் அஸ்வத்தாமன். முந்தைய இரவில் நிகழ்ந்த பிணக்கின் காரணமாக எதையும் சொல்லாமல் மோட்டார் சைக்கிளிலிருந்து இறங்கி முன்னால் வைக்கப்பட்டிருந்த தன்னுடைய பையை எடுத்துக் கொண்டு அவசரமாக வாயிலை நோக்கி ஓடினாள் சுசீலா.

விமானப்படையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று    தினமும்  காலை பத்து மணிக்கு பாட்டில் திறந்து சோடாவுடன் ஓரிரு பெக் பட்டாளச் சரக்கை அருந்தி விட்டு வருங்காலத்தைத் திட்டமிடும் அஸ்வத்தாமன்  அன்றும் எதையாவது திட்டமிட்டே ஆகவேண்டும் என்ற அவசரத்தில் உள்ளது போல சரேலென்று  வண்டியைக் கிளப்பினான்.  

யாரோ அமைச்சர் வருகையால் ரவுண்டானாவின் தலைப்பகுதியில் எல்லா வண்டிகளும் நிறுத்தப்பட்டன. வாகன ஓட்டிகள் எல்லோரும் விட்டு விட்டு ஹாரன் அடித்துக்கொண்டிருக்க அவர்களுக்கு ஏதோ அருளை வாரி வழங்குவது போல அபயக்கரம் காட்டி அவர்களைப் பொறுமையாக இருக்குமாறு ஜாடை காட்டிக் கொண்டிருந்தான் ஒரு டிராபிக் போலீஸ்.  

பத்து நிமிடம் கழித்து அமைச்சரின் வண்டி “ஐயோ… ஐயோ… எனக் கத்திக்கொண்டே ரவுண்டானாவை முழுச்சுற்றுச் சுற்றி உரிய பாதையில் விரையத் தொடங்கியதும் இந்தப் புறமாக வாகனங்களைச்செல்ல அனுமதித்தான் போலீஸ்காரன். அவன் விசிலடித்து போக அனுமதித்ததும் எல்லோரும் ஒரு புள்ளியில் வண்டியைச் செருகி ஏதோ வாகனப்  பிரளயம் போன்ற மாயையை ஏற்படுத்தி மீண்டும் முன்னோக்கி விரைந்தார்கள். 

அஸ்வத்தாமன் ரவுண்டானாவை முழுச்சுற்றுச் சுற்றி மூன்றாவது சாலையில் பிரவேசித்தான். சிறிது தூரம் கூட சென்றிருக்க மாட்டான்.  பெரியவர் ஒருவர் ஆஜானுபாகுவாக சுமார் ஆறு அடிக்கு மேல் சாலையின் இடது பக்கமிருந்து வேகமாக சாலையின் நடுக்கோட்டை நோக்கி ஓடினார்.  மற்றொரு பக்கம் ஒரு கார் வேகமாக வரவே மீண்டும் அதே வேகத்துடன் சாலையின் இடது பக்கம் நோக்கி மீண்டும் ஓட கச்சிதமாக அஸ்வத்தாமன் மோட்டார் சைக்கிளின் முன்சக்கரத்தால் தாக்கப்பட்டு அலங்கோலமாக தார்ச்சாலையில் விழுந்தார்.

அவரைக் காப்பாற்றும் நோக்கில் வேகமாக பிரேக்கை அழுத்திய அஸ்வத்தாமனும் கன்னாபின்னாவென்று சரிந்து அவர் மீதே விழுந்தான். கிழவர் இடது பக்கமாக சரிந்து கைமுட்டியை ஊன்றிக் கொண்டு விழுந்த தால் அதிகமாக அடிபடவில்லை. தும்பைப் பூவைப் போல இருந்த அவருடைய வெள்ளை ஜிப்பாவும் ஓரிரு இடங்களில் கிழிந்து சிராய்ப்பு ஏற்பட்ட கைப்பகுதியிலும் முட்டிப் பகுதியிலும் சிகப்பாக ரத்தம் எட்டிப்பார்த்தது.

அஸ்வத்தாமன் முழுக்க முழுக்க பெரியவர் மீது சரிந்து விழுந்ததால் அவனுக்கு அதிகம் அடிபடவில்லை.  ஆனாலும் லேசாகக் கையிலும் காலிலும் சிராய்ப்பு ஏற்பட்டிருந்தது.    கீழே விழுந்த வண்டி அங்கு ஏதோ கலவரம் நடப்பது போலச் சத்தமிட்டுக்கொண்டே இருந்தது. 

சாலையின் ஓரத்தில் நடந்துபோய்க்கொண்டிருந்த ஓரிரு பரோபகாரிகள் வேகமாக ஓடி வந்து “க்யா ஹூவா? ஜ்யாதா ச்சோட் லகா?” என்று கேட்டுக் கொண்டே எழுவதற்கு எத்தனித்த அஸ்வத்தாமனுக்குக் கை கொடுத்து எழுப்பி விட்டு பெரியவரையும் கைத்தாங்கலாக எழுப்பி சாலையின் ஓரம் நோக்கி மெதுவாக நடத்திச் சென்றார்கள்.  பெரியவர் சற்று மயங்கியது போலத் தயங்கித் தயங்கி அவர்களின் ஆதரவில் மெல்ல நடந்து வந்து பிளாட்பாரத்தின் முனையில் மிகவும் சிரமப்பட்டு உட்கார்ந்தார். 

ஓலமிட்டுக் கொண்டிருந்த வண்டியின் இன்ஜினை நிறுத்தி விட்டு  இருவர் பிடித்துத் தூக்கி நிறுத்தி சாலையின் ஓரத்துக்கு உருட்டி வந்து நிறுத்தினார்கள்.  சாலையின் போக்குவரத்து நிற்காமல் போய்க்கொண்டிருந்த து. கார்களில் அமர்ந்திருந்த சில பெண்மணிகள் கலவரத்துடன் எட்டிப்பார்த்து கணவன்மார்களை வண்டியை வேகமாக ஓட்டச் சொல்லி விரட்டினார்கள். அஸ்வத்தாமனும் லேசாக நொண்டிக்கொண்டே உட்காரவைக்கப்பட்ட பெரியவரை நோக்கி வந்து கலக்கத்துடன் இருகைகளையும்  பவ்யமாகக் கூப்பி நின்றான்.

அதற்குள் அங்கு கூடியிருந்த சிறுகூட்டத்தில் இருந்த ஓருவன் சற்று உரக்க, “வண்டியைப் பார்த்து ஓட்ட மாட்டாயா?” என்று அஸ்வத்தாமனை மிரட்டினான்.  ஏறத்தாழ மயங்கி விழுவதைப் போன்ற நிலையில் இருந்த பெரியவர் கூச்சல் போட்டவனைப் பார்த்து   “தவறு என்னுடையதுதான். நான்தான் தவறாகத் திரும்பி ஓடிவந்தேன். அந்தப் பையனை ஒன்றும் சொல்லாதே” என்று மெல்லிய குரலில் கூறினார். அதற்கு அந்த திடீர் பஞ்சாயத்து, “இந்த மோட்டார் சைக்கிள் ஓட்டும் பெஹஞ்சோத் களுக்கு ஏதோ ராக்கெட் ஓட்டுவது போல நினைப்பு. இது என்ன ரயில் வண்டியா? பிரேக் போட்டு நிறுத்த முடியாதா? என்று மீண்டும் ஆரம்பித்தான்.

“உனக்கு என்ன வேணும்?  நான்தான் சொன்னேனே. தவறு என்னுடையதுதான்.   திடீரென்று பிரேக் போட்டதால்தான் அவனும் கீழே விழுந்தான். அது முழுக்க என்னுடைய தவறுதான் என்றார். 

அதற்குள் சாலையில் போகும் எவனோ நாடாளுமன்றக் கட்டிட வாசலில் நின்றிருந்த டெல்லி போலீஸ் சவுக்கியில் அந்த சாலையில் ஏதோ பெரும் விபத்து ஏற்பட்டு இருவர் மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறார்கள் என்ற அளவில் போட்டுவிட்டுப் போக கர்ப்பத்தொந்தியுடன் இரு போலீஸ் கான்ஸ்டபிள்கள் அந்த இடத்தை நோக்கி நிதானமாக விரைந்து வந்தார்கள்.  

எல்லோரையும் விலகி நிற்கச் சொல்லிவிட்டு கையில் அட்டையின் கிளிப்பில் சொருகிய காகிதங்களை சரிசெய்து கொண்டே ஒரு கான்ஸ்டபிள் பெரியவரை நோக்கி, “சாச்சா டீக் ஹோ? ரப்பட் லிக்வானா ஹை கே?” என்று அதிகார தோரணையில் கேட்க, பெரியவர், “அதெல்லாம் தேவையில்லை. தவறு என்னுடையதுதான். இவன் பாவம் என்னைக் காப்பாற்றத்தான் முயற்சித்தான். அவனை முதலில் கவனி” என்றார்.  ஆனாலும் அவருடைய கால் முட்டியிலும் இரண்டு கைகளிலும் ஏற்பட்ட சிராய்ப்பினால் ரத்தம் கசிந்து கொண்டுதான் இருந்த து.

அவரை விட்டு அஸ்வத்தாமனை நோக்கிப் போன இரு கான்ஸ்டபிள்களும், அவனிடம், “ஹான் பய்யா, க்யா சக்கர் ஹை?” என்றவாறே ஏதாவது கிடைக்குமா என்ற நோக்கில் அவனுடைய கண்ணுக்குள் நுழைவது போல அவனை முறைத்துப் பார்த்துக் கேட்டனர்.  “எக்ஸ் ஏர்ஃபோர்ஸ்” என்றான் அஸ்வத்தாமன்.  “அதுக்கென்ன?   ஏர்போர்ஸில் வேலை செய்தால் இப்படி ஏதாவது கிழவர் மீது வண்டியை ஏற்றுவதற்கு லைசன்ஸ் கொடுப்பார்களா? என்று எகத்தாளமாக க் கேட்டான்.  பிறகு கூடியிருந்த ஏழெட்டு ஆட்களிடம் “இங்கே நடந்தது என்ன என்று சொல்வதற்கு யாராவது தயாராக இருக்கிறீர்களா?” என்று கேட்க அநேகமாக எல்லோரும் ஒன்று அந்தக் கட்டிடத்தின் ஈசானிய மூலையில் சிறுநீர் கழிக்கவோ அல்லது தேனீர் கடைகளை நோக்கியோ அவசரமாக நகர்ந்து சென்று இடத்தைக் காலி செய்தார்கள். பிளாட்பாரத்தின் ஓரத்தில் பெரியவரும் அஸ்வத்தாமனும்  நிறைமாத கர்ப்ப வயிற்றைச் சுமந்து நின்ற   இரு கான்ஸ்டபிள்கள் மட்டுமே இருந்தனர்.  

அதுவரை அஸ்வத்தாமனிடம் எதுவும் பேசாமல் இருந்த பெரியவர் அவனை அருகில் அழைத்தார்.  “மதராசியா நீ?  பயப்படாதே.  தவறு என்னுடையதுதான். நான் அவர்களை அனுப்பி விடுகிறேன்” என்று கூறி உட்கார்ந்த இடத்திலிருந்தே போலீஸ்காரர்களை நோக்கி அருகே வருமாறு சைகை செய்தார்.  “உனக்கு இங்கே ஒன்றும் கிடைக்காது.  கொடுத்தால் நான் தான் புகார் கொடுக்கணும். தவறு என்னுடையதுதான். இதுக்கு மேலே இந்தப் பையனைத் தொந்தரவு செய்தால் உன்னை சும்மா விடமாட்டேன். என் மருமான்  மேற்கு டெல்லி டெபுடி கமிஷனராக இருக்கிறான். அவனை வேண்டுமானால் இங்கே வரச்சொல்லட்டுமா? நானும் என் கிராமத்தின் முக்யாதான்.    உன்னுடைய பெயரோடு புகார் கொடுத்தால உன் யூனிபார்ம் கழற்ற வேண்டியிருக்கும். இடத்தை சீக்கிரம் காலி செய்” என்றார்.

பெரிய தொந்தியின் முகத்தில் சற்றுக் கலவரம் தெரிந்தது. இன்னொரு கொஞ்சம் சின்ன தொந்தி, “சாச்சா, நாங்கள்   தவறாக ஒன்றும் பேசலையே.  என்ன நடந்தது என்றுதானே கேட்டோம். நீங்களே தவறு உங்களுடையது என்பதால் எங்களுக்கு இங்கே வேலையில்லை.  உங்களுக்கு வேண்டுமானால் ஆஸ்பத்திரி போவதற்கு நூறுக்கு போன் செய்து வண்டியை வரவழைக்கட்டுமா? என்று கேட்டான்.

அதெல்லாம்  தேவையில்லை.  பார்த்துக் கொள்கிறேன். நீ கிளம்பு என்று அவர்களைத் துரத்தி விட்டு, அஸ்வத்தாமனை நோக்கி, “வா, ரெண்டு பேரும் வில்லிங்டன் ஆஸ்பத்திரி போய் சிராய்ப்புக்கு மருந்து போட்டு ஊசியும் போட்டுக் கொள்ளலாம். அப்படியே வீட்டுக்குப் போகாதே.  அவசர வேலை ஏதாவது இருக்கா என்று கேட்டார்.

அஸ்வத்தாமன்  எதுவும் பேசத் தோன்றாமல் அப்படி எல்லாம் இல்லை அங்கிள் ஜி. உங்களால் வண்டியில் வரமுடியுமா? என்று கேட்டான்.

“இது ஸ்டீல் பாடி. இந்த ஜாட்டுக்கு இந்த அடியெல்லாம் ஒன்றும் கிடையாது. மல்யுத்தம் செய்யற உடம்பு இது. நான் பார்க்காத அடியா. நீ கவலைப்படாதே. உனக்குக் கட்டுப்போட வைத்து பத்திரமாக வீட்டுக்கு அனுப்புகிறேன்” என்றார். 

“கட்டுப்போடற அளவுக்கு எனக்கு அடியில்லை அங்கிள்ஜி. உங்களுக்குத்தான் பார்க்கணும்” என்றான் அஸ்வத்தாமன்.

“திடீரென்று விழுந்த அதிர்ச்சியில் கொஞ்சநேரம் ஒருமாதிரி இருந்தது. இப்போ கொஞ்சம் பரவாயில்லை. நாலைந்து இடத்தில் சிராய்ப்பு இருக்கு. மருந்து போட்டுக்கலாம். சரியாகிவிடும். என்னோடு ஆஸ்பத்திரிக்கு வருவாயா?” என்று கேட்டார்.

அவசியம் வர்றேன் அங்கிள்ஜி என்றவாறே சிரமப்பட்டு வண்டியில் ஏறி உட்கார்ந்தான். பெரியவர் உட்காருவதற்கு வசதியாக முன்னகர்ந்தான். பெரியவர் ஆஸ்பத்திரி வாசலை அடைந்ததும் மெல்ல நொண்டிக்கொண்டே ஓபிடியை நோக்கிப் போனார். ஆளுக்கு ஆள் அங்கு தலைதெறிக்க ஓடிக கொண்டிருந்தார்கள்.  ஓபிடியில் பெயர் பதியும் அவசரம்.  பக்கத்து எமர்ஜென்ஸி வார்டுக்கு அழுக்கான ஆம்புலன்ஸ் ஒன்று யாரையோ இறக்கி விட்டுச் சென்றது.  ரத்தம் சொட்டச் சொட்ட வலியில் துடித்துக் கொண்டிருந்த இளைஞன் ஒருவனை ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்துத் தள்ளிச் சென்றார்கள். 

அஸ்வத்தாமன் மெதுவாக பெரியவர் பின்னே நடந்து சென்றான். அவர்களைக் கடந்து சென்ற ஒரு சதுரவட்டைத் தலையன் பிரேக் அடித்தது போல   ஒரு நொடி நின்று அவரை நோக்கி ஓடிவந்து அவர் காலைத் தொட்டு வணங்கினான். 

“பாய் லாகூ தாவூ, என்ன ஆச்சு?  ஐயய்யோ… வீல் சேர் கொண்டு வரட்டுமா?” என்று பதட்டத்துடன் கேட்டான்.

“அதெல்லாம் வேண்டாம்.  சின்னச் சிராய்ப்புதான்” என்றவர் சிரித்துக் கொண்டே அஸ்வத்தாமனிடம் “எங்கள் கிராமத்துப் பையன். நான்தான் எம்.பி.கிட்டே சொல்லி இவனுக்கு இங்கே வேலை வாங்கிக் கொடுத்தேன். இப்போ இவன் எங்க வீட்டுக்குத் தண்டோரா அடிச்சுடுவான்” என்றவர், வீட்டுக்கெல்லாம் சொல்லாதே. நான் பார்த்துக்கிறேன்” என்றார்.

அதற்குள் அவன் சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லி முடித்திருந்தான். அஸ்வத்தாமனிடம், தாவூஜி எங்களுக்கெல்லாம் கடவுள் மாதிரி. நான் மட்டுமில்லை. இங்கே என்னை மாதிரி பல பேர். ஏன் பெரிய பெரிய டாக்டர்கள் எல்லாம் இவருடைய தயவில் வாழ்கிறவர்கள்” என்று பரவசத்துடன் சொல்லியவாறே பரபரப்பாக ஓடி ஒரு வீல்சேர் எடுத்து வந்து முன்னால் நின்றான். சிரித்துக் கொண்டே ஓங்கி அவன் முதுகில் அடித்து விட்டு நகர்ந்தார் பெரியவர்.  ஆனால் அவன் கூடவே அவருடன் நடந்து வந்து, எமர்ஜென்சி வார்டு அழைத்துப் போய் அங்கு அறை வாயிலில் நின்றிருந்த ஒருவனிடம் ஏதோ சொன்னான்.

அவன் உள்ளே போய் ஒரு தடிமனான கண்ணாடி அணிந்த பெண் டாக்டர் ஒருத்தியுடன் வந்தான். அந்தப் பெண் பதறியவாறு, “சாச்சாஜி, என்ன ஆச்சு? உள்ளே வாங்க” என்று கைத்தாங்கலாக அழைத்துப் போனாள். பெரியவர் பின்னால் தயங்கி நின்ற அஸ்வத்தாமன் கையைக் கெட்டியாகப் பிடித்து அவனையும் உள்ளே இழுத்துச் சென்றார். உள்ளே குழுமியிருந்த அவசர நோயாளிகளை சற்று விலகியிருக்கச் சொல்லி பெரியவரை ஒரு நாற்காலியில் உட்கார வைத்து தண்ணீர் பாட்டிலை அவரிடம் கொடுத்தாள்.

“ஒன்றுமில்லை. இந்தப் பையன் வண்டிக்குக் குறுக்கில் போய்விட்டேன். பாவம். அவனுக்கும் கொஞ்சம் அடி. அவனை முதலில் பார்” என்றார். அந்தப் பெண் அவன் பக்கம் திரும்பாமல் தரையில் உட்கார்ந்து அவருடைய முட்டியைப் பிடித்து இங்கெல்லாம் சிராய்ப்பு. ரத்தம் கசியுது.  கையைக் காண்பியுங்க… சரி. வந்து இங்கே படுத்துக்குங்க…” என்று படுக்கையைக் காண்பித்தாள்.

“அதெல்லாம் வேண்டாம் மகளே…” என்று தயங்கியவாறு மெல்ல படுக்கையருகில் சென்று படுத்தார்.  மற்றொரு சின்னப்பெண் வந்து அவருக்கு ரத்தக்கொதிப்பை பரிசோதிக்கத் தயாரானது. அந்த அறையில் இருந்த மற்ற சிப்பந்திகள் டாக்டர் பெண்ணின் பரபரப்பைப் பார்த்து அவர்களும் சற்றுப் பரபரப்பாக இருப்பதை அவள் கவனிக்க வேண்டும் என்பது போல அங்குமிங்கும் ஓடி மற்றவர்களைக் காத்திருக்கச் சொல்லி மிரட்டிக் கொண்டிருந்தார்கள்.  

சிலர் அஸ்வத்தாமனைப் பார்த்து வெளியில் இருக்குமாறு சொல்ல, அவன் பெரியவர் பக்கம் கையைக் காண்பிக்க அவனை அன்பொழுக டாக்டர் இருக்கைக்குப் பக்கத்தில் இருந்த முக்காலியில் உட்கார வைத்தார்கள். கம்பவுண்டர் போலிருந்த ஒருவன் அருகில் வந்து அவன் சிராய்ப்புகளை ஆராய்ந்து டிங்ச்சர் தடவத் தொடங்கினான். நேற்றைய இரவின் வாசனை அவன் மூச்சில் இருந்தது. டிங்ச்சர் தடவிய இடங்களில் எரிச்சல் மேலும் சற்று அதிகமானது.

“ஒரு மோட்டார் சைக்கிள் என்னை இடித்து விட்டு ஓடிவிட்டான். இந்தப் பையன்தான் என்னை கவனமாக ஆஸ்பத்திரிக்குக் கூட்டி வந்தான். அவசரமாக ஓடிவந்து விழுந்ததில் அவனுக்கும் கொஞ்சம் சிராய்ப்பு” என்றார் பெரியவர். அஸ்வத்தாமன் நெகிழ்ந்து நின்றான்.  “சாச்சாஜி, அமைதியாக இருங்கள்.  கொஞ்ச நேரம் ஓய்வெடுங்கள்.  ஒரு மணி நேரத்துக்குப் பிறகு உங்களை மறுபடி செக் பண்ணி அனுப்பிடறோம். பைய்யா உங்களை அழைத்துப் போக வந்துக்கிட்டிருக்காரு” என்ற அந்த டாக்டர் பெண் அவரிடம் ஒரு ஜூஸ் டப்பாவைக் கொடுத்து விட்டு மற்ற நோயாளிகளைப் பார்க்கப் போனாள்.

ஒரு நர்ஸ் பெண் வந்து அஸ்வத்தமானுக்கும் ஒரு ஜூஸ் டப்பாவைக் கொடுத்து விட்டுப் போனாள். பெரியவர் உயரமான அந்தக் கட்டிலில் கால்களைத் தொங்கப் போட்டு உட்கார்ந்து அஸ்வத்தாமனை அருகில் அழைத்தார்.  “என் பையன் கொஞ்ச நேரத்தில் வந்துவிடுவான். நீ வேண்டுமானால் கிளம்பிப் போ” என்றார்.  “உங்க பையன் வந்ததும் நான் கிளம்பறேன் அங்கிள் ஜி” என்றான்.  “எனக்கு ஒண்ணும் இல்லை. நான் நல்லாத்தான் இருக்கேன்.  நீ கிளம்பு” என்றார். அவன் தயங்கியவாறு அங்கேயே நின்றான்.  “கொஞ்சம் தூங்குங்க. உங்க பையன் வந்ததும் நான் கிளம்பறேன்” என்றான்.

இனியும் வற்புறுத்த மாட்டேன் என்பது போல அவர் மீண்டும் சாய்ந்து படுத்துக் கொண்டார். மீண்டும் ஸ்டூலில் உட்கார்ந்து கொண்டு சின்னக் குரலில் சுசீலாவுக்கு போன் செய்தான்.  சுருக்கமாக விஷயத்தைச் சொன்னான். மறுமுனையில் பதறிப்போன அவள், “அங்கே வரணுமா?” என்று கேட்டாள். “கொஞ்ச நேரத்தில் வீட்டுக்குப் போய்விடுவேன்” என்று அவளை சரிப்படுத்தி அறைக்குள் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.

விபரீதமாகக் கலைந்து போயிருந்த ஒரு பெண்ணை ஸ்ட்ரெச்சரில் வைத்துத் தள்ளிக் கொண்டு சிலர் வந்தார்கள். உடன் வந்த பெண்களில் சிலர் பெருங்குரலெடுத்து அழுது கொண்டே ஸ்ட்ரெச்சரின் பின்னால் ஓடி வந்தார்கள். பெண்ணின் கடைவாயில் நுரை தள்ளியிருந்தது. எதையாவது குடித்திருப்பாள். அந்த அறையே பரபரப்பானது. டாக்டர் பெண் மீண்டும் ஓடி வந்து அந்தப் பெண்ணைப் பரிசோதித்து விட்டு ஜூனியர் பெண்ணைக் கூப்பிட்டு நோயாளிக்குத் தரவேண்டிய அவசர முதல் உதவி பற்றி விளக்கி விட்டு   ஒரு தாளில் எதையோ எழுதிக் கூட வந்தவன் கையில் அதைத் திணித்தாள்.  மருந்து வாங்கி வர அவன் அங்கிருந்து தலைதெறிக்க ஓடத் தொடங்கினான்.

இந்தக் களேபரத்தில் பெரியவர் பக்கம் லேசாக எட்டிப் பார்த்தான் அஸ்வத்தாமன்.   நன்கு அசந்து தூங்கிக் கொண்டிருந்தார். விஷம் குடித்த பெண்ணுடன் வந்த கும்பல் முதல் உதவிப் பெண்ணுடன் பக்கத்து அறைக்கு நகர்ந்ததும் மீண்டும் அறை நிசப்தமாயிற்று. டாக்டர் பெண் பெரியவர் அருகில் சென்று அவரைக் கூர்ந்து கவனித்து விட்டு மீண்டும் தன்னுடைய சேரில் சென்று உட்கார்ந்து  கொண்டாள்.  விஷம் குடித்த பெண்ணின் உறவினர்கள் வேதனையான முகங்களுடன்   சூழ்ந்து கொண்டனர். சில போலீஸ்கா ர்கள் வந்து அறைக்குள் எட்டிப் பார்த்து விட்டு அவசரமாகப்  பக்கத்து அறையை நோக்கிச் சென்றார்கள்.

மருத்துவமனை வாசலில் எதிர்கொண்ட சதுரவட்டை எங்கிருந்தோ திடீரென்று  அறைக்குள் பிரவேசித்து பெரியவரை எட்டிப் பார்த்து விட்டு மொபைல் போனில் யாரிடமோ உரக்க அறை எண்ணைச் சொன்னான்.  சிறிது நேரத்தில் மிகவும் ஆஜானுபாகர்களாக ஒவ்வொருத்தனும் சுமார் ஆறரை அடிக்கு திண்டு போலத் திரண்டிருந்த புஜங்களுடன் அறைக்குள் பிரவேசித்தார்கள். நேராகப் பெரியவர் படுத்திருந்த கட்டில் அருகில் சூழ்ந்து கொண்டு “பாபுஜி… பாபுஜி… என்று பதறினார்கள். டாக்டர் பெண்அவர்கள் அருகில் விரைந்து சென்று தொந்தரவு செய்ய வேண்டாம். அவர் கொஞ்சம் தூங்கட்டும். அவருக்கு ஒன்றுமில்லை.  மோட்டார் சைக்கிளில் யாரோ அவரை இடித்திருக்கிறார்கள். அதோ இவர்தான் இங்கே கூட்டி வந்தார்” என்று அஸ்வத்தாமனைக் காட்டினாள்.

அந்தக் கும்பல் அப்படியே வந்து அஸ்வத்தாமனை சூழ்ந்து கொண்டது. அவர்களில் ஒரு ஆஜானுபாகன் அவன் சட்டையைக் கொத்தாகப் பிடித்துத் தூக்காத குறையாகக் கேட்டான்.    நீதான் அவரை இடிச்சியா ஹராம் கோர்…?” என்று உறுமினான். எவனோ முதுகில் பளாரென்று அறைந்தான். ஒரு முரட்டுத்தனமான முஷ்டி விலாவில் வலுவாக இறங்கியது. அஸ்வத்தாமன் அடுத்த அடிகளை வாங்கிக் கொள்வது போல ஸ்டூலில் இருந்து எழுந்து குனிந்து நின்றான். அடுத்த அடி விழுவதற்குள் பெரியவர் அவர்களுக்கு இடையில் நின்றிருந்தார். அவர்களில் ஓரிருவரை குன்சாவாகப் பிடித்துத் தள்ளி ஒருவன் கன்னத்தில் பளீரென்று அறைந்தார். டாக்டர் பெண் பதட்டத்துடன் நாற்காலியிலிருந்து எழுந்து நின்றாள்.

“ஹராம் ஜாதோ…   எவனோ இடித்து விட்டு ஓடி விட்டான். இந்தப் பையன்தான் என்னைப் பத்திரமாக இங்கே கூட்டி வந்தான். இவனைப் போய் அடிக்கிறீர்களே… முட்டாள்களே… நகருங்கடா என்று எல்லோரையும் விலக்கி விட்டார். அவர் அருகில்  வந்து நின்றதை உணர்ந்ததும் அந்த ஆஜானுபாகர்கள் எல்லோரும் இவனை மறந்து நெகிழ்ச்சியுடன் பாபுஜி என்று பெரியவரைக் கட்டிக் கொண்டனர்.  ஒருவன் நெடுஞ்சாண்கிடையாக காலில் விழுந்து அழத்தொடங்கினான்.

“யஹான் ஜ்யாதா டிராமா நஹீன். பாஹர் சலோ…” என்று எல்லோரையும் மேய்ப்பது போலத் தள்ளிக் கொண்டு வெளியில் கிளம்பினார். டாக்டர் பெண் அருகில் சென்ற அவள் தலையைத் தொட்டு விடை பெறுவது போலத் தலையசைத்தார். அந்தப் பெண் கண்ணீருடன் தலையசைத்த து. உள்ளே அழைத்து வந்த சதுரவட்டை கலங்கிய கண்களுடன் அவரைப் பின்தொடர்ந்தான்.

கூடவே அவஸ்வத்தாமனை லேசாக நெட்டித் தள்ளிக்கொண்டு வெளியே வந்த   மல்லர்களில் ஒருவன், “மாஃப் கரோ பாய்… கல்தி ஹோகயா என்று தோளில் கையை வைத்து அழுத்திக் கேட்டான், “அந்தத் தேவடியா மகனைப் பார்த்தியா?” நம்பர் ஏதாவது குறித்து வைத்திருக்கிறாயா?” என்று கோபத்துடன் கேட்டான். அஸ்வத்தாமன் மரணபீதியுடன் முகத்தை வைத்துக் கொண்டு அவர்களுடன் நகர்ந்தான்.  “பாபுஜி எங்க அகாடாவின் மாஸ்டர்.  எங்களுக்குக் குஸ்தி வாத்தியார்.  அவர் எங்க தெய்வம். அவரை ஒருத்தன் இடித்துத் தள்ளி விட்டு ஓடியிருக்கான்  என்றால் அவன் உயிருடன் இருக்கக் கூடாது.  நீ பார்க்கலைன்னா பாபுஜியோட மருமகன் போலீஸ் டிசிபி கிட்டே சொல்லி அங்கே சிசிடிவி ஃபுட்டேஜ் இருக்கான்னு பார்க்கிறோம்” என்றான்

அஸ்வத்தாமனுக்கு மேலும் குலை நடுங்கியது  பின்னால் லேசாக நொண்டிக் கொண்டே வந்த பெரியவர், “ மேரி கஸம். யாரும் அப்படி எல்லாம் எதுவும் செய்யக் கூடாது மூர்க்கர்களே.  மரியாதையா போட்டியிலே கவனம் செலுத்தணும். ரொம்ப முக்கியமான போட்டி அது.  எங்காவது எதையாவது செய்து வைத்து நாளைக்கு பிரச்சினையில் மாட்டிக்காதீங்க.  குண்டாகர்தி செய்யறதுக்கா உங்களைத் தயார் பண்றேன்?” என்றவர் அஸ்வத்தாமன் பக்கத்தில் வந்து நின்று அவன் தோள் மீது கை வைத்தார்.

“பத்திரமாகப் போ… ரொம்ப நன்றி உனக்கு… ஜீத்தோ ரஹோ” என்று  மல்லர்கள் பாணியில் தட்டிக் கொடுத்தார். அஸ்வத்தாமன் கண்களில் கண்ணீர் திரண்டது. என்ன செய்வது என்று அறியாமல் நெகிழ்ந்து நின்று அவரை இறுக கட்டிக் கொண்டு விம்மினான். அவன் முதுகில் தட்டியவாறு அவனிடமிருந்து விலகிய பெரியவர், கூட இருந்தவர்களில் ஒருவரிடம் கைநீட்டி, ஏதாவது பணம் இருந்தால் கொடு” என்று கேட்டு வாங்கிக் கொண்டார்.  , “மனைவிக்கு இனிப்பும் குழந்தைகளுக்கு ஏதாவது சாப்பிட வாங்கிக் கொடு.  தாதாஜி கொடுத்தார் என்று சொல்” என்று அவனிடம் தந்தார்.  கண்ணீர் மல்க அதை மறுக்கத் தோன்றாமல்  பணத்தைக் கையிலேயே வைத்துக் கொண்டு உறைந்து நின்றிருந்தான் அஸ்வத்தாமன். அவனை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வருவது போல ஒவ்வொரு மல்லனும் “மாஃப் பரோ பாய்… கல்தி ஹோகயா… ” என்று தனித்தனியாக அவனைக் கட்டிப் பிடித்தனர்.

அவர்களிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட அஸ்வத்தாமன் பெரியவர் முகத்தையே பார்த்தவாறு மெதுவாகப் பின்னகர்ந்து,பின்னர் திரும்பி வேகமாகத் தன் மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்ட இடத்துக்கு விரைந்து சென்றான்.

ஆஸ்பத்திரி வளாகத்தில் வேதனை கலந்து முகங்களும், அழுத முகங்களும் ஒப்பாரி வைத்து அழுது  வீங்கிய கண்களுமாகப் பெண்களும் ஆண்களும் அவனைக் கடந்து அவசரமாக விரைந்து கொண்டிருந்தார்கள். 

டெல்லியின் மாலைக் காற்று லேசான சிலிர்ப்புடன் உடலைத் தழுவி  மனதின்றி நழுவிச் சென்றது. 

Exit mobile version