குலசேகரனை உங்களுக்குத் தெரியாது. அவர் பெரிதாக வேலைக்குப் போனதில்லை. பெரிதாக எந்த வேலையிலும் முழுதாகப் பொருத்திக் கொண்டது இல்லை. ஹோட்டல் உரிமையாளராகவோ ஹோட்டல் சர்வராகவோ இல்லை. வங்கியில் பணி புரியவில்லை. வாடகை கார் ஓட்டவில்லை. சாதாரண பெட்டிக் கடையோ அல்லது மளிகைக் கடையோ வைத்திருக்கவில்லை. அவர் வசிக்கும் பகுதிக்கு சென்று அவர் பெயரை மட்டும் சொல்லி அவர் வசிக்கும் வீட்டினைக் கண்டுபிடிப்பது என்பது துர்லபம் தான்.
பேங்க் மேனேஜர் வீடு எங்கே இருக்கிறது என்று கேட்டுப் பாருங்கள். எந்த தெருவில் எத்தனையாவது வீடு வீட்டு எண் என்ன வீட்டிற்கு என்ன கலர் பெயிண்ட் அடித்திருப்பார்கள் வாசல் பெரிய கேட் என்ன கலர் பெயிண்ட் செய்து இருக்கும் பார்க்கிங்கில் என்ன கார் நிற்கும் என்பது வரை விபரம் சொல்லி உங்களை அனுப்பி வைப்பார்கள். நான் யாரையும் குறை சொல்லவில்லை. உங்களையும் குறை சொல்லவில்லை. உலக நடப்பு இப்படி இருக்கிறது என்று சொல்கிறேன். அவ்வளவு தான்.
குலசேகரனை இருபது ஆண்டுகளுக்கு முன்னால் சந்தித்தேன். எனது நண்பரின் நண்பர் அவர். நாங்கள் இருவரும் சந்திக்க வேண்டும் என எனது நண்பர் விரும்பினார். அதனால் அழைத்து வந்தார். நான் சாதாரணமான யதார்த்தமான ஒரு விஷயத்தைச் சொல்ல அவர் அந்த சாதாரணமான யதார்த்தமான விஷயத்தை மறுத்து ஏதோ சொல்ல எங்களுக்குள் முதல் சந்திப்பிலேயே சிறு பூசல் ஏற்பட்டு விட்டது. அந்த சந்திப்பு அவ்விதம் ஆனது குறித்து நாங்கள் மூவரும் வருந்தினோம்.
மறுநாள் பிரகாசத்தைச் சந்தித்த போது குலா எப்போதும் அப்படித்தான்; அதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றார். குலசேகரன் பற்றி ஏதோ சொல்ல வந்து பின்னர் தயங்கி ஒன்றும் சொல்லாமல் இருந்து விட்டார். என்ன சொல்ல வந்தீர்கள் என்று கேட்ட போது ஒன்றும் இல்லை என்று கூறினார். நீங்கள் நினைப்பது புரிகிறது. இதெல்லாம் பெரிய விஷயம் இல்லைதான். எளிய மானுடர்கள். எளிய மானுடர்கள் ஆற்றிக் கொள்ளும் சிறிதும் பெரிதுமான செயல்கள். சிறிய செயல்கள் என்றாலும் வலி என்பது இருக்கத்தானே செய்கிறது. எது சிறிய வலி எது பெரிய வலி என்பதை அனுபவம்தானே உறுதி செய்து கொள்கிறது. குலா அவருக்கு நிகழ்ந்த சம்பவம் ஒன்றைக் கூறினார். கல்லூரியில் அக மதிப்பீடு என்ற முறை உண்டு. பாடத்தில் நூறு மதிப்பெண்ணுக்குத் தேர்வு எனில் அதில் இருபத்து ஐந்து மதிப்பெண் அக மதிப்பீட்டின் படி வழங்கப்படும். வருகைப் பதிவுக்கு பத்து இடைத்தேர்வுகளில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் பத்து. அசைன்மெண்ட்களை குறிப்பிட்ட காலத்தில் சமர்ப்பிப்பது அடிப்படையில் ஐந்து. நூறு மதிப்பெண்ணில் அக மதிப்பீடு இருபத்து ஐந்து போக மீதி எழுபத்து ஐந்து மதிப்பெண்ணுக்கு பரீட்சையில் தேர்வு எழுத வேண்டும். அந்த எழுபத்து ஐந்து புற மதிப்பீடு. அகம் புறம் இரண்டும் சேர்த்து நூற்றுக்கு ஐம்பது மார்க் இருந்தால் தேர்ச்சி. குலா கல்லூரி முதல் ஆண்டில் ஒரு பாடத்தில் இருபத்து ஐந்துக்கு ஒன்பது பெற்றிருக்கிறார். பொதுவாக அதாவது சராசரியாக யாரும் இருபதுக்கு மேல் பெறுவார்கள். இவர் தான் சராசரிக்கும் கீழ் ஆயிற்றே. அதனால் ஒன்பது.
கல்லூரியில் கடைசி ஆண்டில் ஒரு பாடத்தில் அக மதிப்பீடாக ஏழு மதிப்பெண் பெற்றிருக்கிறார். ஒரு கோட்டை அழிக்காமல் அதனை சிறிய கோடாக்குவது எப்படி என்ற அக்பரின் கேள்விக்கு பீர்பால் அதன் பக்கத்தில் ஒரு பெரிய கோட்டை வரைந்த கதை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள் தானே? நாம் வலி பற்றி பேசிக் கொண்டிருந்தோம். எது சிறிய வலி எது பெரிய வலி என்பதை அனுபவம் தான் தீர்மானிக்கிறது என. ஒன்பது மார்க் என்பது வலி. ஏழு மார்க் வலி ஏற்படும் போது ஒன்பது மார்க் வலி சிறியதாகி விடுகிறது. குலா படித்த பி.காம் மூன்று ஆண்டோடு முடிந்து விட்டது. இல்லையென்றால் ஏழு மார்க் வலி கூட சின்னதாயிருக்கக்கூடும்.
பி.காமில் நல்ல மதிப்பெண் பெற்று தான் பாஸ் செய்தார். இரண்டு பாடங்களில் மட்டும் தான் அகமதிப்பீட்டில் ஒன்பதும் ஏழும். மற்ற பாடங்களில் அக புற மதிப்பீடுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்றே பாஸ் செய்தார்.
குலா நல்ல மனிதர். பழகுவதற்கு இனிய மனிதர். எல்லாருக்கும் உதவி செய்வார். தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என்ற பேதம் கிடையாது. உதவி செய்வதில் முதல் ஆளாய் சென்று நிற்பார். ஆறு மணி நேரப் பயணம் கொண்ட ஒரு பேருந்தில் இருக்கைகள் அனைத்தும் நிறைந்து ஒரே ஒரு சீட் இருந்தது. குலா அதில் சென்று அமர்ந்து கொண்டார். பஸ் கிளம்பி ஐந்து நிமிடத்தில் ஒரு நிறுத்தம். ஒரு வயதான மூதாட்டி ஏறி விட்டார். குலா தன் இருக்கையை அவருக்கு அளித்து விட்டு ஆறு மணி நேரமும் நின்று கொண்டே பயணித்தார். இதுதான் குலா. இப்படித்தான் குலா.
முதல் சந்திப்பில் பூசல் என்று சொன்னேனே? அதன் பின் மூன்று நாட்கள் கழித்து கடைவீதியில் நான் நடந்து சென்று கொண்டிருந்த போது ஆராவமுதன் ஆராவமுதன் என யாரோ அழைத்தார்கள். பெயர் தான் ஆராவமுதன் என எனக்கு வைத்தார்களே தவிர வீட்டில் என்னை அமுது என்று தான் அழைத்தார்கள். அதே பெயர் புழக்கத்தில் நிலைத்து விட்டது. பள்ளி கல்லூரி வருகைப் பதிவேடு தவிர வேறு எதிலும் என் பெயர் இவ்விதம் முழுமையாக அழைக்கப்பட்டதில்லை. வியப்புடன் யார் என்று பார்த்தேன். குலா புன்னகைத்துக் கொண்டிருந்தார். தேனீர் அருந்த அழைத்தார். முதல் சந்திப்பின் பூசல் காணாமல் போய் சகஜமாக பேசிக் கொண்டிருந்தோம்.
பேச ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில், ‘’ பிரகாசம் உங்க கிட்ட சொல்லியிருப்பார்னு நினைக்கறன். நான் டிராங்குலைசர்ஸ் எடுத்துக்கறன்’’ என்றார் குலா. பிரகாசம் என்னிடம் சொல்லவில்லை. இங்கிதம் அறிந்த மனிதர் அவர். ‘’சமயத்துல என்னோட எமோஷன்ஸ் கட்டுப்பாட்டுல இருக்கறதுல்ல’’. குலா அவருடைய டிராங்குலைசர் கதையை சொல்லத் தொடங்கினார். என்னிடம் ஏன் சொல்கிறார் என்பது எனக்கு புரியவில்லை. அவர் சொல்லும் விஷயங்களும் எனக்கு முழுக்க ஏறவில்லை. ஒரு சின்ன மாத்திரையை உணவுக்குப் பின் காலை மதியம் இரவு என மூன்று வேளை சாப்பிட வேண்டும் என்றார். மருந்துக்கு மாதம் ஆறாயிரம் ரூபாய் செலவாகிறது என்றார். தேனீர் அருந்தியதும் பக்கத்தில் இருந்த பெட்டிக் கடைக்குச் சென்று சிகரெட் வாங்கி பற்ற வைத்தார். எனக்கு ஒரு சிகரெட்டை நீட்டினார். பழக்கமில்லை என்றேன். நல்ல விஷயம் என்றார். என்னுடைய சிற்றறிவுக்கு எட்டிய ஒரு விஷயத்தைக் கேட்டேன். டிராங்குலைசர்ஸ் மனசு மூளை சம்பந்தமான விஷயமாக இருக்கும் போது சிகரெட் பிடிக்கலாமா என்றேன். நிகோடின் மூளைக்குச் சென்றால் டிராங்குலைசர் செய்யும் வேலையை தடுத்து நிறுத்தாதா என்று கேட்டேன். சிகரெட் இல்லாமலும் தன்னால் இருக்க முடியாது என்றும் டிராங்குலைசர் இல்லாமலும் தன்னால் இருக்க முடியாது என்றும் குலா சொன்னார். ‘’என்னால சிகரெட்டை கட்டுப்படுத்த முடியாது’’. குலா மது அருந்த மாட்டார். அவரது சிக்கல் சிகரெட். தேனீர் அருந்தினால் உடன் சிகரெட் பிடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு பாக்கெட் வந்து விடும்.
ஊரில் அவருக்கு ஒரு வேலி நிலம் இருந்தது. ஒரு வேலி என்றால் ஏழு ஏக்கர் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். தெரிந்திருக்கலாம் தெரியாமலும் இருக்கலாம். குளிர்சாதனப் பெட்டியில் உணவுப் பொருட்களை சேர்த்து வைத்து சமையல் செய்யும் வழக்கம் இப்போது பரவலாகி விட்டது. சராசரியாக பாதிக்குப் பாதி பேரின் வழக்கம் அதுதான் என்றாகி விட்டது. இந்நிலையில் உங்களிடம் குழி காணி வேலி கணக்கை பேசிக் கொண்டிருக்கிறேன். ஒரு வேலி நிலம் என்பது ஒரு வருடத்துக்கு சர்க்கார் குமாஸ்தா ஒருவரின் வருமானத்தை அளிக்கக் கூடியது. என்றாலும் குலாவோ அவரது குடும்பத்தினரோ விவசாயம் செய்யவில்லை. சொந்தக்காரர் ஒருவரிடம் குத்தகைக்குக் கொடுத்திருந்தனர். அதனால் பெரிய பணக் கஷ்டம் இல்லை. மாதம் ஆறாயிரம் டிராங்குலைசர் மருந்து செலவையும் சேர்த்து சமாளிக்க முடிகிறது.
குலா வீட்டில் அவரைச் சேர்த்து நான்கு பேர். அவருடைய பெற்றோர், அண்ணன் ஒருவர். குலா வேலைக்குப் போக வேண்டும் என்பது அவருடைய குடும்பத்தின் எதிர்பார்ப்பாக இருந்தது. அவரும் வேலைக்குப் போனார். எனக்குத் தெரிந்து பத்து இடத்துக்காவது வேலைக்குப் போயிருப்பார். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு காரணம். அத்தனையிலிருந்தும் விலகினார். அவர் ‘’சென்சிடிவ்’’. எல்லாம் சரிதான். பத்து இடத்தில் வேலையிலிருந்து திரும்பி வந்தால் ஊர் என்ன சொல்லும். நீங்கள் என்ன சொல்வீர்கள்?.
குலா வீட்டில் சென்னைக்கு செல்லலாம் என முடிவெடுத்து சென்றார்கள். அவர் அண்ணன் உத்யோகத்துக்கு குடும்பம் சென்னையில் இருப்பது உதவிகரமாக இருக்கும் என அவர்கள் எண்ணினர். குலாவும் சென்றார். அவருக்கு அதில் பிரத்யேக ஈடுபாடோ விலக்கமோ இல்லை.
பிரகாசத்தை எப்போதாவது பார்த்தால் குலா பற்றி பேசிக் கொள்வோம். அவர் எங்களுக்கு செய்த உதவிகள் தான் எப்போதும் எங்கள் பேசுபொருளாக இருக்கும். பண உதவியா? உதவி என்றால் பண உதவி தானா? அதைத் தவிர எத்தனையோ உதவிகள் செய்ய முடியும். அதனை நீங்கள் உணர்ந்திருந்தால் நீங்கள் நல்லூழ் கொண்டவர். வானத்தின் ஆசி உங்களுக்கு இருக்கிறது. ஒருமுறை நான் டூ-வீலரில் சென்று கொண்டிருந்தேன். எதிரில் குலா எதிர்ப்பட்டார். எங்கே செல்கிறேன் என்று கேட்டேன். நண்பனின் குடும்பத்தினர் வெளியூருக்கு வீடு மாறுகிறார்கள். அங்கே அவர்களுக்கு உதவ செல்கிறேன் என்றேன். குலா நானும் வருகிறேன் என்று இணைந்து கொண்டார். அவர்கள் வீட்டில் இருந்த பொருட்களை கட்டி வைத்தது முதல் லாரியில் ஏற்றி விட்டது வரையிலான எல்லா பணிகளையும் அவரே செய்து முடித்தார். அவர் பணி புரியும் விதத்தைக் கண்டு நாங்கள் திகைத்து நின்றோம்.
பிரகாசம் எப்போதும் ஒரு சம்பவம் சொல்வார். பிரகாசமும் குலாவும் வெளியூர் சென்று விட்டு டூ-வீலரில் நள்ளிரவில் ஊர் திரும்பியிருக்கிறார்கள். ஊருக்கு ஐந்து கிலோ மீட்டர் முன்னால் சாலையில் ஒருவர் ரத்த வெள்ளத்தில் கிடந்திருக்கிறார். குலா அவரை சாலை ஓரத்துக்குக் கொண்டு வந்து குடிக்க தண்ணீர் கொடுத்து ஆம்புலன்ஸுக்கு ஃபோன் செய்து வரச் செய்து மருத்துவமனையில் சேர்த்து அவர் சொந்தக்காரர்கள் வரும் வரை உடனிருந்து காலை எட்டு மணிக்கு வீடு திரும்பியிருக்கிறார். ஆம்புலன்ஸில் ஏறிக் கொண்ட குலா தன்னை வீட்டுக்குப் போகச் சொல்லி விட்டார் என்றார் பிரகாசம்.
சென்னை வாழ்க்கை அவருக்கு பொருந்தவில்லை. அல்லது சென்னை வாழ்க்கைக்கு அவரால் பொருந்திக் கொள்ள முடியவில்லை. அவர் சென்னையை நேசிப்பவர். சிரமங்கள் இருந்தாலும் சென்னை குறித்து எதிர்மறையாக அவர் சொல்லி நான் கேட்டதில்லை. வீட்டில் அவருக்கு பலவிதமான நெருக்கடிகள் கூடிக் கொண்டேயிருந்தன. அவர் அண்ணனுக்குத் திருமணம் ஆனது. அவர் தனிக்குடித்தனம் சென்றார். குலாவுக்கும் திருமணம் ஆனது. நான் திருமணத்துக்குச் சென்றிருந்தேன். பிரகாசமும் வந்திருந்தார். குலா எங்களைக் கண்டதும் மிகவும் உற்சாகமாக இருந்தார்.
திருமணத்துக்குப் பின்னான அவரது வாழ்க்கை குறித்து கேள்விப்பட்ட எதுவும் உவப்பானதாக இல்லை. அதிக அளவில் டிராங்குலைசர் எடுத்துக் கொள்ள வேண்டிய நிலையில் அவர் இருப்பதாக நான் கேள்விப்பட்டேன். குடும்பத்தில் அமைதியின்மை சதா சர்வ காலமும் இருப்பதாகவும். குலாவின் மனைவி வீட்டில் இருக்கும் சிக்கல்களைத் தவிர்க்க வேலைக்குச் செல்ல துவங்கியிருப்பதாகவும் கேள்விப்பட்டேன். ரொம்ப நாட்களுக்குப் பின் குலா ஒரு நாள் ஃபோன் செய்தார். ‘’ஆராவமுதன் ! குழந்தை பொறந்திருக்கு. பெண் குழந்தை’’ என்றார். பெண் குழந்தை எனக் கூறிய போது தழுதழுத்து விட்டார். குழந்தைக்கு ஓராண்டில் குலதெய்வம் கோயிலில் காது குத்து விழாவுக்கு வருமாறு என்னை அழைத்திருந்தார். புன்னகைத்து பொதுவாக சில வார்த்தைகள் பேசிக் கொள்ளும் நிலையே இருந்தது. லௌகிகமான அத்தனை சிக்கல்கள் அவர்கள் குடும்பத்தைச் சூழ்ந்திருந்தன.
எப்போது சொந்தக்காரர்கள் கல்யாணத்துக்கு வந்தாலும் ஃபோன் செய்வார். தவறாமல் சென்று சந்திப்பேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் சந்தித்த போது ஆறு மாதம் மறு வாழ்வு மையத்தில் இருந்தேன் என்று கூறினார். அவர் அதனைக் கூறிய போது அவர் குரலில் இருந்த நடுக்கத்தை உணர்ந்தேன். ‘’இப்ப சிகரெட்டை தொடறதே இல்லை அமுது’’ என்றார். நான் விரிவாக ஏதும் கேட்டுக் கொள்ளவில்லை. நல்லது நடப்பது நல்ல விஷயம் என இருந்து விட்டேன்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பின் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க ஊருக்கு வந்திருந்தார். மண்டபத்திற்குச் சென்று அவரைப் பார்த்தேன். பெரிய பரந்த அந்த திருமண மண்டபத்தில் ஒரு பெரிய மாமரத்தின் அடியில் இரண்டு பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்து பாதி நாள் பேசிக் கொண்டிருந்தோம். அதாவது திருமண விருந்தில் காலை சிற்றுண்டி அருந்தி விட்டு பேசத் தொடங்கினோம். மதிய விருந்து சாப்பிட்டு விட்டு மேலும் இரண்டு மணி நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு காஃபி குடித்து விட்டு விடை பெற்றோம். காலை 9 மணியிலிருந்து மாலை 4 மணி வரை.
குலாவிடம் நிறைய மாற்றங்கள். கூர்ந்து கவனித்தால் தென்படும் சிறு பதட்டம் இப்போது அவரிடம் சுத்தமாக இல்லை. சிகரெட் பிடிப்பதில்லை. நிதானமாகப் பேசுகிறார் . நிதானமாகச் சிந்திக்கிறார்.
‘’ஆராவமுதன் ! ஒய்ஃப் வேலைக்குப் போக ஆரம்பிச்சாங்க. அப்ப வீட்டுல ஒரு சர்வெண்ட் மெய்ட் வந்து பாத்திரம் தேய்ப்பாங்க. வீடு பெருக்குவாங்க. அந்த மெய்ட் அப்பப்ப வருவாங்க. அப்பப்ப லீவு போட்டிருவாங்க. இதனால ஒய்ஃப் ஆஃபிஸ் விட்டு வந்ததும் இந்த வேலையை செய்ய வேண்டியிருக்கற சிரமம். அம்மாவுக்கு உடம்பு முடியாது. இந்த வேலையை செய்ய முடியாது. ஒருநாள் நானே எல்லா வேலையும் செஞ்சு வச்சுட்டேன். நமக்கு இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை. வந்து பாத்த ஒய்ஃப்க்கு ஒரே சந்தோஷம். அப்புறம் மெய்ட் லீவு போடற நாள்ளெல்லாம் நான் அந்த வேலையை செஞ்சன். அப்புறம் மெய்ட் ஐ வேலையில இருந்து நிறுத்திட்டன். மாசம் முப்பது நாளும் நானே அந்த வேலையை செஞ்சன். மெய்ட் க்கு கொடுக்கற ரெண்டாயிரம் ரூபா சம்பளத்தை ஒய்ஃப் எனக்கு கொடுத்திடுவாங்க. நாங்க குடியிருக்கற இடம் ஒரு காம்ப்ளக்ஸ். அங்க மொத்தம் 10 வீடு. எல்லா வீட்லயும் ஹஸ்பண்ட் ஒய்ஃப் ரெண்டு பேருமே வேலைக்குப் போய்டுவாங்க. எல்லார் வீட்லயும் இதே பிரச்சனை. எங்க வீட்ல செஞ்ச வேலையை பத்து வீட்லயும் செஞ்சேன். இதுலயே எனக்கு மாசம் இருபதாயிரம் வருது. காம்ப்ளக்ஸ்ல உள்ள எல்லா குழந்தைகளையும் நான் பக்கத்துல இருக்கற ஸ்கூல்ல கொண்டு போய் விட்டு அழைச்சுட்டு வருவேன். அதுல ஒரு பதினைஞ்சாயிரம். இப்ப மாசம் முப்பத்து அஞ்சாயிரம் சம்பாதிக்கிறன்’’ என்றார்.
நான் ஆர்வத்துடன் அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.
‘’காலைல குழந்தைகளை ஸ்கூல்ல விட்டுட்டு வருவேன். நேரம் ஒன்பதா இருக்கும். பத்து வீட்டையும் கூட்டிப் பெருக்கி பாத்திரம் தேய்க்கற வேலையை மதியம் ரெண்டு மணிக்குள்ள முடிச்சுடுவேன். மதியம் ரெண்டுல இருந்து நாலு மணி வரைக்கும் மியூசிக் கேப்பேன். புத்தகம் வாசிப்பேன். சாயந்திரம் குழந்தைகளைக் கூட்டிட்டு வருவேன். சாயந்திரம் அஞ்சு அஞ்சறை ஆகும். அப்புறம் வேலைன்னு ஏதும் இல்லை. சாயந்திரமும் நைட்டும் மியூசிக்கும் வாசிப்பும். நான் ஒருநாள் ரெண்டு நாள் வெளியூர் வந்தா அந்த ஒட்டுமொத்த காம்ப்ளக்ஸ்ஸும் ஸ்தம்பித்து விடும். எப்ப வருவீங்க எப்ப வருவீங்கன்னு ஃபோன் மேல ஃபோன் வரும்’’
பரஸ்பரம் மௌனமாக இருந்தோம். மண்டபத்தின் மங்கள நிகழ்வின் மங்கள ஒலி அவ்வப்போது கேட்டது.
‘’டிராங்குலைசர் குறைச்சுட்டேன் அமுது. ஒரு நாளைக்கு ஒன்னே ஒன்னு. நைட் தூங்கறதுக்கு முன்னாடி.’’
குலா சற்று தயக்கத்துடன் சிறு வெட்கத்துடன் தான் சில கவிதைகளை எழுதியிருப்பதாகக் கூறி அலைபேசியில் இருந்த அவற்றை எடுத்து வாசிக்கக் கொடுத்தார். ஐம்பது கவிதைகள் எழுதியிருந்தார்.
நான் ஆர்வமாக வாசித்துக் கொண்டிருந்தேன். அதைப் பார்த்ததும் ‘’எப்படி இருக்கு. ஆவரேஜ் ஆ இல்ல ஆவரேஜ் க்கு கீழயா ‘’ என்றார்.
‘’வெரி குட் அட்டம்ப்ட்ஸ்’’ என்றேன்.

