Site icon சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

ஆற்றுப்படுதலின் குளிர்மையும் சூடேற்றிவிடும் சொற்களும்

ஆற்றுப்படுதலின் குளிர்மை

சந்திக்க சென்றவரின்
காத்திருப்பு முன்பகுதியில்
அந்நிறுவனப்
பெண்களின்
விவாத உரையாடல்
கவனம் ஈர்த்தது.
குற்றம்
சாட்டப்படுகிறவரில்லாத
வாதியின்
கட்டமைத்த மெய்க்காரணங்களால்.

துப்புரவு பெண்ணின்
தவறு
வாதிப்பெண்ணின் மேல்
இட்டுக்கட்டப்படுவதாக
சாட்டப்படும் கோபம்
மேலடுக்கு வார்த்தைகளில் விளிம்பு நிலை பெண்ணிற்கு
வேலையை போக்குவதாகவே
இருந்தது
கூடிப் பேசுவதை கேட்டபொழுது.

மரபணுவில்
மறைந்து கிடந்த
கூட்டு மனோபாவ
குதர்க்க புத்தி
அக்கறை போர்வையில்
அழுத்தி
வன்மமிடுவது
தெளிவானது
எதார்த்தங்களை
இவர்கள்
இட்டு கட்டுவதை
கவனித்தபொழுது.

ஏதோவொரு சூழலில்
யாரோவொருவரின் மன்னிப்பு நம்மை
இங்கு
நிறுத்தி இருக்கலாம்
நாம் நன்றி மறந்தபொழுதும்
என்றதும்
சூழ்ந்த மௌனத்தை
எனக்கான
அழைப்பு கலைத்தது
யாவரின்
அசௌகரியம் போக்குமாறு.

என்னைப் பற்றி
இவர்கள்
ஆராய்ந்தறியும்
குறிப்புகளில்
வசீகரித்துவிடும்
நான்.
நேரம் போக்க ஏதுவான
இப்பொழுதில்
கேட்ட வார்த்தைகள்
அவர்களை ஏதாவது
செய்யலாம்
இல்லை
வெஞ்சினமேறி
தருணம் பார்க்கலாம்
கொய்துவிட.

பின்
வியாபிக்கும்
அகப்பரவலின் குளுமையறியாது.
கூட்டும் வெப்பச்சலனத்தில்.
பானையை வைத்து
ஓட்டியிட்டு வந்தது
பாவம்.
இப்பொழுது
இவர்கள்
அறியாதது தான்


சூடேற்றிவிடும் சொற்கள்

காற்றைப்போல கடக்கும் வார்த்தைகள்
கச்சிதங்களில் பதியமிட தோதான இடங்களைத் தேடுகிறது
யுகாந்திரப் பயணமாக
பொறுப்புகள் கூடி.
முட்டி மோதி
மூடியதனுள்
புக முயல்கிறது
கை தேர்ந்தவர்களின்
துணையோடு
காணுமொரு
சொர்க்கத்திற்காக.
உள் வாங்கிய
நிலம்
உருவாக்கும்
நந்தவனம்
கோடையிலும்
குளுமைகள் கூட்டுகிறது.
களைப்பாறுதலில்
கச்சிதமாக
விதைகளிட்டு
நிழலொதுங்கும்
நித்தியப் பொய்களில்
நிச்சலனமெய்தி.


பயிற்றலின் பரிணாமம்

கீறலில்
பீறிடும் வார்த்தைகள்
சிதைக்கும்
தருணத்தில்
பழைய
களிம்பைத்தான் தடவுகிறீர்கள்
தவறுகள்
என்னுடையதென.

பெரு நாச
சாத்வீக
பொய்ப்
பிரகடனத்தில்
திளைத்த
உங்களை நோக்கி
வாளெடுப்பதாக
உத்தேசமேயில்லை
யாவிலும்
புகும்
காற்றின்
கலை கைவரப்பெற்றதால்.


சுடரேற்றுமொரு சுயாதீனப் புரட்சி

வார்த்தையின்
வாசனைகளில்
லயித்த மனம்
தருணங்களில்
தடுமாறுகிறது
அசல் மறந்த
போக்காக.

பகட்டு நாடக
அரிதாரம்
வெளிச்சப்பொழுதுகளில்
ஈர்த்துவிடுகிறது
தகைசால் சான்றோர்களையும்
தடுமாற வைத்து.

பொறுத்துத்தான்
போகிறது
பூமி
தக்க தருணத்தில்
தன்னை நினைக்குமாறு
தலை கீழ்
மாற்றங்கள் செய்து.

காரிய சித்தம்
கைவரப் பெறுவதில்லை.
தனக்கான ஆற்றலறியும்
தருணத்தின்
கணங்களில்
உயிர்த்தெழாதபொழுது.

விரலுக்குள்
இருக்கிறது
வினோதம்
சுயாசையொதுக்கியபொழுதில்
சுடர்விட்டு
விண்ணிலேறவும்
சுயம் மறந்தபொழுது
வீழ்ந்தழியவுமான
ஒன்று
விழித்துவிட
அழைத்தவாறு
யாதொரு
பங்கமற்ற
பரவசத்தின்
துவக்கத்திற்கு.

Exit mobile version