Site icon சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

அழகிய இலண்டன்

This entry is part 9 of 9 in the series பயணங்கள்- லண்டன்

‘பாத்’ நகரிலிருந்து திரும்பும் பொழுது விடுமுறை முடியப்போகிறது என்ற நினைவு வந்தாலும், ஆகா! இன்னும் இரண்டு நாட்கள் இருக்கிறது என்ற ஆறுதலும் கூடவே வர, இனிமையான பயணம் தொடர்ந்தது. இங்கிலாந்தில் நிறைய ‘பைக்கர்கள்’ இருப்பது போலத் தோன்றியது. அதுவும் மழை எப்பொழுது வேண்டுமானாலும் பொழியலாம் என்ற சூழலில் எப்படி நெடுஞ்சாலைகளில் பயமில்லாமல் ஓட்டுகிறார்களோ என்றும் வியப்பாக இருக்க, ஈஷ்வருக்கோ அவர்கள் என்ன பைக் ஓட்டுகிறார்கள் என்ற ஆர்வம் தான் அதிகமாக இருந்தது.


மலைகள் மறைந்து சமவெளியில் பயணம். கண்ணுக்கெட்டிய தூரம் வரை புல்வெளிகள் நிறைந்த பண்ணைகளில் அசை போட்டுக் கொண்டிருந்த கால்நடைகள் கொள்ளை அழகு. இருவழிச்சாலைப் பயணத்தில் திடீர் திடீரென மஞ்சள் பூக்கள் பூத்து பச்சையும் மஞ்சளுமாய் பண்ணைகள் நெஞ்சை அள்ளுகிறது. மழைக்காலத்தில் மட்டுமே காணக் கிடைக்கும் காட்சி என்று நினைக்கிறேன். என்ன? எங்கும் நிறுத்தி அழகை ரசிக்க வழியில்லை😌 அது ஒன்று தான் இந்தப்பயணத்தில் பெருங்குறையாக இருந்தது. போக்குவரத்து நெரிசலில் லண்டன் நகரை நெருங்கி விட்டதை உணர்ந்து கொண்டோம்.

லண்டனிலிருந்து அரைமணிநேரத் தொலைவில் ‘பிரிட்ஜ் ஹோட்டல்’ என்ற விடுதியில் தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தோம். ஆகா! ஓகோ! என்று விமரிசித்திருந்தார்கள். ஆனால் ‘ஓகே’ விடுதி தான். நடந்து செல்லும் தூரத்தில் ரயில்வே நிலையம் என்ற ஒரே காரணத்திற்காக அந்த இடத்தைத் தேர்வு செய்தோம். “இரண்டு நாட்கள் தானே? அதுவும் இரவு மட்டும் தான் அங்குத் தங்கப் போகிறோம்” என்று ஈஷ்வர் கூறவும் அப்பொழுது வேறு வழியில்லை என்று தோன்றிற்று. வரவேற்பாளர் அறையில் அமர்ந்திருந்த பெண்மணி எங்களைப் பற்றின விவரங்களைக் கேட்டுக் கொண்டார். இந்தியர்களைப் பற்றி நன்கு தெரிந்து வைத்திருக்கிறார். அருகிலிருக்கும் இந்திய உணவகங்களைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்டோம். அங்கிருந்து 15நிமிட தூர நடையில் அவர் சொன்ன பஞ்சாபி உணவகத்திற்குச் சென்றோம்.

என்ன ஊருடா இது! எட்டு மணிக்கெல்லாம் கடைகளைச் சாத்திவிடுகிறார்கள்! அதுவும் வெள்ளிக்கிழமை அன்று! ஓரிரு இந்தியன், பாகிஸ்தானி கடைகள் மட்டுமே திறந்திருந்தன. நாங்கள் சென்ற உணவகத்தில் ஓரளவு கூட்டம் இருந்தது. அப்பளத்தை ரசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்த வெள்ளையர்கள் கைகளால் ரொட்டியைப் பிரித்து சால்னாவைத் தொட்டு நம்மைப் போலவே சாப்பிடுவதைப் பார்த்தால் அடிக்கடி இங்கு வந்து உண்பவர்கள் என்று நன்றாகத் தெரிந்தது.

நாங்களும் எங்களுக்கு வேண்டியதைச் சொல்லிவிட்டுக் காத்திருந்தோம். ஒரு பெரிய பயணிகள் பேருந்து உணவகத்தின் வாசலில் வந்து நின்றது. ஒருவர் உள்ளே வந்து கல்லாவில் அமர்ந்திருந்தவரிடம் ஏதோ கேட்டார். உடனே அவர், சமையலறைப் பக்கம் திரும்பி ஏதோ சொல்ல, உடனே அந்த இடம் பரபரப்பானது. வண்டியிலிருந்து இறங்கியவர்கள் சோர்ந்து போய் இருந்தனர். பெரும்பாலும் தெலுங்கர்கள். கிடைத்த இடத்தில் எல்லாம் அமர்ந்து கொண்டார்கள். அனைவருக்கும் ஒரே மாதிரியான சாப்பாடு. அரக்க, பறக்க உண்டதைப் பார்த்தால் பசியோடு வந்திருக்கிறார்கள் என்று புரிந்தது. இன்றைக்கு இந்த உணவகத்திற்கு நல்ல வியாபாரம் தான் என்று நாங்களும் வந்த வேலையை முடித்துக் கொண்டு மூடியிருந்த கடைகளைக் கடந்து விடுதியை அடைந்தோம்.

வரவேற்பாளர் அறையில் அமர்ந்திருந்த இளைஞரிடம் எந்த ரயிலைப் பிடித்து எப்படி லண்டன் செல்வது போன்ற விவரங்களைக் கேட்டுக் கொண்டோம். மறக்காமல் அவர் வரைந்து கொடுத்த காகிதத்தைக் கைப்பையில் வைத்துக் கொண்டேன். அதற்குள் பெரியப்பா பொண்ணும் விவரங்களைக் கூறி பத்திரமாகச் சென்று வருமாறு கூறினாள். இரவில் வெகு நேரம் கழித்து பயணம் செல்வது உலகில் என்றுமே பாதுகாப்பானது அல்ல. அதுவும் தெரியாத ஊர்களில் இந்த அனாவசிய விஷப்பரீட்சை எடுக்கவே கூடாது. அதனால் விரைவில் திரும்பிவிட வேண்டும் என்று நாங்களும் திட்டமிட்டிருந்தோம்.

மறுநாள் காலையில் சீக்கிரமாக எழுந்து தயாராகி ஐந்து நிமிட தூர நடையிலிருந்த ரயில்வே நிலையத்திற்கு வந்துவிட்டோம். அங்கே டிக்கெட்டுகளையெல்லாம் மெஷினில் தான் வாங்க வேண்டியிருந்தது. நாங்களும் டிக்கெட் வாங்க கடன் அட்டையை உள்ளே விட்டால் அது மாட்டிக்கொண்டு ஒரே கலவரமாகி விட்டது. என்னடா மதுரைக்கு வந்த சோதனை! பணியிலிருந்த ஓரிருவரும் இதோ வருகிறேன் என்று சொன்னார்களே தவிர, அவர்களாலும் அங்கிருந்து நகர முடியவில்லை. வேறு யாரையோ தொலைபேசியில் தொடர்பு கொண்டு எங்களைக் காத்திருக்கச் சொன்னார்கள். நல்லவேளை! எதிரே இருந்த கடையின் உரிமையாளரும் அவரது மனைவியும் நாங்கள் அவதிப்படுவதைப் பார்த்து மெஷினில் மாட்டிக்கொண்டிருந்த எங்கள் கிரெடிட்கார்டை எப்படியோ வெளியே எடுத்து விட்டார்கள். வாழ்க வளமுடன்! என்று மனதிற்குள் வாழ்த்தி நன்றி கூறி விடைபெற்றோம்.

நல்ல குளிர்! சனிக்கிழமை என்பதால் கூட்டம் அதிகமில்லை. பயணிகள் குளிரிலிருந்து தப்பித்துக் கொள்ள மூடிய அறைகள் அமைத்திருப்பது சிறப்பு. நாம் குளிர் என்று நடுங்கினால் கால்சட்டை போட்டுக் கொண்டு வரும் வெள்ளையர்கள்… “சரியான காட்டன்களா இருப்பானுங்க போலிருக்கே” என்று வியக்க வைப்பார்கள்! நாங்கள் செல்ல வேண்டிய ரயில் வந்தவுடன் இடம் பிடித்து அமர்ந்து கொண்டோம். இப்பொழுதெல்லாம் மக்கள் யாரையும் நிமிர்ந்து கூட பார்ப்பதில்லை. அதுவும் கைபேசி வந்த பிறகு கேட்கவே வேண்டாம்.

பலரும் தலையைக் குனிந்த வண்ணம் ஃபோனை நொண்டிக் கொண்டிருந்தார்கள். ஒரு பெண்மணி தன் அருகில் இருப்பவரைப் பார்க்கப் பிடிக்காதவர் போல மறுபக்கம் திரும்பியவர் தான். இரண்டு நிறுத்தங்களுக்குப் பிறகு வண்டி ‘தடக்தடக்’ என்று விக்கல் வந்தது போல தவித்து விளக்குகள் அணைவதும் எரிவதுமாய், ரயிலின் வேகம் குறைந்து ‘ஒயிட் சிட்டி’ நிறுத்தத்தில் நின்று விட்டது. “சாரி! இதற்கு மேல் இந்த வண்டி செல்லாது. பழுதடைந்து விட்டது. சிரமத்திற்கு மன்னிக்கவும். அருகிலிருக்கும் ‘வுட்லண்ட்’நிலையத்திலிருந்து லண்டன் செல்லுங்கள். மற்றவர்கள் இதே நிலையத்தில் வேறு வண்டியில் செல்லுங்கள்” தகவல் வரவும், ‘தபதப’வென கூட்டம் இறங்க, “எந்த நேரத்துல கிளம்பினோமோ! சை” என்றிருந்தது! ஒரே ரயிலில் போக வேண்டிய இடத்திற்கு இரண்டு ரயில்கள் மாறி, லண்டனுக்குச் செல்பவர்களோடு சேர்ந்து ஓட்டமும் நடையுமாய் ‘பேக்கர் ஸ்ட்ரீட்’ நிறுத்தத்தில் இறங்கிக்கொண்டோம்.

‘பேக்கர் ஸ்ட்ரீட்’ பெயர் தாங்கிய பலகையைப் பார்த்ததும் ஈஷ்வருக்கு ‘ஷெர்லாக் ஹோம்ஸ்’ நினைவிற்கு வந்து படத்தை எடுத்துக்கொண்டார். அங்கிருந்து ஆரம்பித்தது அன்றைய லண்டன் நகர நடைப்பயணம்.

முதலில் நாங்கள் சென்ற இடம் ‘சைனா டவுன்’. நியூயார்க், மாண்ட்ரியல் சைனா டவுன்களை நினைவூட்டினாலும் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. கடைகள் இன்னும் திறக்கவில்லை. நிறைய தமிழ்ட்ரஃபால்கர் ஸ்கொயர் குரல்கள். குடும்பங்களுடன் வந்திருந்தனர். வேடிக்கை பார்த்துக் கொண்டே லண்டனின் பிரபலமான ‘Leicester
Square’ வந்து சேர்ந்தோம். பல உணவகங்கள் அங்கு இருந்தாலும் ‘மெக்டொனால்ட்’ கடைக்குள் நுழைந்து காலை உணவை முடித்து விட்டு ஊர் சுற்றலாம் என்று அங்கே சென்றால் நல்ல கூட்டம்.

ஆற, அமர சாப்பிட்டு முடித்து, போவோமோ ஊர்கோலம் என்று மக்கள் கூட்டம்கூட்டமாக நின்று படங்கள் எடுத்துக் கொண்டிருந்த ‘Leicester’ சதுக்கத்தில் நுழைந்தால் பிரபல கதாபாத்திரங்களின் வெண்கலச் சிலைகள்! “அதான் இவ்வளவு கூட்டமா?”. நாங்களும் ஐக்கியமானோம். ஒவ்வொரு சிலையின் அடியில் அதனைப் பற்றின விவரங்களை எழுதியிருந்தது சிறப்பு. குடையுடன் மேரி பாப்பின்ஸ், பேடிங்க்டன் கரடி, லாரல், ஹார்டி, ஹாரி பாட்டர், சார்லி சாப்ளின், டிஸ்னி புகழ் ‘பக்ஸ் பன்னி’, நீரூற்றுக்கு மேலே ஷேக்ஸ்பியர் சிலைகள் என்று படங்கள் எடுத்துக் கொண்டு வேடிக்கை பார்க்க அத்தனை இருக்கிறது அங்கே! குழந்தைகள் ஆவலுடன் சுற்றித் திரிந்து கொண்டிருந்தனர். ‘மிஸ்டர் பீன்’ சிலைக்கு அருகில் தான் பெருங்கூட்டம்! ஈஷ்வரும் தன் பங்கிற்குப் படங்கள் எடுத்துக் கொண்டார்.

இனி ‘ஹாப்-இன் ஹாப் -ஆஃப்’ பேருந்தில் ஊரைச் சுற்றிப் பார்க்கலாம் என்று முன்பதிவு செய்து வைத்திருந்த விவரங்களைக் காண்பித்து இரட்டை அடுக்குப் பேருந்தில் ஏறிக்கொண்டோம். மேலே அமர்ந்து செல்வதும் சுகமாகத் தான் இருக்கிறது. வழியில் தெரியும் பிரபல தெருக்கள், கட்டடங்கள், நினைவிடங்களைப் பற்றி ஓட்டுநர் அறிவித்துக் கொண்டே இருந்தார். அங்கே ஒரு ‘பால் மால் கிழக்குத் தெரு’ இருந்தது. அடடா! மதுரையில் கூட ‘பால் மால்’ தெரு இருக்கிறதே! அதற்கும் இதற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ😶

நாங்கள் அங்குச் சென்றிருந்த ஒரு வாரத்திற்கு முன்பு தான் ‘சார்ல்ஸ்’ இங்கிலாந்தின் புதிய மன்னராகப் பதவியேற்றிருந்தார். ஊரே திருவிழாக்கோலம் பூண்டிருந்தது. எங்குப் பார்த்தாலும் இங்கிலாந்து கொடிகளின் அணிவகுப்பு. அந்த இடமே வண்ணமயமாக கோலாகலமாக இருந்ததைப் பார்க்க நமக்கும் தொற்றிக்கொள்கிறது அந்த மனநிலை. அரண்மனைக்குள் பெருங்கூட்டம் நடந்து சென்று கொண்டிருந்தது. ஹ்ம்ம்ம்… நம்மை ஆண்டு செல்வங்களைச் சூறையாடிய குடும்பம்! ஏனோ, அரண்மனையைப் பார்க்கத் தோணவில்லை. எனக்கு மிகவும் பிடித்த டயானா வாழ்ந்த ‘கென்சிங்டன்’ அரண்மனைக்கும் செல்லவில்லை. நகரின் மையத்தில் பரந்து விரிகிறது அரண்மனைகளும் தோட்டங்களும். கோடைகாலத்தில் ஊரைச் சுற்றிப் பார்க்க வருபவர்கள் இளைப்பாறுவதற்கு நல்ல இடங்கள்.

‘வெஸ்ட்மினிஸ்டர்’ பேருந்து நிலையத்தில் இறங்கி தேம்ஸ் நதிக்கரையில் அமைந்திருக்கும் பாராளுமன்ற வளாகத்தைச் சுற்றிப் பார்த்தோம். உள்ளே சென்று பார்க்கும் வசதிகளும் இருக்கிறது. அருமையான, அழகான கட்டடம். அருகிலேயே எலிசபெத் கோபுரம். இங்கு தான் லண்டனின் பிரபலமான கடிகாரமான ‘பிக் பென்’ உள்ளது. அதிகமான பார்வையாளர்கள் வந்து செல்லும் இடமும் கூட. கடிகார கோபுரத்தின் உள்ளே 13 டன் எடையுள்ள பெரிய மணிக்கு ”Big Ben’ என்று பெயர். நான்கு கடிகார முகங்கள் கொண்ட இந்தக் கோபுரம் இரவில் விளக்கொளியில் கண்களைக் கவர்கிறது. அருகிலேயே ‘வெஸ்ட்மினிஸ்டர் டியூப் ஸ்டேஷன்’ இருக்கிறது. போக்குவரத்து வசதிகள் அதிகமாக இருப்பதால் தனித்தனியாக வாகனங்களில் வரத்தேவையில்லை.


இதன் எதிர்புறத்தில் தேம்ஸ் நதியின் தென்கரையில் தான் ‘லண்டன் ஐ’ எனப்படும் சுழலும் சக்கரம் உள்ளது. மில்லினியத்தைக் குறிக்க கட்டப்பட்ட இந்த ‘மில்லினியம் வீல்’, பாரிஸில் உள்ள ஈஃபிள் கோபுரத்தைப் போல மக்களைக் கவரும் சுற்றுலாத்தலமாக உள்ளது. மேகங்கள் இல்லாத நாளில் 25 மைல்கள் தொலைவு வரை பார்க்கலாம் என்று கூறுகிறார்கள். 30நிமிடங்கள் வரை இதில் அமர்ந்து லண்டனை வேடிக்கைப் பார்க்கலாம். மாலையில் சூரியன் மறையும் அழகையும் இரவில் விளக்கொளியில் மினுமினுக்கும் கட்டிடங்களையும் தேம்ஸ் நதியின் அழகையும் கண்டுகளிக்கலாம். கூட்டமான நாட்களில் முன்பதிவு செய்து கொண்டு செல்வது நல்லது. டிக்கெட் விலையைப் பார்த்தால் எங்கும் செல்ல முடியாது😟 சுற்றுலாத்தலத்தில் எங்கும் ‘காசு, துட்டு, மணி மணி’ தான்! வாடகை சைக்கிளில் ஊரைச் சுற்றிப்பார்க்கும் வசதிகளும் இருக்கிறது.


எங்குப் பார்த்தாலும் ஊரைச் சுற்றிப் பார்க்க வந்த கூட்டம் தான். கடைகளில் நல்ல வியாபாரம். கடலையை வாங்கி கொறித்துக் கொண்டே ‘வெஸ்ட்மினிஸ்டர் ஆபி’ என்றழைக்கப்படும் தேவாலயத்திற்கு வந்தால் நீண்ட வரிசை. வேறு என்ன செய்வது? நாங்களும் நின்று கொண்டோம். வரலாற்றுச் சிறப்பு மிக்க தேவாலயம். அரச குடும்பத்தின் பல திருமணங்களை, இறப்புகளை, அரியணை ஏற்புகளைப் பார்த்த இடமாயிற்றே! பார்க்காமல் போக முடியுமா? அப்படி என்ன தான் உள்ளே இருக்கிறது என்ற ஆவல் பலருக்கும் இருக்கும் தானே? எங்கள் பின்னால் நின்றிருந்தவர்களும் நியூயார்க்கிலிருந்து வந்திருப்பதாகக் கூறினார்கள். நாங்களும் நியூயார்க்கைச் சேர்ந்தவர்கள் என்றதும் பேச ஆரம்பித்து விட்டார்கள். குழந்தைகள் எல்லாம் வளர்ந்து விட்டதால் கணவனும் மனைவியும் மட்டும் சுற்றுலாக்குழுவினருடன் இரு வாரங்களுக்கு இங்கிலாந்து டூர் வந்திருக்கிறார்கள். “நேற்று வரை ஒரே ஓட்டம் தான். அதிகாலையில் புறப்பட்டு அருகிலிருக்கும் ஊர்களுக்குச் சென்று இரவில் தான் திரும்புவோம். சுற்றுலாக்குழுவோடு வருவதன் சிரமம் இதுதான். தினமும் எங்காவது சென்று கொண்டே இருப்பார்கள்! இன்று அவர்களோடு செல்லாமல் நாங்கள் தனியாக வந்திருக்கிறோம். சில சமயங்களில் நாங்கள் எங்கும் செல்லாமல் அறைக்குள்ளே தங்கி விடுவோம்” என்றார் அம்மணி.

வருடத்தில் இரண்டு முறை நீண்ட பயணங்கள் செல்வார்களாம். ஒன்று கணவன், மனைவி மட்டும். மற்றொன்று குழந்தைகளுடன் கோடைவிடுமுறை என்று! ம்ம்ம்ம்…. நல்ல குடும்பம். எனக்குத் தெரிந்த சில அமெரிக்கர்கள் வருடத்திற்கு ஒருமுறையாவது குடும்பச்சுற்றுலா செல்கிறார்கள். பெரும்பாலும் அமெரிக்காவிற்குள்ளேயே. வெளிநாடுகளுக்குச் செல்பவர்களும் இருக்கிறார்கள் நாங்கள் பார்த்த தம்பதியரைப் போல. எங்கள் பக்கத்து வீட்டு அம்மணி இதுவரை விமானத்தில் ஏறியதில்லை. இந்த வருடம் தான் முதன்முதலாக குடும்பத்தோடு இத்தாலி செல்கிறார். இதுவரையில் அருகிலிருக்கும் ஒரு ஊருக்கு வருடாவருடம் தவறாமல் ஒரு வாரம் சென்று விடுவார்கள். இப்பொழுது குழந்தைகள் வளர்ந்த பிறகு அவர்கள் சுற்றிப்பார்க்க ஆசைப்படுவதால் கிளம்பிச்செல்கிறார்கள். வந்து கதைகதையாய் சொல்வார் என்று நினைக்கிறேன். “எப்படித்தான் 18 மணிநேரங்கள் பயணம் செய்து இந்தியாவிற்குச் சென்று வருகிறீர்களோ” என்று ஆச்சரியப்படுவார். நமக்கு வேறு வழி ? அமெரிக்கர்களுக்கு, அமெரிக்காவே அவர்கள் உலகம். இன்னும் ஒரு படி மேலே போனால் அவர்கள் இருக்கும் ஊர் தான் அவர்கள் உலகம். தவறேதுமில்லை. ஆனால், இங்கு இல்லாதது மற்ற நாடுகளில் என்ன இருக்கப் போகிறது என்ற அறியாமை சில நேரங்களில் அமெரிக்காவைத் தவிர மற்ற நாடுகள் எல்லாம் சுமார் என்ற அளவிற்குப் போகும் பொழுது தான் பிரச்சினையே.

வரிசை மெதுவாக நகர்ந்து நாங்கள் தேவாலயத்தின் வாசலுக்கு வந்துவிட்டோம். பின்னால் வரிசை நீண்டு கொண்டே இருந்தது. பெரும்பாலான மேற்கத்திய தேவாலயங்கள் ‘Gothic Architecture’டன் இருக்கிறது. நீண்ட கூரிய முனைகளுடன் கோபுரங்கள், வெளிச்சுவரில் வரிசையாக இருக்கும் வளைவுகள், கொடூர முகங்களுடன் உருவச் சிலைகள், வண்ணங்களுடன் ஜன்னல்கள், தேவாலயத்தின் உள்ளே வளைவுகள் என்று அண்ணாந்து பார்க்க வைக்கிறது. தேவாலயம் அழகுற இருந்தாலும் அதன் உள்ளேயே இறந்த மன்னர்கள், அவர் தம் மனைவிகள், துணைவிகளின் கல்லறைகள் சர்வ அலங்காரங்களுடன் இருந்தது! அடக்கொடுமையே! கோவில் என்று நினைத்து உள்ளே வந்தால் அழகான கல்லறையாக வைத்திருக்கிறார்களே என்றிருந்தது! மறுபுறம் புகழ்பெற்ற கவிஞர்கள், இலக்கியவாதிகள், பிரிட்டிஷ் குடிமக்களின் நினைவுச்சின்னங்களும் இருக்க, படங்கள் எடுத்துக் கொள்ள கூட்டம் அலைமோதியது. ஈஷ்வரும் தன் பங்கிற்கு தன்னுடைய ஆதர்ச கவிஞர்களின் நினைவிடங்களில் படங்களை எடுத்துக் கொண்டார். கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரங்கள் சுற்றிப் பார்த்துக் களைத்து விட்டோம்.

அங்கிருந்து ‘ட்ரஃபல்கர் ஸ்கொயர்’க்கு வந்தோம். 1805ல் நடந்த ட்ரஃபல்கர் போரில் பிரிட்டன் வெற்றி பெற்றதைக் கொண்டாடும் விதமாக அந்த இடத்திற்கு ‘ட்ரஃபல்கர் சதுக்கம்’ என பெயரிட்டுள்ளார்கள். பிரிட்டன் வெற்றி பெற்றாலும், போர் நாயகன், ‘அட்மிரல் லார்ட் ஹோராஷியோ நெல்சன்’கொல்லப்பட்டுள்ளார். அவரைப் போற்றும் விதமாக 185 அடி உயர நினைவுச்சின்னம் வைக்கப்பட்டுள்ளது. நான்கு பெரிய சிங்க சிலைகள், பிரம்மாண்ட நீரூற்றுகள், முதலாம் சார்லஸ் மன்னரின் மிகப்பெரிய சிலை கொண்ட சதுக்கம், லண்டனின் புகழ்பெற்ற அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. சிலைகளின் முன் படங்களை எடுத்துக் கொள்ள கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. ஸ்காட்டிஷ் கவிஞர் ‘ராபர்ட் பர்ன்ஸ்’ சிலையைக் கண்டவுடன் ஓடிச்சென்று ஒரு ‘க்ளிக்’.

ஒவ்வொரு நகரத்திலும் அதன் குடிமக்கள் ஒன்றுகூடி கொண்டாட, விவாதிக்க, எதிர்ப்புகளைத் தெரிவிக்க, நினைவு கூற ஒரு இடம் இருக்கும். லண்டனுக்கு அந்த இடம் ‘ட்ரஃபல்கர் சதுக்கம்’. அதன் பிரம்மாண்டம் பார்வையாளர்களை வெகுவாக கவரும் என்பதில் ஐயமில்லை. நியூயார்க்கின் ‘டைம் ஸ்கொயர்’ நீண்டு குறுகி இருக்கும். ஆனால் நிமிர்ந்து பார்க்க வைக்கும் கட்டடங்களால் நிரம்பி ஆச்சரியப்பட வைக்கும். இங்கு அவ்வாறு இல்லை. கிரானைட் கற்களால் கட்டப்பட்ட அருங்காட்சியகங்கள், அலுவலகங்கள் சுற்றிலும் இருக்க, நடுவே சதுக்கம். ஒவ்வொரு நாட்டின் பெருநகரங்களில் இருக்கும் சதுக்கங்கள் ஒவ்வொரு அழகுடன் இருக்கிறது!

சுற்றிச்சுற்றி வந்தால் உலகின் மிகச்சிறிய காவல்நிலையம் ஒன்றையும் பார்க்கலாம்! எளிதில் அதைக் கடந்து செல்லும் வாய்ப்பு இருக்கிறது. ஆங்காங்கே அமரும் வசதிகளும் இருப்பதால் குழந்தைகள் ஓடியாடி விளையாட, பெரியவர்கள் அமர்ந்து கொள்ள வசதியாக இருக்கிறது. மழைக்காலத்தில் அதுவும் காலை நேரத்திலேயே இவ்வளவும் கூட்டம் இருந்தால் கோடைகாலத்தில் எப்படி இருக்கும் என்பதையும் உணர்ந்து கொண்டோம்.

வெளியே சிறிது நேரம் அமர்ந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டு பேருந்தில் ஏறி லண்டன் பாலத்தைப் பார்க்கக் கிளம்பினோம். பேருந்து ஓட்டுநர் போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்தவர். பல வருடங்களாக லண்டனிலிருந்தும் இன்னும் குடியுரிமை பெறவில்லை. கேவலமான ஓய்வூதியம் கொடுக்கிறார்கள். அதை வைத்து என்னால் ஒன்றும் செய்ய முடியாது என்பதால் தான் 74 வயதிலும் ஓட்டுநர் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றார்! அத்தனைக்கும் போரில் பங்கெடுத்தவராம். எங்கிருந்து வருகிறோம் என்று கேட்டுத் தெரிந்து கொண்டார். அவருடைய மகன் நியூஜெர்சியில் ‘டிஜே’வாக இருப்பதாக ஒரு படத்தைக் காண்பித்தார். சிறிது நேரத்தில் மனிதர் எத்தனை பேசிவிட்டார்! மதியம் நாங்கள் எங்குச் சென்று சாப்பிடலாம் என்றும் கூறிவிட, உடனே பசி எடுப்பது போல இருந்தது!வழியில் பழமையும் புதுமையும் கலந்த அழகழகு கட்டடங்கள்.

லண்டன் வரலாற்றில் 1666ல் நான்கு நாட்களுக்கு நடந்த பெரும் தீவிபத்து காரணமாக நகரில் பல கட்டடங்களும் பல்லாயிரக்கணக்கான வீடுகளும் பல தேவாலயங்களும் எரிந்து சேதமடைந்துள்ளன. மக்கள் வீடின்றி தெருவில் நிற்க, பலரும் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஆற்றைக் கடந்து சென்றிருக்கிறார்கள். ‘லண்டன் பிரிட்ஜ்’ செல்லும் வழியில் தீவிபத்து நடந்த இடத்திற்கு அருகில் ஒரு நினைவுத்தூணை பார்த்துவிட்டு வாருங்கள் என்று எங்களை இறக்கிவிட்டார் அந்த பேருந்து ஓட்டுநர். நாங்களும் தகவல்களுக்கு நன்றி கூறி விடைபெற்றோம். வரலாற்றை அறிந்து கொள்ள இத்தகைய நினைவுச்சின்னங்கள் அவசியமாகிறது. அதைப் பற்றின தகவல்களையும் மறக்காமல் பொரித்து வைத்துள்ளார்கள். சுற்றுலாவினர் வந்து செல்லும் பிரபல இடமாகவும் இருக்கிறது. நாங்களும் சுற்றிப்பார்த்து விட்டு கொடுமையான வரலாற்றை அறிந்து கொண்டோம். தனுஷ்கோடி தான் ஞாபகத்திற்கு வந்தது! ஆனால் அதனைப் பற்றின தகவல்களோ, நினைவுச்சின்னமோ அந்த இடத்தில் பார்த்த மாதிரி ஞாபகம் இல்லை😪 வெறும் சிதிலமடைந்த வீடுகள், பள்ளி, தேவாலயம் மட்டுமே பராமரிப்பின்றி இருந்தது. தற்போது அதையும் பார்க்கவில்லை. புதுச்சாலை போட்டு உணவகங்கள் தான் அதிகம் தென்படுகிறது! நமக்கு வரலாற்றை விட சோறு தான் முக்கியம்😞


அங்கிருந்து மீண்டும் வேறொரு பேருந்தில் ஏறி ‘லண்டன் பிரிட்ஜ்’ வந்து சேர்ந்தோம். இதா லண்டன் பிரிட்ஜ்? அடப்பாவிகளா! இத்தனை வருடங்களாக நான் லண்டன் பிரிட்ஜ் என்று நினைத்திருந்தது ‘டவர் பிரிட்ஜ்’ஆம். என்ன கொடுமைடா மாதவா? தேம்ஸ் நதிக்கரை மேல் இருக்கும் சாதாரண பாலம் தான் லண்டன் பிரிட்ஜாம். என் அறியாமையை என்னவென்று சொல்வது? அங்கிருந்து தூரத்தில் தெரிந்த டவர் பிரிட்ஜை மனதில் வைத்துக் கொண்டு தானே ‘லண்டன் பிரிட்ஜ் இஸ் ஃபாலிங் டௌன் ஃபாலிங் டௌன்’னு பாடிக் கொண்டிருந்தேன்😂

ஈஷ்வருக்கு பசி எடுக்க, ஓட்டுநர் சொன்ன ‘Borough Market’ சென்றோம். அங்கே திருவிழா மாதிரி நல்ல கூட்டம். மதிய நேரம் வேறு. ஒரே இடத்தில் பல உணவகங்கள். லண்டன் வந்து ‘Fish & Chips’ சாப்பிடாமல் போக முடியுமா? எங்களைப் போலவே பலரும் வரிசையில் காத்திருக்க, மாவில் தோய்த்த மீனை எண்ணையில் பொரித்து கூடவே உருளைக்கிழங்கு ஃபிரைஸ். கெட்ச்சப், ப்ளூ சீஸுடன் யம்…யம்..யம். அதற்குப் பிறகு தான் இத்தாலியன், பர்கர் கடைகளைப் பார்த்தோம். ஆகா! மிஸ் பண்ணிட்டோமே என்று இருந்தது. உணவகங்களைத் தவிர, மதுபான பிரியர்களுக்கு கடைகளும், பழங்கள், காய்கறிகள், மசாலாக்கள், சீஸ் , டீ, காபித்தூள் விற்கும் கடைகளும் என்று ஒவ்வொன்றையும் கால் வலிக்கும் வரைச் சுற்றிப் பார்த்து சில பல பொருட்களையும் வாங்கிக்கொண்டோம். ஐந்து மணிக்கெல்லாம் கடைகளை மூட ஆரம்பித்து விட்டார்கள்! என்ன லண்டன் வியாபாரிகளோ ! லண்டன் செல்பவர்கள் கண்டிப்பாக இந்த சந்தைக்குச் செல்ல வேண்டும்.


அங்கிருந்து 15 நிமிட நடை தூரத்தில் ‘ஷேக்ஸ்பியர் க்ளோப்’ இருந்தது.நீண்ட நடை. வேறு வழி? சாப்பிட்டதை ஜீரணிக்க வேண்டுமே? வேடிக்கைப் பார்த்துக் கொண்டே நடந்து சென்றோம். ஷேக்ஸ்பியரின் நாடகங்களை அங்கு தான் மேடையேற்றுகிறார்கள். அதற்கும் முன்பதிவு செய்து செல்வது நல்லது. உள்ளே நாடகம் நடந்து கொண்டிருந்தது. அழகான நாடக அரங்கு.


இப்பொழுது டவர் பிரிட்ஜூக்குச் செல்ல வேண்டும். சென்னை கூவம் போல ஆலைகள், மனிதக்கழிவுகள் நிரம்பி நாறிக்கிடந்த உயிரற்ற ஆற்றை இன்று உயிரோட்டமுள்ளதாக மாற்றி இருக்கிறார்கள்! நமக்கோ கூவத்தில் கொட்டும் பணத்தை இன்னும் முதலை தான் தின்று கொண்டிருக்கிறது. மகா கேவலம்! தேம்ஸ் நதி பற்றின சுவையான தகவல்களை கூகுளாண்டவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். கோடிக்கணக்கில் மக்களின் வரிப்பணம் எப்படி கூவத்தில் கரைகிறது என்று புரியும். புரிந்து என்ன ஆகப்போகிறது என்பது வேறு விஷயம்😖

‘டவர் பிரிட்ஜ்’, லண்டனின் மற்றுமொரு பிரதான இடம். மேலே சென்று பார்த்து வர முடியும். முன்பதிவு செய்திருந்தால் அல்லது குழுவோடு சேர்ந்து சென்றால் எளிதாக இருந்திருக்கும். விளக்கொளியில் ஜொலிக்கும் பாலத்தைப் படகிலிருந்து பார்க்கும் வசதிகளும் இருக்கிறது. நாங்கள் நடந்து ஒருகரையிலிருந்து மறு கரைக்குச் சென்று மீண்டும் படகில் ஏறி வெஸ்ட்மினிஸ்டர் வந்து சேர்ந்தோம். தளும்ப, தளும்ப படகில் வந்து மோதும் ஆற்றின் அலைகள் அழகு!

வெஸ்ட்மினிஸ்டர் பாலத்தில் நின்று சூரியன் மறைவதைப் பார்க்க கொள்ளை அழகு. ‘Industrial revolution’ பற்றி சிறிது நேரம் ஈஷ்வர் பேசிக்கொண்டிருக்க, நான் ‘உம்ம்ம்’ கொட்டிக்கொண்டு இருந்தேன். எப்படி இருக்க வேண்டிய வாழ்க்கை எப்படி மாறிப்போயிருக்கிறது? நம்முடைய உணர்வுகளை மரத்துப் போக வைத்திருக்கிறது? தொழிற்புரட்சியின் சாதக, பாதகங்களைப் பேசிக்கொண்டு பேருந்திற்காக வெகு நேரம் காத்திருந்தோம். பேருந்து வருமோ வராதோ என்ற பயம்! அந்த நிறுத்தத்தில் கூட்டமும் வெகு குறைவாகவே இருந்தது . நல்ல வேளையாக ஒரு பேருந்து வரவே, காலையில் தொடங்கிய இடத்திற்கே மீண்டும் செல்ல ஏறி அமர்ந்தோம். நாள் முழுவதும் நடந்ததில் கால்கள் சோர்ந்து போய் விட்டது. மீண்டும் அரண்மனைகள், கட்டடங்கள். திடீரென போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்து நிற்க, ட்ரஃபல்கர் சதுக்கத்தில் மிகப்பெரிய கண்டன ஊர்வலம் நடந்து கொண்டிருந்தது. சதுக்கம் முழுவதும் இஸ்லாமியர்களின் கூட்டம். கருப்பு உடையில் பெண்களும் ஆண்களும் ஆவேசமாக ஈரானுக்கு வக்காலத்து வாங்கி இங்கிலாந்து அரசைக் கண்டித்துக் கத்திக் கொண்டிருந்தார்கள். அவர்களைத் தவிர மற்றவர்கள் அனைவருக்கும் இடைஞ்சலாக எந்தத் தெருவிற்குள் நுழைந்தாலும் ஊர்வலம். பேருந்து ஓட்டுநரும் பொறுமையை இழந்து கொண்டிருந்தார்.

விட்டால் போதும் என்று வந்து சேர்ந்த பிறகு தான் நிம்மதியாக இருந்தது. மாலை நேரத்து விளக்குகள் பளிச்சிட, அரிதாரம் பூசிக்கொண்ட லண்டன் அழகாக இருந்தது. பெரிய பெரிய கடைகளில் ஷாப்பிங் செய்பவர்கள் கைகளில் பைகளோடு ஒய்யாரமாக நடந்து செல்வதை வேடிக்கை பார்த்துக் கொண்டே ‘பில் போர்டு’களில் ஓடும் விளம்பரங்களைப் பார்த்துக் கொண்டிருந்ததில் நேரமாகி விட்டதை உணர்ந்தோம். அங்கிருந்த சுற்றுலாவினர் பலரும் இரவு நகரத்தை வேடிக்கை பார்க்க அமர்ந்திருந்தனர். ஈஷ்வருக்கும் சிறிது நேரம் இருக்க ஆசை. லேசாக குளிர் எட்டிப்பார்க்க, விடுதி போய்ச் சேர எப்படியும் ஒன்பது மணி ஆகிவிடும் என்று கிளம்பி விட்டோம்.

ரயிலில் தூங்கி வழிந்து கொண்டே பயணிகள். யாரும் யாரையும் நேரெடுத்துக் கூட பார்க்கவில்லை. தனித்தனி தீவுகளாக மாறிக்கொண்டிருக்கிறோம் என்று நினைத்தேன். அமெரிக்கப் பெண்களைப் போலில்லாது இங்கிலாந்துப் பெண்மணிகள் பலரும் மிகவும் இயற்கையாக இருந்ததாக எனக்குத் தோன்றியது. அமெரிக்காவில் பல்லை நேராக்க, வெள்ளையாக வைத்திருக்க அதிகம் மெனக்கெடுவார்கள். அங்கே கோணல்மாணல் பற்களுடன் பலரும் இருந்தது வியப்பாக இருந்தது. ஒருவேளை அரசு மருத்துவத்திற்காகச் செலவிடுவதால் அதைப் பற்றிக் கண்டு கொள்வதில்லையோ என்னவோ? ஹ்ம்ம்ம்… பக்கத்தில் அமர்ந்திருந்த இலங்கைத் தமிழரிடம் பேசுகையில் நாங்கள் போக வேண்டிய இடத்துக்கு அந்த ரயில் போகாது என்று குழப்பி விட்டுச் சென்றார். வில்லங்கம் பிடிச்சவரா இருப்பார் போலிருக்கு😡 நாங்கள் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்தவுடன் அங்கிருந்து ஏழு நிமிடத்தில் விடுதியை அடைந்தோம்.

நியூயார்க் சப்வேயில் சென்றாலோ அல்லது ‘மன்ஹாட்டன்’ பக்கம் சென்றாலோ அது ஒரு தனி உலகமாக இருக்கும் என்பதை உணர முடியும். அப்படி எதுவும் இங்குத் தோன்றவில்லை. ஒருவேளை புலம்பெயர்ந்தவர்கள் அதிகம் இருக்கும் பகுதி என்பதாலோ என்னவோ! சாலையோரத்திலிருந்த வீடுகளில் புற்கள் கூட சரியாகப் பராமரிக்கப்படாமல் ‘ஏனோ தானோ’வென்றிருந்ததது.

விடுதி வந்து தூங்கியது தான் தெரியும். ஊருக்குக் கிளம்பும் நாள் பார்த்து சூரிய பகவானும் வழியனுப்ப வான் உலா வந்து கொண்டிருந்தார். பெட்டிகளை எடுத்துக் கொண்டு ‘ஈரோப்கார்’ அலுவலகத்திற்குச் சென்று வண்டியைக் கொடுத்தோம். அங்கிருந்த இந்திய வம்சாவளி இளைஞன் கிளாஸ்கோவில் நடந்த விபத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். அதிக செலவில்லாமல் பார்த்துக் கொள்கிறோம். உங்கள் காப்பீடு விவரங்களை மட்டும் கொடுத்து விட்டுச் செல்லுங்கள் என்று கூற, நிம்மதியாக இருந்தது. பஞ்சாபி தாத்தா அங்கிருந்து விமான நிலையத்திற்கு எங்களை அழைத்துச் சென்றார்.

செக்கின் எல்லாம் முடிந்த பிறகு அங்கிருந்த இந்தியன் உணவகத்திற்குச் சென்றோம். எல்லாமே பிங்க் வண்ணத்தில் இருந்தது. வரவேற்ற பெண் விழுந்து விழுந்து கவனித்தாள். சிரித்த முகத்துடன் வலம் வரும் பெண்கள் தான் எத்தனை அழகு! நாங்கள் எங்கிருந்து வருகிறோம், இந்தியாவில் சொந்த ஊர் எது என்று கேட்டு விட்டு, தன் கணவர் தமிழர். தான் காஷ்மீரி. தென்னிந்திய உணவு வகைகள் தனக்குப் பிடிக்கும். ஆனால் மாமனார் ராணுவத்தில் இருந்ததால் கணவருக்குத் தமிழ்நாட்டு உணவுகளைப் பற்றி அதிகம் தெரியாது என்று கூறினார். ம்ம்ம்ம்… இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள். அந்தப்பெண் என் நெருங்கிய உறவுக்காரப் பெண்ணை நினைவூட்டியதாலோ என்னவோ அவரிடம் எளிதாகப் பேச முடிந்தது. அவரிடம் விடைபெற்று விமானத்தில் ஏறி ஊர் வந்து சேர்ந்தோம்.

வாழ்க்கைப் பயணத்தில் சில இளைப்பாறல்கள் அவசியமாகிறது. பயணங்கள் நம்மைப் புதுப்பித்துக் கொள்ள உதவுகிறது. நமக்குத் தெரியாத பல விஷயங்களை உணர்த்துகிறது. வெவ்வேறு மனிதர்கள், நகரங்கள், காட்சிகள் என ஒவ்வொன்றும் கற்றுத்தரும் பாடங்கள் ஏராளம். இந்த விடுமுறையை அசை போட்டதில், வலிகளுடன் இருந்த நாட்களை மறக்க உதவிய பயணமாக, இன்ப அனுபவமாக இருந்ததை உணர்ந்தோம்.

இந்தத் தொடரில் என்னுடன் பயணித்த அனைவருக்கும் மிக்க நன்றி.

பயணங்கள்- லண்டன்

சௌத்போர்ட்- பிரிஸ்டல்- பாத் பயணக்குறிப்புகள்
Exit mobile version