
ஏய்
அப்படி யெல்லாம்
பார்க்காதே
நான் இப்பொழுது மழையை
வரைந்து கொண்டிருக்கிறேன்
நீயும் என்னோடு சேர்ந்து
நனைய ஆரம்பித்துவிடுவாய்
அதிகாலையில் ஒரு கனவு
அக்கனவில் பறந்து வந்து
என் இமைகளின் மேல் அமருகிறது
ஒரு சிட்டுக்குருவி
கனவுகளை விளித்து
உனக்கு என்ன
வேண்டுமென்று விவரிக்க
மரம் வேண்டுமென்று கூற
மரம் ஒன்றை வரைந்து நீட்டிருகிறேன்
மரத்தின் கிளைகளில்
அமர முற்படுகிறது சிட்டுக்குருவி
நான் கனவுகளுகளிலிருந்து
வெளியேறுகிறேன்
மரம் இல்லையே யென்று
எண்ணியே மீண்டுமொரு
கனவுகளை தேடியே அலைகிறது
அந்த சிட்டுக்குருவி,
பெரும் கல்லை உருட்டி
அதட்டி மடக்கி
மணலாக பூக்க வைத்து
விளையாடி மகிழ்கிறது ஆறு
கோடை வெயிலின் தாக்கத்தால்
தன்னுள் பொதிந்து
பாதுகாத்து அடைகாக்கிறது
மழை நீரால் உயிர்பெற்ற
ஆற்று மணல்
