Site icon சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

நாம்

மூலம்: கார்லோ ரொவெல்லி – இயற்பியலின் ஏழு சுருக்கக் குறிப்புகள்

தமிழாக்கம்: சங்கரன்

ஆழ்வெளியின் மையத்திலிருந்து பிரபஞ்சத்தின் எல்லை வரையிலான நமது பயணத்திற்கு பிறகு , இறுதிக் குறிப்பாக மனிதர்களாகிய நம்மைப் பற்றி பேச விரும்புகிறேன். 

சமகால இயற்பியல் தீட்டுகின்ற பிரபஞ்சம் குறித்தான சித்திரத்தில்  அழுதும், சிரித்தும், கண்டுணர்ந்து சிந்தித்தும் முடிவுகள் எடுக்கும் நமக்கு என்ன இடம் உள்ளது? வெளி மற்றும் அடிப்படை நுண்துகள்களின் மாபெரும் புதிரான, நிலையற்ற  துளிமத் திரளாக இந்த பிரபஞ்சம் இருந்தால், பிறகு நாம் யார்? நுண்துகள்கள் மற்றும் துளிமங்களால் ஆனவர்கள் என்றால், ஒவ்வொருவருக்கும் தனி இருப்பும் தன்ணுணர்வும் எப்படி அமைகிறது? நமது கனவுகள், உணர்வுநிலை, லட்சியங்கள், மதிப்பீடுகள், தனிமனித அறிவு – இவையெல்லாம் என்ன? எல்லையற்ற ஒளிரும் பிரபஞ்சத்தில் நாம் யார்?

கடினமான இக்கேள்விகளுக்கு இந்த சிறிய நூலில் பதிலளிக்க முடியும் என கற்பனை கூட செய்ய முடியாது. சமகால அறிவியல் காட்டும் பெருஞ்சித்திரத்தில் பல விஷயங்கள் நமக்கு இன்னும் பிடிபடவில்லை. இதில் மிகவும் குறைவாக நாம் அறிந்தது நம்மைப் பற்றியே. இந்த குறையை முற்றாக தவிர்க்க முயல்வதோ தாண்டிச் செல்ல முயல்வதோ அடிப்படைகளையே மறுக்கும் பிழைக்கு நிகரானது. நாம் ஒரு பகுதியாக வாழும் பிரபஞ்சம், அறிவியலின் ஒளியில் எப்படி காட்சியளிக்கிறது என்பதை விளக்குகிறேன்.

மனிதர்களாகிய ‘நாம்’ பிரபஞ்சத்தினை கண்டறிந்து நிதர்சனத்தின் கூட்டுச்சித்திரத்தை உருவாக்குவதில்  முதன்மையானவர்கள். கருவிகள், சித்திரங்கள், தகவல் மற்றும் அறிவை பகிர்ந்து கொள்ளும் பெரும் பரிமாற்ற வலையின் கண்ணிகள் நாம்.

ஆனால் நாம் வெறுமனே வெளிப்புற பார்வையாளர்கள் அல்ல. காணும் இந்த உலகின் ஒருங்கிணைந்த பகுதியாகவும் இருக்கிறோம். பிரபஞ்சம் குறித்த நமது பார்வை அதன் நடுவில் இருந்தபடியே அமைகிறது.  விண்மீன்களும் பைன் மரங்களும் கொண்டிருக்கும் அதே அணுக்களாலும், தங்களுக்குள் பரிமாறிக் கொள்ளும் ஒளி சமிக்ஞைகளாலும் தான் நாமும் உண்டாக்கப்பட்டுள்ளோம்.

நூற்றாண்டுகளான நமது அறிதலின் வளர்ச்சியில், குறிப்பாக சென்ற நூற்றாண்டில், பிரபஞ்சத்தில் நமது இருப்பு மிகச் சிறியது என்பதையும் கண்டுவருகிறோம்‌.  பிரபஞ்சத்தின் மையமான கோளில் வசிக்கிறோம் என்னும் நம்பிக்கை பொய்த்தது. செடிகள் மற்றும் விலங்குகளிலிருந்து தனித்துவமான உயிரினம் என்ற கருத்தும் தகர்க்கப்பட்டு, நாமும் பிற உயிரினங்களும் ஒரே மூதாதையிலிருந்து தோன்றினோம் என கண்டுபிடிக்கப்பட்டது. தன்னைச் சுற்றியே முழு உலகும் இயங்குகிறது என்னும் சிறுவயது மாயை தகர்ந்து அழும் வளர்ந்த குழந்தையைப் போல மனித இனம் விழிபிதுங்கி நிற்கிறது. பிறருடன் இணைந்து வாழ மனிதர்கள் கற்றுக் கொண்டாக வேண்டும். பிற உயிர்கள் மற்றும் பொருட்களுடனான இந்த பிரதிபலிப்பில் நம்மை நாம் அறிந்து கொள்ள முடியும்.

ஜெர்மன் லட்சியவாத காலகட்டத்தில் ஷெல்லிங் ( Schelling)   , நிதர்சனம் தன்ணுணர்வாக மாறும் இயற்கையின் உச்ச நிலையின் பெருமைமிகு குறியீடே மனிதன் என நினைத்திருப்பார். பிரபஞ்சம் குறித்தான நமது இன்றைய அறிவின் பார்வையில் இந்த கருத்து வேடிக்கையானதாகத் தெரிகிறது. நாம் சிறந்தவர்கள் என்றால் ஒவ்வொரு குழந்தையும் அதன் அன்னைக்கு எப்படி சிறந்ததோ அந்த அளவில் மட்டுமே. ஒட்டுமொத்த இயற்கைக்கும் சேர்த்து அல்ல.

விண்மீன் மண்டலங்கள் மற்றும் நட்சத்திரங்களான மாபெரும் அடர் சமுத்திரத்தில் நாம் ஒரு தூரத்து மூலையில் இருக்கிறோம். அராபிய வண்ணக்கலவை போன்று‌ நிதர்சனத்தை கட்டமைக்கும் எல்லையற்ற வடிவங்களில் தழைக்கும் நூற்றுக்கணக்கான தழைப்புகளில் ஒரு துளியே நாம். 

பிரபஞ்சம் குறித்தான நமது சித்திரம், நம்முடைய மனவெளியில் இருப்பது.  நாம் ஒரு பகுதியாக இருக்கும் நிதர்சனத்திற்கும் நாம் உருவாக்கும் இந்த சித்திரத்திற்கும் இடையில்  அறியாமை, புலன்கள் மற்றும் அறிதலின் எல்லை என கணக்கற்ற வடிகட்டல்கள் உள்ளன‌. இயற்கை மற்றும் வேறெந்த பொருட்களின் ஆய்வு முடிவுகளையும் மேற்சொன்ன சிக்கல்கள் பாதிக்கின்றன. எனவே குறைந்தபட்சம் நியூட்டனின் இயக்கவியல் மற்றும் யூக்ளிடியன் வெளியிலிருந்து நாம் பெறும் பிரபஞ்ச சித்திரம் முழுதாக காரண காரிய விதிகளின்படி உருவாவதில்லை. நம்முடைய அனுபவத்தில் வளர்ந்து உருமாறுவது.  இம்மானுவேல் காண்டின் வழியில் சொல்வதானால் இது நம்முடைய  தொடர் பரிணாம வளர்ச்சியின் posteriori தானே ஒழிய priori அல்ல. நாம் வெறுமனே கற்பதில்லை, அதன் வழியாக நம்முடைய அடிப்படை புரிதல்களையும் தொடர்ந்து  சீரமைக்கிறோம். மெதுவாகவும் தயக்கத்துடனும் நாம் ஒரு பகுதியாக இருக்கும் இயற்கையையும் இதன் வழியாக அறிகிறோம். பிரபஞ்சம் குறித்தான  சித்திரம் நம்முடைய மனவெளியில் இருந்தாலும் நாம் வாழும் உலகையும் விளக்குகிறது. தொடர்ச்சியாக நமக்கு கிடைக்கும் தடயங்களை வைத்து இந்த விளக்கங்களை மேம்படுத்துகிறோம். 

பெருவெடிப்பு பற்றியோ வெளியின் கட்டமைப்பைப் பற்றிய நமது பேச்சு, இரவுகளில்  நெருப்பைச் சூழ்ந்து அமர்ந்து கொண்டு  ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சொல்லப்படும் கதைகளின் தொடர்ச்சியல்ல. மாறாக, அதிகாலையின் முதல் ஒளி எழுந்ததும் புல்வெளியின் புழுதியில் மறிமானின் பாதத்தடத்தினை தேடும் – நேரடியாக காண முடியாத ஒன்றை நிதர்சனத்தில் கிடைக்கப் பெறும் விஷயங்களை அணுகி ஆராய்வதன் வழியாக அடைய முயலும் கூரிய கண்ணோட்டத்தின் தொடர்ச்சியே. எதிர்பாராத தவறுதல்களுக்குத் தயாராகவும் உடனே பாதையை மாற்றிக் கொள்ள முடியவும் சரியாக தேடினால் இரை கிடைத்தே தீரும் என்பதை அறிந்ததாகவும் இருக்கும் இதுவே அறிவியலின் இயல்பும் கூட.

கதைகளை கண்டறிவதற்கும் , நிதர்சனத்தின் தடயங்களை தேடி எதையாவது அறிய முயற்சிப்பதற்கும் இடையேயான குழப்பமே , சமகாலத்தில் அறிவியல் மீது காட்டப்படும் விலகலுக்கும் அவநம்பிக்கைக்கும் காரணம். இந்த இரண்டிற்கும் இடையில் உள்ள வேறுபாடு மிக நுட்பமானது. விடியலில் மறிமானின் தடயங்களை வைத்து வேட்டையாடுவதும் இரவில் மறிமான் தேவதையின் கதையைப் பேசுவதும் அவ்வளவு தூரம் வேறுவேறானதல்ல.

தொன்மங்களும் அறிவியலும் ஒன்றையொன்று ஊட்டி வளர்க்கின்றன. இவற்றிற்கிடையில் உள்ள எல்லைக்கோடு நுண்துளைகளாலானது. இந்த இரண்டில் எதுவாயினும் அறிதலின் மதிப்பு நிகரானது. மறிமான் கைக்குக் கிடைத்தால் உண்பதற்கு தடையில்லை. 

துல்லியமாக இல்லாவிட்டாலும் நமது அறிதல் நாம் வாழும் இந்த உலகினையே பிரதிபலிக்கிறது‌.  இயற்கையிலிருந்து நம்மை வேறுபடுத்துவது உலகிற்கும் நமக்கும் இடையேயுள்ள தொடர்புகள் அல்ல. ஒவ்வொரு இருப்பும் தங்களுக்குள் தொடர் ஊடாடத்தில் இருந்து அதற்கான தடயங்களையும் விட்டுச் செல்கின்றன. சுருக்கமாக, ஒவ்வொன்றுமே தொடர் தகவல் பரிமாற்றத்தில் இருக்கின்றன.

ஒரு பௌதிக அமைப்பு மற்றொன்றைப் பற்றி பெற்றிருக்கும் தகவல்கள் அகவயமானதோ மனம் சார்ந்ததோ அல்ல. ஒரு நிலையிலுள்ள ஒரு பொருளுக்கும்  வேறொரு நிலையிலுள்ள மற்றொன்றிற்குமான தொடர்பு இயற்பியலால் நிர்ணயிக்கப் படுகிறது.  சிறு மழைத்துளி வானில் மேகங்கள் இருக்கும் தகவலை அளிக்கிறது. ஒளிக்கதிர் தான் இறுதியாக தொட்டு வந்த பொருளின் நிறம் பற்றிய தகவலைக் கொண்டிருக்கிறது. ஒரு நாளின் காலம் பற்றிய தகவலை கடிகாரம் கொண்டிருக்கிறது. புயல் பற்றிய தகவல்களை முன்வருகின்ற காற்று கொண்டுள்ளது. எனது மூக்கடைப்பிற்கான சாத்தியக்கூறினை நுண்ணுயிர் ( வைரஸ்) கொண்டுள்ளது. நம்முடைய அனைத்து மரபணு தகவல்களும் ( நான் ஏன் தந்தையைப் போல் இருக்கிறேன்) டிஎன்ஏவில் இருக்கின்றன. எனது அனுபவங்களில் பெறப்பட்ட தகவல்களால் மூளை நிரம்பியுள்ளது.  சேகரித்தும் பரிமாற்றங்கள் வழியாகவும் தொடர் விவரிப்பின் வழியாகவும் பெற்றிருக்கும் இந்த எல்லையற்ற தகவல் புதையலே நமது எண்ணங்களின் ஆதார அடிப்படையாக உள்ளது.

குறைந்தது நமது குளீருட்டியிலுள்ள வெப்ப நிலைப்பான் அறையின் வெப்பநிலையை ‘உணர்ந்து’ம் ‘தெரிந்து’ம்,  வெப்பநிலை அதிகமானால் இயந்திரத்தை இயக்கவும் முன்சொன்ன வெப்பநிலை நிலவத் தொடங்கியதும் நிறுத்தவும் செய்கிறது.  ‘நான் இருக்கிறேன்’ என்னும் என்னுடைய ஆதார அறிதலுக்கும்,  அறையின் வெப்பநிலைக்கு ஏற்ப இயந்திரத்தை இயக்கவும் நிறுத்தவும் பயன்படும் என்னுடைய ‘உணர்தல்’ மற்றும் ‘தெரிந்துகொள்ள’லுக்கும் வெப்ப நிலைப்பானுடையதிற்கும் இடையே என்ன வேறுபாடு?  தொடர் தகவல்பரிமாற்றங்களினால் இயற்கை எவ்வாறு நம்மையும் நம் எண்ணங்களையும் உருவாக்குகிறது?

மிகப் பெரிய இந்த பிரச்சினைக்கு சிறந்த பல தீர்வுகள் பரிசீலனையில் உள்ளன. அறிவியலின் இந்த ஆர்வமூட்டும் முண்ணனியில் தான் பெரும் பாய்ச்சல்கள் நிகழக்கூடும் என நான் நம்புகிறேன். நமது மூளையின் செயல்பாடுகளையும், மிகச் சிக்கலான தொடர்பு வலையை மிகுந்த துல்லியத்துடன் அவதானித்து பதிவு செய்யும் கருவிகள் இருக்கின்றன.  தன்ணுணர்வின் அகவய அனுபவத்துடன் மூளையின் உள்கட்டமைப்பின் கணித வடிவமைப்பினை பொருத்திப் பார்க்க முயலும் சிந்தனைகளை தத்துவவியலாளர்களுடன் நரம்பியலாளர்களும் சேர்ந்து விவாதிக்கிறார்கள்.

இதில் அமெரிக்காவில் பணியாற்றும் இத்தாலிய விஞ்ஞானி Giulio Tononi யின் கணித தேற்றம் வேடிக்கையானது. ஒருங்கிணைந்த தகவல் தேற்றம் ( Integrated Information theory) என்றழைக்கப்படும் இது, தன்ணுணர்வுடைய ஒரு அமைப்பு கொண்டிருக்க வேண்டிய புற கட்டமைப்பை வகுக்க முயல்கிறது‌. உதாரணமாக, நமது விழிப்பு நிலைக்கும் கனவற்ற உறக்க நிலைக்கும் இடையே புறவயமாக நிகழும் வேறுபாடுகளை கவனிப்பது. இன்னமும் தொடக்க நிலையிலேயே இந்த தேற்றம் இருக்கிறது. நமது தன்னுணர்வு எவ்வாறு உண்டானது என்பதற்கு உறுதியான அல்லது நிறுவப்பட்ட தீர்வுகள் என எதுவும் இல்லை. ஆயினும், பனிமூட்டம் மெல்ல விலக ஆரம்பித்துள்ளது.

நம்மைப் பற்றிய சிக்கலான இன்னொரு விஷயம் உள்ளது.  இயற்கை விதிகளை மீறாமல் பின்பற்றுவதே நமது இயல்பு என்றால், நாம் சுதந்திரமாக முடிவுகளை எடுக்க இயலும் என்பதற்கு என்ன பொருள்?  நமது சுதந்திர உணர்விற்கும் புறவுலகின் இறுகிப் போன செயல்பாட்டு விதிகளுக்கும் இடையிலான முரண்பாடு இருக்கிறதல்லவா?  இயற்கையின்

ஒழுங்கிலிருந்து தப்பித்து, நமது சிந்திப்பதற்கான சுதந்திரம் வழியாக அதனை வளைக்கவும் மீறவும் செய்யக்கூடிய ஏதோ ஒன்று நம்முள்ளே இருக்கிறதா?

நிச்சயமாக இல்லை. இயற்கையின் விதிகளை மீறக்கூடிய எதுவும் நம்மிடம் இல்லை. இயற்பியல் முதல் நரம்பியல் வரையிலான மொத்த நவீன அறிவியலும் இதை உறுதிப்படுத்துகிறது‌. 

இந்த குழப்பத்திற்கான தீர்வு வேறேங்கோ இருக்கிறது. நாம் சுதந்திரமானவர்கள் என்பது உண்மையானாலும் , நமது செயல்பாடு நமக்குள்ளே – நமது மூளைக்குள்ளே நடைபெறும் விஷயங்களைப்  பொறுத்ததே அல்லாது வெளிப்புற காரணிகளை அல்ல.  சுதந்திரமாக இருப்பது என்பதற்கு நமது செயல்பாடுகள்  இயற்கை விதிகளுக்கு தொடர்பற்று இருக்கின்றன என்பதில்லை.  மாறாக மூளையில் செயல்படும் இயற்கை விதிகளைப் பொறுத்தே நிர்ணயிக்கப்படுகின்றன

கோடிக்கணக்கான நியூரான்களுக்கு இடையேயான செறிவான தொடர் தகவல் பரிமாற்றங்களே சுதந்திரமாக நாம் எடுக்கும் முடிவுகளை தீர்மானிக்கின்றன‌. நியூரான்களுக்கிடையேயான தொடர் பரிமாற்றங்கள் அனுமதிக்கும் அளவிற்கே நமக்கு சுதந்திரம் இருக்கிறது.  அப்படியெனில் முடிவுகள் எடுப்பது நானா? ஆம். இல்லையென்றால் நான் என்பது நியூரான்களின் ஒட்டுமொத்தமும் முடிவெடுத்துள்ள ஒன்றிற்கு மாறாக எதாவது செய்ய முடியுமா என்னும் அர்த்தமற்ற கேள்விக்கு வழிவகுக்கும்‌ –  பதினேழாம் நூற்றாண்டில் டச்சு தத்துவவியலாளர் ஸ்பினோசா‌ புரிந்து கொண்டபடி இரண்டும் ஒன்றே.

நான் என்றும் மூளையின் நியூரான்கள் என்றும் தனித்தனியாக எதுவும் இல்லை. இரண்டும் ஒன்றே.  தனிமனிதன் என்பவன் சிக்கலான உறுதியாக ஒருங்கிணைக்கப்பட்ட தொடர் செயல்பாடு மட்டுமே.

மனித சுபாவம் கணிக்க இயலாதது என நாம் சொல்வது சரி. ஏனெனில் குறிப்பாக நம்மை நாமே கணிப்பது என்பது மிகச் சிக்கலான ஒன்று. ஸ்பினோசா கண்டறிந்தபடி, நமக்குள் நிகழ்வது  என்னும் மிகச் சிக்கலான விஷயத்தைப் பற்றிய விரிவான புரிதல் இல்லாமல் மேலோட்டமான கருத்துக்களிலிருந்தும் படிமங்களில் இருந்தே அகச் சுதந்திரம் குறித்த நமது தீவிரமான உணர்வு வருகிறது. நமது பார்வையில் மீண்டும் மீண்டும் வியந்து பார்ப்பது நம்மை மட்டுமே.

பிரபஞ்சத்திலுள்ள மொத்த விண்மீன்களின் அளவிற்கே நூற்றுக்கணக்கான கோடி நியூரான்கள், அதற்கும் மேலான எண்ணிக்கையில் தொடர் பரிமாற்றங்களுடன் நமது மூளையில் இருக்கின்றன. நாம் இவையனைத்தின் தன்னுணர்வு அல்ல. நாமறிந்த சிறு பகுதியால் அல்லாது, இந்த மிகச் சிக்கலான நியூரான் அமைப்பு முழுவதும் சேர்ந்து உருவாக்கிய தொடர் செயல்பாடே நாம்.

முடிவுகளை எடுக்கும் நான் என்பதும், தன் மீது விழும் சுய எதிரொளிப்புகளால் உருவாவதும், வெளி உலகில் தன் சுய எதிரொளிப்புகளாலும், உலகின் மொத்த சூழலிலும் தன்னைத் தானே தொடர் மாற்றத்திலுள்ள மிகச் சிறு புள்ளியாக புரிந்து கொள்வதாலும், தகவல்களிலிருந்து கூற்றுகளை உருவாக்கும் மூளையின் மிகச் சிறந்த கட்டமைப்பினாலும் உருவாகும் நான் என்பதும் ஒன்றே.  தீர்மானங்களை எடுப்பது நாம் தான் என்று நமக்குத் தோன்றுவது மிகச் சரி. இல்லையென்றால் வேறு யார் ? 

ஸ்பினோசா கூறியபடி நான் என்பது எனது உடலே‌‌. எனது இதயத்திலும் மூளையிலும் நிகழ்வது தீவிரமான, விடைகாண இயலாத மிகச் சிக்கலான ஓன்று‌.

இதுவரை  நான் கூறிய உலகம் குறித்தான அறிவியல் பார்வை, நம்மைப் பற்றிய தன்ணுணர்வுடனோ நமது உணர்வுகள் மற்றும் சிந்தனை முறைகளுடனோ ஒன்றுடன் ஒன்று முரண்படவில்லை. மிக மிகச் சிக்கலான இந்த உலகினை வெவ்வேறு மொழிகளின் வழியாக அறிகிறோம். எந்தவொரு சிக்கலான செயல்முறையும் வெவ்வேறு நிலைகளில் வெவ்வேறு மொழிகளால் விளக்கப்பட இயலும். ஆராயப்படும் செயல்முறையைப் போலவே தங்களுக்குள் முரண்பட்டும் ஒத்திசைந்தும் பலவகைப்பட்ட இந்த மொழிகள் தம்மை மேம்படுத்திக்கொள்கின்றன. உயிர்வேதியியலின் தாக்கத்தால் உளவியல் ஆய்வுகள் மிகச் நுண்ணியதாக மாறுகின்றன. நம்மை ஆட்டுவிக்கும் உணர்வுகள் மற்றும் விருப்பங்கள் தேற்ற( Theoretical ) இயற்பியலை செழுமைப்படுத்துகின்றன. 

விலங்குகளின் உலகையும் கொண்ட மாபெரும் இயற்கையின் ஒரு பகுதியாக இருப்பதாலோ , கோடிக்கணக்கான ஆண்டுகால பரிணாம வளர்ச்சியினால் உருவானதாலோ, நமது விழுமியங்கள் மற்றும் உணர்வுகள் சிறியதாகி விடுவதில்லை. மாறாக, உண்மை என்பதாலும் நமது நிதர்சனம் சிக்கலானது என்பதாலும் இன்னமும் முதன்மை பெறுகின்றன. நமது கண்ணீரிலும் சிரிப்பிலும் நன்றியுணர்விலும், உயர் லட்சியங்களிலும், விசுவாசத்திலும், துரோகங்களிலும், அமைதியிலும், அலைக்கழிக்கும் கடந்தகால நினைவுகளிலும் நமது நிதர்சனம் உள்ளது. சமூகங்களாலும், இசையின் தாக்கத்தினால் உருவாகும் உணர்வுகளாலும், நாம் இணைந்து உருவாக்கிய பல்வேறு பொது அறிவுத் துறைகளுக்கு இடையேயான மிகச் சிக்கலான தொடர்புவலைகளால் நமது நிதர்சனம் விளக்கப்படுகிறது. இவையனைத்தும் நமது இயற்கை பற்றிய தொடர் உரையாடலின் ஒரு பகுதிகளே‌.  இதுவரையிலான நமது அறிதல்களில் கண்டறிந்தது , இயற்கையின் கணக்கற்ற வெளிப்பாடுகளில் மிக நுண்ணிய பகுதி என்பதால் நாமும் இயற்கையே, அதன் ஒரு ஒருங்கிணைந்த உறுப்பு என்பதே.

மனிதன் என்னும் தனித்துவம் இயற்கையிலிருந்து பிரித்துப் பார்ப்பதை ஊக்குவிப்பதில்லை.  பலநூறு விஷயங்களுக்கு இடையேயான ஊடாட்டங்கள் மற்றும் அதன் எல்லையற்ற சாத்தியக்கூறுகள் வழியாக இயற்கை நமது பூமியில் இவ்வாறு அமைந்துள்ளது. பரந்து விரிந்துள்ள பிரபஞ்சத்தில், நம்மால் ஊகிக்கவும் இயலாத வகையில் இன்னமும் பிரம்மாண்டமான, சிக்கலான மேம்பட்ட இருப்புகள் அமைந்திருக்க வாய்ப்புண்டு. நமது சிந்தனைக்கும் அப்பால் விரிந்து பரவியுள்ள பிரபஞ்சத்தில் ஒரு மிகச்சிறிய மூலையில் அமைந்திருக்கும் நாம் சிறப்பான தனித்துவம் கொண்டவர்கள் என நினைப்பது சிறுபிள்ளைத்தனமானது.  பிரபஞ்சத்தில் நிகழ்வதன் சிறு துளியிலும் துளியான ஒன்றையே இங்கு பூமியில் நிகழ்பவை காட்டுகின்றன. நாமே அதற்கு மிகச் சிறந்த உதாரணம்.

அறிவுத்திறனும் கூரிய நுண்ணுணர்வும் கொண்ட, ஹோமோ என்று இனவகைப்படுத்தப்பட்ட இரு சாண் உயிரினங்களுள் இன்று மீதமிருப்பது நாம் மட்டுமே. இந்த வகைமையில் உள்ள மற்ற உயிரினங்கள் அனைத்தும் அழிந்துவிட்டன. நியாண்டர்தால் போன்றவை மிகச் சமீபத்தில், அதாவது முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அழித்தனர்.  இவையனைத்தும் அடுக்குமுறைகளும் தொடர் பூசல்களும் கொண்ட குரங்குகள்,   குறிப்பாக சிறிய, அமைதியான, சமத்துவமுடைய, பலதார தொடர்புடைய பனோபோ (Bonobo) வகை குரங்குகளிடமிருந்தே தோன்றின. புதிய இடங்களை காண்பதற்காக ஆப்பிரிக்காவிலிருந்து தொடர்ந்து வெளியேறி தொலைதூர (தென்னமெரிக்க) பேடகோனியா பகுதி வரையிலும், அதற்கப்பால் நிலவுக்கும் சென்றனர்.

 அறி-நுண்ணுணர்வு என்பது இயற்கைக்கு எதிரானது அல்ல‌.நமது இயல்பிலேயே இருப்பது. 

தொலைதூரங்களைக் காணத் தூண்டும் அறிநுண்ணுணர்வின் காரணமாகவே லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் இருந்து நமது உயிரினங்கள் வெளியேறின.  இரவினில் ஆப்பிரிக்கா மீது பறந்து செல்கையில், பரந்து விரிந்து வடக்கு திசை நோக்கிச் சென்ற மூதாதைகளுள் எவரேனும் ஒருவர், அதே உணர்வால் தூண்டப்பட்ட  அதிதூ வழித்தோன்றல் ஒன்று, இயற்கை குறித்தான ஆழ்ந்த சிந்தனையுடன் வானில் பறப்பதை எதிர்நோக்கியிருந்திருப்பாரா? 

ஒரு உயிரினமாக நாம் நீண்டகாலம் தாக்குப்பிடிக்க மாட்டோம் என நம்புகிறேன். ஆமைகள் போன்று (நாம் தோன்றுவதற்கும்) கோடிக்கணக்கான ஆண்டுக்களுக்கு முன்பிருந்து  தொடர்ந்து இன்றும் பெரிய மாற்றங்களின்றி  நீடிப்பதற்கான எந்த ஒரு அடிப்படையும் நம்மிடம் இல்லை. அற்பாயுளுடைய உயிரினங்களின் தொகுதியிலேயே நாம் இருக்கிறோம். நமது உறவினர்கள் அனைவரும் அழிந்து விட்டனர். அதற்கும் மேலாக தன்னழிவிற்கும் வழிவகுத்துவிட்டோம். நாம் தொடங்கி வைத்த முரட்டுத்தனமான சூழலியல் மற்றும் பருவநிலை மாற்றங்கள் நிச்சயமாக நம்மை விட்டுவைக்கப் போவதில்லை. பூமிக்கு வேண்டுமானால் இவை ஒரு சிறிய சிலிர்ப்பாக இருக்காலம். இன்னமும் விளைவுகளை உணராமல் அனைத்து சமூக மற்றும் அரசியல் தரப்புகளும் தரைக்குள் தலையைப் புதைத்துக் கொண்டிருப்பதால் வரப்போகும் பேரழிவு மாற்றங்களிலிருந்து தப்பித்து விடுவோம் எனத் தோன்றவில்லை. பூமியில் தன்னுடைய தவிர்க்க முடியாத மரணத்தினை முன்னுணர்ந்து எதிர்நோக்கும் ஒரே உயிரினம் நாம் மட்டுமே. அந்த பேரழிவினையும் அல்லது குறைந்தபட்சம் தமது நாகரித்தின் அழிவையும் கண்கொண்டு காணக்கூடிய ஒரே உயிரினமும் நாமாக இருக்கக்கூடும் என அஞ்சுகிறேன்.

தனிமனித மரணத்தினை எப்படி எதிர்கொள்வது என ஏறக்குறைய நாம் தெரிந்திருப்பதால், நமது நாகரித்தின் அழிவையும்  எதிர்கொள்ள முடியும். இந்த இரண்டும் வேறு வேறல்ல – முதன்முறையாக நடப்பதும் அல்ல. மாயன்களும் கிரீட்டன்களும் ஏற்கனவே இதை எதிர் கொண்டிருக்கிறார்கள்.  தனியாகவும் தொகையாவும் பிறந்து இறக்கும் விண்மீன்கள் போன்றே  நாமும் பிறந்து இறக்கிறோம். இதுவே நமது நிதர்சனம். அற்பாயுளுடையது என்பதால்  வாழ்வு என்பது நமக்கு அரியதான ஒன்று. லுக்ரீஷஸின் (Lucretius) வரிகளில், நாம் வாழ்வுக்கான  தீராத பசியும் அடங்காத தாகமும் கொண்டவர்கள். ஆனால், நம்மை படைத்து வழிநடத்தும் இயற்கையினுள்ளேயே இருப்பதால், வேறு எதையோ வேண்டும் ஒரு சிறு பகுதியுடனும், இயற்கையினுடையதாக மற்றொரு பகுதியுடனும் , இரு உலகங்களுக்கு இடையில் அல்லாடும் முழு நாடோடிகள் அல்ல. நம்முடைய  இருப்பிடத்தில் அமைந்திருக்கிறோம்.

இயற்கையே நமது இருப்பிடம்- இயற்கையில் நமது இருப்பிடத்தில் இருக்கிறோம்‌.  அறிநுண்ணுணர்வு நமக்கு அளிக்கும்,  சிறு துகள்களாலான வெளியினைக் கொண்ட, காலமே இல்லாத, எதுவுமற்ற  விந்தையான, பலவண்ணமுடைய, ஆச்சரியமூட்டும் இந்த பிரபஞ்ச சித்திரம் நாம் எதனால் உண்டாக்கப்பட்டுள்ளோம் என காட்டுகிறது. நம்மை உண்மை இயல்பிலிருந்து முரண்பட வைப்பதில்லை‌. எதனால் விண்மீன்துளிகள் உண்டாக்கப்பட்டுள்ளனவோ, அதனாலேயே நாமும் படைக்கப்பட்டுள்ளோம். மகிழ்வில் திளைக்கையிலும் துன்பத்தில் துவள்கையிலும் நாம் பிரபஞ்சத்தின் ஒரு பகுதியாக இருப்பதை தவிர்க்க இயலாது.

லுக்ரீஷஸின் அழகான வரிகளில்,

ஒரே விண்ணக விதையிலிருந்து வந்தவர்கள் நாம்;

ஒரே தந்தையைக் கொண்டவர்கள்,

அதனிடமிருந்து தூய மழைத்துளியைப் பெற்று,

சிறந்த உணவையும் பசுமையான மரங்களையும்,

மனித இனத்தினையும்,

விலங்கினங்களையும் படைத்து,

அனைத்துயிர்களும் செழித்து தழைத்து

இனிய வாழ்வையும் சந்ததிகளையும் பெற

அமுதூட்டும் அன்னையாகிய பூமி உதவுகிறாள்….

அன்புகாட்டுதலும் நேர்மையும் நமது இயல்புகள். மேலும் மேலும் கற்கவும் அறிந்து கொள்ளவுமான வேட்கையும் இயல்பானது. பிரபஞ்சம் குறித்தான நமது அறிதல் தொடர் வளர்ச்சியிலிருப்பது.   வெளியின் அதிநுண்ணிய கட்டுமானம், பிரபஞ்சத்தின் தோற்றம், காலத்தின் இயல்பு, கருந்துளை நிகழ்வு , நமது சொந்த எண்ண அமைப்பு போன்ற முன்னணிகளில் அறிவு வேட்கை பற்றி எரிய கற்கிறோம். அறிந்தவற்றின் நுனியில் நின்று  அறியாத ஒன்றை தொடுகையில் பிரபஞ்சத்தின் திகைக்க வைக்கும் அழகும் மந்தணமும் ஒளிர்கிறது.

சொல்லடைவு:

நிறைவு

பிரபஞ்சத்தின் கட்டமைப்பு: கார்லோ

நிகழ்தகவு, காலம் மற்றும் கருந்துளையின் வெப்பம்
Exit mobile version