Site icon சொல்வனம் | இதழ் 318 | 12 மே 2024

கு.அழகர்சாமி கவிதைகள்

(1) துப்பு

மெளனத்திலிருந்து
வெகு தொலைவுக்கு
வந்து விட்டாய் நீ.
எந்த வார்த்தையிலிருந்து
தொடங்க உத்தேசம்
உன்னை இன்று?
உண்மையில் உன் விடியல்
அது தான் .
உன் வார்த்தையில் நீ
அர்த்தம் கொள்ள வேண்டிய
அவசியத்தை உணர்கிறாயா?
வார்த்தைக் குளத்தில்
தூண்டிலைப் போடுகிறாய்
எந்த அர்த்த மீனைப் பிடிக்க?
தர்க்க நீச்சல் தெரியுமென்று
வார்த்தைக் குளத்தில்
குதித்து விட அவசரமா?
மீள முடியாமல் புதைசேற்றில்
குதித்து விடாதே, கவனம்-
குதித்து விடத் தெரியாமலா
அந்த மரம் எப்போதும்
அந்தக் குளத்தோரம் நிற்கிறது
சிந்தித்தபடி.
அது உதிர்க்கும் மலர்கள்
நீ தேர்ந்தெடுக்க வேண்டிய
வார்த்தைகளுக்கு
துப்பு தரலாம்.


(2) மரங்கொத்தி

டொக் டொக்—-
திருப்பித் திருப்பி
ஒலிப்பதில்
ஒலி கூராகிறது.
ஒலி நிறைந்து
ஓட்டைவாளி வெளியில்
வழிகிறது
நிரம்புவதற்கு-
ஆனால்
நிரம்ப முடியாமல்.
எங்கிருந்து எழுகிறது
ஒலி?
உள் தேடுகிறேன்?
புறம் தேடுகிறேன்?
சுற்றுமுற்றும் பார்க்கிறேன்-
ஒன்று-
வார்த்தையாக இருக்கலாம்
அல்லது
பறவையாக இருக்கலாம்-
ஒலி
கொத்துகிறது
எதையோ.
அது
நானாக இருக்கலாம்
ஒலிப்பது
ஒரு வார்த்தையாக இருந்தால்
அல்லது
அது
ஒரு மரமாக இருக்கலாம்
ஒலிப்பது
ஒரு பறவையாக இருந்தால்.
தெளிய
வார்த்தை அர்த்தத்தில்
தப்புவது போல்,
தள்ளித்
தெரிகிறது எனக்கு
ஒற்றைத் தென்னையைக்
கொத்திக் கொண்டிருக்கும்
ஒரு மரங்கொத்தி-
டொக் டொக்—–
டொக் டொக்—–
வானம் நினைவுபடுத்தி
கொத்தியது போதும் போல்
விருட்டென்று பறந்து போகிறது
அது.
டொக், டொக்—
பறவை விட்டுப் போன ஒலி
சுற்று வெளியைத்
துளைத்துக் கொண்டிருக்கும்
அதன்
மையமில்லா
மையத்திற்கு.


(3)

எங்கிருந்து பறந்து வந்தது
இந்த மரங்கொத்தி?

டொக் டொக்—
டொக் டொக்—
என்னையும் கொத்துவது போல்-
ஆனால் வலிக்காமல்-

கண்ணிமைக்காமல்-
கண்டு கொண்டே இருக்கிறேன்
இன்னும் பறந்து போகாது
கொத்திக் கொண்டே இருப்பதை-

அப்போது தான் உணர்கிறேன்
அது தன் சிறகுகளை
எனக்கு பரிசளிப்பதை-

உணர்ந்த தாமதத்தில் அது
வழங்கிய சிறகுகளை நான் விரிப்பதற்குள்
திரும்பப் பெற்றுக் கொண்டு
திசை நோக்கிப் பறக்கும் அது.

டொக்-டொக்-
பறவை
விட்டுப் போன ஒலி
கொத்துகிறது-
ஆனால் வலிக்க எனக்கு.

Exit mobile version