Site icon சொல்வனம் | இதழ் 366 | 10 மே 2026

தூண்டில்

புற்கள் அடர்ந்த மலை முகட்டில் படுத்திருந்த சந்தீப்பின் தடித்த மேல் சட்டையை ஊடுருவி முதுகில் பரவியது குளிர் காற்று. மல்லாந்து படுத்திருந்ததால் ஆகாயத்தை நோக்கி இருந்த முகத்திலும், நெஞ்சிலும் வெம்மை படர்ந்தது. சூடான ஒளி முகம் வழியே வழிந்தோடி கழுத்திற்கு பின்னால் வேர்வைக் கோடாகி, ஒரு குளிர்ந்த நீர் சரடு போல முதுகெலும்பில் ஊர்ந்தது. 

‘எனக்கு என்ன தோணுது தெரியுமா?’ என்றாள் பக்கத்தில் படுத்திருந்த மாதவி. கைகள் கோர்த்து இருந்தனர் இருவரும். புற்களின் நுணிகளில் இருந்த சிறு மலர்கள் அவர்கள் விரல்  இடுக்குகளில் சிக்கி ஒரு மலர் கொத்து போல நீட்டிக் கொண்டிருந்தது. அவர்கள் கண்களின் மேல் அணிந்திருந்த இருண்ட கண்ணாடிகளின் வழியே ஆகாயம் மஞ்சளாகத் தெரிந்தது. வானின் உச்சியில் ஒளி மங்கிய சிறு வெள்ளித் தட்டை பதித்தது போல இருந்தது சூரியன். வெகு உயரத்தில் மூன்று, நான்கு பறவைகள் சோம்பலாக வட்டம் அடித்துக் கொண்டிருந்தன.  

‘காத்துல மிதக்குற இறகு மாதிரி’

படுத்திருந்த படியே தலையை சாய்த்து மாதவியைப் பார்த்தான்.

தண்டு சற்று வளைந்து பின்பு ஒரு நேர்கோடு போல இறங்கி வரும் நாசியின் ஒரு ஓரத்தில் சிறு வைர மூக்குத்தி, புள்ளிச் சூரியன் போல மிளிர்ந்தது. குளிருக்காக போட்டிருந்த கம்பளித் தொப்பியிலிருந்து விடுபட்ட ஒரு முடிக் கற்றை நெற்றியில் புரள அதை தன் நீண்ட விரல்களால் ஒதுக்கி விட்டாள். புறக்கையில் அவர்களின் திருமணத்திற்காக அவள் வரைந்து கொண்ட மருதாணி வளைவுகள் நிழல் கோடுகள் போல அவள் நெற்றியை தடவி மறைந்தது.

‘வாவ்’ என்றான் சந்தீப்.

என்ன என்பது போல தலையை திருப்பினாள்.

‘இல்ல..உன் சிந்தனைகள் கூட அழகா இருக்கு’ என்றான் சந்தீப்.

‘ச்…போறும்’ என்று சொல்லி விட்டு ‘அங்க பாரு’ என்று சந்தீப்பின் மோவாயில் விரல்கள் வைத்து அவன் தலையை மறு பக்கம் திருப்பினாள். தூரத்தில் பனி மலைகள் வெள்ளை யானைகள் போல அணிவகுத்து இருந்தன. அவர்கள் படுத்து கிடந்த சிறு பூக்கள் மண்டிய மலை முகட்டிற்கு ஒரு பெரும் அரண் போல. 

‘பந்தர்பூஞ்ச், காலாநாக்…’ என்று சந்தீப்பின் ஆள்காட்டி விரல் ஒவ்வொரு சிகரத்தையும் சுட்டியபடியே நகர்ந்தது.

‘ச்…இது என்ன க்விஸ்ஸா?’ என்று  கையைத் தட்டி விட்டாள் மாதவி. 

‘சும்மா பாரேன்…எந்த அறிவுஜீவி வடிகட்டியையும் மண்டைல ஏத்திக்காம’

எப்படிப் பார்த்தாலும் மலைகள் மலைகள் போலத் தான் தெரிந்தது அவனுக்கு. பல கோடி ஆண்டுகளுக்கு முன் கண்டங்களின் மோதலால் நெம்பி எழுந்த நிலங்கள். மேலே பல கிலோமீட்டர்கள் எழும்பியதால் பனி சிகரங்களை மூடி இருந்தது. நிலங்கள் புடைத்துக் கொண்டு மேலெழுந்தபோது பழைய டெதிஸ் கடலையும் அதனோடு சுருட்டிக் கொண்டது. தூரத்தில் இருக்கும் பனிச் சிகரங்களில் இன்று கூட கடல் தொல்லுயிர் எச்சங்களை பார்க்கலாம் அம்மோநயிட்ஸ், ட்ரைலோபைட்ஸ்…

‘பச்சைக் கம்பளம், வெள்ளைச் சுவரு, வெளிச்சம். லிவிங் ரூம் இப்படி தான் இருக்கணும்’ என்றாள் மாதவி.

இப்ப தான் இறகு, பிறகுன்னு சொன்ன என்று சொல்ல எத்தனித்தப் போது தான் அந்த வண்ணத்து பூச்சி அவன் கண்களில் பட்டது. அவர்கள் படுத்திருந்த புல்வெளிப் பரப்பில் அவனிடமிருந்து சற்று தள்ளி ஒரு சிறு புதரின் மேல். இறக்கைகள் மேல் அடர் சிவப்பு நிறம், அடியில் மையின் கருப்பு. உட்கார்ந்த படியே இறக்கைகளை சேர்த்தும், விரித்தும் நொடிக்குள்ளாகவே மறைந்து, மீண்டும், மீண்டும்  மலரும் ஒரு விந்தையான மலர் போல…

‘சன் ஸ்க்ரீன் லோஷன் எடுத்துட்டு வர்ல இல்லனா இன்னும் கொஞ்ச நேரம் கூட இப்படியே படுத்துகிட்டு இருக்கலாம்’ என்றாள் மாதவி.

‘நானே ஸ்க்ரீன் மாதிரி தான்…’ என்று மாதவியிடம் மீது படர்ந்து அவளின் காது மடலை நாக்கால் வருடினான். அவள் அணிந்திருந்த வாசனை திரவியத்தின் லேசான மல்லிகை மணம் நாசியில் பரவ அவள் கழுத்தின் வளைவில் முகம்  புதைத்தான். மாதவியின் விரல்கள் அவன் பின் தலையை பற்றி… 

xx

அவன் அழுது இருக்கிறான் என்பதை கன்னத்தின் நசநசப்பு உணர்த்தியது. அவன் வெளியேற்றிய சுவாசக்காற்று நீர் குமிழிகள் ஆக மேலே எழும்பி வெடித்து, ஒளிர் விளக்குகளால் வெளிச்சம் ஊட்டப்பட்ட தொட்டியின் நீல வண்ண  நீரோடு, கரைந்தது. அவன் முதுகில் சுமந்திருந்த ஆக்ஸிஜன் உருளையில் இருந்து உள்ளிழுத்து கொண்டிருக்கும் அவனது மூச்சு காற்று இரைச்சல் போல காதுகளில் விட்டு விட்டு ஒலித்தது.

அவன் முன்னே ட்ராகோ மிதந்து கொண்டிருந்தது. 

மூன்று நீள் கரங்கள் துவண்டு, கடல் அடியில் முளைத்து எழும் தாவரங்கள் நீரோட்டத்தில் ஆடுவது போல சற்றே தள்ளாடிக் கொண்டிருக்க, அதன் நான்காவது கரம் சந்தீப்பை ஆசிர்வதிப்பது போல அவன் தலைக்கவசத்தின் மேல்  படர்ந்திருந்தது. நான்கு கரங்களும் சேரும் இடத்தில் திரண்டிருந்த தசைத் தொகுப்பின் மேல் ஆமையின் ஓடு போல கூரையிட்டிருந்த தடித்தப் பகுதியில் வண்ணங்கள் கொப்பளித்து, மெதுவாக அடங்கி, ஓடி வந்த மூச்சிரைப்பு சமனப்படுவது போல சீராகத் துடிக்கத் தொடங்கியது.

சந்தீப்பின் கன்னங்களில் கோடிட்டக் கண்ணீரை தலைக்கவசத்தின் பஞ்சு உறிஞ்சிக் கொண்டது.

‘என்ன செஞ்ச?’ சந்தீப்பின் வார்த்தைகள் இரு வண்ணப் புள்ளிகளாக மாறி அவன் கைகளில் வைத்திருந்த திரையில் வட்டம் அடித்தது. 

ட்ராகோவின் ஓட்டில் பச்சை நிற சூழல் ஒன்று எழும்பி, ஒரு சிவப்புத் திட்டை சுற்றி வளைத்து, நீலமாக ஒளிர்ந்து அடங்கியது. சந்தீப் கைகளில் வைத்திருந்த திரை ட்ராகோவின் ஓட்டில் மலர்ந்த வண்ணங்களை மொழியாக்கம் செய்து அவன் காதுகளில் பெண் சாரீரத்தில் சொல்லியது. ஏதோ காரணத்தினால் மொழியாக்க செயலியின் பெண் குரலுக்கு அவன் மனம் கமலி என்ற பெயரை சூட்டி இருந்தது.

‘உன் மனதில் ஆழப் பதிந்திருந்த சில நிற வடிவங்களின் நிழல்களை மீண்டும் வண்ணம் கொள்ளச் செய்தேன். உன் எண்ணங்கள் தான் அவை.’

‘இது எப்படி சாத்தியம்?’ சந்தீப் கேட்டான்

‘எங்களில் சிலரால் இது இயலும். எங்கள் சமூகத்தின் மிக முக்கியப் பணி இது’

‘கடந்த கால நிகழ்வுகளின் எண்ணங்களைத் தூண்டுவது தான் உன் பணியா? அதுவும் இத்தனை துல்லியமாக?’. மல்லிகையின் மணம் நாசியை விட்டு இன்னமும் கூட விலகவில்லை என்றே அவனுக்கு தோன்றியது.

‘முன்பு இல்லை, ஆனால் கடந்த சில ஆயிரம் சுற்றுகளில் அது முக்கியமாகி விட்டது’. 

சுற்றுகள் என்ற வார்த்தையை உச்சரிக்க கமலி சற்று நேரம் எடுத்துக் கொண்டது. இது வரை ட்ராகோவின் ஓட்டில் கண்ட வண்ணங்களையும், வடிவங்களையும், அதன் அங்கங்களின் அசைவுகளையும் சேமித்து வைத்திருந்த தரவுத்தளத்தை மென்று, இப் புது வண்ணங்களோடு ஒப்பிட்டு, ஆங்காங்கே கிழிந்த சேலை போல தென்பட்ட இடைவெளிகளில் புதிதாகக் கற்றவற்றை நிரப்பி… நேரம் எடுக்க தான் செய்யும். சந்தீப்பிற்கு கமலியை சீர் செய்து, முடுக்கி விட இது வரை நேரம் அமையவில்லை. மன்னார் வளைகுடாவில் வானத்தில் இருந்து வீழ்ந்த தீப் பந்து பற்றி மீனவர்கள் சொல்லியதிலிருந்து மூன்று மாதங்கள் நொடியில் கரைந்து விட்டன.

‘ஏன்?’ என்றான் சந்தீப்.

வண்ணங்கள் அனைத்தும் வடிந்து, உலர்ந்த களி மண் நிலம் போல ஆகியது ட்ராகோவின் ஓடு. ஏதோ ஒரு பெரும் துயரம் அதை மௌனம் ஆக்கி விட்டது போல. 

பல வருடங்களுக்கு முன் கார்னெல் பல்கலைக்கழகத்தில் எக்ஸோபையாலஜி பாடத்தின் முதல் வகுப்பிலேயே புகையிலை இல்லாத காலி பைப்பை வாயின் ஓரம் சொருகி, மூக்கின் நுனியில் தொங்கியக் கண்ணாடியைத் தாண்டி தன் முன்னே அடுக்குகளில் உட்கார்ந்திருக்கும் மாணவர்களை பார்த்து the trap of anthropomorphism தெரியுமா என்று கேட்ட பேராசிரியர் ஹார்ப்பரின் முகம் சந்தீப்பின் மனதில் நிழலாடியது. 

நமக்கு இருக்கும் அதே எண்ணங்களும் உணர்ச்சிகளும் மற்ற ஜீவராசிகளுக்கும் உண்டு என்று நாம் எண்ணுவதே அந்தப் பொறியில் நாம் எடுத்து வைக்கும் முதல் அடி. நம் உணர்ச்சிகளை மற்றவையிடம் பொருத்தி நாயின்  கண்கள் கெஞ்சுகின்றன, பூனை சிரிக்கின்றது என்றெல்லாம் அனுமானித்தால் anthropomorphism பொறியில் நன்கு சிக்கி விட்டோம் என்றே அர்த்தம். ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள், நாய் உங்களிடம் பேசவில்லை, அதன் மூலமாக நீங்களே உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். புகையோடிய அவரின் கரகரப்பான குரல் நினைவூட்டியது.

சில வினாடிகளில் ட்ராகோவின் ஓடு, தொலைக்காட்சித் திரை விழித்தெழுவது போல, வண்ணக் கலவைகளின் குவியலாக மாறியது. ஓட்டைச் சுமந்து கொண்டு தலைப் போல இருந்த தசைத் தொகுப்பின் இரு புறத்திலும் சிறு பிளவுகள் திறந்து மூடின. அவை வாய்களா, கண்களா என்று சந்தீப்பினால் சொல்ல முடியவில்லை. ட்ராகோவின் தும்பிக்கைகள் போன்ற கரங்கள் வளைந்து, நெளிந்து நீரில் கோலமிட்டன. 

‘நாங்கள் தோட்டக்காரர்கள். உலகத்தைச் செதுக்கும் கலைஞர்கள். நாங்கள் வந்திறங்கிய போது மண்ணும், பாறையும், கொந்தளிக்கும் உப்பு நீரும், அறிவாற்றல் இல்லாத உயிர்கள் மட்டுமே கொண்ட ஓர் வெற்று உருண்டையின் மேல் எங்கள் கற்பனை அனைத்தையும் கொட்டினோம். பனிப்பாறைகள் உடைத்து, மிக உப்பான கடல்களை நன்னீரால் நிரப்பி, நிலங்களின் பரப்பை சுருக்கி, அங்கிருந்த உயிர்களின் மரபியலை மாற்றி… நாங்கள் வாழ, எங்களுக்காக மட்டும் இயங்கும் ஓர் அழகான உலகாக வடிவமைத்தோம். இரட்டை சூரியன்களின் ஒளியில் எப்பொழுதுமே ஒளிர்ந்துக் கொண்டிருக்கும் நீர் தோட்டங்களால் அமைந்த ஓர் உலகு…’

சந்தீப்பின் முன்னே ட்ராகோ அப்படியே உறைந்தது. அதன் நான்கு கரங்கள் விரிந்து ஒரு மாமிச மலர் போல  அசையாமல் நீரில் மிதந்துக் கொண்டிருக்க அதன் ஓட்டில் ஓரே ஒரு நீலப் புள்ளி மட்டும் மெதுவாக வட்டமடித்துக் கொண்டிருந்தது. ஏதோ ஓர் நினைவு மட்டும் மனதில் சுற்றுவது போல.  சில வினாடிகளில் குட்டித் தூக்கத்தில் இருந்து சட்டென்று எழுவது போல வண்ணங்கள் மீண்டும் ட்ராக்கோவின் ஓட்டில் குடியேறின.

‘ஆனால்…’ ட்ராக்கோவின் உடல் முழுதும் ஒரு மெல்லிய நடுக்கம் பரவியது.

‘சில ஆயிரம் சுற்றுகளுக்கு முன்னே, எங்கள் உலகத்தின் சூரியன்களில் கருந் திட்டுக்கள் பரவத் தொடங்கின. ஆழ் நீர் வரை கடையும் சூறாவளிகள், உறையவைக்கும் பனி, உக்கிரமான வெப்பம், உப்புச் சாம்பலை கக்கும் கடலடி எரிமலைகள் என்று சீராக இயங்கிக் கொண்டிருந்த எங்கள் உலகம் தடம் புரண்டது’.

ட்ராகோவின் அங்கங்கள் மெதுவாக அசைய ஆரம்பித்தது. நான்கு கரங்களும் நீரைத் துழாவின.

‘வெள்ளைச் சிப்பிகள் மேவிய எங்கள் கடலடி சதுக்கங்களில் வண்டல் மூடியது, பண்ணைகளில் நாங்கள் வளர்த்த இரை வயிறுகள் வீங்கி, அழுகி, மாமிசத் தீவுகள் போல மிதந்தன, கடலின் மேல் நாங்கள் அமைத்த சூரியப்பலகைகள் செயலிழந்தன, எங்களின் சமூகம் துண்டுத் துண்டாக உடைந்து…ஒரு அழகான பொருள் மெதுவாகச் சிதைவதைப் பார்ப்பதை விட அதைத் தடுத்து நிறுத்த இயலாது என்ற எண்ணமே அறிவார்ந்த ஜீவராசிகளுக்கு மிகு துன்பத்தை அளிக்கும்’ 

ஆஸ்பத்திரியில் பச்சை நிற ஓராடைக்குள் மெலிந்துருகி சுற்றி இருந்த மின் திரைகளில் சதா ஏறி இறங்கியக் கோடுகளை வெறித்து பார்த்த மாதவியின் கண்கள் சந்தீப்பின் மனதில் ஒரு விஷக் குமிழி போல் தோன்றி வலியோடு வெடித்தது. மலரின் இதழ்களை ஒவ்வொன்றாக பிய்த்து எடுப்பது போல மெதுவாக, குரூரமாக மாதவியின் உயிரை எடுத்த  ஊழின் முன்னால் அவனால் என்ன செய்ய முடிந்தது? அவனையும் அறியாமலே ஆமாம் என்ற வார்த்தை வெளியேறி, வண்ணமாக அவன் வைத்திருந்தத் திரையில் ஒளிர்ந்தது. ட்ராகோ அதை கவனிக்காதது போலவே தொடர்ந்தது.

‘எங்களில் பலர் மடிந்தனர். ஒரு விதத்தில் அதுவும் நல்லது. ஏனென்றால் பிழைத்து இருப்பவர்கள் முழுமையாக இல்லை. அவர்களின் அகம் பழுது போன சூரியப் பலகைகள் போல அவ்வப்போது தான் அவர்களை இயக்குகிறது. கலைஞர்களுக்கு எண்ணங்கள் அற்ற வெற்றிடம் ஒரு பெரும் சுமை’ 

சந்தீப்பின் காதில் கமலி தெரியுமா? என்ற தொனியில் அதை மொழிபெயர்த்தது.

அது எண்ணங்கள் அற்ற வெற்றிடம் அல்ல, முளைக்கும் எண்ணங்களை உடனுக்குடன் உறிஞ்சும் கருந் துளை என்று சந்தீப் அறிந்திருந்தான். மாதவி இறந்த பிறகு அந்த இருள் அவனுக்கு மிகவும் பழக்கமாகி இருந்தது.

கமலி தொடர்ந்து பேசினாள்.

‘உணர்விழந்து, உற்சாகம் இழந்து, இடிபாடுகள் இடையே தோய்ந்த இருண்ட நீரில் மிதந்து கொண்டிருந்தவர்களை மீட்டெடுக்கவே எங்கள் இனத்தில் என்னைப் போல சிலர் சிகிச்சையாளர்கள் ஆனோம். மனதின் ஆழத்தில் புதைந்துப் போயிருக்கும் நினைவின் வண்ணங்களைத் தூண்டில் போட்டு இழுக்கும் திறமைப் பெற்றவர்கள் நாங்கள். அகத்தின் பாதாளத்தில் வீழும் பலரை சற்றைக்கேனும் மேலே தூக்கி விடுவது தான் எங்களின் பணி. தூண்டில்காரர்கள் என்றே எங்களுக்குப் பெயர்.’ 

உங்கள் இனத்தவரை மட்டும் அல்ல. நீயே அறியாமல் என்னை கூட தூண்டில் இட்டு மேலே இழுத்திருக்கிறாய் என்று சந்தீப் நினைத்துக் கொண்டான். மாதவி இறந்த பிறகு கட்டாந்தரையாக இறுகிய அவன் மனம் சற்று நெகிழத் தொடங்கி இருப்பது கடந்த மூன்று மாதங்களில் தான். ட்ராகோ சம்பந்தப்பட்டப் பல பணிகளையும் அவனே இழுத்துப் போட்டுக் கொண்டான். மனதில் விரிந்து இருந்த வெற்றிடத்தை கடின வேலைகளாலேயே நிரப்பிக் கொண்டான்.

விண்ணிலிருந்து வீழ்ந்த ட்ராகோவின் கலத்தில் நிறைந்திருந்த நீர்/திரவத்தின் உப்பு மற்றும் வளிகளின் செறிவை அடையாளம் கண்டு, அதை பன் மடங்காக உற்பத்தி செய்து பெரும் தொட்டியில் நிரப்பி, கலத்தினுள் நினைவிழந்திருந்த ட்ராகோவை அதற்குள் இட்டுச் சென்று, பல்வேறு வகையான திரவ புரதசத்து கலவைகளை ட்ராகோவின் உணவுக்காகப் பரிட்சித்து, ட்ராகோவின் ஓட்டில் எழும் வண்ணங்கள் பாஷை என்பதை அவதானித்து, அதை மொழியாக்கம் செய்ய செயற்கை நுண்ணறிவுச் செயலிகளைப் பழக்கி, இவற்றை எல்லாம் ஒருங்கிணைக்க ஒரு திறமையானக் குழுவை அடையாளம் கண்டு அமர்த்தி என்று செயல்கள் மூலமாகவே அவன் தன் துக்கத்தை மறந்தான்.  ஒவ்வொரு இரவும் அவனது குழுவினர் அவரவர் இருப்பிடங்களுக்குச் சென்ற பிறகு கூட சந்தீப் அங்கேயே இருந்தான். பரிசோதனைச் சாலை அவன் வீடாக மாறி விட்டிருந்தது.

‘ஆனால் அது எங்களைப் போன்றவர்களின் முதன்மைத் தொழில் அல்ல’. ட்ராகோவின் ஓட்டில் பல வண்ணப் பொட்டுக்கள் மலர்ந்து, கரைந்தன.

‘நாங்கள் எங்கள் சமூகத்தின் வேட்டைக்காரர்கள். பண்படாத உலகில் முதல் காலடி எடுத்து வைப்பவர்கள் நாங்கள். புது உலகில் இருக்கும் அச்சுறுத்தல்களை அகற்றவும், எங்கள் பின்னே தொடர்ந்து வரும் கலைஞர்கள் அவர்களின் கற்பனைக்கேற்ப உலகை சமைக்க ஏதுவான சூழலை உருவாக்குவதும் தான் எங்களின் பணியாக இருந்தது ஆனால், அதெல்லாம் முன்பொரு காலத்தில்.’

ட்ராக்கோவின் கரங்கள் சற்று சிலிர்த்து அடங்கியது. மனிதன் விடும் பெருமூச்சு போல, பேராசிரியர் ஹார்ப்பர், ஐ திங்க் யூ ஆர் ராங் என்று சந்தீப் நினைத்தான்.

‘எல்லாமே மாறி விட்டது அழிவின் விளிம்பில் இருப்பவர்களைப் பேணுவது தான் இப்பொழுதைய முடிவில்லாப் பணி’

‘ஏன் சிகிச்சைகள் நீண்ட காலத்திற்கு பலனளிப்பதில்லையா?’ சந்தீப் வினவினான்.

‘மீட்டெடுத்த எண்ணங்கள் அவர்கள் மனதில் இருந்து சீக்கிரம் உலர்ந்து விடுகின்றன. அகத்தின் கருங் கடலில் மீண்டும் மீண்டும் மூழ்கும் இவர்களின் அபயக்குரல்களை கேட்டு, இவர்களை மீட்டெடுக்க உலகில் அவர்கள் இருக்கும் இருண்ட மூலைகளுக்கு விரைந்து சென்று…’ 

ஆக்சிஜன் அளவு மிகவும் குறைந்திருப்பதை சந்தீப்பின் காதுகளில் அறிவிப்பொலி ஒலித்து நினைவூட்டியது. அதற்குள் நான்கு மணி நேரம் ஆகி விட்டதா? ட்ராகோவிடம் பத்து நிமிடங்கள் தான் பேசி இருக்கிறேன், அப்படி என்றால் மீத நேரம் முழுதும் அந்த மலை முகட்டில் மாதவியுடன்…சந்தீப் திகைத்தான்.

‘நாளை மீண்டும் பேசுகிறேன்’ என்று ட்ராகோவிடம் சொல்லி விட்டு, தொட்டியிலிருந்து வெளியேறி, நீர் மூழ்கு ஆடைகளை களைந்து விட்டு, பரிசோதனைச் சாலையின் சேமிப்பு கிடங்கு போல இருந்த அவனுடைய அறைக்குச் சென்றான். 

கடந்த மூன்று மாதங்களாக படுப்பதற்கு மட்டும் வரும் ஓர் இடம். ஆராய்ச்சிக்காகத் தருவிக்கப்பட்ட கருவிகள், அவை வந்த பெட்டிகளிலிருந்துப் பிரிக்கப்படாமலே அங்கொன்றும் இங்கொன்றுமாக கிடந்தன. புது அட்டைப்பெட்டிகளின் வாடை அறையெங்கும் ஒரு கெட்டக் கனவு போல வியாபித்திருந்தது. சந்தீப் அங்கே தான் தங்குகிறான் என்பதற்கு அடையாளமாக ஒரு கட்டிலும், சிறு அலமாரியில் தொங்கிக் கொண்டிருந்த அவனது உடைகள் மட்டும் இருந்தன. 

படுக்கையில் சாய்ந்து கண் மூடினான். 

மாதவியின் விரல்களின் ஸ்பரிசம், குரல், வாசனை, மனதில் பூங்காற்று போல வீசிய காதல்…நினைவா அது? அவன் வாழ்ந்த வாழ்க்கையின் ஒரு மிக இனிமையானத் தருணத்தை அல்லவா அந்த நீர் தொட்டியில் மீண்டும் வாழ்ந்தான். கண்களின் ஓரம் வழியே கசிந்த கண்ணீர் தலையணையை நனைக்கும் முன் உறங்கிப் போனான் சந்தீப். 

அவன் கனவில் மாதவி வரவில்லை ஆனால் மலை முகட்டில் கண்ட வண்ணத்துப்பூச்சி வந்தது. இறக்கைகளை விரித்து மூடி சிவப்பு, கருப்பு என்று அணைந்து அணைந்து எரியும் ஒரு விளக்கு போல…

மறு நாள் அவன் விழித்த பொது நண்பகல் ஆகி இருந்தது. அவசரமாக எழுந்து, முகம் கழுவி, பரிசோதனைச் சாலையின் பிரதான அறைக்கு வந்தான். அவனது குழுவினர் ஏற்கனவே பணியில் மூழ்கி இருந்தனர். ட்ராகோ இருக்கும் தொட்டியின் நீரை சரி பார்த்தல், செயலிகளை செம்மைப் படுத்தல், அரசாங்கத்தின் பல்வேறு துறைகளுடன் செய்திகளைப் பரிமாறிக் கொள்ளுதல் என்று எல்லோரும் தங்கள் கணினிகளின் முன் நிலைகுத்தி இருந்தனர். 

விசைப் பலகைகளில் விரல்கள் எழுப்பும் சத்தம் நீர் பரப்பில் சிறு மழைத் துளிகள் வீழ்வது போல குளிரூட்டிய அறையெங்கும் ஒலித்தது. சந்தீப் வந்ததை அங்கொன்றும், இங்கொன்றுமாக புன்முறுவல்களும், சில நொடிகளுக்குக் காற்றாடி போல வீசிவிட்டு கீழிறங்கியக் கரங்களும் ஆமோதித்தன. வேகமாகச் சென்று அவன் பணி செய்யும் அறையில் அமர்ந்து கொண்டான்.

காபியை உறிஞ்சி விட்டு, கணினியைத் திறந்து உள் நுழையும் போது, வண்ணத்துப்பூச்சியின் நினைவு குறுக்கிட்டது. அதன் இரு வண்ணங்களின் துடிப்பு, மீண்டும் மீண்டும் ஒளிர்ந்தும், இருண்டும். சிவந்த கண்களை மூடி விழிப்பது போல, ஒரு பிடிபடா தாளத்திற்கு ஆடும் அதன் இறக்கைகள்…

‘சந்தீப் நேரமாய்டுச்சு, நான் கிளம்பறேன்’ குரல் கேட்டு திரும்பினான் சந்தீப். குழுவில் சீனியரான வினீத் கண்ணாடிக் கதவைத் திறந்து தலையை மட்டும் உள்ளே நீட்டி இருந்தார்.

‘ம்…’ சந்தீப்பின் கணினி அடிப்பட்டையில் மாலை 7.50 என்று காட்டியது. கணினியின் திரை அவன் உள்நுழையக் கடவுச்சொல் கேட்டு காத்திருந்தது.

‘ஈவினிங் ஆயிடுச்சா…’ என்றான் சந்தீப், தூக்கத்திலிருந்து எழுந்திருப்பவன் போல. அவன் மேஜையில் இருந்தக் கோப்பையில், மதியம் அவன் உறிஞ்சிய காபி ஏடு மூடி இருந்தது.

வினீத்தின் கண்கள் சற்று கவலைக் கொண்டன.

‘சந்தீப், நாளைக்கு வாரக் கடைசி எங்கேயாவது வெளியே போயிட்டு வாங்களேன். எவ்வளவு நாள் தான் இங்கேயே அடைஞ்சு கெடப்பீங்க’.

‘இல்ல, வினீத், இங்க எனக்கு வீட்ல இருக்கற மாதிரி தான் இருக்கு. வேலையும் கொஞ்சம் பாக்கி இருக்கு’

‘ட்ராகோ?’ என்று கேட்டான் வினீத். அந்தப் பெயர் சூட்டியதே வினீத் தான். ஏன் அந்தப் பெயர் என்று மூன்று மாதங்களுக்கு முன் கேட்டதற்கு, தோளை உயர்த்தி, உதட்டைச் சுழித்தார். ஆனால் சந்தீப்பின் மனதிலும் அவன் குழுவினர் மனதிலும் அந்தப் பெயர் பதிந்து விட்டது.

கிளம்பும் முன் ஏதோ தோன்றியது போல திரும்பி சந்தீப்பைப் பார்த்து 

‘நான் இத உங்களுக்கு சொல்லக் கூடாது, இருந்தாலும்…’ என்று இழுத்து விட்டு தொடர்ந்தார் ‘ஜஸ்ட் எ ப்ரெண்ட்லீ ரிமைண்டர்…பாத்துக்குங்க, ரொம்ப நெருங்க வேண்டாம். நமக்கு  ட்ராகோவோ பத்தி நெறயத் தெரியாது…’

சந்தீப் புன்னகைத்து, கை கட்டை விரலை உயர்த்திக் காண்பித்தான்.

xx

சந்தீப் மீண்டும் மூழ்கியப் பொழுது ட்ராகோ தொட்டியின் ஒரு மூலையில் சுருண்டு இருந்தது. ஒரு கரம் மட்டும் மெதுவாக நீரைத் துழாவியபடியே இருந்தது. அவன் தொட்டிக்குள் வந்ததை உணர்ந்ததுப் போல அதன் ஓட்டில் வைகறை வானத்தின் மெலிதான வண்ணங்கள் படர்ந்தன. கமலி சந்தீப்பின் காதுகளில் பேச ஆரம்பித்தாள்.

‘இந்தத் தொட்டியைத் தாண்டி புறவுலகில் என்னால் எதையுமே உணர முடியவில்லை.’ ட்ராகோவின் ஒரு கரம் நீண்டு தொட்டியின் கண்ணாடிச் சுவற்றைத் துடைத்தது.

‘கண்ணாடிச் சுவர்களில் வலிவூட்டிய… ஃபாரடே கூண்டு பதிக்கப்பட்டுள்ளது…’ ட்ராகோவிற்கு தான் சொல்வது புரிந்ததா என்று தயங்கி மேலும் விளக்கினான் 

‘மின்காந்த அலைகள் வருவதையும் போவதையும் தடுக்க…இத்தகைய நிகழ்வுகளுக்காக வகுக்கப்பட்ட ஒரு பொதுவான வழிமுறை தான் இந்த ஏற்பாடு’. அவன் கைகளில் வைத்திருந்த திரையின் வண்ணங்கள் மன்னிப்பு கோருவது போல அமைந்த அவன் தொனியை பிரதிபலித்ததா என்று அவனால் அனுமானிக்க இயலவில்லை.

‘தூண்டில்காரர்கள் எப்பொழுதுமே தொடர்பில் இருப்பவர்கள். விண்ணில் ஏதோ ஓர் திசைத் தப்பிய எரி கல் என் கலத்தில் மோதி நான் நினைவழிப்பதற்கு சற்று முன்னர் வரை கூட நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம்’ ட்ராகோவின் ஓட்டில் நிறம் மங்கியது.

‘ஆனால், இந்த உலகின்  புவியீர்ப்பு கிணற்றில் என் கலம் வீழ்ந்ததைப் பற்றியோ, இந்தத் தொட்டியினுள் வந்ததைப் பற்றியோ எனக்கு எந்த நினைவுகளும் இல்லை. நான் கிளம்பியதிலிருந்து முதன் முறையாக இங்கே தான் எங்களவர்களின் தொடுதல் இல்லா ஓர் வெறுமையை உணர்கிறேன்’

‘நீ இருக்கும் உலகு இங்கிருந்து எவ்வளவு தூரம்?’ என்று கேட்டான் சந்தீப். காலம், தூரம் போன்றவற்றின் அர்த்தங்களும் புரிதல்களும் வேறாக இருக்கக் கூடும் என்று அவன் அறிந்திருந்தாலும் அந்தக் கேள்வி என்னவோ அவன் வாயில் இருந்து குதித்து விட்டது.

‘அவற்றை நாங்கள் கணக்கிடுவதில்லை, நீரின் மேல் மீன்கள் துள்ளிப் பறந்து போவது போலவே எங்கள் பயணம்’

‘துள்ளிப் பறந்தா?’

‘கலத்தை சுற்றியுள்ள வெளியை சுருக்கியும், பெருக்கியும்…என் கலம் விபத்துக்குள்ளாவதற்கு முன்பு ஐந்து தடவை துள்ளினேன்’

தலைக்கவசத்திற்குள் சந்தீப்பின் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தன. ட்ராகோ வந்த கலத்தில் விண்வெளியை வளைக்கும் ஆற்றல் உள்ளது என்பது உலகெங்கும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கிடும். 

‘இவ்வளவு அறிவியல் திறன் இருந்துமா உங்களின் உலகத்தை சீர் செய்ய முடியவில்லை?’ சந்தீப் கேட்டான்.

‘உலகத்தின் அடித்தளமே உளுத்துப் போகத் தொடங்கிய பின் என்ன செய்து என்ன பயன்…அதனால் தான் என்னைப் போல சிலர் புது உலகங்கள் தேடிப் புறப்பட்டோம்’

‘கிடைத்ததா?’

ட்ராக்கோவின் அங்கங்கள் மெதுவாக சுருள் நீங்கி விரிந்தது

‘இல்லை, வெற்றுப் பாறைகளும், அமிலக் கடல்களும், அடர் வளிகளும் கொண்ட உலகங்கள் தான் அதிகப்படி’

‘நீங்கள் தான் தோட்டக்காரார்கள் ஆயிற்றே, அம்மாதிரி உள்ள உலகங்களை உங்கள் வசதிக்கேற்ப மாற்றிக்கொள்ளலாமே’ அவன் கேள்வியில் இழையோடிய கிண்டல் அவனை சற்று நாண வைத்தது. ஏதோ ஒரு கடல் வாழ் உயிரினம் விண்வெளியை வளைத்து, உலகங்களை உருமாற்றும் வல்லமை கொண்டிருக்கிறதே என்ற பொறாமை இளப்பமாக மாறியதாகத் தோன்றியது.

‘இல்லை…நீர் எங்களுக்கு அவசியம்…அதுவும் சற்று அதிகப்படியான நீர். அது போன்ற உலகங்களை தான் உருமாற்ற முடியும். அது கிடைத்து விட்டால் பழுது பட்ட எங்கள் உலகில் இருந்து புது உலகிற்குக் கிளம்பி விடுவோம்’.

சந்தீப்பின் இதயம் சற்று வேகமாக அடிக்கத் தொடங்கியது. 

ட்ராகோ இந்த  ஆழி சூழ் உலகின் அமைப்பை இது வரை பார்க்கவில்லை. அப்படித் தான் இருக்க வேண்டும். ஏனென்றால் இந்தச் சூரிய மண்டலத்திற்குள் நுழையும் முன்பே விண்வெளியில் அதன் கலத்திற்கு ஏற்பட்ட விபத்தில் மூர்ச்சையாகி விட்டது. அதன் சக தூண்டில்காரர்களிடம் இருந்த தொடர்புகள் அப்பொழுது தான் முறிந்திருக்கும்.  பரிசோதனைச் சாலை வந்து சேர்ந்து சில தினங்களுக்குப் பின்னர் தான் ட்ராகோ விழித்தெழுந்தது. அதை ஆழ் உறக்கம் என்றே அப்பொழுது ட்ராகோ வர்ணித்தது. பலத்த அதிர்ச்சியில் இருந்து தன்னை காத்துக்கொள்ள உடலின் பல இயக்கங்களை மட்டுப்படுத்தி உயிர் மட்டும் மெலிதாக ஓடிக்கொண்டிருக்கும் படி தன்னை மாற்றிக் கொண்டிருந்தது.

ஃபாரடே கூண்டில் அடைபட்டிருந்ததால் எந்த விதமான புற உலகத் தொடர்புக்கும் சாத்தியம் இல்லை. ட்ராகோ வந்த கலம் கூட ஒரு ஃபாரடே கூண்டில் தான் வைக்கப்பட்டுள்ளது. சந்தீப் கண்ணாடித் தொட்டிக்குள் மூழ்கி ட்ராகோவிடம் ஊடாடும் பொழுது கூட அவன் எடுத்து வரும் எல்லா கருவிகளும் தொட்டிக்கு வெளியே உள்ள புற இணையங்களோடு உறவு கொள்ளாத தனித்தியங்கும் உபகரணங்கள் தான், கமலி உட்பட. அவனுடைய மூழ்கு உடைகளும், தலைக்  கவசமும், நீருக்கு அடியில் சுவாசிக்கும் காற்றும் பல சுத்தீகரிப்பு அடுக்குகள் தாண்டியே அவனிடம் சேரும்…இருந்தாலும். 

சந்தீப்பின் மனதில் ஏதோ நெருடியது. 

உங்களின் இதயத் துடிப்பு மிகவும் அதிகரித்து விட்டது என்று அறிவிப்பொலி ஒலித்த பொது தான் சட்டென்று அவனுக்கு மனதில் ஏதோ உறைத்தது.

கடந்த முறை அவன் மூழ்கியபோது ஆக்சிஜன் அளவு குறைந்திருப்பதை அவன் தலைக்கவசத்தில் உள்ள அறிவிப்பொலி சுட்டிக் காட்டியதற்கு சற்று முன்பு ட்ராகோ சொன்ன ஏதோவொன்று…கமலியை நேற்று நடந்த சம்பாஷணையை நினைவு கூறச் சொன்னான்…

அகத்தின் கருங் கடலில் மீண்டும் மீண்டும் மூழ்கும் இவர்களின் அபயக்குரல்களை கேட்டு, இவர்களை மீட்டெடுக்க உலகில் அவர்கள் இருக்கும் இருண்ட மூலைகளுக்கு விரைந்து சென்று…

‘உங்கள் உலகில் அகம் வெறுமையாவதை அறிவிக்கும் அபயக்குரல்களை எவ்வாறு அறிவீர்கள்?’ வேகமாக வந்தது சந்தீப்பின் கேள்வி.

உருவகங்களோடு நிதானமாக பதில் கூறியது ட்ராகோ.

‘சிதைந்து போன மனங்களை சற்று செப்பனிட்டு அதில் ஓர் விதை இடுவோம். இடுவது என்பதை விட எங்கள் அகத்தில் இருந்து இயல்பாக நோயுற்றவர்களின் மனங்களின் ஆழத்தில் சென்று பதியும் பீஜம் என்று சொல்லலாம். அவர்களின் எண்ணங்கள் வற்றத் துவங்கும் போது தூண்டில்காரர்களான எங்களை அந்த விசை தான் அவர்களிடம் இழுக்கும்.’

‘அபயக்குரலை எழுப்பும் ஒரு அலைபரப்பியா அது?’ சந்தீப் கேட்டான்.

‘ஆம்,  அப்படியும் வைத்துக் கொள்ளலாம். எண்ணங்களாலேயே வடிக்கப்பட்ட ஒரு அலைபரப்பி. அந்த ஜீவனின் அகத்தை நாங்கள் காப்பாற்ற வரும் வரை ஒலித்துக் கொண்டே இருக்கும்.’

‘என்ன?’ என்று ஆச்சர்யம் கலந்த சந்தீப்பின் கேள்வியை, நம்பமுடியவில்லை என்ற தொனியாக கமலி திரித்ததா என்று யோசிப்பதற்கு முன்னரே ட்ராகோ சொன்ன வார்த்தைகள் சந்தீப்பை உறைய வைத்தது.    

‘இதோ இந்தத் தொட்டியில் நீ என்னோடு இருக்கும் பொழுது உன் அகத்தில் நேற்று நான் பதித்த விதையை என்னால் உணர முடிகிறது. ஒரு சீரில்லாத் துடிப்பு போல.’

மாதவியோடு வெண்பனி சூழ்ந்த சிகரங்கள் நடுவில் படுத்திருந்த போது சிறு புதர் மேலே அமர்ந்து இறக்கைகளை விரித்து, மூடி…நேற்றைய இரவின் கனவில் கூட தொடர்ந்து சிமிட்டும் சிவந்த கண்கள் போல தெரிந்த வண்ணத்துப்பூச்சி… ட்ராகோ என் மனதில் விதைத்த அலைபரப்பியா. சந்தீப்பின் மூச்சு வேகம் எடுக்க ஆரம்பித்தது, அவனின் இதயத் துடிப்புகள் அவன் காதுகளில் விட்டு விட்டு கொட்டும் முரசைப் போல ஒலித்தது.

‘நேற்று முழுவதும் அதைக் கேட்டுக் கொண்டிருந்தாயா?’

‘இல்லை. நீ தொட்டியை விட்டு விலகிய பின் என்னால் அதை கேட்க இயலவில்லை. ஏதோ கூண்டு என்றாயே அது தான் காரணம் என்று நினைக்கிறேன்.’ 

‘ஆனால், இந்தத் தொட்டிக்கு வெளியே பிற தூண்டில்காரர்களால் அலைபரப்பியின் குரலை உணர முடியுமா…காலவெளியிடைகளைத் தாண்டி’. இல்லை, அது முடியாது என்ற நம்பிக்கையும், பிரார்த்தனையும் கலந்து ஒலித்தது கேள்வியின் கடைசி இரு வார்த்தைகள்.

‘முடியும்.’ ட்ராகோவின் ஓட்டில் ஓர் அடர் மஞ்சள் வண்ணப் புள்ளித் தோன்றி ஓர் மலர் போல விரிந்தது.

‘அதை நானே இந்தப் பயணத்தின் போது தான் உணர்ந்தேன். விபத்தினால் ஏற்பட்ட ஆழ் தூக்கத்தில் விழும் வரை எங்கள் உலகத்தில் இருந்து ஒலிக்கும் அபயக்குரல்களை கேட்டுக் கொண்டு தான் இருந்தேன். என் உலகம் மெதுவாக செத்துக் கொண்டிருக்கும் ஓலம். ஆனால் என்னால் ஒன்றும் செய்ய இயலவில்லை’. கமலியின் சோகம் தோய்ந்த குரல் சந்தீப்பிற்கு உறைக்கவில்லை.

தன் உடம்பை மூடி இருக்கும் ரப்பர் மூழ்கு உடைக்கும் அவன் தோலுக்கும் நடுவே உள்ள காற்றுபுகா இடைவெளிகளில் வேர்வைப் பூத்தது. இருண்டுக் கொண்டிருக்கும் என் மனதினில் ஏற்றி வைக்கப்பட்ட தீபத்தால் கவரப்பட்டு விட்டில் பூச்சிகள் போல தூண்டில்காரர்கள் இங்கே எக்கணமும் வரக்கூடும். இன்று இல்லையேல்..நாளை. 

இந்தத் தொட்டிக்கு வெளியே நானே ஒரு தூண்டில். 

இந்த எண்ணம் மின்சாரம் போல பாய்ந்தாலும் அவன் மனதின் ஏதோ ஒரு பாகம் அமைதியாகவே இருந்தது. ஏதோ இதையெல்லாம் அவன் எதிர்பார்த்தது போலவே நடப்பது போல. நடப்பது எல்லாம் நன்மைக்கே என்பது போல.

‘நீ அடிக்கடி ஊருக்கு போய்டுற, தனியா இருக்கறது எவ்வளவு போர் தெரியுமா’ என்று மாதவியின் குரல் ஒரு முணுமுணுப்பு போல அவன் மனதில் தோன்றி மறைந்தது.

‘மன்னித்து விடு ட்ராகோ, இது என் உலகம், இது எங்களுக்கு மட்டுமே’ 

சந்தீப்பின் கைகள் அவன் அணிந்திருந்த தலைக்கவசத்தை மெதுவாக அகற்றத் தொடங்கின.

‘என்ன செய்கிறாய்…உன் அகத்தின் வண்ணங்கள் வெளிறுகின்றன’ 

ட்ராகோவின் வண்ணங்களின் பதட்டம் கமலியின் குரலாக சந்தீப்பின் காதுகளுக்கு எட்டியது. 

‘வினீத் யூ வெர் ரைட்…ஐ அம் சாரி’ என்று சந்தீப் பேசிய கடைசி வாக்கியங்களையும், அவன் குற்ற உணர்ச்சியையும் சுமந்தபடி கமலி தொட்டியின் தரை தட்டி அமர்ந்தது.

நீர் அவன் நினைவுகளை முற்றிலும் மூழ்கடிக்கும் முன் மாதவியின் கன்னம்  குழி விழும் சிரிப்பு அவன் நினைவு முழுதும் நிறைத்தது.

Exit mobile version