Site icon சொல்வனம் | இதழ் 318 | 12 மே 2024

ஐந்து கவிதைகள் – கு.அழகர்சாமி

(1) ஓர்மை

என் நிழல்
அவன் நிழலைக்
கடந்த போது தான்
கவனித்தேன்
அவன் என்னைக்
கடந்து போனதை-
அவனுக்கும் எனக்கும்
ஒரு புள்ளியில்
அவனும் நானும்
சந்தித்திருக்க வேண்டியது
நிகழாதது போல்
என் நிழலுக்கும்
அவன் நிழலுக்கும்
அப்படி நிகழாமலில்லாமல் போல்
தோன்றியது எனக்கு-
ஏனென்றால்
அவனும் நானும்
ஒருவரையொருவர்
கடந்த போது
விடைபெறாதது போலில்லாமல்
என் நிழலும் அவன் நிழலும்
ஒன்றையொன்று
கடந்த போது
பிரிந்தும் பிரியாது
விடைபெற்றது போல்
தெரிந்தது அவற்றின்
விடைபெற்ற
ஓர்மையில்.


(2) அது

அதை விட
இவ்வளவு நெருக்கமானதில்லை.
அதை விட
இவ்வளவு அந்நியமானதில்லை.
கண் மூடினால்
கட்டிப் பிடிக்க முடியாது அதை.
கண் விழித்தால்
காணாமல் போய் விடும் அது.
அதன் உடுப்பைக்
கழற்றி எறிய வேண்டும்.
ஆனால் அதன் நிர்வாணம்
உன் உடுப்பைக் கழற்றி விடும்.
அதைக் கத்தியால்
குத்தி விடாதே-
உன் தற்கொலை
நிகழ்ந்து விடும்.
அது
நீ
எதுவோ
அது-
கவனம்.


(3) கட்டம்

என்னைச் சுற்றி
ஒரு சதுரம் கட்டிக் கொண்டு
வசித்தேன்.
அப்போது தான்
நான் ஒரு சிறகொடிந்த பறவையாகி
சதுரம் கூண்டாயாகியதாய் உணர்ந்தேன்.

என்னைச் சுற்றி
ஒரு வட்டம் போட்டுக் கொண்டு
பழகினேன்.
அப்போது தான்
நான் ஒரு பழக்கப்படுத்தப்பட்ட விலங்காகி
வட்டம் கூண்டு வளையமாகியதாய் உணர்ந்தேன்.

என்னைச் சுற்றி
ஒரு செவ்வகம் செய்து கொண்டு
நீட்டிப் படுத்தேன் பாதுகாப்பென்று.
அப்போது தான்
நான் ஒரு சவமாகி
செவ்வகம் ஒரு சவப்பெட்டியாகியதாய் உணர்ந்தேன்.

தளைகளெல்லாம்
ஒழுங்காய் அழகாயிருக்கும்
அபாயம் அறிந்தேன்.
தளைகளை உடைத்து
வெளிவந்து விடப் பார்த்தேன்.
அப்போது தான் தெரிந்தது-
எத்தனையோ சதுரங்கள்
எத்தனையோ வட்டங்கள்
எத்தனையோ செவ்வகங்கள்
என்னைக் கட்டம் போடக்
காத்திருப்பது.


(4) சுயம்

தினம் புறாக்களுக்கு
மண்சட்டியில்
தண்ணீர் வைக்கிறேன்.
ஆனால்
வெயிலில் தான்யங்களைக்
காய வைக்கும் போதெல்லாம்
அவற்றை நாலாபுறமும்
புறாக்கள் சிதறடித்து
தின்று விட்டுப் போகின்றன.
ஆத்திரமாய் வருகிறது எனக்கு.
தான்யங்களைத்
தின்று விட்டுப் போவதால் மட்டுமல்ல-
புறாக்களுக்கு
தினம் தண்ணீர் வைக்கும்
என் பரிவில்
உண்மையில்லையென்று
என் சுயத்தின்
தோலுரிந்து
தெரிய மேலும்.


(5) கால்பொரு நுரை

கடலோரம் நெடுக
நடந்து கொண்டே போகிறேன்.
கடலைக் காதலித்துத்
தீர முடியாததாய்த் தெரிகிறது.
அலைமொழியில் அது கொஞ்சுவதும்
தீராததாய்த் தெளிவாகிறது.
தன் காதலில் மூழ்க
அழைத்துக் கொண்டே இருக்கிறது.
அழுந்திச் சுகிக்க
துணிவு கொள்ளென்று
சவால் விடுகிறது.
அதன் மீது
என் காதல் பதிவுகளை
கால்களில் பதிக்கிறேன் மணலில்.
கடல் தழுவி என்
கால்பொரு நுரைகளில்
தன் காதல் முத்தங்களைத்
தருகிறது.
காலடி மணல் கரைந்து
நிலத்திலிருந்து பெயர்ந்தது போல்
காதல் கிறக்கம் கொள்கிறேன்
கடலிடம்.
அதன் மீது காதலை யான்
எழுதி விட முடியாத
எண்ண முடியாத சொற்களாய்
மணல் குவிந்து கிடக்க
உதறிய என் காலில் ஒட்டியிருக்கும்
ஒரே ஒரு மணலில் கூட
கடல் தன்
காதலை முழுதும்
தெரிவிக்க முடிகிறதாய்த்
தெரிகிறது எனக்கு.

Exit mobile version