
“…பேரண்டத்திலேயே அழகான பொருள் மனிதன்தான். உயர்ந்த வஸ்துவும் மனிதன்தான். சிருஷ்டி தத்துவத்தின் மணிமகுடமாக விளங்குகிறான் மனிதன். மனிதன் மட்டும் இல்லை என்றால் இறைவனுடைய லீலாவிநோதம் வெறும் பொம்மலாட்டந்தான், வெறும் ஊமை நாடகமேதான். கொஞ்சி விளையாடுவதற்குக் கடவுள் வைத்துக் கொண்ட தெய்வக்குழந்தைதான் மனிதன். மனிதனுக்கு மட்டும் இப்படி ஒரு அரும்பெரும் சிறப்பு எப்படி வந்தது. காரணம் இதுதான். மனிதனிடந்தான் மனம் என்று ஒன்று இருக்கிறது. அந்த மனமோ பக்தியாக ஊறிக் கொண்டே இருக்கிறது. பக்தி என்றால் குருட்டு நம்பிக்கையோ, அறியாமையோ, இருட்டடிப்போ இல்லை. பகுத்துணர்ந்து பார்க்கும் மெய்யுணர்வுதான் பக்தி. நான் என்கிற திமிர் (ஆணவம்) கரைய உண்மையைக் கண்டு உருகி ஆனந்திப்பதுதான் பக்தி. உருகிப்பரவசப்பட பரவசப்பட மரியாதை பெருகும். பயம் கழன்று காதல் ஊறும். அதுதான் ஆனந்தம், அதுதான் விடுதலை….”
இப்படி மனிதனையும், மனித மனத்தையும் சிலாகித்தவர் வித்வான் ல.சண்முகசுந்தரம். பாஸ்கரத் தொண்டமான், ஜஸ்டிஸ் மகராஜன், மீ.ப. சோமு, சுந்தா ஆகியோரைத் தொடர்ந்து ரசிகமணி டி.கே.சியின் கடைக்குட்டி சீடராக தன்னை இணைத்துக் கொண்டவர். ரசிகமணியிடம் தான் வந்தடைந்ததை இவ்வாறு குறிப்பிடுகிறார் வித்வான் ல.சண்முகசுந்தரம்.
“1942-43ம் ஆண்டு மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் பண்டிதர் வகுப்புக்குப் படித்துக் கொண்டிருந்தேன். பாடம் நடத்தியவர் திரு நாராயண ஐயங்கார் என்னும் மேதை. திரு.மு.ராகவ ஐயங்கார், ரா.ராகவ ஐயங்கார் என்னும் பெரும் புலவர்களின் நெருங்கிய உறவினரான அவர், ஒரே ஒரு பாட்டை வைத்துக்கொண்டு ஏழு நாட்களுக்குப் பொருள் கூறுவார். பதஉரை, குறிப்புரை, விரிவுரை, இலக்கண நயம் எல்லாம் போட்டி போட்டுக்கொண்டு வரும். ஆனால் கவி என்கிற தெய்வ ஒளி மட்டும் கண்ணில் விழவே விழாது. பிள்ளைப் பெருமாள் ஐயங்காரின் அஷ்டப்பிரபந்தம் எனும் நூல் பாடமாக இருந்தது. ஐயங்கார் அதை பாடமாக நடத்த நடத்த ஏதோ காணாததைக் கண்டது போல இருந்தது. சொல் நயம் தெரிந்து விட்டோம் என்று ஒரு திமிர். பொருள் நயத்தைப் பார்த்து விட்டோம் என்று ஒரு செருக்கு. தொடை நயம், நடை நயம் எல்லாம் அத்துப்படியானதாக ஒரு அகம்பாவம். கவியைப் பற்றியோ, கவியின் பண்பு பற்றியோ, உண்மை பற்றியோ நினைப்போ வரவில்லை. அப்படி ஒரு மயக்கம். போதை மயக்கம்தான். இப்படி எல்லாம் திமிர், செருக்கு, அகம்பாவம், அறியாமை – ஒவ்வொன்றாய் என்மேல் ஏறி ஏறி அமர அமர பாரம் தாங்க முடியவில்லை எனக்கு. நடையே தள்ளாடிவிட்டது. கால் தள்ளாடுது என்று சொல்வார்களே அப்படி ஒரு தள்ளாட்டம் என்னிடம் வந்துவிட்டது; கண்ணும் சரியாகத் தெரியவில்லை. அதாவது இதய நோக்கில் மஞ்சள் காமாலை. அத்துடன் கவி ஒலியோ காதில் விழவே இல்லை. அப்படி ஒரு அசட்டுச் செவி.
இந்த நிலையில், 1942ஆம் வருடம் மதுரையில் மீனாட்சியம்மன் திருக்கோவிலுக்கு எதிரில் உள்ள புது மண்டபத்தில் முத்தமிழ் மகாநாடு நடைபெற்றது. திரு.ச.சோமசுந்தர பாரதியார், ந.மு.வேங்கடசாமி நாட்டார், பண்டிதமணி, கதிரேசன் செட்டியார், ஆ.கார்மேகக் கோனார் முதலிய புலவரேறுகள் கலந்து கொண்ட மகாநாடு அது. மூன்றாம் நாள் நிறைவுப் பேச்சாக ‘நாடக பாத்திரம்’ என்னும் தலைப்பில் டி.கே.சி பேசினார். அன்றுதான், நான் டி.கே.சி.யை என் கண்களால் பார்த்தேன். நாடகத்தைப் பற்றியும், நாடகத்தின் ஜீவநாடியான பாத்திரம் பற்றியும் அவர்கள் கொடுத்த விளக்கம் அற்புதமாக இருந்தது.
“வாணவேடிக்கை நடத்துகிறோம். தரையிலிருந்து வானத்தை நோக்கி வேகமாய்ப் பாய்ந்து ஏறுகிறது வாணம். ஒரு குறிப்பிட்ட தூரம் போனவுடன் பெரிய சத்தத்தோடு அது வெடிக்கிறது. உடனே ஜிலுஜிலுவென்று நட்சத்திரப் பூக்களாய்க் கொட்டுகின்றன. பச்சை, மஞ்சள், சிவப்பு, வெள்ளை, நீலம், ஆரஞ்சு, கருநீலம், இப்படி வண்ண வண்ணமலர்களாய், ஒளி மலர்களாய்ச் சொரிகின்றன. நாடகமும் அப்படித்தான். ஒரு சம்பவம் ஒரு கருத்தை நோக்கி முன்னேறிப் போகும். ஒரு கட்டத்தில் வந்து நிற்கும். திருப்புமுனையில் நின்று பல பல சம்பவங்களை – நிகழ்ச்சிகளை அப்படியே உதிர்த்துவிடும். சம்பவம் திடுதிப்பென்று தொடங்கும். ஒரு திகைப்பிலிருந்து தொடங்குவதுதான் நாடகம். மேலே போகப் போக திகைப்பு கொஞ்சங் கொஞ்சமாக விலக வேண்டும். ஆனாலும் ஒரு ஆற்றாமையை அது வைத்துக் கொண்டே போக வேண்டும். திருப்புமுனைக்குப் பின்னால்தான், தெளிவானது மேலும் மேலும் பிரகாசங் கொடுக்க வேண்டும். மனுசனும் மனுசனுடைய காரியங்களுமே முக்கியம். அவைதான் வாழ்க்கை. அது உணர்ச்சிமயமாக இருக்கிறது. அதை மனுசன் பார்க்க வேண்டும். எதைக் கொண்டு காட்டுவது? மனுசனைக் கொண்டுதான் காட்ட வேண்டும். மனுசனுடைய உணர்ச்சிகளைப் பிடித்துக் காட்டுவதற்காகவே, சந்தர்ப்பங்களையும் நிகழ்ச்சிகளையும் வகுத்துக் கொள்கிறோம். அவைகளின் மூலம் மனுசன் பேசப் பேச மனுசனுடைய உணர்ச்சிகள் பூவாய்ச் சொரிந்து விடுகின்றன. மனுசனுக்குப் பதிலாக அவனுடைய மனுச காரியங்களை வேறு பிராணிகளைக் கொண்டும் பேச வைக்கலாம். யார் பேசினாலும் சரி, மனுசனுடைய உணர்ச்சி வெளிப்பாடுதான் பிரதானம். அதை எது வெளிப்படுத்துகிறதோ, அதுதான் பாத்திரம்.”
அன்று அவர்களுடன் நேரில் பேச எனக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. அதன் பின் நான்கு ஆண்டுகள் கழித்து 1946ம் ஆண்டு மே மாதம் என் சொந்த வேலை ஒன்றை செங்கோட்டையில் முடித்துக் கொண்டு டி.கே.சியைச் சந்திக்க திருக்குற்றாலம் போனேன். நான் அவர்களைப் பார்த்த உடனேயே ‘வணக்கம்’ என்று கும்பிட்டேன். “என்னை உங்களுக்குத் தெரியாது. உங்களை எனக்குத் தெரியும். நீங்கள் எழுதி வரும் கம்பர் காட்சியையும் முத்தொள்ளாயிரத்தையும் படித்துக் கொண்டிருக்கிறேன். அவை நன்றாக இருக்கின்றன” என்று சொல்லிக்கொண்டே, அவர்கள் பக்கத்திலேயே உட்கார்ந்து கொண்டேன். எதிரில் போட்டிருக்கும் நாற்காலியில் கூட உட்கார எனக்கு விதரணை இல்லை. என்னுடைய பட்டிக்காட்டுத்தனத்தைப் பற்றி டி.கே.சி. கொஞ்சங்கூட அலட்டிக் கொள்ளாமல் என்னை ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டே, “அப்படியா! முத்தொள்ளாயிரத்தைப் படித்தீர்களா! விளங்கிவிட்டதா! கம்பர் பாடல்களையும் அனுபவித்தேன் என்கிறீர்களே.. பேஷ், பேஷ். பலே பேஷ்! நான் எழுதுவது ஒன்றும் தமிழ்ப்புலவர்களுக்கு விளங்குவதில்லை. கம்பரே விளங்க மாட்டேன் என்கிறாரே அவர்களுக்கு!” என்று ஆனந்தத்தோடு சொன்னார்கள்..”
ரசிகமணியோடு அன்று தொடங்கிய வித்வானின் குரு – சிஷ்ய உறவானது அவரது நிறைவுக்காலம் வரையில் தொடர்ந்திருந்தது. டி.கே.சியோடு பழகப் பழக தெரியாத பலவும் அவருக்குத் தெரியத் தொடங்கின. தமிழ் மொழி, தமிழ் இலக்கியம், தமிழ் நுண்கலைகள் ஆகிய அனைத்திற்கும் ஒரு அடையாளமாக விளங்கியவர் ரசிகமணி டி.கே.சி. பேச்சுத் தமிழை இலக்கிய விளக்கத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை மெய்ப்பித்தவரும் அவரே. புகழ்வாய்ந்த அந்த அடிச்சுவட்டில் மனம் தோய்ந்து வழி நடந்து பல இலக்கிய நூல்களை கற்றறிந்தார் வித்வான் ல.சண்முகசுந்தரம். குரு வழித் தோன்றலாக, இலக்கியங்களைக் கற்றதோடு அல்லாமல் அதைவிட அதிகமாக மனிதர்களை கற்றறிந்தார். அப்படி கற்றதோடு அல்லாமல், ஏதோ ஒரு கோணத்தில் அந்த மனிதர்கள் அனைவரையும் அவர் அமைதியாக ரசித்து, ஆழ்ந்து சிந்தித்திருக்கிறார். அந்தச் சிந்தனைபூர்வமான ரசனையே அவரது படைப்புகளின் அடிநாதமாக விளங்கியது.
தமிழ் இலக்கிய வட்டாரத்தில் ‘லானா சானா’ என்றும் ‘எல்.எஸ்’ என்றும் சுருக்கமாக அழைக்கப்பட்டு வந்த வித்வான் ல.சண்முகசுந்தரம், கோவில்பட்டி அருகிலுள்ள நாச்சியார்புரம் கிராமத்தில் லட்சுமணன் – அருணாசல வடிவாம்பாள் தம்பதியருக்கு மகனாக 1923ஆம் ஆண்டு, ஜூன் 4ஆம் தேதி (வைகாசி விசாகம்) அன்று பிறந்தார். ஐந்து வயது வரையில் திண்ணைப் பள்ளிக்கூடப் படிப்பு. 1933லிருந்து 1937 வரையில் இடைசெவலில் நடுநிலை வகுப்புகளைப் பயின்றார். இடைச்செவலில் வசித்து வந்த கி.ராஜநாராயணனும், கு.அழகிரிசாமியும் இவரது விளையாட்டுத் தோழர்களாக திகழ்ந்தவர்கள். கிராமங்களில் அப்போது பாடப்பட்ட வந்த திவ்ய பிரபந்தப் பாடல்கள் இசையின் மீதான ஈடுபாட்டினை அவருக்கு ஏற்படுத்தியது. வெளியூர்களிலிருந்து வருகின்ற குருமார்கள் கிராமத்து சாவடிகளில் தங்கி பிரசங்கம் செய்கிற வழக்கம் அப்போது இருந்தது. அதற்கு கையேடு வாசிக்கின்ற வாய்ப்பு லானா சானாவுக்கு கிடைத்தது. இதன் தொடர்ச்சியாக பல தமிழ்ப்பாடல்கள் அவருக்கு பரிச்ச்யமாயிற்று. 1941-42இல் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் (தற்போதைய மதுரைச் செந்தமிழ் கல்லூரி) தமிழ் பயின்றார். அவரது தமிழ்ப் பேச்சில் மயங்கிய கல்லூரி முதல்வர் நாராயண ஐயங்கார், அவரை கோபால கிருஷ்ணக் கோனாருடைய அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று பாராட்டியிருக்கிறார். தமிழ் மீதான தன்னார்வத்தால், படிக்கின்ற காலத்திலேயே அங்குள்ள மாணவர்களுக்கு அவரே ஆசிரியர் போல் பாடம் எடுக்கத் தொடங்கிவிட்டார். இச்சமயத்தில் வையாபுரி பிள்ளையின் அறிமுகம் கிடைக்கிறது. அவரது ஆலோசனையின் பேரில் திருவையாறு அரசர் கல்லூரியில் சேர்ந்து உபகாரச் சம்பளத்துடன் நான்கு வருடத்திய வித்வான் படிப்பை முடித்தார். அதன்பின், விருதுநகர் க்ஷத்திரிய வித்யா சாலையிலும், கழுகுமலை போர்ட் உயர்நிலைப்பள்ளியிலும், கடையநல்லூரிலும், நிறைவாக தென்காசியிலும் தமிழாசிரியராக பணிபுரிந்து ஓய்வுபெற்றார்.
1948-ல், வித்வான் லானா சானாவை சென்னையிலுள்ள மாநிலக் கல்லூரியில் விரிவுரையாளராக நியமித்து உத்தரவு வந்தது. அதை அவர் ரசிகமணியிடம் காட்டியிருக்கிறார். “என்னை சண்முகசுந்தரத்திடமிருந்து பிரிக்கப் பார்க்கிறீர்களா? அவர் வேலையில் சேர மாட்டார்?” என்று கல்லூரி முதல்வருக்குத் தந்தி கொடுத்து விட்டிருக்கிறார் டி.கே.சி. ரசிகமணியின் அச்சொல் கேட்டு அன்று வித்வானின் உள்ளத்தில் பாய்ந்த ஒளிவெள்ளம் அவரை மலர்ச்சியோடு வாழவைத்து, தமிழ்க்கவி இன்பத்தினை தமிழிலக்கியத்திற்கு வழங்க வைத்தது.
திருக்குற்றாலத்தில் 1953இல் ரசிகமணியின் ‘கம்பர் தரும் ராமாயணம்’ நூல் வெளியீட்டு விழா அப்போதைய முதல் அமைச்சர் ராஜாஜி தலைமையில் நடந்தது. வழக்கமான நூல் வெளியீட்டு விழாவாக ஒரு திருவிழா போல அந்நிகழ்வு நடந்தேறியது. பல அறிஞப் பெருமக்கள் கலந்து கொண்டு உரையாடிய அவ்விழாவில் லானா சானாவையும் பேச அழைத்தனர். ரசிகமணிக்கும், ராஜாஜிக்கும் இடையே நின்றுகொண்டு, ரசிகமணி குறித்தும், அவரது ரசனைத்திறம் குறித்தும் வித்வான் ல.ச. நிகழ்த்திய உரை பல நட்புகளை அவருக்குப் பெற்றுத் தந்தது. அதில் ஒருவர் ராஜாஜி. லானா சானாவை, சண்முகசுந்தரம் என்று டி.கே.சி அழைக்க, ராஜாஜியோ ‘வித்வான்’ என்றே அவரை அழைப்பதுண்டு. 1954-55இல் ‘சாரல்’ என்னும் பத்திரிகையை வித்வானின் நண்பர் ஐ.டி.சிதம்பரம் பிள்ளை நடத்தி வந்தார். எண்பத்தாறு திருமந்திரப் பாடல்கள் குறித்த விளக்கத்தோடு அவ்விதழில் அவர் தொடர் கட்டுரை எழுதி வந்தார். அதனை படித்து மகிழ்ந்த ராஜாஜி, . 06-01-1955 தேதியிட்ட கடிதத்தில் “திருமூலர் திருமந்திரத்தைப் பற்றி எழுதியிருக்கும் வியாசம் படித்து மகிழ்ந்தேன். டி.கே.சி மறுபடி காட்சி தந்தார் போலிருந்தது” என்று குறிப்பிட்டிருந்தார். ரசிகமணியின் மறைவுக்குப் பின்னர் “தாத்தாவுக்கு ஏதாவது நினைவுச் சின்னத்தை நிறுவ ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று டி.கே.சி.யின் பேரன் திரு.தீப.நடராஜன் கேட்டுக் கொண்ட போது, ராஜாஜி இரண்டு மூன்று நிமிடங்கள் மௌனமாக ஆழ்ந்த சிந்தனையில் இருந்துவிட்டு “பத்து பேரைக் கூட்டி வைத்து வித்வான் ல.சண்முகசுந்தரத்தைக் கம்பர் பாட்டையும், தமிழ்ப்பாடல்களையும் சொல்லவைக்க வேண்டியது. இதுதான் தாத்தாவுக்குச் சிறந்த நினைவுச் சின்னம்” என்றாராம். இப்படி ராஜாஜி சொன்னதற்கு காரணம் இருந்தது. சங்கீதத்தை முறைப்படி அவர் கற்கவில்லை என்ற போதிலும், கவிதையை நல்ல குரல் வளமிக்க இசையோடு பாடுகின்ற திறமையை அவர் கொண்டிருந்தார். டி.கே.சியின் மறைவிற்குப் பின்னர், லானா சானாவின் குரலைக் கேட்ட பலரும் டி.கே.சி. மாதிரியே பாடுகிறாரே என்ற ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள்.
அதே போல், பக்கத்து ஊர்க்கார நண்பர்களாகவும், இலக்கிய அன்பர்களாகவும் திகழ்ந்த கு.அழகிரிசாமியோடும், கி.ரா.வோடும் நெடுங்கால நட்புறவை போற்றியவர் லானா சானா. வருடக்கணக்காக ல.ச.வும், கு.அ.வும் ஒன்றாக இருந்து எத்தனையோ நுணுக்கமான கருத்துக்களை விவாதித்தும் ஆராய்ந்தும் அனுபவித்தும் இருந்திருக்கிறார்கள். இரண்டு, மூன்று நாட்களாகச் சாப்பிடாமல் ஒரு நாளைக்கு இரண்டு வேளை, ஒரு வேளை, பலகாரம் மட்டும் சாப்பிட்டுக் கொண்டு, பொழுது போவதே தெரியாமல் உயர்ந்த விஷயங்களைப் பற்றி விவாதித்திருக்கிறார்கள். சில நாட்கள், இரவு பதினோரு மணிக்கு மேல் பன்னிரண்டு மணிக்கு மேல் வாழைப்பழமாவது கிடைக்காதா, இல்லை வெற்றிலை பாக்காவது கிடைக்காதா என்று சென்னைப் பட்டிணத்துக் கடை வீதிகளில் தேடி அலைந்திருக்கிறார்கள். அழகிரிசாமி மலாயாவிற்கு சென்றுவிட்ட பிறகும் இருவருக்கிடையேயான விவாத பரிமாற்றமானது கடிதங்கள் வழி தொடர்ந்து வந்துள்ளது. கோலாலம்பூரிலிருந்து எழுதிய 13-03-1955 தேதியிட்ட கடிதத்தில் கு.அழகிரிசாமி இப்படி எழுதுகிறார்.
“………………. வெகு நாட்களாக நான் தங்களுக்குக் கடிதம் எழுதாமல் இருந்ததற்குப் பல காரணங்கள். என் மௌனத்தைக் கண்டு தாங்கள் பலவிதமாக மனவருத்தமும் சோர்வும் அடைந்திருக்கக்கூடும். மௌனத்தின் பிரதான காரணம் என் கல்யாண விஷயமே. தங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்! எனக்கு 19-01-1955ல் பெந்தோங் என்ற ஊரில் திருமணம் நடைபெற்றது. என் மனைவியின் பெயர் சீதாலட்சுமி. ஒன்றரை வருஷக் காதல் வாழ்க்கை திருமணச் சடங்கில் மகுடம் தரித்தது. அன்று முதல் நாங்கள் இன்பமயமான இல்வாழ்க்கை நடத்தி வருகிறோம்.
……………….ஊருக்கு வந்து தங்கள் இலக்கியச் சூழலைக் காணவும் தங்களோடு உட்கார்ந்து மணிக்கணக்கில் பேசவும் எனக்குள்ள ஆவல் இம்மட்டு அம்மட்டு என்றில்லை. இங்குள்ள சில இலக்கிய நண்பர்கள் இந்திரஜித்து பற்றிய தங்கள் கட்டுரையைப் படித்துப் படித்து மகிழ்ந்தார்கள். நீங்கள் கோலாலம்பூருக்கு வந்தால் இவர்கள் உங்களுக்கு புதியவர்களாக இருப்பார்களே ஒழிய, நீங்கள் இவர்களுக்குப் புதியவராக இருக்க மாட்டீர்கள். அவ்வளவு தூரத்துக்கு நீங்கள் இங்கு அறிமுகமாகியிருக்கிறீர்கள். இப்போது இரவு மணி 1-.20. நாம் சுவாரஸ்யமாக சென்னையில் இலக்கிய சர்ச்சை செய்யும் நேரம். சீதா அருகே அயர்ந்து தூங்குகிறாள். சாலையில் பஸ் முதலிய வாகனாதிகளின் இரைச்சல் அடங்கிவிட்டது. எதிரே இருக்கும் மேவிய மைதானம், அதற்கப்பால் தெரியும் வீடுகளின் விளக்கொளி – எல்லாம் ஒரு கனவுக்காட்சியை எழுப்புகின்றன; நாம் விரும்பும் ஓர் ஊரில் நினைத்த மாத்திரத்தில் பறந்து போய் இருப்பதைப் போன்ற மயக்க நிலையை உண்டுபண்ணுகின்றன. மேஜையில் பலவிதமான புத்தகங்கள். இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை குற்றாலத்தில் அமைவது கடினமல்ல. அங்கு வருகிறோம். ஏற்கெனவே குறிப்பிட்டது போல, இலக்கியம் பற்றிப் பேசிக் கொண்டிருக்க வருகிறோம்…….”
உன்னதமான இதய இலட்சியங்களின் வரி வடிவ வெளிப்பாடுதான் உணமையான இலக்கியம் எனக் கூறப்பட்டு வருகிறது. உலமெங்கும் வரலாற்று பூர்வமாக நிறுத்தப்பட்டுள்ள இத்தகைய இலக்கியநியதியை அடியொற்றியே வித்வான் ல.சண்முகசுந்தரத்தின் படைப்புகளை நாம் அடையாளம் கொள்ள வேண்டியுள்ளது. அவரரெழுதிய முதல் நூல் ‘ரசிகமணி டி.கே.சி’. இதனைத் தொடர்ந்து அவர் எழுதி வெளிவந்த ‘நந்திக் கலம்பகம், தமிழ்கவி அமுதம், தமிழும் தாவரமும், நானறிந்த ராஜாஜி, மாணிக்க மாலை, இன்பத்துள் இன்பம், திருப்பாற்கடல், பெருந்தேவனார் பாரதம், பொன்னூஞ்சல், கவலையை விடுங்கள், நட்சத்திர வட்டம், பாட்டும் இசையும், அரசர்க்கரசர், அருளும், பொருளும், திருமூலர் கண்ட திருக்கோவில், உண்மையின் ஒய்யாரம், தமிழ்கவி இன்பம், கவிக்கோவில் ஒன்று, அற்புதத்தில் அற்புதம், தெய்வமாக்கவி திருமூலர், மல்லிகை மாலை, குற்றாலக் குறவஞ்சி, கலிங்கத்துப்பரணி, அமிர்த கலசம், ஆனந்தக் கூத்து, ரசிகமணி டி.கே.சி. வரலாறு உள்ளிட்ட 27க்கும் மேற்பட்ட நூல்கள் தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்த்தவை.
‘சக்தி’ இதழ் தோன்றி பதினான்கு வருடங்கள் நிறைவடைந்த சமயத்தில், அவ்விதழுக்கு வாழ்த்துப்பா பாடச் சொல்லிப் பணிக்கப்பட்டவர்கள் இருவர். ஒருவர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, மற்றொருவர் வித்வான் ல.சண்முகசுந்தரம். ‘சக்தி வாழ்த்து’ என்ற தலைப்பில் அவரெழுதி ‘சக்தி – நவம்பர் 1953’ இதழில் வெளியான வெண்பா இது.
- வையம் செழிக்க வளஞ்சேர மாநிலத்தில்
ஐயம் அகன்றோட ஆரமுதாய்க் – கையகத்து
வந்ததால் சக்தி மலர்வுர்று யாவர்க்கும்
தந்ததால் இன்பம் பல.
- ஆய்வோருக்கு நல்விருந்தாய் ஆயாது பல்பொருளை
மேய்வோருக்கும் நல்விருந்தாய் மேவுமே தோய்வால்
ஒளிவிட்டு நின்று உணர்வை உணர்த்தித்
துளிர்விட்ட சக்தித் துணர்
- பொய்கள் விரைந் தோடும் புன்மொழிகள் வாய் குழலும்
ஐயம் நடுங்கி அடிபணியும் – மெய்யே
தனக்கணிய தாகத் தலம்செழிக்க வந்த
மனக்கணியாம் சக்திமல ரால்
எளிய தமிழ்நடையில், எல்லோர்க்கும் புரிய வேண்டும், சாதாரண படிப்பு உள்ளவர்களும் படித்து அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு கவிதைகளை சீர் பிரித்து எழுதியிருப்பது வித்வான் ல.சண்முகசுந்தரத்தின் சிறப்புமிக்க பணிகளில் ஒன்றாகும். கம்பர் பாடல்களில் விழுந்துள்ள சில பிழைகளைச் சுட்டிக் காட்டி அவற்றில் ரசிகமணி மேற்கொண்ட சதுரப்பாடு குறித்து அறிஞர்கள் சிலர் அப்போது எதிர்ப்பு தெரிவித்த நிலையில், “பிழை விழுவது இயல்பு. அதைத் திருத்துவது வரப்பிரசாதம். ஆனால், அதற்கு ஏன் முகத்தைச் சுழிக்கிறது தமிழ் உலகம்..?” என்றார் ல.சண்முகசுந்தரம். இயல்பிலேயே கவி உணரும் உள்ளத்தைக் கொண்டிருந்த அவர் தனக்கே உரித்தான கவித்துவ சொல்லாடலில் ‘அழ’கினை இப்படி வர்ணிக்கிறார்.
“ஒரு பொருள் அபூர்வமாக இருந்தால் அதிசயப்படும்படி அற்புதமாக இருந்தால் அது அழகாக இருக்கும். அழகு என்றால் அதுதான். இனி அந்த அபூர்வப் பொருள் பழகுவதற்கும், உறவாடுவதற்கும், ஏன், பார்ப்பதற்குமே எளிதாக் ஐருந்தால் அதன் அழகு ஒன்றுக்குப் பத்தாய், ஆபத்துக்கு நூறாய்ப் பெருக்கெடுக்கும். புஷ்பம், தங்கம், குழந்தை, கவி, அன்பு பொறுமை, வீரம், இப்படி எத்தனையோ வஸ்துக்கள். இவையெல்லாம் அரியதாகவும் இருக்கின்றன. எளியதாகவும் இருக்கின்றன. அதனாலேயே அழகுமயமாய் உள்ளன. கடவுளும் இந்த பட்டியலில் உண்டு. அருமைக்கு அருமை, எளிமைக்கு எளிமை. இவைதான் அழகின் சன்னிதானம்..”
பரிபக்குவம் எய்துவதற்கு அத்வைதம் என்ற ஒட்டுறவு நிலையைக் கைக் கொள்வார்கள் பக்த கோடிகள். இந்த ஒட்டுறவின் காரணமாக, இறைவனைத் தமக்கு ஒரு சொந்தக்காரராகக் கருதி ஈடுபடுவோர் உண்டு. அந்த ஈடுபாடு தமிழுக்கு எத்தனை எத்தனை அருமையான கவிகளைத் தந்திருக்கிறது. அப்படி ஒரு கவியாகத் திகழ்ந்த வித்வான் ல.சண்முகசுந்தரம் மார்ச் 25, 2015 அன்று சென்னையில் காலமானார்.
