Site icon சொல்வனம் | இதழ் 367 | 24 மே 2026

கரையைத் தொடாத அலையின் பாடல்

கரையைத் தொடாத அலையின் பாடல்

தெரியுமா?
இயற்கையின் குருதி நீல நிறத்தினது.
எட்ட நின்று அதன்
மென்மையையும், குளிர்ச்சியையும்
ரசிப்பவர் நீங்கள்
நாள்தோறும் அதன் நாளங்களுக்குள்
புகுந்து பயணிக்கிற பயணிகள் யாம்
ஒவ்வொரு மீனவப் பாடலுக்குள்ளும்
கடலோடியின் வாய்மொழிக் கதைக்குள்ளும்
உயிர்ப்போடு துடித்துக்கிடக்கிறதெங்கள் பெருங்கதை.
உவர்ப்புக் காற்றைக் குடித்தபடியே
முட்களாலும் செதில்களாலுமான அமிழ்தம் தேடி
உங்கள் நாவின் சுவைமொட்டுகளின் ஏக்கத்தை
நிகர்செய்கிறபடியான ஒரு பயணமது.
மோதியெழுந்து ஆர்ப்பரிக்கும்
ஒவ்வொரு எழுச்சியில் இயற்கையின் வெற்றியும்
அலைவாய் வெளியேறும் ஒவ்வொரு மீளலிலும்
எமது வெற்றியும் எழுதப்படுகிறது.
அலைக்கும் கரைக்குமான உயிர்விளையாட்டு
வாழ்க்கை
கடலின் பாடலைப் பாடுகிற ஒவ்வொரு அலையும்
மீதமாய் வைத்திருக்கும் எமது ஏதேனுமொரு
கரையைத் தொடாத பாடலை.


Paul Klee, Beschwingte Bindungen, 1930

அக நடனம்

மேடையின் இருளுக்குள்
ஒளிந்து பரவும் ஒளிக்கு மத்தியில்
வலக்கையை உயர்த்தி
இடக்கையைச் சுழற்றியபடி
சுழித்தாடும் நடிகையின்
விழிகளைச் சந்திக்கிற கணத்தில்
அங்கு நீ தோன்றி விடுகிறாய்
இசை நாடகத்தின் அறியா மொழியின்
பாடல்கள் புரியாத போதிலும்
அவலச் சுவையுள் பெருந்துயர் பீறிட
தரையில் புரளுமவளது ஓலத்தின் மீதமர்ந்து
சூழலுக்குள் பொருந்தாமற் துருத்தியபடி தெறிக்கும் பெருஞ்சிரிப்பை
தலையை உலுப்பி உனை உதற முயலுமென்
எத்தனங்கள் மீதான எள்ளலெனவே மொழிபெயர்க்கிறேன்.
அடங்கா கோபமும் பெருங்காமமும் ஒருசேர்ந்து
முகத்தில் அகத்தை எழுதிட
அருகிருப்பவர் அறியும் முன்
ஆழ்ந்து கவனிப்பதாய்
பாவனைகளை திருத்தத் துவங்குகிறேன்.
காட்சியின் உச்சத்தில் ஆடியடங்கி
மையத்தில் செத்து வீழ்கிறாள்
உன் சிரிப்பு அடங்குகிறது
பிரவாகிக்கும் இசையுடன் திரையிறங்க
அகத்துள் துவங்குகிறது நாடகமொன்று
எனையொரு பாத்திரமாக்கி.


வளியான மொழி

பெயரிடப்படாத கல்லறையினின்று
பெறப்பட்ட மொழியின் துணைகொண்டு
மனகலத்தில் கொதித்துக் கொண்டிருந்த
கவிதைகளை சமைத்துக் கொண்டான்.
யாவருக்கும் புரிகின்றதாய் இருந்த
சிறகுகள் விரிந்த
அவ்வினோத மொழியில்
அவன் பாடிய கவிதைகளத்தனையும்
எல்லோருக்குமான வேதனைகளையும்
இழப்புகளையும் பாடியது.
தூர்த்துக் கிடந்த மனங்களை
அவற்றின் பிரமை சிலந்திகள் நூற்ற
வலைப் பின்னல்களிலிருந்து விடுவித்து
சில மிடறு சுதந்திரத்தின் அவசியத்தை
புகட்டுவதாய் இருந்தது.
வெம்மை நிரம்பிய அதன் வரிகளின் நெடி
அதிகாரத்தின் நாசிகளை சலனப்படுத்த
பெற்றுக் கொண்ட மொழியின் இருப்பிடம் பகிர
நிர்பந்திக்கப்பட்டான்.
ஆனாலும் காற்றில் விதைக்கப்பட்டு
காதுகளில் துளிர்த்து கதைப்பாடல்களாய்
நிலைத்துவிட்ட அக்கவிதைகளை
அவர்களால் எதுவும் செய்ய இயலவில்லை.
அதன் வழி அவனையும்.

Exit mobile version