
நான் வீட்டுக்குள் குழி தோண்டிக் கொண்டிருப்பது வெளி உலகுக்கு தெரிந்துவிட்டது என்று நினைக்கிறேன். வெளியில் அதிகப்படியான நடமாட்டம் உள்சுவற்றின் இருளுக்குள் இருந்தும் எனக்குத் தெளிவாகத் தெரிகிறது. அவர்கள் சந்தேகம் போகும் வரையில் குழி தோண்டுவதை நிறுத்தியாக வேண்டும்.
வீட்டின் ஹால் அனைத்து புறச் சுவர்களில் இருந்தும் சரியான தூரத்தில் இருந்தது. அடுத்த நாள் ஹாலில் குழி தோண்டுவது தான் உத்தமம். பதினாருக்கு பதினாறு என்ற ஹாலில் பத்துக்குப் பத்து என்ற கணக்கில் குழி தோண்டிக் கொண்டிருந்தேன். அதற்குத் தேவையான பக்கவாட்டு பலகைகளையும் மேற்ப்பலகையும் என்னுடைய நிலை மோசமான பிறகு தான் கடையிலிருந்து வாங்கி வந்திருந்தேன். அதுவும் இரவில் தான் சென்று வந்தேன். அதற்கு பிறகு இந்த ஐம்பது நாட்களாக நான் வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை.
சிறுவாணியிடம் சாவி இருந்தது. அவன் வாரம் ஒரு முறை வீட்டின் முன் அறை வரை வந்து மளிகைப் பொருட்களையும் துவைத்த துணிகளையும் வைத்துவிட்டு துவைக்காத துணிகளை எடுத்துச் செல்வான். ஏதாவது சொல்வதென்றால் போனில் அழைப்பான். அவன் எந்தப் பொருள் வாங்கி வந்தாலும் மேற்படி பணம் அதில் எடுத்துக் கொள்கிறான் என்பது எனக்குத் தெரியும். எனக்குத் தெரியும் என்பது அவனுக்கும் தெரியும். என் நிலை பற்றி ஓரளவு தெரிந்தவன் அவன் மட்டும் தான். அதனால் எங்களுக்குள் சொல்லிக் கொள்ளாத ஒப்பந்தம் ஒன்று இருந்தது.
இதுவரைக்கும் இரண்டடி குழி தோண்டியிருப்பேன். நான் ஊகிக்கும் இருள் அதில் கிடைத்துவிடும் என்றே நம்புகிறேன்.
ஆமாம் இருள்…
இருளைத் தேடித் தான் நான் தோண்டிக் கொண்டிருக்கிறேன். பூமியின் மேற்பரப்பு அனைத்தும் வெளிச்சத்தால் நிரம்பியிருக்கிறது. நாகரிகம் செய்த துரோகம். இருளை முற்றொழித்துவிட்டனர். ஆனால் அப்படியில்லை. எதைத்தான் வன்முறை முற்றொழித்திருக்கிறது? மேற்பரப்பில் அழித்த பின் அது இல்லை என்றாகிவிடுமா? அழிக்கப்பட்டவை ஆழத்துக்குள் சென்றுவிடும். அங்கு விதைபோல் காத்து நிற்கும். தகுந்த கணத்தில் முளைத்து வரும்.
என்னால் தகுந்த கணத்துக்காக காத்து இருக்க முடியாது. அதற்குள் என் ஆயுள் முடிந்து விடும். அதனால் நானே அங்கு சென்று விடுவதுதான் சரி.
நான் இரவில் விழித்திருப்பவன் என்று சொல்வது கூட குறைபட்ட விளக்கம்தான். இரவில் வாழ்பவன் என்பது தான் சரி. என் அம்மா இரவுத் தொழிலாளியாக இருந்திருக்க வேண்டும். சரியாகத் தெரியாது. ஆனால் அவர் இறக்கும் வரையில் அப்பா என்று எவரையும் அடையாளம் காண்பித்தது இல்லை. நானும் இரவில்தான் வேலை செய்தேன். மேலும் என் உடலின் பகல் இரவில் தான் வேலை செய்தது. நான் பகலில் தூங்கும்போது என் உடலும் மனமும் ஓய்வுக்கு சென்றுவிடுகிறன. ஒரு குறையும் இல்லை. நான் பகலுக்கு பழக்கம் இல்லாதவன் என்பதைத் தவிர.
அதனால் தான் என்னவோ நான் அதை நம்புவதில்லை. மேலும் பகல் மீது சில புகார்கள் இருந்தன..
பகலில் இருள் இருப்பதில்லை. பகல் வெளிச்சத்துடன் உறவுமுறையில் இருப்பது. வெளிச்சமோ ரகசியத்தை துறந்தது. அனைத்தையும் காட்டிக்கொடுப்பது. கேட்காமல் சொல்லாமல் ஊடுருவும் அராஜகமுடையது. தோன்றி மறையும் மாயையுடையது. ஆகையால் நம்பமுடியாதது.
ஆனால் இரவு இருளுடன் உறவில் இருப்பது. இருள் எங்கும் எப்போதும் வியாபித்திருப்பது. அதன் மடியிலே படைப்புகள் ஆரம்பிக்கின்றன, இயங்குகின்றன, அடங்குகின்றன.
இருள் நிரந்தரமானது. இருளே இறைவன்.. அந்த இறைவனை கைவிட்டது தான் நான் செய்த முதல் தவறு.
அம்மா இரவு தொழில்காரி என்பதால் அவர் பகலில் தூங்கினார். ஆதலால் நானும் தூங்க வைக்கப்பட்டேன். மேலும் பகலில் கைவிடப்பட்ட உணவுகள் இரவில் மனம்போல கிடைக்கும்.
அதிகாரத்தின் நெடிய கைகளில் இருந்து தப்பிக்க அது இயங்கும் நேரத்தில் நாம் இயங்காமல் இருக்க வேண்டும் என்பது என் அம்மாவின் கண்டுபிடிப்பாக இருக்க வேண்டும். வறியவர்களின் கைகள் இருளில் தான் ஓங்கியிருக்கும் வாய்ப்பிருக்கிறது. அது அதிகாரத்தை கூட நடுங்க வைக்கும். அம்மா செய்த ஒரு கொலையை நான் கண்டிருக்கிறேன். அது இருளில் ஆரம்பித்து இருளில் முடிந்ததால் பகலின் நியாய சட்டங்கள் அதற்கு பொருந்தாது என்ற வியாக்யானம் எனக்கு முதன்முதலில் அன்று உரைக்கப்பட்டது. இருளின் தர்மம் தலைகீழாய் இருப்பதல்லவா..
அப்போதெல்லாம் இரவில் பள்ளிகள் இருந்தன. நான் அதில் தான் படித்தேன். ஸ்டான்லி வாத்தியார் நடத்தியது. அவர் அதில் என்னை சேர்த்துக்கொண்டார். அம்மாவுக்கும் வயதாகியிருந்தது. நானும் இளைஞன் ஆகிக்கொண்டு வந்தேன். அம்மா தொழிலுக்கு செல்வதை நிறுத்திக்கொண்டார். முதன்முதலில் ஸ்டான்லி வாத்தியார்தான் அம்மாவுக்கும் இட்லி கடை வைத்துத் தந்தார். அதுவும் இரவில். அப்படித்தான் சிறுவாணி எனக்கு பழக்கம். அம்மாவின் உதவியாளனாக வந்து சேர்ந்தவன்.
அரசு இயந்திரங்கள் இரவில் தூங்கி விடுகின்றன. அதனால் அம்மா பகலுடன் சில நேரம் சல்லாபிக்க வேண்டியிருந்தது. அப்படித்தான் இப்போது நான் குழி தோண்டிக் கொண்டிருக்கும் இந்த வீட்டை வாங்கினார் அம்மா. இட்லி கடை விரிவடைய விரிவடைய வீடும் பெரிதாகியது. அம்மாவுக்கு பகல் மீது ஏதோ சஞ்சலம் இருந்திருக்கக்கூடும். அதுதான் அவரைக் கொன்றது. அம்மா ஒரு பகலில் இறந்து போயிருந்தார். அப்போது நான் இரவு நேர காவலாளியாக வேலை செய்து கொண்டிருந்தேன். அம்மாவின் இறுதிக் காரியத்தை நான் பகலில் செய்து முடித்தேன். எனக்குத் தெரிந்து ஒரு முழு பகலை அன்றுதான் முதன் முதலில் பார்த்தேன்.
என் முதல் திடுக்கிடல் இந்த மனிதர்கள் தான். இத்தனை மனிதர்கள் பகலில் இருக்கிறார்களா? இத்தனை தனித்தனி இச்சைகளா? இன்னும் ஏன் இவர்கள் அடித்துக் கொள்ளவில்லை?
அம்மாவின் இறப்புக்கு பிறகு இட்லி கடை என் கைவசம் வந்தது. பிறகு பகலின் பைத்தியக்காரத்தனம் என் மீதும் படியத் தொடங்கியது. முதலில் அதிகாலை மீது என் பிரியம் விரிந்தது. அது ஒரு மயங்கிய நிலை. பகல் ஆரம்பிக்கும் வரை நான் காத்திருந்து தான் தூங்க செல்வேன். பகலவர்களுள் நல்லவர்கள் மட்டுமே அப்போது விழித்திருந்தார்கள். அவர்களது உற்சாகம் புதியதாக இருந்தது. ஒரு சிலர் என் நண்பர்கள் கூட ஆனார்கள்.
அதிகாலையின் வசதிகள் வேறானவை. இரவின் குளுமையும் பகலின் வெதுவெதுப்பும் ஒருசேர மயங்கியவை. அதன் கேளிக்கைகள் சற்று சுணக்கமானவை என்றாலும் அனைத்து இடத்திலும் வியாபித்திருப்பவை. ஆனால் நிதானமானவை. ஒரு சில நாட்களில் அந்த நிதானம் பழகிப்போனது. பழகிப் போனதால் சலிப்புற்றது. கொஞ்சம் பரபரப்பு தேவைப்பட்டது. அந்தியின் பரபரப்பு. அந்தியிலும் விழிக்கலானேன். அப்படித்தான் என் நோய் என்னுள் ஊடுருவி இருக்கக்கூடும்.
அந்தியும் போதாத போது நண்பகலுக்கு என்னை நானே நீட்டித்துக் கொண்டேன். கொஞ்சம் கொஞ்சமாக பகல் என்னை உள்ளிழுத்துக் கொண்டிருந்ததை முதலில் நான் அறியவில்லை. உறக்கம் மாறியது. உணவு மாறியது. ஏன் உடை கூட மாறியது. புதிய புதிய ஆட்கள். புதிய புதிய வாழ்க்கை. அம்மாவின் இட்லி கடை பகலில் போட்டேன். புதிய வாடிக்கையாளர்கள்.
மேல்நிலையாக்கம் போல இது பகல்நிலையாக்கம். அதன் புதிய மோஸ்த்தரில் துணிகரமாக ஈடுபட்டிருந்தேன். எல்லாம் சரியாகவும் குதூகலமாகவும் தான் சென்றுகொண்டிருந்தது. என் உடலில் சிறு சிறு கொப்புளங்கள் தோன்றும் வரை. முதுகில் ஆரம்பித்தது கை கால் வரை வந்ததும் தான் எனக்கு பட்டது. முதலில் பதட்டம் என்று ஏதும் இல்லை என்றாலும் நான் இரவு நேர மருத்துவமனைக்கே சென்றேன். அவர்கள் பகலில் வரச் சொன்னார்கள். பகல் மருத்துவர் வெயிலில் செல்லாதே என்று கூறி களிம்பும் மாத்திரையும் எழுதித் தந்தார். நான் மீண்டும் இரவு வாழ்க்கைக்கே திரும்பினேன். இரவில் இட்லி கடை திறந்தேன். அதே பழைய வாடிக்கையாளர்கள்.
புதிய புதிய இடத்தில் கொப்புளங்கள் உதித்தன. கண்களில் வரம்பிட்டது போல் சில சிவப்பு புள்ளிகள் தோன்றியதும் நான் மீண்டும் மருத்துவரை நாடினேன். மீண்டும் அதே மருந்துகள், இம்முறை வெளிச்சத்தில் போகாதே என்று சொல்லி என்னை அனுப்பி வைத்தார்.
வீட்டுக்கு வந்ததும் தான் உரைத்தது. மருத்துவர் வெயிலில் செல்லாதே என்றாரா அல்லது வெளிச்சத்தில் செல்லாதே என்றாரா? சாதாரண குழப்பம்தான் என்றாலும் உடலின் அரிப்பு அதிகமாக இருந்ததால் அன்று இரவே வீட்டுக்கு வந்துவிட்டேன். எதற்கும் இருக்கட்டும் என்று எல்லா விளக்குகளையும் அணைத்துவிட்டு வெறும் இருட்டில் அமர்ந்திருந்தேன். அடுத்த நாள் அவசர அவசரமாக வெயில் ஆரம்பிக்கும் முன்னே மருத்துவமனைக்கு சென்று காத்திருந்தேன். பல சலசலப்பிற்கு பிறகு என்னிடம் தெரிவிக்க பட்டது. அந்த மருத்துவர் நேற்று இரவே இறந்துவிட்டார் என்று. நான் கேட்டவுடனே ஏன் என்று தெரியாமல் சுருட்டி வாரிக்கொண்டு வீடு நோக்கி ஓட்டமெடுத்தேன். வெயிலில்..
வீடு வந்து கதவு அடைத்துக் கொண்டேன். என் உடல் வின் வின் என்று எரிந்தது. என் உடலே ஒரு குட்டி சூரியன் போல் ஒளிவிட்டது. பிரகாசித்து எரியும் ஒளி அடங்க வெகு நேரமாயிற்று. வெப்பத்தின் தகிப்பு குறையக் குறைய தான் உணர்ந்தேன் வீட்டின் இண்டு இடுக்குகளில் இருந்து வெளிச்சம் உள்ளே வந்து கொண்டிருப்பதை. அப்படி உள்ளே வருகின்ற வெளிச்சம் வீட்டையே நிறைத்து நிற்கிறது. என்னையும் சூழ்ந்து கொள்கிறது. உடலின் மீது பதிகிறது. பதிந்து வெப்பத்தை உரசி உண்டாக்குகிறது. உடல் மீண்டும் எரிகிறது. தழல் தழல் என்று தகிக்கிறது.
கதவின் இடுக்குகளில் துணியை வைத்து மறைத்தேன். ஜன்னல்களில் பல அடுக்கு திரை கட்டினேன்.அனைத்து வெளிக் குழாய்களிலும் சாக்குப் பை வைத்து அமுக்கினேன். இனி வெளிச்சம் இல்லை என்று இருந்தேன். வெளிச்சம் இல்லை என்றால் கண்ணாடி எப்படி எனக்குத் தெரிகிறது. கண்ணாடி மீது அடுப்புக் கரி எடுத்துப் பூசினேன்.
வீட்டுக்குள் வெளிச்சத்தை முழுதும் ரத்து செய்திருந்தேன். இனி இருட்டு என்றிருக்கும் போது. சிறிது நேரத்திலேயே இருட்டுக்கு கண் பழகியது. பழகியவுடன் அது புதிய வெளிச்சத்தைக் காட்டிக் கொடுத்தது. வீட்டின் அனைத்து மூலைகளும் துல்லியமாகத் தெரிந்தன. அதை என் பிரக்ஞை உணர்ந்த உடனேயே என் உடலும் உணர ஆரம்பித்தது. உடல் மீது அந்த வெளிச்சம் படியத் தொடங்கியது.
மீண்டும் தீயின் தழல்..
சிறுவாணிக்கு போன் செய்து அடர் கருப்பு பெயிண்ட் வாங்கி வரச் சொன்னேன். அவனிடம் இருக்கும் சாவியைக் கொண்டு திறந்து முன் அறையில் வைக்கச் சொன்னேன். அவன் முன் அறையில் வைத்த பணத்தை எடுத்துக்கொண்டு பெயிண்ட் வைத்துச் செல்வதை உள்ளிருந்தே கவனித்துக்கொண்டிருந்தேன்.
உள் சுவர்கள் அனைத்தும் கருப்பாக ஆக்கினேன். “இனி இருட்டு” என்று நினைத்து முடிப்பதற்குள். கருப்பு வண்ணத்துக்குள் உறைந்திருக்கும் வெளிச்சம் வெளிவந்தது. அதன் துல்லியம் வைரம். வீட்டுக்குள் படிந்தும் பறந்தும் அலையும் தூசி மண்டலம் இவ்வளவு தெளிவாகத் தெரியும் என்று நான் அதுவரையில் நம்பியிருக்கவில்லை. அந்த வெளிச்சமும் என் உடல் படிந்தது. இன்னும் கூர்மையான எரிச்சல். ஆயிரம் ஆயிரம் நுண் ஊசிகளால் துளையிடும் வலி.
ரணவலி..
நான் ஸ்டான்லி வாத்தியாருக்கு போன் செய்தேன். அவர் குசலம் விசாரித்ததை இடைவெட்டி நேராக விசயத்துக்கு வந்தேன். “சார் ஒரு முக்கியமான கேள்வி. ஏன் எதற்கு என்று கேட்காமல் பதில் சொல்லுங்க, எனக்கு இது வாழ்வா சாவா கேள்வி..”
அவர் வாத்தியார் என்பதால் எப்போதும் கேள்விகளுக்குத் தயாராக இருந்தார். “சரி. ஏன் எதுக்குன்னு இப்போ கேக்கல. ஆனா எப்பவாவது கேப்பேன். சரி என்னன்னு சொல்லு..” அவருக்கும் வயதாகியிருந்ததால் அவரிடம் கேள்வி கேட்டு வருவோர் குறைந்திருக்க கூடும்.
“முழு இருட்டு .. இருளை உருவாக்க முடியுமா?”
“முழு இருள்ன்னா?”
“இருட்டு.. கும் இருட்டுன்னு சொல்றோம்ல்ல சார். முழுமுற்றான இருட்டு. வெளிச்சப் பொட்டு துளியும் விழுகாத தூய இருட்டு.”
“கார்பன் தாள் மாதிரியா?”
“அதில்ல சார், என் அவஸ்தைய புரிஞ்சுக்கோங்க.. கருமையை கேக்கல. அதிலே வெளிச்சத் துகள்கள் இருக்கு. இருட்டுக்குள்ள கருப்ப கருப்புன்னு கண்டுபுடிச்சிடலாம்..”
“ம்ம்.. புரியுது..”
அவர் புரியுது என்று சொன்னவுடன் அடக்கி வைத்த வலியை முனகலுடன் வெளியிட்டேன். அது என்னில் இருந்து அலையலையாய் கருஞ் சுவற்றில் மோதி மோதி தெறித்தன. அவர் இன்னும் யோசித்துக் கொண்டிருந்தார்.
“சார்..”
“அதல பாதாளத்துல இருட்டு மட்டும் தான் இருக்கும்ன்னு சொல்லுவாங்க. இப்போ நான் படிச்சுக்கிட்டு இருக்கிற கதையில அப்படித்தான் வருது…” என்று சொன்னவாறு யோசித்தார்.
“சரிங்க சார். நான் அப்புறமா கூப்பிடறேன்” என்று துண்டித்தேன்.
அவர் சொல்வதின் உண்மைத் தன்மை எனக்குப் புலப்பட்டது. அப்படித்தான் நான் வீட்டுக்குள் குழி தோண்ட ஆரம்பித்தேன். வெளிச்சத்தால் பால்பட்ட வெளி உலகத்துக்கு மாற்று பாதாள உலகம் தான்.
ஹாலில் தோண்டிய மண்ணை படுக்கையறை தாண்டிய கழிவறையில் போட்டுக்கொண்டிருந்தேன். குழி ஆழம் செல்ல செல்ல கழிவறை மண் நிரம்பி படுக்கையறையில் சரிந்து கொண்டிருந்தது. தோண்டத் தோண்ட நான் தேடும் முழுமுற்றான இருட்டு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை பிறந்தது. தோண்டிக் கொண்டிருக்கும் போதே எத்தனை அடி தோண்ட வேண்டும் என்று எனக்குத் தெரிந்திருந்தது.
வெளியே மெலிதாக சத்தம் கேட்டது. ஒரு கணம் உடல் நடுங்கி அமைந்தது. ஊன்றிக் கேட்டேன். கேட்கக் கேட்க சத்தம் வலுபெற்று கொண்டே வந்தது. இப்போது துல்லியமாக கேட்கிறது..
“தம்பி.. தம்பி..” சிறுவாணியின் சத்தம்.
குழியிலிருந்து மேலேறி. மூச்சை சீர்படுத்தி. “என்ன அண்ணா..” என்று கத்தினேன். அநேகமாக அந்தியாக இருக்கும்.
“தம்பி.. ஒன்னும் இல்ல.. கொஞ்சம் வெளீல வர முடியுமா? கதவ தொற”
“வெளீலயா? எதுக்குண்ணா..”
“நீ வெளிய வா தம்பி சொல்றேன்..”
“இப்போ முடியாது. நீங்க போயிட்டு ராத்திரி வாங்க. தனியா வாங்க..”
“தனியா தான் இருக்கேன் தம்பி இப்போ..கதவ தொற..”
“அண்ணா.. உங்க பின்னாடி அத்தன பேரு நிக்குறாங்க.. நான் பாத்துட்டு தான் இருக்கேன்.”
“எல்லாரும் நம்ம ஏரியா தான். உனக்கு என்ன ஆச்சுன்னு பயமா இருக்குல்ல..”
“எனக்கு ஒன்னும் ஆகல. நேத்து ராத்திரி கூட நான் வெளியே வந்தேனே. சாமிக்கண்ணு கெலப்பு கடைல பரோட்டா வாங்கி வந்தேன். சந்தேகம் இருந்தா சாமிக்கண்ணு கிட்ட கேளுங்க..”
“தம்பி.. இப்போ நீ வெளீல வர்றது நல்லது..”
“வரலீன்னா என்ன புடுங்குவ?”
“ப்ச்.. நான் சொல்றது கேளுப்பா. எல்லாம் உன் நல்லதுக்குத்தான்.”
“எல்லாரும் இங்க இருந்து போங்கடா வெயிலா. மயிராண்டிகளா.. என் செவுத்துல எவனும் கை வைக்கக் கூடாது. எல்லார் மேலயும் பெட்ரோல் ஊத்தீருவேன் பாத்துக்கோ.. நான் விளையாட்டுக்கு சொல்லல்ல. ”
சிறுவாணியுடன் நின்றிருந்த அனைவரும் பின்வாங்கி நின்றனர்.. சிலர் கலைந்தனர். சிறுவாணி மட்டும் அங்கேயே நின்று கொண்டிருந்தான்.
“உனக்கு என்னடா… வேணும்?”
“தம்பி.. வேணாம்.. அடா.. புடான்னு சொல்ல வேணாம். நான் உங்க அம்மாவோட வேலை பாத்தவன்..
சிறுவாணி அம்மாவை இழுத்தவுடன். நான் அமைதியானேன். சிறிது நேரம் அப்படியே நின்றவன் தணிந்த குரலில் ஏதோ சொன்னான். சொல்லிக்கொண்டே இருந்தான். எனக்கு ஒன்றும் கேட்கவில்லை. ஜன்னலோரம் நகர்ந்தேன். என் உடலில் எரிச்சல் ஏறியது. கட்டுப்படுத்திக் கொண்டேன். ஜன்னலில் காது வைத்துக் கேட்டேன். சிறுவாணியும் ஜன்னலிடம் நகர்ந்து வந்து கேட்டான். “தம்பி.. நான் சொன்னது கேட்டுச்சா?..”
நான் ஒன்றும் சொல்லவில்லை.
“தம்பி.. நீ வீட்டுக்குள்ள புதையல் தோண்டுறதா வெளீல பேச்சு..”
……
“எதுவா இருந்தாலும் பாத்துக்கலாம்.. என்னைய மட்டும் உள்ள விடு..”
“போடா பரதேசி…” என்று கத்தினேன்.
அவன் திடுக்கிடல் ஏதுமின்றி பின்வாங்கிச் செல்வதை உள்ளிருந்தே உணர்ந்தேன். நான் பின் நகர்ந்து குழிக்குள் இறங்கினேன்.
அடிக்கு ஒரு பாதாளம் என்றாலும் கூட, நான் அதலம், விதலம், சுதலம் வரைதான் தோண்டியிருந்தேன். இருட்டு கூர்மையாகிக் கொண்டே வந்தது எனக்கு பெரிய நம்பிக்கை தந்தது. இன்னும் தலாதலம், மஹாதலம், ரஸதலம் கடைசியாக நாகலோகமாகிய பாதாளம். அங்கே முழு இருட்டுதான் இருக்கும். நாகங்கள் தன் ரத்தினங்களால் அங்கே ஒளி எழுப்புமாம். அப்படி அதைப் பார்த்தால் அடித்து கொன்று விட வேண்டியது தான். என்னுடைய கொலை ஒருவேளை அதுவாகத் தான் இருக்கும். அம்மாவை நினைத்துக் கொண்டேன். அம்மா செய்திருந்த கொலையையும் நினைத்துக்கொண்டேன்.
இன்னும் சில அடிகள் தான். பின்பு நான் அங்கே பத்திரமாக ஐக்கியம் ஆகி விட முடியும்.
இதோ வந்துவிட்டது.. இதோ வந்துவிட்டது.. என்றே தோண்டினேன். இருள் மேலும் மேலும் இருளாகிக் கொண்டு வந்தது. நான் படிப்படியாகத் தான் முன்னேறிக் கொண்டு இருந்தேன் என்று நினைத்திருந்தேன். ஆனால் அது நிகழும் போது புதிதாக என்றுமில்லாத நிறைவுடன் இருள் என் முன்னே தோன்றியது. திரைவிலகி காட்சி தரும் தெய்வம் போல. ஆம் அது தரிசனம் தான்.
இருள்.. இருள்.. எங்கும் என்னைச் சுற்றி இருள். என் தேகம் எப்போதுமில்லாத இயல்பான, தளர்ந்த, விட்டு விடுதலையான இடத்துக்கு வந்து சேர்ந்திருந்தது. உகந்த நிலை ஒன்று உருவாகி வந்தது. எனக்கும் என் தேகத்துக்கு இடைவெளி ஒன்று உருவாகியது. தேகத்தின் வரம்பிற்குள் நான் முற்றிலும் கட்டுப்பட்டவனாக இருக்கவில்லை. அந்த நெகிழ்வுத் தன்மை. நான் தேகத்தின் மீது வைத்திருந்த இறுக்கமான கட்டு சிறிது தளர்ந்திருந்தது. இருளின் மகத்துவத்தை நான் உள்வாங்கினேன்.
அங்கேயே இருந்தேன். நேரக்கணக்கு பிசகியிருந்தது. எவ்வளவு நேரம் எவ்வளவு நாட்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை. புற உலகின் விதிகளில் இருந்து விலக்கு கிடைத்திருந்தது. நான் கருவறையில் இருந்தேன். என் உலகம் அங்கே உறைந்திருந்தது. இச்சைகள் ஒடுங்கி அதன் கருவடிவுக்கு சென்றிருந்தது.
நான் கருவுக்குள் சுருண்டு கொண்டேன்.
எங்கிருந்து என்று தெரியவில்லை, ஒரு மின்னல் வெட்டிச் சென்றது. ஒரே ஒரு மின்னல். என் இருளை குலைக்க ஒரே ஒரு மின்னல் போதுமானதாக இருந்தது. என்னை கருவடிவிலிருந்து செயல் வடிவுக்கு உந்தித் தள்ளியது. நான் உணர்ந்தது முதலில் ஒரு பதட்டத்தைத் தான். கண் திறந்து பார்த்தேன். மின்னல் மறைந்திருந்தாலும் அது விட்டுச் சென்ற ஒளித் திவலைகள் என் பாதாளம் வரை வந்து நிறைத்துக் கொண்டன. எங்கும் வெளிச்சம். நான் மட்டும் காணும் வெளிச்சம். பாதாளம் பாதாளமாக இல்லை. புற உலகம் தன் கரங்களை நீட்டி என் பாதாளத்தை எடுத்துக் கொண்டது. என் உடல் மீண்டும் தீயில் எறியப்பட்டது. நான் குழியை விட்டு மேலே ஏறி வந்தேன். வெளிச்சம் என்னை உள்ளிழுத்துக் கொண்டது.
நடுங்கும் பொசுங்கும் கரங்களுடன் நான் ஸ்டான்லி வாத்தியாரை மீண்டும் போனில் அழைத்தேன்.
என் குரல்வளை உடைந்திருந்தது. “சார்..சார்.., பாதாளத்துல இருட்டு.. பாதாளத்துல இருட்டு கெடச்சுது… ஆனா சார்.. ஆனா சார்.. ஆனா அது நிலைக்கல சார். தயவு பண்ணுங்க.. நான் சாகிறேன் சார். செத்துட்டு இருக்கேன். தயவு பண்ணுங்க..பாதாளத்துல இப்போ இருட்டு இல்ல சார். அத வெளிச்சம் முழுங்கிடுச்சு..”
என்னிடம் இருந்த ஒன்று அவரிடம் பற்றிக்கொண்டது. “இருப்பா .. அட இரு.. இருன்னு சொல்றேன்ல்ல.. என்ன ஆச்சு.. எங்க இருக்க..”
“சார், நேரமில்ல.. பாதாளத்துல இருட்டு இல்ல. இருட்டு வேணும் சார்… பிச்ச போடுங்க. தயவு பண்ணுங்க. இருட்ட காட்டிக் கொடுங்க… செத்துட்டு இருக்கேன்.. செத்துடுவேன்.. இருட்டு வேணும் இருட்டு வேணு..” என் தொண்டை எரிந்து காற்று அடைத்துக் கொண்டது.
சில வினாடிகள் அமைதியாக இருந்தவர். “வெளிச்சங்றது அடிப்படையில போட்டான்ஸ் தான். போட்டான்ஸ் வெளியேற்றாத பொருட்கள் உலகத்துல இல்லை.” என்றார்.
“சார்… நான் வெளிச்சத்துல.. வெளிச்சத்துல இருந்து தப்பிக்க முடியாதா சார்?” என் குரல் யாரோ போல் கேட்டது. என் கழுத்தை நானே பிடித்துக்கொண்டேன். நெருக்கினேன். இன்னும் சொல்லியாக வேண்டும். பதில் கிடைத்தாக வேண்டும்.
“புலன்கள் இருக்கிற வரைக்கும் முடியாது. புலன்கள் தான் வெளிச்சத்தை உள்வாங்கும் கருவி.”
நான் பேசும் திறனை இழந்திருந்தேன்.
“ஆமா ,நீ எங்க..: என்று அவர் கேக்க ஆரம்பிக்கும் போது நான் துண்டித்து விட்டேன்.
அவர் சொன்னது என் நெஞ்சில் பதிந்து கொண்டது. புலன்கள் தான் புலனுணர்ச்சியின் வாயில். வெளிச்சம் என்பது வெறும் புலனுணர்ச்சியே. என் கண்கள் உள்வாங்கும் இந்த வெளிச்சம் பிரபஞ்சத்தின் தீய வெளிப்பாடு. புலன் இருக்கும் வரை புலனுணர்ச்சி இருக்கும். கண்கள் இருக்கும் வரை வெளிச்சம் இருக்கும். எனக்கு வெளிச்சத்தில் இருந்து விடுதலை வேண்டும். வெளிச்சமற்ற பெருவெளி வேண்டும். இந்த கண்கள் எனக்கு தேவையில்லை. இந்த வெளிச்சமும் எனக்குத் தேவையில்லை. ஒரு கத்தியை எடுத்து என் கண்ணில் வைத்தேன். இனி எல்லாம் இருட்டு என்றிருந்த போதுதான் அந்த சத்தத்தை நான் கேட்டேன். வெளியில் இருந்து வந்த சத்தம். எவனோ என் வீட்டு காம்பவுண்டுக்குள் இருக்கிறான். வீட்டை சுற்றி நோட்டம் விடுகிறான். எனக்குத் தெளிவாகத் தெரிந்தது. உள் சுவற்றின் இருட்டிலிருந்தும் எனக்குத் தெரிந்தது. அலையலையாய்த் தெரிந்தது. நான், “யாரது…” என்று உரக்கக் கேட்டேன். என் உடைந்த குரல் அலைபோல் எழுந்து அமைந்தது.
வெளியில் இருந்த உருவம் உஷாராவது தெரிந்தது. அவசரமாக அது வீட்டுக்குள் வர முயற்சி செய்தது. கதவின் இடுக்குகளில் நெம்பியது. மாடிக்கு சென்று உள்ளே வர வழி இருக்கிறதா என்று பார்த்தது. வீட்டின் பலகீனமான இடம் எது என்று சுற்றிச் சுற்றிப் பார்த்தது. அது இனி வீட்டுக்குள் வந்து விடும். யாரது? சிறுவானியா? வாத்தியாரா? ஏன் வெளிச்சம் ஊடுருவ முயற்சிப்பது போல் உள்ளே வர முறைச்சிக்கிறது. ஆம்.. உள்ளே வரத் துடிப்பது வெளிச்சமே தான். வெளிச்சத்தின் பிரதிநிதி. இருட்டுக்குள் என்ன புதையலா இருக்கிறது? இருட்டே புதையல் தான். வெளிச்சம் கவர்ந்து செல்லும் புதையல். நான் அதை கைவிடுவதாக இல்லை. உள்ளே வருபவன் சாகப் போகிறான். என் கையில்… என் கொலை… நான் செய்யும் முதல் கொலை… அம்மா.. அம்மா.. நான் இடும் முதலும் கடைசியுமான பலி இது..
ஜன்னலை நெம்பி உள்ளே குதித்தவன் வீட்டின் இருள் மூலையில் பதுங்கியிருந்த என்னை பேயைப் பார்ப்பது போல் பார்த்தான். நான் ஆங்காரமான ஓசையுடன் அவன் தலை மீது பாய்ந்தேன். தலையை அப்படியே கிடுக்குப் பிடியாக பிடித்தேன். அவன் தலையில் தீ பற்றியவன் போல் கைகளை உயர்த்தி காற்றில் ஆட்டினான். நான் மேலும் அவன் மீது ஏறி அவன் கழுத்தில் அமர்ந்து என் கால்களை அவன் அக்குள்களுக்குள் விட்டு அவனை செயல் இழக்க செய்தேன். அவன் சமநிலை குலைந்து அப்படியே தரை மீது குப்புற விழுந்தான். முகம் நேராக தரையில் நங்கென்று விழுந்தது. அவன் விழுந்த வேகத்தில் நான் வீட்டின் ஒரு இருள் மூலைக்கு வீசியெறிப்பட்டேன். அவன் உடல் சில வினாடிகள் பதறி அடங்கியது. என்ன நடக்கிறது என்று புரிவதற்குள் எல்லாம் ஆகிவிட்டிருந்தது. நான் வெளிச்சத்தைக் கொன்றிருந்தேன்.
வெளிச்சத்தைக் கொன்றிருந்தேன். இருந்தென்ன.. இப்போது இருட்டையும் பறிகொடுத்திருந்தேன். வெளிச்சம் இருட்டு இப்போது வித்தியாசமில்லாமல் போனது. இருமை குலைந்து போனது. காணும் பொருட்கள் அனைத்தும் அர்த்தம் இழந்திருந்தன. உருவம் இழந்திருந்தன. பொருட்கள் சப்த வடிவம் கொண்டன. சப்தங்கள் பொருள் வடிவமெடுத்தன. எல்லாம் மயங்கிய நிலை. உலகம் அலையடித்தது. காட்சி கொள்வது தவிர வேறு கதி வாய்த்திருக்கவில்லை எனக்கு. அப்படியே கிடந்தேன்.
குறுங்காலமோ நெடுங்காலமோ அப்படியே கிடந்தேன்.
யாரோ வருகிறார்கள். இன்னும் சிலர் வருகிறார்கள். கதவு தகர்க்கப்படுகிறது. இப்போது எல்லோரும் வந்துவிட்டார்கள். வந்த சிலருக்கு அதிர்ச்சி. சிலருக்கு பயம். சிலருக்கு அருவெறுப்பு. சிலர் வெளியே ஓடினர். சிலர் குழிக்குள் இறங்கினர்.
முகம் சிதைந்த அந்த பிணத்தை வெளியே எடுக்கிறார்கள். கூடவே இன்னொரு பிணம். அந்த பிணத்துக்கு இரு கண்களும் கொய்யப்பட்டிருந்தன.
காட்சிக்கு சாட்சியாக நான். நான் மட்டுமேயாக..
