Site icon சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

சந்திரசேகர் கவிதைகள்

1

என் பணி மேசை
மாற்றப்பட்டுக்கொண்டே இருக்கிறது
நிற்கவேண்டிய இடத்தைக்
கண்டடைய வேண்டும் நான்
இப்பூமியில்

கடல் முன்னமர்ந்து
கொந்தளித்துக் கொண்டிருந்தேன்
எனக்கு எதிர்கரையில்
யாரோ அமர்ந்திருந்தார்
நலமா என்றேன்
நலமே என்றார்
இடம் மாறிக் கொள்ள
நீந்த வேண்டியிருக்கிறது
நிறைய தூரம்
காலைக் கூட நனைக்காமல்
கரை எப்படி ஏறுவது

என் பணி மேசை
மாற்றப்படும்போது
கலத்தைக் கடலில் இறக்குவேன்
எதிர்புறமோர்
கலத்தைக் காணும் நாளில்
துடுப்புகளை தூக்கி எறிவேன்


2

நாய்கள் இல்லாத தெருவில்
நான் குடியிருப்பதில்லை

நாய்களின் குரைப்பால்
இரவுகளை நினைவில் கொள்ளுங்கள்
அவை இல்லாத இரவுகள்
ரம்மியமிழந்துவிடுகின்றன
பொருளற்ற
இந்தக் குரைப்பொலிகள்
யாரின் வருகையைக் கூற
துடிக்கின்றன

அழைப்பு மணி இல்லாத
வீட்டிற்கு விருந்தாளிகள்
வருகிறார்கள்
கதவுகள்
தட்டப்படுகின்றன

கோரைப் பற்களைக் காட்டி
இரவுகள் குரைக்கத் துவங்குகையில்
நள்ளிரவில் யாரேனும்
வீடு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்


3

‘தெரியவில்லை’ பதிலாகும்போது

உங்களுக்குத் தெரியவில்லை
‘தெரியவில்லை’
கருணையுடையதென
ஆறுதல் தருவதென

மன்றாடல்கள் கேட்கப்படுமா
மன்னிப்புகள் ஏற்கப்படுமா
மரணமே அமைதியா
சாவை விடவும் வாழ்வு கனமா

நீங்கள் கடவுளிடம் கேட்கிறீர்கள்

தெரியவில்லை
பதிலாகும்போது
ஒரு உரையாடல் முற்றுப்பெறுகிறது
மற்றும்
ஒரு உரையாடலின் முதல் வார்த்தை
உச்சரிக்கப்படுகிறது


4

இரவு வந்ததும்
மூளைக்குள் வெளிச்சம்
பிறந்துவிடுகிறது
நரம்புகள் சோம்பல் முறித்துகொள்கின்றன
திறந்தால் ஓடிவிடும்
சின்ன துயரங்களை
அறைக்குள் பூட்ட
வெடிக்கிறது இரட்டிப்பாக
திறந்து விடலாமென்றால்
மறுக்கிறது
இன்னும் கொஞ்சம்
துயரப்பட்டுக் கொள்ளலாமென

சாவி இல்லாத கதவுகள்
பாதை இல்லாத வீடு
வழிந்தோட முடியாது தேங்கும்
நதி
விடியாத இரவுகள்

வந்து விட்டு போகட்டும்
விடியும் வரை மின்மினிகள்

Exit mobile version