Site icon சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

சுரணை குறைந்த பகலிரவுகள்

வெகுநாட்கள் சிறையில் இருக்கும் ஒரு கைதியாக
வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பிற்குள்ளாக
வந்து போகின்றன
பகல்களும் இரவுகளும்
இதே இடத்தில்
எத்தனையோ முறை
அவை சலித்துத் திரும்பியிருக்கலாம்
அல்லது
ஒரே வேலையை பல வருடங்களாகச் செய்துவரும்
ஒரு தொழிலாளியின்
காய்த்து போன கைகளைப் போல
கருத்துத் தடித்து அவற்றின்
சுரணை குறைந்து போயிருக்கலாம்

நித்தம் சிதறும் இந்நாட்களின்
ஜீவன தாதுக்கள்
காதில் நுழைந்த
கோழி இறகாகக்
குறுகுறுப்பு செய்தபடி
நம்
அறைகளில் அல்லது தாழ்வாரத்தில்
மேயவும் கூடும்

இந்த நாட்களை
கிழவர்களும் கிழவிகளும்
தங்கள் பொக்கை வாயில் போட்டு மென்றபடி
சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்கிறார்கள்

ஒரு கவிஞனோ
அல்லது ஓர் ஓவியனோ
அவற்றைத்
தங்கள் செல்லப் பிராணியைப் போலப்
பழக்குகிறார்கள்

நான் அவற்றை
ஒரு கண்ணாடி ஜாடியில் போட்டு வைக்கிறேன்
என் மகள் அதைத் திறந்து
ஒரு பட்டாம்பூச்சி ஆக்கிப்
பறக்கவிடுகிறாள்
வேறொரு நிலப்பரப்பில்
வேறொரு மகள்
வேறொரு நிறத்தில்
இதே போல்
அவற்றைப் பட்டாம்பூச்சிகளாகப்
பறக்க வைக்கக் கூடும்


வனமெனும் தெருநாய்கள்

ஒரு வனத்தை உருவாக்க நினைப்பவன்
மிகுதியான கற்பனை உடையவன்
அவன்
இது வரை தொட்டிச் செடிகளை மட்டுமே வளர்த்தவனாக
இருக்கக்கூடும்
அல்லது
மாடித் தோட்டத்தில் சில செடிகளையும்
வாழை
மரக்கன்றுகளையும்
வளர்ப்பவனாக இருக்கலாம்

வனம் என்பது
தெரு நாய்களை ஒத்தது
அவை
தானாகத் தேடிப் புணர்ந்து
தன் விருப்பத்திற்கு குட்டிகளை ஈனுவதும்
அதில் ஒன்றிரண்டைத்
தின்பதுமாக இருக்கும்
இது அவனுக்கு தெரியாமல் இருக்கக்கூடும்
நம்மில் பலருக்கும்

வனத்தை உருவாக்குவதற்கு முன்பாக
வேதிப்பொருட்களோடு தங்கிவிட்ட
மண்டையோடுகள் குவிந்திருக்கும் இந்த நிலத்தைச் செப்பனிட வேண்டும்
இந்நிலத்தின் துவாரங்களை அடைத்திருக்கும்
கந்தகச்
சதைகளை அகற்ற வேண்டும்
கல் இடுக்குகளில் தங்கிவிட்ட உலோகப் பட்டைகள்
பொருத்தப்பட்ட எலும்புகளை அகற்ற வேண்டும்
பிறகு
நாம்
செய்ய வேண்டியது
வனத்தை உருவாக்குவதல்ல
வெறுமனே
அந்த இடத்தை வேடிக்கை பார்ப்பது மட்டுமே


Exit mobile version