Site icon சொல்வனம் | இதழ் 317 | 28 ஏப் 2024

நிறையிசை!

மோகனப்ரியா

வீட்டினுள் என்னை விட்டுவிட்டு
நான் மட்டும் வெளியேறிக் கொண்டிருக்கிறேன்
ஒவ்வொரு விடியலுக்கு முன்பும்
பழைய பியானோவின் இசையென நான்
வீடெங்கும் கரகரப்பு குரலில் உலாவலானேன்
பூட்டப்பட்ட வீட்டுக்குள்ளிருந்து
சிறிது நாளில் மாறுபட்ட
இசைத்தொடர்கள் கேட்பதாக
அக்கம்பக்கம் கிசுகிசுக்களாயினர்.
அந்தியில் திரும்பும் என்னை அழைத்தே
ஒருமுறை குறைகூறலாயினர்.
மதியத்தில் உறங்க முடியாமல்
வயோதிகர் ஒருவர் தீராத்தலைவலியெனக்
கீழ்த்தளத்திலிருந்து மேலேறி வந்து
புலம்பிச் சென்றதை நான் ஒளிந்து வேடிக்கை பார்த்து
கள்ளச்சிரிப்பொன்றை சாளரத்திரைக்குப் பரிசளித்தேன்
யாதொரு உணர்வுகளுமின்றி நோக்கிய என்னை
நான் கண்சிமிட்டி வேடிக்கை காட்டலானேன்
காப்புகளிட்டச் சங்கிலி உரச நகரும் நான்
மூலையிலிருக்கும் பியானோவை வாசித்திருக்க
என்னை ஓடிவந்து அணைத்துக் கொண்டாள்
கண்ணாடியில் இரண்டு ‘நான்’களைப் பார்த்து
முறுவலித்தது பியானோ!

Exit mobile version