Site icon சொல்வனம் | இதழ் 318 | 12 மே 2024

இருளின் விசும்பல்கள் – By Night in Chile

மிக சம்பிரதாயமான தொடக்கத்தைக் கொண்டது ரொபெர்த்தோ பொலான்யோ எழுதி ஆங்கிலத்தில் முதலில் மொழியாக்கம் செய்யப்பட்ட குறுநாவலான சீலேவின் இரவு. மரணப்படுக்கையில் கிடக்கும் இறையியலாளரின் பாழ்பட்ட நினைவில் புகுந்து புறப்படும் நிகழ்வுகளின் தொகுப்பாக நாவல் தொடங்குகிறது. ஓபூஸ் தே (Opus Dei) எனும் இறை குழுவின் தூதராக செபாஸ்தியன் உரூதியா லாகிராய் ஐரோப்பா முழுவதும் இடிபாடுகளை உடைய பல தேவாலயங்களுக்குச் செல்கிறார். இறையியல் என்பது ஒரு அலைக்கழிப்பின் சாதனம் மட்டுமே என்பதை உணருகிறார். உரூதியா லாகிராய் முதன்மையாக ஓர் கவிஞர். கவி சம்மேளனத்தின் பலதரப்பட்ட குழுக்களோடான உறவுகளில் முதன்மையான Farewell (கொன்சாலெஸ் லமார்கா) எனும் கவித்தலைவரின் நட்பு புது திறப்புகளை உருவாக்குகிறது. பாப்லோ நெரூடாவின் முக்கியமான கவிதை Farewell. உரூதியாவின் நினைவு மெல்ல இறையியலாளராக கொன்சாலெஸ் லமார்க்கின் தனிப்பட்ட பங்களாவுக்குச் சென்ற வாரயிறுத்திக்குள் நுழைகிறது. ஒரு பெரிய மலைத்தோட்டத்தின் பங்களாவுக்கு ஓர் வெள்ளி இரவன்று செல்கிறார் உரூதியா. மர்மமான பல கலைஞர்கள் கூடும் ஒரு விருந்து வாரயிறுதி. ஒரு பெருங்கவிஞரின் வருகை உள்ளது என்கிறார் கொன்சாலெஸ் லமார்கா. குறைவுபட்ட இறையியலாளரான உரூதியா மிக முக்கியமான இலக்கிய விமர்சனங்களையும் எழுதியுள்ளார். உரூதியாவின் மனம் கவித்துவ நிகழ்வுளைச் சுற்றியே அலைகிறது. மிகவும் கட்டுக்கோப்பான ஆபஸ் டய் குழு முறையில் பயின்றவரான உரூதியாவின் மனம் கவிதையையும் கவிஞர்களின் அக உலகையும் நாடும் இயல்பிலேயே அலைக்கழிக்கின்றது. பங்களாவின் பகட்டையும், போலியான கவிஞர்களின் கூத்தையும் பார்க்கச் சகிக்காத உரூதியா தோட்டத்தில் அலைந்துத் திரிகிறார். கொன்சாலெஸ் போன்ற நில உரிமையாளர்களின் குடியானர்கள் உரூதியாவின் தேவாலைய பாதிரி உடுப்பைப் பார்த்ததும் மிகுந்த மரியாதை கொடுக்கிறார்கள். மனம் முழுவதும் கவி உருவகங்களை நிரப்பித் திரியும் உரோசியாவின் புத்தி சற்றே தடுமாறுகிறது. இறையியலாளர்க்குத் தேவையான கடவுள் மீதான அசைக்க முடியாத நம்பிக்கை இல்லாதவராகவும், கவி உலகின் கீழ்மைகளுக்குள் தனக்கு ஒரு அடையாளம் இருக்கிறது எனும் நம்பிக்கையும் ஒரு சேர அவரை அலைக்கழிக்கிறது. இப்படியாக நிகழ்வுகள் பின்னோக்கிச் செல்லும்போது உரோசியா அலமலர்ந்து போகும் தருணம் அந்த வாரயிறுதியில் வாய்க்கிறது. பங்களாவின் பின்னிரவு கொண்டாட்டத்திலிருந்து துண்டித்துக்கொண்டு மாடியில் அகலமான நிழல் கிடந்த திசையை நோக்கிச் செல்கிறார். அங்கு மலை முகடுக்கு மேலே முழு நிலவுடன் உரையாடி வரும் பாப்லோ நெரூதாவை பார்க்கிறார். அந்த மர்மமான பெரிய நபர் நெரூதா என்பதை உணர்ந்ததும் உரோசியாவின் உள்ளம் ஒருகணம் ஊசலாட்டத்தை மறக்கிறது. பொலான்யோவின் பெருமதிப்புக்கு உரியவரும் பாப்லோ நெரூதா என்பதை நாம் இங்கு நினைவு கூறும்போது உரோசியாவின் ஒரு சாயல் எங்கிருந்து பெறப்பட்டது எனும் குழப்பங்களுக்கு இடமில்லாமல் ஆகிறது. ஒரு ஓநாயின் ஊளையைப் போலல்லாது ஒரு குழந்தையுடன் அளவுளாதலாக மதியுடன் ஓர் புணர்ச்சி நடக்கும் வேளையில் பின்பக்கம் உரசலுடன் கொன்சாலெஸ் லமார்க் உரோசியாவை இடித்துக்கொண்டு நிற்கிறார். அவரது முயற்சியில் தெரிந்த விகல்பத்தை மிகக்கூர்மையாக அலசும் அதே நேரத்தில் தனது முன்னே நின்றிருக்கும் கவியின் சொற்களுக்குத் தன் செவிகளைத் தீட்டி நிற்கிறார் உரோசியா. நாவலின் மிகவும் சிறப்பான இடமாக இது உருவாகியுள்ளது.

சண்டியாகோவில் கொன்சாலெஸ் லமார்க்குடனான உரையாடல் இலக்கிய உலகில் ஒரு கவிஞராக அவரது அடையாளத்தைப் பின்னுக்குத் தள்ளி விமர்சகராக ஓர் இடத்தை உரோசியாவுக்கு நிறுவுகிறது. ஐடாசா எனும் புனைப்பெயரில் கவிஞராகவும், உரோசியா எனும் பெயரில் விமர்சகராகவும் புனைந்து கொண்டு , இறையியலாளர் எனும் அடையாளத்தை உடும்பாகப் பிடித்துக்கொண்டு வாழ்கிறார். தேவாலயத்தின் நடவடிக்கைகளுக்கு நேரடியான அர்த்தம் எதுவும் அமைவதில்லை. மார்க்கஸியத் தலைவர்கள், சர்வாதிகாரத்தை நோக்கித் தள்ளும் அரசியல்வாதிகள் என குழப்பமான காலகட்டத்தில் இறைக்கூடங்கள் தங்கள் சேவைகளைச் சரிவர ஆற்றுவதில்லை எனும் குற்ற உணர்வு ஒரு கட்டத்தில் இருந்தாலும் உரோசியாவின் இறை மையம் கூறும் வீணான வேலைகளைச் செய்வதில் திருப்தியுறுகிறான். ஐரோப்பா முழுவதும் அலைந்து பல தேவாலயங்களில் இருக்கும் பாதிரிகளுக்கு வல்லூறு வளர்ப்பு பற்றி வகுப்புகள் எடுக்கிறான். அவை தேவாலயங்களில் எச்சமிட வரும் புறவுகளை வேட்டையாடப்பயிற்சி பெறுகின்றன. இப்படிப்பட்ட உருவகங்களைத் தரும்போது பொலான்யோவின் புனைவு மாந்திரீக எதார்த்ததின் சாயலைப் பெறுகிறது. புறவுகளின் எச்சங்கள் நம்பிக்கையாளர்களை தேவாலயங்களுக்குள் வருவதைத் தடுக்கிறது எனும் குற்றச்சாட்டின் பேரில் வல்லூறுகளை பாதிரியார்கள் வளர்க்கிறார்கள். வல்லூறுகளின் தூதுவராக வரும் உராசியா சாத்வீகமான புறாக்களை தேவாலயத்தின் பொந்துகளிலிருந்து துரத்தும் காட்சி தென் அமெரிக்க நாட்டின் சர்வாதிகார ஆட்சிக்கு மிகக்கச்சிதமான உருவகமாக அமைந்திருக்கிறது.

வாழ்நாள் முழுவதும் உராசியா தனது பாதிரி உடுப்பைக் கைவிடவில்லை. வாழ்நாளில் கடைசியில் நம்பிக்கை இழப்பவனாக மாறும் கட்டத்திலும் உடுப்பை மட்டும் பிடிப்பாகக் கொண்டிருக்கிறான். அது அவனுக்கு ஒரு கவசம். இரண்டாம் உலகப்போரில் டான் சால்வடார் என அறிமுகமாகும் நண்பர் கூறும் ஓவியரின் கதை இலக்கிய விமர்சனம் மீது மேலும் அதிக பிடிப்பை உரோசியாக்கு உண்டாக்குகிறது. அவரது நினைவு மேலும் பின்னுக்குச் செல்கிறது. அங்கே ஃபேர்வெல் எனும் கொன்சாலெஸ் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை நிஜ உலகிலிருந்து துண்டித்துக்கொண்டு தனக்கான உலகை உருவாக்கி வருகிறார். இலக்கிய உலகில் உராசியாவின் உயிர்ப்புக்கரமாக இருந்தவர் மெல்ல தன்வசம் இழக்கிறார். ஒருவிதத்தில் சீலே நாட்டு அரசியல் உருவாக்கும் கலாச்சார சீரழிவுக்கான சமநிலைக்குலைவை அது தொடங்கி வைக்கிறது. வரலாற்று நாயகர்களின் காலகட்டத்தின் முடிவில் இருப்பதை கொன்சாலெஸ் ஏற்றுக்கொள்ளவில்லை. அவரது சிந்தனை முழுவதும் வரலாறு முழுவதும் நிலவும் நாயகர்களின் தீரச் செயல்களால் நிரம்பியுள்ளது. அப்படியான உலகின் நியாயங்கள் அழிந்து வருவதற்கான முதன்மையான உதாரணமாக தனது நிலத்தின் சர்வாதிகார அமைப்புகள் மாறியிருப்பதை அவர் உணரவில்லை. ஒரு பெரிய அழிவை நோக்கி மக்கள் மனமுவந்து செல்லும் காட்சியைக் காணத் தவறும் பிரக்ஞை இழந்தவராக ஃபேர்வல் எனும் கொன்சாலெஸ் தோன்றுகிறது.

உசாரியாவுக்கு அப்படியான அழிவுச்சித்திரத்தின் கணிப்பு எப்படி சாத்தியமானது? ஒரு தீவிர விமர்சகராக இருப்பதால் புது கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் தொடர்ந்து வருவது ஒருவிதத்தில் இதைச் சாத்தியமாக்கியுள்ளது. மேலும், வரலாற்றிலிருந்து ஏதேனும் கற்றுக்கொள்ள முடியும் என்றால் அது வரலாற்றின் அபத்தங்களை ஆழமாக அறிவதன் மூலமே சாத்தியம் என்பதை உணர்ந்தவராக கிரேக்க நாடகங்களையும், புராணங்களையும் தொடர்ந்து வாசிக்கிறார். ஒருவிதத்தில் உரோசியாவுக்கு இது ஒரு பேயாடி அனுபவமாக அமைந்துள்ளது. தனது நினைவு நழுவிச் சென்று ஆலண்டே அரசாட்சியை எதிர்கொண்ட விதத்தை சென்று அடைகிறது.

காட்சி பின்னகர்ந்து ஹோமரிலிருந்து துவங்கி ழெனோ, ஏதேன் நகரின் சோலான், சாஃபோ என கிரேக்க நாடகங்களின் நாயகர்களும் நாயகிகளும் வாசிப்பில் துலங்கி வரும் நேரத்தில் பாப்லோ நெரூதாவுக்கு நோபல் பரிசும், ஃபிடல் காஸ்திரோவுக்கான பெருகிய ஆதரவும், ஆனண்டே ஆட்சியில் தீவிரவாதிகளின் ஆட்டமும் பல்கிப் பெருகிய நாட்கள் என கலவையான நிகவுகளில் உராசியாவின் நினைவு மூழ்குகிறது. சீலே நாட்டுக்காக அவர் தேவாலயத்தில் தொழுத கையோடு கனவில் மூழ்கிக்கிடப்பதற்கு நினைவில் ஸ்மரணமற்றுக் கிடப்பதுக்குமான இடைவெளியை நினைத்து ஏங்குகிறார். இப்போது சாகும் தருவாயில் தனது சிறு வயது அலைச்சல்கள் அந்தந்த நிமிட பள்ளம் மட்டுமேவா எனும் கேள்வி எழும்பாமல் இல்லை.

அதுவரை நாம் ஒரு அரைமயக்க கனவு நிலையில் இருந்தோம். திடீரென உலுக்கப்பட்டு நினைவுக்குத் திரும்பும்போது அதுவரை இருந்தது கனவு நிலையா, அல்லது இதுதான் கனவா எனும் குழப்பத்தில் ஆழ்கிறோம். எதுவும் நிகழாதது போல கனவின் நியமனங்களுக்கு ஏற்ப எதையும் கேள்வி கேட்காது வாழ்ந்து சாகிறோம். கனவுவாசி எதையும் மறுப்பதில்லை. நகர்வுகள் வேறொன்றாகத் தெரிகின்றன. கொம்புமான் போன்ற அசைவு, அல்லது புலியின் கனவில் வரும் கொம்புமானின் அசைவு. நிழல்களற்றவர்கள் போன்ற அசைவோடு அதைப்பற்றிய அறிதல் இல்லாத அதிர்ச்சியற்ற ஒழுங்கு. நாம் பேசுகிறோம் உண்கிறோம் எனும் உணர்ச்சியற்றவர்களாக இருக்க முயல்கிறோம். அப்போதுதான் நெரூதா இறந்துவிட்டதை ஓரிரு அறிந்துகொள்கிறேன்.

ஃபேர்வெல் அறிமுகப்படுத்தும் ரேஃப் மற்றும் ஏடா எனும் இரு கலாச்சார காவலர்கள் நூதன அறிவுப்பரவல் வழிமுறையை உரோசியோவுக்கு அறிமுகப்படுத்துவதோடு சீலேவின் புது அத்தியாயம் தொடங்குகிறது. முழுவதும் கட்டுப்பாடற்ற அறிவியக்கமும், கட்டுப்பாடுள்ள கலாச்சார நிகழ்வுகளும் முயங்கும் ஒரு வெளியாக அரசியல் இயக்கத்தின் மூட கொள்கைகளும், நிச்சயமற்ற எதிர்காலத்தை நோக்கிய மரணப்பயணமாக கவிஞர்களின் பயணமும் அமைந்திருக்கிறது. பத்து வகுப்புகளில் சோஷியலிசக் கொள்கைகளை ஜெனரல் பினோசட், ஜெனரல் லேய், ஜெனரல் மொண்டோசா எனும் சீலேவின் அதிகார மட்டத்தில் இருப்பவர்களுக்கு துரித வகுப்பு நடத்தும் பொறுப்பு உரோசியாவை வந்தடைகிறது. வெளி உலகம் நம்பாவிட்டாலும் தீவிர இடதுசாரியினரான கலைஞர்களின் குரல்வளையை நசுக்கும் கைகளை அரவணைக்கத் துடிப்பவர்களாகக் காட்டிக்கொள்வது மக்களிடையே தங்களை ஏற்றுக்கொள்ள வைக்கும் செயல்பாடு என்பதை அதிகார வர்க்கம் அறியத்தொடங்கிய காலகட்டம். அவர்களுக்கு சொல்லிக்கொடுப்பது வீணான காரியம் என்பதை அறிந்திருந்தும் மறுக்க இயலாத நிலையில் பல கொள்கை புத்தகங்களை பத்து வகுப்புகளில் சொல்லிக்கொடுக்கிறார். தானும் எதுவும் கற்றுக்கொள்ளவில்லை, அவர்களாகவும் எதுவும் அறிந்துகொள்ளவில்லை என்றாலும் மார்க்ஸியம் என்றால் மனிதத்துவத்தின் ஒரு பகுதி எனும் புரிதலை அவர்களுக்குக் கடத்திவிட்டதாக நினைத்துக்கொள்கிறார். இது ஒரு மோசமான திருஷ்டாந்தமாக அமையும் என்பதை உணர்ந்தும், தனது கவி உலக நண்பர்களால் கேலி செய்யப்படுவோம் என தெரிந்தும் வகுப்புகளை நடத்துவதற்கு எதற்காக ஒத்துக்கொண்டோம் என்பதை நினைத்து அவர் குழம்பிப்போகிறார். அவர்களது சொல்லுக்கு எதிர்ப்பாக எதையும் சொல்ல முடியாது என்பதையும் உணர்ந்ததும் ஒருவித கையறு நிலையில் நிற்கிறார். ஜெனரல் பினோசெட்டும் இந்த ரகசிய வகுப்புகளுக்கு வந்தவரில் ஒருவர் என ஃபேர்வெல்லுக்குத் தெரிந்ததும் அவர் மீண்டும் மீண்டும் ஜெனரலின் தனித்துவத்தை உரோசியாவிடம் விசாரிக்கிறார். தடுமாற்றத்தை மட்டுமே அவரால் பதிலாகத் தரமுடிந்தது. துருவித் துருவிக்கேட்கும்போது ஒரு விஷயம் அவருக்கு புரிகிறது. முன்னவர்களுக்கு இல்லாத வாசிப்பு அனுபவம் இவருக்கு இருப்பதாக நம்புவதோடு அதை பிறருக்கும் கடத்த முயல்பவராகக் காட்டிக்கொள்ளத்துடிக்கும் ஒரு தலைவராக அவர் தோன்றுகிறார். ஏமாற்றும் கலையின் உச்சகட்டத்தை சீலே அடைந்துவிட்டது. நாடு எதிர்காலமற்ற பாதையில் செல்லும் பயணத்தில் உள்ளது. உச்சகட்ட பயம், அதிகாரத்தின் பிடியில் சிக்கியிருக்கும் ஆட்சியாளர்கள் மக்களிடையே பரப்ப நினைத்த உச்சகட்ட பயம். ஒரு தீவிரமான விமர்சகரான உரோசியாவுக்கு இதுபோன்ற வகுப்புகள் எடுப்பது என்பது மரணத்துக்கு ஒப்பானது. இதை செய்ய வேண்டிய அவசியம் தான் என்ன என ஃபேர்வெல் கேட்டபோது அது மிக அவசியம் என ஆவேசத்துடன் சொல்ல முடிந்தது. யாருக்கும் கவலை இல்லை. எல்லாருக்கும் ஆட்சி அதிகாரத்தில் சிறு துளியை ஸ்பரிசிக்க வேண்டிய தேவை இருக்கிறது. சில சமயங்களில் இரவு நேர சீலே நகரை நோக்கியபடி ஃபாஸிசத்துக்கும், எதிர்ப்புசக்திக்கு என்ன வேறுபாடு என யோசிக்கும் வேளையில் இரண்டுமே வெறும் வார்த்தைகள் மட்டுமே எனும் முடிபுக்கு உரோசியா வருவதாகச் சொல்வதோடு தனக்குள் இருக்கும் விமர்சகன், கலகக்கார கவிஞன் இறந்துவிட்டதை உணரும் தருணமது.

சண்டியாகோ நகரில் மிச்சமிருக்கும் கலை இலக்கிய சுதந்திரத்தைச் சுவாசிக்க சென்று சுய சமாதானத்துக்காக சில புத்தகங்களை வெளியிடத்தொடங்கும் நினைவை மீட்டத் தொடங்குகிறது. சீழ்படிந்த புண்ணாக ஏற்கனவே பாழாகிவிட்ட நிலையில் இனி திரும்ப முடியாத இடத்துக்குச் சென்று விட்டதால் ஆழம் எவ்வளவு எனப்பார்க்கும் வேலை மட்டும் மிச்சம் இருப்பதாக எண்ணுகிறார். டால்ஸ்டாய், பவுண்ட், விட்மேன், போர்ஹெஸ், ஹோமர் என அவரது மனம் கொள்ளும் வேகத்தை தான் மட்டுமே உணரும் அவலத்தை எண்ணி வருந்துகிறார். யாருக்கும் பொறுமையோ, ஆவலோ இல்லை. குறுக்கு வழியில் விடுதலையை அடைய எண்ணும் கூட்டமாக அவருக்கு இளைஞர்கள் தெரியத்தொடங்குகிறார்கள். எல்லாருக்கும் எதைப்பற்றியேனும் பேசியபடி இருக்க வேண்டிய தேவை இருக்கிறது. அதை நம்புகிறார்களா, உண்மை இருக்கிறதா எனும் சஞ்சாரம் இல்லா விடுதலை நிலை. அப்படி எல்லாரும் கூடிக்களிக்கும் இடங்கள் நிறைய மூடப்பட்டும் முடக்கப்பட்டும் இருந்ததால் தங்கள் போலி ஆர்வங்களையும், தேடல்களையும் தாங்களே சொறிந்துகொள்ள இடத்தைத் தேடி அலைந்தனர் இளைஞர்கள். அவர்களுக்குப் புகலிடம் மரியா கானல்ஸ் எனும் உயர்தட்டு எழுத்தாளரின் கேளிக்கை இரவுகள். சண்டியாகோ ஊரின் எல்லையில் இருந்த மூன்று தளத்தைக் கொண்ட வீட்டில் மேல் தளத்தில் கலைஞர்கள் அறிவுசார் விவாதங்கள் ஈடுபடத்தொடங்கினர். போலி எழுத்தாளரான அவரால் பிற போலி கலைஞர்கள் உடனடியாகக் கண்டுகொள்ளும் திறமை இருந்ததை உரோசியா ரசிக்கிறார். ஆனால் எல்லாருக்கும் அவரைப் பிடிக்கும்.

மூன்றாம் அடுக்கில் நெரூதாவும், பவுண்டும் விவாதிக்கப்படும்போது அவரது கணவனான ஜேம்ஸ் தாம்ஸம் அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களை வீட்டின் கீழ்தளத்தில் வன்முறை மூலம் விசாரணை செய்துவருவார். கலைஞர்களுக்கு வேடம் தேவையான ஒன்றாகிறது; அரசு இயக்கத்தின் கிடுக்குப்பிடிகளை சந்திக்க, சமாளிக்க. பின்னர் வேறொரு வழக்குக்காக கணவனை அரசே காட்டிக்கொடுக்க மரியா கானல்ஸ் இருந்தும் இல்லாமலாகிறாள். அவரது விருந்தில் கூட நின்று விவாதித்தும் குடித்தும் களித்தவர்கள் இன்று அவரை அறியாதவர்களானார்கள். நேரில் பார்த்தபோதும் இமைக்காமல் பொய் கூறினர். சீலேவின் சீரழிவு தரைதளத்தை தட்டிப்பார்த்து மேலும் நோண்டிச் சென்றபடி இருக்கிறது. எங்கும் உண்மை இல்லை, புறவைத் துரத்தி அடிக்க பயிற்சி கொடுக்கும் வல்லூறுகளாக அரசும், போலி கலைஞர்களும் இருக்கிறார்கள். கலையும், உண்மையும் வேட்டையாடப்படுகிறது.

எல்லாரும் சேர்ந்து ஒரு யூதாஸின் மரத்தை வளர்த்திருக்கிறார்கள் என உரோசியாவுக்குத் தோன்றுகிறது. மறைந்த ஃபேர்வெல், போர்ஹே, பெரூதா, பவுண்ட், ஹோமர், சாஃபோ கட்டிவைத்த மரம், யூதாஸ் தாங்கொண்ணா பச்சாதாபத்தோடு தொங்கிய மரமாக ஆனது. அதற்கு பயத்தாலும், அக்கறையின்மையாலும், கலங்கத்தாலும் நீரூற்றி விருட்சமாக ஆக்கிவைத்துள்ளனர்.

ஒரு மதியம் நான் தேநீர் குடித்தபின் பாடிக்கொண்டிருந்தேன். யூதாஸ் மரம். என்ன அர்த்தம் கொடுக்கிறது: அது சீலேவே தான். முழு நாடும் யூதாஸ் மரமாக ஆகி நிற்கிறது. இலைகளற்று, இறப்பின் களையில், இருப்பினும் 40 இன்சுகள் வளர்ந்த புழுக்கள் நெளியும் கருப்பு நிற நிலத்தில் ஆழமாக வேரூன்றியிருக்கிறது.

இது இப்படித்தான் முடியும் எனத் தெரிந்தவர்களும் அரசுக்கு பயந்து வாய் மூடி இருந்துவிட்டனர். பின்னர் ஒரு நாள் மரியாவின் பங்களாவுக்கு உரோசியோ செல்கிறார். பழுப்பேறிய சுவர்கள், கனத்த திரை சீலைகள் தொங்கி சாளரங்களை மூடியிருந்தன, தோட்டத்தின் பாதையும், கதவுகளும் அடைத்துக்கிடந்தன. ஆம், இப்படித்தான் இலக்கியம் எங்கும் வளர்கிறது – பயத்துடன், கனவுகளற்று, புழுக்கள் நீண்ட மண்ணின் நீரை உண்டு, இருளில் விசும்பல்களாக.

Exit mobile version