Site icon சொல்வனம் | இதழ் 317 | 28 ஏப் 2024

"என் பெயர்”

ரோஜாவை என்ன சொல்லி அழைத்தால் என்ன? ரோஜா ரோஜாதானே?” எனும் வாதம் மனிதர்களுக்கான பெயர்களில் பொருந்தாது. ஏனெனில் ரோஜாவுக்குத் தெரியாது தான் ரோஜா என. அல்லவா? ரோஜாவுக்கென, மனிதன் வகுத்த, இலக்கணங்களுக்குள் தான் பொருந்த வேண்டும் எனும் கட்டாயமும் ரோஜாவிற்கு இல்லை.
முன்பெல்லாம், குழந்தைகளுக்குப் பெயர் இடுகையில், கடவுளர்கள் பெயரையோ, பெரும் தலைவர்கள் பெயரையோ, இயற்கை பொருட்கள் பெயரையோ வைப்பது வழக்கம்.  அதிலிருந்து தமக்கான குணத்தை குழந்தைகள் பெறுவார்கள் எனும் நம்பிக்கையே இதன் காரணம்.
நாம் என்னவென்று அழைக்கப்படுகிறோமோ அது நம்மை வடிவமைப்பதில் பெரும் பங்காற்றுகிறது.
Pelham-ன் சிறு ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றினைப் படிக்க நேர்ந்த்து. தலைப்பு, “Why Susie sells Seashells by the Seashore”. ஒருவரின் பெயருக்கும், அவரின் தொழில், இருப்பிடம், துணை, ஆகியவற்றின் தேர்வுக்கும் உள்ள தொடர்பே இந்த ஆராய்ச்சிக் கட்டுரையின் நோக்கம்.
இந்த அமெரிக்கரின் கட்டுரையில், ஜியார்ஜியா எனும் பெயர் கொண்டவர்கள், எதேனும் ஒரு சமயத்தில் ஜியார்ஜியா மாநிலத்திற்கு குடிபோகும் விருப்பைக் கொண்டவராகவே இருக்கிறார்கள். லூயிஸ் எனும் நபர் லூசியானா மாகாணத்திற்குச் செல்ல விரும்புவதைப் போல என நிறைய புள்ளி விவரங்களை அடுக்குகிறார். அப்படியான விருப்பை “Implicit Egotism” என்கிறார். அதாவது ”உள்ளார்ந்த தற்பெருமை”. ’என்னை எனக்குப் பிடிக்கும், என் சாயல் கொண்ட எதையுமே எனக்குப் பிடிக்கும்” எனும் மனோபாவம் அது என்கிறார்.
ஒவ்வொருவருமே, தம்மைப் போன்றவர்களையே அதிகம் விரும்புவோம். எதேனும் ஒற்றுமை இருப்பவர்களையே மனம் நாடும் என்பது உளவியல் வல்லுனர்களின் கருத்து.  இதை ஒற்றுமையாக இருக்கும் தம்பதியரிடையே காணலாம். வயதாக ஆக ஒற்றுமை கொண்ட இருவரும் ஒரே சாயல் கொண்டவர்களாக மாறுவதாக நாம் சொல்வதையே, ஒற்றுமை கொள்வதற்கே இந்த ஒரே சாயல் ஈர்ப்பாக இருக்கிறது என்பதே உளவியலாளர்களின் கூற்று.
நம்மைப் போன்றவர்களையே நாம் விரும்பினாலும், அவர்கள் கூட்டத்தில் இருந்து கொண்டு, நான் கொஞ்சம் வேறானவன்/ள் எனச் சொல்வதும்  ஒரு வகை மனவிழைவு. இது ஏன்? இதற்கும் உளவியல் காரணம் உண்டு. என்னைப் போன்றே இருக்கும் கூட்டத்தினுள் நான் வித்தியாசமானவள்/ன் என்பது நம் திறமையை விற்க நாமே ஏற்படுத்திக் கொள்ளும் ஒரு வாய்ப்பு. இருக்கிற கூட்டத்தினுள், நாம் திறமையானவர் எனக் காட்டிக் கொண்டால் மட்டுமே நமக்கான வாய்ப்புகள் வந்து சேரும். அல்லவா?
நமது கூட்டம் நம்மைப் போல இருப்பதே நமக்குப் பாதுகாப்பு. அதே சமயம், அவர்களில் இருந்து நான் கொஞ்சம் வெளித் தெரிபவனாக காட்டிக்கொள்ள, வித்தியாசமானவன் என காட்டிக்கொள்ளக் காரணம் எனக்கான வாய்ப்பைக் கவர.

குழந்தைகளுக்குப் பெயர் வைக்கையில் உலகளவில் பிரபலமான முதல் எழுத்து “A”. காரணம், தினம் புழங்கும் பள்ளி வருகைப் பதிவேட்டிலும், எந்த ஒரு நேர்முகத் தேர்விலும், அகர வரிசைப்படியே அழைக்கப்படுகிறார்கள். முதலில் அழைக்கப்படும் நபர், மற்றெவரைக் காட்டிலும், முன்னனுபவம் பெற்ற நண்பரின் அனுபவ ஆலோசனையோ, எதுவுமே இல்லாமல், புதிதாக ஒரு இடர் அல்லது வாய்ப்பைச் சந்திக்கிறார். முன் அனுபவம் இல்லாமல் அதைச் சந்திக்க நேரும் வாய்ப்பு தொடர்வதன் காரணமாகவே, அவர் வலிமை பெறுகிறார். இது அவரை மற்றவரை விட வேகமாக முன்னெடுத்துச் செல்கிறது.
முன்பெல்லாம் கிராமங்களில் ‘பொட்டல்’லேர்ந்து ஆட்கள் வந்திருக்கிறார்கள்” எனும் தகவல் சொன்னால் போதும். அந்த ஊரில் இருந்து ஆட்கள் வந்திருக்கிறார்கள். இன்ன மாதத்தில் வந்திருப்பதால், விவசாயத்திற்கு மடை திறந்து விடச்சொல்லி கேட்க வந்திருக்கிறார்கள் என அனைத்தும் புரிந்துவிடும். ஏனெனில் அப்போது அநேகரும், ஊரை பிரதிநிதித்துவப்படுத்தினர். பின்னிட்டு, ஊர் பெயர் போதாது. குடும்பப் பெயர் சொன்னால் விளங்குவதாக இருந்தது. இப்போது குடும்பப்பெயரை விட சொந்தப்பெயரே அடையாளத்திற்குப் பயனாகிறது. அதற்கு முகவரியாகவே குடும்பப் பெயர். இதிலும், பெண்களிடம் செய்த கருத்துக்கணிப்பில், அநேக பெண்கள் தமது குடும்பப்பெயரை விட(Surname) தமது சொந்தப் பெயரையே விரும்புகின்றனராம். காரணம், அதில் மட்டுமே ‘அவர்கள்’ இருப்பதால். குடும்பப்பெயர் என்பது ஆணின் வழி மட்டுமே வருவதே இதற்குக் காரணம்.
ர்ப்பக்கம் போனால், பெயர் என்ன எனக் கேட்பார்கள். அதன் பொருள் ’நீ என்ன சாதி?’ என்பதே. பெயரை வைத்து சாதி அறிய முடியுமா? ஆம். முன்பு முடியும்.  ஒருவரின் பெயரை வைத்து அநேகமாக அவர் எந்த மதம் என்பதை அறிந்து கொண்டுவிடலாம். இந்துக்களில் அவர் தெய்வம் எது என்பதையும், அவரின் பாட்டன், முப்பாட்டன் பெயரைக் கேட்பதன் மூலம், அவரின் சாதி, இனம் என அனைத்தையுமே அறிந்து கொள்ளலாம்.
ஆனால், இப்போது, நம் ஆட்கள் தாம் எவரை உசத்தி என நினைக்கிறார்களோ அந்தக் குழுவின், இனத்தின், சாதியின் பெயர்களைத் தம் குழந்தைகளுக்குச் சூட்டுவதன் மூலம், தாமும் உயர்ந்தவரே எனக் காட்டும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள். நாமுமே எந்த ஊரில் இருக்கிறோமோ அந்த ஊரின் பெயரோடு நம் பெயரை மெர்ஜ் செய்யும் முயற்சியாக, இந்திய சந்தியா, அமெரிக்காவில் “சாண்டி’ ஆவதும், வெள்ளைகார டேவிட் இந்தியாவில் “தாவீது” ஆவதும், கூட்டத்துடன் இணையவே.
அப்படி — கூட்டத்துடன் இணைவது தன்முனைப்பாகச் செய்யப்படுகிறதா? அல்லது மற்றவர் ஒதுக்குவதால், ஒடுக்குவதால், அவர்களை ‘போலச் செய்யும்’ (இமிடேட்) முயற்சியா என்பது மற்றவர் செய்யும் ஆதிக்கத்தையும், இவரது சுருங்கும் குணத்தையும் அடிப்படையாகக் கொண்டது. அப்படி, அடுத்தவர் ஆதிக்கத்தினாலோ, தம் சுருங்கும் மனதினாலோ ஒருவர் செய்வாராயின் அவர் இரக்கத்திற்குரியவர். அல்லவா?
அவர் அப்படி மற்றவர் பெயரை வைப்பது தவறில்லைதான். ஆனால், அப்படி அடுத்த குழுவின் பெயரை தம் குழந்தைகளுக்கு சூட்டுபவரின் மன வலியை மற்றவர் உணர்வதே இல்லை. இங்கும் அப்படிப் பெயர் வைப்பவர், மற்றவர்களுடன் தாமும் இணையவே வலிந்து அப்படிப் பெயர் வைக்கிறார். இது இயற்கையான மனநிலையில் இருந்து மாறான ஒன்றாக வலிந்து அவர்களுக்கு இந்தச் சமூகம் அளித்த பரிசு. அதாவது, ’நீங்கள் வேறானவர்கள் நாங்கள் உங்களுடன் இணைய மாட்டோம் என மற்றவர்கள் சொல்கையில்’, ‘இல்லை, நாங்கள் உங்களைப் போலவே” என நடிக்கும் நாடகமாகவே இது நிகழ்கிறது. இந்த இயற்கைக்கு மாறான நாடகத்தில் அவர்கள் தோற்றுத்தான் போகிறார்கள்.
இதையே அம்பேத்கர், இந்து மதப் பெயர் வைப்பதாலேயே ஒருவரின் சாதியை அறிய முடிகிறது என்பதால், இந்து மதம் அல்லாத பெயரையோ, புத்த மதப் பெயர்களையோ வைப்பதன் மூலம் சாதி இழிவு எனும், இக்களை களையப்படலாம் என்கிறார்.

   “பெயர் என்பது தாழ்த்தப்பட்டவர்களின் வாழ்க்கை நிலையில் ஒரு புரட்சியையே உண்டாக்க முடியும். ஆனால் அந்தப் பெயரானது இந்து மத கோட்பாடுகளுக்கு வெளியே உள்ளதும், இந்து மத்த்தினால் களங்கப்படுத்தி தாழ்வடையச் செய்ய முடியாததுமான ஒரு சமூகக் குழுவின் பெயராக இருக்க வேண்டும், அந்தப் பெயர் தீண்டப்படாதவர் மத மாற்றத்தை ஏற்றுக் கொண்டால் மட்டுமே அவர்களுடைய சொத்தாக இருக்க முடியும்” என்கிறார். (டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு – தொகுதி10, பக்கம் எண் 468-469)

னிப்பட்ட நபர்களின் பெயர் இருக்கட்டும். ஒரு இனத்தையே நாம் அப்படி அழைக்கிறோம். இழிவாக அழைக்கிறோம். அதை நாமும் பெரிதாக எடுக்கவில்லை. அவர்களும் உணரவில்லை. “தாழ்த்தப்பட்டவர்’ என ஒரு குழுவை அழைப்பதன் மூலம், உண்மையிலேயே அவர்கள் தம்மை மற்றவர்கள் தாழ்த்துகிறார்கள் எனும் ஆழ்மனப் பதிவையும், தாழ்த்தாவிட்டாலும் கூட, ஏற்கனவே பதிந்த மனப்பதிவின் காரணமாக தயக்கத்துடன் நடக்கும் மனநிலையையே பெறுகிறார்கள் என்றே தோன்றுகிறது.
இதை இன அழைப்பில் இருந்து துவங்கலாம்.
முன்பு காந்தியடிகள், ”தாழ்த்தப்பட்டவர்கள் என்பவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் அல்லர், தாழ்த்திக் கொண்டவர்கள்” என்றும், ”அல்ல” என்றும் உள்ள வாதங்களை விடுத்து, அதனால், தாழ்த்தப்பட்டவர்கள், தாழ்த்திக்கொண்டவர்கள், தீண்டாதார், தீண்டப்படாதார், தீண்டத்தகாதார் எனச் சொல்வதை விட ’ஹரிஜன்’ எனும் பெயரே நியாயமானது எனச்சொல்லி அவர்களுக்கு ‘ஹரிஜன்’ எனப்பெயரிட்டாராம்.
உண்மைதான். அவர்கள் தாழ்த்திக் கொண்டார்களா, தாழ்த்தப்பட்டார்களா எனும் கேள்வி இரண்டிலுமே உண்மை இருக்கிறதுதான். ஆனால் அதில் எதைச் சொன்னாலும், அது அவர்களின் மனதில் பதிந்து அதற்கேற்றார்போல நடந்து கொள்ள ஆரம்பிப்பார்கள் என்பதும் நிஜமே.
மக்களுக்கிடையே உள்ள வேறுபாடுகளில் எது சாதி? எது இனம் என்பதில் நமக்குள் இன்னமும் குழப்பம்  நீடிக்கிறது.
இனம் என்றால் என்ன? ஒரு கூட்டம். தன் கூட்டத்தின் தேவைகளை தமக்குள்ளாகவே எந்த கூட்டம் தீர்த்துக் கொள்கிறதோ அந்தக் கூட்டமே இனம். அதாவது, ஒரு கூட்டத்தின் அடிப்படைத் தேவைகளுக்காக வேறொருவரிடம் உதவி பெறத் தேவை இல்லாத குழு.
தமக்குள்ளாகவே, உணவு, உடை, உறைவிடம் இவற்றிற்கு ஏற்பாடு செய்து கொள்ளும்கூட்டம். தமக்கென சிலபல சரி தவறுகள். தமக்கென தலைமை என தன்னிறைவு பெற்ற கூட்டமே இனம் ஆகும்.
சாதி? அதே கூட்டத்தில், தமக்குள் இன்ன வேலைகளைச் செய்யமட்டும் எனப் பிரித்துக் கொண்டு, பின் அதை மட்டுமே கையாண்டு, அல்லது அந்தத் தொழிலை மட்டுமே கையாள கட்டாயப்படுத்தப்பட்டு, அதனாலேயே சில குணங்களைப் பெற்று, அல்லது பெற்றதாக கருதப்பட்டு… இருக்கும் பின்னங்களே சாதி.
தேவை இல்லை எனில் சாதியை ஒழிக்க இயலும். ஆனால் இனத்தை?
என் கூட்டத்தில் எனக்குச் சமமாக ஆனால் வேறு தொழில் செய்பவன் வேறு சாதிக்காரன் எனில், என் கூட்டமே அல்லாமல், வேறெங்கோ, என் கூட்டம் போலவே தம்கூட்டத்துடன் வாழும் ஒரு கூட்டத்தில் இருந்து ஆட்களை, இவர்கள் ’தாழ்த்தப்ப்பட்டவர்கள்’ எனக் குறிப்பிட்டு, அவர்களுக்கு கல்வி எனும் பெயரில் என் சரி தவறுகளை போதிப்பது நியாயம்தானா?
இதனாலேயே, சுருங்கிப்போய் தமது பெயர்களை வேறாக அறிவித்துக்கொள்வதும் நடக்கிறது.
’சாமார்கள்’ பலர் தம்மை ’கோரில்’, ’அகர்வால்’, ’துச்ய’, ’ஜெய்ஸ்வார்’ என்று மாற்றி அழைத்துக் கொள்கிறார்கள். ’ரவிதாஸ்கள்’ தம்மை ’ஜாதவர்கள்’ எனவும், அழைத்துக் கொள்கிறார்கள். ’பறையர்கள்’ தம்மை ‘ஆதி திராவிடர்கள்’ எனவும், ‘மகர்கள்’ தம்மை ’சொக்கமேளர்’ அல்லது ’சோம வம்சி’ என்றும், ’பங்கிகள்’ தம்மை ’வால்மிகி’ எனவும்  அழைத்துக் கொள்கின்றனர்.
இவை அனைத்துமே தம்மை ஏற்காதவர்களின் ஏற்பைப் பெறவே என்றால் மிகை அல்ல.
தம்மைப் பற்றிய பிம்பத்தை, அதைத் தொட்டு நிற்கும் பெயர்களை அவரவரே நிர்ணயித்துக் கொள்ளட்டுமே?

Exit mobile version