Site icon சொல்வனம் | இதழ் 317 | 28 ஏப் 2024

பெரியாரும் பாசிசத்தின் கூறுகளும்

பொதுவாகச் சொன்னால், இந்த இதழ் வரையில் சொல்வனம் தமிழகத்தின் பல அரசியல் இழுபறிகள், பண்பாட்டுச் சர்ச்சைகள் போன்றனவற்றில் அனேகமாக ஈடுபடவில்லை. ஆக்க பூர்வமானவற்றையே கவனித்திருந்தால் போதும் என்று நினைத்தது ஒரு காரணம்.
ஓரளவு இந்திய அரசியல்பொருளாதார நிலைகள் பற்றியும், பெருமளவு பன்னாட்டுத்தளத்து நிகழ்வுகளையும் பற்றி மட்டும் கவனித்திருந்தோம். இந்த இதழில் ஈ.வெ.ராமசாமி அவர்களின் இயக்கம் பற்றிய ஒரு கட்டுரையைப் பிரசுரிக்கிறோம். இது போன்ற சில கட்டுரைகளை அவ்வப்போது பிரசுரிக்கலாம் என்று ஒரு யோசனை எழுந்ததால் இப்படித் துவங்கி இருக்கிறோம்.
இங்கு வாசகர்கள் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது.
இந்தக் கட்டுரைகள் சொல்வனம் குழுவினரின் கருத்துகள் அல்ல. இவை அந்தந்தக் கட்டுரைகளை எழுதும் ஆசிரியர்களின் கருத்துகளே.
இக்கட்டுரைகள் குறித்து வாசகர்களின் மறுவினைகள் கட்டுரை ஆசிரியர்களுக்குத் தெரியப்படுத்தப்படும், அவர்கள் ஏதும் பதில் தெரிவித்தால் அவற்றை வாசகர்களுக்குக் கொடுப்போம். பொதுவாகக் கட்டுரைகளுக்கான மறுவினைகள், பதில்கள் ஆகியனவற்றை ஓரிரு இதழ்களைத் தாண்டி நீடிக்கச் செய்யவியலாது என்பதையும் கவனிக்கக் கோருகிறோம்.
வாசக மறுவினைகளைச் சுருக்கவோ, குறுக்கவோ நேரலாம் என்பதையும் தெரிவிக்கிறோம். ஏற்கக் கூடிய விதமான வெளிப்பாடுகளை மட்டுமே பிரசுரிப்போம் என்பதும், சொல்வனம் பதிப்புக் குழுவின் முடிவுகளே இறுதியானவை என்பதும் கவனிக்கப்பட வேண்டியவை.
– பதிப்புக் குழு

பெரியார் ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்திருந்தாரா என்ற கேள்விக்கு தெளிவான பதில்கள் அவரது வாழ்க்கையிலிருந்து கிடைக்கின்றன.

ஏன் ஜனநாயக ஆட்சி கூடாது?

இந்தியா ஒரு முழு ஜனநாயக நாடு ஆக வேண்டும்  என்று 1928 ம் ஆண்டு வெளிவந்த மோதிலால் நேரு அறிக்கை   கூறியது.  நாடு முழுவதும் மக்கள் கண்ட கனவும் அதுவாகவே இருந்தது.
ஆனால் பெரியாரின் நிலைப்பாடு என்ன?
19 நவம்பர் 1930 குடி அரசு இதழில் இரு கேள்விகளுக்கு பெரியார் இவ்வாறு பதில் அளிக்கிறார்:

இந்தியாவில் 100க்கு 90 பேர் கல்வி அறிவில்லாத எழுத்துவாசனைகூடத் தெரியாத பாமர மக்களாய் இருப்பதை முன்னிட்டு அவர்களுக்கு நன்மை தீமைஇன்னதென்று அறிய முடியாதவர்களாக இருப்பதால் தான்.

தடியெடுத்தவன் தண்டல்காரன் என்பதுதான் ஜனநாயக ஆட்சி
கிரிப்ஸ் குழு
பெரியாரின் திராவிடக் கழகம் தேர்தல்களில் பங்கு பெறவில்லை அதனால் அதில் ஜனநாயக நடைமுறைகளை எதிர்பார்ப்பது தவறு என்று கூறுபவர்கள், திராவிடக் கழகம் 1944ம் ஆண்டுதான் பிறந்தது என்பதையே மறந்து விடுகிறார்கள். அதற்கு முன்னால் பெரியார் நீதிக் கட்சியின் தலைவராக இருந்தார். நீதிக் கட்சியிலிருந்து திராவிடக் கழகம் உருவானதே ஒரு சுவாரசியமான நிகழ்வு.
1942 ம் வருடம் ஸ்டாஃபோர்ட் கிரிப்ஸ் தலைமையில் பிரித்தானிய அரசு  இந்தியாவிற்கு சுய ஆட்சி வழங்குவது குறித்து இந்தியத் தலைவர்களின் கருத்தை அறிவதற்காக ஒரு குழுவை அனுப்பியது. நீதிக் கட்சியின் சார்பில் பெரியார் தலைமையில்  சில தலைவர்கள் கிரிப்ஸைச் சந்தித்தார்கள். அவரிடம் என்ன பேசினார்கள் என்பது பற்றிய விவரம் The Transfer of Power என்ற தலைப்பில் 1970 ஆண்டு வெளிவந்த ஆங்கிலபுத்தகத்தின் முதல் தொகுதியில் கிடைக்கிறது.  பார்ப்பனர் பிடியிலிருந்து மீள்வதற்காக மதராஸ் மாகாணம் இந்திய யூனியனிலிருந்து பிரிந்து தனிநாடாக  ஆக வேண்டும் என்று அவர்கள்  விரும்பினார்கள். ஆனால் அதற்கான ஆதரவு மதராஸ் மாகாணச் சட்டப் பேரவையிலிருந்தோ அல்லது மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தியோ பெற முடியும் என்ற நம்பிக்கை அவர்களிடம் இல்லை. எனவே அவர்கள் கிரிப்ஸிடம் விடுத்த கோரிக்கை விசித்திரமானது.  எங்களுக்குத்  தனி வாக்குரிமை கொடுங்கள்,  எந்த அளவில் கொடுத்தால் பெரும்பான்மை பெற முடியுமோ  அந்த அளவில் கொடுங்கள் என்று கேட்டார்கள். கிரிப்ஸ் சொன்ன பதிலின் சாரம் இது: நீங்கள் சென்னை மாகாண மக்களை உங்களுக்கு ஆதரவாக வாக்களிக்க வைக்கும் வரை, ஜனநாயக முறைப்படி நீங்கள் விரும்பும் பெரும்பான்மையை உங்களுக்குத் தர இயலாது.
கிரிப்ஸுடன் நடந்த கூட்டத்தில் என்ன நடந்தது என்பதைப் பெரியார் கட்சிக்குத் தெரிவிக்கவில்லை.  எனவே நீதிக் கட்சியில் பெரியார் ஜனநாயக முறைப்படி நடந்து கொள்ளவில்லை என்று பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. மே 1942ம் ஆண்டு இளம் நீதிக் கட்சியினர் பெரியார் கட்சி வேலைகளில் கவனம் செலுத்துவதில்லை, கட்சி கூட்டங்களை நடத்துவதில்லை  போன்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்து கட்சியின் தலைமை மாற வேண்டும், சண்முகம் செட்டியார் தலைமை ஏற்க வேண்டும் என்ற தீர்மானத்தை ஒரு மனதாக நிறைவேற்றினர். அண்ணாவும் சண்முகம் செட்டியார் தலைமை ஏற்பதைப் பெரியாரே விரும்புவார்  என்று திராவிட நாடு பத்திரிகையில் எழுதினார்.  பல திருப்பங்களுக்குப் பின்னால் திராவிடக் கழகம் பிறந்தது. நீதிக் கட்சியின் பழுத்த தலைவர்கள் பெரியார் ஜனநாயக முறைகளைப் பின்பற்றவில்லை என்று குறை கூறிக் கொண்டிருந்தாலும், கட்சித் தொண்டர்களுக்கு இடையே பெரியாருக்கே செல்வாக்கு இருந்தது என்பதை மறுக்க முடியாது.
சேலம் மாநாடு
திராவிடக் கழகத்தின் தலைமையை ஏற்ற பிறகும், அவர் மாறவில்லை.  பெரியார் பெரியாராக இருந்ததால் அவரிடம் ஒளிவு மறைவு இல்லை.
1944ம் ஆண்டு நடந்த சேலம் மாநாட்டில் அவர் பேசியதின் சாரம்:
நான் தலைவராக இருந்தபோது எனக்குத் தோன்றியதைச் செய்தேன். யாருடைய கருத்தையும் நான் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. நான் நினைத்தது  எப்போதுமே சரியென்றுதான் இருந்தேன். என்னுடைய எண்ணத்தை மாற்றிக் கொள்ள எந்தத் தேவையும் ஏற்படவில்லை. நான் தலைவனாக இருக்கிறபடியால் மற்றவர்கள் நான் சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டும்.
இந்தக் கெடுபிடி அண்ணாவிற்குப் பிடிக்கவில்லை.
1947 ஆகஸ்டு பதினைந்தாம் நாளை “திராவிடருக்குத் துக்கநாள் என்று பெரியார் எவரையும் கலக்காமல் உள்ள நிலையை ஆராயாமல் அறிக்கை விடுத்தார்.  இவ்வறிக்கையை அண்ணா வரவேற்கவில்லை. மாறாக தனது எண்ணத்தை திராவிடநாடு இதழில் எழுதி பெரியாரின் பகைமையைத் தேடிக் கொண்டார்” என்று பார்த்தசாரதி தனது ‘திமுக வரலாறு’ நூலில் சொல்கிறார்.
திராவிட முன்னேற்றக் கழகம்
இருவருக்கும் இடையே ஏற்பட்ட விரிசல் போராக மாறியது மணியம்மையாரைப் பெரியார் திருமணம் செய்தபோது.
தானே தலைவனாய், எழுத்தாளனாய் பேச்சாளனாய், என்று தான் ஒருவரால் மட்டுமே இயக்கம் வளர்வதாகப் பெரியார் இதுவரை கூறிவந்தார். அவரது மதிப்பைக் காலிழந்தும், கண்ணிழந்தும் பொருளிழந்தும் தியாகத் தழும்புகளைப் பெற்ற தொண்டர்கள்  பெற்றதில்லை. கட்சியின் வளர்ச்சி தன்னால் தான் என்று சொல்லி வந்தாரே தவிர உண்மையாக யாரால் என்பதை அவருடைய உள்ளம் உரைத்தது கிடையாது.  கழகத் தொண்டர்களை அவர் பாராட்டியது இல்லை என்பது மட்டுமல்ல; அவரது மிரட்டலுக்கும் ஆடும்படியும் வைத்து வந்தார்.” என்று அண்ணா எழுதினார்.
இதுமட்டுமல்ல, பெரியாரை ஒரு பாசிசவாதி என்றும் அண்ணா சொன்னார்.
பாசிசத்தையும் பழைமையையும் நாட்டிலே படையெடுக்க விடக்கூடாது – அது போல கழகத்தில் பாசிசத்தை வளர்த்துள்ள தலைமையில் இனியும் இருந்து பணியாற்றவும் கூடாது. நாட்டைப் பாழ்படுத்தும் சக்திகளை எதிர்த்துப் போராடும் செயலையும் மறக்கக் கூடாது – அதுபோல், ஜனநாயகத்தை – தன்மானத்தை அழிக்கும் போக்கினை மேற்கொண்டுவிட்ட தலைவரிடம் இனிக்கூடிப் பணியாற்றுவது என்பது முடியாத காரியம்.
ஏன் நம்பிக்கை இல்லை?
ஜனநாயகத்தின் மீது அவருக்கு ஏன் நம்பிக்கை இல்லை என்ற கேள்விக்கு அவரது எழுத்துக்களில் விடை இருக்கிறது.
1931ம் ஆண்டில் சொன்னது: ”இன்றைக்கு வெள்ளைக்கார ஆட்சியோ ஆதிக்கமோ ஒழிய வேண்டும் என்று சொல்கிறவர்களில்  காந்தி அவர்கள் உட்பட 100க்கு 90 பேரின் எண்ணமெல்லாம் மனித தர்ம ஆட்சியை இந்த நாட்டில் தலைகாட்டச் செய்யாமல் இருக்கச் செய்யவும் மனுதர்ம ஆட்சியை நிலைநிறுத்தச் செய்யப்படும் முயற்சியில்தான் உள்ளது எனச் சொல்ல வேண்டும். இதைப் பாமர மக்கள் சரிவர உணராமல் மோசம் போய்க் கொண்டிருப்பதனால் இந்த நிலைமை வளர்ந்து கொண்டே இருக்கின்றது
தன்னைச் சுற்றியிருப்பவர்கள்  மனுதர்மத்திற்குப் பலிகடா ஆகிவிடுவார்களோ என்ற எண்ணம் அவருக்குக் கடைசி வரைப் போனதாகத் தெரியவில்லை. மனுவின் மாறுவேடம் ஜனநாயகமாக இருக்கலாம் என்ற  அடிப்படைச் சந்தேகம் அவருக்கு இருந்தது.
அந்தச் சந்தேகமே அவரை வரலாற்றின் பல்வேறு கட்டங்களில் விடாப்பிடியான நிலைப்பாடுகளை எடுக்க வைத்தது என்று கருத இடம் இருக்கிறது.  இது அவர் கீழ்வெண்மணிக் கொலைகள் நடந்தபோது சொன்னது:
ஜனநாயக ஆட்சி உள்ளவரை யோக்கியர் மறைந்து போக வேண்டியதுதான்; அயோக்கியர்கள் ஆட்டம் போட வேண்டியதுதான். இந்திய மக்கள் காட்டுமிராண்டிகள்; இந்திய தர்மம் குற்றப் பரம்பரையர்கள் தர்மமேயாகும். மநுதர்மவாதிகள் உள்ளவரை நாடு ஒழுக்கம், நேர்மை, நாணயம், நீதி பெற முடியாது. வெள்ளையன் வெளியேறியவுடன் நாடு அயோக்கியர்கள் வசமாகிவிட்டது.
இதுவும் அவர் பார்ப்பனருக்கு மத்தியில் பேசும்போது சொன்னது:

பணம், காசு, பண்டம் முதலியவைகளில் எனக்குப் பேராசை இருக்கிறது என்றாலும், அவைகளைச் சம்பாதிப்பதில் சாமர்த்தியத்தையாவது காட்டியிருப்பேனேயொழிய, நாணயக் குறைவையோ, நம்பிக்கைத் துரோகத்தையோ காட்டியிருக்க மாட்டேன். யாரையும் ஏமாற்றலாம் என்பதில் நான் சிறிதுகூட முற்பட்டிருக்க மாட்டேன். வியாபாரத் துறையில் பொய் பேசி இருந்தாலும், பொது வாழ்வுத் துறையில் பொய்யையோ, மனதறிந்த மாற்றுக் கருத்தையோ வெளியிட்டிருக்கமாட்டேன்.
இப்படிப்பட்ட நான், எதற்காக ஒரு சமுதாயத்தாரிடம் விரோதமோ, குரோதமோ கொள்ள வேண்டும்? நான் நமது நாட்டையும், சமுதாயத்தையும் ஆங்கில நாட்டுத் தன்மைக்கும், நாகரிகத்திற்கும் கொண்டு வர வேண்டும் என்கிற ஆசையுடையவன். இதற்கு முட்டுக் கட்டையாகப் பார்ப்பன சமுதாயம் இருக்கிறது என்று சரியாகவோ, தப்பாகவோ கருதுகிறேன்.

ஆங்கில நாட்டுத் தன்மையை ஜனநாயகம் இல்லாமல் எப்படிக் கொண்டுவருவது?  இரண்டு வழிகள் அவர் காலத்தில் பேசப்பட்டன. ஒன்று கம்யூனிசம். மற்றொன்று பாசிசம். பெரியார் கம்யூனிஸ்டுகளைப் பற்றி என்ன நினைத்தார் என்பதை அறிய அவரது கடைசிச் சொற்பொழிவைக் கேட்கலாம்.
இது மற்றொரு தருணத்தில் சொன்னது:
கம்யூனிஸ்டுகள் என்போர் ஏதோ சில பணக்காரர்களைத் திட்டுவதும், அதிலே கஷ்டப்படும் தொழிலாளி ஜே போடுவதையுந்தான் பொதுவுடைமை என்று இந்நாட்டிலே கருதப்படுகிறதேயன்றி, பார்ப்பனர்களில் மட்டும் ஏன் பாடுபடும் தொழிலாளி இல்லை என்பதற்குக் காரணங்கள் என்ன கற்பிக்கப்பட்டுள்ளன என்பதைக் கண்டுபிடித்து அவைகளை ஒழித்து யாவரும் சரிநிகர் சமானமாயிருக்க வழி வளரச் செய்தார்களா?
மிஞ்சியிருப்பது எது?
ஒரு குறிப்பிட்ட குழுவினரை வெறுப்பதின் மூலமே எல்லாம் சரியாகி விடும் என்று அவர் திடமாக நம்பினார். யூதர்களை அழித்தால் எல்லாம் சரியாகி விடும் என்று ஹிட்லர் நம்பியது போல.
அவர் தெளிவாகச் சொல்கிறார் நான் வெறுப்பது பிராமணர்களைத்தான் என்று:
நீங்கள் வெறுப்பது பார்ப்பானையா? அல்லது பார்ப்பனீயத்தையா? அல்லது பார்ப்பனீயம் என்பது என்ன? என்ற கேள்விகளுக்குப் பதில் என்பது என்ன? பார்ப்பானில் இருந்துதானே பார்ப்பனீயம் வந்தது; எனவேதான் பார்ப்பான் ஒழிய வேண்டும் என்கிறேன். திருடனை வெறுக்கிறாயா அல்லது திருட்டை வெறுக்கிறாயா என்பதுபோல் இருக்கிறது; திருடனாக இருப்பதால்தானே அவன்திருடுகிறான்; எனவே இது அர்த்தமற்றதாகும். திருட்டுத் தனத்தை வெறுக்கும்போது திருடனையும் வெறுப்பதாகத்தானே அர்த்தம்? எனவே பார்ப்பானில் இருந்துதான்பார்ப்பனீயம் வந்தது; மூலத்தை ஒழிக்கப் பாடுபடுகிறேன்.
இன்னும் தெளிவு வேண்டுமா? இதைப் படியுங்கள். 1968ல் அவர் சொன்னது:
அரசர்களை ஒழிப்பதற்கென்று பல நாளாகக் கிளர்ச்சிகள் குடிமக்களாலேயே செய்யப்பட்டு, சில அரசரைக் கொன்றும் சிலரை விரட்டியும் விட்டு, அரசனல்லாத ஆட்சியையே உலகில் பெரும்பாகத்தில் மக்கள் ஏற்படுத்திவிட்டார்கள் என்றாலும், அதாவது அரசன் ஒழிக்கப்பட்டு விட்டான் என்றாலும், அரசன் செய்து வந்ததுபோல் மக்களை அடக்கி ஆளும் ஆட்சி என்பதாக ஒன்று இன்று மக்களுக்கு அவசியம் வேண்டியதாகவே இருக்கிறது.
இப்படி தேவையிருக்கும் ஒரு ஆட்சிக்கு “அரசன் என்பதாக ஒருவன் தேவை இல்லை. மக்களாகிய நாமே ஆட்சித் தலைவனாக இருந்து கொண்டு ஆட்சி நடத்திக் கொள்ளலாம்” என்று மக்கள் கருதியது அல்லது யாரோ சிலர் கருதியது என்பது மாபெரும் முட்டாள்தனம் அல்லது அயோக்கியத் தனமேயாகும். இதன் பயன் என்னமாய் முடியுமென்றால், மக்களுக்கு ஏற்கெனவே இருந்து வரும் கெட்ட குணங்கள், கூடாத குணங்கள் என்று சொல்லப்படுபவையான பொய், புரட்டு, பித்தலாட்டம், ஏமாற்றுதல், வஞ்சித்தல், கொலை, கொள்ளை, பலாத்கார காலித்தனம், அமைதி இன்மை, குழப்பம் முதலிய சமுதாய வாழ்வுக்குக் கூடாததான காரியங்கள் நடைபெறவும், நாளுக்குநாள் மக்கள் இவற்றில் ஈடுபடவுமான, மக்களின் சமூக வாழ்வுமுறை கெடவுமான நிலை ஏற்பட்டுத் தாண்டவமாடு வதுதான் விளைவாக இருக்கும், இருந்தும் வருகிறது.
இவற்றைப்  பாசிசத்தின் கூறு என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது?
பெரியார் ஹிட்லர் நடந்த பாதையில் நடக்கவில்லை என்பது உண்மை. அவர் தனிப்பட்ட முறையில் நயத்தக்க நாகரீகத்தைக் கடைப்பிடித்தவர் என்பது உண்மை. வன்முறையை என்றுமே விரும்பாதவர் என்பதும் உண்மை. கத்தி வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியதெல்லாம் கோபத்தில் கூறியது.
ஆனால் ஜனநாயகத்தின் மீது அவருக்கு இருந்த அடிப்படை அவநம்பிக்கையும் சந்தேகமும் அவரை பாசிஸ்டுகள் எடுத்த நிலைப்பாட்டை, அவரை அறியாமலே, எடுக்க வைத்தது என்று நான் கருதுகிறேன்.  ஆனால் அவரது இன்றையத் தொண்டரடிப்பொடிகள், அத்தகைய நிலைப்பாட்டை அறிந்தே எடுக்கிறார்கள். தாங்கள் இதுநாள் வரை நடத்தி வந்த சமதர்ம நாடகம் மக்களுக்குப் புரிந்துவிடுமோ என்ற அச்சத்தின் காரணமாக எடுக்கப்படும் நிலைப்பாடு அது.  இவர்களுக்கும் பெரியாரைப் போல ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை. உண்மையில் நம்புவது பாசிசம்தான். அவர் அறியாமல் வெளிப்படையாகச் சொன்னார். நம்பினார். இவர்கள் அறிந்து மறைமுகமாகச் சொல்கிறார்கள்.

Exit mobile version