கடலிலோ, கரையிலோ எண்ணெய் கிணறுகளில் இருந்து எண்ணெய்யோடு மேலே வரும் எரிவாயு பிரித்தெடுக்கப்பட்டு உபயோகப்படுத்தப்படுவது தெரிந்த விஷயம். வெறும் எரிவாயுவை மட்டுமே தரும் கிணறுகளும் நிறைய வெட்டப்படுவது உண்டு. எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவு தூரம் எரிவாயுவும் சேதம் ஏதுமில்லாமல் சேமிக்கப்பட்டு உபயோகப்படுத்தப்பட்டாலும், துரப்பண பணி சம்பந்தப்பட்ட பல்வேறு செயலாக்கங்களில் ஆங்காங்கே சில இடங்களில் குறைந்த அழுத்ததுடன் வந்து சேரும் எரிவாயுவை உபயோகத்திற்கு எடுத்துக்கொள்ள முடியாமல் போய் விடும். இந்த வகையில் சேரும் வாயுக்கள்தான் பெரிய ஜ்வாலையுடன் அணையா விளக்கு போல் விடாமல் எரிந்து கொண்டிருக்கும் சுடர்பிழம்பு (Flare) வழியாக எரிக்கப்படுகின்றன. அழுத்தம் மிகவும் குறைந்த சில வாயு ரகங்கள் நேராக வளிமண்டலத்தில் (atmosphere) கலந்து விடும்படி விடுவிக்கப்படுவதும் (Venting) உண்டு. 24 மணிநேரமும் விடாமல் இப்படி ஏராளமாய் எரிவாயு வீணடிக்கப்படுவது போல் தோன்றுவதால், பல நண்பர்கள் இந்த வீணடிப்பைத் தடுத்து அந்த வாயுவையும் உருப்படியாகப் பயன் படுத்த முடியாதா என்று கேட்டிருக்கிறார்கள். முடியாது என்பதுதான், இன்று வரை சரியான விடை.
முடியாது என்று சொல்வதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. இப்படி ஆங்காங்கே சேரும் சில்லறை வாயுவைச் சேர்த்து எரித்து விடுவது அதுவாக எங்கேயாவது சேர்ந்து தீப்பிடித்துத் தொலைக்காமல் தடுத்து விடும் பாதுகாப்பான செயல் என்பது முதல் காரணம். இந்த குறைந்த அழுத்த வாயு உருவாகும் இடங்களிலெல்லாம் குழாய்களும் கம்ப்ரஷர்களும் அமைத்து அவற்றை பிடித்து சேமித்து சுத்தப்படுத்தி உபயோகிப்பது என்பது நடைமுறையில் இயலாததும், நிறைய நஷ்டத்தை விளைவிக்கும் ஒரு வேலை என்பதும் அடுத்த காரணங்கள். எனவே இந்த மாதிரியான வாயுக்களை எல்லாம் சேர்த்து, சற்று தள்ளி எடுத்துக்கொண்டு போய் எரித்து விடுவதுதான் புத்திசாலித்தனமான தீர்வு.
எக்கச்சக்கமாய் வாயு வீணாவது போல் தோன்றினாலும், பூமியில் இருந்து வெளியே கொணரப்படும் எரிவாயுவில் 99%க்கு மேல் உபயோகப்படுத்தப்படுகிறது என்பதுதான் உண்மை. சுடர்பிழம்பில் எரிக்கப்படுவது பொதுவாக ஒரு சதவீதத்திற்கும் குறைவான வாயு மட்டுமே. இதனால் சுற்றுப்புறச் சூழலின் தூய்மை கெடுவதில்லையா என்பது அடுத்து வரும் கேள்வி. நவீன சுடர்பிழம்பு முனைகள் (Flare Tip) இந்தக் கவலையையும், அது தொடர்பான புதிய சட்டங்களையும் கருத்தில் எடுத்துக்கொண்டு வடிவமைக்கப்படுவதால், அந்த முனைக்குப்போய் சேரும் வாயுவில் 98% க்கு மேல் முழுவதுமாக எரிக்கப்பட்டு விடுகிறது. சாம்பல் போன்ற எச்சங்களும் (Residue) பெரிதாக ஏதும் சேர்வதில்லை. இந்த எரிப்பினால் பாதிப்பு ஒன்றுமே இல்லை என்று சொல்ல முடியாது என்றாலும், பாதிப்புகள் மிகவும் குறைவுதான் என்று சொல்லலாம்.
அவ்வளவு முக்கியமான அந்த சுடர்பிழம்புதான் எங்கள் பிளாட்பார்மில் ஒரு முறை அணைந்து போய் விட்டது!
பிளாட்பார்ம் கட்டப்பட்டு ஏழெட்டு வருடங்களுக்கு மேல் ஆகி இருந்தது. ஓரிரண்டு வருடங்களுக்கு ஒரு முறையாவது அந்த பிழம்பை அணைத்துவிட்டு, அருகே சென்று எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்க்கவேண்டும் என்று பராமரிப்பு விதிகள் இருந்திருக்கலாம். ஆனால் எண்ணெய் உற்பத்தியை அத்தகையை செயல்கள் பாதிக்கும் என்பதாலோ என்னவோ, எனக்கு தெரிந்தவரை பெரிதாக பராமரிப்பு வேலை எதுவும் நடந்ததே இல்லை. எனவே நாளடைவில் அந்த சுடர் பிழம்பு முனை பழுதாகி ஜ்வாலை ஒரு பக்கமாக, கோணலாக எரிய ஆரம்பித்தது. இருந்தாலும் எரிவாயு சென்று கொண்டிருக்கும் வரை அது பாட்டுக்கு எரிந்து கொண்டிருக்கும் என்று எல்லோரும் நினைத்திருந்தது பொய்யாகி, ஒரு நாள் அது சுத்தமாக அணைந்து போனது பிளாட்பார்மில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. கட்டுப்பாட்டு அறையில் இருந்த இஞ்சீனியர்கள் துரிதமாக செயல்பட்டு முடிந்த அளவு சில்லறை வாயு வகைகள் ஆங்காங்கே உருவாவதை தவிர்க்க முயன்றார்கள். இருந்தாலும் சுடர்பிழம்பு குழாயை நோக்கிச்செல்லும் எரிவாயு எல்லாவற்றையும் 100% தடுத்து பிளாட்பார்முக்குள்ளேயே வெகுநேரம் சமாளிப்பதென்பது முடியாத காரியம். எனவே எரிக்கப்பட வேண்டிய வாயு எல்லாம் பிளாட்பார்மைச் சுற்றிப் படர்ந்து பற்றிக்கொண்டு விடுமோ என்பது எல்லோருக்கும் வந்த நியாயமான கவலை.
ஏழு வருடங்களுக்கு மேலாக விடாமல் அந்த சுடர்பிழம்பு எரிந்திருந்ததால், திரும்ப அதை எப்படி பற்ற வைப்பதென்பது நிறைய நாங்கள் பயிற்சி செய்து வைத்திருந்த ஒரு சாதாரண விஷயமில்லை. ஆனாலும் பிளாட்பார்மின் ஒவ்வொரு பகுதியிலும் இருந்து இயங்கும் பல்வேறு அமைப்புக்களை பற்றிய பயனர் கையேடு மாதிரியான புத்தகங்கள் பிளாட்பார்மிலேயே இருந்த நூலகத்தில் ஒழுங்காக வைத்துப் பாதுகாக்கப்பட்டிருந்ததால், அடுத்த சில நிமிடங்களில் சுடர்பிழம்பு பராமரிப்பு பற்றிய கையேட்டுடன், அந்த சுடர்பிழம்பு குழாய் பிளாட்பார்முடன் வந்து இணையும் இடத்துக்கு விரைந்தோம்.
முன் சொன்னதுபோல் எல்லாம் ஒழுங்காக இருந்திருந்தால், எப்படியோ அந்த பிழம்பு அணைந்தாலும், அங்கே விடாமல் எரியும் விளக்கு போன்ற (Pilot Flame) அமைப்பு உடனே எரிவாயுவை திரும்ப பற்ற வைத்திருக்க வேண்டும். அது நடக்காததால் அந்த சிறிய சுடரும் எரியவில்லை என்பது தெரிந்தது. அடுத்த படியாக இதற்காகவே நிறுவப்பட்டிருந்த பேனலை அணுகிப்பார்த்தோம். அந்த எளிமையான பேனலில் ஒன்றிரண்டு ஸ்விட்ச்சுகள் மட்டும்தான் இருந்தன. ஒரு வால்வை திருப்பி ஒரு சிறு குழாய் வழியே நூறு கஜம் தள்ளியிருக்கும் அந்த சுடர்பிழம்பு முனைக்கு எரிவாயுவை அனுப்பியபடி இரண்டாவது சிவப்பு ஸ்விட்ச்சை அழுத்தினால் ஒரு மின்னிணைப்பு, இரண்டு கற்களை தட்டும்போது ஏற்படுவது போன்ற தீப்பொறிகளை அங்கே தெளித்து எரிவாயுவை பற்ற வைக்கும். இந்த குட்டிப்பிழம்பு எரிய ஆரம்பித்தவுடன் திரும்ப நிறைய எரிவாயுவை அனுப்பி ஜ்வாலையை பெரிதாக்கிக்கொள்ளலாம். கையேட்டில் இருந்த குறிப்புக்களின்படி பலமுறை முயன்றும் எங்களால் ஒரு விளக்கையும் ஏற்ற முடியவில்லை. மொத்தத்தில் எங்கள் பிளாட்பார்மின் சுடர்பிழம்பின் முனை பல வருடங்களில் கொஞ்சம் கொஞ்சமாய் எரிந்து போய் அங்கே இருக்க வேண்டிய சிக்கலான அமைப்புகள் எல்லாம் கடலில் விழுந்துவிட வெறும் மொட்டை குழாய் மட்டும்தான் இப்போதைக்கு அங்கே இருக்கிறதென்பது புரிந்தது!
அந்த சுடர் பிழம்பு கோபுரம் (Flare Tower) பிளாட்பார்மில் இருந்து முன்னூறு அடி தள்ளி இருந்ததோடு நூறடி உயரமாக வேறு இருந்ததால், அதன் முனையில் என்ன நடக்கிறதென்று எங்களிடம் இருந்த ஒரு தொலைநோக்கி வழியே பார்த்தாலும் கூட பிளாட்பார்மில் இருந்து சரியாக தெரியாது. அணைந்தபோதே மாலை மணி ஐந்து ஆகியிருந்ததால் ஹெலிகாப்டர்கள் எல்லாம் மும்பைக்கு திரும்பி போய் விட்டன. சாப்பர்கள் சுடர்பிழம்புக்கு அருகே பொதுவாக போகாது என்றாலும், அவை இருந்திருந்தாலாவது முனைக்கு போகும் எரிவாயுவை சுத்தமாக நிறுத்திவிட்டு சுடர்பிழம்பு முனை எப்படி இருக்கிறது என்று பாதுகாப்பான உயரத்தில் இருந்து ஒரு நோட்டம் விடலாம். அதற்கும் வழியில்லை. மணி ஆறுக்கு மேலாகி இருட்ட ஆரம்பித்திருந்தது. சில நிமிடங்களில் சுடர்பிழம்பு திரும்ப எரிய ஆரம்பித்துவிடும் என்று நம்பிக்கொண்டிருந்த ஊழியர்கள் பலருக்கு இப்போது கொஞ்சம் கொஞ்சமாக கவலையும் பயமும் தொற்றிக்கொள்ள கோபமும் ஆங்காங்கே தலைகாட்டத் துவங்கியது! பிளாட்பார்ம் பொறியாளர்கள் பொறுமையாக இருந்தபோதிலும், அங்கே கேண்டீனில் வேலை செய்துகொண்டிருந்த ஊழியர்கள், கடைநிலை துப்புரவு பணியாளர்கள் போன்றோர் இது எங்களுக்கு உயிராபத்தான நிலை என்பதால் எங்களை உடனே கப்பல்களில் ஏற்றி ஊருக்கு அனுப்பி விடுங்கள் என்று கத்த ஆரம்பித்தார்கள்!
இந்த இடத்தில் ஒரு சின்ன விஷயத்தை சொல்லவேண்டும். பள்ளிக்கூட நாட்களில் எல்லாம் நான் கொஞ்சம் கூச்ச சுபாவமுள்ளவன். இப்படியே இருந்தால் உருப்பட முடியாது என்று பின்னால் கல்லூரி நாட்களில் சொற்பொழிவுகள் கொடுப்பது, கலந்துரையாடல்களில் பங்கேற்பது என்று என்னை நானே முன்னால் பிடித்துத் தள்ளிக்கொண்டிருந்தேன். அதற்கப்புறம் இரண்டு வருடங்களுக்கு மேல் வேலையிலும் இருந்திருந்ததால், என் சுபாவம் மெதுவாக மாறிக்கொண்டு வந்த காலம் அது. எனவே இந்த நிகழ்வின்போது வேறு யாருக்குமே இந்த துப்பாக்கியைச் சுடத்தெரியாது என்றால், எனக்கும் சுடத்தெரியாது என்றபோதும் நான் பிளாட்பார்மில் இருந்த மற்ற எந்த பொறியாளருக்கும் சளைத்தவனில்லை என்று தோன்றியது! எனவே துப்பாக்கியை நான் சுடுகிறேன் என்று முன் வந்தேன். எல்லாம் ஒழுங்காக நடந்தால் நல்ல பெயர் கிடைக்கும். இல்லாவிட்டாலும் யாராலும் நான் செய்த முயற்சிக்காக என்னைக் குறை சொல்ல முடியாது என்று ஓடியது என் சிந்தனை.
பிளாட்பார்முக்கு உள்ளிருந்தே சுடுவது முட்டாள்தனம் என்பதால், முன்னொரு அத்யாயத்தில் இரவில் ஆளில்லா பிளட்பார்முக்கு போகும்போது செய்ததைப்போல், மேல் தளத்திற்குச் சென்று ஒரு கூடையில் ஏறிக்கொண்டு கிரேன் ஆபரேட்டர் தயவில் கீழே காத்திருந்த ஒரு குட்டிக்கப்பலில் இறங்கிக்கொண்டேன். துணைக்கு என்னுடன் குருதேவ் சிங் என்ற இன்னொரு இஞ்சீனியரும் ஒட்டிக்கொண்டார். இருவருமாக வாக்கி டாக்கி வழியாக கப்பலின் காப்டனுடனும், கட்டுப்பாட்டு அறையில் இருந்த பொறியாளர்களுடனும் பேசிக்கொள்ள முடிந்தது. கேப்டன் கப்பலைச் சுடர்பிழம்பு கோபுரம் இருக்கும் இடத்திலிருந்து காற்றடிக்கும் திசையை கவனித்து, காற்று கப்பலைத் தாண்டிப் போய், சுடர்பிழம்பு கோபுரத்தை நோக்கி வீசும்படி மேல்புறமாக நிறுத்தினார். அலைகள் ஏதும் பெரிதாக இல்லாததால் கப்பல் நல்லவேளையாக ரொம்ப ஆடவில்லை.
பிளாட்பார்மில் வேலை செய்யும் நூறு பேரில் குறைந்தது அறுபது பேருக்கு மேல் வெளியே வந்து நாங்கள் செய்வதைக் கொஞ்சம் பதட்டத்துடன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள். சூரியன் முழுதும் மறைந்து விடப்போகும் நேரம் என்பதால் வெளிச்சம் நிறைய இல்லை. வாக்கி டாக்கி வழியே குருதேவ் சிங் கண்ட்ரோல் ரூம் இஞ்சீனியரை நிறைய எரிவாயுவை விடுவிக்கச்சொல்லவும், அந்த சுடர்பிழம்பு முனை வழியே பெருத்த சத்தத்துடன் வாயு வெளியேறுவது கீழே கப்பலில் இருந்த எங்கள் காதுகளுக்கு நன்கு கேட்டது.
லோட் செய்து துப்பாக்கியை உயர்த்தி அந்த சுடர்பிழம்பு முனையை நோக்கி சுட்டேன். பட் என்ற துல்லியமான சத்தத்துடன் ஒரு பெரிய பிரகாசமான சிவப்பு ஒளி ஒரு நீண்ட கோடாக என் கை முனையில் இருந்து அந்த குழாயின் முனைக்கு பயணித்தது ஒரு ஸ்லோ மோஷன் கவிதை போல் நினைவிருக்கிறது. அந்த தீக்கோடு வெளிவந்துகொண்டிருந்த எரிவாயுவை தொட்டதும் வானத்தில் ஒரு வெடி வெடிப்பது போல் தீப்பற்றிக்கொண்டு பெரிய மஞ்சள் நிற பிழம்பு எரிய ஆரம்பித்தது! பிளாட்பார்மில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தவர்களின் முகங்கள் எனக்கு சரியாக தெரியாவிட்டாலும், எல்லோரும் கைதட்டுவதும் மகிழ்ச்சியுடன் ஆரவாரிப்பதும் நன்றாகவே கேட்டது!
கதை அதோடு அழகாக முடியவில்லை. நாங்கள் குஷியாக கப்பலை திருப்பச்சொல்லி பிளாட்பார்முக்கு போக ஆரம்பித்த சமயம் கண்ட்ரோல் ரூம் காரர்கள் எரிவாயு அந்த சுடர்பிழம்பு முனைக்கு போகும் வேகத்தை குறைத்து சாதாரண நிலைக்கு திருப்பவும், பிழம்பு திரும்ப அணைந்து போனது! திரும்ப பழைய இடத்துக்கே போய் கப்பலை நிறுத்திக்கொண்டு மறுபடி எரிவாயுவை நிறைய திறந்து விடச்சொல்லிவிட்டு நான் இரண்டாம் முறை சுட்டபோது சற்றே குறி தவற சுடர்பிழம்பு பற்றிக்கொள்ளவில்லை.
நான் மூன்றாம் முறை சுடத்தயாரானபோது, இதை பக்கத்திலேயே இருந்து பார்த்துக்கொண்டிருந்த குருதேவ் சிங், “சுந்தர், நான் ஒரு முறை சுடுகிறேனே” என்று ஆர்வமாய் கேட்கவும், துப்பாக்கியை கொடுத்து விட்டு வாக்கி டாக்கியில் நான் பேச ஆரம்பித்தேன்.
ஓரிரு நாட்களில் என் 14 நாள் ஷிப்ட் முடிந்து நான் ஊர் திரும்பியிருந்தபோது, சாப்பரின் உதவியுடன் புதிய சுடர்பிழம்பு முனையைக் கொண்டுவந்து பொருத்திவிட்டார்கள். நான் அந்த பிளாட்பார்மில் பணி புரிந்து கொண்டிருந்தவரை அது பாட்டுக்கு எரிந்து கொண்டிருந்தது. ஆனாலும் அதை அணைத்து, திரும்ப ஏற்றி, எல்லாம் ஒழுங்காக வேலை செய்கிறதா என்று அவ்வப்போது சரி பார்த்தார்களா என்று நிச்சயமாகத் தெரியவில்லை.
(தொடரும்)
